Home FAMILY NOVEL19) வலி 💔

19) வலி 💔

by sreejanovels
4 views

அத்தியாயம் 19

“என்னம்மா நீ! இவ்வளவு விஷயம் நடந்திருக்கு, எனக்கு ஒரு தகவல் சொல்லாம இருந்திருக்கீங்க? வீட்ல நானும் ஒரு பெரியவள் இருக்கேன்றதை மறந்துட்டீங்களா?” என்று தன் மகள் அஸ்வினி வீட்டில் நடந்த விஷயத்தைக் கூற, அன்னலட்சுமி கவலையோடு மகளிடம் ஆதங்கமாகக் கேட்டார்.

“அம்மா, நீங்க மாத்திரை போட்டுக்கிட்டுப் படுத்துக்கிட்டு இருப்பீங்கன்னு நினைச்சுட்டோம். திடீரென்று ஹால்ல எல்லாரும் பேசிட்டு இருக்கும்போது விகாஸ் அண்ணன் சத்தம் போட்டுக்கிட்டு இருந்தாரு. அதான் என்னன்னு போய் பார்த்தா, பாவம் லாவண்யாவுக்கு ஏதோ ஆயிருக்கு. தலைல இருந்து ரத்தம் சொட்டிக்கிட்டே இருந்தது. அதான் ஹாஸ்பிடலுக்கு அனுமதிக்கப் போயிருக்காங்க. என்ன ஆச்சுன்னு தெரியல. கூட ஆதி அண்ணாவும் அண்ணியும் போயிருக்காங்க. பசங்க மூணு பேரும் தூங்கிட்டு இருக்காங்க. பாவம் மீனாட்சி ஆன்ட்டி ரொம்பக் கவலையா இருக்காங்க. ‘இன்னைக்குக் கல்யாணமான பொண்ணுக்குப் போய் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துடுச்சே’ அப்படின்னு வருத்தப்படுறாங்க,” என்று அஸ்வினி கூறினாள்.

அன்னலட்சுமி உடனே ஓடிச் சென்று மீனாட்சியைப் பார்த்து, “மீனு, கவலைப்படாதேம்மா. குழந்தைக்கு எதுவும் ஆகாது. அதுக்காக என் மருமகப் பொண்ணைத் தப்பா எதுவும் நினைக்காதே. கொஞ்ச நாளா அவ வாழ்க்கை சரியில்லை, இது அதுக்கு ஒரு திருஷ்டி கழிஞ்ச மாதிரி இருக்கும்னு நினைச்சுக்கோ. இனிமே பாரு, உன்னோட மகனும் மருமகளும் நல்லபடியா வாழ்வாங்க,” என்று ஆறுதலாகப் பேசினார். அவரைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே மீனாட்சி பேசத் தொடங்கினார்.

“நானும் பார்த்துக்கிட்டுத் தான் இருக்கேன் அக்கா. என் மருமகளுக்கு எதுவும் ஆகாது. அவளைப் பற்றிய விஷயங்களைக் கேள்விப்பட்டப்போ எனக்கு அவள் மீது நல்ல அபிப்பிராயமே இல்லை. ஆனா என்னவோ, அவளை நேர்ல பார்த்த பிறகு எதையும் கேட்கத் தோணல, பேசத் தோணல. என் மருமகளா என் மகன் பக்கம் நிக்கும்போது அவ்வளவு சந்தோஷமா இருந்தது. அவள் பார்வையில ஏதோ இருக்கு, எதையோ மறைக்கிறா. அவளுக்குள் சில பல கேள்விகள், சந்தேகங்கள், வலி, வேதனைன்னு நிறைய இருக்கு. இத்தனை வருஷம் உங்க வீட்ல இருந்திருக்கா, என்னைக்காவது ஒரு நாள் அவகிட்ட தனியா உக்காந்து என்ன ஏதுன்னு கேட்டு இருக்கீங்களா??”

