அத்தியாயம் 3
சென்னையின் மிகப்பிரசித்தி பெற்ற அந்த நட்சத்திர ஓட்டலின் பிரம்மாண்டமான பார்ட்டி ஹால் விளக்குகளின் ஒளியில் மின்னிக் கொண்டிருந்தது. கல்லூரியின் மேனேஜ்மென்ட் துறையினர் இணைந்து நடத்திய அந்த பார்ட்டியில், சீனியர் மற்றும் ஜூனியர் மாணவர்கள் என ஒட்டுமொத்தக் கூட்டமும் மேற்கத்திய இசையின் தாளத்திற்கு ஏற்ப ஆடிக்கொண்டிருந்தது.
விலையுயர்ந்த ஆடைகளில் இளம்பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொண்டு வலம் வர, அங்கே ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தாள் இளவஞ்சி.
சித்தி மரகதமும், தங்கை சினேகாவும் எவ்வளவோ தடுத்தும், கல்லூரியின் இறுதி ஆண்டு கட்டாய நிகழ்வு என்பதால் இளவஞ்சி அங்கே வர வேண்டியதாயிற்று. எளிய பருத்திப் புடவை, ஒற்றை ஜடை, முகத்தில் எந்த ஒப்பனையும் இல்லை. ஆனாலும், அந்தப் பிரம்மாண்ட அரங்கில் இருந்த எந்த ஆடம்பரப் பெண்ணும் அவளது இயற்கை அழகுக்கு ஈடாகவில்லை. ஆனால், அவளோ தன் கைகளைத் தன் மார்போடு கட்டியபடி, யாருடனும் ஒட்டாமல் ஒரு தூணின் மறைவில் ஒதுங்கி நின்றிருந்தாள்.
அதே நேரத்தில், அந்த ஹாலின் இன்னொரு பகுதியில் தன் தோழியுடன் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தாள் சினேகா. அவளது கண்கள் அந்த ஓட்டலின் விஐபி நுழைவாயிலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.
“சினேகா… நான் சொன்னது உனக்கு ஞாபகம் இருக்குல்ல? இன்னைக்கு இந்த ஓட்டலோட பிரசிடென்ஷியல் சூட் ரூமுக்கு ஒரு மிகப்பெரிய இடத்து விஐபி வராரு. சக்கரவர்த்தி எம்பையர்ஸோட சிஇஓ… கந்தர்வன் சக்கரவர்த்தி! ஊரே அவனைக் கண்டு நடுங்கும். ஆனா பொம்பளைங்கன்னா அவனுக்குப் பைத்தியம். நீ கேக்குற காசை அள்ளித் தருவான். நீ இன்னைக்கு நைட்டு மட்டும் அவனுக்குக் கம்பெனி கொடுத்தா போதும், உன் லைஃபே செட்டில் ஆகிடும்!” என்று சினேகாவின் காதில் ரகசியம் ஓதினாள் அவளது தோழி.
சினேகாவின் கண்கள் பணத்தாசையால் விரிந்தன. “நிஜமாவா சொல்ற ரம்யா? காசு கிடைச்சா நான் எதை வேணாலும் பண்ணத் தயார். எங்க வீட்டு நிலைமை உனக்கே தெரியும். அந்தப் பணக்காரன் கிட்ட இருந்து எவ்ளோ கறக்க முடியுமோ அவ்ளோ கறந்திடணும். என் அம்மாவுக்கும் இந்த விஷயம் தெரிஞ்சா சந்தோஷப்படுவாங்க. ஆனா, நான் எப்படி அவரோட ரூமுக்குப் போறது?”
“அதெல்லாம் நான் அரேஞ்ச் பண்ணிட்டேன். ரூம் நம்பர் 704. அவர் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வந்துடுவாரு. நீ யாருக்கும் தெரியாம அங்க போயிடு. சொல்ல முடியாது உனக்கு முன்னாடி அவர் கூட ரூமுக்குள்ள இருக்கலாம்” என்று ஒரு சாவியைக் கொடுத்தாள் ரம்யா.
