அத்தியாயம் 16
ஹைதராபாத் சிட்டியின் பரபரப்பைக் கட்டுப்படுத்தி, சற்று அமைதியாகவும் விஐபிகள் தங்கும் தனித்தனி பங்களாக்கள் இருக்கும் வீதியுமான பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ‘விகாஸ் கண்ணன் பேலஸ்’ என்ற வீட்டிற்குத் தனது காரைச் செலுத்தினான் விகாஸ் கண்ணன். தன் புது மனைவி லாவண்யாவுடன் வந்திறங்கிய அவன் முகத்தில் நிதானம் இருக்க, லாவண்யாவோ பேயறைந்தது போல் இருந்தாள்.
தனக்கு என்ன நடக்கிறது என்று கூடத் தெரியவில்லை. அவன் சொல்லுக்குக் கட்டுப்பட்டுத் தானே இவ்வளவு தூரம் வந்தோம்? நேற்று வரை இந்தப் புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துச் சிறந்து வாழ வேண்டும் என நினைத்திருந்தவளுக்கு, அன்று மாலையே தன் வாழ்க்கை மொத்தமாகத் திருப்பிப் போட்டது போல் ஆகிவிட்டதே என்ற அதிர்ச்சி அவளை விட்டு மீளவே இல்லை.
ஆரத்தி எடுத்து வீட்டிற்கு வரவழைக்கப்பட்ட பின், சோபாவில் பொம்மை போல் அமர்ந்து நேற்றைய நிகழ்வுகளைச் சிந்திக்கத் தொடங்கினாள் லாவண்யா.
நேற்று மாலை வெளியே செல்லலாம் என்று சொன்னவனோடு காரில் பயணம் மேற்கொண்டாள். கார் சிட்டியைத் தாண்டி நீண்ட தூரம் அவளை அழைத்துச் சென்றது.
“விக்கி, நீ எங்க அழைச்சிட்டுப் போற? இது சிட்டியைத் தாண்டிப் போற மாதிரி இருக்கு?”
“ம்ம்… அதான் என்ன ஏதுன்னு கேட்காம ஒரு ஆம்பளை கூப்பிட்ட உடனே வந்துட்டியே? இப்ப வந்து எங்க போறன்னு கேக்குற? எல்லாம் அதுக்குத்தான். அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, எவ்வளவு வேணுமோ வாங்கிக்கோ,” என்று சொன்னவனைத் திடுக்கிட்டுப் பார்த்தவளுக்குக் கோபம் வந்தது.
“ஹலோ விகாஸ்! இப்படியெல்லாம் பேசினால் மரியாதை இருக்காது. ஒழுங்கா என்னை எங்கிருந்து அழைச்சிட்டு வந்தியோ அங்க விட்டுடு. இல்ல வண்டியை நிறுத்து, நானே போயிடுறேன். இப்ப நிறுத்தப் போறியா இல்லையா?”
“ஓகே ஓகே, டென்ஷன் ஆக வேண்டாம். வண்டியை நிறுத்தணும் அவ்வளவுதானே? இதோ நிறுத்தியாச்சு,” என்று வண்டியை நிறுத்தினான். கதவைத் திறந்து வெளியே வந்தவளுக்குப் பயம் அதிகரித்துவிட்டது. அது ஒரு காட்டுப் பகுதி. சுற்றிப் பார்க்கக் கும்மிருட்டு. அருகில் யார் இருந்தால் கூடத் தெரியாது. பயத்தில் மீண்டும் காருக்குள் வந்து அமர்ந்துவிட…
“ஹாஹா… என்ன மேடம், பயந்துட்டியா? உன்னை நான் கடத்திக் கூட்டிட்டு வந்திருக்கேன், உன்னால தப்பிக்க முடியாது.”
அவளைக் காட்டுக்குள் இருக்கும் ஒரு சிறு வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.
“விக்கி, ஆர் யூ மேட்? என்ன பண்ணிட்டு இருக்க நீ? ஷிவானி நான் இல்லன்னு இந்நேரம் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணியிருப்பா. கண்டிப்பா என் செல்போன் டிராக்கர் வச்சு கண்டுபிடிச்சிருப்பாங்க. கொஞ்ச நேரத்துல போலீஸ் வர்றதுல ஆச்சரியமில்லை.”
