அத்தியாயம் 4
மாளிகையின் அந்தப் பிரம்மாண்டமான ஹாலில் நிலவிய நிசப்தம், அக்னி மேலே சென்ற பிறகு இன்னும் அதிகமானது. சங்கமித்ரா அங்கேயே சிலையென நின்றிருந்தாள்.
அக்னியின் கைகள் தன் இடுப்பை வளைத்த அந்த அழுத்தம், இன்னும் அவளது மேனியில் தகிப்பது போன்ற ஒரு பிரமை. மெல்லத் தன் அறைக்குச் சென்றவள், அந்தப் பட்டுச் சேலையைக் களைந்துவிட்டு, ஒரு சாதாரண பருத்திச் சுடிதாருக்கு மாறினாள். முகம் கழுவிவிட்டுத் திரும்பியபோது, வாசலில் சாவித்திரி நின்றிருந்தார்.
“மித்ரா… கொஞ்சம் கீழே வர்றியா? அக்னி சாப்பிட வர மாட்டேன்னு சொல்லிட்டான். நீயாவது கொஞ்சம் அவன்கிட்ட சொல்லிப் பாரேன்,” என்றார் சாவித்திரி கவலையுடன்.
மித்ரா தயங்கினாள். “அவர் தான் வேணாம்னு சொல்றாரேம்மா… நான் போய் சொன்னா மட்டும் கேப்பாரா என்ன?”
“இல்லம்மா… இன்னைக்கு அந்த மனுஷன் முன்னாடி நீ நின்ன விதம், அவனுக்கே கொஞ்சம் ஆச்சரியமாத்தான் இருந்திருக்கும். அவன் மனசுக்குள்ள ஆயிரம் பாரம் இருக்கு. நீ கொண்டு போய் கொடுத்தா சாப்பிடுவான்னு ஒரு நம்பிக்கை,” என்று அவர் கெஞ்சலாகக் கேட்க, மித்ராவால் மறுக்க முடியவில்லை.
தட்டில் உணவை எடுத்துக் கொண்டு அக்னியின் அறைக்குச் சென்றாள். கதவு லேசாகத் திறந்திருந்தது. உள்ளே அக்னி சட்டையைக் கழற்றிவிட்டு, வெறும் பனியனுடன் அந்த மர்மமான ஓவியத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். கையில் ஒரு சிகரெட் புகைந்து கொண்டிருந்தது.
“சார்… சாப்பாடு,” என்று மெல்லிய குரலில் அழைத்தாள்.
அக்னி திரும்பவில்லை. “அம்மா கிட்ட தான் வேணாம்னு சொல்லிட்டேன்ல? எதுக்குத் திரும்ப வர்ற?” என்றான் கரடுமுரடான குரலில்.
மித்ரா உள்ளே நுழைந்து, தட்டை மேஜை மேல் வைத்தாள். “அம்மா சொன்னாங்கன்னு இல்ல சார்… நீங்க சாப்பிடணும்னு நான் நினைக்கிறேன். காலையில இருந்து அந்த டென்ஷன்ல சரியா எதுவும் சாப்பிடல நீங்க,” என்றாள் இயல்பாக.
அக்னி சிகரெட்டை அணைத்துவிட்டு அவளைத் திரும்பிப் பார்த்தான். அவளது கண்கள் களைப்பாகத் தெரிந்தன. “நீ என்ன என் மேல அவ்வளவு அக்கறை வச்சிருக்கவளா? இல்ல… நான் சாப்பிட்டா தான் உனக்கு சம்பளம் சரியா வரும்னு பாக்குறியா?” என்று நக்கலாகக் கேட்டான்.
மித்ரா சிரித்தாள். அந்தச் சிரிப்பு அக்னியை ஒரு நிமிடம் இமைக்கவிடாமல் செய்தது. “சம்பளம் நான் பார்த்துக் கொள்ள வேண்டிய குழந்தைகளுக்காக சார். ஆனா நீங்க பட்டினியா இருந்தா, அந்தப் பசங்களை யாரு பாத்துக்குவா? அவங்களுக்கு நீங்கதானே எல்லாம்,” என்றாள் நிதானமாக.
