அத்தியாயம் 2
"ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்"என்று அனிருத் பாட, அஸ்வினி அனன்யாவுக்கு உணவு ஊட்டிக்கொண்டு இருக்க, ஆதித்யா ஹால் சோபாவில் அமர்ந்து லேப்டாப்பில் வேலை பார்க்க, அன்னலட்சுமி டிவி பார்த்துக் கொண்டிருந்தார். இரவு உணவு வேளை நெருங்கிக்கொண்டிருக்கும் சமயம், வேலைக்கார பெண்மணி அழைத்தவுடன் அனைவரும் டைனிங் டேபிள் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருக்கும் பொழுது கணேஷ் பேச்சை ஆரம்பித்தான்…
“ஆதி, நீ போட்ட கண்டிஷனுக்கு ஒரு பொண்ணு ரெடியா இருக்கா. அவளுக்கு ரெண்டு வயசுல பையன் இருக்கான். பொண்ணு ஹைதராபாத். அம்மா அப்பா யாரும் கிடையாது. புருஷன் ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் இறந்து போனார். அவரோட சொத்து முழுக்க அந்த குழந்தை பேருல இருக்கு.
தனக்கு பாதுகாப்பா ஒரு துணை வேண்டும் என்று அந்த பெண்ணும் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லி இருக்கா. அவ உன்னோட குழந்தைக்கு அம்மாவாக மட்டும்தான் இருப்பாள் அப்படின்னு எனக்கு உறுதி கொடுத்திருக்கா.
அதே மாதிரி நீ அந்த பொண்ணோட குழந்தைக்கு அப்பாவாக மட்டும்தான் இருக்கணும்னு உறுதி கொடுக்கணும். உன்னோட போட்டோ எதையும் பார்க்க விரும்பல. நேரா கல்யாணத்துக்கு வரேன்னு சொல்லி இருக்கா. பொண்ணு எனக்கு ரொம்ப தெரிஞ்ச பொண்ணு, அதனால்தான் நான் சொன்னவுடன் சம்மதம் சொல்லி இருக்கா. வரும் முகூர்த்தத்தில் கல்யாணம் ஏற்பாடு பண்ணலாம்னு இருக்கேன். இதுக்கு மேல நீ தப்பிக்க முடியாது ஆதி”
என்று படபடவென்று பட்டாசு போல் பேச, இத்தனை நாள் கல்யாணம் என்றாலே தாம் தூம் என்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக்கொண்டிருந்த ஆதித்யா, தலையாட்டி சரி என்று சம்மதம் சொல்ல, அன்னலட்சுமிக்கும் அஸ்வினிக்கும் ஏற்கனவே மணப்பெண் யார் என்னவென்று விவரங்கள் மொத்தம் தெரிந்துதான் நிம்மதியாக இருந்தது. ஆனால் திருமண மேடையில் பெண்ணின் முகத்தைப் பார்த்துதான் ஆக வேண்டும், அதன் பிறகு இவன் என்ன செய்யப் போகிறானோ என்று பயம்தான் அவர்களுக்கு…
“அத்தை, பொண்ணுக்குத் தேவையான நகை புடவை எல்லாம் நம்ம வாங்கலாம். பொண்ணு ஐம்பதாயிரம் பணம் கொடுத்திருக்கு. நம்ம ஆதித்யாவுக்கு டிரஸ், நம்ம அனன்யா குட்டிக்கு சாங்கியப்படி மாமியார் உங்களுக்கும் நாத்தனார் இவளுக்கும் டிரஸ்ஸுக்கான எல்லா பணமும் கொடுத்தாச்சு. எல்லாத்தையும் நம்மளையே ஷாப்பிங் பண்ணச் சொல்லிவிட்டாள். அடுத்த வாரம் அவங்க சென்னைக்கு வருவாங்க. கல்யாணம் வரைக்கும் அனன்யா அவ கூடதான் இருக்கணும். அப்படியே இருந்தாலும் கல்யாணத்துக்கு கிட்டத்தட்ட பத்து நாள்தானே இருக்கு? இதுக்கு நீங்க சம்மதம் சொல்லணும்”
என்று கண்டிஷனை சொல்லிவிட,
“நீ கவலைப்படாத, நாங்க ரெண்டு பேரும் எங்க ரெண்டு பசங்களுக்கு பேரண்ட்ஸ் மட்டும்தான். மத்தபடி எங்களுக்குள்ள எந்த ஒரு பாண்டிங்கும் இருக்கப்போறது இல்ல. ஆனா அனு அங்க போற மாதிரி, அவளோட குழந்தை இங்க வரச் சொல்லு. நானும் போட்டோ பார்க்க விரும்பல. நீ வர்ற முகூர்த்தத்தில் மேரேஜுக்கான எல்லா பிராசஸும் பண்ணு”
என்று உணவை முடித்துவிட்டு ஆதித்யா சென்றுவிட, அனைவருக்கும் அப்பொழுதுதான் நிம்மதி மூச்சு.