தைரியமாகப் பேசியவளைப் பார்த்துச் சிரித்தவன், “சென்னையில ஆதித்யாவோட செகண்ட் லைஃப் ஸ்டார்ட் ஆன பிறகு நான் உன்னைப் பிக்கப் பண்ணப் பிளான் பண்ணிட்டேன். அதனாலதான் மஞ்சு மூலமா உன்னைப் பிரைன் வாஷ் பண்ண வச்சு, ஷிவானி மூலியமா ஹைதராபாத் வரவைத்து… எப்பப்பா, எவ்வளவு டென்ஷன்! உன்னை அடையறதுக்கு எவ்வளவு வருஷம் காத்துக்கிட்டு இருக்கேன்? அந்த ஆதித்யாவை நீ கல்யாணம் பண்ணாம இருந்தா, இந்நேரத்துக்கு நீ என் பொண்டாட்டியா, என் குழந்தைகளுக்கு அம்மாவாக இருப்பாய். இப்பவும் டைம் கடந்து போகல, இனிமே நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்.”
அவன் சொன்ன அணுகுண்டு போன்ற வார்த்தைகளில் லாவண்யா நிலைகுலைந்தாள். அப்படியென்றால் இவனிடம் வசமாக மாட்டிக்கொண்டோமா? ஆனால் ஏன் இவன் இப்படி நடந்து கொள்ள வேண்டும்?
“ஏய், என்ன பைத்தியக்காரத்தனமா பேசிட்டு இருக்கியா? நான் ஏற்கனவே கல்யாணமாகி ஒரு குழந்தைக்கு அம்மா. ஆறு மாசம் ஒருத்தன் கூட வாழ்ந்தவள். என்னைப்போய் கல்யாணம் பண்ணணும்னு ஆசைப்படுற? நானே இந்தக் கல்யாண பந்தம், காதல் எல்லாத்தையும் வெறுத்துப் போய்தான் இங்க வந்திருக்கேன். ஆனா பார்க்கிறவங்களுக்கு நான் இன்னொருத்தனைத் தேடி வந்த மாதிரிதான் இருக்கும். ஒரு பொய் சொல்லியாவது ஆதித்யா கூட மறுபடி போகப் பார்த்தேன், ஆனா மனசு கேட்கல. திருந்தி வாழலாம்னு பார்த்தால் நீ விடமாட்ட போல இருக்கே? ஆனா நீ இப்படிப்பட்டவன் கிடையாது விக்கி. நம்ம ஸ்கூல், காலேஜ் படிக்கும் போது நார்மலா தானே இருந்தாய்? ஏன் இப்படி மாறிட்ட? அதுவும் என்னை மாதிரி ஒருத்தியை நீ கல்யாணம் பண்ணித்தான் ஆகணுமா?” என்று கலங்கிக் கூறினாள்.
கொஞ்சமும் மனம் கரையாமல், “ஆமாம், உன்ன மாதிரி ஒருத்திதான் எனக்குக் கரெக்ட். அப்பதான் நீ வீட்ல இருக்க முடியும், நான் வெளியே என்னோட கேர்ள் ஃப்ரெண்ட் கூட ஜாலியா டேட்டிங் அது இதுன்னு இருக்க முடியும். இதுவே ஒரு பத்தினிப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வந்தா, ஏன் ஏதுன்னு கண்ணீர் விட்டு அழுது டிராமா போடுவா. ஆனா நீ அப்படி கிடையாது. காசு கொடுத்தால் போதும், அமைதியா வந்து அட்ஜஸ்ட் பண்ற ஆள் தானே நீ?” என்றான். அந்த வார்த்தைகள் கொடுக்காய்க் கொட்டின.
லாவண்யா இரு காதுகளையும் அழுத்த மூடிக்கொண்டு, “ப்ளீஸ், தயவு செஞ்சு இப்படிப் பேசாத. செத்து விடலாம் போல இருக்கு. என்னப் பத்தியும் என் சூழ்நிலை பத்தியும் உங்களுக்குச் சொன்னாலும் புரியாது. நான் சுயநலக்காரிதான், ஒத்துக்குறேன். எனக்குன்னு ஒரு வாழ்க்கை கிடைக்கிற வரைக்கும் நான் இப்படித்தான் இருப்பேன். இனி அப்படி இருக்கக்கூடாது, தனியாகத்தான் வாழ்ந்தாகணும்னு ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். ஆனா நீ ஏன் இப்படிப் பண்றன்னு எனக்குப் புரியல விக்கி,” என்று அவன் முன்னால் மண்டியிட்டுக் கதறினாள்.