சினேகா அந்தச் சாவியை வாங்கிக் கொண்டு, சுற்றிலும் யாரும் பார்க்கிறார்களா என்று நோட்டமிட்டாள். பல்லிளித்துக் கொண்டு, பணப் பேயாகத் தன் இறுதி ஆண்டு பார்ட்டியைக் கூட மதிக்காமல், யாருக்கும் தெரியாமல் லிஃப்ட்டை நோக்கி நகரத் தொடங்கினாள்.
துரதிர்ஷ்டவசமாக, ஒரு தூணின் பின்னால் நின்று கொண்டிருந்த இளவஞ்சியின் கூர்மையான கண்களில் சினேகாவின் இந்த விசித்திரமான பதற்றமும், அவள் ரகசியமாகச் சாவியை வாங்கியதும் விழுந்துவிட்டது.
“சினேகா ஏன் இந்த நேரத்துல பார்ட்டியை விட்டுட்டு லிஃப்ட் பக்கமா போறா? அதுவும் அவ முகத்துல ஏதோ ஒரு தப்பான பதற்றம் தெரியுதே… அம்மா அவளைப் பத்திரமாப் பார்த்துக்கச் சொன்னாங்களே. ஏதாவது வம்பில் போய் மாட்டிக்கப் போறாளா?” என்று இளவஞ்சியின் உள்ளுணர்வு அவளை எச்சரித்தது.
மேலும் அவர்கள் பேசுவது மெலிதாக இருந்தாலும் கையில் இருக்கும் சாவி எண் 704 என்று குறிக்கப்பட்டிருந்தது.
அது மட்டும் மனதில் வைத்துக் கொண்டு.
தங்கையின் மேல் இருக்கும் பாசத்தினால், அவளுக்கு வரப்போகும் ஆபத்தை அறியாமல், சினேகாவைத் பின்தொடர்ந்து இளவஞ்சியும் லிஃப்ட்டை நோக்கி விரைந்தாள்.
அதே ஓட்டலின் ஏழாவது மாடியில் இருக்கும் 704 எண் கொண்ட அந்த ஆடம்பரமான பிரசிடென்ஷியல் சூட் அறை.
கதவு தானாகத் திறந்து மூட, உள்ளே நுழைந்தான் கந்தர்வன் சக்கரவர்த்தி. அவனது கறுப்பு நிற கோட் கசங்கி ஒரு பக்கமாய் கிடக்க, கையில் இருந்த ஒயின் கிளாஸை அங்கிருந்த மேஜை மீது சத்தமாக வைத்தான். அவனது முகத்தில் வழக்கம் போல அந்த அசுரத்தனமான முரட்டுத்தனமும், பெண்களின் மீதான அலட்சியமும் தாண்டவமாடியது.
“காசுக்காகத் தன் மானத்தையே விற்கத் துணியும் இந்த உலகத்துப் பெண்களை நினைத்தாலே அருவருப்பாக இருக்கிறது. இன்று இரவு என் படுக்கையறையை அலங்கரிக்க எந்தப் பேய் வரப்போகிறதோ?” என்று தனக்குள்ளே முணுமுணுத்தபடி, தன் சட்டையின் முதல் இரண்டு பொத்தான்களைக் கழற்றினான்.
சரியாக அந்த நேரத்தில், கதவு மெதுவாகத் திறக்கும் சத்தம் கேட்டது.
கந்தர்வன் திரும்பிப் பார்த்தான். ஆனால் அங்கே வந்தது சினேகா அல்ல! சினேகா லிஃப்ட்டில் ஏறிச் சென்ற வேகத்தில், இளவஞ்சி அவசர அவசரமாகப் படிக்கட்டுகள் வழியாக ஓடி வந்து, 704 எண் கொண்ட அறையின் கதவு லேசாகத் திறந்திருப்பதைப் பார்த்து, தன் தங்கை உள்ளேதான் இருக்கிறாள் என்று நினைத்து உள்ளே நுழைந்துவிட்டாள்!
