Home SRIJA NOVELS18) தீராதவள் 🥰

18) தீராதவள் 🥰

by sreejanovels
4 views

அத்தியாயம் 18

சென்னையின் விஐபி திருமண மண்டபம் புதுமணப் பெண்ணைப் போல ஒட்டுமொத்தமாகப் பொலிவு பெற்று நின்றது. வாசலில் பிரம்மாண்டமான கட்-அவுட்களும், மலர் அலங்காரங்களும் சக்கரவர்த்தி குடும்பத்தின் அந்தஸ்தையும் அதிகாரத்தையும் அந்தப் பகுதி முழுக்கப் பிரகடனப்படுத்தின. தனஞ்செயன் ஐயா பட்டு வேட்டி, பட்டுச் சட்டை சகிதமாக, முகத்தில் அத்தனை பெருமிதத்தோடு பிசினஸ் உலகத்தின் விஐபிக்களை இன்முகத்தோடு வரவேற்றுக் கொண்டிருந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் முகூர்த்தம் நடக்கவிருக்கும் நிலையில், மண்டபமே நாதஸ்வர இசையிலும், அட்சதை வாசனையிலும், பட்டுப்புடவைகளின் சலசலப்பிலும் மூழ்கியிருந்தது.

ஆனால், மணமகன் அறையிலோ முற்றிலும் மாறுபட்ட ஒரு அமைதியும், தீவிரமான தகிப்பும் நிலவியது.

கந்தர்வன் ஒரு பாரம்பரியத் தமிழ் மாப்பிள்ளையாக, தூய வெண்மை நிறப் பட்டு வேட்டியும், அதற்குப் பொருத்தமான தங்கக் கரை பார்டர் வைத்த பட்டுச் சட்டையும் அணிந்து கண்ணாடி முன்னால் நின்று கொண்டிருந்தான். அவனது அகன்ற தோள்களை அலங்கரித்த ஜரிகை அங்கவஸ்திரமும், நெற்றியில் தீட்டப்பட்டிருந்த திலகமும் அவனுக்கு ஒரு கம்பீரமான, ராஜரீகத் தோற்றத்தைத் தந்திருந்தன. அவனது கூர்மையான கண்கள் அந்த ஆடம்பரங்களை அலட்சியமாகப் பார்த்தன. அவனது மேஜையின் மீது சினேகாவும் சஞ்சய்யும் கம்பெனிப் பணத்தைக் கையாடல் செய்ததற்கான அத்தனை பேங்க் ஸ்டேட்மெண்ட்களும், ஆடியோ பதிவுகளும் அடங்கிய ஒரு ரகசிய கோப்பு தயாராக இருந்தது.

கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தான் கௌதம். அவனது முகத்தில் ஒரு பிசினஸ் பார்ட்னராகவும், நண்பனாகவும் லேசான கவலை தெரிந்தது. “கந்தர்வன்… வெளியில மீடியா, பிசினஸ் மேக்னட்ஸ்னு எல்லாரும் வந்துட்டாங்க. தனஞ்செயன் சார் ரொம்ப சந்தோஷமா இருக்கார். ஆனா, சினேகா பண்ணியிருக்கிற இந்தத் துரோகத்தை இப்போவே உடைக்கப் போறியா? இல்ல முகூர்த்தம் முடியற வரைக்கும் வெயிட் பண்ணப் போறியா?” என்று கேட்டான்.

கந்தர்வன் தன் கைக் கடிகாரத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டே திரும்பிப் பார்த்தான். அவனது உதடுகளில் ஒரு தீர்க்கமான புன்னகை படர்ந்தது. “துரோகத்தை எப்பவும் இருட்டுல வச்சு தண்டிக்கக் கூடாது கௌதம். வெளிச்சம் அதிகமா இருக்குற இடத்துல, அவங்க எந்த ஆடம்பரத்தை வச்சு ஆடுனாங்களோ, அதே இடத்துல வச்சுத்தான் அறுத்தெறியணும். சினேகாவுக்கு இந்த மேடைதான் அவளோட பேராசைக்கான சவப்பெட்டியா மாறப்போகுது,” என்று தன் கனத்த குரலில் அதிரடியாகக் கூறினான்.


