அத்தியாயம் 31
இவன் திடீரென்று கேட்பதற்கு என்ன காரணம் இருக்கும்? ஒருவேளை என்னை பிடித்து இருந்ததால் கேட்டிருக்கானோ? அல்லது என் மீது பரிதாபப்பட்டுத் தன்னைத் திருமணம் செய்ய விரும்புகிறானோ? என்று புரியாத புதிராகச் சுவாதி அவனைத் தன் கண்களால் கேள்வி கேட்டாள்.
“ஏற்கனவே சொன்னதுதான், உன்னைப் பற்றி என் தங்கச்சி நல்ல விதமாகத்தான் சொன்னாள். ஆனால் நீ அவளைக் கேலி (Tease) செய்வதாகச் சுற்றி இருப்பவர்கள் தப்பாகச் சொல்லிவிட்டார்கள். உண்மையில் நீ அவளை உன் கண்காணிப்புக்குக் கொண்டு வரத்தான் அவளிடம் வற்புறுத்திப் பேசி இருக்கிறாய். உன்னைப் போன்ற ஒரு நல்ல பெண்ணின் அறிவுரையைக் கேட்டு என் தங்கச்சி இருந்திருந்தால், இன்று நான் உன்னிடம் இப்படிப் பேச வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அவளே உன்னை இழுத்து வந்து எனக்குத் திருமணம் செய்து வைத்திருப்பாள். ஸ்ரீ குட்டிக்காக நான் இதைக்கூடச் செய்யாமல் இருந்தால் எப்படி? அதுவும் அவளுக்காக மட்டும் கிடையாது, எனக்கு உன்னை ஏற்கனவே ரொம்பப் பிடிக்கும். அப்ளிகேஷன் பார்மில் உன்னுடைய சின்னப் புகைப்படத்தைப் பார்த்தபோதே விழுந்துவிட்டேன். ஆனால் இவ்வளவு சீக்கிரம் நம் பிரச்சனை முடியும் என்று எதிர்பார்க்கவில்லை. என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ சுவாதி! எனக்கும் யாரும் இல்லை, உனக்கு நான் துணையாக இருக்கிறேன். எனக்கு எல்லாமே நீதான்… என்னைப்பார்த்துக்குவியா?” என்று கண்களைச் சுருக்கிப் பாவமாகக் கேட்டான்.
“உடனடியாகப் பதில் சொன்னால் இதற்கு மதிப்பு இல்லாமல் போகும். கொஞ்ச நாள் போகட்டும். முதலில் அஞ்சலியும் விஜய் சாரும் சேரட்டும். அவர்கள் இருவரும் சின்னப் பிள்ளைத்தனமாகச் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு குழந்தை வந்த பிறகும், நேற்று அவர்கள் இன்னொரு குழந்தைக்கான முயற்சியைக் (Process) கூட ஆரம்பித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். என்னடா ஒரு பெண்ணாக இருந்து இப்படி எல்லாம் பேசுகிறாளே என்று நினைக்க வேண்டாம், வெளிப்படையாக உண்மையைச் சொன்னேன். முதலில் அவர்கள் பிரச்சனை முடியட்டும், அடுத்து நம் பிரச்சனையைப் பார்க்கலாம். நமக்கு இப்போது பெரிய பிரச்சனை எல்லாம் இல்லை. அவர்களைச் சேர்த்து வைத்து அவர்கள் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, நீயும் நானும் கல்யாணம் பண்ணிட்டு வாழணும்; இதுதான் என் ஆசை. எனக்கு ஆபீஸ் ஒதுக்கித் கொடுத்த அப்பார்ட்மெண்ட் (Apartment) ரொம்பப் பிடித்திருக்கிறது. அங்கே வசதி எப்படி?” என்று தன் விருப்பத்தை வேறு விதமாகச் சொன்னாள். அவள் தலையை வருடிவிட்டவன், “சீக்கிரம் எல்லாம் நல்லபடியா முடியணும்” என்று சொல்லிவிட்டு வேலைக்குச் சென்றான்.