மீனாட்சி கேட்ட பிறகுதான் அன்னலட்சுமிக்கு உறைத்தது. தான் எப்பொழுதும் பிசினஸ் வேலை என்று சென்றுவிட, பிள்ளைகள் எல்லாம் கல்லூரிக்கும் பள்ளிக்கும் சென்று வருவார்கள். அப்படி இருக்கும் போதுதான் திடீரென்று ஆதித்யா, “நான் லாவண்யாவைத் திருமணம் செய்யப் போகிறேன், அவளைத்தான் நான் காதலிக்கிறேன்” என்று சொன்னான். தன் மகன் ஆசைப்பட்டு விட்டானே என்ற மகிழ்ச்சியில், அண்ணன் மகளுக்குத் தன் மகனைக் கட்டி வைத்து அழகு பார்த்தார் அன்னலட்சுமி. ஆனால் இருவருக்கும் சரியாக மனம் ஒத்துப் போகாமல் எப்போதும் சண்டை வந்து கொண்டே இருக்கும். திடீரென்று விவாகரத்து கேட்டு அடம் பிடிக்க, அந்த நேரம் கர்ப்பமாக இருந்தாள். குழந்தை பிறந்த இரண்டே மாதத்தில் மொத்தமாக வெளியேறியவளை இப்போதுதான் பார்க்கிறார். என்னவென்று கேட்க முடியும்? திருமணமான பிறகு இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும் போது, தனியே அழைத்து என்ன ஏது என்று ஒரு பெண்ணாகப் பெண்ணின் மனம் அறிய முடியாமல் போய்விட்டதே என்று நினைத்துத் தன்னைத் தானே திட்டிக் கொண்டார் அன்னலட்சுமி.

அவரின் குற்ற உணர்ச்சி கலந்த பார்வையைப் பார்த்த மீனாட்சி, “ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணுக்கு எதிரின்னு சொல்லுவாங்க, அது 25% உண்மையா தான் இருக்கு. மொத்தமா எல்லாப் பொண்ணுங்க மேலையும் பழி போட முடியாது இல்லையா? சரி விடுங்க, இனி என் மருமகளைப் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு என்னோடது. அஸ்வினி, வேற ஏதாவது டிரைவர் இருக்காங்களா? நான் ஹாஸ்பிடல் போகணும், என்னால இங்க இருக்கவே முடியல. அப்புறம் நான் அனன்யாவைத் தூக்கிட்டுப் போகலாமா? என்னதான் உங்க மகன் ஆதிக்கு முழுமையாக அனன்யா சொந்தமாக இருந்தாலும், அவனுக்குத் துணையா அகல்யா இப்போ அனன்யாவுக்கு அம்மாவா இருந்தாலும், ஒன்பது மாசம் கருவுல சுமந்து வலிக்க வலிக்கப் பெத்து எடுத்தது என்னோட மருமகள் லாவண்யா. அதை யாராலும் மறக்க முடியாது, மாற்றவும் முடியாது இல்லையா? அதனால குழந்தையை அவகிட்ட ஒரு ஆறுதலுக்காகக் கூட்டிட்டுப் போறேன்,” என்று அனுமதி கேட்டார். அஸ்வினியால் மறுப்பு தெரிவிக்க முடியவில்லை, ஆகையால் அனன்யாவைத் தூக்கி அவர் கையில் கொடுத்தாள். குழந்தையை வாங்கிக் கொண்டு மீனாட்சி மருத்துவமனைக்குப் பயணமானார்.


இங்கே ஒருவன் மருத்துவமனையை இரண்டாக்கிக் கொண்டிருந்தான். மருத்துவர்கள் தங்களால் முடிந்த சிகிச்சையை மேற்கொண்டுதான் இருந்தார்கள். அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்ததால், தலையில் இருந்து ரத்தம் நின்றபாடில்லை. உடனடியாக அவளது ரத்த வகையைச் சார்ந்த ரத்தம் தேவைப்பட்டது. அகல்யாவுக்கும் லாவண்யாவுக்கும் ஒரே ரத்த வகை என்பதால், அகல்யா ரத்தம் கொடுத்து உதவினாள். சிறிது நேரத்திலேயே லாவண்யாவுக்குச் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது. அனைத்தும் முடித்து மருத்துவர் வெளியே வர, அவரை விகாஸ் பிடித்துக்கொண்டான்.

“என் பொண்டாட்டி எப்படி இருக்கா? ஏன் இந்த மாதிரி ஆச்சு? பிளட் எல்லாம் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் எதுவும் சொல்லாம அமைதியா வரீங்க? சீக்கிரம் சொல்லுங்க, அவள் எப்படி இருக்கா??” என்று மூச்சு விடாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டான்.

“சார், சார் பொறுமை! இப்பதானே ட்ரீட்மென்ட் முடிந்திருக்கிறது. இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு தான் எதையும் சொல்ல முடியும். ஆனா தலையில பலத்த காயம் பட்டிருக்கு சார். பின் மண்டையில் அடிபட்டால் எவ்வளவு ஆபத்தோ, அதே மாதிரி முன்பக்கம் அவள் மரத்தில் மோதியதால் வலது பக்கம் நெற்றியில் பலமாக இடிபட்டிருக்கிறது. அதனால நரம்புகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கு. ஒன்னு அவள் முழுமையாகக் குணமாகி வரணும், இல்லையென்றால் அசைவற்ற நிலையில் கோமா ஸ்டேஜுக்கு (Coma Stage) போக வாய்ப்பு இருக்கு,” என்றார் மருத்துவர்.

