அத்தியாயம் 4
ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்திற்குத் தரையிறங்கி வந்தாள் அகல்யா.
மூன்று வருடம் ஆகிவிட்டது. வாழ்வில் எந்த எதிர்பார்ப்பும் இன்றி ரயிலில் பயணம் செய்து சென்னை வந்தவள்தான், இப்போது விமானத்தில் வருகிறாள். பணரீதியாக அவளது வாழ்க்கை முன்னேற்றம் அடைந்தாலும், மனரீதியாக அவள் வாழ்க்கையில் எப்போதும் ஒரு முக்கிய தருணம் கேள்விக்குறியாகவே முடிகிறது.
அவளின் உடன்பிறவாத சகோதரன் கணேஷ் அவளுக்காக அங்கு காத்திருந்தான். அவனைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியில் ஓடிச் சென்று அவனை அணைத்துக்கொண்டு மனம் விட்டு அழ ஆரம்பித்தாள். கடந்த காலத்தின் வலி அவள் கண்ணில் தெரிகிறது என்பதை உணர்ந்து, கணேஷ் மெதுவாகத் தலைவருடி அவளைத் தேற்றினான். அவளோடு அணைத்து வைக்கப்பட்டிருந்த அவளது மகனைப் பார்த்தபோது அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.
“நான் ரொம்ப பயந்தேன் அகல். நீ இங்கிருந்து போகும்போது உன்னோட வாழ்க்கையில மறுபடியும் தப்பான முடிவு எடுப்பாயோன்னு நினைச்சேன். ஆனா நல்லபடியா வாழ்ந்து, இங்க பாரு எவ்வளவு அழகான குழந்தையைப் பெத்து எடுத்திருக்க. நாட்டுக்காக உன்னோட புருஷன் உயிர் கொடுத்திருக்கான். நீ பெருமைப்படுற மாதிரி உன்னைச் சொல்ல வச்சிருக்கான். ஆறு மாசத்துக்கு முன்னாடி இந்த நியூஸ் கேட்கும்போது எனக்கு ஷாக்கிங்காதான் இருந்தது. ஆனா உன்னோட புருஷனும் சக ராணுவ வீரர்களும் இல்லாம இருந்திருந்தா, இந்நேரம் தீவிரவாதிகள் நம்ம நாட்டை கூறு போட்டு இருப்பாங்க. டேவிட்டை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு. அப்படியே அவனை மாதிரியே இருக்கான் ஆத்விக். டேய் குட்டிப் பையா, நான்தான் உன்னோட மாமா. மாமா கிட்ட வாங்க” என்று அழைத்தான்.
ஏற்கனவே அகல்யா குடும்பத்தாரின் புகைப்படங்களைக் காண்பித்து உறவுமுறைகளை எடுத்துரைத்திருந்ததால், கணேஷ் அழைத்தவுடன் அவன் கரங்களில் ஆத்விக் சரணடைந்தான்.
“அகல், கெஸ்ட் ஹவுஸ் எல்லாம் ரெடியா இருக்கு, நீ அங்க போயிடு. இவனை அழைச்சுக்கிட்டு நான் மாப்பிள்ளை தம்பியோட வீட்டுக்கு போறேன். அவங்க உன்னோட குழந்தையைப் பார்க்கணும்னு ஆவலாக இருக்காங்க. மாப்பிள்ளை அம்மாவுக்கு உன்னை ரொம்பப் பிடிச்சுப் போச்சு. உன்னோட கேரக்டர் பத்தித்தான் பேசினாங்க. அதனால மாப்பிள்ளை கூட உன் போட்டோவைப் பார்க்கவே இல்லை. உனக்கு இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கு” என்று சொல்லி அவளை வெளியே அழைத்து வந்தான்.
அங்கே கார் டிரைவர் ஒரு எட்டு மாதப் பெண் குழந்தையைக் கையில் வைத்திருந்தார். அந்தத் தேவதையைப் பார்த்த அகல்யாவுக்கு எங்கேயோ பார்த்தது போல் ஞாபகம், ஆனால் சரியாகத் தெரியவில்லை. கை சப்பிக்கொண்டு அங்கே அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தது அந்தச் சிசு.
“அகல்யா, இந்தப் பாப்பாதான் அனன்யா. மாப்பிள்ளை தம்பியோட பெண் குழந்தை. இனி உன்னோட குழந்தை கொஞ்ச நாள் உன் கூடத்தான் இருப்பா. நான் இங்கிருந்து அப்படியே பிக்கப் பண்ணிட்டு ஆத்விக்கை அழைச்சுட்டுப் போறேன். நீ அனன்யா கூட கெஸ்ட் ஹவுஸ்க்கு போ. கல்யாணத்துக்கு முன்னாடி நாள் உன்னை பிக்கப் பண்ண கார் வரும். உன்னோட இம்பார்ட்டன்ட் திங்ஸ் எல்லாமே இப்பவே மாப்பிள்ளை வீட்டுல ஷிப்ட் பண்ணச் சொல்லிட்டேன். இப்போதைக்கு அஞ்சு நாள் தங்குற மாதிரி டிரஸ் எடுத்து வச்சுக்கோ” என்று அனைத்து ஏற்பாடுகளையும் பேசி முடித்தான்.
