அத்தியாயம் 7
மறுநாள் காலை, அமிர்தா மிகவும் புத்துணர்ச்சியாகத் தனது வேலையை ஆரம்பிக்கப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள். அப்போது கீழ் வீட்டிலிருந்து ஒரு குட்டிப் பாப்பா வந்தாள். இன்று காலையில் தன் தாய் செய்த மிளகுப் பொங்கலை எடுத்து வந்து கொடுத்துவிட்டு, “அக்கா, எப்பவும் ஏதோ ஒரு மாதிரி இருப்பீங்க, ஆனா இன்னைக்கு ரொம்ப ஜாலியா இருக்கீங்க?” என்று கேட்டாள்.
அதற்கு அமிர்தா, “அதை உனக்குச் சொன்னால் புரியாது சின்ன வாண்டு. நீ படிச்சு, காலேஜ் எல்லாம் முடிச்சதும் உனக்குன்னு ஒரு வேலை கிடைக்கும். அந்த வேலையில உனக்கு மனதிருப்தி கிடைச்சா, இப்படித்தான் சந்தோஷமா இருப்ப. சரி, எனக்கு ஆபீஸ் டைம் ஆயிடுச்சு. கரெக்டா உங்க அம்மா எனக்கு டிபன் எடுத்துட்டு வந்து கொடுத்துட்டாங்க. நீங்க இருக்கிற வரைக்கும் எனக்கு கவலை இல்லை,” என்று சந்தோஷமாக அலுவலகத்திற்குக் கிளம்பினாள்.
வெளியே வந்தபோது, அருகில் ஒரு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, மற்ற சீரமைப்புப் பணிகள் முடியும் தருவாயில் இருந்தது. அது ஒரு MP-க்கு சொந்தமாக வரவிருக்கும் உணவகம். அதைப் பார்த்தவள், “சாதாரண மக்கள் இருக்கிற இடத்தில் இப்படி வளைச்சு வளைச்சு பில்டிங் கட்டினா, அப்புறம் நாங்க எல்லாம் எங்க போறது? இங்க மட்டும் வரட்டும் அந்த MP, அவருக்கு இருக்கு. அவன் செஞ்ச பாவத்துக்குக் கடவுள் இன்னும் தண்டனை கொடுக்காமல் இருப்பதால்தான் இவ்வளவு ஆட்டம் போடுகிறான். ஒருநாள் கடவுள் அவருடைய ஆட்டத்தை ஆரம்பிக்கும்போது தெரியும்,” என்று சபித்துக்கொண்டே தனக்காக வந்து நின்ற ஆபீஸ் கேபில் ஏறிக்கொண்டாள்.
ஒரு மணி நேரப் பயணத்தில், பாட்டு கேட்பது, யூடியூபில் நகைச்சுவை பார்ப்பது எனப் பொழுதைக் கழித்தாள். சிறிது நேரம் தூங்கினால் நன்றாக இருக்கும் என்று கண்களை மூடி, பல நல்ல கனவுகளுடன் ஒரு நேர்மறை ஆற்றலோடு அமிர்தா அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தாள்.
ஆனால், அங்கே அவளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. நேற்று அவளுக்குத் துணையாக வருவதாகச் சொன்ன ஆங்கிலோ-இந்தியப் பெண், திடீரென்று தன் தந்தையின் மரணத்திற்காகச் சொந்த நாட்டிற்குச் செல்ல வேண்டியதாகிவிட்டது. அதனால், தனக்குத் தேவையானவற்றை டெலிபோன் மூலமே கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தகவல் வந்தது. ‘சரி, துணைக்கு யாரும் வேண்டாம், தனிமையே சிறந்த மருந்து’ என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். நேற்று கொடுத்த சாம்பிள்களை ஒப்பிட்டுப் பார்த்து, ஒரு சிறந்த ஓவியத்தை வரையத் தொடங்கினாள்.
“எல்லாம் சரியா வருது, ஆனா இது ஒண்ணுதான் புரியல. ஒரு தத்துவார்த்தமான போட்டோவை AI கிட்ட கேட்டா கூட சரியா கொடுக்க மாட்டேங்குது. என்ன பண்றது?” என்று ஸ்கெட்ச் போர்டை கையில் வைத்துக்கொண்டு அமிர்தா குழப்பமாக இருந்தாள்.
அப்போது, அவள் வாசம் பிடித்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தான் அதிரூபன்.
“எல்லாம் ஓகேதானே? ஏதாவது பிரச்சனையா?” என்று தனது கம்பீரக் குரலில் கேட்டான். அந்த அதிரூபனின் குரல் அவளுக்குள் ஏதோ ரசாயன மாற்றத்தை உண்டுபண்ண, அதைத் தடுத்து நிறுத்தித் திரும்புவதற்குள் அமிர்தாவுக்குப் பெரும்பாடாகியது.
