
அந்த பிரம்மாண்டமான திருமண மண்டபத்தில் ஆடல்கள் பாடல்கள் என்று கலகலப்பாக இருந்தது . இளவயது உள்ளவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து அதற்கு ஏற்றவாறு அலங்காரம் செய்து கொண்டு அங்கும் இங்கும் உலவிக்கொண்டிருந்தனர் . ஆண்கள் பெண்கள் பக்கமும் பெண்கள் ஆண்கள் பக்கம் தனது பார்வையால் பேசிக் கொண்டிருந்தனர் .
சில காதல் ஜோடிகள் தங்களது இணையோடு ரகசிய மொழியில் கவிகள் பேசிக் கொண்டிருந்தனர் . சிலர் அங்கும் இங்கும் ஓடியாடி முகூர்த்திற்கு தேவையான அனைத்து விடயங்களையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தனர் .
மண்டபத்தின் வாயிலில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பெயர் பலகையில்
சிவா வெட்ஸ் ஷர்வானி
என்று அலங்கரிக்கப்பட்டிருந்தது .
அந்தப் பெயர் பலகையை பார்த்த ஒருவர் “இவங்களோட பெயர் பொருத்தம் ரொம்ப அழகா இருக்குல சிவனோட பெயர்!
ஷர்வாணி என்பது அந்தப் பார்வதி தேவியோடு பெயர் சிவனும் பார்வதியும் மாதிரி ஓருடல் ஈருயிராய் இவங்க ரெண்டு பேரும் இருக்கணும்னு நான் நினைக்கிறேன்..” என்று அந்த திருமணத்திற்கு வந்த ஒருவர் அங்குள்ள அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் .
பெயர் பொருத்தம் எல்லாம் இருக்கு தான் . வாழ்க்கையில இவங்க ரெண்டு பேரும் பொருந்துவாங்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கணும் .
மணமகன் அறையில் ஆறடிக்கு குறையாமல் பட்டு வேஷ்டி பட்டு சட்டையில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான் சிவா என்ற பெயருக்கு சொந்தக்காரன் .
பட்டு வேஷ்டி ஃபர்ஸ்ட் சட்டையில் ட்ரிம் செய்யப்பட்ட தாடி கூர் நாசி நேர்த்தி செய்யப்படாமலேயே நீண்டிருந்த புருவங்கள்,
இறுக்கத்தையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் கண்கள் சிரிப்பை மறந்து சிவந்து தடித்த இதழ்கள் அவனது வெள்ளை நிற மேனிக்கு தங்கத்தில் கையில் போடப்பட்டிருந்த காப்பு அவ்வளவு எடுப்பாக இருந்தது .
இதுபோக கழுத்தில் எஸ் என்ற பெயரோடு தொங்கிக் கொண்டிருக்கும் தங்க சங்கிலி சட்டையின் இரண்டு பட்டன்களை தாண்டி பார்ப்பவரின் கண்களை உறுத்திக் கொண்டிருக்கும் .
சட்டையின் இறுக்கத்தை தாண்டி எந்நேரமும் திமிரி கொண்டிருக்கும் புஜங்கள் அவன் அனுதினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் உடையவன் என்பதை நிரூபித்தன.
ஒரே லைன் ல சொல்லணும்னா
ஆறடியில் அம்சமா அழகா இருப்பான் அவ்வளவு தான் .
27 பிராயம் மிக்க தக்கவன் என்பதை பார்த்த மாத்திரத்தில் யாராக இருந்தாலும் கணித்து விடுவர் . அவனைப் பொறுத்தவரை வாழ்வில் எந்த ஒரு சொந்தத்திற்கும் பாசத்தினால் அடிமையாகி விடக்கூடாது .
அவ்வாறு ஆகிவிட்டால் அவர்கள் பிரிந்து செல்லும்போது அதன் வலியை அவனால் தாங்கிக் கொள்ள இயலாது என்று அனைவரிடத்திலும் ஒதுங்கியே வாழும் தன்மை கொண்டவன் .
அதற்கு காரணங்களும் நிறைய உண்டு அவன் வாழ்வில் சந்தித்த சோகமான பக்கங்களை அவன் மறுபடியும் திருப்ப இயலாத காரணத்தினால் இவ்வாறு உலவி கொண்டிருந்தான் .
