அத்தியாயம் 4
சென்னையில் இருந்து கிளம்பிய அந்த ஆம்புலன்ஸ் வாகனம் செண்பகநல்லூர் கிராமத்தின் எல்லையைத் தொட்டபோது, ஊரே மயான அமைதியில் உறைந்திருந்தது. ஊர் எல்லைப் பிள்ளையார் கோவிலைத் தாண்டியதும், தூரத்தில் தெரிந்த அந்தச் செண்பகக் கோட்டை மாளிகையின் உச்சாணிக் கோபுரம் ரோஜாவின் கண்களில் பட்டது. அவளது அப்பா அடிக்கடி வர்ணிக்கும் அதே கோபுரம்… ஆனால் இன்று அதைச் சுற்றி ஒரு கறுப்பு நிழல் படர்ந்திருப்பது போல் அவளுக்குத் தோன்றியது.
ஆம்புலன்ஸ் மாளிகையின் முகப்பில் வந்து நின்றதும், அங்கிருந்த நிசப்தம் சுக்குநூறாக உடைந்தது. வாசலில் நின்றிருந்த தெய்வானை, தன் தம்பி சங்கரின் உடலைப் பார்த்ததும் அப்படியே தரையில் விழுந்து புரண்டு அழத் தொடங்கினார்.
“ஐயோ… என் தம்பி சங்கரு! பெத்த ஆத்தாவையும் அப்பாவையும் பார்க்காமப் போனாலும், இந்த அக்கா முகத்தைப் பார்க்கவாவது ஒரு தரம் உயிரோட வந்திருக்கக் கூடாதாடா? பெத்த வயித்துல நெருப்பை அள்ளிப் போட்டுட்டு இப்படிப் போயிட்டியேடா பாவி!” என்று அவர் வைத்த ஒப்பாரிச் சத்தம் அந்தப் பெரிய மாளிகையின் ஒவ்வொரு சுவரிலும் மோதி எதிரொலித்தது.
கௌரி ஓடி வந்து தன் தாய்மாமனின் சடலத்தைப் பிடித்துக் கொண்டு விம்மி விம்மி அழுதாள். “மாமா… நீங்க இல்லைன்னா நாங்க எப்போவோ அனாதையாகி இருப்போம். எங்களுக்காகப் பார்த்துப் பார்த்துப் பண்ணுனீங்களே… இப்போ இப்படிப் பேச்சில்லாம கிடக்குறீங்களே!” என்று அவள் அழுதது அங்கிருந்தவர்களின் நெஞ்சைப் பிழிந்தது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரமூர்த்திக்கு அழுகையை அடக்க முடியவில்லை. அவருக்கும் சங்கருக்கும் இடையில் வயது வித்தியாசம் குறைவு என்பதால், அவர்கள் இருவரும் தாய்மாமன் மருமகன் என்பதை விடச் சிறந்த நண்பர்களாக வளர்ந்தவர்கள். சங்கர் ஊரை விட்டுப் போகும்போது சுந்தரமூர்த்தி தான் ரகசியமாகச் சில உதவிகளைச் செய்திருந்தார். இன்று தன் உயிர் நண்பன் சடலமாகக் கிடப்பதைப் பார்த்ததும், “சங்கரு… என்னை மட்டும் தனியா விட்டுட்டுப் போயிட்டியேடா” என்று அவர் சத்தமில்லாமல் கண்ணீர் சிந்தினார்.
யமுனாவும், காயத்ரியும் அமுதாவின் உடலைப் பிடித்துக்கொண்டு அழுதனர். “அந்த ஊர்ல யாருமே இல்லாமத் தவிச்சீங்களே அமுதா அக்கா… இப்போ இப்படி ஊரே கூடி நிக்கும்போது நீங்க இல்லாமப் போயிட்டீங்களே!” என்று யமுனா புலம்பினார்.
