அத்தியாயம் 6
மறுநாள் விடியல் செண்பகநல்லூர் கிராமத்திற்கு ஒரு விசித்திரமான அமைதியைக் கொண்டு வந்தது. தோட்டத்து வீட்டின் அந்தப் பழைய மதில் சுவர்களில் இப்போது புதுப் பொலிவு மின்னியது. ரோஜா அதிகாலையிலேயே எழுந்து, ராஜன் அனுப்பி வைத்த அந்த வண்ணங்களைக் கொண்டு வீட்டின் முன்புறத்தை ஒரு தேவதை இல்லம் போல மாற்றியிருந்தாள்.
சிறிது நேரம் கழித்து..
பள்ளிக்குக் கிளம்பும் போது, அவள் ஒரு இளம்பச்சை நிறக் காட்டன் சேலை அணிந்திருந்தாள். அது அவளது முகத்திற்கு ஒரு தனி தேஜஸைத் தந்தது. தோளில் ஒரு லேப்டாப் பை, கையில் ஒரு புத்தக மூட்டை என அவள் கம்பீரமாக நடந்து வரும் அழகைக் காண அந்த ஊர் மக்கள் தங்கள் வீட்டு வாசலுக்கே வந்தனர்.
பள்ளி வளாகத்திற்குள் நுழைந்ததும், தலைமை ஆசிரியர் அவளைத் தனது அறைக்கு அழைத்தார். “டீச்சர்… இன்னைக்கு தாளாளர் ஐயா ஒரு முக்கியமான இன்ஸ்பெக்ஷன் வர்றதா சொல்லியிருக்காரு. எல்லா ரெக்கார்ட்ஸும் கரெக்டா இருக்கான்னு பார்த்துக்கோங்க,” என்று எச்சரித்தார்.
ராஜனின் வருகை என்றாலே அந்தப் பள்ளியே ஒரு ராணுவக் கட்டுக்கோப்புக்குள் வந்துவிடும். சரியாகப் பத்து மணிக்கு, அவனது கறுப்பு நிறக் கார் பள்ளியின் முகப்பில் வந்து நின்றது. ராஜன் காரிலிருந்து இறங்கிய தோரணையில் ஒரு தனி மிடுக்கு இருந்தது. மடிப்பு கலையாத வெள்ளை வேட்டி, கறுப்புச் சட்டை, கையில் மின்னும் தங்கக் கடிகாரம். அவன் வராண்டாவில் நடந்து வரும்போது, அவனது காலணிச் சத்தம் ஒவ்வொரு வகுப்பறைக்குள்ளும் எதிரொலித்தது.
ராஜன் ஒவ்வொரு வகுப்பாகச் சென்று ஆய்வு செய்தபடி ரோஜாவின் வகுப்புக்கு வந்தான். ரோஜா அப்போது மாணவர்களுக்கு ‘இயற்கையும் இலக்கியமும்’ என்ற தலைப்பில் ஒரு கவிதையை விவரித்துக் கொண்டிருந்தாள்.
“இயற்கை என்பது வெறும் மரங்களோ செடிகளோ அல்ல… அது நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற ஒரு அடையாளம். ஒரு மரம் வளர்ப்பது என்பது, நம் சந்ததிக்கு ஒரு மூச்சுக் காற்றை விட்டுச் செல்வது போன்றது,” என்று அவள் சொல்லிக் கொண்டிருந்தபோது, ராஜன் கதவோரம் நின்று அதைக் கேட்டான்.
மாணவர்கள் அனைவரும் அவளது பேச்சில் மூழ்கியிருந்தனர். ராஜன் மெல்ல வகுப்புக்குள் நுழைந்தான். மாணவர்கள் எழுந்து நின்று வணக்கம் சொன்னார்கள். ராஜன் ரோஜாவைப் பார்த்து, “பாடத்தை நடத்துங்க…” என்று சொல்லிவிட்டு, கடைசி பெஞ்சில் அமர்ந்தான்.
ரோஜா ஒரு நொடி தடுமாறினாலும், அடுத்த நொடி சுதாரித்துக் கொண்டாள். “ராஜன் சார்… மாணவர்களுக்கு ஒரு கேள்வி. இந்தப் பள்ளியில் இருக்கிற அந்தப் பழைய ஆலமரம் எப்போ நட்டதுன்னு யாருக்காவது தெரியுமா?” என்று கேட்டாள்.
