அத்தியாயம் 29
நெடுஞ்சாலையின் ஓரத்தில் அந்தப் பாழடைந்த கிடங்கிற்கு அருகே கண்டைனர் லாரி நின்றிருந்தது. இளமாறனின் ஆட்கள் ஆயுதங்களுடன் தயார் நிலையில் இருக்க, அதிரவனின் கார் டயர்கள் அலற அந்த இடத்திற்குள் வந்து நின்றது. கார் முழுமையாக நிற்பதற்கு முன்பே, அதிரவனும் தென்னரசுவும் கீழே குதித்தனர்.
“இளமாறா! வெளிய வாடா கோழையே!” என்று அதிரவன் கர்ஜித்தான். அவனது கண்கள் ரத்த நாளங்கள் புடைக்கச் சிவந்திருந்தன.
இளமாறன் கண்டைனரின் மேலிருந்து கீழே குதித்து, ஒரு வக்கிரமான புன்னகையுடன் அவர்களைப் பார்த்தான். “வா அதிரவன்… வா தென்னரசு! உங்க ரெண்டு பேரோட வாரிசும், அந்த ரெண்டு அழகிகளும் இதோ இந்தப் பெட்டிக்குள்ள தான் இருக்காங்க. ஆனா இன்னும் அரை மணி நேரத்துல இவங்க பாம்பே பார்ட்டியோட கைக்கு மாறிடுவாங்க. அப்புறம் உங்க கௌரவம் என்ன ஆகும்னு யோசிச்சு பாரு,” என்று சொல்லிவிட்டுச் சைகை காட்டினான்.
இளமாறனின் அடியாட்கள் சுமார் இருபது பேர் கத்திகளுடனும், இரும்புக் கம்பிகளுடனும் அவர்களைச் சூழ்ந்தனர். அதிரவன் மின்னல் வேகத்தில் ஒருவனைத் தாக்கி அவனிடமிருந்த கம்பியைப் பறித்தான். தென்னரசு தனது கையில் இருந்த நீண்ட கத்தியைச் சுழற்றி வேட்டையாடத் தொடங்கினான்.
அதிரவனின் ஒவ்வொரு அடியிலும் ஒரு தந்தையின் ஆக்ரோஷம் தெரிந்தது. “என் மனைவியையும் குழந்தையையும் தொட நினைக்கிற எவனும் உயிரோட இருக்கக் கூடாது!” என்று கத்தினான். தென்னரசு ஒருவனின் கழுத்தை அப்படியே நெரித்துக் கீழே தள்ளினான். இளமாறனின் ஆட்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
அதிரவன் கண்டைனரின் பூட்டை உடைக்க முயன்றபோது, இளமாறன் தன் இடுப்பிலிருந்த துப்பாக்கியை எடுத்து அதிரவனை நோக்கி நீட்டினான். “போதும் அதிரவன்… இதோட முடிச்சுக்கலாம்!”
ஆனால் தென்னரசு எங்கிருந்தோ பாய்ந்து வந்து இளமாறனின் கையைப் பிடித்தான். துப்பாக்கிச் சத்தம் அந்தப் பகுதியையே அதிரச் செய்தது. குண்டு அந்தரத்தில் பாய்ந்தது. இளமாறனைத் தென்னரசு வெறிபிடித்தது போல் அடிக்கத் தொடங்கினான். “என் தங்கச்சியையும், என் பொண்டாட்டியையும் ஏலம் போடப் பார்த்தியாடா?” என்று அவன் முகத்தைச் சிதைத்தான்.
அந்தச் சத்தங்களுக்கு நடுவே, கண்டைனர் லாரியின் உள்ளே மீனாட்சியும் வைஷ்ணவியும் மயக்கம் தெளிந்து ஒருவரையொருவர் கட்டிக் கொண்டிருந்தனர். அந்த இரும்புப் பெட்டியின் வெப்பமும், ஆக்சிஜன் குறைவும் அவர்களைத் தவிக்க வைத்தது.
“மீனு… எனக்கு ரொம்ப வலிக்குது… ஏதோ கீழே ஓடுற மாதிரி இருக்கு,” என்று வைஷ்ணவி கேவினாள்.
மீனாட்சி இருட்டில் துழவிப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள். வைஷ்ணவியின் கால்களில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. “மாமா! அதிரவன்! யாராவது காப்பாத்துங்க! வைஷுவுக்கு பிளீடிங் ஆகுது!” என்று மீனாட்சி கதறினாள். அவளது அலறல் சத்தம் அதிரவனின் காதில் விழுந்தது.
