அத்தியாயம் 8
அனைவரும் அங்கே தோட்டத்தில் குழுமி இருந்தனர். அன்று அனைவருக்கும் விடுமுறை என்பதால், தேர்வு முடிந்து வீட்டிலிருந்த ரோஜாவிற்கும் விடுமுறைதான். அதனால், அவரைக்காய், வெண்டைக்காய், கத்திரிக்காய் போன்றவற்றைச் சாகுபடி செய்யலாம் என்று அரண்மனையைத் தாண்டி இருக்கும் பெரிய காய்கறித் தோட்டத்திற்கு அனைவரும் சென்றார்கள்.
ரோஜா தன்னைச் சுற்றி இருக்கும் அந்தத் தோட்டத்தைப் பார்த்து மெய்மறந்து நிற்க, அவள் பின்னால் நின்ற ராஜன், “உங்க வீட்டுத் தோட்டத்தை விட இது அழகுல குறைஞ்சாலும், அளவுல பெருசு,” என்று சொல்லிக்கொண்டே வந்தான்.
“எப்பவுமே ஒரு விஷயம் அளவுக்கு அதிகமா இருக்கிறதை விட, அது மனசுக்கு நிறைவா இருக்கணும். அப்படி எங்க வீட்டுத் தோட்டம் என் மனசை நிறைக்கும்,” என்று பதிலுக்கு அவளும் சொல்ல, ராஜன் அவளை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தான்.
“நீ இத்தனை வருஷம் இங்க கிடையாது. சுப்பு (சுப்ரஜா) அக்கா மட்டும்தான் எங்களுக்குத் தெரியும். நீ வந்து கொஞ்ச நாள் தான் ஆகுது, ஆனா ஏதோ பல வருஷம் இந்த வீட்ல வாழ்ந்தவங்க மாதிரி பேசுற?”
ரோஜா சிரித்துக்கொண்டே, “நான் இந்த இடத்துல இல்லதான், இப்பதான் வந்தேன். ஆனா நான் சின்ன வயசுல இருந்து வளரும்போது, எங்க அப்பா ஒரு நிமிடம் கூடத் தவறாம எனக்கு எல்லாரைப் பத்தியும் சொல்லி இருக்காரு. அதனால எனக்கு எல்லாமே தெரியும். அவருக்கு உங்களைப் பத்தின எல்லா தகவலும் தெரியும். அவர் இங்க இருந்தப்ப, சக்திவேல் அத்தான், அண்ணா, காயத்ரி, முல்லை எல்லாரைப் பற்றியும் சொல்லி இருக்காரு. முக்கியமா, அவர் கையில் தவழ்ந்த ராஜனைப் பத்தியும் சொல்லி இருக்காரு. என்ன இருந்தாலும் அவர் உங்களுக்குத் தாய்மாமன் இல்லையா? அதனாலதான் பார்த்த உடனே உங்க எல்லார்கிட்டயும் என்னால இயல்பா பழக முடிஞ்சது,” என்று சொல்லிக்கொண்டே வந்தாள்.
அவள் சொல்வதைக் கேட்டுச் சுற்றி இருப்பவர்கள் சிரித்தனர். ஆனால், முல்லைக்கொடிக்குச் சற்று பொறாமை ஏற்பட்டது.
‘அப்படி என்னதான் பண்றா இவ? நானும் தான் எல்லார்கிட்டயும் சகஜமா இருக்கேன், ஆனா இவ பேசும் போது மட்டும் எல்லாரும் மெய்மறந்து பார்க்குறாங்க. ஆனா இவளுக்குத் தெளிவு இல்லாம இல்ல… அப்பா எல்லாரைப் பற்றியும் தெரிஞ்சு வச்சுக்கிட்டு நல்லாவே பேசுறா. அப்படியே எங்க பாட்டி தெய்வானை மாதிரி… என்ன இருந்தாலும் எங்க பாட்டி இவளோட அத்தை இல்லையா, அதான் அந்த குணம் அப்படியே இருக்கு,’ என்று பொறாமை ஒருபுறம் இருந்தாலும், ரோஜா சொல்வதை அவள் ரசித்துக் கொண்டுதான் இருந்தாள்.
