Home ANTIHERO33) பார்வை 😍

33) பார்வை 😍

by sreejanovels
6 views

அத்தியாயம் 33

சரியாக ஒன்றரை மாதம் கழித்து விஜய்யின் மகன் வினோ வர்மனின் இரண்டாம் ஆண்டு பிறந்தநாள் விழா வந்தது. அனைத்து ஏற்பாடுகளையும் தாய் மாமன்கள், அத்தைகள், பாட்டி, தாத்தாக்கள், அம்மா, அப்பா மற்றும் ஒரு பக்கம் சுவாதி, ரித்விக் என்று அனைவரும் ஆளுக்கு ஒரு வேலையை எடுத்துக் கொண்டு மிக விமர்சையாக வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என்று முடிவெடுத்தனர். அனைத்து அலங்காரங்களையும் செய்து முடித்து அனைவரும் அன்று விழாவிற்காகக் காத்திருந்தனர்.

அனைவருக்கும் அழைப்பிதழ் (Invitation) அனுப்பப்பட்டது. போதாத காலம், வினுஷாவின் தோழியும் இவர்கள் பிரிவிற்குக் காரணமானவளுமான அந்த காயத்ரியின் கணவனுக்கும் அது போய்ச் சேர்ந்தது. அவள் கணவனும் மகிழ்ச்சியாக, “ஹே இங்க பாரு, மிஸ்டர் விஜய் இருக்காருல்ல… ரெண்டு வருஷமா அவர் வைஃப் பத்தி எந்த நியூஸும் காணோம். இப்போ பாரு அவரோட மகனுக்கு ரெண்டாவது பிறந்தநாள் கொண்டாடப் போறாங்களாம். இதை கிராண்டா பண்ணனும்னு முடிவு பண்ணி இருக்காங்க. நம்மளை இன்வைட் பண்ணி இருக்காங்க. அன்னைக்கு அவங்க அனிவர்சரி பார்ட்டிக்கு அதிர்ஷ்டவசமா நம்ம சென்னையில இருந்ததால போக முடிஞ்சது. மறுபடியும் பாரேன், இப்போ நாம ஒரு வேலை விஷயமா சென்னைக்கு வந்து இருக்கோம், கரெக்டா இவங்க வீட்ல ஒரு பார்ட்டி நடக்குது. கண்டிப்பா நீ வரணும், குழந்தையோட பிறந்தநாள் இல்லையா?” என்று சொன்னார்.

காயத்ரி மனதில் ஒரு திட்டத்தைப் போட்டு “சரி சரி” என்று தலையாட்டி வைத்தாள். பாவம் அவள் கணவன் பொதுப்படையாகப் பேசிவிட்டுச் செல்ல, இவள் தனது சித்தப்பா மகனை இழுத்து வந்து, “இங்க பாரு, அங்கே பிறந்தநாள் விழா நடக்கப் போகுது. சின்னக் குழந்தையை அப்படி இப்படிச் சொந்தக்காரங்க வாங்கி விளையாடுவாங்க. அப்போ நைஸா நீ குழந்தையை வாங்கிக்கிட்டு நம்ம வீட்டுக்கு வந்துரு. நைட் ஃபுல்லா குழந்தை உன் கூடவே இருக்கட்டும். அழுதா பொம்மை… இப்போதான் ‘கோகோ மெலன்’ (Cocomelon) பார்க்குறாங்களே, நிறைய பசங்க… இந்த பையனும் டிவில பொம்மையைப் பார்ப்பான்னு நினைக்கிறேன். அதை வச்சுச் சமாளிச்சு குழந்தையைப் பத்திரமா வச்சுக்கலாம். ரொம்ப அழுதா அதுக்கு வேற ஏதாவது யோசனை வச்சுக்கலாம். ஆக மொத்தம் விஜய் – அஞ்சலிக்கு குழந்தை மூலமா சண்டை வந்து, அவங்க ரெண்டு பேருக்கும் பெரிய மனஸ்தாபத்தைக் கொண்டு வரணும். அதுதான் எனக்கு வேணும். எப்படி என்னோட ஐடியா?” என்று கேட்டாள். காயத்ரி சொன்னவுடன் அவள் சகோதரனுக்குப் பயம் வந்துவிட்டது. “அக்கா, இப்படியெல்லாம் யோசிக்கக் கூட ஆள் இல்லையே, ஏன் இவ்வாறு செய்கிறாய்?” என்று கேட்டான்.