மாணவர்கள் திருதிருவென முழிக்க, ராஜன் மெல்ல எழுந்து நின்றான். “அந்த மரத்தை நட்டது என் தாத்தா… 1920-ல இந்த ஸ்கூல் ஆரம்பிச்சப்போ நட்டது. அது இந்த ஊரோட கௌரவம்,” என்றான் அழுத்தமாக.
ரோஜா புன்னகைத்தாள். “கௌரவம் மட்டும் இல்ல சார்… அது இந்த ஊரோட உயிர். அந்த மரத்துக்கு அடியில் தான் உங்க அப்பாவும் என் அப்பாவும் விளையாடினாங்க. ஆனா இன்னைக்கு அந்த மரத்தைச் சுத்தி பிளாஸ்டிக் குப்பைகள் நிறைஞ்சு கிடக்கு. கௌரவம் பேசுற நாம, அந்த உயிரைப் பாதுகாக்கவும் கத்துக்கணும்,” என்றாள்.
வகுப்பறையில் நிசப்தம் நிலவியது. ராஜனின் கண்கள் ரோஜாவைத் தீர்க்கமாகப் பார்த்தன. அவனது அதிகாரத்திற்கு முன்னால் இப்படி ஒரு கருத்தைச் சொல்ல யாருக்கும் தைரியம் வந்ததில்லை. ராஜன் ஒன்றும் பேசாமல் வகுப்பை விட்டு வெளியேறினான்.
மதிய உணவு இடைவேளையில், ராஜன் தனது அறையில் அமர்ந்திருந்தபோது, கதவு தட்டப்பட்டது. ரோஜா உள்ளே வந்தாள். அவளது கையில் ஒரு சிறிய டிபன் பாக்ஸ் இருந்தது.
“என்ன இது?” – ராஜன் கேட்டான்.
“தோட்டத்து வீட்டுல விளைஞ்ச காய்கறிகள்ல செஞ்ச சாப்பாடு. நேத்து நீங்க செஞ்சு கொடுத்த அந்த மின்சார உதவிக்கு ஒரு சின்ன நன்றிக்கடன்,” என்று சொல்லி மேஜை மேல் வைத்தாள்.
ராஜன் அந்தப் பாக்ஸைப் பார்த்தான். “நான் இதையெல்லாம் எதிர்பார்க்கல ரோஜா.”
“எதிர்பாராம கிடைக்கிறது தான் நிஜமான அன்பு ராஜன். அப்புறம்… அந்தப் பழைய ஆலமரத்தைச் சுத்தி நான் ஒரு சிறிய பூந்தோட்டம் அமைக்கலாம்னு இருக்கேன். உங்க அனுமதி கிடைக்குமா?” என்று கேட்டாள்.
ராஜன் அவளது கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பார்வையில் ஒரு மென்மை குடிபுகுந்திருந்தது. “உன் இஷ்டம்… ஆனா ஸ்கூல் வேலை கெடக்கூடாது,” என்றான்.
ரோஜா கிளம்ப முற்பட்டபோது, ராஜன் அவளைக் கூப்பிட்டான். “ரோஜா… நேத்து நைட் அந்த வீட்ல பயமா இல்லையா?”
ரோஜா மெல்லத் திரும்பிப் பார்த்தாள். “பயம் எதுக்கு ராஜன்? என்னைச் சுத்தி என் அப்பா அம்மாவோட நினைவுகள் இருக்கு. அப்புறம்… வெளிய காவலுக்கு இந்த ஜமீன் கோட்டை இருக்கு, அது மட்டும் இல்லாம ஜமீன் கோட்டையில ஒரு ஜன்னல் வழிபக்கம் ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு இருக்குன்னு எனக்குத் தெரியும்,” என்று சொல்லிவிட்டு ஒரு குறும்பான புன்னகையோடு வெளியேறினாள்.
ராஜன் மனம் தடுமாறியது அந்த ஜன்னல் வழியாக அவள் வந்ததிலிருந்து, இரவு நேரத்தில் ரகசியமாக அவ்வப்போது நோட்டமிடுவது அவன் தானே என்று.