சிவில் இன்ஜினியரிங் முடித்தவன் . சொந்தமாக ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வைத்து நடத்திக் கொண்டிருக்கிறான். வாழ்வில் பல இடர்பாடுகளை தாண்டி இந்த நிலைக்கு வந்தவன் என்று கூட கூறலாம் . எந்த ஒரு நபரின் பாசத்திற்கும் தான் அடிமையாகி விடக்கூடாது என்பதனாலே அவனுடைய நட்பு வட்டமும் சிறிதாகி இருந்தது . அவனது உயிர் தோழன் என்று ஒருவன் மட்டுமே . மகேஷ் அவனது பால்ய நண்பன் ஆவான் . சிறு வயது முதலேயே அவனது சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொண்ட ஒரு நபர் . அவனைப் பற்றி ஆதி முதல் அந்த வரை அறிந்து கொண்டவன் .
சிவாவை பொறுத்தவரை அவனுக்கு இந்த திருமணத்தில் அவ்வளவு பிடிப்பில்லை என்பது தான் நிதர்சனம் .
அவனது தாயின் கட்டாயத்தின் பேரில் இந்த திருமணம் நடைபெறுகிறது . தொழிலில் மற்றவர்களுக்கு முன்னோடியாக இருப்பவன் . காதல் பாசம் அன்பு இதன் மீது எந்தவித நம்பிக்கையும் இன்றி தான் உண்டு தனது வேலை உண்டு என்று மட்டுமே உலவிக் கொண்டிருந்தால் அதற்கு காரணம் ஒரு உறவு செய்த பிரிவு தான் .
சிவாவின் தந்தை சிறுவயதிலேயே அவனது தாயையும் விட்டுவிட்டு வேறொரு பெண்ணோடு திருமணம் செய்து கொண்டார் . இத்தனைக்கும் சிவாவின் அம்மாவும் அவரது அப்பாவும் காதல் திருமணம் என்பதால் அவர்களுக்கு இடையே புரிதலும் பாசம் அன்பு காதல் என அனைத்துமே அதிக அளவில் இருந்தாலும் காலப்போக்கில் அனைத்தும் குறைந்து போயின . அவன் அப்பா ஒரு நாள் ஒரு பெண்ணுடன் திருமணம் முடித்து தனது மனைவி மகன் என்று கூட பார்க்காமல் நடுரோட்டில் விரட்டி விட்டார் .
அவர் சம்பாதித்த சொத்து முழுவதும் தன்னுடையது என்று அதில் ஒரு பைசா கூட உங்களுக்கு தர மாட்டேன் என்று கூறி அவர்களை வீட்டை விட்டு விரட்டி விட்டார் . தனது பெற்ற மகன் எவ்வளவு கெஞ்சியும் கூட அவரது மனம் இறங்கவில்லை போலும் .
தாயும் மகனும் வீட்டை விட்டு வெளியேறும் போது அவன் வயது 5 .
தனது தந்தை ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார் அதன் காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கு அவனுக்கு அவ்வளவு வயதில்லை என்று தான் கூற வேண்டும் .
அதன் பிறகு தாய் ஜெயா தான் படித்திருந்த கல்வி மூலம் வேலைக்கு சென்று சிவாவையும் நன்றாக படிக்க வைத்தார் .
அவனும் தனது தாயின் கஷ்டத்தை உணர்ந்து நன்றாக படித்து நல்ல வேலையில் சேர்ந்தான் . காலப்போக்கில் சொந்தமாக ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஆரம்பிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டான் .
என்னதான் தாய் கூறுவது அனைத்தையும் கேட்டாலும் கல்யாணம் என்ற ஒரு விடயத்தில் மட்டும் அவனது மனம் தனது தந்தையின் செயலையே நினைவூட்டியது .
என்றேனும் ஒரு நாள் பிரிய போகும் ஒரு உறவிற்காக நம் உடலையும் உயிரையும் வருத்திக் கொள்ளக்கூடாது என்று முடிவெடுத்தான் அவன் .
அதற்குக் காரணம் அவனது தந்தையால் தான் தாய் எத்தனையோ இரவுகளில் தூக்கமற்ற விழிகளையும் எங்கோ வெறித்துக் கொண்டிருக்கும் பார்வையையும் கண்டு பயந்திருக்கிறான் . காதல் ஒரு மனிதரை இந்த அளவிற்கு சித்திரவதை செய்யுமா என்பதை அறியா வயதிலும் அறிந்து இருக்கிறான் என்று தான் கூற வேண்டும் .
ஜெயாவின் சொந்த வீட்டில் நல்ல வசதி என்பதால் செல்ல பெண்ணாக வளர்க்கப்பட்டார் .
கல்லூரி காலங்களில் சூரியமூர்த்தியை கண்டு அவருடன் நட்பு கொண்ட நாளடைவில் அது காதலாக உருமாறியது .
தனது காதலை வீட்டில் கூறவே அவர்கள் மறுக்கவும் வீட்டை விட்டு வெளியேறி தனது மணாளனை கைப்பற்றிக் கொண்டாள் ஜெயா .