அவள் தனக்கும் தன் தோழிக்கும் உள்ள நட்பைப் பற்றியும், அவள் தோழி விஜய்யின் காதலால் பாதிக்கப்பட்டு அவளுக்கு நடந்தவை அனைத்தையும் சொல்லி முடித்து, “சின்ன வயசுல இருந்து தாய் தந்தை பாசத்துக்கு ஏங்கி, காதலன் அப்படின்னு ஒருத்தர் இருந்தும் அவளுக்கு நிம்மதியைக் கொடுக்கல. இப்போ அவ இந்த உலகத்திலே இல்ல, ஆனா அவன் பொண்டாட்டி குழந்தை அப்படின்னு சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கான்னு சொன்னால், இதை எப்படி என்னால ஏற்றுக்கொள்ள முடியும்? இது எனக்குச் சுத்தமா பிடிக்கல. விஜய் – அஞ்சலிக்குச் சண்டை வரணும். குழந்தை காணாமல் போயிட்டா, ‘ஒழுங்கா பாத்துக்க மாட்டியா’ன்னு அவன் சும்மாவே பிசாசு மாதிரி கத்துவான். குழந்தை விஷயத்துல கண்டிப்பா ராட்சசன் தான், பொண்டாட்டிகிட்ட சண்டை போடுவான். அது அதிகமாகும் போது அவங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு பிரிவு வந்துடும்” என்று முட்டாள்தனமாகச் சொன்னாள். அவள் சகோதரனும், ‘இது ஒரு பைத்தியம், நம்ம இல்லை என்று சொன்னால் நம் அரியர் (Arrear) விஷயத்தைப் போட்டுக் கொடுத்துவிடும்’ என்று எண்ணி, வேறொரு திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு தலையை ஆட்டி வைத்தான்.

தான் ஒரு மிகப்பெரிய கடத்தல் ராணி என்பது போல காயத்ரி தன்னைத்தானே நினைத்துக் கொண்டு ஒரு திட்டத்தைப் போட, அது மிகப்பெரிய ஆபத்தை அவளுக்குத் தரும் என்று அவள் நினைக்கவில்லை.

,,,,,

பிறந்தநாள் காலையிலிருந்து தாய், தந்தை, அத்தை, மாமா என்று ஒவ்வொருவரும் பரிசாக வழங்கிக் கொண்டிருந்தனர். புதுச் சட்டை அணிந்து கொண்டு குழந்தை அம்மா, அப்பாவுடன் கோவிலுக்குச் சென்றது. குழந்தை பெயரில் அர்ச்சனை, யாகம், அன்னதானம் அனைத்தும் செய்து முடித்துப் பக்கத்தில் இருக்கும் ஷாப்பிங் மாலுக்குச் சென்றனர்.

இதெல்லாம் அஞ்சலி கனவில் கூட நினைக்காத ஒன்று. ‘இனி அவ்வளவுதான் வாழ்க்கை’ என்று நினைத்தவளுக்கு, மீண்டும் நானும் பிள்ளையும் இவனோடு இணைந்து ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழப் போகிறோம் என்று நினைக்கவே ஆசையாக இருந்தது.

இங்கே ரித்விக் – சுவாதி இருவரும் இவர்கள் பிரச்சனை முழுதாக ஒழியட்டும், அப்புறம் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவில் இருந்தனர். அவ்வப்போது கட்டிப்பிடித்து முத்தம் கூடக் கிடைக்க வாய்ப்பில்லாமல் ரித்விக் சுற்றி வந்தான்.

