அத்தியாயம் 5
ஐந்து நாட்கள் இரு பக்கமும் கலகலப்பாகச் சென்றது. அகல்யா, அனன்யாவுடன் ஒன்றிப் பழகி அவளுக்குத் தாயாகவே முழுமையாக மாறிவிட்டாள். மறுபக்கம் ஆத்விக் செய்யும் சேட்டைகள், குறும்புத்தனம், அவன் அனைவரிடமும் பழகும் முறை ஆகியவற்றைப் பார்த்து குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். எப்போது திருமணத் தேதி வரும் என்று அனைவரும் ஆவலாக இருந்தனர்.
இதில் பாவம் ரோகித்திற்குத்தான் பெண்டு நிமிர்ந்துவிட்டது. இல்லாத வேலையைக் கூடச் செய்ய வைக்கத் தனது ஆட்கள் மூலம் கணேஷ் ஏவிவிட, ரோகித்திற்கு மூச்சுவிட நேரமில்லை. இரவு நேரத்தில் மிகவும் தாமதமாகவே அவன் வீடு வந்து சேர்வான். அவன் தாமதமாக வீடு சேர வேண்டும், மனைவியோடு சந்தோஷமாக இருக்கக் கூடாது என்பதற்காகவே கணேஷ் இதையெல்லாம் செய்து கொண்டிருந்தான்.
திருமணத்திற்கு முந்தைய நாள் அனைவரும் மதியம் உணவருந்திவிட்டு மண்டபத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர். அகல்யாவும் அனன்யாவைத் தூக்கிக்கொண்டு வெளியே வர, சரியாகக் கார் வந்து அவர்களை மண்டபத்திற்கு அழைத்து வந்தது.
“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? இங்கே என்ன நடக்குது? இதுக்குத்தான் நான் இந்த வீட்டை விட்டு ஓடிப்போனேன். எல்லாருக்கும் பாராபட்சம். எங்களை இன்வைட் பண்ணது இல்லாம, ரோகித்தை அடிமாடு விட கேவலமா வேலை வாங்கிட்டு இருக்கீங்க. இப்போ என்னையும் இவரோட ரெண்டாவது மனைவிக்கு ஆர்த்தி எடுக்கச் சொல்றீங்க. உங்க வீட்டை விட்டு போன உடனே நாங்க வெளியூர்ல செட்டில் ஆகி இருக்கணும். கான்ட்ராக்ட்ல சைன் போட்டதால ஆபீஸ்ல வேலை பார்த்துட்டு இருக்காரு. இதுக்கு மேல என்னால பொறுமையா இருக்க முடியாது. வரப்போற மருமகளுக்கு விதவிதமா புடவைகள், நகைகள்னு மண்டபத்துல ஒவ்வொரு செட்டும் சூப்பரா பார்த்து வச்சிருக்கீங்க. கிட்டத்தட்ட 50 லட்சத்து கிட்ட செலவு பண்ணிருப்பீங்க போல. ஆனா என் கல்யாணத்துக்கு இதெல்லாம் ஒண்ணுமே பண்ணலையே!” என்று தன் சகோதரன், முன்னாள் கணவர், முன்னாள் மாமியார் அனைவரிடமும் எகிறிக் கொண்டிருந்தாள் லாவண்யா.
“இங்க பாரு, ரோகித் எங்ககிட்ட வேலை பார்க்கிறான். பத்து வருஷம் கான்ட்ராக்ட்ல ரெண்டு வருஷம்தான் முடிஞ்சிருக்கு. மீதி எட்டு வருஷத்தை யார் கழிப்பா? போதாக்குறைக்கு நீ பண்ண வேலைக்கு நான் உங்க மேல மானநஷ்ட ஈடு கேஸ் போட்டுருக்கேன். இன்னும் நீ முதல் தவணை பணத்தைக் கூடச் செலுத்தாம இருக்க. சரி, போனா போகட்டும்னு விட்டு வச்சிருக்கேன். நீ பண்ண வேலைக்கு இதெல்லாம் செஞ்சுதான் ஆகணும். நீ யாரை வேண்டாம்னு விட்டுட்டு போனியோ, அவனோட மறுவாழ்க்கைக்கு நீதான் அடித்தளமா இருக்கணும். கார்ல இருந்து வரப்போற பொண்ணுக்கு நீதான் ஆர்த்தி எடுக்கணும்” என்று கணேஷ் கறாராகச் சொல்ல, லாவண்யா முகத்தைச் சுளித்துக்கொண்டு சென்றாள்.