“சரி, எல்லாரும் ஆளுக்கு ஒரு வேலையைப் பிடிச்சுச் செய்யுங்க,” என்று ராஜன் கூற, சபை கலைந்தது. அனைவரும் தங்கள் வேலைகளைச் செய்யத் தொடங்கினர். முல்லைக்கொடியும் காயத்ரியும் கத்திரிக்காய் பறிக்கச் சென்றனர். தேவராஜ் மண்வெட்டி எடுத்துக்கொண்டு தனியாகத் தூர்வாரிக் கொண்டிருந்தான்.
இங்கே ரோஜாவுக்கு அவரைக்காயைப் பிரிக்கத் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்க, சக்திவேல் அவள் கைபிடித்து, “ஹே, உனக்கு பறிக்கத் தெரியலையா? இப்படித்தான் பிரிக்கணும், சுக்கா பறிக்கணும்,” என்று சொல்லிக்கொடுக்க, அவளும் சிறிது நேரம் தடுமாறிப் பிறகு அவனோடு சேர்ந்து வேகமாகப் பறிக்கத் தொடங்கினாள்.
தூரத்திலிருந்து செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த ராஜனுக்கு, ஏனோ உடல் உஷ்ணம் ஏறியது. அங்கே ரோஜா சிரித்துக் கொண்டே சக்திவேலிடம் பேசுவதும், அவன் கையின் மேல் செல்லமாக அடித்துப் பேசுவதும், சக்திவேலும் அவளை ஏதோ சொல்லிச் சிரிப்பூட்டிக் கொண்டே இருப்பதுமாக இருவரும் வேறு உலகில் இருக்க, ராஜனின் கண்கள் அக்னிப் பிழம்பாக எரிந்தன.
ஒரு நிமிடம் ரோஜாவை அப்படியே இழுத்துப் பிடித்துத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ள வேண்டும் என்றும், சக்திவேல் தலையில் ஒரு அடி போட்டு அனுப்பி விட வேண்டும் என்றும் அவனுக்குத் தோன்றியது. திடீரென்று தன்னைச் சமன்படுத்திக் கொண்டவன், ‘அட, நான் ஏன் இப்படி யோசிக்கிறேன்? ஏய் சிம்மராஜன், உனக்கு என்னடா ஆச்சு? எந்தப் பொண்ணையும் பார்த்து அசராத உன் மனசு, இவளைப் பார்த்ததிலிருந்து ஏதோ பண்ணுதே! அதுவும் இவ நம்ம துரோகியோட பொண்ணு, என் அக்கா கண்ணீருக்குக் காரணமானவனோட வாரிசு! கூடாது… இவ மேல அலைபாயுற என் மனசை நான் கட்டுப்படுத்தியே ஆகணும்,’ என்று தனக்குள்ளே பேசிக்கொண்டான்.
தண்ணீர் பாய்ச்சி முடித்தவன், “அங்க வேலையெல்லாம் முடிஞ்சுதா?” என்று குரல் கொடுத்தான்.
“மாமா இங்க பாருங்க, நான் எவ்வளவு காய்களைப் பறிச்சிருக்கேன்!” என்று முல்லைக்கொடி காட்டினாள்.
“என் அக்கா மகளுக்கு இந்த அறிவு கூட இல்லைன்னா எப்படி? அப்புறம் காயத்ரி, உன்னோட வேலை முடிஞ்சுதா?”
“சித்தப்பு, உங்க வளர்ப்பு நான் எப்படி மிஸ் பண்ணுவேன்? இங்க பாருங்க,” என்று அவள் தான் பறித்த காய்கறிகளைக் காட்டினாள்.
ரோஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை. காய்கறி பறித்ததற்கு எதற்கு இவ்வளவு பெருமையாகப் பேசிக்கொள்கிறார்கள் என்று குழப்பத்துடன் பார்த்தாள். தேவராஜும் சக்திவேலும் தாங்கள் செய்த வேலையைப் பற்றிப் பகிர்ந்து கொண்டிருந்தனர்.
“எக்ஸ்க்யூஸ் மீ… காய்கறி பறிச்சுட்டு வந்திருக்கீங்க, அதுக்கு எதுக்கு இவ்வளவு… சாரி தப்பா எடுத்துக்காதீங்க, பூரிச்சுப் போய் சொல்றீங்களே, என்ன ஆச்சு?” என்று ரோஜா கள்ளமில்லாமல் கேட்டுவிட்டாள்.