தனது தந்தையின் நிராகரிப்பு மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்தது .
காதல் மீதும்
மற்ற உறவுகள் அனைத்தின் மீதும் அளவில்லாத வெறுப்பை உண்டாக்கியது என்று தான் கூற வேண்டும் . தனது ஒட்டுமொத்த கவனத்தையும் படிப்பின் மீதும் தொழிலின் மீதும் செலுத்தி சமுதாயத்தில் ஒரு நல்ல நிலைக்கு வந்தான் .
திருமணம் பற்றி தாய் கூறும் போதெல்லாம் அதைப்பற்றி எதுவும் கவனத்தில் கொள்ளாது தான் உண்டு தனது வேலை உண்டு என்று உலவி கொண்டிருந்தான் . கிட்டத்தட்ட இரு வருட காலமாக திருமணம் பேச்சு அடிபட்டு இன்று சம்மதிக்காக வேண்டும் என்ற நிலையில் தள்ளப்பட்டிருந்தான் .
நீ திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நிச்சயம் தான் உன்னுடன் தங்காமல் வீட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று ஜெயா செய்த எமோஷனல் பிளாக் மெயிலின் பேரில் இந்த திருமணத்திற்கு வேறு வழி இன்றி ஒப்புக்கொண்டான் .
திருமணம் நிச்சயக்கப்பட்ட தேதியிலிருந்து இன்று வரை மணமகளிடம் அவன் பேசவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒரு விடயம் . சிவாவின் நண்பனான மகேஷ் அவனை காண்பதற்காக உனது அறைக்கு வந்தான் .
” கங்கிராட்ஸ் மச்சான் இன்னைக்கு உனக்கு கல்யாணம் . இனிமே சிங்கிள்ஸ் லைஃப் ன்றது நினைச்சு கூட பாக்க முடியாது .
இன்னையிலிருந்து நீ குடும்பஸ்தன் ஆகிடுவ….
பொறுப்பு அதிகம் ஆகிக்கொண்டே இருக்கும் .
ஆமா ஏன்டா ட்ரெஸ்ஸ ஒழுங்கா பண்ணாம அங்கயும் இங்கயும் நடந்துக்கிட்டே இருக்க….
இந்நேரம் அழகா டிரஸ் பண்ணி கண்ணாடி முன்னாடி நின்னு செல்பி எடுக்க வேணாமா….
மாப்பிள்ளை ரெடி பொண்ணு ரெடியா….?
னு ஸ்டேட்டஸ் போட்டு இருக்கனும் டா…..
மாப்பிள இப்படியா இருக்கிறது….”
என்று அவனது சட்டையை சரி செய்தான் மகேஷ் .
தன்னை பற்றி முழுதாக தெரிந்த ஆத்மார்த்தமான நண்பனே தன்னை இவ்வாறு கலாய்ப்பது என்பது அவனால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது .
மகேஷிற்கு சிவாவிற்கு இந்த கல்யாணத்தில் அவ்வளவு விருப்பமில்லை என்பதும் , அவனது தாயின் கட்டாயத்தின் பேரில் இதை செய்து கொள்கிறான் என்பதும் தெரிந்த விடயம் தான் . ஆயினும் அவனது மனப்போக்கை மாற்ற வேண்டும் . இந்த மஞ்ச கயிறு மேஜிக் எப்படி ஆச்சும் வொர்க் ஆகனும் என்று அவ்வப்போது கடவுளிடம் வேண்டிக் கொண்டு இருந்தான் .
சிவாவை சரி செய்த மகேஷ் அனைத்தும் சரியாக அணிந்து இருக்கிறானா என்று ஒரு முறை பார்த்துக் கொண்டான் .
பட்டு வேஷ்டி பட்டு சட்டை கையில வாட்ச் வலது கையில் ஒரு வெள்ளி பிரேஸ்லெட் கழுத்து மெல்லிய S என்று பொறிக்கப்பட்ட தங்க சங்கிலி என அனைத்தும் பக்காவாக இருந்தது .
அவனது கேசம் காற்றில் அலைபாயும்போது எல்லாம் அவன் விரல்களால் கோதிடும் அழகு என்றுமே ஈடில்லாதது என்பதை மகேஷும் அடிக்கடி கவனித்திருக்கிறான் .
அந்த அறையில் உள்ள மின்விசிறியின் தாக்கத்தால் அவனது கேசம் அலைபாய்ந்தது . தனது விரல்களால் அந்த கேசத்தை சரி செய்தவாறு கண்ணாடியின் முன்பு நின்று தலையை சரிவர வாரிக் கொண்டான் சிவா .
