Home SRIJA NOVELS23) இச்சை ❣️

23) இச்சை ❣️

by sreejanovels
9 views

அத்தியாயம் 23

    
வளைகாப்பு விழா முடிந்து உறவினர்கள் அனைவரும் சென்ற பிறகு, மாளிகை ஒரு அமைதியான நந்தவனமாக மாறியிருந்தது. அக்னி மெதுவாக அறைக்குள் நுழைந்தான். மித்ரா ஜன்னல் அருகே அமர்ந்து, தன் வயிற்றில் கை வைத்துத் தன் குழந்தையுடன் ஏதோ ரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தாள். அவளது முகத்தில் ஒரு தெய்வீகக் களை படர்ந்திருந்தது.

அக்னி அவளருகே வந்து, அவளது தோள்களை மெல்ல வருடினான். “மித்ரா… இன்னும் தூங்கலையா? பாப்பா உன்னை ரொம்பத் தொந்தரவு பண்றாளா?” என்று அவளது காதோரம் கிசுகிசுத்தான்.

மித்ரா திரும்பி அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். “இல்லை அக்னி… இன்னைக்கு நடந்ததெல்லாம் ஒரு கனவு போல இருக்கு. நீங்க எல்லார் முன்னாடியும் என்னைக் காதலிப்பதா சொன்ன அந்த நிமிஷம்… என் வாழ்நாள் தவம் பலிச்ச மாதிரி இருந்துச்சு,” என்று அவனது மார்பில் சாய்ந்துகொண்டாள்.

அக்னி அவளைத் தன் அணைப்பிற்குள் சிறைபிடித்தான். அவளது ஏழு மாதக் கருவுற்ற வயிறு அவர்களின் காதலுக்கு ஒரு அழகிய தடையாக இருந்தது. அக்னி குனிந்து அவளது வயிற்றில் ஒரு முத்தத்தைப் பதித்தான். “அக்னிமித்ரா… உங்க அம்மா ரொம்பப் பாவம்டா. இவ்வளவு காலம் தன் காதலை மனசுக்குள்ளேயே பூட்டி வச்சுட்டுத் தவிச்சிருக்கா. இனி அவ கண்ணுல ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வராம இந்த அப்பா பார்த்துப்பேன்,” என்றான் நெகிழ்ச்சியுடன்.

மித்ரா அவனது முகத்தை வருடினாள். “அக்னி… ஆரியனும் மித்ரனும் இப்போ என்னை உண்மையாவே அம்மாவா ஏத்துக்கிட்டாங்க. அதுதான் எனக்குப் பெரிய சந்தோஷம். இனி நாம ஒரு முழுமையான குடும்பம்,” என்றாள்.

அப்போது ஆரியனும் மித்ரனும் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே ஓடி வந்தனர். “அப்பா! அம்மா! இன்னைக்கு நாங்க உங்க கூடத்தான் தூங்குவோம்!” என்று அடம் பிடித்தனர்.

அக்னி சிரித்துக்கொண்டே இருவரையும் தூக்கித் தன் மடியில் அமரவைத்தான். “சரி… இன்னைக்கு ஒரு பெரிய அசுரன் கதையைச் சொல்லட்டுமா? அவன் எப்படி ஒரு அழகான தேவதையைத் தன் கோட்டையில பத்திரமா வச்சிருந்தான்னு சொல்லப்போறேன்,” என்று அவன் கதை சொல்லத் தொடங்க, மித்ரா அக்னியின் தோளில் சாய்ந்து அந்தக் குடும்பத்தின் பிணைப்பைப் பார்த்து மெய்மறந்தாள். அந்த இரவு அவர்களின் காதலுக்கும், குழந்தைகளுக்குக் கிடைத்த தாய்மைக்கும் ஒரு சாட்சியாக அமைந்தது.