“நீ சிட்டில வளர்ந்த புள்ள, உனக்குத் தெரியாது. வெறும் ஆர்கானிக்னு சொல்லிட்டுத் தோட்டத்துல விளையுற பொருளைச் சாப்பிடறதுதான் உங்க பழக்கம். ஆனா அதை உருவாக்குறது எவ்வளவு கஷ்டம்னு சிட்டில இருக்கவங்களுக்குத் தெரியாது. இது இவங்களுக்கு ஒரு டார்கெட். இவங்களோட புரொபஷன் வேற வேறயா இருந்தாலும், குடும்பத்தோட விவசாயத்தை மறக்கக் கூடாதுன்னு மாசத்துக்கு ஒரு தடவை இந்த மாதிரி ஒரு டார்கெட் கொடுத்துடுவேன். அதனாலதான் எல்லாரும் தாங்கள் செய்த வேலையைச் சந்தோஷமா காட்டுறாங்க,” என்று ராஜன் பெருமையாகச் சொன்னான்.
“பரவால்ல, அக்ரிகல்ச்சர்ல உங்களுக்கு இவ்வளவு ஆர்வம் இருக்கே! எனக்குக் கூடக் காய் பறிக்கத் தெரியாதுதான், ஆனா சக்திவேல் மாமா சொல்லிக்கொடுத்த உடனே நான் கூட எவ்வளவு அழகா பறிச்சிருக்கேன் பாருங்க,” என்று தன் தாவணி முந்தானையில் வைத்திருந்த அவரைக்காய்களைக் காட்டினாள்.
“சரி சரி… வீட்டுக்குப் போலாம்,” என்று ராஜன் சொன்னவுடன் அனைவரும் முன்னே சென்றனர். இறுதியாகச் சென்ற ரோஜாவின் கரங்களைப் பிடித்து இழுத்த ராஜன், அவளைத் தடுத்தான்.
“இது கிராமம் புள்ள, பார்த்து நடந்துக்கோ. ஆம்பளைங்ககிட்ட இப்படிச் சிரிச்சுச் சிரிச்சுப் பேசினா வேற மாதிரி கதை கட்டி விடுவாங்க. நீ வயசுப் பொண்ணு, நிதானமா நடந்துக்கோ,” என்று எச்சரித்தான்.
“நான் என்ன பண்ணேன்? இப்ப நீங்கதான் ஒரு வயசுப் பொண்ணு கையைப் பிடிச்சு இழுத்து, உங்ககிட்ட நெருக்கமா நிக்க வச்சுக் கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க. இப்ப யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்களா மிஸ்டர் ராஜன்?” என்று அவள் திருப்பிக் கேட்க, அவன் சொன்னது அவனுக்கே ரிப்பீட்டாக அடித்தது.
“என்ன புள்ள லந்து பண்றியா? இங்க பாரு, சக்திவேல் உனக்கு மாமா முறைதான். அதுக்காகச் சும்மா ஒட்டி உரசி நின்னு பேசணும்னு அவசியம் இல்லை. இதுக்கு மேல என் கண்ணுல நீங்க ரெண்டு பேரும் இப்படி இருக்கக் கூடாது,” என்று அவன் மீண்டும் எச்சரித்தான்.
“அட, இந்த கதை நல்லா இருக்கே! அவர் மாமா முறைதான், எனக்கு வேலை சொல்லிக் கொடுத்தாரு. அப்படியே நாலு வார்த்தை தமாஷா பேசினா அதுக்கு இப்படியா? என்ன இருந்தாலும் கிராமம் இல்ல… புத்தி இப்படித்தான் போகும்,” என்று முணுமுணுத்துக்கொண்டே ரோஜா நகர முயன்றாள்.
“ஏ புள்ள, இந்த கிராமம் அப்படித்தான் இருக்கும்னு கிண்டல் பண்ணாத. எல்லா ஊர்லயும் மனுஷங்க இப்படித்தான். இது கிராமம்ங்கிறதால விஷயம் சீக்கிரம் பரவும், அதனாலதான் சொன்னேன்.”
