Home FAMILY NOVEL12) வலி 💔

12) வலி 💔

by sreejanovels
14 views

அத்தியாயம் 12

அவள் இதழ் நோக்கி வருபவனைத் தள்ளிவிட்டு…

“நீங்க பண்றத பாத்தா ஏதோ பிளான் பண்ணி என்ன கல்யாணம் பண்ண மாதிரி இருக்கு. பெருசா பேசினீங்க… நெருங்க மாட்டேன், அதை பண்ண மாட்டேன், இதை பண்ணமாட்டேன், குழந்தைகளுக்காக மட்டும் தான் அப்படின்னு! ஆனா நீங்க எல்லை மீறி போறீங்க மிஸ்டர் ஆதித்யா. நான் பழைய மாதிரி ஏமாற விரும்பல. உங்க பார்வைக்கு நான் கெட்டவளாவே இருந்துட்டு போறேன். தயவு செஞ்சு கருணை பார்வையோடு என்கிட்ட வராதீங்க. ஒருவேளை எல்லா உண்மைகளையும் தெரிஞ்சிருக்கணும், அதனால தான் நீங்க என்கிட்ட இப்படி பழகுறீங்க. அப்படி என்ன பத்தி உண்மை எல்லாம் தெரியாம இருந்திருந்து, லாவண்யா சாதாரணமா உங்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு உங்களை விட்டு போய் இருந்தா என்னை நீங்க கல்யாணம் பண்ணி இருப்பீங்களா? மணமேடையிலே என் கழுத்தை நெருக்கி கொன்று இருப்பீங்க… இருக்க மாட்டீங்க!” என்று சுருக்கென்று கேட்க, அப்பொழுதும் அசராமல் அவளை இடையோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் ஆதித்யா.

“பழையது பழையபடி போச்சு. எனக்கு அதைப் பத்தி கவலை இல்லை. உனக்கு புருஷன் இல்லை, எனக்கு பொண்டாட்டி இல்லை. நம்ம ரெண்டு பேரோட குழந்தைகளுக்கு வருங்காலம் தேவை, அதனால கல்யாணம் பண்ணோம். சரி ஒத்துக்கிறேன். அதுக்குன்னு நீ யாரோ நான் யாரோ மாதிரி வாழ முடியுமா? நீ இப்போ என் பொண்டாட்டி. உன்கிட்ட கேட்காமல் வேற யாருகிட்ட கேட்க போறேன்?” என்று அவள் சிவந்த மூக்கைப் பிடித்து ஆட்டிக் கொண்டே இருக்க…

“போதும் போதும் சாமி, அப்புறம் வந்து பாத்துக்கலாம். எல்லாரும் வெயிட் பண்ண போறாங்க, நம்ம ரெண்டு பேரும் ரெடி ஆகணும் வாங்க” என்று டிரெஸ்ஸிங் அறைக்குச் சென்று உடைமாற்றி வந்தாள். அவள் உடைக்கு ஏற்ற நிறத்தில் சட்டை இருக்கிறதா என்று பார்த்து, ஓரளவுக்குப் பொருந்துவது போல் ஒரு சட்டையை எடுத்துக்கொண்டு மாட்டி வெளியே வந்தான். இருவரும் ஜோடியாக வருவதைப் பார்த்து அனைவருக்கும் மகிழ்ச்சி. அனன்யா தன் அம்மாவைப் பார்த்து கைகளை நீட்ட, குழந்தையை வாங்கிக் கொள்ள அனைவரும் காரில் மகிழ்ச்சியாகப் பயணம் செய்தனர்.

முன் சீட்டில் ஆதித்யா வண்டியை ஓட்ட, அருகில் அகல்யா அமர்ந்து கொள்ள, மடியில் அனன்யா குட்டி விளையாடிக்கொண்டிருந்தாள். அவர்களுக்குப் பின்பக்கம் அன்னலட்சுமி, மற்ற இரண்டு குழந்தைகள் அமர்ந்திருக்க, கர்ப்பிணி என்பதால் அஸ்வினியைத் தனியாக ஒரு காரில் அழைத்து வந்து கொண்டிருந்தார் கணேஷ். அவன் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, அஸ்வினியின் கரங்களைப் பிடித்துக் கொண்டு வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான்.