நாட்கள் நகர்ந்தன. மித்ராவிற்கு ஒன்பதாம் மாதம் தொடங்கியது. அக்னி இப்போது ஒரு நிமிடம் கூட அவளை விட்டுப் பிரியவில்லை. பிசினஸ் மீட்டிங்களை எல்லாம் வீட்டிலிருந்தே கவனித்தான்.

ஆனால், வெளியே ஒரு இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. சிறையில் இருந்த விக்ரம், ரகுநாத் மற்றும் நடராஜன் மூவரும் பைத்தியக்காரத்தனமான ஒரு முடிவை எடுத்தனர். “நாங்க வாழ்ந்தா ராஜாவா வாழ்வோம், இல்லைன்னா அக்னியோட வம்சத்தையே அழிச்சுட்டுச் சாவோம்!” என்று அவர்கள் ஒரு தற்கொலைப்படைத் திட்டத்தைத் தீட்டினர்.

அன்று மாலை…

மித்ரா மெதுவாக மாளிகையின் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தாள். அக்னி அவளுக்கு ஜூஸ் எடுத்து வர உள்ளே சென்றிருந்தான். திடீரென்று மித்ராவின் முகம் வலியால் சுருங்கியது. “ஆ… அக்னி! வலிக்குது! அக்னி… சீக்கிரம் வாங்க!” என்று அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு அலறினாள்.

அக்னி பதறியபடி ஓடி வந்தான். “மித்ரா! என்னடா பண்ணுது? இதோ… இதோ ஹாஸ்பிட்டல் போயிடலாம்!” என்று அவளைத் தூக்கிக் காரில் ஏற்றினான்.

கார் மருத்துவமனையை நோக்கிப் பறந்தது.

மருத்துவமனை வந்தவுடன் மித்ராவில் லேபர் வாடுக்கு அழைத்து வந்து விட்டார்கள் அக்னியை பின்தொடர்ந்து சுந்தரமூர்த்தி சாவித்திரி அம்மா இரு குழந்தைகளும் வந்து சேர்ந்தார்கள் மித்ராவுக்கு உடைகள் குழந்தைக்கு தேவையான உடைகள் என்று அனைத்தையும் பிரிப்பேர் செய்து எடுத்து வந்தார்கள்.

ஸ்பெஷல்வாட்டில் மித்ரா அனுமதிக்கப்பட்டாள்…

அவளுக்கு உடை எல்லாம் மாற்றி லேபர் வாடுக்கு அழைத்து சென்றார்கள்.

அந்த பிரசவ வார்டு வாசலில் அக்னி ஒரு பித்தன் போல அலைந்து கொண்டிருந்தான். உள்ளே இருந்து மித்ராவின் ஒவ்வொரு அலறல் சத்தமும் அவனது இதயத்தை ஊசியால் குத்துவது போல இருந்தது. எத்தனையோ பிசினஸ் சாம்ராஜ்யங்களைச் சரித்தவன், இன்று தன் மனைவியின் ஒரு துளி கண்ணீரைக் கண்டு நிலைகுலைந்து நின்றான்.

“மிஸ்டர் அக்னி… உங்க வைஃப் உங்களை உள்ளே கூப்பிடுறாங்க. நீங்க கூட இருந்தா அவங்களுக்குத் தைரியமா இருக்கும்,” என்று நர்ஸ் சொன்னதும், அக்னி ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் உள்ளே ஓடினான்.

அங்கே மித்ரா வேர்வையில் நனைந்து, முகமெல்லாம் சிவந்து, வலியால் துடித்துக்கொண்டிருந்தாள். அக்னி அவளருகே சென்று, அவளது நடுங்கும் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டான். “மித்ரா… நான் வந்துட்டேன்டா… இதோ உன் அக்னி இங்கேயே தான் இருக்கேன்,” என்று அவளது நெற்றியில் வழிந்த வியர்வையைத் தன் கைகளால் துடைத்தான்.