“நீங்க சொல்றதைப் பார்த்தா அப்படித் தெரியல, வேற மாதிரி இருக்கு. எனிவே, நீங்க சொல்ற ரூல்ஸ் எல்லாம் என்னால கேட்க முடியாது. நான் எப்பவும் போலத்தான் இருப்பேன். இந்த ரோஜா யாருக்காகவும் கட்டுப்பட மாட்டா,” என்று சொல்லிக்கொண்டு ரோஜா சென்றுவிட்டாள்.
‘அதானே… என் வார்த்தையைக் கேக்குறதுக்கு இவ என் வீட்டுப் பிள்ளையா என்ன? அந்தச் சங்கர் வீட்டுப் பிள்ளை இல்ல… அப்படித் தான் இருக்கும். அப்படியே எங்க அம்மா மாதிரி…’ என்று தன் அன்னையின் குணத்தைப் பிரதிபலிக்கும் அவளை ஒரு பக்கம் மெச்சினாலும், ஏனோ அன்னையிடம் ரசித்த குணத்தை இவளிடம் ரசிக்க விருப்பமில்லாமல், ‘ஒரு பொம்பளப் பிள்ளை இப்படியா பேசுறது?’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.
அனைவரும் வீட்டிற்குச் சென்று காலை உணவை முடித்தனர். அவரவர் தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, வெளியே வரிசையாக வெளிநாட்டு ரகக் கார்கள் வந்து நின்றன.
“ராஜன், நீ சொல்லிக்கிட்டு இருந்தியே, அந்தத் தம்பி வந்துட்டாங்க போல,” என்று தெய்வானை குரல் கொடுத்தார்.
“அட, இவ்வளவு சீக்கிரம் வந்துட்டாங்களா? இன்னைக்கு மதியத்துக்கு மேல வருவாங்கன்னு நினைச்சேன். சரி அம்மா, வந்தவங்களுக்கு இப்போதைக்கு ஏதாவது ரெடி பண்ணிக் கொடுங்க. அப்பா, அண்ணா, சக்தி, தேவா… வாங்க நாம மீட்டிங் ரூம்ல போய் பேசலாம்,” என்று சொல்லிவிட்டுச் சில கோப்புகளை எடுத்துக்கொண்டு மீட்டிங் அறைக்குச் சென்றார்கள்.
அரண்மனை வீட்டின் வெளியே வராண்டாவிற்கு அருகே ஒரு பெரிய அறை இருக்கிறது. தொழில் சார்ந்த ஆலோசனைகள் என்றால் அங்கேதான் நடைபெறும். அந்த வெளிநாட்டுக் கார்களில் இருந்து சில நபர்கள் இறங்கினார்கள். அதன் முக்கிய நபராக ஆகாஷ் இறங்கினான். கார்ப்பரேட் உலகை அடக்கி ஆள்பவன்; அமெரிக்காவில் படித்து, டெல்லியில் தொழில் செய்து, இப்பொழுது தன் பூர்வீகமான தமிழ்நாட்டிலும் தொழிலைத் தொடங்க இறங்கியிருக்கிறான்.
முதல் வேலையாக இந்தச் செண்பகநல்லூர் கிராமத்திலிருந்து அனைத்தையும் ஆரம்பிக்க வேண்டும் என்ற திட்டத்தோடு வந்திருக்கிறான்.
மேல் வராண்டாவிலிருந்து அங்கே வந்து கொண்டிருந்த ஆகாஷைப் பார்த்த ரோஜாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. ‘இவன்… இவன் எதுக்கு இங்க வர்றான்? இவன் எவ்வளவு மோசமானவன்!’
இரண்டு வருடங்களுக்கு முன்பாக, இதே செண்பகநல்லூரில் ரோஜாவின் அப்பாவின் பங்காளிக்குச் சொந்தமான ஒரு நிலத்தை ஏமாற்றி வாங்கி, ஒரு கெமிக்கல் தொழிற்சாலை ஆரம்பிக்கலாம் என்று ஆகாஷ் முயன்றான். அந்த நிலத்தில் பங்கு இருந்ததால் ரோஜாவின் அப்பா சங்கருக்கும் தகவல் சென்றது. அவர் சென்னையில் இருந்து விசாரித்தபோதுதான் ஆகாஷ் ஒரு தந்திரமிக்க தொழிலதிபர் என்பதும், அவன் நம்பிய கூட்டாளிகளையே ஏமாற்றுவான் என்பதும் தெரிய வந்தது. அதன் பிறகு அந்தப் ப்ராஜெக்ட் கைவிடப்பட்டது.
