Home FAMILY NOVEL7) ரோஜாப்பூ 🌹

7) ரோஜாப்பூ 🌹

by sreejanovels
26 views

அத்தியாயம் 7

மறுநாள் விடியல் செண்பகநல்லூருக்கு ஒரு முக்கியமான நாள். ராஜனின் தந்தை ஆறுமுகத்தின் மாமனாரும், சங்கர் மற்றும் தெய்வானையின் தந்தையுமான முத்துவேல் ஜமீன்தாரின் நினைவு நாள். இந்த ஊரின் பள்ளிக்கூடம், இந்தக் கோட்டை மாளிகை என அனைத்திற்கும் அடித்தளம் இட்டவர் அவர்தான்.

ஆறுமுகத்தின் தந்தையும் முத்துவேல் தாத்தாவும் இணைந்துதான், தங்களிடம் இருந்த பணத்தைப் போட்டு இந்த அரண்மனை வீடு மற்றும் சிறிய பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தார்கள். இப்போது அது ஒரு பெரிய ஆலமரமாக விருட்சம் பெற்று நிற்கிறது.

இத்தனை வருடங்களாக ரோஜா இல்லாததால், தெய்வானையும் ராஜனும் தான் காரியங்களை முன்னின்று நடத்தினர். ஆனால் இன்று, நேரடி வாரிசு என்ற அடிப்படையில் ரோஜாவிற்குத்தான் அந்தப் பூஜையின் முதல் உரிமை.

காலை ஆறு மணிக்கே மாளிகை பரபரப்பானது. பூஜையறையில் அந்தப் பெரிய தாத்தாவின் கம்பீரமான உருவப் படத்திற்கு முன் தீபம் ஏற்றப்பட்டிருந்தது.

வீட்டிற்கு வந்த பிறகுதான் ரோஜாவிற்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. தாய், தந்தை மறைவிற்குப் பிறகு எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளாத போதும், வருடம் தோறும் அனாதை ஆசிரமத்திற்குச் சென்று தன் தந்தையோடு அங்கிருக்கும் சிறு குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் ஏதோ ஒரு நற்காரியம் செய்வது மட்டும் அவள் நினைவில் இருந்தது. இப்போது அவள் நேரடியாகத் தன் தாத்தாவின் நினைவு நாளைக் கொண்டாட வந்திருக்கிறாள்.

ரோஜா குளித்துவிட்டு, ஈரக் கூந்தலோடு வந்து அந்தப் படத்தின் முன் நின்றாள். தன் குடும்பத்தின் ஆணிவேரை முதல்முறையாக அந்தப் படத்தின் வழியாக அவள் தரிசித்தபோது, அவளது கண்கள் கலங்கின.

“ரோஜா… தாத்தாவுக்கு மாலை போடு,” என்று ராஜன் அதிகாரமான குரலில் சொன்னான்.

ரோஜா மாலையைப் படத்தின் மீது அணிவித்தபோது, அங்கிருந்த தெய்வானையின் மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடின. ஒருபுறம் தன் தம்பி சங்கரைப் போலவே இருக்கும் ரோஜாவைப் பார்க்கும்போது ரத்தப் பாசம் பொங்கியது. மறுபுறம், “சங்கர் இருந்திருந்தால் இந்தச் சொத்தெல்லாம் அவனுக்குப் போயிருக்கும், இப்போது அவனது வாரிசு வந்து நிற்கிறாளே” என்கிற ஒரு மெல்லிய பொறாமையும் எழுந்தது.

பூஜை முடிந்ததும், அனைவரும் அந்தப் பெரிய ஜமீன்தாரின் கல்லறைக்குச் செல்லத் தயாராயினர். தோட்டத்தின் ஒரு ஒதுக்குப்புறத்தில், ஆலமர நிழலில் அமைந்திருந்தது அந்தப் பிரம்மாண்டமான கல்லறை.