“அக்னி… வலிக்குது… தாங்க முடியல அக்னி!” என்று மித்ரா அவனது கையைத் தன் நகங்களால் அழுத்தினாள்.

அக்னி அவளது கண்களை நேராகப் பார்த்தான். “மித்ரா, என்னைப் பாரு. நாம இத்தனை காலம் பார்த்த கனவு இதோ நிஜமாகப் போகுது. நம்ம காதல், நம்ம வாரிசா வரப்போகுது. இன்னும் ஒரு நிமிஷம்… நீ ஒரு தைரியமான பொண்ணுடா,” என்று அவளுக்கு ஊக்கமளித்தான். அவனது கண்களில் இருந்த அந்தத் தவிப்பும் காதலும் மித்ராவிற்கு ஒரு புதிய பலத்தைத் தந்தது.

“இன்னும் கொஞ்சம் முட்டுங்க மித்ரா… இதோ தலை தெரியுது!” என்று டாக்டர் உற்சாகப்படுத்தினார்.

மித்ரா அக்னியின் கையை மரணப் பிடியாகப் பிடித்துக்கொண்டு, தனது முழு சக்தியையும் திரட்டி ஒருமுறை கத்தினாள். அடுத்த நொடி… அந்த வார்டு முழுவதும் ஒரு மெல்லிய, அழகான பிஞ்சு குழந்தையின் அழுகுரல் எதிரொலித்தது.

அக்னியின் இதயம் ஒரு நிமிடம் நின்றது. அவன் பார்த்தான்… ரத்தமும் சதையுமாக, ஒரு சிறிய ரோஜா மொட்டுப் போல, அவனது வாரிசு! அவன் ஆசைப்பட்ட மாதிரியே, அவனது அச்சு அசலான ஜாடையில் ஒரு பெண் குழந்தை.

டாக்டர் குழந்தையைச் சுத்தம் செய்து ஒரு மென்மையான துணியில் சுருட்டி அக்னியிடம் நீட்டினார். “வாழ்த்துகள் அக்னி! நீங்க கேட்ட மாதிரியே ஒரு தேவதை பிறந்திருக்கா!”

அக்னி நடுக்கத்துடன் அந்தக் குழந்தையைத் தன் கைகளில் வாங்கினான். அவனது முரட்டுத்தனமான கரங்களில் அந்தப் பிஞ்சு உயிர் ஒரு சொட்டுப் பனித்துளி போல அமர்ந்திருந்தது. குழந்தையின் கண்கள் மெல்லத் திறந்து அக்னியைப் பார்த்தது.

“மித்ரா… பாருடா… நம்ம பாப்பா! அப்படியே என்னை மாதிரியே இருக்கா,” என்று அக்னி விம்மினான். அவனது கண்ணீர்த் துளி ஒன்று குழந்தையின் கன்னத்தில் விழுந்தது.

மித்ரா களைப்புடன் இருந்தாலும், தன் கணவன் கையில் குழந்தையை வைத்திருக்கும் அந்த அழகைப் பார்த்துப் பெருமிதம் கொண்டாள். அக்னி மெதுவாகக் குனிந்து மித்ராவின் நெற்றியில் ஒரு நீண்ட முத்தத்தைப் பதித்தான். “தேங்க்ஸ் மித்ரா… எனக்கு இவ்வளவு பெரிய பொக்கிஷத்தைக் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்,” என்று அவளது கையைப் பற்றித் தன் கண்ணில் ஒற்றிக்கொண்டான்.

சிறிது நேரம் கழித்து, ஆரியனும் மித்ரனும் துள்ளிக் குதித்து உள்ளே வந்தனர். “அப்பா! பாப்பா வந்துட்டாளா? நாங்க அவளைப் பார்க்கணும்!” என்று ஆவலுடன் எட்டிப் பார்த்தனர்.

