Home ANTIHERO1) ரோஜாப்பூ 🌹

1) ரோஜாப்பூ 🌹

by sreejanovels
27 views

அத்தியாயம் 1

மதுரை மண்ணுக்கே ஒரு தனி குணம் உண்டு. அங்கே வீசும் காற்றில் வீரமும் இருக்கும், ஈரமும் இருக்கும். அந்த மதுரையின் எல்லையில், வைகை நதி வளைந்து கொடுக்கும் அந்தச் செண்பகநல்லூர் கிராமத்தில், ஊர் மந்தையைத் தாண்டிப் பார்த்தால் கண்ணில் படுவது அந்த ‘செண்பகக் கோட்டை’. அது வெறும் வீடு இல்லை; அந்த ஊரையே ஆளும் ஒரு சாம்ராஜ்யம். அந்த மாளிகையின் உச்சாணிக் கொம்பில் பறக்கும் கொடி, ஆறுமுகம் ஜமீன்தாரின் அதிகாரத்தைச் சொல்லாமல் சொல்லும்.

காலங்கள் மாறினாலும் ‘பெரிய வீட்டு குடும்பம்’ என்று பெயர் போன அந்த மாளிகையில், இன்றும் ஒரு சோகம் கலந்த கலகலப்பு குடியிருக்கும். வீட்டின் மூத்தவர் ஆறுமுகம். அவரது மனைவி தெய்வானை. அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர் சுந்தரமூர்த்தி; அவரது மனைவி யமுனா. இவர்களது பிள்ளைகள் சக்திவேல் (வயது 30) மற்றும் காயத்ரி (வயது 22).

சுந்தரமூர்த்திக்கு அடுத்துப் பிறந்தவள் கௌரி. இவளது மகன் தேவராஜ்; இவனுக்கும் சக்திவேலுக்கும் ஒரே வயதுதான். கௌரியின் மகள் முல்லைக்கொடி (வயது 21). கௌரியின் கணவன் சிவலிங்கம், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, பணத்தை ஊதாரித்தனமாகச் செலவு செய்து, தேவையற்ற பெண் சகவாசங்களால் உடல்நலம் கெட்டு இறந்து போனார்.

கௌரிக்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்துப் பிறந்தவன்தான் நம் கதையின் நாயகன் ராஜன். சிம்மராஜன் என்ற பெயருடைய அவன், அனைவராலும் ராஜன் என்று செல்லமாக அழைக்கப்படுபவன். இப்போது அவன் தான் ஊரின் பஞ்சாயத்து தலைவர் (பிரசிடெண்ட்). ஊரின் பொறுப்புகள் அனைத்தும் அவன் தலையில்தான் இருக்கிறது; அதற்கு ஏற்ற கம்பீரமும் அவனிடம் குடி கொண்டுள்ளது. தன் அக்கா கௌரி மீது அவனுக்கு எப்போதும் அளவற்ற பாசம் உண்டு.

அதே சமயம் ஒருவர் மீது அளவற்ற பகையும் உண்டு.

தெய்வானைக்கு ஒரு தம்பி இருந்தார். தன் தம்பியைத் தன் மகளுக்கே திருமணம் செய்து வைத்தால், சொத்துக்கள் அனைத்தும் தனக்கே வந்து சேரும் என்ற பேராசை தெய்வானைக்கு இருந்தது. தன் தம்பி ஷங்கர் வேறொரு பெண்ணை விரும்புவது தெரிந்தும், அதை யாரிடமும் சொல்லாமல், தன் மகள் கௌரியுடன் அவனுக்குக் கட்டாயத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். அனைவரும் ஷங்கருக்கும் இதில் விருப்பம் என்று நினைத்துத் திருமண வேலைகளில் தீவிரமாக இருந்தனர். ஆனால், திருமணத்திற்கு முந்தைய நாள், அரண்மனை வீட்டிற்கு அருகிலுள்ள தோட்டக்காரரின் மகளான அமுதாவை அழைத்துக்கொண்டு ஷங்கர் பட்டணத்திற்குச் சென்று திருமணம் செய்து கொண்டார்.