மருத்துவரின் சட்டையைப் பிடித்துக் கொண்டு, “இந்நேரத்துக்குப் பில் போடுறதுல குறியா இருப்பீங்க. ஒரு உயிரைக் காப்பாத்தத் தெரியல, அப்புறம் எதுக்குடா நீ எம்பிபிஎஸ் படிச்ச? மனுஷன் உயிரைக் காப்பாத்துறதை விட்டுட்டு எங்க உயிரை எடுக்குறீங்க. நான் வேற ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போறேன்,” என்று பைத்தியக்காரனைப் போலக் கதறினான் விகாஸ்.

ஆதித்யா அவனைச் சமாதானம் செய்து அமர வைத்தான். “டேய், நீ எவ்வளவு ஸ்ட்ராங்கா இருப்ப? எதுக்கு இவ்வளவு வீக் ஆயிட்ட? அவளுக்கு எதுவும் ஆகாது. இவ்வளவு பண்ணத் தெரிஞ்ச பிறகு உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கத் தெரியாதா? அதுக்காகத் தானே இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கோம். அவளே சில உண்மைகளைச் சொல்லுற வரைக்கும் முடிஞ்ச அளவுக்கு எவ்ளோ அசிங்கப்படுத்த முடியுமோ அவ்வளவும் அசிங்கப்படுத்தியாச்சு, இக்னோர் பண்ணியாச்சு. ஆனா அவ அழுத்தக்காரி, எதையும் சொல்லாம அமைதியாவே இருக்கா. ஏன், ரோகித் கிட்ட கேட்கும் போது கூட ‘அவ என்னைக்கு என்கிட்ட பேசி இருக்கா? முடிஞ்ச அளவுக்குச் சண்டை தான் போடுவா’ அப்படின்னு சொல்லி இருக்கான். சம்திங் ராங் (Something wrong). அவளைச் சுற்றி ஏதோ நடக்குது. இப்போ கோமான்னு சொல்றது தான் பயமா இருக்கு,” என்று ஆதித்யா கவலையாகச் சொல்ல, கணேசனும் அதை ஆமோதித்தான்.

விகாசுக்கு அழுகை வந்துவிட்டது. அவளை வார்த்தையால் வதைப்பானே தவிர, அவளைத் தன் மனக்கோட்டையில் வசிக்க வைத்திருக்கும் மகாராஜா அவன் தான் என்று அவள் அறிய மாட்டாள். ஆனால் அவன் இதய அரண்மனையில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் இதயராணி அவள்தான் என்பது அவனுக்குத் தெரியுமே.

“லாவி… சீக்கிரம் வந்துடு. நீ மட்டும் பத்திரமா வந்தால் போதும், எனக்கு எதுவும் வேண்டாம். நான் எதையும் கேட்க மாட்டேன், என்ன விட்டுப் போகாத லாவி,” என்று புலம்பிக் கொண்டிருந்தான். இவர்களின் சம்பாஷணையைப் பார்த்த அகல்யாவுக்குத் தலை சுற்றி விழுந்துவிடுவது போல இருந்தது. இதுவரை அவள் கேள்விப்பட்டது லாவண்யா ஒரு துரோகி, ஏமாற்றுக்காரி, பெற்ற பிள்ளையைக் கைவிட்டு ஓடியவள் என்பது தான். ஆனால் அவளுக்காகத் துடித்துப் போய் மூவரும் இப்படிப் பேசுவது அவளுக்கு அதிர்ச்சியைத் தந்தது. ‘நமக்குத் தெரியாமல் ஏதோ சில விஷயங்கள் நடக்கிறது’ என்று அங்கே யோசனையாக அமர்ந்திருந்தாள். அப்போது அனன்யாவைத் தூக்கிக் கொண்டு மீனாட்சி அம்மா உள்ளே நுழைந்தார்.

அகல்யா அவரிடம், “என்னம்மா, பாப்பாவைத் தூக்கிட்டு வந்து இருக்கீங்க? ரொம்ப அழுதாளா??” என்று கேட்டாள்.

