அத்தியாயம் 13
சுவாதி சொல்லிக் கொண்டிருப்பதை இடையில் தடுத்து நிறுத்தியவன், “அதான் நீயே சொல்றியே, உன்னால தான் அவமானப்பட்டு என் தங்கை தற்கொலை பண்ணிக்கிட்டான்னு. அவளை வெயில் படாமல் நாங்க வளர்த்தோம். இந்த ஊருக்கு அனுப்பி அவளை நெருப்புக்கு இரையாக்கிட்டோம். அவளோட டெட் பாடியை நான் பார்க்கும்போது எவ்வளவு வேதனையா இருந்தது தெரியுமா? அப்படி என்ன என் தங்கச்சி மேல உங்களுக்கு வன்மம்? அதற்கு ஒருத்தவங்க எந்த உருவத்தில் இருந்தாலும், அந்த உருவத்தைச் சொல்லிக் கிண்டல் பண்றதா? அவள் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாதவள். அவளைப் போய் இப்படிப் பண்ணிட்டியே! தற்கொலை பண்ணாலும் அந்தத் தற்கொலைக்கு யார் காரணமோ அவங்கதான் அதற்கான கொலைகாரங்க. அந்தப் பிரியதர்ஷினி, தாட்சாயிணி ரெண்டு பேரும் என் கையில கிடைச்சிருந்தா கொன்னுருப்பேன். ஆனா அவங்க இறந்து போயிட்டாங்கன்னு சொல்ற, எனக்கு ஒண்ணுமே புரியல” என்று வெறுப்பாகச் சொன்னான்.
“இங்க பாருங்க, உங்களுக்கு வந்த செய்தி தவறானது. உங்க தங்கச்சியை நான் கிண்டல் பண்ணதால அவ இறந்து போயிட்டான்னு யாரோ சொல்லிருக்காங்க. ஆனா உங்க தங்கச்சி என்கிட்ட இதுவரைக்கும் ஒழுங்காப் பேசியது கூடக் கிடையாது” என்று தன் பக்கம் நடந்த விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தாள் சுவாதி.
அன்று அந்தப் போலி காதலனைப் பார்க்கச் சென்றபோது, அவனோடு இருந்த நான்கு அடியாட்கள் சேர்ந்து யுவஸ்ரீயைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து, பின் நெருப்பு வைத்து எரித்துவிட்டனர்.
சற்றுத் தாமதமாக வந்த சுவாதி, பாதி எரிந்து கிடக்கும் யுவஸ்ரீயைப் பார்த்துப் பதறிப்போய், அருகில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து அவர்களை அழைத்து வந்து அவளைக் காப்பாற்றினாள். அரை உயிராகப் போராடிக் கொண்டிருந்த யுவஸ்ரீயை மருத்துவமனைக்குச் சேர்க்கும் போது, அவள் மரண தருவாயில் பேசினாள்.
“தெரியாம பண்ணிட்டேன் சுவாதி. எங்க வீட்டுக்குத் தெரிஞ்சா எவ்வளவு கஷ்டப்படுவாங்க தெரியுமா? ஒருத்தனை நம்பி நான் இந்த நிலைமைக்கு வந்துட்டேன்.
என்னைத் தன் மகள் போல் பார்த்துகிட்ட என்னோட சொந்தக்காரங்களுக்கும் கெட்ட பேரு, என்னைப் பெத்தவங்களுக்கும் கெட்ட பேரு. எங்க அண்ணன் இன்னும் கொஞ்ச நாளில் வந்து என்னை அழைச்சிட்டுப் போறேன்னு சொல்லுச்சு. தேவையில்லாமல் பொறுக்கிப் பசங்க சகவாசம் தான் எல்லாத்துக்கும் காரணம்.
அந்தப் பிரியதர்ஷினி, தாட்சாயிணி அவர்களால் தான் என் நிலைமை இப்படி ஆயிடுச்சு. என்னை மன்னிச்சிடு, உன் பேச்சை நான் கேட்காமல் போயிட்டேன். ஒரு நல்ல தோழியா நீ எனக்கு வந்திருக்க, ஆனா உன்னை உதாசீனப்படுத்தித் தவறான நட்பில் நான் இணைந்துவிட்டேன்” என்று வேதனைப்பட்டு அவள் கண் முன்னால் இறந்து போனாள்.