விஜய்க்கு மனது படபடப்பாக இருந்தது. அஞ்சலியிடம் சில விஷயங்களைக் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும். எதிர்பாராத பிரிவு, எதிர்பாராத இணைவு இரண்டும் மிகப்பெரிய ஆபத்தைக் கொடுக்கும். அவளிடம் பொறுமையாகப் பேசி, இனி வாழ்க்கை எப்படி என்று அவளுக்குத் தெரிய வைக்க வேண்டும். தன்னோடு ஒரு வாழ்க்கை அவளுக்கு நிம்மதியாக இருக்க வேண்டும் என்று தன்னை முழுமையாக மாற்றப் பயிற்சி செய்து கொண்டிருந்தான். அன்று இருவரும் சேர்ந்த பிறகு, அவளுக்கான அவகாசம் கொடுக்க வேண்டும் என்று அவளை நெருங்கவில்லை, ஆனால் கணவனாக அனைத்தையும் செய்தான். மறுபக்கம் அஞ்சலி விஜய்யிடம் ஒரு விஷயத்தைச் சொல்வதற்காகத் தவித்துக் கொண்டிருந்தாள்.

தக்க சமயம் வேண்டும். குழந்தையின் பிறந்தநாள் முடிந்த பிறகு சொல்ல வேண்டும். அதுவும் கரெக்டாக நான்காம் ஆண்டு திருமண விழா வரும்போது சொல்லிவிட வேண்டும் என்று ஒரு முடிவோடு அவள் இருந்தாள்.

இருவரும் ஒரு நிலையில், “எப்போது நமக்குத் தனிமை கிடைக்கும்?” என்று ஆவலில் காத்திருக்க, இந்த ஜோடி கிளிகளைப் பிரிப்பதற்காக காயத்ரி என்கிற ஜோக்கர் விழி வந்து கொண்டிருந்தாள்.

மாலை பிறந்தநாள் விழா மிகப் பிரம்மாண்டமாக வீட்டிலேயே நடந்தது. குழந்தைகளுக்கான கார்ட்டூன் செட் அமைப்புகள் மற்றும் மிகப்பெரிய கேக் ஒன்று தயாராக இருந்தது. குழந்தையை அழைத்து வந்து அனைவருக்கும் அறிமுகப்படுத்தி முக்கிய நேரத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.

காயத்ரியின் சகோதரன் வேறொரு திட்டத்தைச் செயல்படுத்தக் காத்திருந்தான். அதேபோலச் செயல்படுத்துவதற்காகச் சரியாக இரண்டு நபர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் ரகசியக் கேமராவைக் காயத்ரி மீது செலுத்தி இருந்தனர். காயத்ரி அங்கே குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருக்கும் வினோ வர்மனைப் பார்த்து நைஸாகப் பொம்மை காட்டித் தன் பக்கம் இழுத்தாள். அதே சமயம் அங்கு நின்று கொண்டிருந்த தன் சகோதரனுக்குச் சைகை காட்ட, அவள் அங்கிருந்து விலகிவிட்டாள். அவனும் குழந்தையை யார் கண்ணுக்கும் படாதவாறு தூக்கிச் சென்றுவிட்டான். இன்னும் கொஞ்ச நேரத்தில் கலவரம் வெடித்து விடும், விஜய் நிச்சயம் அஞ்சலியின் கவனக்குறைவைச் சுட்டிக்காட்டிப் பேசி மிகப்பெரிய சண்டையாகும், இருவருக்கும் மனஸ்தாபம் வரும் என்று காயத்ரி கணக்கு போட்டாள். “அதன் பிறகு தம்பிக்கு போன் போட்டு குழந்தையை நைஸாக அழைத்து வர வைத்துவிட வேண்டும், நிச்சயம் நம் மீது சந்தேகம் வராது. அந்த அளவுக்கு அங்கே கேமரா இல்லை, கேமரா இல்லாத பக்கம் தானே நாம் இந்த வேலையைச் செய்தோம்” என்று காயத்ரி சப்பைக்கட்டு கட்டினாள்.

