Home FAMILY NOVEL8) வலி 💔

8) வலி 💔

by sreejanovels
7 views

அத்தியாயம் 8

தோட்டத்தில் சில நேரம் சிகரட்டைப் பற்ற வைத்துக்கொண்டு யோசித்துக் கொண்டிருந்த கணேஷுக்கு, தான் செய்த ஒவ்வொன்றும் ஞாபகத்திற்கு வந்தது.

அன்று அந்தப் பெரிய விஷயம் நடந்த பிறகு வந்த கோபத்தில், ஐந்து மாத கர்ப்பிணிப் பெண் என்று கூடப் பார்க்காமல் அடித்து வீட்டை விட்டுத் துரத்தியது; அவள் அம்மா வீட்டிற்குச் சென்று சில நாள் கழித்துத் தான் வந்து அழைத்துச் செல்வேன் என்ற நம்பிக்கையில் காத்திருக்க, தான் வராமல் போனது; ஒன்பதாம் மாதம் சீமந்தத்தில் கடமைக்கென்று தலை காட்டிவிட்டுச் சென்றது எனத் தன்னை நினைத்தே அவனுக்குக் கோபம் வந்தது.

குழந்தை பிறந்த பிறகு மகனை விட்டுக்கொடுக்க முடியாமல் மனைவியை அழைத்துச் சென்றுவிட்டான். ஆனால், கணவன் என்ற உரிமையில் அவளை அனுதினமும் சித்திரவதை செய்தான். அவளும் விரும்பித் தன்னை ஒப்படைக்கிறாள் என்று நினைத்தான். ஆனால், தான் சொன்ன சுடுசொற்களும் துன்புறுத்தலும் அவள் மனதில் ஆழப் பதிந்துவிட்டது என்பதை இப்போது உணர்ந்தான். மீண்டும் ஒரு குழந்தை வந்த பிறகு, தாம்பத்தியம் என்ற பெயரில் நடக்கும் வன்முறை வேண்டாம் என்றுதான் அவள் விவாகரத்துக்கே சென்றுவிட்டாள்.

தன் மீதும் தவறு இருக்கிறது, வேறு வழியாக அவளுக்குத் தண்டனை கொடுத்திருக்கலாம் என்று யோசித்துக் கொண்டே அறைக்குள் சென்றான். அனிருத் உறங்கிக்கொண்டிருக்க, அஸ்வினி அமைதியாக அமர்ந்திருந்தாள். கதவைத் தாழிட்டு அவள் அருகில் வந்தவன், அவள் காலடியில் அமர்ந்து அவள் மடியில் தலை வைத்துச் சற்று நேரம் அமைதியாக இருந்தான். அவள் மென்மையாக அவன் தலையை வருடிக் கொடுத்தாள்.

“அச்சு…” என்று அழைத்தவனைப் பார்க்க அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. மூன்று வருடங்களுக்குப் பிறகு அவன் இப்படி அழைக்கிறான்.

“ம்ம்… சொல்லுங்க கணேஷ்.”

“எனக்கு டைவர்ஸ் வேண்டாம், ப்ளீஸ்” என்று கெஞ்சிக் கேட்டவனைப் பார்த்து, “அப்போ இந்தப் பாப்பாவை அபார்ஷன் பண்ணிடலாம். உனக்கு தினமும் நான் தேவை. பாப்பாவை வச்சுக்கிட்டு என்னால உன் விருப்பப்படி இருக்க முடியாது. அப்போ பேபி அபார்ட் பண்ணிடலாம்” என்று குரல் உடைந்து சொன்னாள் அஸ்வினி.

அதைக்கேட்டு ஆத்திரமடைந்த கணேஷ் அவள் கழுத்தை நெரித்து, “அமைதியா பேசுறேன்னு ரொம்ப ஆடாதே. இனி நிரந்தரமா அம்மா வீட்டுல இருக்கப்போறோம்ங்கிற தைரியத்துல பேச்சு பயங்கரமா வருது. புரியுது எனக்கு. நீயும் வேணும், என் பிள்ளைகளும் வேணும். ஒரு கர்ப்பிணியைக் கொடுமைப்படுத்துற அளவுக்கு நான் கேடுகெட்டவன் கிடையாது. நாளைக்கு ஹாஸ்பிடல் போய் குழந்தையோட நிலைமை என்னன்னு பார்க்கணும். அப்புறம் எனக்குப் பெண் குழந்தைதான் வேணும், இப்பவே சொல்லிட்டேன்” என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டான்.