சுவாதி ஒரு பக்கம் அதிர்ச்சியில் மயங்கி விட, அவளை வேறொரு இடத்தில் அனுமதித்திருந்தனர். மறுபக்கம், பிரியதர்ஷினி, தாட்சாயிணி இருவரும் தங்கள் மேல் பழி வரக்கூடாது என்பதால் மொத்தப் பழியையும் சுவாதி மீது சுமத்தினர்.
அவள் படித்த பள்ளியில் விசாரிக்கும்போது இவர்கள் பெயரும் சேர்ந்து வந்துவிட, இவர்கள் மூவரின் மீதும் ரித்திக் கொலைவெறியில் இருந்தான். ஆனால் எதுவும் செய்ய முடியாத நிலைமை. இதற்கிடையில் தங்கையின் மரண செய்தியைப் பெற்றவர்களுக்குச் சொல்ல, அவர்கள் அவசரமாகக் கிளம்பி வந்தனர்.
வருத்தத்தில் வண்டி ஓட்டிக்கொண்டு வந்தபோது ஏற்பட்ட விபத்தில், அவர்கள் கார் ஒரு லாரியில் நசுங்க, பெற்றவர்கள் இருவரும் அதே இடத்தில் இறந்துவிட்டனர். இப்படி ஒரே சமயத்தில் அனைவரையும் இழந்து மிகப்பெரிய துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டான் ரித்திக்.
மிகப்பெரிய மனவேதனைக்கு உட்பட்ட ரித்திக்கை, அதன் பிறகு ராம் அரவணைத்து விஜய்யுடன் பணிபுரிவதற்காக அனுப்பி வைத்தார். ராமுக்கு மட்டுமே அனைத்து உண்மைகளும் தெரியும். வேறு யாருக்கும் ரித்திக் பற்றி எதுவும் தெரியாது, அதைச் சொல்லவும் அவன் விரும்பவில்லை. ஆனால் அவன் மனதில் சுவாதி என்கிற பெண் தான் மூல காரணம், அவளை விடக்கூடாது என்று பழிவாங்கக் காத்துக்கொண்டிருந்தான். ஆனால், தான் விரும்பிய பெண்ணே தன் தங்கை மரணத்திற்கு மறைமுகக் காரணம் என்று நினைத்ததால் அவனால் விருப்பம் கொள்ள முடியவில்லை.
சுவாதி தொடர்ந்தாள், “இங்க பாருங்க, இதுதான் நடந்தது. ஆனா என்னால சும்மா இருக்க முடியல. கடவுள்னு ஒருத்தர் இருக்காருல்ல? ஒரு கஞ்சா கேஸ்ல உங்க தங்கச்சி மரணத்திற்கு காரணமான அந்த அஞ்சு ஆண்களையும் போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டுப் போயிட்டாங்க.
ஆனா அவங்க ஜெயில்ல இருந்து தப்பிக்கும் பொழுது என்கவுண்டர் போட்டு கொன்னுட்டாங்க. அதே சமயம் ரொம்ப மோசமான விபச்சார வழக்கில் பிரியதர்ஷினி, தாட்சாயிணி ரெண்டு பேரும் கைது செய்யப்பட்டார்கள்.
மூன்று வருடம் கழித்து ஜெயில்ல இருந்து வரும் பொழுது, இதற்கு மேல் இங்கு வாழ்வது வீண் அப்படின்னு ரெண்டு பேரும் சூசைட் பண்ணிக்கிட்டாங்க. இதுதான் நடந்தது, இதுதான் உண்மை. நீங்க தீவிரமா விசாரிச்சுருக்கணும். நான் வளர்ந்த ஆசிரமம், நான் படிச்ச ஸ்கூல் பத்தி விசாரிக்கும் பொழுது நீங்க என்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு உங்க தங்கைக்கு நான் தான் எமன் அப்படின்னு நினைச்சுட்டீங்க. ஆனா உண்மை அது கிடையாது.