ரோஜா அந்தச் சமாதியின் முன் மண்டியிட்டு அமர்ந்து அஞ்சலி செலுத்தினாள். இத்தனை காலம் கழித்துத் தன் தாத்தாவின் மடியில் அமர்வது போன்ற ஒரு உணர்வு அவளுக்கு ஏற்பட்டது. ராஜன் அருகில் நின்று இதையெல்லாம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது சக்திவேல் மெல்ல ரோஜாவின் அருகில் வந்து, “ரோஜா… கவலைப்படாதே. தாத்தா உயிரோடு இருந்திருந்தால் உன்னைத் தலையில் வைத்துக் கொண்டாடி இருப்பார்,” என்று ஆறுதலாகச் சொல்லி அவள் தோளைத் தொட்டான்.

சக்திவேல் ரோஜாவிடம் சகஜமாகப் பேசுவதைப் பார்த்ததும் ராஜனின் முகம் சட்டென்று மாறியது. அவனது கண்கள் சிவந்தன. ஒருவிதத் தற்காப்பு உணர்வு (Possessiveness) அவனுள் எட்டிப்பார்த்தது. “சக்திவேல்! அந்தப் பக்கம் போய் வேலையைப் பார்,” என்று கறாராகச் சொன்னான். ராஜனுக்குத் தெரியும், சக்திவேல் ரோஜாவிற்கு மாமன் மகன் முறை என்று… அந்தச் சலுகை அவனுக்குக் கிடைப்பதை ராஜனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

மறுபுறம், தேவராஜ் ரோஜாவிடம் மிகவும் அன்பாகவும் ஆறுதலாகவும் பேசிக் கொண்டிருந்தான். “ரோஜா, அந்தப் பக்கம் முள் இருக்கும், பார்த்து நட…” என்று அவன் காட்டும் அக்கறை அங்கே நின்று கொண்டிருந்த அவன் தங்கை முல்லைக்கொடிக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது.

முல்லைக்கொடி தேவராஜின் சட்டையைப் பிடித்து ஓரமாக இழுத்துச் சென்றாள். “அண்ணே! உனக்கு அறிவு இருக்கிறதா? நம்ம அம்மா கௌரி இன்னைக்கு விதவையாக நிற்பதற்குக் காரணமே அந்த ரோஜாவோட அப்பா சங்கர்தான். அவங்க அப்பா பண்ண அசிங்கம்தானே எல்லாத்துக்கும் காரணம்! அவகிட்ட போய் பேசிட்டு இருக்க… உனக்கு வெட்கமா இல்லையா?” என்று பொரிந்து தள்ளினாள்.

தேவராஜ் அவளை அமைதிப்படுத்த முயன்றான், “முல்லை… அது பழைய கதை. இதில் அந்தப் பெண் என்ன செய்வாள்?”

“எனக்கு அதெல்லாம் தெரியாது! அந்தப் பெண் நம்ம வீட்டுக்குள்ள வந்ததே எனக்குப் பிடிக்கவில்லை,” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள் முல்லைக்கொடி.

சக்திவேலின் தங்கை காயத்ரி மட்டும் எப்போதும் போல அமைதியாக, எல்லோரிடமும் அன்பாகவே இருந்தாள். அவள் ரோஜாவிடம் வந்து, “ரோஜா… நீ தனியாக இருக்கிறாய் என்று நினைக்காதே. என்னுடைய அப்பத்தா, அதாவது உன் அத்தை (தெய்வானை) முகத்தில் கோபம் இருந்தாலும், உள்ளுக்குள் உன் மேல் ஒரு பாசம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நீ பார்ப்பதற்கு அவர்களைப் போல இல்லையே,” என்று மென்மையாகச் சொன்னாள்.

ரோஜா மென்மையாக அங்கிருப்பவர்களைப் பார்த்தாள். ஆறுமுகம் தாத்தா மட்டும் ஏனோ ஒட்டும் ஒட்டாதது போல அமைதியாக இருந்தார். வயது மூப்பு ஒரு பக்கம், தன் மகளின் இத்தகைய வாழ்வுக்கு இவள் தந்தைதானே காரணம் என்ற கோபத்தில் அவர் அமைதி காத்துக் கொண்டிருந்தார்.