இந்த விஷயம் காட்டுத் தீயாகப் பரவ, அந்த இக்கட்டான நேரத்தில் வேறு வழியின்றிச் சொந்தக்காரர் தானே என்று சிவலிங்கத்திற்கு கௌரியைத் திருமணம் செய்து வைத்தார்கள். சிவலிங்கத்தைத் திருமணம் செய்ததிலிருந்து கௌரியின் வாழ்க்கை நரகமானது. ஆசைப்பட்ட மாமா கிடைக்கவில்லை, கிடைத்த வாழ்க்கையும் சரியாக அமையவில்லை என்ற வேதனையிலேயே அவர் காலம் தள்ளினார். முல்லைக்கொடி பிறந்து இரண்டு வயதாகும் போது, மது மற்றும் மாதுப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட சிவலிங்கம் உடல்நிலை சீர்கெட்டு இறந்து போனார்.

ஆனால், இதற்கெல்லாம் தன் தம்பி ஷங்கர் தான் காரணம் என்று ராஜன் மனதில் நஞ்சு விதைத்தார் தெய்வானை. “என் தம்பியை நம்பித் தான் திருமண ஏற்பாடு செய்தேன், அவன் ஏமாற்றிவிட்டுப் போனதால் தான் இவனுக்குத் திருமணம் செய்து வைத்தேன்; அவன் மட்டும் ஒழுங்காக இருந்திருந்தால் என் மகள் நன்றாக இருந்திருப்பாள்” என்று பெரிய கதையைக் கட்டிவிட்டார். இதனால் வளர வளர ராஜன் மனதில் தன் தாய்மாமன் ஷங்கர் ஒரு பெரிய எதிரியாகவே சித்திரிக்கப்பட்டார்.

மறுபக்கம், ஷங்கரைப் பற்றிய செய்திகள் அவ்வப்போது ஊருக்குள் பரவும். இப்போது தோட்டத்து வீட்டில் யாரும் இல்லை; அமுதாவின் பெற்றோரும் இறந்துவிட்டதால் அந்த வீடு பூட்டியே இருக்கும். எப்போதாவது ஒருமுறை ஷங்கரின் பங்காளி முறை உறவினர் ஒருவர் ஆட்களை வைத்து வீட்டைச் சுத்தம் செய்து வருவார். ஷங்கர் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்து, அதன் முதலாளி இறந்த பிறகு அந்த நிறுவனத்தையே வாங்கிச் சிறப்பாக நடத்தி வருகிறார் என்றும், அமுதா அரசுப் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிகிறார் என்றும் ஊருக்குள் பேசுவார்கள். பல வருடத் தவத்திற்குப் பிறகு அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தப் பெண் முல்லைக்கொடியை விட ஒரு வயது மூத்தவள்.

இந்தத் தகவல்களைக் கேட்கும் போதெல்லாம் பதின்பருவத்தில் இருந்த ராஜன் மனதில் கோபம் நெருப்பாய் வளரும். “தன் அக்கா இங்கே விதவைக் கோலத்தில் தவித்துக் கொண்டிருக்க, அவளுக்குத் துரோகம் செய்துவிட்டு ஊரை விட்டு ஓடியவன் அங்கே சந்தோஷமாக வாழ்கிறானா?” என்று அவன் துடித்தான்.

ஒருமுறை கௌரியின் கணவருடைய முதலாம் ஆண்டு நினைவஞ்சலிக்காகத் தன் மனைவி, மகளுடன் ஷங்கர் ஊருக்கு வந்தார். வந்தவரை அனைவரும் அமைதியாகவே வரவேற்றனர். ஆனால் தெய்வானை அங்கே ஒரு நாடகத்தை அரங்கேற்ற, ஆத்திரமடைந்த ராஜன் ஷங்கரை அடிக்கவே சென்றுவிட்டான்.