“நீ எவ்வளவு அழுதாலும் நாளைக்கு நடக்கப்போற நம்ம கல்யாணத்தை யாராலும் தடுக்க முடியாது,” என்று கூறி அவளை அறைக்குள் அழைத்துச் சென்றான். அங்கே ஒரு பெண் இவர்களுக்காகக் காத்திருந்தாள்.
“சுமதி, இவங்கதான் உன்னோட வருங்கால முதலாளி அம்மா. நாளைக்கு வந்து அழைச்சிட்டுப் போற வரைக்கும் நீங்க இங்கதான் பத்திரமா இருக்கணும். காலைல நாலு மணிக்கு இவளை எழுப்பி, பீரோல இருக்கிற புபுடவை, நகை எல்லாத்தையும் போட்டு விடு. நம்ம அம்மா கோவிலில் காத்துக்கிட்டு இருப்பாங்க. இவங்க தப்பிக்க ட்ரை பண்ணுவாங்க, அப்படிப் பண்ணால் அவங்களோட குழந்தை முதல் புருஷன் கிட்ட பத்திரமா இருக்கு இல்லையா, அதுக்கு ஏதாவது ஒரு ஆபத்து வந்துடும்னு சொல்லு.”
அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. “விக்கி, என்ன பேசுற நீ? என் பொண்ணுக்கு எதுவும் ஆகக்கூடாது. நான் ரெண்டு மாசக் குழந்தையை விட்டுட்டு வந்தவள்தான், ஒத்துக்குறேன். ஆனா அந்தக் குழந்தை மேல எனக்குப் பாசம் இல்லாமலேயும் உரிமை இல்லாமலேயும் போகாது. என்னைக்கு வந்தாலும் அவளைப் பெத்தது நான் தான். என் பொண்ணுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு, ராஸ்கல் உன்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன்!” என்று அவன் சட்டையைப் பிடித்தாள்.
“ஏய், யார் மேல கை வைக்கப் பார்க்கிற? நாளைல இருந்து பொண்டாட்டிங்கிற அடிமை ஸ்தானத்துக்கு வரப்போற, அதை முதல்ல ஞாபகம் வச்சுக்கோ. என் மீது கை வைக்க வரியா? இதுக்கெல்லாம் பனிஷ்மென்ட் இல்லாம இருக்காது. நீ சேட்டை பண்ணாம இருந்தால் உன் பொண்ணு நல்லா இருப்பா. சும்மா விளையாட்டுக்குச் சொல்றேன், ஆதித்யா பத்திரமா பாத்துக்குவான்னு நினைக்காத. எல்லாமே என் கண்ட்ரோல் தான்.”
அழுத்தமாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிட, சுமதி அறைக்கதவைப் பூட்டிவிட்டு வெளியே காவல் காத்தாள். தப்பிப்பதற்கு வழியே கிடையாது. பாத்ரூம் சுவர் கூட உஷாராக மறைவு செய்யப்பட்டிருந்தது. பித்து பிடித்தது போல் இருந்தவளுக்கு விடிந்தது கூடத் தெரியவில்லை. காலையில் சுமதி குளிக்கச் சொன்னாள். குழந்தைக்கு ஏதும் ஆகிவிடுமோ என்ற பயத்தில் கடமைக்குக் குளித்தாள் லாவண்யா.
சுமதி அவளுக்கு அலங்காரம் செய்தாள். தேவதை போல் மணப்பெண் கோலத்தில் நின்றவளைப் பார்த்து சுமதிக்கே ஆச்சரியமாக இருந்தது.
“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. அதனால்தான் சின்னையா உங்களைத் தேடிப் பிடிச்சு வந்திருக்காரு. நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க, உங்க கடந்த காலம்னு ஒன்னு இருக்கும், அதையெல்லாம் மறந்து போயிடுங்க. ஒரு பொண்ணு தனியா வாழ்வதற்குச் சமூகத்தில 25% வாய்ப்புதான் இருக்கு. யாராவது ஒரு துணை இருந்தால்தான் வாழ முடியும். ஐயா இப்படிப் பேசுவாரே தவிர மனசு சொக்கத்தங்கம். வீட்டுக்குப் போனதும் தெரிஞ்சுப்பீங்க.”
