Home FAMILY NOVEL14) வலி 💔

14) வலி 💔

by sreejanovels
13 views

அத்தியாயம் 14

தங்களுக்கு என இருக்கும் ஒரு அப்பார்ட்மெண்ட்டில் மித்ராவும் ரோகித்தும் நெருக்கமாக அமர்ந்து கொண்டு கதை பேசிக் கொண்டிருந்தனர்.

“ரோகித், எப்படி லாவண்யா உங்களை விட்டுப் போனாங்க? இவ்வளவு நாள் அவளுக்குத் துணையாக இருந்தீர்கள் தானே?” என்று மித்ரா கேட்டதற்கு, ரோகித் பதில் கூறினான்.

“ஆக்சுவலி எங்களுக்குள்ள இந்த ஆறு மாசத்துல ஒன்னும் நடக்கல. அவளுடைய மனசு மாறும் அப்படின்னு நான் காத்துக்கிட்டு இருந்தேன், ஆனா அவள் அந்த விஷயத்துல ரொம்பப் பிடிவாதமா இருந்தா. ஆனா ஊரைப் பொறுத்தவரைக்கும் நான் அடுத்தவனுடைய பொண்டாட்டியைக் கூட்டிட்டு வந்து வாழ்ந்துக்கிட்டு இருக்கேன் அப்படின்னு பேச்சு. ஆனா எங்களுக்குள்ள ஒரு பிரண்ட்ஸ் எப்படி இருப்பாங்களோ அப்படித்தான் இருந்தது. அவள் எதிர்பார்த்த கல்யாண வாழ்க்கை அவளுக்குக் கிடைக்கல அப்படின்னு நினைக்கிறேன். ஏன் ஆதித்யாவை எதுக்காகத் திடீர்னு கல்யாணம் பண்ணா அப்படின்னும் தெரியல. திடீர்னு ‘எனக்கு நீ வேணாம்’ அப்படின்னு சொல்லிட்டா.

ஆதித்யா ரொம்பவே கெஞ்சினார், அதுவும் நடக்காமப் போயிடுச்சு. குழந்தை பிறந்த ரெண்டு மாசம் வரைக்கும் தான் அவளால இருக்க முடிஞ்சது. அதுக்கப்புறம் அவளுக்கே மனசு கேட்கல. குழந்தை முகத்தைப் பார்த்துக்கிட்டு ஒரு மாதிரி ஏக்கமா வந்தா. ரெண்டு நாள் சரியா சாப்பிடல, தூங்கல. பால் வேற கட்டி ரொம்பவே அவஸ்தைப்பட்டா. அப்புறம் ஹாஸ்பிடலுக்குப் போய் அதைச் சரி பண்ணிக் கூட்டிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.

கிட்டத்தட்ட நாங்க ரெண்டு பேரும் ரூம் மேட் மாதிரி தான் வாழ்ந்துக்கிட்டு இருந்தோம். நீ கவனிச்சுப் பார்த்திருக்கியா? அவள் கழுத்துல தாலி கூட இருக்காது” என்று தங்களுக்கான உறவு முறைகளைச் சுருக்கிக் கூறி முடித்தான் ரோகித்.

“ஆனா ஒன்னு, நீங்க சொல்றது எனக்கு நிஜம்னு தெரியுது, ஆனா மத்தவங்க பார்த்தா சுத்தமா நம்ப மாட்டாங்க. அதுவும் முக்கியமா பாவம் லாவண்யா… அவங்களைப் பார்த்து இந்தச் சமூகம் என்ன தெரியுமா சொல்லும்? புருஷன் கூட வாழாம, புருஷன் கிட்ட வேலை பார்க்கிற இன்னொருத்தன் கூட ஓடிப்போயிட்டா; அவன் கூடவும் ஒழுங்கா வாழாம ஆறு மாசத்துல ஊரை விட்டு எங்க போனாளோ… ‘ஓடுகாலி’ அப்படின்னு தான் சொல்லுவாங்க.

ஆனா அதே மாதிரி தாங்க நானும் அந்தச் கஷ்டத்தை அனுபவிச்சேன். எனக்கு ஒரு மேரேஜ் நடந்துச்சு. பணக்காரங்க, அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி சூப்பரா ட்ரீம் வெட்டிங் நடக்கும் அப்படின்னு சொல்லுவாங்க. எனக்கும் இந்த மாதிரி தான் ராஜகுமாரன் மாதிரி அமெரிக்காவுல படிச்சு முடிச்சு, அஞ்சு வருஷம் வேலை பார்த்த சுப்ரீம் ஹோட்டல் முதலாளி பையனோட எனக்குக் கல்யாணம் நடந்தது.