“மச்சான் நீ அழகன் தான் டா . அந்த காத்துல ஆடுற முடிய நீ கோதும் போதும் இன்னும் இன்னும் பேரழகனா தெரிகிற டா …… “
மகேஷ் எத்தனையோ முறை இந்த விடயத்தை பற்றி பேசி இருக்கிறான் .
“டேய் டேய் போதும்டா எப்ப பாத்தாலும் இந்த விஷயத்தை பற்றியே பேசிட்டு இருக்க வேண்டியது . எப்படியாச்சும் இந்த கல்யாணத்தை நிப்பாட்டனும் . வாழ்க்கையில எந்தவித கமிட்மெண்ட்ஸ் இல்லாமல் நான் சந்தோஷமா இருக்கணும் .
எங்க அம்மாவையே சந்தோசமா கடைசி காலம் வரைக்கும் நான் பாத்துக்கணும் னு நினைக்கிறேன் .
குருவிக்கூடு மாதிரி இருக்க எங்க வாழ்க்கையில இந்த கல்யாணம் ஒரு கல் மாதிரி இருக்குடா .
எப்படியாவது நான் இங்கே இருந்து தப்பிச்சிடலாம்னு இருக்கேன் .
நீ என்ன டா சொல்ற .
எனக்கு இந்த கல்யாணம் புடிக்கலன்னு லெட்டர் எழுதி வைத்துவிட்டு ஓடிப்போய்டவா….
அப்ப இந்த கல்யாணம் நிக்கும்….
அப்படியும் இல்லன்னா எனக்கு பார்த்திருக்கிற பொண்ணுக்கு உன்னை கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க எப்படி என் ஐடியா…..”
என்று வில்லத்தனமாக சிரித்தான் சிவா .
இவனது பேச்சைக் கேட்டு அதிர்ந்த மகேஷ் “டேய் டேய் லூசு மாதிரி பேசாதடா . ஹான் என்னமோ சொன்னியே லெட்டர் எழுதி வச்சிட்டு ஓடிப் போயிடுவேன்னு சொன்னியே….
நீ எங்க ஓடிப் போனாலும் உனக்கு பார்த்திருக்கிற பொண்ணு கிட்ட இருந்து நீ தப்பிக்க முடியாது தம்பி…..
ஓடவும் முடியாது
ஒளியவும் முடியாது
சீ ஸ் வாட்சிங் யூ…..
என்ன மச்சான் எனக்கு பார்த்திருக்கிற பொண்ணு என்னை பார்த்துட்டே இருக்குன்னு சொல்ற….
அப்ப என்ன பிக் பாஸ்ல இருக்குற கேமரா மாதிரியா….
டேய் டேய் இப்படியெல்லாம் ரொம்ப பேசிட்டு இருக்காத உனக்கு பார்த்திருக்கிற பொண்ணு பெரிய டிடக்டிவ் . பெரிய பெரிய கேசலாம் சீக்கிரமா முடிச்சு குடுத்து இருக்காங்க .
எந்த குற்றவாளி எங்க இருந்தாலும் சீக்ரேட் ஆ தன்னோட ஆபரேஷன் எல்லாத்தையும் பக்காவா முடிச்சிருக்காங்க டா .
இவ்ளோ சின்ன வயசுல பெஸ்ட் டிடெக்டிவ் அப்படின்ற பெயரும் வாங்கி இருக்காங்க .
நீ மட்டும் ஓடிப்போன வச்சிக்க அந்த பொண்ணு கண்டிப்பா உன்னை தேடி கண்டுபிடிச்சுடும் .
அப்புறம் அவங்ககிட்ட நீ தான் சிக்கி சின்னாபின்னமாகிருவ பாத்துக்க…..
ஏண்டா டேய் உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா உனக்கு பார்த்து இருக்க பொண்ண போய் நீ ஓடிப் போயிட்டா எனக்கு கட்டி வைத்துவிடுவார்கள் னு லூசு தனமான பேசிட்டு இருக்கே…”மகேஷ் .
மகேஷ் தனது வருங்கால மனைவியை பற்றி கூறும் ஒவ்வொரு விடயமும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாக இருந்தது .
பெண் பார்க்க சென்றபோது அவளை ஒரு கணம் பார்த்தது . அதன் பின்பு அவளிடம் பேச கூட இல்லை . அவளும் அவ்வாறு தான் . பேசுவதை பற்றி இருவரும் அதற்கான முயற்சிகளிலும் இறங்கவில்லை என்பதே ஆகச் சிறந்த உண்மை .
இருவரும் இருவேறு மன நிலைகளில் திருமணத்திற்கு தயாராகி இருந்தனர் .
-தொடரும்🖤