Home FAMILY NOVEL1) வலி 💔

1) வலி 💔

by sreejanovels
36 views

அத்தியாயம் 1

அந்த வீட்டில் அவளின் சத்தம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. பிறந்து எட்டு மாதம்தான் ஆகிறது. உலகை ஆள்வது போல் அப்படி ஒரு குரல் வளம்.

அவள் தந்தையைப் போல வீறிட்டு அழுதுகொண்டிருந்தது. பெற்றவளும் இல்லை. பாட்டி மற்றும் அத்தையின் கவனிப்பில் இருப்பவள். ஆனால் அன்னையின் அரவணைப்பு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது அந்த பிஞ்சு மொட்டு அனன்யா…

“என்னடி திடீர்னு இப்படி கத்திக்கிட்டு இருக்கு? அப்பப்போ இவளுக்கு வேலையா போச்சு. அவங்க அப்பா இருக்கும்போது மட்டும் சமத்து பொண்ணா இருக்க வேண்டியது, நம்மள மட்டும் ஆள பார்த்து ஏமாத்த வேண்டியது. வயசான காலத்துல என்னால என்ன பண்ண முடியும்? நீயும் எப்பயாவது வருவ. இந்த ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு என்னால் தனிமையை சமாளிக்கவே முடியல. கடவுளே என் புள்ள ஏன் தான் இப்படி கல்நெஞ்சுக்காரரா இருக்கானோ”

என்று தன் மகன் ஆதித்யாவை வறுத்து எடுத்துக்கொண்டிருந்தார் அவனின் தாயார் அன்னலட்சுமி…

“அம்மா இப்ப எதுக்கு சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பேசுற? குழந்தை அழுவது பூச்சி ஏதாவது கடிச்சிருச்சா? எதுவும் தெரியல. அண்ணாவுக்கு தான் போன் பண்ணிட்டேனே, அப்புறம் என்ன? அவர் வருவாரு. இன்னிக்கு மீட்டிங் மட்டும் தானே, மீட்டிங் கூட முடிஞ்சிடுச்சு. கணேஷ் கூட தான் வந்துகிட்டு இருக்காரு. எந்த பிரச்சனையும் இல்லை. கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு நான் பால் காய்ச்சி கொண்டுவரேன்”

என்று சமையலறைக்குச் சென்ற அஸ்வினியின் மகன் அனிருத், தன் பாட்டியின் கரங்களைப் பிடித்துக்கொண்டு பாவமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் ஆதித்யாவின் சீமந்தபுத்திரியோ வீடு அதிரும்படி கத்திக்கொண்டிருந்தாள்.

“பேபி மா”

குரல் வந்தவுடன் இவ்வளவு நேரம் அழுது ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்த குழந்தை அமைதியாகத் திரும்பிப் பார்க்க, கோட் சூட் சகிதம் கண்களில் கண்ணாடியைக் கழட்டி மகளை அன்போடு பார்த்து நடந்து வந்து கொண்டிருந்த ஆதித்யாவைப் பார்த்தவுடன், குழந்தை மகிழ்ச்சியாகத் தவழ்ந்து அவன் காலடியில் வந்து நிற்க, ஆசை மகளை அள்ளிக்கொண்டான் ஆதித்யா…

“அடிப்பாவி! இவ்வளவு நேரம் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டா, நீ வந்தவுடன் எவ்வளவு அமைதியாகிவிட்டா! எல்லாம் கேடித்தனம். நீயாச்சு உன் பொண்ணாச்சு”

என்று அன்னலட்சுமி சுழித்துக்கொள்ள, ஆதித்யா அருகில் இருந்த கணேஷ்,

“ஏன் உங்க பெண்ணும் பிள்ளை பெத்தவ தானே? ஒரு குழந்தையை சமாளிக்க அவளுக்குத் தெரியாதா? அதானே, அவ சொந்த குழந்தையா இருந்தா பார்த்து இருப்பா. அண்ணன் பொண்ணு தானே? அண்ணனுக்குத் துரோகம் பண்ண தங்கச்சி, அண்ணன் குழந்தையை மட்டும் பாசமா பார்த்துக்கொள்ள என்ன??”