அக்னி அவர்களை அருகில் அழைத்து, “பாருங்க… இதுதான் உங்க குட்டித் தங்கை. இனி இவளை நீங்க தான் பத்திரமாப் பார்த்துக்கணும்,” என்றான். ஆரியன் மெதுவாகப் பாப்பாவின் விரலைத் தொட்டான். அந்தக் குழந்தை அவனது விரலைப் பிடித்துக்கொண்டதும், அந்த அறையில் ஒரு தெய்வீகச் சிரிப்பு அலை வீசியது.

அக்னியின் குடும்பம் இப்போது முழுமையடைந்திருந்தது. அந்தப் பிஞ்சுத் தேவதையின் வருகை, அக்னியின் அசுரத் தனத்தை முற்றிலுமாக அழித்து, அவனை ஒரு அன்பான தந்தையாகவும், காதலனாகவும் மாற்றியிருந்தது. மாளிகையில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியிருந்தது.


அக்னியின் மாளிகை இன்று மங்கல இசையாலும், மல்லிகைப் பூக்களின் நறுமணத்தாலும் நிறைந்திருந்தது. மூன்று மாதங்கள் மின்னல் வேகத்தில் கழிந்திருந்தன. அந்தப் பிஞ்சுத் தேவதை ‘அக்னிமித்ரா’வின் தொட்டில் விழா (பெயரிடும் விழா) இன்று.

பெண் குழந்தை பிறந்தால் நிச்சயம் அக்னி மித்ரா என்று தான் வைப்பேன் என்று அடம் பிடித்தான். ஆனால் ஜாதகத்தில் யாழினி என்ற பெயர் வருகிறதால் அதையும் சேர்த்துக்கொண்டான்.

மித்ரா ஒரு அழகான மெரூன் நிறப் பட்டுப் புடவையில், பிரசவத்திற்குப் பிந்தைய ஒரு தனிப் பொலிவுடன் ஜொலித்தாள். அவளது கைகளில் தவழ்ந்து கொண்டிருந்த அக்னிமித்ரா, அப்படியே அக்னியின் அச்சு அசலாக, செதுக்கி வைத்தது போன்ற முகச் சாயலில் இருந்தாள்.

அக்னி பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக வலம் வந்தாலும், அவனது கண்கள் எப்போதும் தன் மகளையும் மனைவியையுமே சுற்றிக்கொண்டிருந்தன. அவன் மெதுவாக மித்ராவருகே வந்து அமர்ந்தான்.

“என்ன மித்ரா… இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கே? உன் கண்ணுல ஒரு மினுமினுப்பு தெரியுது,” என்று அவளது காதோரம் ரகசியமாகக் கிசுகிசுத்தான்.

மித்ரா நாணத்துடன் சிரித்தாள். “அக்னி… பாப்பா எல்லாரையும் பார்த்து எப்படிச் சிரிக்கிறா பாருங்க! அவளுக்கு உங்களைப் பார்த்தா மட்டும் ஒரு தனி சந்தோஷம் வருது,” என்று குழந்தையை அவனிடம் நீட்டினாள்.

அக்னி குழந்தையை வாங்கித் தன் தோளில் சாய்த்துக்கொண்டான். “என் செல்லக்குட்டி இல்ல? அவளுக்கு அவங்க அப்பாவைப் பத்தித் தெரியும். ஆமா, ஆரியனும் மித்ரனும் எங்கே?”

“அவங்க ரெண்டு பேரும் பாப்பாவுக்குத் தொட்டில்ல கட்டுறதுக்கு ஏதோ ஸ்பெஷல் கிஃப்ட் (Gift) ரெடி பண்றாங்களாம். உள்ளேயே தான் இருக்காங்க,” என்று மித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, இருவரும் ஓடி வந்தனர்.

