அத்தியாயம் 20
கோட்டையின் வெடிச்சத்தம் அடங்குவதற்குள், மெக்சிகோ மத்திய சிறையின் கனமான இரும்பு கதவுகள் ஒரு சத்தத்துடன் திறந்தன. ரிகார்டோ, தனது விலையுயர்ந்த கோட்டைச் சரி செய்தபடி வெளியே வந்தான். அவனது கண்கள் பசியுள்ள ஓநாயின் கண்களைப் போல மின்னின.
அவனது காருக்கு அருகில் ஒரு உருவம் குனிந்து வணங்கி நின்றது. அது ஆண்டனி. கோட்டை வெடிப்பில் காயமடைந்து, முகம் சிதைந்து, அதிகாரத்தை இழந்து ஒரு பிச்சைக்காரனைப் போல நின்றிருந்தான்.
“சார்… என்ன மன்னிச்சிடுங்க. அந்த டேவிட்டும் பொண்ணும் எல்லாத்தையும் அழிச்சிட்டாங்க,” என்று ஆண்டனி நடுங்கினான்.
ரிகார்டோ அவனது கன்னத்தில் மென்மையாகத் தட்டினான். “பரவாயில்லை ஆண்டனி. நீ ஒரு கருவிதான். இப்போ நான் வெளிய வந்துட்டேன். அதுக்காக உனக்கு முழு மன்னிப்பெல்லாம் கிடைக்காது. டேவிட் மில்லர் அவனோட வெற்றியை இன்னைக்குக் கொண்டாடுவான். ஆனா நாளைக்கு அவன் தன் வாழ்க்கையிலேயே மிகப்பெரிய இழப்பைச் சந்திப்பான்.”
மறுபுறம், ஒரு சிறிய வாடகை வீட்டில் டேவிட், காயத்ரி, சாரு மற்றும் சீதா அமர்ந்திருந்தனர். அவர்கள் அனைவரது முகத்திலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நிம்மதி தெரிந்தது.
“அம்மா, இன்னும் கொஞ்ச நேரத்துல நாம ஏர்போர்ட் கிளம்புறோம். இந்த மெக்சிகோவோட ரத்த சரித்திரம் இதோட முடியட்டும்,” என்றான் சாரு.
சீதா டேவிட்டின் கையைப் பற்றிக்கொண்டார். “டேவிட், நீ என் மகனை விட அதிகமா என்னைப் பார்த்துக்கிட்ட. நீயும் காயுவும் இந்தியாவுல கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா வாழணும்.”
டேவிட் காயத்ரியைப் பார்த்தான். அவள் அவனது பார்வையில் இருந்த காதலைப் புரிந்து கொண்டு புன்னகைத்தாள். ஆனால், அவளது போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதைப் பார்த்ததும் அவளது முகம் வெளுத்தது.
“என்ன ஆச்சு காயு?” டேவிட் பதறினான்.
காயத்ரி போனைத் டேவிட்டிடம் காட்டினாள். அதில் ஒரு வீடியோ இருந்தது. ரிகார்டோ சிறையிலிருந்து வெளியே வரும் காட்சி அது. வீடியோவின் அடியில் ஒரு வாசகம் இருந்தது: “விமான நிலையம் போறீங்களா? போங்க… ஆனா அங்க உங்களுக்காக ஒரு பரிசு காத்திருக்கு.”
“அவன் வெளிய வந்துட்டான்!” சாரு அதிர்ச்சியில் கத்தினான்.
“டேவிட், இது பொறி. நாம ஏர்போர்ட் போனா அங்க பெரிய ரத்தக் களறியே நடக்கும். அவன் நம்ம எல்லாரையும் அங்கேயே முடிக்கப் பார்க்கிறான்,” என்றாள் காயத்ரி.
டேவிட் தனது துப்பாக்கியைச் சோதித்தான். “சாரு, நீ அம்மாவைக் கூட்டிட்டு சாலை வழியாக எல்லை தாண்டிப் போ. நான் காயத்ரியை அழைச்சிட்டு வேற பாதையில வர்றேன். நாம எல்லாரும் பாதுகாப்பான இடத்துல சந்திப்போம்.”
