அத்தியாயம் 18
வெற்றிகரமாக பார்ட்டி சக்சஸ் மீட் சிறப்பாக நடைபெற்றது. குடும்பத்தார்கள் மட்டுமே இரவு உணவு அருந்தத் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கே அனைவரும் ஜோடி ஜோடிகளாக அமர்ந்து கொள்ள, குழந்தைகள் தனியாக ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டனர். அனன்யா மட்டும் லாவண்யா, அகல்யா இருவருக்கும் நடுவில் ஒரு சிறு நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தாள்.
இட்லியைப் பிசைந்து சிறிதாகக் குழந்தைக்கு லாவண்யா ஊட்ட வர, அவள் வேண்டாம் என்று முகத்தைத் திருப்பி அகல்யா மீது சாய்ந்து கொண்டாள். அதைப் பார்த்த லாவண்யாவுக்கு முகத்தில் அடித்தது போல் இருந்தது. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது போல் இருந்தது அவளது நிலை. ‘நம் ஓவர் சென்டிமென்டால் என்ன பயன்? அனைத்தும் முடிந்து விட்டதே’ என்று அமைதியாகத் தனக்கான உணவைக் கொஞ்சமாக வைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
மற்ற அனைவரும் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தனர். இரண்டு நாட்கள் அமைதியாக இருந்த அகல்யா கூட ஏதாவது ஒன்று பேசி கலாட்டா செய்து கொண்டிருந்தாள்; குழந்தைகளோடும் தன் நாத்தனார், மாமியாருடனும் இயல்பாக இருந்தாள். இந்தச் சூழலில் தன்னைத் தனித்து ஒதுக்கி வைத்தது போலவே லாவண்யா உணர்ந்தாள். வேண்டுமென்றே இப்படிச் செய்கிறார்கள் என்று அப்பட்டமாகத் தெரிந்தது. அழைப்பிதழ் வைத்துத் தன்னை அவமானப்படுத்தத் திட்டமிடுகிறார்கள் என்று அவளுக்குப் புரிந்தது.
‘நான் ஒன்றும் இவர்களை இப்படிச் செய்யவில்லையே… என்னுடைய எதிர்ப்பு கூட மௌனத்தின் வழியே தான் நடந்தது. ஆனால் ஏன்? பெண்ணாகப் பிறந்து கணவனைப் புறக்கணித்த ஒரே காரணத்திற்காகவும், ஒற்றுமை, காதல், அன்யோன்யம் இல்லாத ஒரு நாள் இரவில் உதித்த குழந்தையை ஏற்க மனம் இல்லாமல் விட்டுச் சென்ற பாவத்திற்காகவும் மொத்தப் பழியும் என் மீதே விழுந்திருக்கிறது. இதில் சம்பந்தம் இல்லாத ஒருவன் மிரட்டிக் குழந்தையை வைத்துப் பயமுறுத்தித் திருமணம் செய்து கொண்டுவிட்டான். இனி இவனால் இன்னும் என்னென்ன அவஸ்தைப்படப் போகிறேனோ’ என்ற பயம் அவளுக்குள் இருந்தது.
“என்ன பொண்டாட்டி, இன்னைக்கு நைட்டு சம்பவத்தை நினைச்சு கொஞ்சமா சாப்பிடுறியா? உஷாரான பொண்ணு தான். பொண்ணுங்க கொஞ்சமா சாப்பிட்டு ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்கு வந்தா தான் எல்லாத்தையும் சுறுசுறுப்பா பண்ண முடியும். பயங்கர உஷார் தான் நீ,” என்று விகாஸ் அவளைச் சீண்டிப் பார்த்தான்.
அடிபட்ட பார்வையோடு அவனை நோக்கி, “நாம எப்போ நம்ம வீட்டுக்குப் போறோம்?” என்று கேட்டாள். உரிமையோடு ‘நம்ம வீடு’ என்று சொன்னவளைப் பார்த்து மனதிற்குள் ஒரு துளிர் மகிழ்ச்சி இருந்தாலும், அதை மறைத்துக்கொண்டு, “என்ன சொன்ன? நம்ம வீடா? என்னோட வீடு எப்ப உன்னோட வீடாச்சு? உனக்கு புரியலையா? அங்கீகரிக்கப்பட்ட மனைவி நீ. உன்னை வச்சுக்கிட்டு தான் நான் சந்தோஷமா என்னோட பிரைவேட் லைஃபை என்ஜாய் பண்ண முடியும். உனக்கான பினான்சியல் இன்டிபென்டன்ஸ், பார்ட்டி, பப் அப்படி இப்படின்னு சுத்தறதுக்கு ஜாலியா இருக்கத் தான் பிளான் பண்ணி ரோகித்தை விட்டு வந்த. இப்ப ஏதோ பத்தினி மாதிரி பேசுற… நடிக்காதடி,” என்று சுருக்கென்று அவளிடம் பேசிவிட்டு, வெளியில் சிரித்துக்கொண்டு சப்பாத்தியைப் பன்னீர் பட்டர் மசாலாவோடு சேர்த்துச் சாப்பிட்டான்.