“அப்பா! இதோ பாருங்க… பாப்பாவுக்கு நாங்க செஞ்ச சின்னப் பொம்மை!” என்று ஆரியன் ஒரு மரப் பொம்மையைக் காட்டினான். அக்னி நெகிழ்ச்சியுடன் அவர்களை அணைத்துக்கொண்டான். அந்த ஒரு நொடியில், அந்த மாளிகை ஒரு முழுமையான சொர்க்கமாக மாறியிருந்தது. அக்னிக்கு ஸ்வேதாவுடன் இருந்த அந்தப் பழைய கசப்பான நினைவுகள் மறைந்து, மித்ரா தந்த இந்த புதிய வாழ்க்கை ஒரு வரமாகத் தெரிந்தது.

உறவினர்கள் சூழ பெரியவர்கள் ஆசிர்வதிக்க யாழினி அக்னி மித்ரா என்று அழகாக பெயர் சூடப்பட்டு தனக்கான தொட்டிலில் அழகாக துயில் கொண்டிருந்தது அந்த ரோஜா மொட்டு..

ஆரியன் மித்ரன் இருவரும் வரைந்து தாங்களே செய்யப்பட்ட பொம்மைகளை தன் செல்ல தங்கையின் அருகே வைத்து அழகு பார்த்தனர்.

“என்ன இருந்தாலும் அக்னிக்கு வந்த வாழ்வு யாருக்கும் வராது பா”.

என்று ஒரு சிலர் பெருமையாகவே சொல்ல அதையும் ஒரு சிலர் பொறாமையாகவும் சொல்லிக் கொண்டனர்.

ஒரு வழியாக

அன்று மாலை விழா முடிந்து அனைவரும் சென்ற பிறகு, அக்னி தோட்டத்தில் மித்ராவுடன் அமர்ந்திருந்தான். கையில் அக்னிமித்ரா உறங்கிக் கொண்டிருந்தாள்.

“மித்ரா… எனக்கு ஒரு சந்தேகம். அந்த பழைய டைரில நீ என்னைப் பத்தி எழுதினப்போ, உண்மையாவே நான் இவ்வளவு சீக்கிரம் உன் கைக்குள்ள வருவேன்னு நினைச்சியா?” என்று வம்புக்கு இழுத்தான் அக்னி.

மித்ரா அவனது தோளில் சாய்ந்து கொண்டாள். “இல்லை அக்னி… அன்னைக்கு நீங்க ஒரு எட்டாத நட்சத்திரம். ஆனா இன்னைக்கு நீங்க என் கைக்குள்ள இருக்குற வைரக் கல். உங்களை ஒருதலையா காதலிச்ச அந்த நாட்கள் தான், இன்னைக்கு உங்களை நான் இவ்வளவு ஆழமா நேசிக்கக் காரணமா இருக்கு,” என்றாள் உணர்ச்சிவசப்பட்டு.

அக்னி அவளது நெற்றியில் முத்தமிட்டு, “இனி இந்த அக்னி புத்திரன் உனக்கும், இந்த மூணு பிள்ளைகளுக்கும் மட்டும்தான் சொந்தம். எந்த சக்தியாலும் நம்மளைப் பிரிக்க முடியாது,” என்று சத்தியம் செய்தான்.

ஆனால், அதே நேரம் சிறையில் இருந்த விக்ரமும், ரகுநாத்தும் தற்கொலை செய்துகொண்ட செய்தி அக்னியின் போனுக்கு வந்தது. அவர்கள் செய்த பாவங்களுக்குச் சட்டமும், காலமும் கொடுத்த இறுதித் தீர்ப்பு அது. அக்னியின் வாழ்க்கையில் இருந்த கடைசி இருளும் விலகிவிட்டது.

அக்னி அந்தச் செய்தியை மித்ராவிடம் சொல்லவில்லை. “இனி கசப்பான செய்திகளுக்கு இங்க இடமில்லை” என்று நினைத்து, அவளை இன்னும் நெருக்கமாக அணைத்துக்கொண்டான். நிலவின் ஒளியில் அந்தக் குடும்பம் ஒரு அழகான காவியமாக நிலைத்து நின்றது.


You may also like

Leave a Comment

About Me

Featured