இவ்வளவு சிறிய வாலிபன் தன்னை அடிக்க வந்துவிட்டானே என்ற கோபத்தில், “இனிமேல் இந்த ஊர் பக்கம் நான் வரமாட்டேன்” என்று சபதமெடுத்தார் ஷங்கர். அதே சமயம், “பெற்றோர்கள் கொடுத்த சொத்தில் எனக்கும் சரிபாதி பங்கு இருக்கிறது, அதை எடுத்துக்கொள்ள ஆசைப்படாதே” என்று தன் அக்காவிடம் எச்சரித்துவிட்டுச் சென்றார். இது தெய்வானைக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. தம்பி சொத்தை மறந்திருப்பான், அதுவும் நமக்கே வந்து சேரும் என்று கணக்கு போட்டவருக்கு அவர் உரிமை கோரியது அதிர்ச்சியளித்தது.

வருடங்கள் உருண்டோடின…

இப்போது நம் நாயகன் ராஜனுக்கு 33 வயதாகிறது. சக்திவேல் மற்றும் தேவராஜிற்கு 30 வயது. காயத்ரிக்கு 22, முல்லைக்கொடிக்கு 21. குடும்பத் தொழில்களைப் பிரித்துக்கொண்டு வாரிசுகள் அவரவர் துறைகளைக் கையாண்டு வருகிறார்கள். ராஜன், தன் தாத்தா காலத்தில் தொடங்கப்பட்ட பள்ளியை இப்போது மதுரையின் மிகப்பெரிய கல்வி நிறுவனமாக உயர்த்தி நடத்தி வருகிறான்.

சக்திவேல் பருத்தித் தொழிற்சாலையை (காட்டன் பேக்டரி) முழுமையாகக் கவனித்து வருகிறான். தேவராஜ், தன் அப்பா சிவலிங்கத்தின் சொத்துப் பகுதியான டெக்ஸ்டைல் நிறுவனத்தைத் தன் தாத்தாவின் அறிவுரையோடும், மச்சான்களின் துணையோடும் பிரம்மாண்டமான ஜவுளி மாளிகையாக மாற்றி வெற்றிகரமாக நடத்தி வருகிறான். கடந்த மூன்று ஆண்டுகளாக இவர்கள் தனித்தனி துறைகளில் சாதித்து வருகிறார்கள்.

சக்திவேலும் தேவராஜும் ராஜன் மீது மிகுந்த மரியாதையும் பற்றும் வைத்திருக்கிறார்கள். ராஜனும் அவர்களிடம் ஒருபோதும் கர்வம் காட்டியது கிடையாது. இந்த மூன்று ஆண்களும் மூன்று சிங்கங்கள் போல் குடும்பத்தைக் காத்து வருகிறார்கள்.

காயத்ரி ஆசிரியர் படிப்பு முடித்து, ராஜனின் கல்வி நிறுவனத்திலேயே அறிவியல் ஆசிரியையாக வேலை செய்கிறாள். அவள் அமைதியான குணம் கொண்டவள்; யாரிடமும் வம்புக்கும் போகமாட்டாள். அவளும் தேவராஜும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகிறார்கள். தக்க சமயம் பார்த்து வீட்டில் சொல்லித் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.

மறுபக்கம் முல்லைக்கொடி, தனக்கு அப்பா இல்லை, அம்மா விதவை என்ற காரணத்தைச் சொல்லியே நினைத்ததைச் சாதித்துக் கொள்வாள். பாட்டி தெய்வானையிடம் பேசித் தனக்குத் தேவையானதை வாங்கிக் கொள்வாள். சற்றுப் பொறுப்பில்லாமல் இருந்தாலும், தனக்கு ஒரு காரியம் ஆக வேண்டுமென்றால் அதை நாசுக்காக முடிப்பதில் வல்லவள். தன்னைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை என்ற அகம்பாவம் கொண்டவள். குணத்தில் அப்படியே தன் பாட்டி தெய்வானையைப் பிரதிபலிப்பவள்.

…..

வாருங்கள் இனி கதைக்குள் செல்வோம்…

You may also like

Leave a Comment

About Me

Featured