“எதுக்காக என் கையை இப்படி புடிச்சுகிட்டு இருக்கீங்க? விடுங்க கைய” என்று கையை விடுவிக்க முயற்சி செய்தாலும் அவளால் முடியவில்லை. அவன் இறுக்கமாகப் பற்றிக்கொண்டு…

“என்ன, பழி வாங்கும் நேரமா இது? உபயோகப்படுத்தலாம் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன். ஆனா என்ன வேணாலும் பண்ணிக்கோ. நீ எனக்கு கொடுத்த சந்தோஷத்தை விட இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. நான் உனக்கு கொடுத்த கொடுமையை விட நீ ஒன்னும் பண்ண மாட்ட. அமைதியா கொஞ்ச நேரம் இந்த மூவ்மெண்ட்டை என்னை என்ஜாய் பண்ண விடு. அதான் உனக்கு மூணு மாசம் ஆயிடுச்சு, நீ என்ன வேணாலும் சாப்பிடலாம், புடிச்சதை சாப்பிடு, சந்தோஷமா இரு” என்று சொன்னவனைப் பார்த்து நக்கலாகச் சிரித்துக்கொண்டே,

“புடிச்சதை சாப்பிடுவேன், உங்க இஷ்டப்படி நான் இருப்பேன். ஆனா சந்தோஷம் மட்டுமே என் வாழ்க்கையில கிடையாது. எப்போ என்னை வெறுத்து பேசி அன்னைக்கு என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்புனீங்களோ, அப்பவே என் காதல் செத்துப்போச்சு. என் வாழ்க்கையில் சந்தோஷம் எல்லாமே அழிஞ்சு போச்சு. நான் வாழறது என் குழந்தைக்காக மட்டும் தான். இப்போ இந்த குழந்தைக்கும் சேர்த்து வாழப்போகிறேன், அதுவே எனக்கு போதும்” என்று சொல்ல…

“இன்றைய குத்தல் பேச்சு பரவால்ல, நல்லாவே பேச கத்துக்கிட்ட. ஆனா என் அளவுக்கு கிடையாது. ஒழுங்கா சீன் போடாமல் கம்முனு வா” என்று பேசிவிட, அவளுக்குத்தான் பல்ப் பியூஸ் போன நிலைமை வந்தது.

‘எவ்வளவு பேசினாலும் சாரி அப்படின்னு என்கிட்ட கெஞ்சி வர மாட்டேங்குறான், அமைதியாக இருக்கானே! சரி, ரொம்ப ஓவரா போனா வேற மாதிரி ஆயிடும், இப்படியே அடங்கி வாசிப்போம்’ என்று மனதிற்குள் சொல்லி அமைதியாகப் பயணத்தை மேற்கொள்ள, ஒரு மிகப்பெரிய நட்சத்திர விடுதி வந்தது. ஏற்கனவே டேபிள் புக் செய்யப்பட்டதால் அனைவரும் அவர்களுக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டு பிடித்த உணவுகளை ஆர்டர் செய்தனர். அனைவரும் மகிழ்ச்சியாக உண்டு பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அங்கே ஒரு மங்கையோடு லாவண்யாவின் கணவன் ரோகித் மிகவும் நெருக்கமாக அமர்ந்து செல்பி எடுப்பதைப் பார்த்த கணேஷுக்கு அதிர்ச்சி. அவன் எங்கே பார்க்கிறான் என்று அவன் மனைவியும் பார்க்க, இருவரும் அவனை அதிர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, ஆதித்யா எதேர்ச்சியாகத் திரும்ப மொத்தக் குடும்பமும் அவர்களைப் பார்த்தது.

“இது ரோகித் தானே? யாரோ ஒரு பொண்ணு கூட இருக்காரு?” என்று அஸ்வினி கேட்டதற்கு கணேஷ் தெரியவில்லை என்று சொல்ல… ரோகித் அந்தப் பெண் மற்றும் சில நண்பர்கள் அங்கே சூழ்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது தனியாக வந்த ஒரு பெண்ணிடம் அஸ்வினி அழைத்து அவர்கள் யார் என்று கேட்க…

“அவதான் இந்த ஹோட்டலோட ஓனர் பொண்ணு மித்ரா. இன்னைக்கு அவளுக்கு எங்கேஜ்மென்ட் அனௌன்ஸ்மென்ட். அதோ இருக்காரு ரோகித், அவர் கூட ரெண்டு பேரும் தன்னுடைய நிச்சயதார்த்த தேதியை நண்பர்களான எங்களிடம் தெரிவிக்க இந்த ஏற்பாடு பண்ணாங்க. அதான் நடந்துகிட்டு இருக்கு. நீங்க எதுக்கு கேக்குறீங்க?” என்று கேட்டதற்கு அஸ்வினி, “ரோகித் எங்க கம்பெனியில் வேலை செய்பவர்” என்று மட்டும் சொல்லி அங்கிருந்து விடைபெற்று விட, அந்தப் பெண்ணும் எதையும் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டாள்.