சக்திவேலும் தேவராஜும் ரோஜாவை மெல்லத் தாங்கிப் பிடித்துக் கொண்டனர். அந்த மாளிகையின் நடுவே வைக்கப்பட்டிருந்த அந்த இரண்டு சடலங்களுக்கு முன்னால், ரோஜா ஒரு உடைந்த சிலையைப் போல அமர்ந்திருந்தாள். அவளுக்கு யாரைத் தெரியும்? யார் உறவு, யார் பகை என்று தெரியாத அந்தப் புது உலகில், தன் அப்பாவின் உடலைப் பார்த்துக் கதறும் இந்த மனிதர்களைப் பார்க்கும்போது அவளுக்குள் ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்பட்டது.
அப்போதுதான் கூட்டத்தைப் பிளந்து கொண்டு அந்தச் சிங்கம் உள்ளே வந்தது.
வேட்டியை மடிச்சுக்கட்டி, இறுகிய முகத்தோடு வந்த ராஜன், நேராகச் சங்கரின் சடலத்தின் முன்னால் வந்து நின்றான். சுற்றியிருந்த அழுகைச் சத்தம் அவனது வருகையாலேயே சற்றுத் தணிந்தது. ராஜன் குனிந்து தன் மாமனின் முகத்தைப் பார்த்தான். வன்மம் ஒரு பக்கம் இருந்தாலும், அந்த முகத்தில் தெரிந்த அமைதி அவனுக்குள் ஒரு பாரத்தை உண்டாக்கியது.
சரியாக அந்த நேரம், கூட்டத்தில் இருந்த சில பங்காளி உறவுகள் முணுமுணுத்தனர். “என்னதான் இருந்தாலும் ராஜன்… ஊரை விட்டுப் போனவனுக்கு எதுக்கு இவ்வளவு மரியாதை? இவனைப் போய் மாளிகைக்குள்ள கொண்டு வந்திருக்கக் கூடாது” என்று ஒருவன் சொல்ல, ராஜன் மெல்லத் திரும்பிப் பார்த்தான்.
அவன் கண்கள் சிவந்திருந்தன. “யாரடா அது? கௌரவம் பேசுறதுக்கு இது நேரமில்ல. என் அக்காவுக்கு இவன் துரோகம் செஞ்சிருக்கலாம், ஆனா இந்த மண்ணுக்கு இவன் ஒரு வாரிசு. செண்பகக் கோட்டைப் பாரம்பரியப்படி ஒரு உயிருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை நான் கொடுப்பேன். அதுல எவனாவது குறுக்கே வந்தா, அவனுக்குச் சுடுகாட்டுல தான் இடம்!” என்று அவன் கர்ஜிக்க, அந்த இடமே அமைதியானது.
ராஜன் மெல்லத் திரும்பி ரோஜாவைப் பார்த்தான். அவளது கண்கள் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன. அந்தப் பார்வையில் ஒரு கேள்வி இருந்தது, ஒரு தவிப்பு இருந்தது. ராஜன் அந்தப் பார்வையைச் சந்திக்க முடியாமல் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
“தேவராஜ்! சக்திவேல்! எல்லா ஏற்பாடுகளையும் கவனிங்க. அக்கா… அழுதது போதும், அந்தப் பொண்ணு ரோஜாவை உள்ள அழைச்சுட்டுப் போய் கொஞ்சம் தண்ணி கொடுங்க. அவ பயந்து போயிருக்கா” என்று ராஜன் சொன்னபோது, அவனது குரலில் ஒரு மென்மையான அக்கறை முதல்முறையாக வெளிப்பட்டது.
அன்று மாலை, செண்பகநல்லூர் கிராமமே திரண்டு நிற்க, சங்கரும் அமுதாவும் அந்தத் தோட்டத்து மண்ணிலேயே ஒருவரையொருவர் பிரியாமல் அடக்கம் செய்யப்பட்டனர். எல்லாம் முடிந்த பிறகு, அந்தப் பெரிய தோட்டத்து வீட்டின் வாசலில் ரோஜா மட்டும் தனியாக அமர்ந்திருந்தாள். ராஜன் தூரத்தில் நின்று அந்த வீட்டின் விளக்கைப் பார்த்தபடி ஒரு பெருமூச்சு விட்டான். “பகை தீர்ந்ததா… இல்ல புதுசா ஆரம்பிக்குதா?” என்பது அவனுக்கே தெரியவில்லை.