அறையின் மங்கலான வெளிச்சத்தில், அங்கே நின்றிருந்த கந்தர்வனைக் கண்டதும் இளவஞ்சி அதிர்ந்து ஒரு அடி பின்னாடி வைத்தாள். அவளது இதயம் பயத்தால் வேகமாகத் துடித்தது.
கந்தர்வன் அவளை ஏறிட்டுப் பார்த்தான். ஜீன்ஸ், மாடர்ன் உடைகளில் பெண்களைப் பார்த்துச் சலித்த அவனது கண்களுக்கு முன்னால், ஒரு தேவதையைப் போலப் பருத்திப் புடவையில், எந்த ஒப்பனையும் இல்லாமல் நின்றிருந்த இளவஞ்சியின் பேரழகு அவனது அசுர மனதை ஒரு நொடி உலுக்கியது. ஆனால், அடுத்த நொடியே அவனது மன்மத ஈகோவும், பெண்களைப் பற்றிய தவறான எண்ணமும் தலைதூக்கியது.
“ஓ… சோ, இன்னைக்கு எனக்குக் கம்பெனி கொடுக்க வந்திருக்கிற ஆள் நீதானா? பார்க்க ரொம்ப சுதேசியா, குடும்பப் குத்துவிளக்காட்டம் இருக்கே? ஆனா, காசுன்னு வந்துட்டா நீயும் மத்தவங்களை மாதிரிதான் படுக்கையறைக்கு ஓடி வந்துடுவ, இல்லையா?” என்று குரூரமான புன்னகையுடன் அவளருகே நெருங்கினான் கந்தர்வன்.
“நீ… நீங்க யாரு? தப்பா நினைச்சுக்காதீங்க, நான் என் தங்கச்சியைத் தேடித்தான் உள்ளே வந்தேன்…” என்று இளவஞ்சி நடுங்கும் குரலில் பின்வாங்கினாள்.
“தங்கச்சியைத் தேடி வந்தியா? என்ன ஒரு அழகான நடிப்பு! இந்த கந்தர்வன் சக்கரவர்த்தியோட ரூமுக்கு வர்ற எல்லாப் பொம்பளைங்களும் இப்படித்தான் ஏதாவது ஒரு கதையை வச்சிருக்காங்க. போதும் உன் நாடகம்!” என்று கத்திய கந்தர்வன், அசுர வேகத்தில் இளவஞ்சியின் கையைப் பற்றித் தன்பக்கம் இழுத்தான்.
அவனது இரும்பு போன்ற கைகளின் பிடி அவளது மென்மையான மணிக்கட்டை நசுக்கியது. அவனது முரட்டுத்தனமான மூச்சுக்காற்று அவள் முகத்தில் அடிக்க, இளவஞ்சிக்குக் கோபமும் ஆவேசமும் தலைக்கேறியது. தன் பலவீனத்தையெல்லாம் மறந்து, அவளுக்குள் இருந்த அசுர தைரியம் அந்த நொடியில் வெளிப்பட்டது.
“கையை விடுங்கடா முரடா!” என்று கத்திய இளவஞ்சி, தன் முழு பலத்தையும் திரட்டி கந்தர்வனின் கன்னத்தில் ஒரு அடியை போட்டு, நெஞ்சில் கை வைத்து பலமாகத் தள்ளிவிட்டாள்!
எதிர்பாராத அந்த அடியிலும் தள்ளலிலும் கந்தர்வன் நிலைதடுமாறி இரண்டு அடி பின்னால் சென்றான். ஒரு பெண் தன்னைத் தள்ளிவிட்டதை அவனால் நம்பவே முடியவில்லை. அவனது கண்கள் கோபத்தில் சிவந்தன.
“என்னடி திமிரா? என்னை எதிர்த்துப் பேசுறியா?” என்று அவன் கத்திக் கொண்டு அவளை மீண்டும் நெருங்க முயன்ற போது…
“அக்கா!!!” என்று கத்திக் கொண்டே சினேகா அந்த ரூமுக்குள் நுழைந்தாள்.