இவை அனைத்தையும் தன் குடும்பத்தாரிடம் சொல்லி முடிக்க கணேஷுக்கு முகம் கருத்துப்போய்விட்டது. தன்னுடன் பிறந்தவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்று, அதுவும் அவள் ஒரு ஏமாற்றுக்காரி என்றால் அவளுடைய இரண்டாவது கணவன் அதற்கு மேல் ஒரு ஏமாற்றுக்காரன் போல! அனைவரும் ஆதித்யாவைப் பார்க்க, அவன் மகிழ்ச்சியாக சிக்கன் பாஸ்தாவை சாப்பிட்டுக்கொண்டு…

“இவன்கிட்டயும் சுகம் கிடைக்காம போயிருக்கும், அதான் இன்னொருத்தன் தேடி போய் இருப்பா. அதனால இவன் நல்ல பணக்கார பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கிறான். அந்த மித்ரா ஏற்கனவே விவாகரத்து ஆன பொண்ணு, ஒரு பெண் குழந்தை இருக்கு. எனக்கு தெரிஞ்சு மித்ராவோட அப்பா பணக்கார பசங்க தேடறதுக்கு பதிலா சாதாரண மிடில் கிளாஸ் பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சா மருமகன் கைக்குள்ள இருப்பான் அப்படின்னு நினைக்கிறார் போல. இதான் அவனுடைய தற்போதைய நிலை. உங்களுக்கு இப்போதான் தெரியுது, ஆனா இது எனக்கு மதியமே தெரிஞ்சு போச்சு. உன்னோட தங்கச்சியும் இவனை விட்டு எங்கேயோ வெளியூருக்கு போறதா கேள்விப்பட்டேன். லாவண்யா விட்டுப் போயிருக்கலாம், என்ன இருந்தாலும் அவளும் நம்ம வீட்டுப் பொண்ணு. அவள் எப்பவுமே கண்காணிக்க எனக்குத் தெரிந்த நபர் ஒருத்தர் சொன்னார். இனி அவ வாழ்க்கை அவளோட விருப்பம், இனி அவளைப் பின்தொடர வேண்டாம்னு சொல்லிட்டேன். இப்போ எனக்கும் குடும்பம், குழந்தைகள் வந்தாச்சு. இனி யாரைப் பத்தியும் நானும் கவலைப்படப் போவதில்லை” என்று சொல்லி சாப்பிட்டுக்கொண்டு இருக்க, அனைவருக்கும் ஏதோ போல் ஆகிவிட்டது.

“பாவி மக, ஒழுங்கா இருந்தா ஒரு நல்ல பையனா பார்த்து கட்டி வைத்து கௌரவமா வாழ்ந்திருக்கலாம். பேராசைப்பட்டு பல பேரோட வாழ்க்கையில் விளையாடி இப்ப பாரு எப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்கா! எங்க அண்ணன் சாகும்போது ரெண்டு குழந்தைகளை என் கையில கொடுத்து சத்தியம் வாங்கினார், ரெண்டு பேருக்கும் நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்கணும் அப்படின்னு. ஆனா அவ இப்படி பண்ணிட்டாளே” என்று அன்னலட்சுமி வருத்தமாகச் சொல்ல,

“அத்தை, நம்ம சந்தோஷமா இன்றைய தருணத்தை கொண்டாட வந்திருக்கிறோம். அதனால் நம்ம அந்த வேலையை மட்டும் பார்க்கலாம். நாமதான் அவளைப் பத்தி கவலைப்படுறோம், ஆனா அவள் சந்தோஷமா தான் இருப்பா. நீங்க கவலைப்படாம சாப்பிடுங்க” என்று அகல்யா சொன்னவுடன் அனைவரும் அதை மறந்து மகிழ்ச்சியாகச் சாப்பிட்டுப் பேசிக்கொண்டிருக்க… நேரமானது, அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

குழந்தைகள் அப்படியே உறங்கிவிட, குழந்தைகளை அங்கே படுக்க வைத்துவிட்டு வேறு உடை மாற்றி வந்த அகல்யா, குழந்தைகளுக்கும் இரவு உடை அணிவித்து சோபாவில் அமர்ந்து பெருமூச்சு வாங்கினாள். அதே நேரம் இரவு உடை அணிந்துகொண்டு ஆதித்யா அவள் அருகே இடித்துக்கொண்டு அமர்ந்து, அவள் மீது கைகளைப் போட்டு தன் தோளோடு அணைத்துக் கொள்ள…