‘என்னோட தப்பு தான். தாலி கட்டிட்டா மட்டும் இவன் எனக்குப் புருஷன் ஆகிடுவானா? அதான் சொல்லிட்டானே பொண்டாட்டி அடிமை அப்படின்னு. நான் எதுக்கு இவனுக்கு ப்ரூவ் பண்ண வேண்டி வரும்? எப்பவுமே நான் நானாவே இருக்கேன். யாருக்காகவும் நான் என்னை மாத்திக்கப் போறதில்லை. என்னைப் பற்றிச் சொல்லவும் போறதில்லை. அவங்க கண்ணோட்டத்திற்கு நான் எப்படியோ அப்படியே இருந்துகிட்டுப் போறேன்,’ என நினைத்துக் கொண்டு உணவருந்தி முடித்தாள். பின் கார்டன் ஏரியாவில் அமைதியாகக் கன்னத்தில் கை வைத்து நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“சபாஷ் லாவண்யா, சபாஷ்! நான் சொன்னது என்ன, நீ செஞ்சுகிட்டு இருக்கிறது என்ன? 3 வருஷம் என் கண்ட்ரோலில் இருந்தாய். ஜஸ்ட் ஒரு வாரம் நான் இல்லாம போயிட்டேன், அதுக்குள்ள விகாஸ் கண்ணனுக்கு மனைவியா மாறிட்ட,” என்று கருப்பு முகமுடி போட்ட ஒரு நபர் அவளிடம் கேட்டார். அந்த நபரைப் பார்த்த பிறகு தான் அவளுக்கு முழு ஞாபகம் வந்தது. மூன்று வருடம் நாம் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறோம், இவர் மூலமாக இந்தத் குடும்பத்திற்கு எதுவும் ஆகக்கூடாது என்பதற்குத் தானே பல்வேறு துரோகங்களைச் செய்தோம் என்பது அவளுக்கு உறைத்தது.
“நீ… நீ…” என்று திக்கித் திணறிச் சொல்ல வருவதற்குள், அவளது கழுத்தை நெரித்தது அந்த கருப்பு உருவம்.
“படிச்சுப் படிச்சுச் சொன்னேன், நான் சொல்ற வரைக்கும் அந்த ஆதித்யாவை விட்டுப் போகாம டார்ச்சர் செய் அப்படின்னு. ஆனா அவன் கூட எப்படியாவது குழந்தையைப் பெத்துக்கச் சொன்னேன். எப்படியோ பெத்துட்ட. அப்புறம் என் மனசு நிம்மதியாகல, உங்களைத் துன்புறுத்தணும்னு நினைச்சேன். அதான் பச்சைப் பிள்ளையை ரெண்டே மாசத்துல விட்டுட்டு வரச் சொன்னேன். பரவாயில்லை, உனக்கு உயிர்கள் மேல பயம் இருக்கு. அந்த பயத்தால் தானே நான் இன்னும் இருக்கேன்? ஆனா நீ மட்டும் பொறுமையாக இருந்திருந்தால் இந்நேரம் நான் வர வேண்டிய இடத்திற்கு வந்திருப்பேன். எல்லாம் சொதப்பிப் போச்சு. போதாக்குறைக்கு உன்னை வச்சு கஷ்டப்பட்டு விரட்டி அடிச்ச அந்த அகல்யாவும் வந்து சேர்ந்துக்கிட்டா.