நான் எல்லாமே உங்ககிட்ட சொல்லியாச்சு. இதுக்கு மேல உங்க விருப்பம். ஆனா நீங்க என்னைப் பத்தி ரொம்ப அதிகமா விசாரிச்சுருக்கீங்கன்னு மட்டும் புரியுது. என்னோட பர்சனல் விபரங்கள் உங்களுக்குத் தெரிய வேண்டாம் என்று நினைக்கிறேன். எனக்கு அது சுத்தமாகவும் பிடிக்காது” என்று இறுதி வார்த்தையைச் சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
ரித்திக் சிரித்துக்கொண்டே, “நீ நிரபராதி என்று எனக்குத் தெரியும். ஆனா அதை உன்னோட வாயாலேயே வெளிக்கொண்டு வரணும்னு நினைச்சேன்.
உன்னைப் பத்தி விசாரிக்கும் போது, ஆரம்பத்துல நீதான் அப்படின்னு தெரிஞ்ச பிறகு உன் மேல கோவம் இருந்தாலும், அஞ்சு வருஷமா நீ அப்பப்போ டாக்டர் கிட்ட ட்ரீட்மெண்ட் எடுக்கிறது எனக்குத் தெரிந்தது. அதுக்கு அப்புறம் உனக்கு ட்ரீட்மெண்ட் பார்த்த ஃபர்ஸ்ட் டாக்டர் கிட்ட உன்னைப் பத்தி விசாரிக்கும் போது, எல்லாமே எனக்கு அப்பவே சொல்லிட்டாங்க.
ஒருத்தவங்களுக்கு உதவி பண்ணப் போய், அது செய்ய முடியாத நிலைமையில நீ தோற்றுப் போனதை நினைத்து இப்பவும் வருத்தப்பட்டு இருக்கிறது எனக்குத் தெரியுது. யாராவது ஒருத்தர்கிட்ட சொன்னா உன்னோட மனசு ஆறுதல் அடையும்னு அந்த டாக்டர் சொன்னாரு.
ஆனா அவர் டாக்டர், அவ்வளவுதான். உன்னோட ஆழ்மனசைப் புரிஞ்சுக்கிட்டு நீ ஒருத்தர்கிட்ட சொல்லி ‘நான் தப்பு பண்ணல’னு நீ கதறுனாதான் உனக்கு விடுதலை. அதான் உன்னை இப்படிப் பேச வைத்தேன். இப்போ உன்னோட மனசுல இருக்குற கவலை எல்லாம் போயிடும். நீ என்கிட்ட இதெல்லாம் சொன்னதால யுவஸ்ரீ ஆத்மா இப்போ சாந்தி அடையும்னு நினைக்கிறேன். மத்தபடி எப்பவுமே உன் மேல நான் வச்ச கண்ணு வச்சதுதான், அதுல இருந்து தப்பிக்க முடியாது. போயிட்டு வா” என்று காற்றில் அவள் முகத்தைப் பார்த்து உதடு குவித்து முத்தமிட்டான்.
அதிர்ச்சி அடைந்த சுவாதி, தன் பக்க நியாயத்தை வெளிப்படுத்திவிட்டோம் என்ற நிம்மதியில், ‘எக்கேடு கெட்டு வேணாலும் போ’ என்பது போல் அங்கிருந்து சென்றுவிட, ரித்திக் ஒரு சிரிப்புடன் ‘உன்னோட மனசுல இருக்குற கஷ்டம் எல்லாம் வெளியே வந்துடுச்சு, ஆனா ஒரு விஷயம் மட்டும் பாக்கி இருக்கு, அது சீக்கிரம் நடக்கும்’ என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு மதிய உணவுக்காக அலுவலக நண்பர்களோடு சென்றான்.
நேரங்கள் கடந்தன. சரியாக அலுவலக நேரம் முடியும் தருவாயில் அஞ்சலி லாக்அவுட் செய்துவிட்டு, கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே போனாள். விஜய் அவளைப் பார்த்துக் கொண்டே அவளைப் பின்தொடர்ந்து நடந்து கொண்டிருந்தான். கணவன் வருகிறான் என்று தெரிந்தும் அவள் எதையும் பெரிதாகக் காட்டிக் கொள்ளவில்லை.
அமைதியாக டே-கேர் பக்கம் செல்ல, அங்கு ஏற்கனவே சுவாதி கையில் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தாள். குழந்தை தன் அம்மாவைப் பார்த்தவுடன் துள்ளிக்குதிக்க, மகனை வாங்கிக் கொண்டவள் சுவாதியுடன் கிளம்பினாள். வினோ குட்டி மெதுவாக ஓரக்கண்ணால் தன் தந்தையைப் பார்த்து கண்சிமிட்ட, விஜய் அப்பொழுது முடிவு செய்தான் – தன் மகனுக்காக என்ன வேணாலும் செய்ய வேண்டும் என்று.