சுவாதிக்குத் தனக்கென யாரும் இல்லை. பெற்றவர்கள் சொத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். அந்தச் சொத்தைத் தெரிந்தவர் மூலம் பாதுகாத்து, ஒரு ஆசிரமத்தில் வளர்ந்து, வாடகைக்கு வரும் பணத்தை மொத்தமாக ஆசிரமத்திற்குக் கொடுத்துத் தானும் சேர்த்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவள் இவள். இதற்கிடையில் தோழி ஒருத்தி தவறான பாதைக்குச் செல்வதைத் தடுத்தபோது, அவள் குற்றவாளியாக மாறியது ஒரு பெரும் கதை. தான் இன்னும் பொறுமையாகக் கையாண்டிருக்கலாம் என்ற குற்ற உணர்வு அவளை ஐந்து வருடங்களாக வாட்டி வதைத்தது. ஆனால் இப்போது எல்லாம் நல்லபடியாக முடிந்த நிம்மதி அவளுக்கு ஏற்பட்டது. ரித்திக் சொன்னது போல அவனுக்கும் யாரும் இல்லை. இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்தால் என்ன? ஏற்கனவே அவன் இவள் மனதில் குடிகொண்டவன்தானே! இப்போதே அவன் கேட்கும்போது மற்ற பெண்களைப் போல ‘சீன்’ போடுவது அவளுக்குப் பிடிக்கவில்லை, அதனால் சம்மதித்தாள். ஆனால், தன் கணவனை நினைத்துக்கொண்டு அவனைச் சேர்த்துக் கொள்ளாமல் விசித்திரமாகத் திரியும் அஞ்சலியைச் சேர்த்து வைத்த பிறகுதான், தன் வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்ற முடிவில் சுவாதி உறுதியாக இருந்தாள்.
மதிய இடைவேளை வந்தவுடன் அஞ்சலி தன் மகனைப் பார்க்கச் சென்றாள். அங்கே முந்திரிக்கொட்டை போல் விஜய் மகனோடு விளையாடிக் கொண்டிருந்தான். அஞ்சலி மகனுக்குச் சாப்பாடு ஊட்ட முயல, விஜய்யோ அவளிடமிருந்து பிடுங்கி, அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துத் தானே ஊட்டினான். மகன் ஜம்மென்று சாப்பிட்டுவிட்டு அப்பாவுடன் விளையாடினான்.
“என்ன முடிவு பண்ணி இருக்க அஞ்சலி?” (வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது!)
“ஏங்க என் உயிரை எடுக்குறீங்க? இப்ப என்ன, உங்க கூட வரணும்… அவ்வளவுதானே? உங்க முன்னாள் காதலி பெயரைச் சொல்லி என்கூடக் குடும்பம் நடத்துவீங்க, அதை நான் பல்லைக் கடித்துக்கொண்டு சகித்துக்கொள்ள வேண்டும். என் அன்பான குணத்தை வைத்து உங்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டும், அதானே? சரி வந்து தொலைகிறேன்!” என்று பட்டாசு போல் வெடித்தாள் அஞ்சலி.
“நீ இவ்வளவு ரியாக்ஷன் கொடுக்கத் தேவையில்லை. என் மனநோய்க்குத் தீர்வான மருந்தே நீதான். நீ என்னைவிட்டுப் போன பிறகு நான் மீண்டும் மனநோயாளி போலத்தான் இருந்தேன். நீ கண்டிப்பாக வந்துதான் ஆக வேண்டும். செல்லக்குட்டி, அப்பா கூட வரீங்களா?” என்று விஜய் கேட்க, மகன் அப்பா மீது குரங்குக்குட்டி போல் தாவினான். அஞ்சலிக்குத் தான் இத்தனை நாள் காத்து வந்த கோபமும் பொறுமையும் வீணாகிவிட்டதே என்று வேதனையாக இருந்தது.
“சில விஷயங்கள் சரியான இடத்தில் இருந்தால்தான் மதிப்பு. அன்று நான் உன்னிடம் அப்படி நடந்திருக்கக்கூடாது. அம்மா எனக்கு எல்லாவற்றையும் தெளிவாகச் சொன்னார்கள். அந்த காயத்ரி கலகம் பண்ணிட்டுப் போய்விட்டாள். அவள் சொன்னதற்கு நீ ஏன் இவ்வளவு எமோஷனலாக ரியாக்ட் செய்தாய்? நான் அவளைச் சமாதானப்படுத்தத்தான் அப்படிச் சொன்னேனே தவிர, என் மனநிலை வேறாக இருந்தது. அன்று நான் போட்ட திட்டம் எல்லாம் வீணாகிவிட்டது. இன்னும் இரண்டு மாதங்களில் நம் வினு குட்டியின் பிறந்தநாள் வரப்போகிறது. அன்று உனக்கு அந்தச் சர்ப்ரைஸைச் சொல்லலாம் என்று நினைத்தேன். ப்ளீஸ் அஞ்சலி, இந்த ஒரு முறை எனக்காக வா! என் அக்கா, தங்கை எல்லாரும் குடும்பம் குழந்தையோடு சந்தோஷமாக வாழும்போது, நான் மட்டும் வெட்டிவிட்ட மரம் போலத் தனியாக இருப்பது கஷ்டமாக இருக்கிறது” என்று விஜய் கெஞ்ச ஆரம்பித்தான்.
கணவனைப் பார்த்தாலே உருகிப் போகிறவளுக்கு அவன் தொட்டவுடன் சொல்லவா வேண்டும்? ரோஷத்தையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, “சரி, இன்னைக்கு நாம வீட்டுக்குப்போலாம் விஜி” என்று செல்லமாகச் சொன்னாள். அவ்வளவுதான், விஜய்க்குத் தலைகால் புரியவில்லை.