அதிரவன் வெறிபிடித்தவன் போல் ஒரு பெரிய கல்லைத் தூக்கி கண்டைனரின் பூட்டை உடைத்தான். கதவுகள் திறந்தபோது, அங்கே மயங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த வைஷ்ணவியையும், அவளைத் தாங்கிப் பிடித்து அழுதுகொண்டிருந்த மீனாட்சியையும் பார்த்தான்.
“வைஷு!” என்று தென்னரசு ஓடி வந்து அவளைத் தூக்கினான். அவனது முரட்டு இதயம் அந்த ரத்தத்தைப் பார்த்ததும் அப்படியே உடைந்து போனது.
“அதிரவன்… குழந்தை… என் குழந்தை…” என்று தென்னரசு அழத் தொடங்கினான்.
அதிரவன் அவனை சமாதானம் செய்த, “தென்னரசு, அழாதே! வண்டியில ஏத்து… உடனே ஹாஸ்பிடல் போகணும். இளமாறனை அப்புறம் பார்த்துக்கலாம்,” என்று கத்தினான்.
அவர்கள் இரு பெண்களையும் காரில் ஏற்றி மின்னல் வேகத்தில் மருத்துவமனைக்கு விரைந்தனர். வழியில் இளமாறன் தப்பிக்க முயன்றபோது, அதிரவனுக்குத் தெரிந்த போலீஸ் டீம் அந்த இடத்தை முற்றுகையிட்டது.
மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் வைஷ்ணவியின் நிலைமை மோசமானது. தென்னரசு அவளது கையைத் தன் முகத்தில் ஒற்றிக் கொண்டு, “மன்னிச்சுடுடி வைஷு… நான் உங்க கூடவே இருந்து இருக்கணும். தக்க சமயம் பார்த்து பழிவாங்கறதுக்காக இவ்வளவு கேவலமான புத்திய காட்டிட்டான் அந்தப் பாவி. உனக்கு எதுவும் ஆகாதுடி,” என்று கதறினான். மீனாட்சி அவனது தோளைத் தொட்டு ஆறுதல் கூறினாள், ஆனால் அவளது கண்களிலும் ஒரு இனம்புரியாத பயம் இருந்தது.
மருத்துவமனைக்குள் வைஷ்ணவியை ஸ்ட்ரக்சரில் ஏற்றியபோது, தென்னரசு அந்த இடத்திலேயே மண்டியிட்டு அமர்ந்தான்.
தாயும் குழந்தை ஆபத்தில் இருக்கிறார்கள் ஒருவரை காப்பதே பெரிய விஷயம் என்று சொல்லிவிட்டு போக.
தென்னரசு சுக்குநூறாக உடைந்து விட்டான்.
“எனக்கு குழந்தை கூட வேண்டாம் கடவுளே… என் பொண்டாட்டி மட்டும் எனக்கு வேணும்,” என்று ஒரு சிறுபிள்ளையைப் போல அவன் அழுத அந்த நிமிடம், அவனது அத்தனை ஆணாதிக்கமும் அந்த ரத்தக் கரைகளில் கரைந்து போனது.
……
மருத்துவமனையின் அந்த நீண்ட வராண்டாவில் நிலவிய நிசப்தம், அதிரவன் மற்றும் தென்னரசுவின் இதயத் துடிப்பை விட அதிகச் சத்தமாக இருந்தது.
மருத்துவர்கள் வைஷ்ணவிக்கு டிரீட்மென்ட் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.. தென்னரசு சுவரில் சாய்ந்து தரையில் அமர்ந்திருந்தான். அவனது கைகளில் இன்னும் வைஷ்ணவியின் ரத்தக் கறைகள் காய்ந்து போய் அப்படியே இருந்தன. அதிரவன் அங்கும் இங்கும் நடைபயின்றபடி, மீனாட்சியின் உடல்நிலை குறித்தும், வைஷ்ணவியின் கருவிலுள்ள குழந்தையின் நிலை குறித்தும் பெரும் பதற்றத்தில் இருந்தான்.
அதே சமயம் மீனாட்சிக்கு சில பல காயங்கள் இருந்தது அவளும் தனியாக ஒரு வார்டில் மருத்துவர் ஆலோசனை பெற்றுக் கொண்டிருந்தாள்.
சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, டாக்டர் வெளியே வந்தார். தென்னரசு பாய்ந்து சென்று அவர் கைகளைப் பற்றிக் கொண்டான். “டாக்டர்… என் வைஷு… பாப்பா…” என்று வார்த்தைகள் வராமல் தவித்தான்.
டாக்டர் ஒரு மெல்லிய புன்னகையுடன், “பயப்பட ஒன்னும் இல்லை தென்னரசு. ரத்தப்போக்கு அதிகமா இருந்தது உண்மைதான், ஆனா சரியான நேரத்துல கூட்டிட்டு வந்துட்டீங்க. குழந்தைக்கும் தாய்க்கும் இப்போ எந்த ஆபத்தும் இல்லை. வைஷ்ணவி ரொம்ப தைரியமான பொண்ணு. மீனாட்சி மேடமும் இப்போ நார்மலா இருக்காங்க. ரெண்டு பேரையும் ரூமுக்கு ஷிப்ட் பண்றோம்,” என்றார்.
அந்த ஒரு வார்த்தை, இரண்டு ஆண்களின் நுரையீரலுக்குள் ஆக்சிஜனைப் பாய்ச்சியது. தென்னரசு அப்படியே தரையில் விழுந்து கடவுளுக்கு நன்றி சொன்னான். அதிரவன் தென்னரசுவின் தோளைப் பிடித்துத் தூக்கி, “முடிஞ்சதுடா… இனிமே அவங்களை நாம ஒரு பூ மாதிரி பார்த்துக்கணும்,” என்றான்.
அதே இரவு – ஒரு பாழடைந்த கிடங்கு
மருத்துவமனையில் மனைவிகள் தேறிய செய்தி கிடைத்ததும், அதிரவன் மற்றும் தென்னரசுவின் கண்களில் ஒரு கொடூரமான வேட்டை உணர்வு எழுந்தது. இளமாறனும் சுருதியும் அதிரவனின் ஆட்களால் ஒரு ரகசிய இடத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தனர். அதிரவன் அங்கே நுழைந்தபோது, அவனது கையில் ஒரு நீண்ட கயிறு இருந்தது.
இளமாறன் ரத்தக் காயங்களுடன் சுவரில் சாய்ந்திருந்தான். சுருதி பயத்தில் அலறிக் கொண்டிருந்தாள். “அதிரவன்… என்னை விட்ரு… இதெல்லாம் இளமாறன் சொன்னதுனாலதான் நான் செஞ்சேன்,” என்று அவள் கதறினாள்.
அதிரவன் இளமாறனின் முன்னால் வந்து நின்றான். “என் பொண்டாட்டியையும், வைஷ்ணவியை ஏலம் போடப் பார்த்தியாடா? அவங்க வயித்துல இருக்குற அந்தச் சின்ன உயிரைக்கூடப் பார்க்காம வண்டியில ஏத்தினியே… அந்தத் துடிப்பு இப்போ உன் உடம்புல இருக்கக் கூடாது,” என்று சொல்லிவிட்டு, அவனது ஆட்கள் மூலம் இளமாறனை ஒரு லாரியின் பின்புறம் கட்டச் செய்தான்.
அந்த லாரி, அதே பாம்பே செல்லும் கண்டைனர் லாரி. இளமாறனின் இறுதிப் பயணம் அங்கேயே முடிந்தது. அவன் ஒரு விபத்தாகச் சித்திரிக்கப்பட்டுத் தீர்த்துக்கட்டப்பட்டான். அவனது அத்தனை கிரிமினல் ஆதாரங்களும் அதிரவனால் அழிக்கப்பட்டன.
அடுத்து சுருதியின் பக்கம் திரும்பினான் தென்னரசு. “ஏய்! ஒரு பொண்ணா இருந்துட்டு இன்னொரு பொண்ணை விக்கத் துணிஞ்சியே… நீ இங்க இருந்தா மறுபடியும் விஷத்தைக் கக்குவ. உனக்கு எது சரியான இடமோ, அங்கேயே உன்னை அனுப்பி வைக்கிறேன்,” என்றான். சுருதிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, அதே பாம்பே செல்லும் ரெட் லைட் ஏரியா வண்டியில் அவளே ஒரு சரக்காக ஏற்றப்பட்டாள். அவளது கடந்த காலமும், எதிர்காலமும் அந்த இருட்டில் காணாமல் போனது.
….