அந்த ஒரு மாசம் நான் பண்ண என்ஜாய்மென்ட் இருக்கே, என் வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன். ஒவ்வொரு பொண்ணும் வேண்டுவாங்களே ஒரு ட்ரீம் ஹஸ்பண்ட் வேணும் அப்படின்னு, அந்த மாதிரி இருந்தான். இதில் நான் எதிர்பாராத விதம் என்ன தெரியுமா? ஒரு மாசம் கழிச்சு குழந்தை நின்னது தான். நாங்க பிளானிங்ல இருக்கலாம்னு முடிவு பண்ணும்போது எதிர்பாராத விதமா குழந்தை நின்னது.

அந்தக் குழந்தை வந்த பிறகு, நான் அதை அக்செப்ட் பண்ண மாதிரி அவர் அப்சர்வ் பண்ணிக்கல. முக்கியமா இப்ப இருக்குற காலகட்டத்தில் முதல் மூன்று மாதம் கணவன் கிட்ட நெருக்கம் காட்டக்கூடாது என்று சொல்வார்கள். நான் விலகி இருந்த காலத்துல ரொம்பவே பேசினாரு. எப்பவுமே ‘செக்ஸ் பண்ண முடியல, உன்கூட நெருங்க முடியல’ அப்படி இப்படின்னு அதைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டார். நான் கர்ப்பமா இருக்கேன்னு சந்தோசமா எனக்கு ஆறுதலா நாலு வார்த்தை பேசினது கிடையாது. என்ன சந்தோஷமா பார்த்துக்கிட்டது கிடையாது. ‘என்ன வேணும், எப்படி இருக்க?’ அப்படின்னு கேட்டது கிடையாது. முதல் மூணு மாசம் எங்க அம்மா வீட்டுல தான் இருந்தேன். அதுக்கப்புறம் வந்து பழைய மாதிரி இருப்பார் என்று பார்த்தால் அதுவும் இல்லை. காலையில போனா ராத்திரி வருவாரு. அதுக்கு மட்டும் கொஞ்ச நேரம் ஒதுக்கி வர்ற நேரத்தை அதுக்கப்புறம் பேசமாட்டார், அமைதியா போய் படுத்துக்குவார்.

கேட்டா ‘ஆபீஸ் அலைச்சல், இதுல தான் கொஞ்சம் நிம்மதியைத் தேட முடியும்’னு சொல்வாரு. நானும் அதை ‘போனா போகட்டும்’னு விட்டுட்டேன். அப்புறம் கொஞ்சம் சில பல ரொமான்டிக்கான பேச்சு அப்படி இப்படி போயிட்டு இருக்கும்போது, கரெக்டா ஏழாவது மாசம் வளைகாப்பு (Baby shower). அப்போ அவர் ஹோட்டலில் இருக்கிற பார்ட்டி ஹால்ல சீமந்தம் நடத்தலாம் என்று முடிவு பண்ணாரு. அதுக்காக நானும் அப்பாவும் மண்டபத்தை ஒரு விசிட் பார்த்துட்டு வரலாம்னு போனோம். ஆனா இந்த விஷயம் அந்தப் பொறுக்கிக்குத் தெரியாது. அப்பதான் தெரிஞ்சுது, ஒரு வெளிநாட்டுப் பொண்ணு கூட அவன் உல்லாசமாக இருந்தான் அப்படின்னு!

அதைப் பார்த்தவுடன் என் மனசு வெறுத்துப் போச்சு. கல்யாணம் ஆகி எட்டு மாசம் ஆகுது, ஆனா நான் ஏழு மாசம் கர்ப்பிணி. நினைச்சுப் பாருங்க, நாங்க அப்ப கூட புதுக் கல்யாணப் பொண்ணு மாப்பிள்ளை தானே? ஆனா அவன் என்னை விட்டு இன்னொரு பொண்ணு கூட நினைக்கவே உடம்பு கூசுதுங்க.

நல்லவேளை அவன் எங்களை கவனிக்கல. நான் சீமந்தம் வேண்டாம்னு அடம் புடிச்சு, எங்க அப்பா தான் பொறுமையா சீமந்தம் நடத்தி முடிச்சு என்னை எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துட்டாரு. எனக்குப் போன் பண்ணி ‘எப்படி இருக்க?’ன்னு கூட கேட்டது கிடையாது. சும்மா மெசேஜ் அவ்வளவுதான். அதுக்கப்புறம் பாப்பா பிறந்தா, அப்ப மட்டும் ஹாஸ்பிடல் வந்து ‘பெண் குழந்தையா? பரவாயில்லை என் ஜாடைல இருக்கா, அப்போ அது என் குழந்தை தான்’ அப்படின்னு சொல்லிட்டுப் போனவன் தான்.

