Home ANTIHERO6) அதிரூபன் 🔥

6) அதிரூபன் 🔥

by sreejanovels
15 views

அத்தியாயம் 6

அமிர்தா வீடு வந்து சேர்ந்து சற்று நேரம் ஓய்வெடுத்தாள். அவள் மனம் ஏதோ படபடப்பாகவே இருந்தது. மொபைலில் இருக்கும் அந்த ஓவியத்தைப் பார்த்தபடி, “நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை, மறுபடியும் இந்த ஓவியம் என் வாழ்க்கையில் சந்திக்கும் என்று. அதுவும் நான் சின்ன வயதில் கிறுக்கி வைத்திருந்த விஷயம். இப்போது பார்க்கும்போது எனக்குச் சிரிப்புதான் வருகிறது. வறுமையின் கோரப்பிடியில் இருக்கும்போது எனக்கு வேறு வழி தெரியாமல் இதை விற்க வேண்டியதாகிவிட்டது. ஆனால் அது ஒரு கலை ரசிகன் கிட்டதான் இருந்திருக்கிறது. அதிரூபன் சார் கொஞ்சம் வித்தியாசமானவர்தான், எல்லாவற்றையும் எவ்வளவு ரசிக்கிறார்!” என்று அவனைப் பற்றி பெருமைகொண்டாள். அவன் சாதாரண சாது என்று அவள் எண்ணினாள். ஆனால், அவளைக் களவாடப்போகும் அரக்கன் என்று தெரிந்திருந்தால், அமிர்தா எப்பொழுதோ அவன் சகவாசமே வேண்டாம் என்று கும்பிடு போட்டு வந்திருப்பாள்.


நீண்ட நேரம் அந்த இருக்கையில் சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்த அதிரூபன் விழிப்பு வந்து, தன்னைச் சரி செய்துகொண்டான். ‘என்ன அபத்தம்! டேய், நீ ராவணன். நிழல் உலக தாதா. உன்னைப் பார்த்து எத்தனை பேர் மிரண்டு போகிறார்கள் தெரியுமா? டார்க் வேர்ல்டில் உனக்கு அடிபணியாத ஆண்களே இல்லை. ஏன், எத்தனை பெண்கள் உன்னை அப்ரோச் செய்தார்கள்? ஏன், அந்த எம்.பி. பொண்ணு லாவண்யா உன்னைப் பார்த்த பார்வையிலேயே தெரியவில்லையா, அவள் என்ன நினைக்கிறாள் என்று? என்னடா, ஒரு சின்னப் பெண்ணின் பார்வைக்கு நடுங்கிப் போகிறாய்? அவளால் என்ன பண்ணிவிட முடியும்? அவளை உன் ஆசைக்கு அடிபணிய வைக்க வேண்டும். நீ அவள் காலில் சரணாகதி ஆகக் கூடாது. நீ ராவணன்!’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, இதோ தனது டார்க் வெப் உலகிற்குள் சென்றுவிட்டான் அடுத்த மாஃபியா வேலைக்காக.

நிழல் உலக நாயகன்

இருள் சூழ்ந்த உலகினில், நிழலாய் ஓர் உருவம்,
ஆயிரம்பேர் அஞ்சும் பெயர், அதிகாரத்தின் வடிவம்.
சூழும் பகை, சூழ்ச்சியின் வலை – இவையே வாழ்வின் களம்.
பணம், காமம், அதிகாரம் – இதுவே அவன் கண்ட சுகம்.

ஆனால், ஓர் அற்புதம் நிகழ்ந்தது அன்று,
ஒளி நிறைந்த ஓர் உருவம், வாழ்வில் புகுந்தது மெல்ல.
கண்களில் கள்ளமில்லாப் புன்னகை, மனதில் அமைதியின் அலை;
சாதாரணமாய் தெரிந்த அந்த உருவம், மனதை அசைத்தது சற்றே.

ஆர்வமோ, காமமோ – பெயர் அறியாப் புதிர் அது.
“வலிமை கொண்டவன் நீ, இருளின் தலைவன்,” மனம் சொல்லும்;
“காமம் உன் கருவி, காதல் ஒரு சுமை;
அவளை உன் வலைக்குள் வீழ்த்து, ஆனால் இதயத்தை அனுமதிக்காதே.”

கசக்கும் உண்மை இது, அவன் பாதையின் நிதர்சனம்.
ஆனாலும், அந்த உருவம் தந்த ஈர்ப்பு, ஒரு புதிராய் துரத்துகிறது.
இன்று, தன் நிழல் உலகப் பணிகளுக்குத் திரும்புகிறான்,
இந்த உணர்வுகளை அடக்கி, கவனத்தை சிதறடிக்க.