இதுல எனக்கு இரிடேட் பண்ற புது கேரக்டர் யார் தெரியுமா? ஒன்னு அந்த ரோகித், இன்னொன்னு உன்னைக் கல்யாணம் பண்ண அந்த விகாஸ். ஊர் அறிய அவன் கூட நீ ஓடிப் போயிட்டு வாழ்ந்துகிட்டு இருக்கிறதா நினைச்சுக்கிட்டு இருக்காங்க. ஆனா வீட்டுக்குள்ள நீ எப்படி வாழ்ந்துகிட்டு இருக்கேன்னு எனக்குத் தெரியாதா? எப்படியோ பலம் படைத்த ஒரு பணக்கார வீட்டுக்கு அவன் மருமகனா போயிட்டான். இன்னொரு பக்கம் நீ ஹைதராபாத் தப்பிச்சு நிம்மதியா வாழலாம்னு நினைச்சே. ஆதித்யா வாழ்க்கை சரியாக இருக்கும்னு காத்திருந்து அங்க போய் உனக்கான வாழ்க்கையை நீ தேடுவதற்கு முன்பாக உன்னோட நண்பனே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். அவனுங்க ரெண்டு பேரும் குறுக்க வராம இருந்திருந்தா இந்நேரம் நீ கெட்ட பேரோடு வாழ்ந்திருப்பாய், ஆதித்யா தனிமையில் புழுங்கி இருப்பான். இதுல போதாக்குறைக்கு அந்த கணேஷ் அகல்யாவையே ஆதித்யாவுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிருக்கான். இவனுங்க என் கையில் கிடைக்கட்டும், செத்துருவானுங்க,” என்று வார்த்தைகளைத் துப்பினான். அவளது கழுத்து கொஞ்சம் கொஞ்சமாக நெரிக்கப்பட்டது.
அவளுக்கு மூச்சு விடவே சிரமமாக இருந்தது. இவளை வைத்துத் தானே சில காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதால் அந்த உருவம் அவளை விட்டு விலகியது.
“ஒரு விஷயத்தை மட்டும் மறந்துடாதே. நீ இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கோ, குழந்தை பெத்துக்கோ, எப்படி வேணாலும் வாழு. ஆனா ஆதித்யா லைஃப்ல எந்த ஒரு பொண்ணும் இருக்கக் கூடாது. அதுக்காகத் தான் அவன் வாழ்க்கை நரகமாக உன்னை அவனுக்கு மனைவியா போகச் சொன்னேன். ஆனா நீ மறைமுகமாக அவனுக்கு எடுத்துச் சொல்லித் தப்பிக்கப் பார்த்துட்டு இருந்த. ஆனா அந்த ஆதி மரமண்டைக்கு ஏறல, ஏறவும் கூடாது. நீ ஓடிப்போனதை நினைச்சாவது அவன் ஃபீல் பண்ணிப் புழுங்கிச் சாவான் அப்படின்னு நினைச்சா, ‘பழைய குருடி கதவைத் திறடி’ கதையாக அவன் முன்னாள் காதலியையே பொண்டாட்டியாக்கி வச்சிருக்கான். அவங்களை ஏதாவது பண்ணனுமே… என்ன பண்ணலாம்? அந்தப் பொண்ணு ஏற்கனவே கல்யாணமாகிக் குழந்தை இருக்கிறவ. பேசாம அந்த குழந்தையை…”
என்று சொன்னவுடன் அவளுக்கு நெஞ்சம் அடைத்தது. இவ்வளவு நேரம் ‘மம்மி மம்மி’ என்று தன்னைச் சுற்றி வந்த ஆத்விக்கின் ஞாபகம் வந்தது. அந்தப் பிஞ்சு குழந்தையை எப்படி இவரால் கொல்லத் துணிகிறார் என்று அருவருக்கத்தக்க ஒரு பார்வையைப் பார்த்தாள். அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்து, தலைமுடியைக் கொத்தாகப் பிடித்தான் அந்த நபர்.
“என்னையே கேவலமான பார்வை பார்க்கிறியா? நீ வாக்கு கொடுத்திருக்க… இந்தத் குடும்பத்தை அழிக்கணும், முக்கியமா ஆதித்யாவுக்கு நிம்மதி இல்லாத வாழ்க்கை கிடைக்கணும்னு நீ வாக்கு கொடுத்திருக்க. எப்படித் தப்பிக்கலாம்? செஞ்ச சத்தியத்துக்காக நீ உயிரையும் கொடுப்பாய். அதனால தானே பேபி உன்னைச் சூஸ் பண்ணது,” என்று சொல்லிவிட்டு, “சரி போனா போகட்டும், இப்போதைக்கு யாரையும் தொந்தரவு பண்ண மாட்டேன். கொஞ்ச நாளைக்கு நீயே அந்த கஷ்டங்கள் எல்லாத்தையும் அனுபவிச்சுக்கோ. உன்னைக் கேட்கத் தான் நாதி இல்லையே? நான் தான் தூரத்திலிருந்து எல்லாத்தையும் பார்த்தேனே, நீ வாழ்ற லட்சணத்தை,” என்று ஆவேசமாக அவளை மரத்தில் மோதித் தள்ளினான். துடித்து, வலியில் கதறி அங்கே மயங்கிச் சரிந்தாள் லாவண்யா. இதை ரசித்துக் கொண்டே அந்த உருவம் மறைந்தது.