கேக் வெட்டுவதற்கான நேரம் வந்ததால் அனைவரும் குழந்தை எங்கே என்று தேட ஆரம்பித்தனர். அப்பொழுதுதான் சிறுவர்கள், “அவன் விளையாடிக்கொண்டே சென்றானே” என்று சொல்ல, “இது என்ன விபரீதம்” என்று அனைவரும் குழந்தையைத் தேட ஆரம்பித்தனர். அஞ்சலிக்கு அப்படியே மூச்சு அடைத்துவிட்டது. மகன் காணவில்லை, எங்கே போய் இருப்பான் என்று “வினோ… வினோ…” என்று தேடினாள். விஜய்க்கு டென்ஷன் அதிகமாகியது. உடனடியாகத் தன் நண்பர்களை அணுகி உதவி செய்யுமாறு கேட்க, அவர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் தேடிக் கொண்டிருந்தனர்.

காயத்ரி “ஐயோ பாவம்” என்று கணவனோடு குழந்தையைத் தேடிக்கொண்டிருக்க, “நீங்கதானே காயத்ரி ரவிச்சந்திரன்?” என்று அவளைப் பார்த்து ஒருவர் கேட்டார். காயத்ரி திரும்பிப் பார்த்தவுடன் பயந்து போனாள். அவர் விழாவுக்கு வந்திருந்த விஜய்யின் போலீஸ் நண்பர்.

“ஆமா, நான் தான் காயத்ரி. என்ன வேணும்?”

“நாங்க விஜய் சாருக்கு குளோஸ். அதே சமயம் இந்த மாதிரி விஐபி ஃபங்ஷன்ல ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடக்கும்னுதான் நாங்க யாருக்கும் தெரியாம ரகசியக் கேமரா எல்லாம் வைத்திருந்தோம். எங்களுக்கு ஒரு காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் தான் இதுக்கு உதவி பண்ணுவாங்க. இன்னைக்கு ரகசியக் கேமரா வச்சு ரெகார்ட் பண்ண அந்த ஸ்டூடண்ட்ல நீங்கதான் குழந்தைக்கு விளையாட்டு முகமூடி போட்டு ஒரு நபருக்குக் கொடுத்து அனுப்பிச்ச மாதிரி இருந்துச்சு. அதனால சந்தேகத்தின் பேரில் உங்களை நாங்க கைது பண்றோம்” என்று சொன்னார். உடனே காயத்ரியின் கணவன் அவளை முறைக்க, அவள் பயத்தில், “ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்ல! அது முகமூடி போட்ட நபர் இல்ல, அவன் என்னோட தம்பிதான். நான் தான் குழந்தையை அவன்கிட்ட கொடுத்து அனுப்பினேன். குழந்தை காணாமல் போச்சுன்னா அம்மா அப்பா கூடச் சண்டை வந்து ரெண்டு பேரும் பிரிஞ்சு போவாங்கன்னு தான் அப்படிச் செய்தேன். இருங்க, என் தம்பிக்கு போன் பண்ணி சொல்றேன்” என்று அவளாகவே உண்மையைச் சொல்லி மாட்டிக்கொண்டாள்.

“தேவையில்லை, உங்க வாயிலிருந்து உண்மை வர வைக்கத்தான் இதைச் சொல்ல வேண்டியிருந்தது. நான் போலீஸ் எல்லாம் கிடையாது, விஜய்யோட பிசினஸ் பார்ட்னர் தான். அப்புறம் உங்க தம்பிதான் என்கிட்ட ஏற்கனவே உண்மையைச் சொல்லிட்டாரு. ‘செய்றது தப்பா இருக்கு’ அப்படின்னு உங்களுக்கு ஒரு சின்னப் பாடம் புகட்டத்தான் இதைச் செய்தோம். அவங்களுக்குள் சண்டை வந்து நீங்க என்ன பண்ணப் போறீங்க? இதனால இறந்து போன உங்க பிரண்ட் வினுஷா திரும்பி வரப் போறாங்களா? என்ன… நல்ல காரியம் நடக்கிற வீடு, உங்களால பிரச்சனை வரக்கூடாதுன்னு தான் தனியா கூப்பிட்டு வந்து இதெல்லாம் பேசுறேன். மறுபடியும் இந்த குடும்பத்துக்குள்ள உங்க தலையீடு இருக்கக்கூடாது. குழந்தை பத்திரமா அவங்க அம்மா அப்பாகிட்ட வந்தாச்சு. உங்க மேல பழி இல்ல… உங்க தம்பி ஸ்ட்ரைட்டா விஜய்யோட அத்தான் கிட்ட சொன்னதால அவர் என்கிட்ட ஹெல்ப் கேட்டாரு. நாங்க ரெண்டு பேரும் செய்த பிளான் தான் இது. உங்களைப் பத்தி இன்னும் விஜய்க்குத் தெரியல. நீங்க உங்க பேர் கெடுக்குறதுக்குள்ள எல்லாம் மாறி நல்லபடியா உள்ள வாங்க” என்று சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார்.