என்று நக்கலாகக் கூற, அன்னலட்சுமிக்கு முகத்தில் அடித்தது போல் ஆகிவிட்டது. சமையல் கட்டில் இருந்த அஸ்வினி அவன் சுடுசொற்களைத் தாங்கிக்கொண்டு, குழந்தைக்குப் பால் கலக்கி பீடிங் பாட்டிலில் போட்டு வெளியே எடுத்து வர,

“அது சரி, அங்க எங்க வீட்ல ஒரு வேலையும் செய்ய மாட்ட. இங்க மட்டும் விழுந்து விழுந்து வேலை செய்ற. செஞ்ச பாவத்துக்குப் பிராயச்சித்தம். நல்ல டிராமா”

என்று சொல்லித் தன் அறைக்குள் சென்றுவிட, அஸ்வினி கண்கள் கலங்கியது. ஆதித்யாவால் இதற்குச் சமாதானம் அளிக்க முடியாது. அமைதியாகத் தங்கையைப் பார்த்துத் தலை அசைத்து, தன் அறைக்குத் தன் மகளோடு அஸ்வினி கையில் இருந்த பால் புட்டியை வாங்கிக்கொண்டு சென்றுவிட, அன்னலட்சுமி கலங்கிய தன் மகளின் தலையை வருட,

“இன்னும் எனக்கு இந்தத் தண்டனையிலிருந்து விமோட்சனம் கிடையாது போல. மூணு வருஷம் ஆகுது, இன்னும் என் புருஷன் என்கிட்ட சரியாக முகம் கொடுத்துக் கூட பேசல. எல்லாம் என்னால வந்தது, எல்லாம் என்னோட சுயநலம்தானேம்மா”

என்று அழுத மகளைச் சமாதானம் செய்யத்தான் முடிந்தது. ஆனால் அவள் வாழ்க்கை எப்படிச் சரி செய்வது என்று அவருக்குச் சுத்தமாகப் புரியவில்லை…

இங்கே அறைக்குள் வந்தவன் குழந்தைக்குப் பால் புகட்டித் தொட்டிலில் படுக்க வைத்து உறங்க வைக்க, அவள் தன் பிஞ்சு மொழியில் ஏதேதோ கதை சொல்ல அப்படியே கண்ணயர்ந்தாள்… ஆதி உடைமாற்றி வந்தவுடன் தனது லேப்டாப்பில் பெண்டிங் வேலைகள் ஏதாவது இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொண்டிருந்தான்…

ஏனோ மனம் ஒரு முறை அவளைச் சிந்தித்தது. இது போன்ற லேப்டாப்பில் வேலை செய்துகொண்டிருக்கும்போது அவனை இடித்து வந்து அமர்ந்து,

“என்ன மாமா நீ? எப்ப பார்த்தாலும் லேப்டாப் வேலை, பிசினஸ் அப்படின்னு சுத்திட்டுப் போ. எனக்குப் போர் அடிக்குது. இங்க சென்னைக்கு வந்தா எல்லாம் நல்லா இருக்கும்னு எங்க அப்பா அனுப்பி வச்சா, நீங்க ஒரே மொக்கையா இருக்கீங்க.

நான் என்னோட ஊரிலேயே வயலில் வேலை பார்த்துகிட்டு, ஸ்கூலுக்குப் போயிட்டு ஜாலியா இருந்தேன். காலேஜ் சென்னைல சேர்ந்து ரொம்பவே கஷ்டப்படுறேன். எல்லாருமே போர். அதுவும் நீ இருக்க பாத்தியா? திருட்டுத்தனமா என்னைக் கூட்டிட்டுப் போய் கிஸ் அடிப்ப, கட்டிப்பிடிப்ப. அப்படி இப்படியும் பண்ணி என் லவ்வை ஓகே பண்ண வச்சு, இப்போ நீ பாட்டுக்கு விட்டு பிசினஸைக் கட்டிக்கிட்டு அலையுற. அப்ப எதுக்கு என் பின்னாடி இம்சை பண்ண? எப்பவும் போல இருந்து இருக்கலாம் இல்ல? இப்ப சொல்றேன், உனக்கும் எனக்கும் டிவோர்ஸ்”

என்று சொல்லிச் சிட்டாக ஓடுபவளைத் தூக்கிப் பிடித்துக் கட்டிலில் சரசம் புரிந்த நிமிடங்கள் நினைத்துப் பார்க்க, அவன் உடல் சிலிர்த்து அடங்கியது…

“அடியேய் அகல் விளக்கு”

என்று சொல்லிச் சிரித்துக்கொண்டே பார்க்க, அங்கு யாரும் இல்லை. அறையே நிசப்தமாக இருந்தது. அங்கே தொட்டிலில் தனது மகள் விரல் சூப்பி உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது அனைத்தும் அவன் கை மீறிப் போனது என்று.