வரும் வழியில் மார்க்கெட் சென்று தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொண்டவர்கள், வீட்டிற்குச் சென்று உடை மாற்றி குழந்தையோடு நேரத்தைச் செலவழித்தனர். அந்த நேரத்தில் சுவாதி கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்கும் போது அவள் மொபைலுக்கு மெசேஜ் வந்தது.
“உன் சிரிப்பை சேர்த்து சேர்த்து
மலர் காட்சி ஒன்று வைத்தேன்
உன் வெட்கம் பார்த்து பார்த்து
நானும் செர்ரி தோட்டம் போட்டேன்
ஹோ நீல உன் ஊர்வலமா
உன் முகம் பனி பூவனமா
ஹோ நீல உன் ஊர்வலமா”
என்று ரித்திக் நம்பரில் இருந்து வந்திருந்தது. அதைப் பார்த்து போனை எடுத்துத் தலையில் அடித்துக் கொண்டு, ‘வேற வேலையே இல்லை, போனா போகட்டும் நம்ம கிரஷ் அப்படின்னு விட்டுட்டு இருக்கேன், இல்லனா கும்மி இருப்பேன்’ என்று சுவாதி தனியாகச் சிரித்து கொண்டிருப்பதைப் பார்த்து அஞ்சலிக்கு பயம் வந்துவிட்டது. ‘என்ன இவள் பைத்தியம் போல் செய்கிறாள்’ என்று நினைத்தாள்.
அம்மாவிடம் பால் குடித்துவிட்டுச் சிறிது நேரத்தில் சோட்டு உறங்கிவிட, மகனைப் பத்திரமாக ஹாலில் கட்டியிருக்கும் தூளியில் போட்டு உறங்க வைத்தாள். சற்று நேரம் மொபைல் பார்க்கும் பொழுது காலிங் பெல் சத்தம் கேட்டது.
சுவாதிக்கு அது கேட்கவில்லை போல, சரி அவள் சமைக்கட்டும் என்று அஞ்சலி வெளியே போனாள். அங்கே சுவாதி உலகம் மறந்து ரித்திக் நினைப்பில் சமைத்துக் கொண்டிருந்தாள். கதவைத் திறந்த அஞ்சலிக்கு அதிர்ச்சி. வெள்ளை நிற டி-ஷர்ட், கருப்பு நிற டிராக் சூட்டில் அவள் முன்பாகக் காட்சியளித்தான் அவளது கணவன் விஜய். அவள் ஆசையாக எதிர்பார்த்த உருவத்தில் வந்த விஜய்யைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தாள்.
10 வருடங்களுக்கு முன்பாகப் பார்த்த விஜய் இப்படித்தானே இருந்தார் என்று அவள் மனக்கண் தோன்றியது. அதையெல்லாம் மறைத்துக் கொண்டு, எதுவும் தெரியாததைப் போல அவனைப் பார்த்து, “நைஸ் கெட்டப், பரவால்ல நாளைக்கு பார்க்கலாம்” என்று கதவை மூடப் போக, அவளை இடித்துக் கொண்டு உள்ளே வந்தவன் கதவை லாக் செய்தான்.
சமையலறையை எட்டிப் பார்க்க, அங்கே சுவாதி காய்கறி கட் செய்து கொண்டிருந்தாள். அஞ்சலியை அப்படியே துண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு அறைக்குள் போக, என்ன சத்தம் வருகிறது என்று சுவாதி பார்த்தாள்.
சரியாக அறைக்கதவு மூடுவது போல் இருந்தது. ‘சரி குழந்தை தூங்கிவிட்டது என்று அவள் உள்ளே ஏதோ வேலையாக இருப்பாள்’ என்று நினைத்து, சுவாதி மொத்த காய்கறிகளையும் ஹாலில் எடுத்து வந்து குழந்தையைப் பார்த்தவாறே வேலை செய்தாள். போதாக்குறைக்கு டிவியில் பாட்டு ஒன்று போட்டு, கற்பனை லோகத்தில் காய்கறிகளை கட் செய்து கொண்டிருந்தாள்.
ஆனால் அங்கே அறையில்???