எப்போ எனக்கு ஒரு வருஷம் ஆகும்னு வெயிட் பண்ணேன். கரெக்டா எங்க ஃபர்ஸ்ட் இயர் ஆனிவர்சரி வந்தது. அதுக்குக் கூட அவன் மெசேஜ் பண்ணல, எதுவுமே பண்ணல. கேட்டா ‘ஃபாரின்ல பெரிய கிளையண்ட் மீட்டிங்’னு சொன்னான். யாரை ஏமாத்தப் பாக்குறான்னு தெரியல. அப்புறம் ஒரு வாரம் கழிச்சு லீகலா டைவர்ஸ் அப்ளை பண்ணேன்.

அவங்க வீட்டுல இருக்குறவங்க கேட்டாங்க, நான் உண்மையச் சொன்னேன். யாருமே ஒத்துக்கல, அவன் உத்தமபுத்திரன் அப்படின்னு சொன்னாங்க. ஆனா நான் ஏற்கனவே உஷாரா எடுத்து வச்ச போட்டோஸைக் காட்டினேன். அதுக்கு அவங்க சொல்றாங்க, ‘ஹோட்டல்ல வேலை பார்க்கிறவங்க, உனக்கு நல்லா தெரிஞ்சவங்க உனக்காக எடுத்துக்கொடுத்த வீடியோ’ அப்படின்னு நான் தான் தப்பா அவரைச் சுத்தி இருக்கிற மாதிரி பேசினாங்க.

ஆனா நான் விடலையே! அவன் எப்பப்போ ஒவ்வொரு பொண்ணுங்க கூட போறானோ அதெல்லாம் எடுத்த வீடியோ. அதைக் காண்பித்து கோர்ட்ல கேஸ் அப்ளை பண்ணி அவனை ஜெயிலுக்கு அனுப்பினேன். எனக்குச் சீக்கிரமாக விவாகரத்தும் கிடைத்தது. அதுக்கப்புறம் யாரையுமே நம்பல ரோகித்.

அதுக்கப்புறம் நான் அப்பா ஹோட்டலைப் பராமரிக்க ஆரம்பிச்சேன். ஆனா இந்தச் சமுதாயம் என்ன சொல்லிட்டு இருக்கு தெரியுமா? ‘புருஷன் ஆம்பளை, அப்படித்தான் இருப்பான். நீங்க தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு அவன் கூட அப்படி இப்படி இருந்து அவனை ஒரு கைக்குள்ள போட்டுக்க வரணும். அதை விட்டுட்டு விவாகரத்து பண்ணி தனிக்கட்டையா வாழ்றதெல்லாம் தப்பு’ அப்படின்னு சொன்னாங்க.

அதுக்கப்புறம் நாட்கள் போச்சு. நீங்க அடிக்கடி உங்க பிரண்ட்ஸோட பார்ட்டின்னு வருவீங்க. உங்களைப் பார்க்கும்போது எனக்கு ஏதோ மனசுல ஒரு மின்னல். நம்ம மீட் பண்ணிப் பேச வேண்டிய சமயம் வந்தது. கூட ஏற்பட்ட நட்பு… ஆனா எனக்கும் ஒரு குழந்தை இருக்கு இல்லையா? அதனால விலகி இருந்தேன். ஆனா நீங்க நல்ல விதமாக என்கிட்ட இருந்தீங்க.

அதனாலதான் வெட்கத்தை விட்டு நானே உங்களைப் ப்ரொபோஸ் பண்ணேன். இதுல வெட்கப்பட ஒன்னும் இல்லை, இருந்தாலும் நான் ஒரு பொண்ணு இல்லையா? சமுதாயத்தைப் பொறுத்தவரைக்கும் ஒரு பொண்ணு அவ உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் காட்டினா ரொம்பக் கேவலமான செயல் இல்லையா?

இதோ பாருங்க, லாவண்யா பண்ணதுக்கு எப்படிப் பேசினாங்க? அதனால என்னையும் அந்த மாதிரி பேசுவாங்கன்னு பயத்துல இருந்தேன். ஆனா எனக்கு லாவண்யாவைப் பார்த்த பிறகு ஒரு தைரியம் வந்தது. ஏன், இதை ஒரு ஆம்பளை பண்ணா ‘அவன் ஆம்பளை அப்படித்தான் இருப்பான்’ அப்படின்னு சொல்றீங்க? ஆனா அவன் பொண்டாட்டி இருக்கும்போது தப்பான இல்லீகல் ரிலேஷன்ஷிப்ல இருப்பான்.

ஆனா லாவண்யா அப்படி இல்லையே? தனக்கான ரிலேஷன்ஷிப் சரி இல்லைன்னு ஒரே காரணத்துக்காக அதைப் பிரேக்கப் பண்ணிட்டு, கேரியர் மற்றும் லைஃப் பார்த்துட்டுப் போறாங்க. இதுல தப்புச் சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லை. அதனாலதான் உங்களுக்கு ப்ரொபோஸ் பண்ணி, சீக்கிரமாவே நம்ம கல்யாணம் பண்றதுக்காக நான் அறிவிப்பும் செஞ்சுக்கிட்டேன்.

