Home FAMILY NOVEL7) வலி 💔

7) வலி 💔

by sreejanovels
10 views

அத்தியாயம் 7

“என்ன சொல்ற நீ? இந்த மெடிக்கல் ரிப்போர்ட்ல என்ன இருக்கு தெரியுமா? நிஜமாவா?” என்று ரோகித் கேட்டதற்கு, போலி கண்ணீரோடு அவன் மீது சாய்ந்தாள் லாவண்யா.

“ஆமாம், எனக்கு கர்ப்பப்பை புற்றுநோய் இருக்கு. கடைசி நிலை, குணப்படுத்த முடியாது. அப்பப்போ எனக்கு மாதவிடாய் நேரத்துல வலி இருக்கும், நான் அதை கண்டுக்க மாட்டேன். இப்போ புற்றுநோய் உறுதி ஆகி இந்த நிலைமைக்கு வந்துடுச்சு. எனக்குக் கஷ்டமா இருக்கு. எனக்குன்னு சேமிப்பு இருக்கு, ஆனா இனி அது யாருக்கு உதவப்போகுது? என் அக்கவுண்ட்ல அஞ்சு லட்ச ரூபாய் பணம் இருக்கு. நான் இறந்ததுக்கு அப்புறம் அதை உனக்குத்தானே எழுதி வச்சுட்டு சாகப்போறேன். இனி நீ என்னைத் தேட வேண்டாம், நான் உன்னை விட்டு விலகிப் போகப்போறேன்” என்று தன் நடிப்பால் அவனை அசத்தினாள்.

“அச்சச்சோ, என்னம்மா இப்படி சொல்லிட்ட? என்னை விட்டுப் போற அளவுக்கு நான் விலகி போயிட்டேனா? நமக்குள் சிறு சிறு கஷ்டங்கள் வரலாம். நம்முடைய தேவை பணமா இருந்தது, ஆனா அதைவிட உயிர் முக்கியம் இல்லையா? நீ கவலைப்படாதே, உனக்கு நான் இருக்கேன்” என அவளைச் சமாதானம் செய்தான். அவள் மனதிற்குள்ளோ, ‘சீக்கிரம் நான் உன்னை விட்டுப் போகணும். இல்லை இல்லை, நீ என்னை விட்டுப் போகணும் ரோகித்’ என்று நினைத்துக் கொண்டிருந்தாள் லாவண்யா.


வீட்டிற்கு வந்த மணமக்களுக்கு ஆர்த்தி எடுக்கப்பட்டு உள்ளே அழைத்துச் சென்றனர். யாரிடமும் அகல்யா பேசவில்லை. ஆனால் ஆதித்யா, அவளைத் திருமணம் செய்துகொண்ட மகிழ்ச்சியை மனதிற்குள் அடக்கி வைத்தாலும், அது வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. சந்தோஷமாக ஆத்விக்கை ஒரு கையில் தூக்கிக்கொண்டு, மறு கையால் அகல்யாவின் கரங்களைப் பற்றிக்கொண்டு வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தான். அனைவருக்கும் மகிழ்ச்சி, அகல்யாவைத் தவிர.

சடங்கு சம்பிரதாயம் எதுவும் வேண்டாம் என்று ஒதுங்கி நின்றவனை, “அம்மா, இந்தச் சடங்கு இருக்கிறதே, இதைச் செய்ய மாட்டீங்களா?” என்று ஒவ்வொன்றாகக் கேட்டு அனைத்தையும் செய்ய வைத்தான் ஆதித்யா. எல்லாச் சடங்குகளும் முடிந்த பிறகே அவர்களை ஓய்வெடுக்க அனுப்பி வைத்தார் அன்னலட்சுமி.

“தம்பி, குழந்தைங்க ரெண்டும் எங்ககிட்ட இருக்கட்டும். நீங்க போய் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துட்டு வாங்க” என்று அவர் சொல்ல, ஆதித்யா உடனே அறைக்குள் செல்லாமல், மற்றவர்கள் தவறாக நினைப்பார்கள் என்பதற்காகக் கீழே குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

முதலில் அகல்யா உள்ளே சென்று குளித்து முடித்து உடை மாற்றிக்கொண்டாள். முகூர்த்தப் புடவையை மடித்து அலமாரியில் வைத்துக் கொண்டிருக்கும்போது, பின்னாலிருந்து அவளைக் கட்டி அணைத்து அவள் கழுத்தில் முத்தமிட்டான் ஆதித்யா.