ஒரு பக்கம், இன்றுதான் முதல்முறை தனக்குத் திருமணம் ஆகுவது போல் ஆதித்யா மிகவும் புத்துணர்ச்சியாகக் காணப்பட்டான். அவனுக்கு வெட்கமும் வந்தது. ஆத்விக்கை அவன் தனது சொந்த மகனாகவே நினைத்துக் கொண்டான். வருகிறவள் தனக்கு ஒரு நல்ல மனைவியாகவும் உற்ற தோழியாகவும் வாழ்நாள் முழுவதும் தனுடன் பயணிக்கப் போவதை நினைத்துச் சந்தோஷப்பட்டான். கடந்த ஐந்து நாட்களாக அவளிடம் பழைய காலத்து முறைப்படி குறுஞ்செய்திகள் மூலம் அவன் பேசிக் கொண்டிருந்தான்.
எல்லாம் கணேசனின் வேலைதான். புதிய எண்ணைக் கொடுத்து, புகைப்படம் வைக்காமல், இருவரும் ஒருவருக்கொருவர் பெயரைக் கூடச் சொல்லிக்கொள்ளாமல் பேசிக் கொண்டனர். கடந்த காலத்தைப் பற்றிப் பேசாமல், தற்காலத்திலிருந்து தங்கள் உரையாடலை ஆரம்பித்தனர். “குட் மார்னிங், சாப்பிட்டீங்களா? என்ன பண்றீங்க?” என அவன் தன் வேலைகளைப் பகிர, அவள் அனன்யா செய்த குறும்புகளையும், அவளுக்கும் அனன்யாவுக்குமான பிணைப்பையும் விவரிப்பாள். “நான் உங்களுக்கு நல்ல கணவனாக இருப்பேன்”, “நான் உங்களுக்கு நல்ல மனைவியாக இருப்பேன்” என இருவரும் ஐந்து நாட்களில் மனதால் பிணைந்துவிட்டனர். ஒருவரைப் பற்றி ஒருவர் முழு விவரம் தெரிந்தால் குடுமிபிடி சண்டை நடக்கும் என்பதால், அது நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு கணேசன் கையில் இருந்தது.
கல்யாண மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்த ஆதித்யாவின் தலையில் தட்டினான் கணேஷ்.
“என்னடா மாப்ள, கல்யாண கனவுல மிதந்துகிட்டு இருக்கியா? நாளைக்குக் காலையில ஆறு டூ ஏழரை முகூர்த்தம். சீக்கிரமாவே தாலி கட்டி அந்தப் பொண்ணை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துடலாம். சரி, அந்தப் பொண்ணோட நம்பர் கொடுத்தேனே, ரெண்டு பேரும் நல்லா பேசிக்கிட்டீங்களா?” என்று கணேசன் கேட்க, ஆதித்யாவும் புன்னகையுடன் ஆமாம் என்றான்.
“இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு. உன் வாழ்க்கையில ரெண்டு முறை நீ ஒரு வாய்ப்பைத் தவற விட்டுட்ட. ஆனா இந்த முறை இந்த வாழ்க்கையை நீ தவற விடவே கூடாது. கெட்டியா பிடிச்சுக்கணும், புரிஞ்சுதா? அப்புறம் இன்னொரு விஷயம், கல்யாணம் ஆகுற வரைக்கும் பொண்ணு முகத்தைப் பார்க்கக் கூடாது. இது என்னோட கண்டிஷன்,” என்று சூசகமாகச் சொல்லிவிட்டுச் சென்றான் கணேஷ்.
அப்போதுதான் அவளின் முகத்தைப் பார்க்க ஆதித்யாவுக்கு ஆவலாக இருந்தது. இன்று இரவு அனைவரும் உறங்கிய பிறகு, யாருக்கும் தெரியாமல் அவளைப் பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்தான்.
இங்கே ஆர்த்தி தட்டோடு லாவண்யா காத்திருக்க, அகல்யாவையோ கணேஷ் மண்டபத்தின் பின்பக்கமாக அழைத்துச் சென்றான். ஆர்த்தி வரவேற்பு, மற்றவர்கள் முன் காட்சிப் பொருளாக நிற்பது போன்றவற்றில் அகல்யாவுக்கு விருப்பம் இல்லாததால், அவள் நேரடியாகத் தன் அறைக்குச் சென்றுவிட்டாள். லாவண்யாவும் மற்ற பெண்களும் மணமகளைப் பார்க்கக் காத்திருந்தனர்.