இவ்வளவு நேரம் மனைவியைக் காணாமல், அவளை வெறுப்பேத்த ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று தேடி வந்த விகாஸ், அவள் எங்கும் இல்லாததைக் கண்டு திகைத்தான். “என்ன, ஏதாவது பண்ணி வம்பு இழுக்கலாம்னு பார்த்தா ஆளையே காணோமே? அடியே புது பொண்டாட்டி, எங்கடி இருக்க? ஒருவேளை ஓடிப் போயிட்டாளா? கொஞ்சம் டார்ச்சர் தாங்க முடியலையா? பொண்டாட்டி லாவண்யா, எங்கடி இருக்க? ஐயோ எனக்கு இருக்கிறது ஒரே பொண்டாட்டியாச்சே, அவளையும் தொலைச்சிட்டேனே! கடவுளே, எங்க அம்மாவுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்?” என்று குறும்பாகத் தேடிக் கொண்டே போனான். அவள் எங்காவது ஒளிந்திருப்பாள் என்ற நம்பிக்கையில் தோட்டத்துப் பக்கமாகச் சென்றான்.
கீழே கவனிக்காமல் வந்ததால் ஏதோ இடித்துத் தடுக்கி விழப்போனவன், அங்கிருந்த மரத்தைப் பிடித்துக்கொண்டான். என்னவென்று திரும்பிப் பார்த்தவன் அதிர்ச்சியில் உறைந்து போனான். தலையில் இரத்தக் காயத்தோடு, கழுத்தில் கைத்தடம் படிந்து லாவண்யா மயங்கி இருந்த கோலத்தைப் பார்த்து நடுங்கிப் போனான்.
“லாவீஈஈஈஈஈஈ!” என்று கர்ஜித்து அவளைக் கையில் ஏந்திக்கொண்டு கதற ஆரம்பித்தான். உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று துடித்தான். அவன் வாய் முழுக்க, “லாவி… லாவி… தயவு செஞ்சு கண்ணு திறந்து பாருடா. நான் இவ்வளவு நேரம் பேசினதெல்லாம் விளையாட்டு தான். உனக்கு எதுவும் ஆகாது. என்னடி ஆச்சு? ஏன் இப்படி இருக்க? லாவி தயவு செஞ்சு கண்ணு திறந்து பாரு. நீ என்னோட உயிர், எப்படி என்னை விட்டுப் பிரிய முடியும் உன்னால? கண்ணைத் திறந்து பாருடா ப்ளீஸ்,” என்று அவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
அவன் போட்ட சத்தத்தில் அனைவரும் வெளியே வந்து பார்த்தனர். விகாஸ் லாவண்யாவைத் தூக்கிச் செல்லும் காட்சியைப் பார்த்து மீனாட்சி பதறி ஓடி வந்தார். “அம்மா என்ன ஆச்சுன்னு தெரியல, லாவிக்கு அடிபட்டிருக்கு. மயக்கம் அடைந்து அங்க மரத்துகிட்ட விழுந்து இருந்தா. நான் உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போறேன்,” என்று அவளைக் காரின் பின் சீட்டில் படுக்க வைத்தான். அவன் பதட்டத்தில் இருப்பதால் வண்டி ஓட்டுவது சரி வராது எனத் தீர்மானித்து, கணேஷ் அவனோடு ஹாஸ்பிடல் வர ஆயத்தமானான். அவர்களுக்குப் பின்னால் தனது பைக்கில் அகல்யாவும் ஆதித்யாவும் பின்தொடர்ந்து வந்தனர்.
லாவண்யாவை இப்படிப் பார்த்ததிலிருந்து ஆதித்யாவின் முகமே சரியில்லை. கணவனின் முக மாற்றத்தை அகல்யா கவனித்துக்கொண்டு தான் இருந்தாள். ‘தன்னை விட்டுச் சென்றவள், பச்சிளம் குழந்தையை மனசாட்சியின்றி உதாசீனம் செய்து சென்றவளுக்காக இவர் ஏன் இப்படி கஷ்டப்பட வேண்டும்?’ என்று அவள் யோசித்தாள்.
கார் முன்னாடி சென்று கொண்டிருக்க, ஆதித்யா பின் தொடர்ந்து வந்தான். அவன் மனதிலோ, ‘இன்னும் என்னென்ன கஷ்டப்பட வேண்டி இருக்கோ? ஏன்டி இப்படி அமைதியா வாழ்ந்து உன்னோட வாழ்க்கையைத் கெடுத்து, மத்தவங்க நிம்மதியையும் கெடுத்துக்கிட்டு இருக்க?’ என்ற தவிப்பு இருந்தது. அதைத் தவிர அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை.