அத்தியாயம் 32
அன்று இரவு ரித்திக்கிற்குத் தூங்கா இரவாக மாறிப்போனது. அனைவரும் மகிழ்ச்சியாகத் தங்கள் அறையில் நித்திரை தழுவினர். குடும்பத்தார்கள் அனைவரும் அவரவர் அறைக்குச் சென்றுவிட, விஜய் அஞ்சலியைப் பார்த்த பார்வையில் தெரிந்திருக்கும் அவன் இப்போது தாறுமாறாக மனைவியிடம் கொஞ்சிக் கொண்டிருப்பான் என்று. ஆனால் தனக்கு ஒரு கன்னத்தில் முத்தம் கூடக் கிடைக்கவில்லை என்ற வேதனை ஒரு பக்கம். திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாள், ஆனால் முழு மனதாக ஏற்றுக் கொண்டாளா என்று அவனுக்கு ஏகப்பட்ட சந்தேகம் இருந்தது. இப்படி வீட்டுத் தோட்டத்தில் தாறுமாறாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்க…
ஏதோ ஒரு பொருள் அவன் மீது வந்து விழுந்தது. அது குழந்தைகள் விளையாடும் ரிமோட் கார் பொம்மை.
“இது யாரு என் மேல போட்டு விளையாடுவது?” என்று திரும்பிப் பார்க்க, குழந்தைகள் அறை இருக்கும் பால்கனியில் நின்று கொண்டு சுவாதிதான் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் பார்ப்பதற்காகத்தான் அதைத் தூக்கிப் போட்டு அவளாகவே வந்து தூது சொல்ல, ‘நான் வரணுமா??’ என்று ஆவலாகக் கேட்டான். அவள் தலையில் அடித்துக் கொண்டவள், “பின்ன வேற எதுக்கு? சீக்கிரம் வந்து தொலை!” என்று அவனுக்குச் சைகை செய்ய…
ஐயா, அப்படி என்றால் அவளைக் கட்டி அணைத்து இதழ் முத்தமிட்டு, கைகள் அவள் உடலில் அலைபாய விட்டு அவளோடு ஒன்றிணைவோம் என்று பேராசை கொண்ட காதல் ஆசை ராட்சசனாக ஒவ்வொரு படிக்கட்டாகத் தாவித் தாவிச் செல்ல…
கதவைத் திறக்கும் பொழுது பிள்ளைகள் எழுந்து விடுவார்கள் என்று பயந்தவன், பக்கத்தில் இருக்கும் பெட்ரூம் வழியாகச் சென்று அங்கிருந்து பால்கனி வழியாக எகிறிக் குதிக்க, இவன் இப்படி வருவதைப் பார்த்து சுவாதி முட்டை கண்ணை விரித்து முழித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன, என் கூடச் சின்ன ரொமான்ஸ் பண்ணனும்னு ஆசைப்பட்டு தானே கூப்பிட்ட? அப்புறம் எதுக்கு இப்படித் திருடனுக்குத் தேள் கொட்டின மாதிரி இருக்க? கமான் பேபி (Come on baby)” என்று அவளைப் பிடித்து இழுத்துத் தன் கைகளில் ஏந்திக் கொண்டவன், அவளின் இதழ்களில் தன் இதழ்களைச் செலுத்த நினைக்க…
“ஐயோ தப்பு தப்பு!” என்று குழந்தைகள் கத்திக் கலாட்டா செய்ய, அதிர்ந்து போனவன் திரும்பிப் பார்க்க, குழந்தைகள் பட்டாளம் அவனை முறைத்துக் கொண்டிருந்தது.
“அடியே! இதுங்க முழிச்சுக்கிட்டு இருக்குதுன்னு ஏன்டி சொல்லல?”
“எங்க சொல்ல விட்டிங்க? அதுக்குள்ள மேல பாய வரீங்க. உங்களையும் விளையாட்டுல சேர்த்துக்கச் சொல்லி ஒரே ஆட்டம், அதனால்தான் உங்களைக் கூப்பிட்டேன். நீங்க வேற மாதிரி நினைச்சுட்டீங்க” என்று சுவாதி சொல்ல, அவன் பரிதாபமாகப் பார்க்க, பிள்ளைகள் எல்லாரும் சிரித்தனர். “சரி வாங்க விளையாடலாம்” என்று அந்த அர்த்த ராத்திரியில் அல்லி, மல்லி, தாமரை விளையாடிக் கொண்டிருந்தனர்.
மறுபக்கம் இருக்கும் விஜய்யின் அறையிலிருந்து “ரொம்ப மோசம்… மோசம்… ப்ளீஸ் விடுங்க… ப்ளீஸ் விடுங்க” என்று சத்தம் கேட்டுக் கொண்டே இருக்க, பிள்ளைகளுக்கு அது கேட்கவில்லை. இவன்தான் அவர்கள் அறை ஒட்டி இருக்கும் சுவற்றுப் பக்கமாக அமர்ந்திருக்க, அருகில் சுவாதியும் அதைக் கேட்டு வெட்கப்பட, ‘நீ மனசு வைத்திருந்தால் இதைவிடப் பயங்கரமாக நடந்திருக்கும்’ என்பது போல் பார்வையாலே அவளைக் கபளீகரம் செய்தான் ரித்திக்.
“என்ன ரெண்டு பேரும் பார்த்துகிட்டே பேசிகிட்டு இருக்கீங்க? இந்தச் சீட்டை எடுத்துப் பக்கத்துல இருக்குற சீட்டுக்கு பாஸ் பண்ணுங்க” என்று குட்டி வினுஷா சொல்ல, எல்லாமே நேரம் என்பது போல் சிரித்துக் கொண்டே குழந்தைகளோடு குழந்தைகளாக அவனும் ஐக்கியமாகி விட்டான். ஆனால் அவ்வப்போது சுவாதியைச் சீண்டாமல் இல்லை.
,,,,,,,,,,
இங்கே விஜய் – அஞ்சலி இருவரும் இயல்பான கணவன் மனைவி போல் தங்கள் தாம்பத்தியத்தை ஆரம்பித்திருந்தனர். இருவருக்கும் இரண்டு வருடம் இடைவெளி இருந்தது என்பதை மறந்து, ‘ஏன் எங்க ரெண்டு பேருக்கும் இடைவெளி இருந்ததா? நாங்க ரெண்டு பேரும் பிரிஞ்சு இருந்தோமா? அப்படின்னா என்ன?’ என்று கேட்பது போல் இருவரும் ஒட்டி உரசிக்கொண்டு அன்யோன்யமாக இருந்தனர்.
அவள் நெற்றி, கன்னம், இதழ் என்று முத்தமிட்டு, கூடல் முடிந்த பின்னும் “எனக்கு எப்போதும் உன் மீது பிடிப்பு உண்டு” என்று அவளுக்கு நம்பிக்கை தருவது போல அவளைக் கட்டி அணைத்துத் தன் தோள் வளைவில் வைத்திருந்தான். அவளும் தன் கணவன் நெஞ்சில் அவனுக்கு முழுமையாகத் தன்னைக் கொடுத்த நிம்மதியில், கண்கள் நிறைந்த மகிழ்ச்சியோடு அவனைப் பார்த்தாள்.
இந்தத் தருணத்தை அவன் இதுவரை அனுபவித்தது கிடையாது. காரணம், அவன் செய்த முதல் தவறு முன்னாள் காதலியை நினைத்து இவளோடு இணைந்தது. அப்பொழுது எப்படி இவள் தனக்கு முழு காதல் அர்ப்பணிப்பைக் கொடுக்க முடியும்? இப்போது அவளை நினைத்து, அவளோடு இரு உடல் ஒரு உயிராகக் கலந்து, அவள் முழு காதலோடு தன்னைக் கொடுத்த பிறகு, அவளும் முழு ஈடுபாட்டோடு தன்னுடன் இணைந்து அவள் கண்களில் தெரியும் பொலிவைப் பார்க்கும் பொழுதுதான் தான் வெற்றி பெற்றது போல உணர்ந்தான் விஜய்.
“உன் கண்ணுல ஒரு பிரைட்னஸ் தெரியுது, இதுவரைக்கும் இத நான் பார்த்ததே கிடையாது. ஆனா ரொம்ப நல்லா இருக்கு. என் கூட இருக்க உனக்கு பிடிச்சிருக்கு தானே??”
“எப்பவுமே உங்க கூட இருக்கிறது எனக்குப் பிடிக்கும். நீங்க எனக்குன்னு ஸ்பெஷலா ஒரு இடம் தரும்போது, நான் முழுசா எல்லாத்தையும் மறக்கச் சொல்லல. அங்கே எனக்கு ஒரு இடம் கொடுங்கன்னு சொல்ல வரேன். இனிமே நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் எனக்காக விட்டுக்கொடுங்கள் என்று கேட்கிறேன். விட்டுக்கொடுப்பீங்களா??” என்று அவள் பாவமாகக் கேட்க, அவள் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன், அவள் கழுத்தில் முத்தமிட்டு ‘எல்லாம் உனக்குத்தான்’ என்பது போல் சுட்டிக்காட்டினான். மீண்டும் அவள் கரங்கள் அவன் உடலில் வெட்க ரோமங்களை எழுப்ப, அவளாகவே தன்னை அணுகுகிறாள் என்று புரிந்து கொண்டவன் அவளின் தேவையைப் பூர்த்தி செய்து, தனக்கு வேண்டியதையும் அவளிடம் பெற்றுக்கொண்டு இருவரும் முழு தாம்பத்தியத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
இருவருக்கும் நடுவில் ஒரு ‘டிஸ்டன்ஸ் பார்டர்’ (Distance Border) என்று ஆபீஸில் கட்டளை போட்டவள், எப்படி கட்டிலறை வந்தவுடன் மாறிவிட்டாளோ? அது காம தேவனுக்குத்தான் வெளிச்சம்!