“எத்தனை பொண்ணுங்களோட போட்டோ வரிசை கட்டி வைத்திருந்தோம்? அப்பெல்லாம் வேண்டாம்னு சொன்னான். ஆனா இவ போட்டோவை நம்ம காட்டினது கூட கிடையாது. ஆனால் விதி பாத்தியா? இவ கிட்டயே இவனைச் சேர்த்து வைக்கிறது. எல்லாம் நான் பெத்த மகராசியால வந்தது. உன்னால பாரு உங்க அண்ணன் என்ன நிலைமைக்கு வந்து இருக்கான்”
என்று வழக்கம்போல் தன் புலம்பலை ஆரம்பிக்க,
“எதுக்கு அத்தை இந்த டிராமா? சொத்து விட்டுப் போகக்கூடாது, அதுக்காகத்தானே உங்க அண்ணன் பசங்க எங்க ரெண்டு பேரையும் உங்க பசங்களுக்குக் கட்டி வச்சீங்க? சின்ன வயசுல இருந்தே என்னோட இவளைச் சேர்த்து வச்சுப் பேசி, இவ மனசுல பேராசையை வளர்த்து வச்சு இவ பண்ண கூத்து மறக்க முடியுமா? அப்போ நீங்களும் தானே கண்மூடி எல்லாத்தையும் நம்புனீங்க?
ஏன் இப்ப வெறப்பா மூஞ்ச வச்சிக்கிட்டுப் போறானே, அவன் மட்டும் யோக்கியம் கிடையாது. எல்லாருமே பாவம் பண்ணி இருக்கீங்க. இப்ப மட்டும் நீங்க இந்த கல்யாணம் நடந்த பிறகு பாவம் போயிடுச்சுன்னு மட்டும் நினைக்காதீங்க. அன்னைக்கு அவள் அழுக, அவ இழந்த இழப்பு அதெல்லாம் சேர்த்து கர்மா ஒரு நாள் உங்களைச் சும்மா விடாது”
என்று சொல்லிவிட்டுத் தன் மகன் அனிருத் மற்றும் அனு இருவரையும் தூக்கிக்கொண்டு தோட்டத்தில் விளையாடச் சென்றுவிட, அம்மாவும் மகளும் ஒருவர் முகம் ஒருவர் பார்க்க மட்டுமே முடிந்தது.
,,,,,,,,,,,,,,,,,,,,,,
“செல்லம் சாப்பிடு கண்ணா, குட் பாய் இல்ல?”
“நானா எனக்குக் கதை சொல்லு”
என்று உணவு உண்ண மறுத்த மகனுக்கு ஒரு கதை சொல்ல ஆரம்பிக்க, சமத்தாகச் சாப்பிட்டுக்கொண்டு சற்று நேரத்தில் உறங்கிவிட,
குழந்தையைத் தோளில் போட்டுத் தட்டிக்கொடுத்து நடந்து வந்து கொண்டிருக்கும் போது, அங்கே புன்னகை முகமாகப் புகைப்படத்தில் இருந்தான் டேவிட். கள்ளம் கபடம் இல்லாத புன்னகை. எவ்வளவு நல்லவன்! இவன் போன்றவன் எதற்காக உலகில் வாழத் தடை செய்யப்படுகிறார்களோ என்று விதியை நினைத்து அவளால் திட்டத்தான் முடிந்தது.
அனைவரும் கைவிட்ட நிலையில் யாரும் கேட்பாரற்று கிடந்த அவளுக்கு உறுதுணையாக இருந்து, கணவனாக நண்பனாக இருந்தவன்; அவளைத் தாய் எனும் ஸ்தானத்திற்கு அழைத்து வந்து இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டிருந்தவன்; திடீரென்று தன்னை விட்டுச் செல்வானா? எதிர்பாராத அவரது மரணத்தை இன்னும் அவளால் யூகிக்க முடியவில்லை. அவன் புகைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் மட்டும்தான் வடிக்க முடிந்தது அவளால்.
“எதுக்குடா என்னை விட்டுப் போன? இதுக்கு நான் தனியாவே இருந்திருக்கலாமே. என்னைக் கல்யாணம் பண்ணி எனக்குச் சந்தோஷத்தை மட்டும் கொடுத்து, இதோ ஆத்விக் உன்ன மாதிரி இருக்கான். சந்தோஷத்தை மட்டுமே பார்த்த எனக்கு உன்னோட மரணம் சத்தியமா தாங்க முடியல டேவிட்.