“ப்ச்… எப்போ எப்போன்னு காத்துகிட்டு இருந்தீங்களா? உங்களுக்கு எத்தனை பொண்ணுங்கதான் தேவைப்படும்? சாரி சாரி, நீங்க என்னை ‘வேசி’ன்னு சொன்னீங்க இல்ல? அது உண்மையா இல்லையான்னு சோதிக்கிறீங்களா? சத்தியமா சொல்றேன், நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல. என் வாழ்க்கையில நான் உறவு வச்சிருந்தது என் டேவிட் கிட்ட மட்டும்தான்” என்று கண்களை இறுக்கி மூடி வலியோடு சொன்னாள்.

தன் கரங்களைத் தளர்த்தி அவளைத் திருப்பித் தன் முகம் பார்க்கச் செய்தான் ஆதித்யா. “உண்மையைச் சொல்லு, நான் உன்னை அப்படிச் சொன்னேனா? மூணு வருஷத்துக்கு முன்னாடி என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாம இருக்கலாம், ஆனா உனக்குத் தெரியும். நம்ம ரெண்டு பேரும் பிரிஞ்சதுக்குக் காரணம் யாருன்னு உனக்குத் தெரியும். குற்றத்துல நம்ம ரெண்டு பேரும் இருக்கோம், ஆனா அதிகபட்ச குற்றம் யார் மேல இருக்குன்னு உன்னோட மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுடி!” என்று உரக்கக் கத்தினான்.

அவளிடம் பதில் இல்லை. அமைதியாக நின்றவளின் கன்னத்தை நக்கலாகத் தட்டியவன், “ஆம்பளைங்கிற ஒரே காரணத்துக்காக மொத்தப் பாவத்தையும் நான் சுமக்க வேண்டியதா போச்சு. பொம்பளைங்கிற காரணத்துக்காகப் பரிதாபத்தைச் சம்பாரிச்சு ஊரை விட்டுப் போனாலும் சந்தோஷமாதான் இருந்திருக்க. ஆனா நீ என்னை விட்டுப் போனதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு உனக்குத் தெரியுமா?” என்று தழுதழுத்த குரலில் கேட்டான்.

அகல்யா இல்லை என்று தலையசைத்து அவன் காலடியில் விழுந்து அழ, அவன் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.

இரவு நேரம் நெருங்கியது. அஸ்வினி மற்றும் அன்னலட்சுமியை முழுவதுமாகப் புறக்கணித்த அகல்யா, அறைக்குள்ளேயே குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். வெளியே கணேசனுடன் சென்று வந்த ஆதித்யா, சாமி கும்பிட்டு விட்டு அறைக்குள் நுழையும் முன் தன் அன்னை மற்றும் தங்கையைப் பார்த்து ‘எல்லாம் சரியாகும்’ என்பது போல் ஜாடை காட்டிவிட்டுச் சென்றான்.

அறைக்குள் நுழையும்போது ஆத்விக் “அப்பா” என்று ஓடி வந்து அவன் காலைக் கட்டிக்கொள்ள, அவனை அள்ளித் தூக்கிக்கொண்டவன் பால்கனியில் இருந்த ஊஞ்சலில் அமர வைத்து விளையாடக் காட்டினான். அங்கே அனன்யா பசியில் அழ ஆரம்பிக்க, அகல்யா குழந்தைக்குப் பால் கொடுக்க ஆரம்பித்தாள்.

சத்தம் போட்டுக் கொண்டிருந்த அனன்யாவைச் சமாதானப்படுத்த உள்ளே வந்த ஆதித்யா, அந்த உருக்கமான காட்சியைக் கண்டு கண்கலங்கிப் போனான். தாய்ப்பால் கொடுக்கிறாள் என்று கேள்விப்பட்டான், ஆனால் பெற்ற அன்னை போலவே அனன்யாவை அணைத்து அவள் பசியாற்றும் அழகைப் பார்த்தபோது, அவளோடு ஒரு அழகான வாழ்க்கை அமையவில்லையே என்ற குற்ற உணர்ச்சி அவனுக்கு மேலோங்கியது.

அவன் வருவதைப் பார்த்த அகல்யா எதற்கும் அலட்டிக்கொள்ளவில்லை. குழந்தைக்குப் பால் கொடுப்பதில் மட்டுமே கவனமாக இருந்தாள். இருவரும் பல வருடங்கள் குடும்பம் நடத்திய தம்பதிகள் போலவே இயல்பாக நடந்துகொண்டனர். பால் குடித்த அனன்யாவும், விளையாடிய களைப்பில் ஆத்விக்கும் உறங்கிப்போக, இரு குழந்தைகளையும் படுக்க வைத்தனர்.