“என்னம்மா, உன் முன்னாள் புருஷனோட ரெண்டாவது பொண்டாட்டிக்கு ஆர்த்தி எடுக்க இவ்வளவு நேரம் காத்துக்கிட்டு இருக்க? ஆனா உன் சக்காளத்தி இன்னும் வரலையே?” என்று உறவுக்காரப் பெண்கள் லாவண்யாவைக் கேலி செய்தனர்.
“கல்யாணப் பொண்ணு வந்து ரெண்டு மணி நேரம் ஆகுது. நீங்க வெறும் தட்டை மட்டும் வச்சுக்கிட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க. பொண்ணு உள்ள வந்தாச்சு, யாரும் வர வேண்டாம், போங்க” என்று கணேஷ் சொன்னவுடன் லாவண்யாவிற்கு ஆத்திரம் தலைக்கேறியது. ஒவ்வொரு நிமிடமும் தன்னை அவமானப்படுத்தும் இந்த குடும்பத்தை நினைத்து அவளால் ஆத்திரப்பட மட்டுமே முடிந்தது.
“யார் அந்தச் சிங்காரின்னு பார்க்கலாம்னு இருந்தேன். காலையில முகூர்த்த நேரத்துல என் கையில சிக்காமலா போவா? அப்போ வச்சுக்கிறேன்” என்று கறுவினாள். மணமகள் அறை எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாதவாறு கணேஷ் ரகசியமாக ஏற்பாடு செய்திருந்தான்.
இரவு நேரம் நெருங்கியது. அனைவரும் உறங்கிவிட, ஆதித்யா மெதுவாக எழுந்தான். மறுநாள் மணம் முடிக்கப் போகும் பெண் தன் மகளோடு எப்படி இருக்கிறாள் என்பதைப் பார்க்க ஆவலாக நகர்ந்தான். கணேஷ் கொடுத்த எண்ணை வைத்து அவள் தங்கியிருக்கும் இடத்தை ரகசியமாகக் கண்டுபிடித்தான். சமையல்காரர்கள் தங்கும் இடத்திற்கு அருகே இருந்த ஓர் அலுவலக ஓய்வறையில்தான் அவளுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
மெதுவாக அங்கே சென்று ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். முதுகைக் காட்டியவாறு தன் மகளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அவள் உறங்குவதைப் பார்க்க அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தன் மகளும் தாய் பாசத்திற்கு ஏங்கி இருப்பதை அவர்களின் உறக்க நிலை காட்டிக் கொடுத்தது.
அவள் முகத்தைப் பார்க்க வேண்டுமே என்ற ஆவலில் காத்திருக்க, ஜன்னல் வழியாக வீசிய தென்றல் காற்று அவள் கழுத்தில் வருட, அவள் மெல்லச் சிணுங்கிக் கொண்டு மறுபக்கம் திரும்பினாள். அவ்வளவுதான்! பௌர்ணமி நிலவு போன்ற அந்தப் பெண்ணைப் பார்த்தவுடன் அவன் தலையில் இடி விழுந்தது.
எந்தப் பெண்ணை வேண்டாம் என்று சொல்லி, “இவள் ஒழுக்கமற்றவள்” என்று அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்தி விட்டுச் சென்றானோ, அவளேதான் அங்கே படுத்திருந்தாள். தவறான திருமண பந்தத்தில் சிக்கிச் சின்னாபின்னமாகி, இப்போதுதான் மீண்டு வந்திருக்கும் அவனுக்குப் பழைய நினைவுகள் ரணமாக உருவெடுத்தன. கண்களில் கண்ணீர் வழிய, சத்தம் இல்லாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
மறுநாள் காலை…
சுபமுகூர்த்தத்தில் எந்தத் தடையும் இன்றி, லாவண்யாவின் வயிறு அக்னி குண்டமாக எரிய, ரோகித்தின் பொறாமை பன்னீராகப் பொழிய, சொந்த பந்தங்கள் அட்சதை தூவ, ஆதித்யா – அகல்யா திருமணம் அரங்கேறியது.