“ஆனா ஒன்னு, இனிமேல் ரிஸ்க் எடுக்க வேண்டாம். நாம் கொஞ்சம் இடைவெளி (Distance) மெயின்டைன் பண்ணுவோம். குழந்தை நம் வீட்டில் உள்ளவர்களோடு நன்றாகப் பழகட்டும். உங்களுக்கு இரண்டு மாதம் டைம் தருகிறேன்; அதற்குள் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கவனிப்பேன்” என்று அஞ்சலி நிபந்தனை விதித்தாள். ‘அஸ்திவாரம் போட்டாச்சு’ என்று நினைத்துக்கொண்ட விஜய், அதற்குச் சம்மதித்தான்.
அஞ்சலி உடனே சுவாதியிடம் சென்று விஷயத்தைச் சொல்ல, சுவாதிக்கு அளவற்ற மகிழ்ச்சி. “நீயும் உன் கணவனும் குழந்தையோடு சந்தோஷமாக வாழ வேண்டும். அம்மா, அப்பாவை இழந்து தனியாக இருக்கும் எனக்குத்தான் அதன் அருமை தெரியும். நீங்கள் சேருவீர்கள் என்று என் உள்மனசு சொல்லிக்கொண்டே இருந்தது. நீயும் இனி விட்டுக்கொடுத்துச் செல்” என்று அறிவுரை கூறினாள். மேலும், தானும் ரித்திக்கும் திருமணம் செய்து கொள்ளப்போகும் முடிவையும் சொன்னாள். அஞ்சலிக்கு இது பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
இரு தோழிகளும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர். மாலை நேரம் சுவாதியைத் தனியாக அழைத்துச் சென்று பேசலாம் என்று காத்திருந்த ரித்திக்கின் தலையில் மண்ணள்ளிப் போட்டுவிட்டு, அஞ்சலி சுவாதியைத் தன் மாமியார் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். அங்கே குடும்பத்தினர் அனைவரும் ஆரத்தி தட்டோடு காத்துக்கொண்டிருந்தனர். குட்டிப் பையன் வந்த சந்தோஷத்தில் அனைவரும் அவனைக் கொண்டாடினர். அஞ்சலியும் விஜய்யும் ஒரு தருணத்தில் தனியாக இருந்தனர். சுவாதி குழந்தைகளோடு குழந்தையாக விளையாட ஆரம்பித்தாள். ரித்திக் ஏமாற்றத்துடன் கன்னத்தில் கை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
(எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டது என்று நினைக்காதீர்கள்… ஏழரைச் சனி இவர்களை ரவுண்டு கட்டி அடிக்கக் காத்திருக்கிறது!)
,,,,,,,,
“என்ன சொல்கிறாய்? மீண்டும் அஞ்சலி அவன் கூட வாழப் போகிறாளா?” என்று ஒரு குரல் சந்தேகமாகக் கேட்டது.
“மேடம், நான் இரண்டு வருஷமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை அஞ்சலி மேடம் இங்கே வந்ததே இல்லை, பிரிந்துதான் இருந்தார்கள். விஜய் சார் தேவதாஸ் போலச் சுற்றிக்கொண்டு இருந்தார். ஆனால் திடீரென்று அஞ்சலி வந்து, இரண்டு நாட்களில் வீட்டுக்கே சென்றுவிட்டார். மீண்டும் இருவரும் சேர்ந்துவிட்டார்கள்” என்று ஒரு பெண் தகவல் சொன்னாள்.
அதற்கு அந்த மர்ம நபர் கோபமாக, “என் வினுஷாவின் வாழ்க்கையே அந்தத் தேவா குடும்பத்தால்தான் நாசமாகப் போனது. இப்போது அந்த விஜய் குடும்பம் குட்டியோடு வாழ ஆரம்பித்துவிட்டானா? அவர்களைப் பிரித்தாலும் அவர்கள் குழந்தை மூலமாகச் சேர்ந்துவிடுவார்கள். அந்த குழந்தை இருந்தால்தானே?” என்று வன்மத்தைக் கக்கினாள். வினுஷாவின் மரணத்திற்கு விஜய் – அஞ்சலிதான் காரணம் என்று விடாமல் துரத்திக்கொண்டிருக்கும் அந்த காயத்ரி ஒரு கொடூரத் திட்டத்தைப் போட்டாள்.
சரியாகக் குழந்தையின் இரண்டாம் ஆண்டு பிறந்தநாள் விழாவில், காலை நேரத்தில் குழந்தை கடத்தப்பட்டது!
(இந்த வில்லியின் ஆட்டம் சீக்கிரம் முடிவுக்கு வரும். கிளைமாக்ஸை நோக்கிச் செல்கிறோம். தொடர்ந்து படிக்கவும்…)