ஆனா என் குழந்தையை மட்டும் எங்க அம்மா அப்பா கிட்ட வச்சு தான் வளர்ப்பேன். என்ன இருந்தாலும் நீங்க வளர்ப்புத் தந்தை தான். அஞ்சு வயசுப் பொண்ணுக்கு எல்லாமே தெரியும். மேலும் நமக்கே இன்னொரு குழந்தை தப்பித் தவறி உருவானாலும், நீங்க அது மேல காட்டுற பாசத்தை என் முதல் குழந்தை மேல காட்ட மாட்டீங்க… அதுக்காக மட்டும் தான். ஆனால் நான் சுயநலமான அம்மாவா இருக்கப் போறதில்லை. எனக்கு ஹஸ்பண்டா ஒரு துணை வேணும், என் குழந்தைக்கு ஒரு அப்பா வேணும். ஆனா உங்க கூடப் பிரச்சினை வரக்கூடாது, அதுக்காகத் தான் இந்த விலகல். மத்தபடி ஒன்னும் இல்லை” என்று சமூகத்தில் இருக்கும் எதார்த்தமான பயங்களைத் தனக்குள் இருப்பதாக மித்ரா விவரித்தாள்.

“ஓப்பனா சொல்லணும்னா, உனக்கு இன்னும் என் மேல நம்பிக்கை இல்லை. நீ வச்சிருக்கிறது பொம்பளைக் குழந்தை. என்ன இருந்தாலும் நான் ‘மலர் விட்டு மலர் தாவும் ஆண் வண்டு’ன்னு உனக்கு என் மேல சில பல டவுட் இருக்கத்தான் செய்யும். அதைப் போக்கத் தான் இந்த விலகல்னு எனக்குப் பச்சையாவே தெரியுது. நீ பயப்படாத, சின்ன குழந்தைக்கு மேல, அதுவும் என் பொண்ணு ஸ்தானத்தில் இருக்கிற ஒரு குழந்தைகிட்ட சத்தியமா நான் அந்த மாதிரி நடந்துக்கிற டைப் கிடையாது.

ஏய், என்னோட பழைய வாழ்க்கையை எடுத்துக்கோ. லாவண்யாவை விருப்பம் இல்லாம அவளை நான் துன்புறுத்தினதே கிடையாது. ஆறு மாசம் என் கூட இருந்த பொண்ணைக் கண் இமைப் போல் பார்த்துக்கிட்டேன். ஊர் அவள் தப்பாப் பேசட்டும், அவளுக்கு ஆறுதலாப் பேச ஒரு ஜீவனா நான் இருந்தேன். ஆறு மாசம் முடிஞ்சது, எங்களுக்குள்ள ஒண்ணுமே நடக்கல. இதைச் சொன்னாலும் யாரும் நம்பப் போறது இல்லை. எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. எனக்கு இருக்கிற ஒரே கவலை, எதுக்காக என்கிட்ட ‘கேன்சர்’ அப்படின்னு ஒரு நோயாளி மாதிரி பொய் சொல்லி என்னை விட்டுப் போகணும்? அப்படிச் சொன்னா நான் அவளோட நட்பை முறித்துக் கொள்வேன் அப்படின்னு நினைச்சுக்கிட்டா போல” என்று சொல்லி கவலைப்பட்டான் ரோகித்.

“ஓகே ஓகே, கவலைப்படாதீங்க. எல்லாம் சரியாகிவிடும். அவங்களுக்கு என்று ஒரு வருங்காலம் இல்லாம போகாது. எல்லாம் நடக்கும்” என்று மித்ரா சமாதானம் செய்தாள். அதே சமயம், அவன் பேசிய அனைத்தையும் தனது மொபைல் மூலம் ரெக்கார்ட் செய்து வைத்த மித்ரா, அதை ஒரு எண்ணிற்கு அனுப்பி வைத்தாள்.

அந்தச் செய்திக்காகக் காத்திருந்தவனுக்கு, அந்த ரெக்கார்ட் குறுஞ்செய்தியாக அவன் அலைபேசிக்கு வந்தது. அதை எடுத்து ஆன் செய்தவன், ரோகித் பேசிய அனைத்தையும் கேட்டு முடித்து ஒரு கள்ளப் புன்னகையோடு…

“உலகத்திலேயே ரொம்பப் பாவப்பட்ட ஜீவன் நீதான் லாவண்யா. பாவம், என் கண்ணில் மறுபடியும் மாட்டிக்கிட்ட” என்று நினைத்துக்கொண்டே அவள் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

மித்ராவின் ஒன்றுவிட்ட பெரியப்பா மகன் – விகாஸ் கண்ணன்.

You may also like

Leave a Comment

About Me

Featured