இருந்தாலும், அந்த ஒளிக் கீற்றின் நினைவுகள் அலைக்கழிக்கின்றன;
இருள் உலக நாயகன் இதயத்தில், ஒரு புது வெளிச்சம் அது.
இனி என்னாகுமோ அவன் பயணம்? அறியேன் அவன்;
ஆனால் ஒன்று மட்டும் உண்மை – அந்த உருவம் அவன் மனதை மாற்றுகிறது.


மிகப்பெரிய பார் வசதி கொண்ட ரெஸ்டாரன்ட்டில், லாவண்யா தனது தோழிகளோடு கொட்டமடித்துக் கொண்டிருந்தாள்.

அப்பன் கொள்ளையடித்த பணத்தை மகள் தோழர் தோழிகளுக்குச் செலவு செய்து கரைத்துக்கொண்டிருக்கிறாள். மாதம் பத்து லட்சம் அவள் அக்கவுன்ட்டில் வந்துவிடும். இங்கே ஒரு நாள் பத்து ரூபாய் பாக்கெட் மணிக்கு அழுதுகொண்டிருக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால் இங்கே சொல்லவே தேவையில்லை. கேட்டால், “வாழ்க்கை என்ஜாய் செய்கிறோம். இதைவிட வேற என்ன இருக்கிறது?” என்ற பதில் வரும்.

“என்னம்மா ஆச்சு, முகத்தில் ஒரு தேஜஸ் தெரியுது. எனக்கு குட் நியூஸ். யார் கூடயாவது கமிட் ஆகிட்டியா?” என்று தோழி கேட்க.

“அதுவா, எங்க அப்பா கூட பிசினஸ் டீலிங் பண்ணும் தொழிலதிபர் அதிரூபனை எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு எங்க அப்பா சொல்றாரு. பட் அதுக்கு அவர் சம்மதிக்கணுமே. எனக்கும் அவர் மேல் இன்ட்ரஸ்ட் இருக்கு. யூ நோ, நேத்து நடந்த பெயிண்டிங் காம்படிஷனில் எனக்கு ஃபர்ஸ்ட் பிளேஸ் கொடுத்தாரு. நான் எக்ஸ்பெக்ட் பண்ணல. ஆனா எனக்குக் கிடைச்சிருக்கு அப்படின்னா, அவருக்கு நான் ஏதோ ஸ்பெஷலா தெரிந்திருக்கேன், அப்படித்தானே??” என்று சொல்ல.

“ஹேய் ஹேய் கேர்ள்! நேத்து நானும் உன்கூடதான் இருந்தேன். இரு, முழு கதை நான் சொல்கிறேன். உனக்குப் ஃபர்ஸ்ட் பிரைஸ் கொடுத்தாரு, ஆனா அதுக்கப்புறம் என்ன சொன்னாரு? ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி பெறுவதில்லை. வெற்றி பெற்ற மனிதர்களெல்லாம் புத்திசாலிகள்’ன்னு சொன்னாரு. உனக்குப் பெயருக்கு ஃபர்ஸ்ட் பிரைஸ் கொடுத்திருக்காரு. ஆனா இன்னொரு ஹாட் நியூஸ் தெரியுமா? நானும் தான் மிஸ்டர் அதிரூபனை ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கேன். ஆறுதல் பரிசு வாங்கின அமிர்தா இப்போ அவரோட கம்பெனியோட ஸ்பெஷல் ஆர்ட்டிஸ்ட். இனி அதிரூபனோட எக்ஸ்க்ளூசிவ் பெயிண்டிங், அட்வர்டைஸ்மென்ட் பெயிண்டிங் எல்லாமே அமிர்தாதான் செய்யப்போறா” என்று போதையில் குழறிக்கொண்டு சொல்ல.

அவ்வளவுதான்! கோபம் வந்த லாவண்யா, குடித்துக்கொண்டிருந்த ஒயின் பாட்டிலை தூக்கி வீசி அடித்து உடைத்தாள். அந்தத் துண்டை எடுத்து அவள் தோழியின் தொண்டைக்குழியில் இறக்கப்போக, அதற்குள் மற்றவர்கள் பிடித்துவிட்டார்கள்.

“ஏய், என்ன ஆச்சு? எதுக்கு இப்படி ரூட்டா பிஹேவ் பண்ற? அப்படி என்ன சொன்னா? இருந்ததுதானே சொன்னா?” என்று ஆளாளுக்குக் கேட்க.