“என்ன வேணும் உங்களுக்கு? ரொம்பவே சீன் போட்டுக்கிட்டு இருக்கீங்க. என்ன பிரச்சனை மிஸ்டர் ஆதித்யா? உங்கள் முதல் பொண்டாட்டி ஓடிப்போயிட்டா, அவ ரெண்டாவது புருஷனை விட்டு எங்கேயோ போயிட்டா, அவ தொல்லை இனி இருக்காதுன்னு என்கிட்ட ரொம்பவே அத்துமீற வேண்டாம். நான் அப்பவும் சொன்னதுதான் இப்பவும் சொல்றேன், நீங்க தொட்டா எனக்கு டேவிட் ஞாபகம் தான் வரும் அப்படின்னு!” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு சொன்னவளைத் தன் முகம் பார்க்க வைத்து…

“டேவிட் தொடும்போது உனக்கு யார் ஞாபகம் வந்தது? அதையும் சொல்லு?” என்று கேட்டான் ஆதித்யா.

அவன் சொன்னவுடனே தீப்பார்வை பார்த்து, கோபத்தில் அவன் கன்னத்தில் அறைந்தாள் அகல்யா. “என்ன வார்த்தை பேசுறீங்க? டேவிட்டும் நீங்களும் ஒன்னு கிடையாது. அவர் கடவுள் திசை மாறிப் போனா என் வாழ்க்கையில வந்த தெய்வம்! கல்யாணமாகி மூணு மாசம் நான் ஏமாற்றத்தோடு வலியில் இருந்தேன். அதை கொஞ்சம் கொஞ்சமா போக்கி அவருக்குள்ள என்னைச் சேர்த்து ரெண்டு பேரும் வாழ்ந்த வாழ்க்கை இருக்கே… அதை நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது, அவ்வளவு நல்லா இருந்தது. அப்புறம் தாய்மைன்னு ஒரு அந்தஸ்து எனக்கு கிடைச்சது. பிரசவ நேரத்தில் டேவிட் துடிச்ச துடிப்பு பற்றி உங்களுக்கு என்ன தெரியப்போகுது? குழந்தை பிறந்த பிறகு ஆத்விக் குட்டிய அவர் கீழே விடவே இல்லை. எங்க ரெண்டு பேரையும் அப்படிப் பாத்துக்கிட்டாரு. ஆறு மாசத்துக்கு முன்னாடி அவரோட மரணம் மட்டும் நடக்காம இருந்திருந்தா, இந்நேரம் நான் என் டேவிட் கூட சந்தோஷமா இருந்திருப்பேன். ஆனா அவர் இல்லை. அதை ஏத்துக்கிட்டேன். என் குழந்தைக்கு ஒரு அப்பா தேவை, எனக்கு இன்னொரு வாழ்க்கை பாதுகாப்பு தேவை. அதனால தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். நீ தான் என்னோட வருங்கால கணவர் அப்படின்னு எனக்குத் தெரியாது. நீ என்று தெரிந்த அப்புறம் கூட என்னால ஒன்னும் பண்ண முடியல. கணேசன் அண்ணாவுக்குச் சத்தியம் பண்ணிக் கொடுத்தேன். அதனால மட்டும்தான் இந்த கல்யாணம் நடந்தது. அதுக்கு மீறி ஒண்ணுமே இல்லை. தயவு செஞ்சு என் விருப்பமில்லாமல் தொட வேண்டாம்” என்று அவனைத் தள்ளிவிட்டு கட்டில் ஓரமாகச் சென்று படுத்துக்கொண்டாள்.

அவன் மனதிற்குள்ளும்… ‘அவசரப்பட்டு இருக்கக் கூடாது. அவளுக்கு என்னோட நிலைமை தெரியாதே! அவளுக்கு எப்படிச் சொல்லிப் புரிய வைப்பேன்? நான் வாழ்ந்த வாழ்க்கை எப்படி? நீ தான் என்னுடைய முதல் பெண் தொடுகையும் பெண் வாசமும் அப்படின்னு எப்படிச் சொல்ல முடியும்?’ என்று வருத்தப்பட்டு மனதிற்குள் சொல்லிக்கொண்டு சோபாவில் உறங்கிவிட, அவள் குழந்தைகளோடு உறங்க ஆரம்பித்தாள்.

ஆனால் நாளையே இருவரும் இரு உயிர் ஓருயிராக மாறும் தருணத்தை அறியாமல்…

You may also like

Leave a Comment

About Me

Featured