இப்பொழுது மீண்டும் அதே ஆகாஷைப் பார்க்க வேண்டிய சூழல் வந்தவுடன் ரோஜா பதறினாள். ‘அய்யய்யோ, விஷயத்தைச் சீக்கிரமா சொல்லி ஆகணும், இவங்களை இவன் ஏமாத்திடக் கூடாது!’ என்று நினைத்தபடி, பிசினஸ் மீட்டிங் நடக்கும் அறையை நோக்கி ரோஜா ஓடினாள்.
பிசினஸ் அறையின் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்த ரோஜாவைக் கண்டு ராஜன் ஆச்சரியமும் ஆத்திரமும் கலந்த பார்வையால் அவளை ஏறிட்டான்.
“மாமா, ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளுங்க. இவன்… இந்த ஆகாஷ் ஒரு ஆபத்தான ஆள்!” என்று ரோஜா மூச்சிரைக்கச் சொன்னாள்.
ஆகாஷ் தன் கையில் இருந்த கோப்புகளை மேஜையில் வைத்துவிட்டு, நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தபடி அவளை ஒரு ஏளனப் பார்வையால் அளவெடுத்தான். ராஜன் கடுகடுப்புடன், “ரோஜா, இது என்ன பழக்கம்? பெரியவங்க பேசிக்கிட்டு இருக்கும்போது இப்படி உள்ள வர்றதுக்கு உனக்கு யார் அனுமதி கொடுத்தது?” என்று அதட்டினான்.
ரோஜா பின்வாங்காமல் ஆகாஷை விரல் நீட்டிச் சுட்டினாள். “மாமா, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்க சொந்தக்காரர் ஒருத்தரோட நிலத்தை வச்சு ஒரு பிசினஸ் பண்ணலாம்னு இவன் பிளான் பண்ணான். அந்த நிலத்துல எங்க அப்பாவோட பங்கும் இருந்ததால, கையெழுத்து வாங்க சென்னைக்கு எங்க வீட்டுக்கு வந்தான். ஆனா அப்போ அப்பா இவனைப் பத்தி தீர விசாரிச்சார். இவன் பல ஊர்கள்ல இதே மாதிரி விவசாய நிலங்களை ஆக்கிரமிச்சு அந்த ஊர்களையே பாழாக்கின விஷயம் அப்பாக்குத் தெரிஞ்சது. உடனே அப்பா தன் பங்காளிக்கு எச்சரிக்கை செஞ்சார். அதனால அந்த பிசினஸே கேன்சல் ஆச்சு. அப்போ எங்க அப்பாவால் விரட்டி அடிக்கப்பட்டவன் இவன்!”
ஆகாஷ் ஒரு நிமிடம் தடுமாறினாலும், அடுத்த நொடியே சிரித்துக்கொண்டே ராஜனைப் பார்த்தான். “மிஸ்டர் ராஜன், உங்க மாமா பொண்ணு சின்னப் பிள்ளை. அவங்களுக்கு பிசினஸ் நுணுக்கம் தெரியாது. அன்னைக்கு உங்க மாமா சங்கர் சார் தன் பிடிவாதத்தால ஒரு பெரிய வாய்ப்பைத் தடுத்தார். அதுக்காக என் மேல பழி போடுறது சரியில்லை. இப்போ நான் இந்த ஊர் மக்களுக்கு நன்மை செய்ய வந்திருக்கேன். வேலை வாய்ப்பே இல்லாத இந்த கிராமத்துல ஒரு பெரிய தொழிற்சாலை கொண்டு வரணும்னு நினைக்கிறேன். இதுல என்ன தப்பு?” என்று தந்திரமாகப் பேசினான்.
ராஜன் ரோஜாவைத் திரும்பிப் பார்த்தான். “ரோஜா, அவன் சொல்றதுல ஒரு நியாயம் இருக்கே. அவன் இந்த ஊர் மக்களுக்கு வேலை தரேன்னு சொல்றான். பழைய நில விவகாரத்தை வச்சு இப்போ இவனைத் தடுக்குறது சரியா படல,” என்றான்.