“ஹலோ சார், குட் மார்னிங். ஒண்ணுமில்ல, எனக்கு இந்த கான்செப்ட்க்கான மாடல் பிக் கிடைக்க மாட்டேங்குது, அதுதான்…” என்று தடுமாற்றத்துடன் கான்செப்ட்டைச் சொல்ல ஆரம்பித்தாள்.
“இதுதானா விஷயம்? இதுக்கு எதுக்கு இவ்வளவு பதற்றம்?” என்றவன், திடீரென்று அமிர்தா எதிர்பாராத சமயம் அவளைக் கைப்பிடித்து இழுத்து, இடையோடு அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
அவன் செய்த செயலில் கோபமடைந்த அமிர்தா, “சீ, தள்ளிப் போ! எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட இப்படி நடந்துக்குவ? பெரிய இடத்து ஆளா இருந்தா இப்படித்தான் பண்ணுவியா? நல்லபடியா பேசிக்கிட்டுதானே இருந்தேன், திடீர்னு எப்படி உன்னால இப்படிப் பண்ண முடிஞ்சது? உன்னை நல்ல மனுஷன்னு நம்பினேன் பாரு, என்ன சொல்லணும்!” என்று கோபத்தில் அதிரூபனை அறைந்துவிட்டாள். அவன் கன்னம் சிவந்து அவளைப் பார்த்துக் கொண்டிருக்க, அமிர்தா கோபப் பார்வையால் அவனை எரித்துக் கொண்டிருந்தாள்.
“இப்போ உங்களுக்கு மாடல் கிடைச்சாச்சுதானே?” என்றான் அதிரூபன்.
“என்ன சொல்ற நீ?” என்று அமிர்தா புரியாமல் பார்த்தாள்.
“நீதானே ஒரு பெண்ணின் கை பதிந்து, கன்னம் சிவந்துபோய் நிற்கிற ஒரு ஆணோட முகத்தை தத்ரூபமாகக் காட்டணும்னு சொன்ன? அதனால்தான் உன்கிட்ட அப்படி நடந்துகிட்டேன். அதனாலதான் நீயும் இயல்பா என்னை அடிச்ச. இப்ப பாரு, என் கன்னம் சிவந்துபோய் இருக்கா? உனக்கான மாடலா நானே கிடைச்சிட்டேன். இப்ப நீ பெயிண்டிங் வரையலாம்,” என்று சர்வ சாதாரணமாகச் சொன்னான்.
அதைக்கேட்ட அமிர்தாதான் தலையில் அடித்துக்கொண்டு, “அதுக்கு இப்படித்தானா நடந்துக்குவீங்க? சும்மா அடின்னு சொன்னாலே சூப்பரா அடிச்சிருப்பேனே, அஞ்சு விரலும் பதிஞ்சிருக்கும். இது கொஞ்சம் லைட்டாதான் சிவந்துருக்கு,” என்று குழப்பமெல்லாம் மறந்து தனது ஓவிய வேலையில் மும்முரமாக மூழ்கினாள்.
அவளைப் பார்த்து அதிரூபனுக்குச் சிரிப்புதான் வந்தது. சற்று நேரத்திற்கு முன்பு முத்தம் கொடுத்தவன், இப்போது அப்பாவி போல் அமர்ந்திருந்தான். அவனைப் பார்த்துக் கொண்டே அமிர்தா ஓவியத்தை வரைந்து முடித்தாள். அந்தப் பெயிண்டிங் 100 சதவீதம் தத்ரூபமாகவும் அம்சமாகவும் இருந்தது.
ஓவியம் திருப்தியாக வந்த பிறகு அதிரூபனிடம் காட்டினாள்.
“பார்த்தியா? சில விஷயங்களை பிராக்டிகலா செஞ்சாதான் புரியும். உன்னோட இயல்பான கோபம் என் கன்னத்துல பதிஞ்சு, ஒரு மாடலிங் போஸ் கொடுக்கிற மாதிரி ஆகிடுச்சு. ஒரு பெயிண்டிங்காக ஒரு பாஸ், எம்ப்ளாயிகிட்ட அடி வாங்கின கதை இங்கதான் நடக்கும் போல. வெளிய யார்கிட்டயும் சொல்லிடாத, நான் பாஸ்!” என்று அப்பாவி குழந்தை போல் அவன் பேசினான்.
அவனுடைய இந்த குணம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிருபன் வெளியே எப்படி இருப்பானோ, ஆனால் தன்னிடம் மட்டும் இவ்வளவு இயல்பாகப் பழகுகிறானே என நினைத்தாள். இப்படியே போனால் அவனிடம் மனதைப் பறிகொடுத்து விடுவோம் போலிருக்கிறதே என்று அமிர்தாவுக்குத் தோன்றியது.
“சரியான மக்கு போல,” என்று அமிர்தாவை மனதிற்குள் எடைபோட்ட அதிரூபன், தனது வேலையைத் தொடர்ந்தான்.