எல்லாம் திமிர் என்று நினைத்தாலும், மறுபக்கம் மகனை அணைத்துக்கொண்டு உறங்க ஆரம்பித்தான். அஸ்வினிக்கு மனதிற்குள் சந்தோஷம். இப்படி எடக்கு மடக்காகப் பேசினால் கணவன் தன் வழிக்கு வருவான் என்று அவளுக்குத் தெரியும். மூன்று வருடம் தண்டனை என்ற பெயரில் கணவன் விருப்பப்படி வாழ்ந்தவள், இனி அண்ணன் வாழ்க்கை சீரான பிறகு தன் வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளத் துணிந்தாள்.

வயிற்றில் வளரும் உயிரை வருடியபடி, ‘குட்டிப் பாப்பா, நீ வந்த அதிர்ஷ்டம் உங்க அப்பா என்கிட்ட மனசு விட்டுப் பேச ஆரம்பிச்சிருக்காங்க. இனி நீ, நான், அப்பா, அண்ணான்னு ஜாலியா இருக்கப்போறோம்’ என்று மகிழ்ந்து உறங்கினாள்.


மறுநாள் காலை…

காலையிலிருந்து ரோகித்திற்கு என்ன மனநிலை என்று அவனாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை. லாவண்யா அங்கே இல்லை. ஆனால், அவன் அக்கவுண்டிற்கு ஐந்து லட்சம் பணமும், “இனி உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன், கண்காணாத இடத்திற்குச் செல்கிறேன்” என்ற கடிதமும் இருந்தது. அவள் பாதுகாப்பாக இருப்பாள் என்று தோன்றினாலும், ஒரு வார்த்தை கூட நேரில் சொல்லவில்லையே என்ற வருத்தம் அவனுக்கு இருந்தது.

லாவண்யா திட்டப்படி மும்பையில் தன் தோழிக்குத் தெரிந்த வீட்டில் வசிக்க ஆரம்பித்தாள். வருமானம் தேவை என்பதால், ஒரு நல்ல நிறுவனத்தில் தன் திறமையால் நேர்காணலில் வென்று வேலையும் பெற்றாள். இவையெல்லாம் அவள் தோழி முன்கூட்டியே செய்த ஏற்பாடுகள். “நான் அமைதியா போயிட்டேன்னு எல்லாரும் நினைக்கிறாங்க. ஆனா நான் நிச்சயம் கம் பேக் கொடுப்பேன்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டு குதூகலித்தாள்.


இங்கே காலையில் எழுந்த அகல்யா, தன் பழைய வழக்கப்படி சீக்கிரம் குளித்துவிட்டு இரு குழந்தைகளையும் கவனிக்கத் தொடங்கினாள். முதலில் அனன்யாவின் டைப்பரை மாற்றி, வெதுவெதுப்பான நீரில் அவளைச் சுத்தம் செய்து, தேங்காய் எண்ணெய் தேய்த்துக் காற்றாடப் படுக்க வைத்தாள். இதற்கு நடுவில் எழுந்த ஆத்விக்கை அழைத்துச் சென்று குளிக்க வைத்து, அவனுக்கும் ஆயில் மசாஜ் செய்தாள்.

இதைப் படுத்துக்கொண்டே பார்த்த ஆதித்யாவுக்கு, தனக்கும் இதுபோல் கிடைக்காதா என்ற ஏக்கம் வந்தது. அறைக்குள் வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து அவள் முன்னால் வந்து நின்றான். அவன் தன்னைச் சீண்டுகிறான் என்று புரிந்து கொண்ட அகல்யா, அவனை ஏறிட்டும் பார்க்கவில்லை.

“மை டியர் மனைவி, புருஷன் எந்திரிக்கிறதுக்கு முன்னாடி காபி கொடுப்பீங்கன்னு எதிர்பார்த்தேன். சரி, அது வேண்டாம். பசங்களுக்குப் பண்ண மாதிரி எனக்கும் ஒரு ஆயில் மசாஜ் பண்ணு, ஆசையா இருக்கு” என்று அமர்ந்தான்.