அங்கே கந்தர்வனையும், தன் அக்கா இளவஞ்சியையும் பார்த்த சினேகாவுக்கு அதிர்ச்சியில் வாய் அடைத்துப் போனது. தன் அக்கா தன் பணக்கார வேட்டையைக் கெடுக்க வந்துவிட்டாள் என்ற வன்மம் அவளுக்குள் வெடித்தது.
சினேகா ஓடிவந்து இளவஞ்சியின் கையைப் பிடித்து இழுத்தாள். “அக்கா! நீ எதுக்குடி இங்க வந்த? ஒழுங்கா வெளிய போ! உன்னை யார் இங்க வரச் சொன்னது?” என்று கத்தினாள்.
பிறகு கந்தர்வனைப் பார்த்துப் பல்லிளித்துக் கொண்டு, “சார்… நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க. இவ என் அக்கா. இவளுக்கு ஒன்னும் தெரியாது, தெரியாம இந்த ரூமுக்குள்ள வந்துட்டா. நீங்க புக் பண்ண பொண்ணு நான் தான் சார்… இவளை நான் வெளிய துரத்திடறேன்” என்று பணத்தாசையில் கேவலமாகப் பேசினாள் சினேகா.
இதைக் கேட்ட கந்தர்வனின் உதடுகளில் ஒரு அருவருப்பான புன்னகை விரிந்தது. இளவஞ்சியைப் பார்த்து, “பார்த்தியா? உன் தங்கச்சியே உண்மையைச் சொல்லிவிட்டா. நீ என்னடான்னா பத்தினி மாதிரி என்னை அடிச்சுத் தள்ளுற? போங்கடி… உங்க ரெண்டு பேரோட கேவலமான முகத்தையும் பார்க்க எனக்குப் பிடிக்கல. யாருடைய பிச்சையும் எனக்குத் தேவையில்லை. கெட் அவுட் பிரம் மை ரூம்!” என்று அசுரக் குரலில் கத்தினான் கந்தர்வன் சக்கரவர்த்தி.
இளவஞ்சி தன் தங்கையின் கேவலமான பேச்சைக் கேட்டுத் தலைகுனிந்து நின்றாள். அதே சமயம், தன்னை ஒரு விலைமகளாக நினைத்துக் கேவலப்படுத்திய கந்தர்வனைத் தன் கூர்மையான கண்களால் வன்மமாகப் பார்த்தாள்.
உடலின் பசியைத் தீர்க்கும் மிருகமே… உனக்குக் பெண்ணின் மனசு புரியாது!
பணத்தைக் காட்டிப் பணிய வைக்க நினைக்கும் உன் திமிர்…
இந்த இளவஞ்சியிடம் ஒருபோதும் செல்லாது!
“சினேகா… நட இங்கிருந்து!” என்று சினேகாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு புயலென அந்த அறையை விட்டு வெளியேறினாள் இளவஞ்சி.
அவர்கள் சென்ற பிறகும், கந்தர்வன் தன் நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். அவளைத் தொட்ட அந்த நொடியில் அவனது நாடி நரம்புகளெல்லாம் சிலிர்த்துப் போன அந்த விசித்திரமான எரோடிக் உணர்வும், அவளது கண்கள் காட்டிய அந்த அசுரத்தனமான எதிர்ப்பும் அவனது ஈகோவை மொத்தமாக உலுக்கிப் போட்டிருந்தது.
“யார் அவள்? என்னை எதிர்த்துத் தள்ளிவிட்டுப் போக அவளுக்கு எவ்வளவு தைரியம் இருந்திருக்க வேண்டும்? இந்த கந்தர்வன் சக்கரவர்த்தியைத் அலட்சியப்படுத்திய அந்தப் பெண்ணை நான் சும்மா விடமாட்டேன்!” என்று ஆவேச சபதம் எடுத்தான் அந்த அசுர மன்மதன்.
……..