கல்லறைப் பூஜை முடிந்து திரும்பும்போது, ராஜன் ரோஜாவைப் பார்த்து, “பார்த்தாயா ரோஜா? இந்த ஊர், இந்தச் சொத்து, இந்த மாளிகை எல்லாமே உன் தாத்தாவும் சேர்ந்து உருவாக்கியது. ஆனால் இப்போது அது எல்லாமே எங்கள் குடும்பத்திடம் இருக்கிறது. இதை மீட்க வேண்டும் என்று உனக்கு ஆசை இல்லையா?” என்று ஒரு விசித்திரமான கேள்வியைக் கேட்டான்.

ரோஜா அவனது கண்களைப் பார்த்தாள். “எனக்குச் சொத்து மேல் ஆசை இல்லை ராஜன். இழந்த என் குடும்பம் கிடைத்தால் போதும் என்று நினைக்கிறேன்.”

ராஜன் மனதுக்குள் சிரித்துக்கொண்டான். “அன்பைத் தேடி வந்த இந்த மானை, அதிகாரத்தாலும் வஞ்சகத்தாலும் கட்டிப் போடப்போகிறேன். ரோஜா… உனக்குத் தெரியாது, நீ ஒரு பெரிய வலையில் விழுந்து கொண்டிருக்கிறாய் என்று!”

மாளிகைக்குத் திரும்பியபோது, அந்தப் பெரிய ஜமீன் வீட்டின் சுவர்களில் இத்தனை காலமும் மறைந்திருந்த வஞ்சகமும் பொறாமையும் இப்போது ரோஜாவைச் சுற்றி மெல்ல வளைக்கத் தொடங்கின.

அன்று இரவு அனைவரும் உணவருந்தி கொண்டிருக்கும் போது, தெய்வானை ரோஜாவைப் பார்த்துப் பேசினாள்.

“இங்க பார், அந்தத் தோட்டத்து வீடு உங்கள் அம்மாவின் சொத்து. ஆனால் உங்கள் அப்பாவும் தாத்தாவும் சம்பாதித்த சொத்து இந்த அரண்மனை. இதில் எனக்கு எப்படி உரிமை இருக்கிறதோ, அதே உரிமை உனக்கும் இருக்கும். உனக்கு ஏதாவது வேண்டுமென்றால் அங்கே போ, ஆனால் நீ இந்த வீட்டு வாரிசு என்பதால் இங்கேயேதான் இருந்தாக வேண்டும். இதை நான் இந்த வீட்டுப் பெண்ணாகச் சொல்லவில்லை, உன்னுடைய அத்தை என்கிற முறையில் சொல்கிறேன். இதை ஏற்றுக்கொள்வாய் என்று நினைக்கிறேன்.”

தெய்வானை மிகவும் கண்டிப்போடு சொல்ல, இதுவரை அமைதியாக இருந்த ஆறுமுகம் தாத்தாவும் பேசினார்.

“என் மாமனாருக்கு, அதாவது உன் தாத்தா சம்பாதித்த சொத்துமா இது. அதனால் உனக்கும் இதில் நிறையவே பங்கு இருக்கிறது. அதனால் தெய்வானை சொல்வதுதான் சரி. வயதுப் பெண் தனியாக இருக்க வேண்டாம், நீ இங்கே இருக்க வேண்டியவள். உன்னைப் பார்த்துக்கொள்ள வேண்டியது என்னுடைய கடமை,” என்று பெரியவர் சொன்னார்.

இதற்கு மேல் மறுப்பு சொன்னால் நன்றாக இருக்காது என்று ரோஜாவும் சரி என்று ஒப்புக்கொண்டாள். சிலரின் முகத்தில் நிம்மதி, சிலரின் முகத்தில் ஏக்கம், கோபம் மற்றும் பொறாமை. ஆனால், நடுநிலையில் அமர்ந்திருந்த ராஜன் முகத்தில் மட்டும் ஒரு வஞ்சப் புன்னகை நிலவியது.