மதியம் சாப்பிட கேன்டீனுக்குச் சென்றாள் அமிர்தா.
“ஹே கேர்ள், இங்க வா,” என்று அங்கே இருந்த ஒரு இளம் பட்டாளம் அவளை அழைக்க, அவளும் புத்துணர்ச்சியுடன் அவர்கள் அருகே சென்றாள்.
“நீதான் பாஸோட புது பர்சனல் ஆர்டிஸ்டா?” என்று கூட்டத்தில் ஒருவன் கேட்க, அவளும் ‘ஆமாம்’ என்று தலையசைத்தாள்.
“ஹேய், கூலா இரு. நான் சந்தோஷ், ஜெனரல் மேனேஜர். இவங்க ஹெச்.ஆர் காவியா, அட்வர்டைஸ்மென்ட் கன்டென்ட் கிரியேட்டர் அனுராதா, அப்புறம் இவர் அசிஸ்டன்ட் மேனேஜர் கௌதம். நாங்க எல்லாரும் ஒரு டீம். நேத்து உன்னைப் பார்க்க நினைச்சோம், ஆனா நீ போயிட்டன்னு சொன்னாங்க. உனக்குத் தெரிஞ்சவங்க யாரும் இல்லைன்னு ஃபீல் பண்ணாத, நாங்க இருக்கோம். ஓகே, லஞ்ச் எங்க கூட ஷேர் பண்ணிக்கிறியா?” என்று சந்தோஷ் கேட்க, அமிர்தாவும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டாள்.
அடுத்த அரை மணி நேரத்தில் கலகலவெனப் பேசி, கூச்சலிட்டு ஒரு புதிய டீமை உருவாக்கிவிட்டார்கள். சிறிது நேரத்திலேயே ‘நீ, வா, போ’ என்று பேசும் அளவிற்கு அவர்களின் நட்பு வளர்ந்தது.
“ஆமா, உனக்கு அசிஸ்டன்ட்டா இருந்த பொண்ணு வெளிநாட்டுக்குப் போயிடுச்சுன்னு சொன்னாங்க. உன்னால எல்லாம் தனியா மேனேஜ் பண்ண முடியுதா? இல்லைன்னா சொல்லு, டீம்ல இருந்து யாரையாவது அனுப்புறேன்,” என்று அனுராதா அக்கறையாகக் கேட்டாள்.
“அதெல்லாம் வேணாம்ப்பா, ஐ கேன் மேனேஜ். சார் அந்த அளவுக்கு வொர்க் பிரஷர் கொடுக்கல. கண்டென்ட் சொல்றாரு, டிசைன் பார்க்குறாரு, மிஸ்டேக் இருந்தா கரெக்ட் பண்ணிக்க சொல்றாரு. அதுக்கு மேல எதுவும் பேச மாட்டேங்குறார்,” என்றாள் அமிர்தா.
“ஆமா, சார் அந்த அளவுக்கு யார்கிட்டயும் பேச மாட்டார். வேலையை மட்டும் சரியா செஞ்சுட்டா, நாம நிம்மதியா மாச சம்பளத்தை வாங்கிட்டு லைஃபை என்ஜாய் பண்ணலாம். ஐடி கம்பெனியை விட இங்க சம்பள உயர்வு அதிகம். நீ பயப்படவே தேவையில்லை,” என்றார்கள்.
இதையெல்லாம் கேமராவில் பார்த்துக்கொண்டிருந்தான் அதிரூபன்.
‘இந்த மாதிரி என்கிட்ட எப்போ அமிர்தா பேசுவ? மழை கொட்டும் இரவில், என் மாளிகையில், என் அறையில், பஞ்சு மெத்தையில், ஜன்னல் வழியே சாரல் தெறிக்க, நீயும் நானும் ஒரு போர்வைக்குள் அடங்கி, நீ பேச நான் கேட்க… கூடல் முடிந்து நான் சொல்லும் கவிதையைக் கேட்டு நீ சிலிர்த்துப் போய் என் நெஞ்சில் முத்தமிட…’
“ஐயோ!” என்று சொல்லும்போதே அவன் உடல் நடுங்கியது. உணர்ச்சிகள் பொங்க, அதை அடக்கப் பெரும்பாடு பட்டான்.
‘அதிரூபா, நீ யாரு, உன் நிலை என்ன? ஒரு சாதாரணப் பெண்ணுக்காக இப்படி அடிபணிந்தால், மொத்தமாக இழக்க வேண்டிய நிலை வரும். பெண்ணுக்காக எதையும் விட்டுக்கொடுத்து விடாதே,’ என்று அவனது மூளை சாத்தானாக வேதம் ஓதியது.
தன்னிலைக்கு வந்தவன், மீண்டும் தன் வேலையில் கவனத்தைச் செலுத்தினான்.
இனிமேல் கதையின் ஆட்டம் ஆரம்பமாகப் போகிறது. வில்லி இருந்தால்தானே கதை சூடுபிடிக்கும்!