திட்டம் போடப்பட்டது. ஆனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேற முயன்றபோது, அந்தப் பகுதியைச் சுற்றி நூற்றுக்கணக்கான கறுப்பு நிறக் கார்கள் வந்து நின்றன. கார்களில் இருந்து இறங்கியவர்கள் ரிகார்டோவின் நேரடித் தாக்குதல் படை.
“தப்பிக்க வழியே இல்லை டேவிட்!” வெளியே ரிகார்டோவின் குரல் ஒலிபெருக்கியில் கேட்டது.
டேவிட் காயத்ரியின் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான். “காயு… கடைசியில் தான் நம்ம கதை முடியும்னு நினைச்சேன். ஆனா இப்போவே கிளைமாக்ஸ் மாதிரி இருக்கே?” என்று லேசான சிரிப்புடன் கேட்டான்.
“இது கிளைமாக்ஸ் இல்ல டேவிட்… இது ஒரு இடைவேளை . இன்னும் நாம ஆட வேண்டிய ஆட்டம் நிறைய இருக்கு,” என்று சொன்ன காயத்ரி, தன் கையில் இருந்த ஒரு சிறிய ரிமோட்டை அழுத்தினாள்.
வீட்டின் தரை மெல்ல நகரத் தொடங்கியது. அது ஒரு ரகசியப் பாதை.
இது போன்ற பிரச்சனை வரும் என்பதால் தானே இவர்கள் போல கேங்ஸ்டர் காகவே உருவாக்கப்பட்ட எத்தனை வீடுகள் இதுபோன்ற ரகசிய பாதைகளை வைத்திருக்கிறது. இவர்கள் அதிர்ஷ்டம் இப்போது அதற்கான வழி வகுக்கிறது.
வீட்டின் தரை பிளந்து ஒரு ரகசிய சுரங்கப் பாதை வெளிப்பட்டது. மெக்சிகோ போன்ற ஆபத்தான நகரங்களில், டேவிட் எப்போதும் ஒரு தப்பிக்கும் பாதையைத் தயார் நிலையில் வைத்திருப்பான்.
“சீக்கிரம்! உள்ளே இறங்குங்க!” டேவிட் கத்தினான்.
சாரு சீதாவைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு முதலில் இறங்கினான். காயத்ரி தனது லேப்டாப்பை எடுத்துக்கொண்டு பின்தொடர, டேவிட் கடைசியாக இறங்கி அந்த ரகசியக் கதவை மூடினான். அடுத்த சில நொடிகளில், வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு ரிகார்டோவின் ஆட்கள் உள்ளே நுழைந்தனர். ஆனால், அறை வெறிச்சோடி இருப்பதைப் பார்த்து அவர்கள் திகைத்தனர்.
சுரங்கத்திற்குள் இருட்டும் ஈரப்பதமும் சூழ்ந்திருந்தது. தூரத்திலிருந்து வரும் தண்ணீரின் சத்தம் அது ஒரு கழிவுநீர்க் கால்வாயுடன் இணைக்கப்பட்டிருப்பதை உணர்த்தியது.
“டேவிட், நாம எங்க போறோம்?” சீதா பயத்துடன் கேட்டார்.
“அம்மா, இன்னும் ஒரு கிலோமீட்டர் போனா கடற்கரை ஓரம் ஒரு படகு நமக்காகக் காத்துட்டு இருக்கும். அங்கிருந்து நாம மெக்சிகோ எல்லையைத் தாண்டிடலாம்,” என்றான் டேவிட்.
ஆனால், திடீரென்று சுரங்கத்தின் சுவர்கள் அதிரத் தொடங்கின. ரிகார்டோவின் ஆட்கள் மேலிருந்து கிரெனேட் வெடிகுண்டுகளை வீசத் தொடங்கினர். சுரங்கத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்தன.
“காயு, சாரு… நிக்காதீங்க, ஓடுங்க!”
அவர்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது, ஒரு பெரிய இரும்புத் தூண் சரிந்து விழுந்து பாதையை மறித்தது. டேவிட்டும் காயத்ரியும் ஒரு பக்கமும், சாருவும் சீதாவும் மறுபக்கமும் பிரிந்து போயினர்.
“அக்கா! டேவிட்!” சாரு கதவை இடித்தபடி கத்தினான்.
“சாரு, நேரமில்லை! அம்மாவைக் கூட்டிட்டுப் போ. அந்தப் படகுல ஏறு. நாம அங்க சந்திப்போம்!” என்று டேவிட் மறுபக்கத்திலிருந்து கட்டளையிட்டான்.
சாரு தயங்கினாலும், அம்மாவின் பாதுகாப்புக் கருதி அவளை இழுத்துக்கொண்டு ஓடினான். இப்போது டேவிட்டும் காயத்ரியும் அந்த இருண்ட சுரங்கத்தில் தனியாக மாட்டிக்கொண்டனர். அவர்களுக்குப் பின்னால் ரிகார்டோவின் ஆட்கள் துப்பாக்கிகளுடன் நெருங்கி வரும் சத்தம் கேட்டது.
“டேவிட், நம்மகிட்ட தோட்டாக்கள் கம்மியா இருக்கு,” காயத்ரி தனது துப்பாக்கியைச் சோதித்தாள்.
டேவிட் அவளைத் தன் பக்கம் இழுத்து அணைத்துக்கொண்டான். அந்த இக்கட்டான சூழலிலும் அவனது பார்வையில் ஒரு தீவிரம் இருந்தது. “காயு, உன்னை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன். இந்தச் சுரங்கத்தோட முடிவுல ஒரு பெரிய நீர்த்தேக்கம் இருக்கு. நாம அங்க குதிச்சுத் தான் ஆகணும்.”
“எனக்கு நீச்சல் தெரியாதே டேவிட்!”
“உனக்கு நான் இருக்கேன்.”
இருவரும் ஓடி ஒரு முட்டுச்சந்தை அடைந்தனர். அங்கே ஒரு பெரிய ராட்சத விசிறி சுழன்று கொண்டிருந்தது. அதற்கு அடியில் ஆழமான தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. பின்னால் வந்த ஆட்கள் சுடத் தொடங்கினர்.
டேவிட் காயத்ரியைத் தூக்கிக்கொண்டு அந்தத் தண்ணீருக்குள் குதித்தான். குளிர்ந்த நீர் அவர்களை விழுங்கியது. மேலிருந்து ரிகார்டோவின் ஆட்கள் தண்ணீருக்குள் சுட்டனர். குண்டுகள் தண்ணீரில் கோடுகளைக் கீறிக்கொண்டு சென்றன.
நீருக்கடியில் டேவிட் காயத்ரியின் இதழ்களில் சுவாசம் கொடுத்தபடி அவளை ஆழத்திற்கு இழுத்துச் சென்றான். சில நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு, அவர்கள் ஒரு கால்வாய் வழியாகக் கடற்கரையில் வந்து விழுந்தனர்.
வானத்தில் மின்னல் வெட்டியது. மழையில் நனைந்தபடி காயத்ரி மூச்சிரைக்கத் தரையில் கிடந்தாள். டேவிட் அவளருகே அமர்ந்து அவளது முகத்தைத் துடைத்தான்.
“நாம தப்பிச்சிட்டோம் காயு,” என்றான் டேவிட்.
ஆனால், கடற்கரையில் ஒரு கறுப்பு நிறக் கார் நின்றது. அதிலிருந்து ரிகார்டோ இறங்கி வந்தான். அவன் கையில் ஒரு சிகார் இருந்தது. அவனுக்குப் பின்னால் நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் அவர்களைக் குறிவைத்தன.
“டேவிட்… நீ எவ்வளவு வேகமா ஓடினாலும், என் நிழலைத் தாண்ட முடியாது. ஆனா இப்போ எனக்கு உன் மேல கோபம் இல்லை. எனக்கு ஒரு உதவி வேணும்,” என்றான் ரிகார்டோ வஞ்சகமாக.