மறுநாள் காலை அழகாக விடிந்தது.

வெளியே இருந்து பார்க்கும்போது அரண்மனையின் முன்பக்கத்தை மட்டும்தான் அவள் கண்டிருந்தாள். ஆனால் முழு அரண்மனையையும் அதிகாலை 5 மணி வேளையில் சுற்றிப் பார்க்கும்போது, அது மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. 70-களில் கட்டப்பட்டு, பின் பாழடைந்த அந்த அரண்மனையை மீட்டெடுத்து, மாமன் மச்சான் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து புதுப்பித்துக் கட்டியிருந்தனர். பழங்கால வாசனையும் நவீன முறையும் கலந்து இருந்தது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

“காலையில் எழுந்தாச்சு, ஆனால் நமக்கு எழுந்தவுடன் கிரீன் டீ குடிக்கும் பழக்கம் இருக்கிறதே… இங்கே கிச்சன் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லையே,” என்று ரோஜா சமையலறை எங்கே இருக்கிறது என்று தேடிக் கொண்டிருந்தாள். அப்போது, “என்ன என்னுடைய அக்காக்காரி காலங்காத்தால எழுந்து சுத்திக்கிட்டு இருக்க? என்ன வேணும்?” என்று முல்லைக்கொடி அவளை வழிமறித்து நக்கலாகக் கேட்டாள்.

“அது வந்து முல்லை, எப்பவுமே மார்னிங் எழுந்து கிரீன் டீ குடிப்பது என்னுடைய பழக்கம். அதுதான் என்னுடைய மார்னிங் ரூட்டின். வாக்கிங் முடித்துவிட்டு இப்போது டீ குடிக்க வந்திருக்கிறேன். கிச்சன் எங்கே இருக்கிறது?” என்று ரோஜா கேட்டாள்.

“அது சரி, இந்த அரண்மனைக்கு பாதிக்குப் பாதி வாரிசு நீதான். ஆனால் அரண்மனையில் கிச்சன் எங்கே இருக்கிறது என்று கூட உனக்குத் தெரியவில்லை. உங்கள் அப்பா எங்களுடைய காலில் படாமல் உன்னை வளர்த்திருக்கிறார் போலிருக்கிறது. வீட்டைப் பற்றி எதுவும் சொன்னது கிடையாதா? அது சரி, இவ்வளவு பெரிய வீட்டில் ஒரு பொண்ணு காலையில் எழுந்து எல்லோருக்கும் சேர்த்து காபி போடுவதை விட்டுவிட்டு, உனக்கு மட்டும் டீ போடுவதைப் பற்றி பேசுகிறாய்! அது ஏதோ கிரீன் டீயாம்… இந்த சிட்டியில் இருக்கிறவங்க ரொம்பத்தான் ஓவரா சீன் போடுறாங்க,” என்று நகரத்து மக்கள் என்றாலே இப்படித்தான் என்ற ரீதியில் முல்லைக்கொடி வம்புக்கு இழுத்தாள்.

“அடியே கேனச் சிறுக்கி! இன்னைக்கு நான்தான் உன்னை எழுப்பி விட்டேன். தோட்டத்தில் அவரைக்காய் பறிக்கிற வேலை இருக்கிறது, நீ எதுக்கு இந்த பிள்ளையிடம் வம்பு இழுத்துக்கிட்டு இருக்க? எல்லோருக்கும் காபி போடுவதைப் பற்றி நீ பேசுகிறாயா? நீயே 10, 11 மணிக்கு எழுந்து வீட்டில் இருப்பதைத் தின்றுவிட்டுத் தூங்கும் எருமை மாடு! நீ அந்தப் பிள்ளையைப் பார்த்து கிண்டல் செய்கிறாயா? ரோஜா, இன்று காலையில் அவளுக்கு வேலை சொல்லி இருக்கிறேன், அந்தத் தீராத கோபத்தை உன் மேல் காட்டிக் கொண்டிருக்கிறாள். நீ வாம்மா, நாம் கிச்சனுக்குப் போகலாம்,” என்று முல்லைக்கொடியின் தலையில் ஒரு அடி கொடுத்துவிட்டு, கௌரி ரோஜாவை அழைத்துச் சென்றார்.