“இல்லம்மா, லாவண்யாவுக்கு ஒரு ஆறுதலா இருக்கட்டுமேன்னு குழந்தையை கூட்டிட்டு வந்தேன். அவளுக்கு இப்போ எப்படி இருக்கு??”

“டாக்டர் இன்னும் எதுவும் சொல்லல. கோமா போக வாய்ப்பு இருக்குன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. அவ கண் விழிச்சாதான் நிலைமை தெரியும்,” என்று அகல்யா சொல்ல, மீனாட்சிக்கு அழுகை வந்தது.

தன் அன்னை அனன்யாவுடன் வந்திருப்பதைப் பார்த்த விகாஸ், ஓடிச் சென்று அனன்யாவை வாங்கிக் கொண்டு லாவண்யா இருக்கும் அறைக்குள் நுழைந்தான். மருத்துவர்கள் அவனைத் தடுத்தனர், “சார், இன்னும் அவங்க கண் விழிக்க ஆறு மணி நேரம் ஆகும். அதுவரை நீங்க உள்ளே வரக்கூடாது,” என்று தடுத்தும் கேட்காமல் விகாஸ் பிடிவாதமாக உள்ளே சென்றான். கணேஷும் ஆதித்யாவும் மருத்துவரிடம் அனுமதி பெற்றுத் தர, அனைவரும் வெளியேறினர்.

நிசப்தமான அந்த அறையில், லாவண்யா கண்களை மூடிச் சயன கோலத்தில் இருந்தாள். அனன்யாவோடு விகாஸ் அவள் அருகே நின்றான். குழந்தையைப் பாதுகாப்பாக அமர வைத்து அவள் காதருகே பேசத் தொடங்கினான்.

“எந்த ஒரு அம்மாவும் பெத்த பிள்ளையை, அதுவும் பால் குடிக்கிற பச்சைப் பிள்ளையை விட்டுட்டுப் போக மாட்டா. முக்கியமா இளகிய மனசு கொண்ட என்னோட லாவி இந்த மாதிரி தப்பான காரியத்தைச் செய்யவே மாட்டாள். நீ அப்படி விட்டுட்டுப் போறதுக்கு ஒரு பெரிய காரணம் இருக்கு. அதைத் தெரிஞ்சுக்கத் தான் நாங்க எல்லாரும் உன்னை வெறுக்கிற மாதிரியே பிஹேவ் பண்ணிக்கிட்டு இருக்கோம். அப்போதாவது உண்மையைச் சொல்லுவேன்னு பார்த்தா, அப்பவும் நீ பிடிவாதமா இருக்க. ஆதித்யாவோட வாழ்க்கை நல்லா இருக்கணும், அவன் குடும்பம் நல்லா இருக்கணும்னு நீ எவ்வளவு அசிங்கப்பட்டாய்? உன்னைத்தான் எல்லாரும் தப்பா நினைக்கிறாங்க. ஆனா என்னோட லாவி அப்படி கிடையாது. உனக்காக இல்லாட்டியும், இந்த குழந்தைக்காக நீ மீண்டு வரணும்.”

“நீ நல்லபடியா வந்தா உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்லுவேன். அந்த விஷயம் என்பதற்குப் பதிலாக ஒரு ‘ரகசியம்’ என்று சொல்லலாம். அந்த ரகசியத்தைக் கணேஷ், ஆதித்யாவைத் தவிர வேறு யாருக்கும் தெரியவிடவில்லை. ஆனா நீ ரொம்பவே கஷ்டப்பட்டுட்டாய். அந்த ரகசியத்தைச் சொன்ன பிறகு நீ என்னை ஏத்துக்கிறதும் ஏற்றுக் கொள்ளாமல் போகிறதும் உன்னோட விருப்பம். ஆனா நான் நல்லா இருக்கணும்னா நீ நல்லா இருக்கணும். அப்பதான் நீ யார் நல்லா இருக்கணும்னு ஆசைப்பட்டாயோ அவங்க எல்லாரும் நல்லா இருப்பாங்க,” என்று அவள் காலடியில் தலை வைத்துத் கண்ணீர் மல்கக் கதறினான் விகாஸ்.

அவள் அருகில் இருந்த அந்தச் சிறு மொட்டு அழுது கொண்டிருக்க, விதியின் கோரச் சதியிலிருந்து மீண்டு எழ முயன்றாள் லாவண்யா. அவளுடைய நாசி சீராகத் துடிக்க, தான் பிழைத்துவிட்டதை உணர்த்துவது போல விகாஸின் கையைப் பிடித்தாள் லாவண்யா.

You may also like

Leave a Comment

About Me

Featured