“ஹலோ, எனக்கு இந்த கார்னர் தான் வேணும். நடுவுல தலையணை போடணும். அந்தப் பக்கம் நீங்க படுத்துக்கோங்க” என்று அகல்யா பாகம் பிரிக்க ஆரம்பித்தாள்.

“நோ நோ… எப்பவுமே நான் இந்தப் பக்கம் தான் படுப்பேன், பாப்பாவை அந்தப் பக்கம் படுக்க வைப்பேன். இந்த இடத்தை நான் விட்டுக் கொடுக்கவே மாட்டேன்” என்று அவனும் சண்டைக்கு வர, இருவருக்கும் இடையே சின்னப் போர் நடந்தது. ஓடிச் சென்று படுக்க முயன்றபோது இருவரும் தாளாமல் புரண்டு விழுந்தனர். ஒரு நொடி நெருக்கத்தை உணர்ந்தவர்கள், பிறகு கூச்சப்பட்டு ஆளுக்கு ஒரு மூலையில் உறங்க ஆரம்பித்தனர்.


“இல்ல, நான் இதுக்குச் சம்மதிக்க மாட்டேன். எந்த தைரியத்துல இந்த முடிவெடுத்த? நான் என்ன வக்கில்லாதவனா? என் புள்ளைங்களுக்குச் சோறு போட முடியாத அளவுக்கு எந்தத் தைரியத்துல டாக்குமெண்ட் ரெடி பண்ணலாம்?” என்று கணேஷ் அஸ்வினியிடம் கத்தினான்.

“நீ பண்ண முதல் தப்பு, நீ மூணு மாசம் கர்ப்பமா இருக்கிறதை என்கிட்ட சொல்லாம இருந்தது. இப்போ விவாகரத்துக்கு அப்ளை பண்ணிருக்க, அதுவும் மியூச்சுவல்! நான் சொன்னேனா எனக்கு உன்னைப் பிடிக்கலைன்னு? கொடுமைப்படுத்தினேனா? இருந்த கோபத்தை ராத்திரி உன் மேல காட்டினேன், தப்புதான். அதுக்காக என்னை விட்டுப் போகணும்னு நீயா எப்படி முடிவு எடுப்ப அஸ்வினி? அக்னி சாட்சியா என்னை கல்யாணம் பண்ணிருக்க, நீயும் குழந்தையும் எனக்கு மட்டும்தான் சொந்தம். மறுபடியும் என்னை அனாதையாக்கப் பார்க்கிறியா?” என்று ஆவேசமாகக் கேட்டான்.

அஸ்வினி அமைதியாக அவனைப் பார்த்துப் பேசினாள். “இப்போ கூட உங்க பக்கம் இருக்கிற நியாயத்தைத் தான் பேசுறீங்களே தவிர, என்னோட வலியைப் பத்தி உங்களுக்குத் தெரியாது. பிரக்னன்ட் டைம்ல பிசிகல் ரிலேஷன்ஷிப் வச்சுக்கக் கூடாதுன்னு சொன்னாலும் நீங்க என் பேச்சைக் கேட்க மாட்டீங்க. அதனால்தான் பிரிஞ்சா இந்த டார்ச்சர்ல இருந்து எனக்கு விடுதலை கிடைக்கும்னு நினைக்கிறேன். எனக்கு ஜீவனாம்சம் கூடத் தேவையில்லை. அண்ணாவுக்கும் அகல்யாவுக்கும் கல்யாணம் பண்ணி வச்சாச்சு, இனி நமக்குள்ள என்ன இருக்கு? ஆரம்பத்துல உன் மேல இருந்த பைத்தியத்துல தப்பு செஞ்சுட்டேன். ஆனா அசிங்கப்பட்டு அவமானப்பட்டு எதை அடைஞ்சேனோ, அது கிடைச்ச பிறகுதான் தெரியுது அந்த விஷயம் எனக்குப் பிடிக்காதுன்னு. ஓபனா சொல்லணும்னா உங்க செக்ஸ்யுவல் டார்ச்சரை என்னால ஏத்துக்க முடியலை. ப்ளீஸ், என்னை விட்டுடுங்க” என்று அவன் காலில் விழுந்து கெஞ்சினாள்.

அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் கணேஷைச் சாட்டையால் அடித்தது போல் இருந்தது. கர்ப்பிணிப் பெண் என்று கூடப் பார்க்காமல் அவளுக்குத் தான் கொடுத்த சித்திரவதையை நினைக்கும்போது அவனுக்கே அருவருப்பாக இருந்தது. அழுது கொண்டிருந்த அஸ்வினியைப் பார்த்து எதுவும் பேச முடியாமல், கணேஷ் அமைதியாக வெளியே சென்றான்.

You may also like

Leave a Comment

About Me

Featured