அக்னி எழுந்து அவளை நோக்கி வந்தான். “ரொம்பப் பேச ஆரம்பிச்சுட்ட மித்ரா. இன்னைக்குக் கீழே நான் பண்ணதுக்காக நீ என் மேல உரிமை எடுத்துக்கலாம்னு நினைக்காதே. அது வெறும் ஒரு நாடகம்,” என்றான் அவளது கண்களை உற்றுப் நோக்கி.
“நாடகம்னு நீங்க சொன்னாலும், அந்த நேரத்துல உங்க கைகள்ல இருந்த நடுக்கம் உண்மையைச் சொல்லுச்சு சார். நீங்க யாரையோ பார்த்துப் பயப்படுறீங்க. அது ஸ்வேதாவோட அப்பாவைப் பார்த்து இல்ல… உங்களுக்குள்ள இருக்குற ஏதோ ஒரு ஞாபகத்தைப் பார்த்து,” என்று மித்ரா தாளாமல் சொல்லிவிட்டாள்.
அக்னியின் முகம் சட்டென்று மாறியது. அவன் அவளது கையைத் திடீரெனப் பற்றி இழுத்தான். “என்ன சொன்ன? நடுக்கமா? எனக்கா? ஒரு அனாதை இல்லத்துப் பொண்ணு எனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்குறியா?” என்று ஆக்ரோஷமாகக் கேட்டான். அவனது முகம் அவளது முகத்திற்கு ஒரு அங்குலத் தூரத்தில் இருந்தது.
“ஆமாம்… அனாதை இல்லத்துப் பொண்ணு தான். ஆனா மனுஷங்களோட முகத்தைப் படிக்க எனக்குத் தெரியும். நீங்க ஒரு பாறை மாதிரி நடிக்கிறீங்க, ஆனா உள்ளுக்குள்ள ஒரு சின்னக் குழந்தை மாதிரி தவிச்சுட்டு இருக்கீங்க. அந்தத் தவிப்பை ஏன் மறைக்குறீங்க?” என்று அவனது கண்களை நேராகப் பார்த்துக் கேட்டாள்.
அக்னி அவளை அப்படியே சுவற்றோடு சாய்த்தான். அவனது அந்த முரட்டுத்தனமான நெருக்கத்தில் மித்ராவிற்கு மூச்சு வாங்கியது. “உன் எல்லை எதுன்னு தெரிஞ்சு பேசு மித்ரா. என் பர்சனல் விஷயத்துல நீ நுழையப் பார்த்தா, இந்த அக்னி எவ்வளவு மோசமானவன்னு நீ அப்போ தெரிஞ்சுப்ப. இப்போ இந்தத் தட்டை எடுத்துட்டு வெளிய போ!” என்று கர்ஜித்தான்.
ஆனால் மித்ரா அசையவில்லை. “போக மாட்டேன். நீங்க சாப்பிடுற வரைக்கும் இங்கயே தான் நிப்பேன். என்ன பண்ணுவீங்க? அடிச்சுக் கொல்லுவீங்களா? பண்ணுங்க… அனாதையா இருக்கிற எனக்கு அது ஒரு பெரிய விஷயமே இல்ல,” என்று விடாப்பிடியாகச் சொன்னாள்.
அக்னி அவளைக் கோபமாகப் பார்த்தான். பின் மெல்ல அவளது கையை விடுவித்தான். அவனது பார்வை அவளது கழுத்தில் ஏறி இறங்கியது. “சரி… நான் சாப்பிடுறேன். ஆனா ஒரு கண்டிஷன். இனிமே நீ என் முன்னாடி வரும்போது இந்தச் சுடிதார்ல வரக்கூடாது. அந்தப் பட்டுச் சேலையில தான் வரணும்,” என்றான் ஒரு மர்மமான புன்னகையுடன்.
“ஏன்? அது எதுக்கு சார்?” என்று மித்ரா குழப்பத்துடன் கேட்டாள்.
அக்னி ஒரு வாய் உணவை எடுத்து வாயில் போட்டபடி, “ஏன்னா… அந்தச் சேலையில நீ இருக்கும்போது தான் என் எதிரிங்க மட்டும் இல்ல, நானே கொஞ்சம் தடுமாறுறேன். அந்தத் தடுமாற்றம் எனக்குப் பிடிச்சிருக்கு,” என்று அழுத்தமாகச் சொன்னான்.