கணேஷ் அனைவரையும் அழைத்துச் சென்று விட, குழந்தை அனன்யா அகல்யா அழைத்தவுடன் அவளோடு ஒட்டிக்கொண்டது. குழந்தைக்கு முத்தமிட்டுத் தன்னோடு அழைத்துச் சென்றாள். ஏற்கனவே சிறு குழந்தை என்பதால் ‘பேபி கேர்’ பேக்கைத் தயாராக வைத்திருந்தாள். அதில் குழந்தையை அமரவைத்து ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்து, ஒரு காரில் பயணம் செய்து ஷாப்பிங் மாலில் குழந்தைக்குத் தேவையான உடைகளையும் பொருட்களையும் வாங்கிக்கொண்டு கெஸ்ட் ஹவுஸ் வந்து சேர்ந்தாள்.
இங்கே வீட்டில் இருப்பவர்கள் ஆவலாகக் காத்துக் கொண்டிருந்தனர். அன்னலட்சுமி, அஸ்வினி மற்றும் ஆர்த்தி தட்டோடு தயாராக இருந்தனர்.
“அம்மா, கல்யாணம் முடிஞ்சுதானே மருமகளுக்கு ஆர்த்தி எடுக்கணும்? நீங்க என்னம்மா பழக வந்த குழந்தைக்கு எல்லாம் ஆர்த்தி எடுக்குறீங்க?” என்று கேட்டாள் அஸ்வினி.
“மொத மொதல்ல குழந்தை வீட்டுக்கு வரான். இந்த மாதிரி சந்தோஷமா வரவேற்றால்தான் நம்மளோட ஒன்றி இருப்பான். என் பையன் கல்யாணமே வேண்டாம்னு முரண்டு பிடிச்சுக்கிட்டு இருந்தான். எப்படியோ அந்தப் பீடை ஒழிஞ்சதுக்கப்புறம் இப்பதான் என் பையன் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லிருக்கான். இந்த கல்யாண வாழ்க்கை என் பிள்ளைக்கு நிலைக்க வேண்டும். அதுக்காகத்தான் அவளோட குழந்தைக்கு ஆர்த்தி எடுக்கப் போறேன்” என்று சொல்லி வாசலைப் பார்த்தார்.
சரியாகக் கார் வந்து நின்றது. கணேஷ் இரண்டு வயது ஆத்விக் குட்டியைத் தூக்கிக்கொண்டு வீட்டு வாசல் படியை நெருங்கி வந்தான். அப்போது சரியாக அலுவலகம் புறப்பட்டுக்கொண்டிருந்த ஆதித்யா, அந்த குழந்தையைப் பார்த்த பிறகு அப்படியே ஆணி அடித்தது போல் நின்றான். ஜாடை யாரையோ உணர்த்தியது, ஆனால் அதை அவனால் ஏற்க முடியவில்லை. பிறகு கணேஷ் அருகே வந்து நின்று குழந்தையிடம் தன் கரங்களை நீட்டினான்.
“அப்பா!” எனச் சந்தோஷமாகத் துள்ளி எழுந்து அவன் கரங்களில் சரண் புகுந்தது அந்தச் சிறு பிஞ்சு.
ஏனோ ‘அப்பா’ என்ற வார்த்தை அவன் உடலில் ஒரு சிலிர்ப்பை உண்டாக்கியது. அன்னலட்சுமிக்கும் அஸ்வினிக்கும் மனதில் மகிழ்ச்சிக் குத்தாட்டம். நீண்ட நாட்கள் கழித்து ஆதித்யா முகத்தில் புன்முறுவல். ஆதித்யா குழந்தைக்கு முத்தமிட்டுத் தன் அன்னையிடம் நெருங்கி வந்தான்.
“என்னோட மகனுக்கு ஆர்த்தி எடுங்க அம்மா” என்று அவன் சொன்னவுடன், பொங்கும் கண்ணீரை அடக்கிவிட்டு மகனுக்கும் பேரனுக்கும் ஆர்த்தி எடுத்து உள்ளே வரவேற்றார் அன்னலட்சுமி.
சிறிது நேரம் குழந்தையுடனே நேரத்தைக் கழித்தான் ஆதித்யா. ஏற்கனவே குழந்தை வருவதால் அவனுக்கான உடை, பொம்மைகள் என அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் தன்னுடன் விளையாட ஒரு குட்டிப் பையன் வந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் அனிருத் அவனுடன் இணைந்து கொண்டான். மதிய உணவு உண்டு விட்டு கணேஷும் ஆதித்யாவும் அலுவலகம் கிளம்பினர்.