ரோஜாவிற்குச் சிரிப்பு வந்தது. முல்லைக்கொடி தன் உதட்டைச் சுருக்கிக் கொண்டு, “அவள் வந்தவுடன் அம்மா ரொம்பத்தான் சீன் போடுறாங்க. என்ன பண்ணாலும் அவங்க தாய்மாமன் பொண்ணு இல்லையா, அதான் இவ்வளவு பாசம்,” என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.

அந்தப் பக்கமாக இதைப் பார்த்த சக்திவேல் சிரித்துக்கொண்டே, “என்ன மேடம், செம மொக்கை வாங்கினீங்க போல?” என்றான்.

“டேய் அத்தான், ஒழுங்கா போயிடு. நானே செம கடுப்பில் இருக்கிறேன். எங்க அண்ணன் தேவராஜ் என்னவென்றால் பாச மலர் சிவாஜி மாதிரி இவளிடம் கொஞ்சிக்கிட்டு இருக்கிறான். எங்க அம்மா பெத்த மகளை விட இவள் மேல் பாசமாக இருக்கிறார்கள். சின்ன வயதில் இருந்து அந்த சங்கர் பெரியப்பாவைப் பற்றி என்னென்னவோ சொன்னீர்கள், கடைசியில் எல்லாரும் அவர் பொண்ணு வந்தவுடன் இப்படிப் பல்டி அடித்துவிட்டீர்கள்,” என்று முல்லைக்கொடி கத்தினாள்.

“அடியே, நீ இங்கேதான் இருக்கிறாயா? தோட்டத்தில் அவரைக்காய் பறிக்கும் வேலை இருக்கிறது என்று கௌரி அத்தை சொன்னார்களே! இங்கே வந்து என்ன பேசிக்கொண்டு இருக்கிறாய்? ரோஜா வந்ததில் இருந்து மேடம் இந்த வீட்டின் இளவரசி மாதிரி சுத்திக்கிட்டு இருந்தாய், அவள் வந்தவுடன் எல்லோருடைய கவனமும் அங்கே போய்விட்டது இல்லையா? இங்க பார் முல்லைக்கொடி, அவளுக்கும் இங்கே சகல உரிமையும் இருக்கிறது. அதை ராஜன் சித்தப்பா சொல்லாமல் செயலில் காட்டிக் கொண்டிருக்கிறார். கொஞ்ச நாளில் அவர் ரோஜாவைக் கல்யாணம் பண்ணிக்கொண்டாலும் சொல்வதற்கில்லை, இரண்டு பேரின் பார்வையும் அப்படித் தான் இருக்கிறது,” என்று காயத்ரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே…

“ஏய் எல்லாரும் இங்கேதான் இருக்கிறீர்களா? தோட்டத்துக்குப் போவதைப் பற்றிப் பேச வந்தேன். நீ சொன்னதை நானும் கவனித்தேன் காயத்ரி, ராஜன் மாமா என் தங்கை ரோஜா மேல் ஒரு கண்ணாகத்தான் இருக்கிறார்,” என்று தேவராஜ் சொல்லிச் சிரித்தான்.

“அப்போ தேவராஜ் அண்ணா, ஆக மொத்தம் ஆளாளுக்கு ஒரு ஆளோடு சுத்திக்கிட்டு இருக்கீங்க,” என்று முல்லைக்கொடி பெருமூச்சு விட்டாள்.

“தோட்டத்துக்குப் போகணும், நீங்கள் யாரும் வரவில்லையா?” என்று ராஜனின் குரல் கேட்டவுடன் அனைவரும் பதறியடித்து ஓட ஆரம்பித்தனர்.


..

You may also like

Leave a Comment

About Me

Featured