பிறகு அவள் சகோதரன் வந்து மன்னிப்புக் கேட்டு, “செய்வதெல்லாம் தவறு, இது நன்றாக இல்லை” என்று சொல்லிவிட்டு அவன் வீட்டிற்குச் சென்றுவிட்டான். காயத்ரியின் கணவன் அவளைத் திட்டிக் கொண்டே இருந்தான். “இந்த மாதிரி கிறுக்குத்தனம் பண்ணித்தான் வீட்ல அசிங்கப்படுவ. இங்கேயும் அப்படி நினைச்சுக்கிட்டியா? இங்க பாரு, பழி வாங்குறேன்னு பைத்தியக்காரத்தனம் பண்ணாத. வீட்டுக்கு வா, உனக்கு இருக்கு வேட்டு!” என்று அவர் திட்டி முடித்துப் பார்ட்டி ஹாலுக்கு வந்து சேர்ந்தார்.

அப்போது காயத்ரி கணவனைப் பார்த்த விஜய், நிம்மதியாகத் தன் மகனை வைத்துக் கொண்டு, “வெளியே பெரிய மிக்கி மௌஸ் பொம்மை இருக்கு இல்லையா, அதை வேடிக்கை பார்த்துட்டுப் போயிட்டான். என்னோட பிரதர்-இன்-லா அவர்தான் தூக்கிட்டு வந்து கொடுத்தார். கொஞ்ச நேரத்துல டென்ஷன் ஆகிட்டேன். கேக் கட் பண்ண டைம் ஆயிடுச்சு. நீங்க இன்னும் வரல இல்ல, அதான் உங்களுக்காக வெயிட் பண்ணோம். என்ன இருந்தாலும் நீ எனக்கு ஸ்பெஷல். நீயும் வினுஷாவும் எவ்வளவு குளோஸ் அப்படின்னு எனக்குத் தெரியும். உன்னை என்னோட சிஸ்டர் மாதிரி நான் நினைச்சேன். நீ ‘அண்ணா அண்ணா’ன்னு என்னைச் சுற்றி வரும் போது, இதெல்லாம் எனக்குத் தங்கச்சி இல்லாத குறை மாதிரி இருக்கும். என்னோட தங்கச்சி யோகிதா என் வாழ்க்கையில் வந்தாலும், நீ எனக்கு முதல் தங்கச்சியா தெரிஞ்ச. அதனால என்னோட மகனுக்கு அத்தை முறையில நீயும் அவன் பக்கத்துல வந்து நிக்கணும். அடுத்த வருஷம் அவனுக்குக் காது குத்தும்போது நீயும் உன்னோட குடும்பத்தோட வந்து நிக்கணும்” என்று மனம் உருகிப் பேசினான்.

விஜய் அவளிடம் அப்படிப் பேசியதும் காயத்ரிக்குக் குற்ற உணர்வு தலைதூக்கியது. ‘சிறிது நேரத்திற்கு முன்னால் இவர்கள் வாழ்க்கையைக் கெடுக்கப் பார்த்தோமே’ என்று தன் புத்தியை ஓரம் கட்டிவிட்டுச் சிரித்த முகத்தோடு அங்கே வந்து நின்றாள். குழந்தை மிகவும் சந்தோஷமாக கேக் கட் செய்து அனைவருக்கும் ஊட்டி முடித்தது. பிறகு ஆடல் பாடல் நிகழ்ச்சி, பரிசு உபசரிப்பு, விருந்தோம்பல் என்று அனைத்தும் நிறைவு பெற்று, இனிய பிறந்தநாள் விழாவும் முடிவடைந்தது.

,,,,,,,,,,,,,,,,,

You may also like

Leave a Comment

About Me

Featured