அவன் சொன்ன விதம் மித்ராவின் கன்னங்களைச் சிவக்க வைத்தது. அவனது அந்த நேரடிப் பேச்சு அவளுக்குள் ஒரு புதுவிதமான தாகத்தை ஏற்படுத்தியது. அக்னி சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டே நின்றவளுக்கு, இவன் வெறும் முரடன் மட்டும் அல்ல, ஒரு அழகான வேட்டையன் என்பதும் புரியத் தொடங்கியது.
அவன் சாப்பிட்டு முடித்ததும் தட்டை வாங்கிக் கொண்டு வெளியே வந்தாள். வாசலில் நின்றிருந்த சாவித்திரி, “சாப்பிட்டானா மித்ரா?” என்று கேட்டார்.
“சாப்பிட்டாருமா… ஆனா மனுஷன் ரொம்பக் குழப்பத்துல இருக்காரு,” என்று சொல்லிவிட்டுத் திரும்பிய மித்ராவுக்கு, அக்னியின் அந்தப் பார்வை அவளது இதயத்தை எங்கோ கொண்டு சென்றிருந்தது. அக்னிக்கும் அவளுக்குமான இந்தப் போராட்டம், ஒரு அழகான காதலாக மாறப்போவதை அந்த இரவு மௌனமாகச் சாட்சி சொன்னது.
மாளிகையின் ஜன்னல் கண்ணாடிகளில் மழைத்துளிகள் தாளம் போடத் தொடங்கின. அக்னியின் அறையிலிருந்து வெளியே வந்த சங்கமித்ராவிற்கு அவன் சொன்ன அந்த வார்த்தைகள் காதுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தன. “அந்தத் தடுமாற்றம் எனக்குப் பிடிச்சிருக்கு”- ஒரு அதிகாரமிக்க ஆணின் வாயிலிருந்து வந்த அந்த நேரடியான ஒப்புதல், அவளது 23 வயது மனதை என்னவோ செய்தது.
அன்று இரவு இரண்டு மணி இருக்கும். இடி முழக்கத்துடன் பெய்த கனமழையால் மின்சாரம் தடைபட்டது. அறை முழுவதும் இருள் சூழ்ந்தது. ஆரியனும் மித்ரனும் பயத்தில் சிணுங்க ஆரம்பித்தனர். மித்ரா மெழுகுவர்த்தியைத் தேடி எடுத்துப் பற்றவைத்தாள். குழந்தைகளின் பயத்தைப் போக்க அவளுக்குப் பால் தேவைப்பட்டது. மெதுவாகக் கீழே சென்று பாலைச் சூடுபடுத்தி , குழந்தைகளுக்கு கொடுத்து முடித்து அவர்களை உறங்க வைத்து விட்டாள்.
அப்போது பக்கத்தில் இருக்கும் அக்னி அறையில் ஏதோ சத்தம் பயங்கரமாக எழ,
மித்ரா பதற்றத்துடன் அக்னியின் அறைக்கதவைத் தள்ளினாள்.
கதவு திறந்தே இருந்தது. உள்ளே ஒரு மெழுகுவர்த்தியின் ஒளியில் அந்த அறை பயங்கரமாகக் காட்சியளித்தது. அக்னி தரையில் அமர்ந்து கையில் ஒரு உடைந்த கண்ணாடித் துண்டை வைத்துக் கொண்டிருந்தான்.
அவனது கையில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அவன் அந்த மர்மமான ஓவியத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான்… ஆனால் அது ஒரு வேதனையான சிரிப்பு.
“சார்… என்னாச்சு? கைல என்ன ரத்தம்?” என்று கத்தியபடி மித்ரா அவனருகே ஓடினாள்.
அக்னி அவளை நிமிர்ந்து பார்த்தான். அவனது கண்கள் போதையில் இல்லை, சொல்ல முடியாத வலியால் நிறைந்திருந்தன. “மித்ரா… இந்தத் தழும்பு இருக்குல்ல, என் முதுகுல…” என்று அவன் சொல்லத் தொடங்கினான். அவனது குரல் தழுதழுத்தது.