இங்கே அகல்யா, சேட்டை பிடித்த தன் மகனோடு கடந்த நாட்களை நினைத்துப் பார்த்தாள். அமைதியின் மறுஉருவமாய் இருக்கும் அனன்யாவைப் பார்த்தபோது அவளுக்குச் சற்று நிம்மதியாக இருந்தது. இப்பொழுது வரை ஆத்விக் குட்டிக்குத் தாய்ப்பால் கொடுத்து வருவதால், அனன்யாவுக்கும் எளிதாக அவளால் தாய்ப்பால் கொடுக்க முடிந்தது. அனன்யா பார்முலா பாலை மறுத்துவிட்டாள். முதல்முறை தாய்ப்பால் குடிப்பதால் குழந்தை சற்றுத் தடுமாறித்தான் போனது. ஏற்கனவே கணேஷ் சொல்லியிருக்கிறான், குழந்தையின் தாய் விட்டுச் சென்றுவிட்டாள் என்று. எப்படித்தான் இந்தத் தேவதை போன்ற பிள்ளையை விட்டுச் செல்ல அவளுக்கு மனம் வந்ததோ? குழந்தைக்குப் பால் கொடுத்து, தட்டிக்கொடுத்து உறங்க வைத்தாள். அது சமத்தாக அகல்யாவின் நெஞ்சில் உறங்கியது.
“நீ ரொம்ப சமத்துக் குட்டியா இருக்க. ஒருவேளை புது இடம் அப்படிங்கறதால அமைதியா இருக்கியான்னு தெரியல. இனி நான் உனக்கு அம்மா. உன் மேல அதிகமா உரிமை இருக்கோ இல்லையோ, ஆனா உனக்கான எல்லாமே நான் செய்யணும் கண்ணா. என்னை மாதிரி எந்தக் குழந்தையும் தாய் பாசம் தெரியாம இருக்கவே கூடாது” என்று சொல்லி, பயணக் களைப்பால் அவளும் குழந்தையோடு உறங்க ஆரம்பித்தாள்.
ஆதித்யாவின் முதல் திருமணம் சில தர்மசங்கடங்களோடு தோல்வியில் முடிந்திருந்தது. இந்தத் திருமணம் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்று கணேஷ் அனைவரையும் வற்புறுத்தி, மிகப்பெரிய மண்டபத்தில் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடுகளைச் செய்திருந்தான். சீர்வரிசைகளை அடுக்குவது என ஆடம்பரமாகத் திட்டமிட்டிருக்க, அதற்கான பட்டியலை ஆதித்யாவின் முதல் மனைவியான லாவண்யாவுக்கும் அனுப்பி வைத்தான்.
“இவ்வளவு செலவு பண்ணா மட்டும் கல்யாண வாழ்க்கை நிலைச்சிடுமா என்ன?” என்ற கேலிப் புன்னகை லாவண்யா முகத்தில் தெரிந்தது. அவள் அருகில் இருந்த ரோகித் அதைப் பார்த்து, “இவ்வளவு பிரம்மாண்ட செலவு தேவையா இவங்களுக்கு?” என்பது போல் சிரிக்க, லாவண்யா எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
இரவு உணவு முடித்துவிட்டு அனைவரும் அனிருத் மற்றும் ஆத்விக் செய்யும் சேட்டைகளை ரசித்துக் கொண்டிருந்தனர். அனன்யாவைப் பற்றி அவ்வப்போது கணேஷ் மொபைல் மூலம் அகல்யாவைத் தொடர்பு கொண்டு விஷயங்களைத் தெரிந்து சொன்ன பிறகுதான் அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது.
“என்னோட பேத்தி பிறந்ததுல இருந்து தாய்ப்பால் இல்லாம அவஸ்தப்பட்டுக்கிட்டு இருந்தா. ஆனா வரப்போற பொண்ணு என் பேத்தியையும் சொந்த மகளா நினைச்சு எவ்வளவு அன்பா பார்த்துக்கிறா. கண்டிப்பா அந்தப் பொண்ணு நம்ம குடும்பத்தை விட்டுப் போகக் கூடாது” என்று அன்னலட்சுமி அகல்யாவின் பெயரைப் பயன்படுத்தாமலே அவளைப் பற்றிப் பெருமையாகச் சொன்னார். ஆதித்யாவுக்கு அவள் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் வந்தது. அவனையறியாமல் அவன் கண்ணில் ஒரு துளி கண்ணீர் எட்டிப் பார்த்தது.
அங்கே விளையாடிக் கொண்டிருந்த ஆத்விக் அருகே சென்று அவனைத் தூக்கி முத்தமிட்டுச் சிரிக்க, அவனும் ஆதித்யாவைப் பார்த்து ‘அப்பா’ என்று அவன் மீசையைத் திருகி விளையாடினான்.
முகூர்த்த தேதி வந்தது. மணமகனை உடை மாற்ற அறைக்குள் அனுப்பினர். ஆனால் அவனோ தன் அன்னை மற்றும் தங்கையிடம், “எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லை. சீக்கிரம் இந்தக் கல்யாணத்தை நிறுத்துங்க. என் குழந்தையை அழைச்சுக்கிட்டு நான் என் வீட்டுக்குப் போகணும்” என்று சொன்னவுடன் இருவரின் தலையிலும் இடி வந்து விழுந்தது.