மறுநாள் காலை, குழந்தைகளோடு குழந்தைகளாக அப்படியே தரையில் எல்லாரும் படுத்து உறங்கிக் கொண்டிருக்க, அறைக்குள் வந்த இசை, பிள்ளைகளோடு சுவாதி – ரித்திக் இருவரும் உறங்குவதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே தன் கணவரிடம் சொன்னாள். “அவர்கள் அப்படித்தான், புது நபர்களை விட்டுவிட மாட்டார்கள்” என்று அனைவரையும் எழுப்பி ஸ்கூலுக்கு அனுப்பி வைத்தனர். நாளையிலிருந்து விடுமுறை தொடங்குவதால், பிள்ளைகள் எல்லாரும் ஸ்கூலுக்குச் சென்றனர். அந்தச் சனி, ஞாயிறு லீவுக்காகத் திங்கள் முதல் வெள்ளி வரை எவ்வளவு பொறுக்க வேண்டியிருக்கிறது என்று ஆளாளுக்கு ஒரு கருத்துச் சொல்லிக் கொண்டு பள்ளி வேனில் ஏறிச் சென்றனர். பிறந்தநாள் விழாவுக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது. சரியாக ஞாயிற்றுக்கிழமை வருவதால் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி, வீட்டில் நடக்கும் பிறந்த நாள் விழாவுக்கு வருமாறு அழைப்பிதழ் கொடுத்திருந்தனர். நண்பர்கள் அனைவரும் வருவதாக வாக்குறுதி அளித்திருந்தனர். இதே செய்தி சுற்றுவட்டாரத்தில் காயத்ரியைச் சென்றடைய…
“நல்ல சமயம் நமக்குக் கிடைச்சிருக்கு. ஒரு அரை நாள் குழந்தை நம்மகிட்ட இருக்கட்டும். அந்த குழந்தைக்குத் தானே பிறந்தநாள்? அந்த குழந்தையைத் தூக்கிடலாம். அதுவும் அஞ்சலிகிட்ட இருந்து குழந்தை காணாமல் போகிற மாதிரி இருக்கணும், அப்பதான் விஜய்க்குள்ள இருக்குற அந்த மிருகம் வெளியே வருவான். அஞ்சலியைப் போட்டு டார்ச்சர் பண்ணுவான். அவன் பேசுற பேச்சு, அவகிட்ட அவன் நடந்துக்கிற விதம் நிச்சயம் அஞ்சலிக்குக் கோபம் வந்து நிரந்தரமா அவனை விட்டுப் பிரிந்து தூரமா போகணும். என்னோட வினுஷா வாழாத வாழ்க்கை எவளும் வாழக்கூடாது. விஜய் தனி மரமாகவே இருக்கட்டும். அதுக்கப்புறம் குழந்தையை அவங்ககிட்ட ஒப்படைக்கலாம். அதுக்கப்புறம் குழந்தை யார்கிட்ட இருந்தாலும் எனக்கு ஒரு பிராப்ளம் இல்ல. ஆனா அந்த விஜய், பொண்டாட்டி பிள்ளையோட நிம்மதியா இருக்கவே கூடாது. அவனுக்குத் தனிமைதான் நிரந்தரம். இப்படித்தானே வினுஷாவோட நிம்மதியைக் கெடுத்து, அவளை டாக்ஸிக்கான முறையில காதல் என்கிற பெயரில் டார்ச்சர் பண்ணி, அவளை இந்த உலகத்திலே இல்லாம பண்ணிட்டான். அவன் மட்டும் சந்தோஷமா இருக்கணுமா? இதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன்!”
என்று காயத்ரி தனது சித்தப்பா மகனிடம் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தாள். ‘இந்தப் பைத்தியத்தை நம்பி ஒரு செயலில் ஈடுபடுகிறோமே, அந்தச் சின்னக் குழந்தையை கடத்துகிறோமே, இல்லையென்றால் இவள் தான் வைத்திருக்கும் எட்டு அரியர் பற்றி வீட்டில் சொல்லி விடுவாள்’ என்ற பயத்தில் அவன் ஒப்புக் கொண்டான். இந்தப் பைத்தியக்காரி போட்ட திட்டத்தால் மிகப்பெரிய விளைவைச் சந்திக்கப் போகிறாள் என்று தெரியாமல் போய்விட்டது….
,,,,,,,