ஆனால் அவன் மனதில் ஒன்று மட்டும் சொல்லிக் கொண்டான்
‘நீ இந்த மண்ணை மிதிச்சி இருக்க கூடாது ரோஜா!!’
என்று.
.
சங்கர் மற்றும் அமுதாவின் மறைவுக்குப் பிந்தைய சடங்குகள் செண்பகநல்லூர் வழக்கப்படி குறையேதுமில்லாமல் நடந்தேறின. ஊர் வழக்கப்படி, ஒரு நாள் பங்காளிகள் சார்பாக ‘பச்சைத் தண்ணி’ ஊற்றப்பட்டது, மறுநாள் தாய்மாமன் முறையுள்ளவர்கள் விருந்து வைத்தனர். இன்று 16-வது நாள் காரியம். செண்பகநல்லூர் தோட்டத்து வீடே ஜனங்களால் நிறைந்திருந்தது.
பெரிய கிடா வெட்டி, ஊருக்கே கறி விருந்து போடும் ஏற்பாடுகளைச் செண்பகக் கோட்டை மாளிகை முன்னின்று நடத்தியது. ராஜன் ஒரு பக்கம் அதிகாரமாக வேலைகளைப் பிரித்துக் கொடுத்துக் கொண்டிருக்க, மறுபக்கம் சுந்தரமூர்த்தியும் தேவராஜும் பந்தியில் ஆட்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.
வீட்டின் உள்ளே, கௌரியும் யமுனாவும் ரோஜாவைக் கவனித்துக் கொண்டனர். “ரோஜா, இன்னைக்கு நீ எதுவும் வேலை செய்யக்கூடாது. அம்மா அப்பாவோட ஆத்மா சாந்தியடையணும்னா நீ மனசாரச் சாப்பிடணும்” என்று கௌரி சொல்ல, ரோஜாவின் கண்களில் கண்ணீர் முட்டியது.
தனது அப்பாவுக்காகவும் அம்மாவுக்காகவும் இந்த ஊரே திரண்டு நின்று அஞ்சலி செலுத்துவதைப் பார்க்கும்போது அவளுக்கு வியப்பாக இருந்தது. அதைவிட, எல்லாவற்றையும் ஒற்றை ஆளாக நின்று கவனிக்கும் அந்த ‘ராஜன்’… அவன் மீது அவளுக்கு ஒரு விதமான பயமும், அதே சமயம் இனம் புரியாத மரியாதையும் ஏற்பட்டது. அவளுக்கு அவன் சித்தப்பா முறையல்ல, தூரத்துச் சொந்தம் என்றாலும் அவன் காட்டும் அந்த ‘கெத்து’ அவளை ஈர்த்தது.
மதிய நேரம்… பந்தியில் கூட்டம் அலைமோதியது. ராஜன் வேட்டியை மடிச்சுக்கட்டி, கையில் ஒரு அகப்பையோடு தானே இறங்கிப் பரிமாறத் தொடங்கினான். அவன் பரிமாறினால் யாரும் மறுபேச்சு பேச மாட்டார்கள்.
சாப்பிட்டு முடித்த பின், பந்தியின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்த ஊர் பெரியவர் ஒருவர், “என்னதான் இருந்தாலும் ராஜன்… அந்தப் பொண்ணு இனிமே எங்கே போகும்? மெட்ராஸ்ல சொத்து சுகம் இருந்தாலும், ஒரு பொம்பளப் பிள்ளை தனியா அங்க இருக்க முடியுமா? இங்கேயே ஏதாவது ஒரு நல்ல வரனைப் பார்த்து முடிச்சுப் போட்டா என்ன?” என்று கேட்க, ராஜனின் கை ஒரு நொடி நின்றது.