மித்ரா தட்டுத்தடுமாறி முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்தாள். அவனது கையைப் பிடித்து அந்த ரத்தத்தைத் துடைக்க ஆரம்பித்தாள். அவளது மென்மையான விரல்கள் அவனது முரட்டுத்தனமான கையில் பட்டபோது, அக்னி ஒரு நிமிடம் சிலிர்த்துப் போனான்.
அவ்வப்போது மித்ராவின் கண்களில் அக்னி முதுகில் இருக்கும் தழும்பை பார்ப்பதற்கான ஆவல் தெரிந்தது.
“என் முதுகுலையே இந்த தழும்பு வந்தது என்று உனக்கு கேள்வியா இருக்கா?? இந்தத் தழும்பை எனக்குக் கொடுத்தது வேற யாரும் இல்ல… ஸ்வேதா தான். நான் அவளை புரிஞ்சிக்க முயற்சி பண்ண எனக்கு அவ கொடுத்த பரிசு இது.
நான் அவளைத் தடுத்தப்போ, அந்தக் கண்ணாடித் துண்டால என் முதுகைக் கிழிச்சா. அவளுக்குப் பணம் தான் முக்கியமா இருந்தது, என் அன்பு இல்ல,” என்று அவன் சொல்லச் சொல்ல, மித்ராவின் கண்கள் கலங்கின.
“அதனால தான் நீங்க இப்படி ஆயிட்டீங்களா சார்? ஒருத்தர் பண்ணின தப்புக்காக உங்களை நீங்களே ஏன் வருத்திக்கிறீங்க?” என்று கேட்டபடி மருந்தைத் தடவினாள்.
அக்னி சட்டென்று அவளைத் தன் பக்கமாக இழுத்தான். அவளது முகம் அவனது மார்புக்கு மிக அருகில் வந்தது. அவனது இதயத் துடிப்பு ஒரு போர் முரசு போலக் கேட்டது. “எல்லா பொண்ணுங்களும் அப்படித்தான்னு நினைச்சேன் மித்ரா. ஆனா நீ… நீ ஏன் என் காயத்துக்கு மருந்து போடுற? ஏன் என் மனசைத் திருடப் பாக்குற?” என்று அவன் கேட்ட குரலில் ஒரு வேட்கை இருந்தது.
மித்ரா அவனது கண்களைப் பார்த்தாள். “நான் எதையும் திருடல சார்… உங்க காயத்தை ஆறவைக்க நினைக்கிறேன். அவ்வளவுதான்,” என்றாள் மிக மென்மையாக.
அக்னி அவளது முகத்தை இரு கைகளாலும் ஏந்தினான். இருளில் அந்த மெழுகுவர்த்தி ஒளியில் அவளது முகம் ஒரு தேவதை போல மின்னியது. “உன்னை விடுறதா இல்லை… பிடிச்சு வெச்சுக்கிறதான்னு தெரியல மித்ரா. நீயும் என்னை ஏமாத்திட்டுப் போயிடுவியோன்னு ஒரு பயம்,” என்றான்.
“மித்ரா யாரையும் ஏமாத்த மாட்டாள் சார்… அவளுக்கு அன்பு தான் உலகம்,” என்று அவள் சொன்ன அந்த நொடி, அக்னி அவளை ஆழமாக அணைத்துக் கொண்டான். அவனது பிடி அவளை நசுக்குவது போல இருந்தாலும், அதில் ஒரு தவிப்பு இருந்தது. அவனது வெற்று மார்பில் அவளது முகம் புதைய, மித்ராவுக்கு உலகம் மறந்து போனது.
“இன்னைக்கு நைட்டு மட்டும்… இங்கேயே இரு மித்ரா. எனக்குத் தனியா இருக்கப் பயமா இருக்கு,” என்று ஒரு சின்னக் குழந்தை போல அவன் கேட்டபோது, மித்ராவால் மறுக்க முடியவில்லை.
அவன் அவளது மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான். ஒரு மாவீரன் ஒரு பெண்ணின் மடியில் சரணடைந்த தருணம் அது. மித்ரா அவனது தலையை மெல்லக் கோதிவிட, அக்னி மெல்லக் கண் மூடினான். அந்த மழை இரவு, அவர்களுக்குள் ஒரு புதிய பந்தத்தை மௌனமாக எழுதி வைத்தது.
..