ராஜன் அந்த டிபன் பாக்ஸைத் திறந்து பார்த்தான். அதில் இருந்த மணமே அவனுக்கு அவனது பால்ய காலத்தை நினைவுபடுத்தியது. சுப்ரஜா எப்பொழுதும் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை சுந்தரம் மூர்த்தி உதவியுடன் ரகசியமாக அரண்மனை வீட்டிற்கு அனுப்பி விடுவார்.
தெய்வானைக்கு தெரிந்தால் பெரிய பிரச்சனை என்பதால் வீட்டில் யாருக்கும் தெரியாது இந்த விஷயம்.
சிறுவயதில் அவன் சாப்பிட்டது நினைவு தெரிந்ததிலிருந்து அதை தோட்ட வீட்டு சம்பந்தப்பட்டது எனக்கும் வேண்டாம் என்று முடிக்கி கொண்டிருந்தான்.
இப்பொழுது அதெல்லாம் மறந்து
ஒரு வாய் எடுத்துச் சாப்பிட்டவனுக்குள் ஏதோ ஒரு மடை மாற்றம் ஏற்பட்டது. அந்தப் பகை என்ற கடினமான கல் உடைந்து, காதலின் ஈரம் மெல்ல கசியத் தொடங்கியிருந்தது.
பள்ளி நேரம் முடியும் தருவாயில், ராஜன் தனது அன்றாட விசிட்டிங் பணியை மேற்கொள்ளும் பொழுது, அந்தப் பழைய ஆலமரத்தைப் பார்த்தான். அங்கே ரோஜா சில மாணவர்களுடன் சேர்ந்து குப்பைகளை அகற்றிவிட்டு, செடிகளை நட்டுக் கொண்டிருந்தாள். அவளது முகத்தில் தெரிந்த அந்தத் திருப்தி, ராஜனின் இதயத்தில் ஒரு புதிய ராகத்தை இசைக்கத் தொடங்கியது.
…..
செண்பகநல்லூரின் வானம் அன்று மதியத்திலிருந்தே இருண்டு காணப்பட்டது. மதுரையின் வெக்கை தணிந்து, ஒரு குளிர்ந்த காற்று ஊருக்குள் புகுந்தது. பள்ளி முடிந்து மாணவர்கள் உற்சாகமாகக் கலைந்து சென்ற வேளையில், ரோஜா மட்டும் தான் நட்டு வைத்த செடிகளை ஒருமுறை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ராஜன் தனது அறையிலிருந்து வெளியே வந்து, கருமேகங்கள் சூழ்ந்த வானத்தை அண்ணாந்து பார்த்தான். “ரோஜா! மழை வர்ற மாதிரி இருக்கு, சீக்கிரம் கிளம்பு,” என்று சற்று உரத்த குரலில் எச்சரித்தான்.
ரோஜா புன்னகையுடன், “இந்தச் செடிகளுக்கு இதுதான் முதல் மழை ராஜன். அதுங்க சந்தோஷப்படுறதைப் பார்த்துட்டுப் போறேன்,” என்றாள். அவள் சொல்லி முடிப்பதற்குள், வானம் பிளந்து கொண்டு கனமழை கொட்டத் தொடங்கியது.
இருவருமே ஓடிச் சென்று அந்தப் பழைய ஆலமரத்தின் கீழ் ஒதுங்கினர். ஆலமரத்தின் அடர்ந்த கிளைகள் அவர்களுக்கு ஒரு குடை போலப் பாதுகாப்பு அளித்தன. சுற்றிலும் மழை நீர் ஆறாக ஓட, அந்தப் பிரம்மாண்டமான மரத்தடியில் ராஜனும் ரோஜாவும் மிக அருகில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
“நான் தான் அப்பவே சொன்னேன்ல… கிளம்புன்னு! இப்போ பாரு, மாட்டிக்கிட்டோம்,” என்றான் ராஜன், தன் சட்டையில் பட்ட மழைத்துளிகளைத் தட்டிவிட்டபடி.