அவன் நிமிர்ந்து, வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த ரோஜாவைப் பார்த்தான். அவள் வெள்ளை நிறச் சேலையில், சோகம் அப்பிய முகத்தோடு தேவதை போல அமர்ந்திருந்தாள். அவளது கண்கள் ராஜனின் கண்களை நேருக்கு நேர் சந்தித்தன. அந்தப் பார்வையில் ஒரு துணிச்சலும், அதே சமயம் ஒரு தவிப்பும் இருந்தது.
“பெரியவரே… அந்தப் பொண்ணு எங்கே இருக்கணும்னு அவதான் முடிவு பண்ணணும். ஆனா, செண்பகக் கோட்டை வாரிசு ஒன்னு அனாதையா மெட்ராஸ்ல கிடக்க நான் விடமாட்டேன்” என்று ராஜன் அழுத்தமாகச் சொன்னான்.
மாலை நேரம்… காரியம் முடிந்து கூட்டம் கலைந்தது. ரோஜா அந்தப் பழைய தோட்டத்து வீட்டின் வாசலில் அமர்ந்து அஸ்தமிக்கும் சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கே வந்தான் ராஜன். அவனது நிழல் அவள் மீது விழுந்தது.
“ரோஜா!” – அவன் முதல்முறையாக அவளைப் பெயர் சொல்லி அழைத்தான். அவனது குரலில் அந்த பழைய வன்மம் சற்று குறைந்திருப்பது போல் அவளுக்குத் தோன்றியது.
ரோஜா மெல்ல எழுந்தாள். “சொல்லுங்க… ராஜன்” – அவள் அவனை உறவு முறை சொல்லி அழைக்காமல், அவன் பெயரையே ஒருவித மரியாதையோடு சொன்னாள்.
ராஜன் அவளை நெருங்கி வந்தான். “இன்னைக்கோட காரியம் எல்லாம் முடிஞ்சது. இனிமே நீ என்ன பண்ணப்போற? மெட்ராஸ்க்குத் திரும்பிப் போற ஐடியாவா, இல்ல இங்கேயே தங்குற எண்ணமா?”
ரோஜா அவனைத் தீர்க்கமாகப் பார்த்தாள். “என் அப்பா இந்த மண்ணை நேசிச்சாரு. அவருக்கு இங்கே ஒரு அங்கீகாரம் கிடைக்கணும்னு தான் நான் அவரை இங்க அழைச்சுட்டு வந்தேன். இப்போ அவருக்கு அது கிடைச்சுடுச்சு. எனக்கும் இந்த மண் பிடிச்சிருக்கு. ஆனா…” என்று இழுத்தாள்.
“ஆனா என்ன?” – ராஜனின் புருவங்கள் உயர்ந்தன.
“ஆனா இங்க சில பேரோட மனசுல இன்னும் பகை இருக்கு. அந்தப் பகை மறையுற வரைக்கும் நான் இங்க இருக்கிறது சரியான்னு தெரியல” என்றாள் ரோஜா.
ராஜன் ஒரு கசப்பான புன்னகையைச் சிந்தினான். “பகை அவ்வளவு சீக்கிரம் மறையாது ரோஜா. ஆனா, ஒரு விஷயம் ஞாபகம் வச்சுக்கோ… உன்னை இந்த ஊர்ல எவனாவது தப்பாப் பார்த்தாலோ, இல்ல உனக்கு ஒரு கஷ்டம்னாவோ, முதல்ல வந்து நிக்கிறது இந்த ராஜனா தான் இருக்கும். அது உறவுக்காக இல்ல… என் ரத்தத்துக்காக!”
அவன் சொல்லிவிட்டு விறுவிறுவெனத் தன் எஸ்.யூ.வி காரை நோக்கி நடந்தான். ரோஜா அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தப் பாறையான மனிதனுக்குள் ஒரு நீரூற்று இருப்பதை அவள் இன்று கண்டுகொண்டாள். அந்தப் பகைக்கு நடுவே ஒரு மெல்லிய காதல் அரும்பு அங்கே துளிர்விடத் தொடங்கியது.