அன்று அவள் அழுதது இன்னும் அவன் கண் முன்னால் இருக்கிறது. இப்படி ஒரு துரோகத்தை அவளுக்குச் செய்திருக்கக் கூடாது. பதறிய காரியம் சிதறும் என்பார்கள்; அதைத்தான் அன்று அவன் செய்து முடித்தான்.

மூன்று வருடமாகிவிட்டது. அவள் இப்போது யாருக்கோ சொந்தமாகி ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

தான் செய்த பாவத்திற்கு வாழ்க்கையை இழந்து தனிமையில் தவித்துக் கொண்டிருக்கின்றான். முதல் திருமண வாழ்க்கையில் அவன் கண்டது முற்றிலும் ஏமாற்றம், துரோகம் மட்டுமே. இதில் தன் தங்கையும் முதன்மை என்று தெரிந்த பிறகு அவளுடன் பேசுவதை நிறுத்திவிட்டான். போகப் போக நாலு வார்த்தை பேசுவான் அவ்வளவு தான்.

இவ்வளவு வலி இருந்தாலும் அவனும் பருவ வயது உள்ள ஆண்மகன் தானே? அவனுக்கும் ஆசை, சோகம், துக்கம் அனைத்தும் இருக்கும். கருப்புக் கண்ணாடி அணிந்துகொண்டு முகத்தை இறுக்கி வைத்துக்கொண்டு அனைவரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான். ஆனால் அவனுக்கென்று ஒரு மனம் இருக்கிறது. அதற்குள் ஆசை, தாபம், மோகம், காதல், கண்ணீர், துக்கம் அனைத்தும் இருக்கிறது. இதை யார் அறிவார்???

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ஹைதராபாத்….

ஒரு நகரம் எப்பொழுதும் வண்ணமயமாக, புத்துணர்ச்சியாக, கலகலப்பாக இருக்குமா? ஆம் இருக்கும். ஹைதராபாத் நகரம் 24 மணி நேரமும் அப்படித்தான் இருக்கும். சென்னையில் ஒரு குறிப்பிட்ட ஏரியா மட்டும்தான் எப்போதும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும். ஆனால் ஹைதராபாத் அப்படி கிடையாது. அதிகபட்ச ஏரியாக்கள் எப்பொழுதும் கலகலப்பாகவே இருக்கும்…

அங்கே ஒருத்தி தன் அலுவல் வேலை முடிந்த நிம்மதி, திருப்தியாக மூச்சு விட்டு,

“கொடுமை கொடுமை! வொர்க் ஃப்ரம் ஹோம் ரொம்ப மோசம். இதுக்கு டைரக்டா ஆபீஸ்க்குப் போகலாம். சின்னுக்காக வீட்டிலேயே இருந்து வேலை பார்க்கிறதால எவ்வளவு கஷ்டம். சே, அப்பா முடியல! சுப்புமா ஒரு காபி எடுத்துனு ரண்டி”

என்று சொன்னவுடன் 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி ஒரு கப்பில் காபி எடுத்து வந்து அவளிடம் கொடுக்க, அதைக் குடித்து முடித்த பின்,

“இப்பதான் அண்ணி பாக உந்தி. சரி டைம் ஆயிடுச்சு, இனி நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்க போகலாம்”

என்று மாலை 6 மணி நெருங்கியவுடன் வேலைக்கார பெண்மணி அங்கிருந்து சென்றுவிட…

“சின்னு…” என்று அவள் குரல் கொடுத்தவுடன், ஸ்பைடர் மேன் பொம்மையோடு இணைந்து தாவித்தாவி குதித்து ஓடி வந்து அவள் முன் நின்றான் அவளது செல்ல புத்திரன் சின்னு என்கிற ஆத்விக்.

“வாவ்! இன்னைக்கு நீங்க ஸ்பைடர் மேனா? சூப்பர் சூப்பர்! சரி பார்க் போகலாமா??”