ஆனால் லாவண்யா எதையும் கேட்கும் நிலையில் இல்லை. டிரைவர் சுப்பையா கார் கொண்டு வர, சுமதி அவளை அழைத்துச் சென்றாள். கார் காட்டு வீட்டைக் கடந்து சிட்டிக்குள் இருந்த ஒரு மிகப்பெரிய பெருமாள் கோவிலை அடைந்தது. அங்கு மணமேடையில் விகாஸ் காத்துக்கொண்டிருந்தான்.
வசியத்துக்குக் கட்டுப்பட்ட பொம்மை போல் அவன் அருகில் அமர்ந்தாள். ஐயர் மந்திரங்கள் சொல்லி மாங்கல்யத்தை எடுத்துத் தர, அவன் அவள் கழுத்தில் தாலி கட்டினான்.
இவை அனைத்தையும் நினைத்துப் பார்த்தவளை, சோபாவில் அமர்ந்திருந்த விகாஸ் அவள் கன்னத்தைத் தட்டி இயல்பு நிலைக்குத் திருப்பினான்.
“என்ன, அதுக்குள்ள முதலிரவு பத்தி எண்ணங்களா? அது இன்னைக்கு ராத்திரி. என்னோட திறமை எப்படின்னு தெரிஞ்சுக்கலாம். அப்புறம் சொல்ல மறந்துட்டேன், இவங்கதான் என்னோட அம்மா. இனிமே ரெண்டு பேரும் மாமியார்-மருமகள் சண்டை போட்டுக்கிட்டு என்கிட்ட ரிப்போர்ட் பண்ணுங்க, நான் ரசிக்கணும்.”
அவன் சொன்னதைப் பார்த்துச் சிரித்த மீனாட்சி அம்மா, “டேய், மருமகப் பொண்ணு இன்னைக்குத் தான் வீட்டுக்கு வந்திருக்கா, அவளைப் போய் இப்படிப் பயமுறுத்துற?” என்றவர் லாவண்யாவிடம் திரும்பினார். “அம்மா, அவன் அப்படித்தான். ரொம்பச் சேட்டைக்காரன். படிப்புல மக்கு. பிளஸ் ஒன் படிக்கும் போதெல்லாம் உங்க ஸ்கூலுக்கு இவன் வந்து சேர்ந்திருந்தான். ஆனா அப்பவே அவனுக்கு வயசு…”
அதற்குள் விகாஸ் சிரிக்க, லாவண்யா குறுக்கிட்டு, “எனக்கும் அவருக்கும் ஒரே வயசு தானே? எனக்கு இப்போ 25 ஆகுதுன்னா அவருக்கு 25 தான் இருக்கும். பிளஸ் ஒன் படிக்கும்போது 16 வயசு தானே?” என்றாள்.
“இவன் பத்தாவது நாலு அஞ்சு வாட்டி ஃபெயில். அப்புறம் இவனோட அப்பா திட்டி கோச்சிங் சென்டர் சேர்த்து பாஸ் பண்ண வச்சாரு. அப்போ நினைச்சுப் பாரு, அவன் உங்க கூட பிளஸ் ஒன் படிக்கும் போது 20 வயசு தாண்டிப் போச்சு. பார்க்க ஒல்லியா இருந்ததால நீங்க எல்லாரும் உங்க வயசுப் பையன்னு நினைச்சுக்கிட்டீங்க. அவன் தன் பிறந்தநாளைப் பத்தி யார்கிட்டயும் சொல்லி இருக்க மாட்டான்.”
அவன் உண்மையான வயதைப் பற்றித் தெரிந்ததும் லாவண்யாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. பிளஸ் ஒன்னில் அவன் 20 வயது கடந்தவனா? அப்படியென்றால் இப்போது அவனுக்கு 30 வயதாகப் போகிறதா? பார்க்க 25 வயது வாலிபன் போலவே தெரிந்தான்.
“சரி சரி, இப்ப என் வயசைப் பத்தி என்ன விவாதம்? எல்லாம் கல்யாண வயசுதான். நானும் ஒரு வழியா உங்க மருமகளைக் கூட்டிட்டு வந்துட்டேன், இனி உங்க பாடு,” என்று சொல்லிவிட்டு அறை நோக்கிச் சென்றவனை விசித்திரமாகப் பார்த்தாள் லாவண்யா.