ரோஜா மழையையே ரசித்துக் கொண்டிருந்தாள். “இந்த மழையை விடவா உங்க கார் முக்கியம்? பாருங்களேன்… அந்த ஆலமரம் எவ்வளவு கம்பீரமா மழையைத் தாங்குதுன்னு. எங்க அப்பா இந்த மரத்தடியில விளையாடின கதைகளை என்கிட்ட நிறைய சொல்லியிருக்காரு. இன்னைக்கு நான் அதே இடத்துல நிக்கிறது எனக்கே ஒரு மாதிரி இருக்கு.”
ராஜன் அந்த மரத்தின் விழுதைப் பற்றிக்கொண்டான். “ஆமா… காலம் எல்லாத்தையும் மாத்திருச்சு ரோஜா. கௌரவம், ஜமீன் வாரிசுங்கிற அந்தச் சுமை என்னை ஒரு பாறையா மாத்திருச்சு,” என்று அவன் குரலில் முதல்முறையாக ஒரு தளர்ச்சி தெரிந்தது.
ரோஜா மெல்ல அவன் அருகில் வந்தாள். “பாறைக்கு உள்ளேயும் ஊற்று இருக்கும் ராஜன். நீங்க உங்க குடும்பத்தை விட , என்னதான் மறைமுகமா கவனிச்சுக்கிறது எனக்குத் தெரியும். ஏன் இந்தச் சீற்றமும் அதிகாரமும்?”
ராஜன் அவளைத் திரும்பிப் பார்த்தான். மழையின் சாரலில் அவளது முகம் இன்னும் பிரகாசமாகத் தெரிந்தது. “பயம்தான் ரோஜா! அன்பு காட்ட ஆரம்பிச்சா, நம்ம பலவீனம் வெளிய தெரிஞ்சுடும்னு ஒரு பயம். ஆனா நீ வந்த பிறகு… அந்தப் பயம் குறையுற மாதிரி இருக்கு.”
அந்தத் தருணத்தில் இருவருக்கும் இடையே ஒரு நீண்ட மௌனம் நிலவியது. மழையின் சத்தம் மட்டுமே அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்தது. ராஜன் தற்செயலாக ரோஜாவின் கையைப் பார்த்தான்; குளிர் தாங்காமல் அவளது கைகள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தன.
சற்றும் யோசிக்காமல், ராஜன் தனது தோளில் இருந்த துண்டை எடுத்து அவளிடம் கொடுத்தான். “இந்தா… தொடைச்சுக்கோ. காய்ச்சல் வரப்போகுது.”
ரோஜா அந்தத் துண்டை வாங்கும்போது, அவர்களது விரல்கள் லேசாக உரசின. ஒரு மின்சாரம் இருவர் உடலிலும் பாய்ந்தது போலிருந்தது. ரோஜா நாணத்துடன் தலைகுனிந்து கொண்டாள். ராஜன் சட்டென்று தன் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.
மழை சற்றுத் தணிந்ததும், ராஜன், “வா… கார்ல விடுறேன். இந்த மழையில நீ தனியா அந்தத் தோட்டத்து வீட்டுக்குப் போக முடியாது,” என்றான்.
காரில் செல்லும்போது இருவருமே பேசவில்லை. ஆனால் அந்த மௌனத்தில் ஆயிரம் வார்த்தைகள் மறைந்திருந்தன. தோட்டத்து வீட்டின் வாசலில் காரை நிறுத்திய ராஜன், ரோஜா இறங்கும்போது, “ரோஜா… நாளைக்கு ஸ்கூல் லீவ். அத்தை (தெய்வானை) உன்னை மாளிகைக்குக் கூட்டிட்டு வரச் சொன்னாங்க. ஒரு விசேஷம் இருக்கு… வந்துடு,” என்றான்.
ரோஜா ஆச்சரியத்துடன், “என்ன விசேஷம் ராஜன்?” என்று கேட்டாள்.
ராஜன் மெலிதாகப் புன்னகைத்தான். “வந்து பாரு… உனக்குப் பிடிக்கும்.”
ரோஜா வீட்டிற்குள் சென்று ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, ராஜனின் கார் மெல்ல மறைந்து கொண்டிருந்தது. அவளது மனதுக்குள் ஒரு புதிய உணர்வு தளிர்விடத் தொடங்கியிருந்தது.