நீ என்னை விட்டுப் போயிருக்கக் கூடாது. ரொம்ப தப்பு பண்ணிட்ட. உனக்குத் தெரியுமா? இன்னும் பத்து நாள் கழிச்சு எனக்கு இன்னொரு கல்யாணம் நடக்கப் போகுது. இப்ப இருக்குற சூழ்நிலையில் ஆத்விக் குட்டிக்கு ஒரு அப்பா வேணும், அதுக்காக மட்டும் தான் இந்த கல்யாணம். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் சரி, ஏன் ரொம்ப வருஷமா காதலிச்சு என்னை நடுத்தெருவில் விட்டுட்டுப் போனானே அந்தப் பொறுக்கி கூட இப்ப என் மனசுல இல்ல. நீ, நீ மட்டும் தான் இருக்க. உன்னை என்னால் மறக்கவே முடியல. லவ் யூ சோ மச்”
என்று அவனைப் பார்த்துக் கண்ணீர் மட்டும்தான் விட முடிந்தது. ஆனால் அவள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமே என்பதற்காகவே வாழ்ந்து மடிந்து போனான் அவளது டேவிட்.
,,,,,,,,,,,,,,,,,,,
“பச்… ரோஹித், வீட்ல அரிசி பருப்பு எதுவுமே இல்லை. எல்லாமே காலி ஆயிடுச்சு” என்று லாவண்யா புலம்பிக் கொண்டிருக்க,
“உன்னோடு இதே வேலையா போச்சு. சூப்பர் மார்க்கெட்ல ஆர்டர் பண்ணிட்டேன். நீ எதையும் தெரிஞ்சிக்காம அரைகுறையா ஆட்டம் போடக்கூடாது. ஆமா இன்னைக்கு பப் போறியா? பார்ட்டி போறியா?”
“எங்கேயும் போகல. நீ எங்கேயும் ஊர் பொறுக்காம வீடு வந்து சேரு”
என்று இருவரும் சத்தமாகப் பேசிக் கொண்டிருக்க, பக்கத்தில் இருக்கும் ஒரு பெண்மணி தன் வீட்டிற்கு வந்த சக தோழியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது இவர்கள் உரையாடல் நன்றாகக் கேட்டுவிட,
“யார் இவங்க? பப்பு, பார்ட்டி அப்படின்னு பேசிகிட்டு இருக்காங்க?”
“அதை ஏன் கேக்குற? இந்த பொண்ணு நம்பர் ஒன் ஓடுகாலி. இந்த பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தை கூட இருக்கு. பச்சைக் குழந்தையை விட்டுட்டு இவன் கூட வந்து வாழ்ந்துகிட்டு இருக்கா. குழந்தைக்கு ஒரு வயசு கூட ஆகல, அதுக்குள்ள இன்னொருத்தனோட சுகம் தேடி ஓடி வந்துட்டா.
ரொம்ப மோசம். பாவம், பச்சைப் பிள்ளையை விட்டு வந்திருக்காளே இவளெல்லாம் நல்லாவா இருப்பா?”
“அதான் இருக்காளே, தினமும் வெளியே போய் பொறுக்கிட்டு வராங்க பொறுக்கிங்க”
என்று பக்கத்து வீட்டில் இருக்கும் லாவண்யா மற்றும் ரோகித் இருவருக்கும் பச்சை பச்சையாக அர்ச்சனை செய்து கொண்டு இருந்தார்கள் அந்தப் பெண்மணிகள்.
,,,,,,,,,,,,,,,,
“கணேஷ் ப்ளீஸ் கணேஷ்… வலிக்குது என்னால முடியல. ஏன் இப்படி நடந்துக்குற??”
என்று தன் கணவனின் ஆக்ரோஷமான புணர்தலுக்கு வலி தாங்க முடியாமல் அஸ்வினி கதற, அவள் கழுத்தைப் பிடித்து இன்னும் வக்கிரமாக அவளை நெருங்கி,
“நீ என்கிட்ட இந்த சுகத்துக்கு ஆசைப்பட்டு தான் இவ்வளவு தப்பு பண்ண. உன்னால ஒரு உயிர் போச்சு. ஒரு பொண்ணு வாழ்க்கையே வெறுத்து இந்த ஊரை விட்டுப் போயிருக்கா. அதுக்கெல்லாம் காரணம் நீ. இந்த மாதிரி என் கூட சுகத்தை அனுபவிக்கத் தானே? அதுதான் நாலு வருஷமா அனுபவிச்சுக்கிட்டு இருக்கே. இப்ப என்ன வலிக்குது தவிக்குதுன்னு சொல்லிட்டு இருக்க? எனக்கு எப்ப வேண்டுமோ அப்பொழுது நீ என் கூட படுத்து தான் ஆகணும். அட்ஜஸ்ட் பண்ணிக்கோ”
என்று வக்கிரமாக மொழிந்துவிட்டு அவளை விட்டு விலகி, குளியல் அறைக்குச் சென்று குளித்து முடித்து வேறுடை மாற்றித் தன் மகனோடு உறங்கிவிட்டான்.
இங்கே அவன் கொடுத்த காயங்களைத் தாங்கி உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தாள் அவள்…
💔 வலி தொடரும் 💔