“ஏற்கனவே அந்த விஷயம் கேள்விப்பட்டதால் நான் டென்ஷனில் இருக்கேன். இவன் என்ன சொல்கிறான்? அதிரூபன் எனக்குக் கிண்டல் பண்ணது மட்டும் இல்லாமல், அமிர்தாவையும் அவர் பர்சனலா ஜாயின் பண்ணிக்கிட்டது எனக்குக் குத்திக் காட்டுற மாதிரி இருக்கு. அந்த அமிர்தாவே எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. அவள் மேல் எனக்கு ரொம்ப வருஷமா பொறாமை. அவளுக்கு இருக்கிற திறமை என்கிட்ட இல்லை. பணம் இருக்கு, அழகு இருக்கு, ஆனால் என்னோட திறமை அவளைவிடக் குறைவாக இருக்கு. எந்த விதத்தில் குறைந்து போனேன்? அவங்க அம்மா அப்பாவை கொன்ன மாதிரி அவளையும் போட்டாதான் எல்லாம் சரியாகிவிடும்” என்று போதையில் தள்ளாடிக்கொண்டே போக.

“ஏய், என்ன சொல்ற? யார் அவங்க அம்மா அப்பாவை கொன்னது? உனக்குத் தெரியுமா என்ன??” என்று அருகில் இருக்கும் தோழி ஆர்வமாகக் கேட்க.

“ஏன் தெரியாது? அவங்க அப்பன் ஒரு நகைக்கடையை நடத்திக்கொண்டிருந்தார். கடையைப் பெருசாக்கணும்னு எங்க அப்பா இன்வெஸ்ட் பண்ண பிரைவேட் லிமிடெட் பேங்கில், அவர் சேவ் பண்ண அமவுண்ட் திருட்டுப் போனபோது, கரெக்டா எங்க அப்பா கட்சி வேலைக்காக இருக்கிற எல்லாப் பணத்தையும் எடுத்துட்டு, திருட்டுப் போச்சுன்னு கம்ப்ளைன்ட் கொடுத்துட்டாரு. பிரைவேட் பேங்க் ரீஃபண்ட் பண்ணத் தேவையில்லை. இருந்தாலும், இந்தப் பொண்ணோட அப்பாவுக்கு ஒரு சந்தேகம். அப்போ எங்க அப்பா சாதாரண கவுன்சிலர். ஆனா எங்களோட பகட்டான வாழ்க்கையைப் பார்த்து நிறைய பேருக்கு சந்தேகம் இருந்தது. இந்த பேங்க் பத்தி விசாரணை பண்ண, அமிர்தாவோட அப்பா அப்பப்போ ரவுண்ட்ஸ் வந்துகிட்டே இருந்தாரு. அவர் பணம் போனதைப் பத்தி கவலைப்படல, அந்தப் பணம் எப்படி கொள்ளை போச்சுன்னு கண்டுபிடிக்க நிறைய விசாரணை தனிப்பட்ட முறையில் நடத்திட்டு இருந்தாரு. ஒரு சாதாரண ஆள் நம்மளைத் தீண்ட ஆரம்பிச்சிட்டாருங்கறதால, எங்க அப்பா ஒரு நாள் அவரும் அவங்க பொண்டாட்டியும் தனியா கார்ல போகும்போது, அவளையும் கொன்னு போட்டு இருந்தால், இவளோட திறமையும் மண்ணோடு மண்ணாகப் போயிருக்கும். இவ தப்பிச்சு இப்போ எனக்குப் போட்டியா வந்து நிற்கிறாள். இவ மட்டும் அதிரூபன் கூட க்ளோஸ் ஆனால், இவளை க்ளோஸ் பண்ணிடுவேன்.”

என்று அலப்பறை கிளப்பிக்கொண்டிருக்க, பெரிய இடத்து விவகாரம் நமக்கு எதுக்கு என்பதுபோல் வேலை செய்பவர்கள் ஒரு காதில் வாங்கிக்கொண்டு மறுகாதில் விட்டுவிட்டார்கள். அருகில் இருக்கும் அவள் தோழி, தோழர் பட்டாளம் இதெல்லாம் பெரிய இடத்தில் சகஜம் என்பதுபோல் இருக்க, ஆனால் ஒரு தனி உருவம் இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தது. மேலும், வாய்பட லாவண்யா பேசியதை வீடியோ ரெக்கார்ட் செய்து கொண்டது.


மறுநாள், அதிரூபன் கன்னத்தில் அமிர்தாவின் ஐந்து விரலும் பதிந்திருந்தது. அவளைக் கோபத்தில் ருத்ர மூர்த்தியாக முறைத்துக்கொண்டிருக்க, அமிர்தா அவனை ஏளனத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.


You may also like

Leave a Comment

About Me

Featured