“இல்லை மாமா! இவன் திட்டம் வேலை வாய்ப்பு தர்றது இல்லை. உங்க குடும்பம் இந்த ஊர்ல எவ்வளவு பெரிய செல்வாக்கான குடும்பம்னு தெரிஞ்சுக்கிட்டு தான் இங்கே வந்துருக்கான். எங்க அப்பாவை விட உங்ககிட்ட அதிகப் பணம் இருக்கு, நீங்க சொன்னா ஊரே நிலத்தை எழுதித் தரும்னு தெரிஞ்சு பிளான் பண்ணி வந்திருக்கான். இவன் ஒரு கார்ப்பரேட் நரி மாமா, இவனை நம்பாதீங்க!” என்று ரோஜா அலறினாள்.
“போதும் நிறுத்து!” என்று மேஜையை ஓங்கித் தட்டினான் ராஜன். “உன் அப்பாவுக்கு இவன் மேல ஏதோ கோபம் இருந்துச்சுன்னா அது அந்தச் சென்னை பிசினஸோட முடிஞ்சு போச்சு. இந்தச் செண்பகநல்லூர் நிலத்தை யாராவது தொடணும்னா அது என் அனுமதியோட தான் நடக்கும். இவன் வெறும் தொழிலாளி தான், நான் சொல்றதைக் கேட்டு நடக்கப் போறவன். நீ தேவையில்லாம உன் அப்பா சொன்னதை வச்சுக்கிட்டு இங்கே குழப்பாத. முதல்ல வெளிய போ!”
ராஜனின் அந்த அதிகாரமான பேச்சு ரோஜாவின் இதயத்தைக் கிழித்தது. “மாமா, நான் இந்த ஊரோட நன்மைக்காகத்தான் சொல்றேன்…”
“நான் சொன்னது காதுல விழல? வெளிய போன்னு சொன்னேன்!” என்று ராஜன் மீண்டும் அதட்ட, ரோஜா கண்ணீருடன் அங்கிருந்து வெளியேறினாள்.
வாசலில் முல்லைக்கொடி நின்றுகொண்டு, “என்ன, என் அக்கா காரி மாமன் கிட்ட பெரிய அறிவுரை சொல்லப்போனியா? ஒரு கம்பெனி சி.இ.ஓ-வையே மோசடிக்காரன்னு சொல்றே, உனக்கு எவ்வளவு திமிர் இருக்கணும்? ஊர் நல்லா இருக்கணும்னு மாமன் நினைச்சா, நீ அதுல மண்ணைப் போடப் பார்க்கிறே. இனியாவது அந்தச் சென்னை புத்தியை மூட்டை கட்டி வச்சிட்டு வீட்டு வேலைகளைப் பாரு,” என்று நக்கலாகக் கத்திச் சிரித்தாள்.
காலையில் தன் அம்மா தன்னை இவள் முன்னால் மட்டும் தட்டியதை மனதில் வைத்துக் கொண்டு கிடைக்கும் தருவாயை பயன்படுத்தி இவரை மட்டும் தட்டி முல்லைக்கொடி திருப்தியாக சென்றாள்.
தனி அறைக்குச் சென்ற ரோஜா, ஜன்னல் வழியே ஆகாஷின் காரைப் பார்த்தாள். ஆகாஷ் காரில் ஏறும் முன் மாடியைப் பார்த்து ஒரு நயவஞ்சகச் சிரிப்பை உதிர்த்தான். ‘அப்பா இவன விரட்டின மாதிரி நானும் விரட்டி அடிக்கணும், இல்லைன்னா என் குடும்பமே அழிஞ்சிடும்’ என்று ரோஜா அழுதுகொண்டே மனதுக்குள் சபதம் ஏற்றாள்.
ஆனால் ராஜனோ, ஊர் மக்களுக்குத் தான் செய்யப்போகும் அந்தப் பெரிய ‘உதவியை’ நினைத்து, ஆகாஷ் நீட்டிய அந்தப் பேராபத்து நிறைந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராகிக் கொண்டிருந்தான்.