வேண்டுமென்றே ஒரு பாட்டில் தேங்காய் எண்ணெயை அவன் தலையில் கொட்டி உடல் முழுவதும் வடியச் செய்தாள் அகல்யா. கோபத்தில் அவன் அவளைத் துரத்த ஆரம்பிக்க, “அப்பா அம்மாவைப் பிடி… பிடி!” என்று ஆத்விக் கைதட்டிச் சிரித்தான். அனன்யாவும் எதற்கென்று தெரியாமல் சேர்ந்து சிரித்தாள். ஒரு வழியாக அகல்யாவைத் துரத்திப் பிடித்த ஆதித்யா, தன் உடலில் இருந்த எண்ணெயை அவள் மீதும் தேய்த்துவிட்டான்.

அப்போது கதவு திறந்திருக்கவே அஸ்வினி, “அண்ணா…” என்று கூப்பிட்டபடி உள்ளே வர, அங்கிருந்த காட்சியைக் கண்டு அதிர்ந்து போனாள். குழந்தைகள் சிரித்துக்கொண்டிருக்க, கட்டில் மேல் ஆதித்யாவும் அகல்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நெருக்கமாகக் கிடந்தனர்.

அஸ்வினியைப் பார்த்ததும் இருவரும் விலகினர். “சாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ், நான் அப்புறம் வர்றேன்” என்று சொல்லிவிட்டு அஸ்வினி கீழே ஓடினாள்.

“உங்களால்தான்! இப்போ உங்க தங்கச்சி என்ன நினைச்சிருப்பா? நமக்குள்ள எல்லாம் நடந்து ஜாலியா இருக்கிற மாதிரி நினைப்பா. ஆனா இங்கே ஒண்ணுமே இல்லைன்னு அவளுக்கு எப்படிச் சொல்றது?” என்று அகல்யா படபடத்தாள்.

ஆதித்யா சிரித்தான். “என் அண்ணன் சந்தோஷமா இருக்கான்னு அஸ்வினி இப்போ அம்மா கிட்டச் சொல்லுவா. அம்மாவுக்கு அதுவே போதும். இந்த மூணு வருஷத்துல நான் பட்ட வேதனையும் அவமானமும் எனக்குத்தான் தெரியும். கல்யாணம் ஆனா இப்படித்தான் வாழணும்னு ஆசைப்பட்டேன். நீ விலகிப் போனாலும் அந்த ஆசைகளை நான் நிறைவேற்றியே தீருவேன்” என்று அவளைத் தூக்கி அந்தரத்தில் சுற்றினான். குழந்தைகள் மகிழ்ச்சியில் அவனைச் சுற்றி வட்டமிட்டனர்.


“என்னடி சொல்ற, உண்மையாவா?” என்று கேட்ட தன் அன்னையிடம், “ஆமாம்மா, நான் பார்க்கும்போது ரெண்டு பேரும் கொஞ்சிக்கிட்டு இருந்தாங்க. அண்ணனுக்கும் அண்ணிக்கும் எல்லாம் நல்லபடியா ஆரம்பிக்குது. குழந்தைகளும் சந்தோஷமா இருக்காங்க. அனன்யா அழாம விளையாடுறதைப் பார்த்தா எல்லாத்துக்கும் நல்ல காலம் பிறக்கப்போகுதுன்னு தோணுது. அனிருத் எழுந்திருப்பான், நான் அவனைப் பார்க்கப் போறேன். அவங்களே கீழே வரட்டும், யாரும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்” என்று சொல்லிவிட்டுச் சென்றாள் அஸ்வினி.

தன் கணவன் புகைப்படத்தைப் பார்த்து அன்னலட்சுமி வேண்டிக்கொண்டார். “பிசினஸ் வேலையில இருந்ததால என் பிள்ளைங்க மனசைப் புரிஞ்சுக்க முடியல. அண்ணன் பொண்ணோட சதி என்னன்னு தெரியாம என் பையன் வாழ்க்கை பாழாகிடுச்சு. இப்போ எல்லாம் சரியாகிடுச்சு. இனி என் பேரப்பிள்ளைகளோட நான் பிஸியா இருப்பேன். எல்லாரோட வாழ்க்கையும் பழையபடி சந்தோஷமா இருக்கணும்” என்று வேண்டிக்கொண்டு தன் வேலைகளைக் கவனிக்கச் சென்றார்.

You may also like

Leave a Comment

About Me

Featured