என்று கேட்டவுடன் குழந்தை மகிழ்ச்சியாகத் தலையாட்ட, சிறிது நேரத்தில் ரெப்ரெஷ் ஆகி வந்த அகல்யா, உடை மாறி மகனை பேபி கேரி பேகில் மாட்டிக்கொண்டு தான் வசிக்கும் அப்பார்ட்மெண்ட் பின்பக்கம் இருக்கும் பூங்காவில் வாக்கிங் செல்லத் தொடங்கினாள். மகனும் ஏதேதோ பேச, அம்மாவும் மகனும் இருவரும் பேசிக்கொண்டே வாக்கிங் செய்து முடித்த பிறகு சிறிது நேரத்தில் சில வாண்டுகள் வந்துவிட, மகனைப் பேக்கிலிருந்து இறக்கி விட்டவள் அவர்களுடன் குழந்தையோடு குழந்தையாக விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது அவளுக்குப் போன் கால் வர, மகனைத் தூக்கிக்கொண்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து போனை அட்டென்ட் செய்ய,

“பாப்பா நான் தான் அண்ணா பேசுறேன். எப்படிம்மா இருக்க??”

என்று மறுமுனையில் கேட்டவுடன் மகிழ்ச்சியாக,

“எனக்கு என்ன, நல்லா இருக்கேன். ஆபீஸ் வேலை செஞ்சு முடிக்கவே நேரம் போதுமாகிடுது. இவனை வச்சுக்கிட்டு கம்பெனிக்கும் போக முடியாது, அதனால்தான் வொர்க் ஃப்ரம் வாங்கிட்டேன். ஆறு மணிக்குத்தான் வேலை முடிஞ்சுது, அதான் ரிலாக்ஸேஷன்காக நாங்க பார்க் வந்து இருக்கோம். நீங்க எப்படி இருக்கீங்க? அவ எப்படி இருக்கா? மத்த எல்லாரும் எப்படி இருக்காங்க?”

என்று சற்று அழுத்தி கேட்க,

“எல்லாரும் நல்லா இருக்காங்களான்னு கேக்குறியா இல்ல ஆதித்யா நல்லா இருக்காரா என்று கேட்கிறாயா??”

என்று கேட்க,

“அதெல்லாம் ஒன்னும் இல்ல, பொதுப்படையாதான் விசாரிச்சேன். மத்தபடி ஒன்னும் இல்ல. அப்புறம் என்ன அண்ணா, திடீர்னு கால் பண்ணி இருக்கீங்க? என்ன விஷயம்??”

“வேற என்னம்மா? நீ தான் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லி இருக்கே. உனக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்தாச்சு. நீ சொன்ன மாதிரி ஒரு குழந்தைக்குத் தகப்பன்தான். நல்ல குடும்பம், எனக்குத் தெரிஞ்ச ஃபேமிலி. உனக்குப் பிரச்சனையே இல்ல. அன்பான மாமியார், நல்ல நாத்தனார், நல்ல பையன் தான். அவனுக்குப் பெண் குழந்தை. நீ சொன்ன மாதிரியே நீ போட்ட கண்டிஷனுக்கு ஏத்த மாப்பிள்ளை வந்தாச்சு. இப்ப சொல்லு எப்ப கல்யாணம்?”

“இதெல்லாம் என்கிட்ட கேக்கணுமா அண்ணா? ஏற்கனவே பேப்பர் போட்டாச்சு. சென்னைக்கு இன்னும் ஒன் வீக்ல நான் வந்துடுவேன். கல்யாண தேதி எல்லாமே நீங்களே பிக்ஸ் பண்ணுங்க. நான் இப்போதைக்கு மாப்பிள்ளை போட்டோ எதையும் பார்க்க விரும்பல. அவர் குழந்தையை மட்டும் பார்க்க விரும்புகிறேன். நான் அந்த குழந்தைக்கு அம்மாவா மட்டும் தான் இருப்பேன்”

என்று அழுத்திச் சொல்ல, அவனோ சிரித்துக்கொண்டே,

“நீயும் அந்த குழந்தைக்கு அம்மாவாக மட்டும் தான் இருக்கணும், இதுதான் அந்த பையனோட கண்டிஷன்”

என்று அழுத்திச் சொல்ல அவள் சரி என்று மொபைலை கட் செய்து விட்டாள். கணேஷ் போட்ட திட்டம் நிறைவேற வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான். மூன்று வருடம் கழித்துப் பிரிந்த உறவுகளை இணைக்க அவன் படும் பாடு அவனுக்குத் தான் தெரியும்.

💔வலி தொடரும் 💔

You may also like

Leave a Comment

About Me

Featured