மணமகள் அறையில் சினேகா லட்ச ரூபாய் மதிப்புள்ள காஞ்சிபுரம் பட்டுப்புடவையை உடுத்தி, வைர நகைகளால் ஜொலித்துக் கொண்டிருந்தாள். அவளது அம்மா மரகதம், தன் மகளுக்குத் திருஷ்டி சுத்திப் போட்டுக் கொண்டே, கர்வத்தின் உச்சத்தில் பேசிக் கொண்டிருந்தாள்.

“பார்த்தியா சினேகா… இந்த உலகத்துலயே பெரிய அதிர்ஷ்டசாலி நீதான்டி. அந்த இளவஞ்சி நமக்கு அடங்கி, ஒடுங்கி சைட்ல சிமெண்ட் மூட்டை கணக்கு பார்த்துட்டு இருக்கா. ஆனா நீ இப்போ இந்த எம்பையர்ஸோட ராணியாகப் போறே! இனிமே நாம வைக்கிறதுதான் சட்டம்,” என்று மரகதம் தன் நகைகளைச் சரிசெய்துகொண்டே கர்வத்தோடு கூறினாள்.

சினேகா கண்ணாடியில் தன் மேக்கப்பைச் சரிசெய்து கொண்டே வஞ்சகமாகச் சிரித்தாள். “ஆமாம்மா… இன்னும் கொஞ்ச நேரத்துல கந்தர்வன் கழுத்துல தாலி கட்டுனதும், லண்டன் ப்ராஜெக்ட்டோட மொத்தப் பவரையும் என் கைக்கு மாத்தப் போறேன். சஞ்சய் சொன்ன மாதிரி, கம்பெனியோட ரகசியக் கணக்குகளை வச்சே கந்தர்வனோட திமிரை அடக்கி, அவனை என் காலுக்குக் கீழே கொண்டு வருவேன்,” என்று தன் பேராசையின் உச்சத்தில் முணுமுணுத்தாள்.

அப்போது அவளது போன் அதிர்ந்தது. சஞ்சய்யிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது. ‘சினேகா… லண்டன் அக்கவுண்ட்டுக்குப் பணம் டிரான்ஸ்ஃபர் ஆகுறதுக்கான அத்தனை டாக்குமெண்ட்ஸும் ரெடி. கல்யாணம் முடிஞ்சதும் சைன் பண்ணிடு.’ அதைப்பார்த்த சினேகாவின் முகம் பேராசை வெறியில் இன்னும் பிரகாசமானது.


முகூர்த்த நேரம் நெருங்கியது.

நாதஸ்வர இசை உச்சத்தைத் தொட, சினேகா கர்வத்தோடும், தலைக்கனத்தோடும் மேடைக்கு அழைத்து வரப்பட்டாள். அவளது பட்டுப்புடவையின் தலைப்பு தரையில் இழுபட, சுற்றிலும் இருந்த கேமராக்களின் பிளாஷ் லைட்டுகள் அவளது முகத்தில் விழுந்தன. அவளுக்கு நேர் எதிரே, கந்தர்வன் தன் பாரம்பரியப் பட்டு உடையில், கம்பீரத்தோடு மணமகன் மேடையில் அமர்ந்திருந்தான். அவனது கூர்மையான கண்கள் அவளை உற்றுப் பார்த்தன.

சினேகா மேடையில் அமர்ந்ததும், புரோகிதர் மந்திரங்களை ஓதத் தொடங்கினார். தாலி எடுத்து தனஞ்செயன் ஐயாவின் கைகளில் கொடுக்கப்பட்டது. அவர் அதைத் தொட்டு ஆசிர்வதித்து, கந்தர்வனிடம் நீட்டினார்.

“கந்தர்வா… நல்ல நேரம்பா, தாலியைக் கட்டு,” என்றார் தனஞ்செயன் ஐயா நெகிழ்ச்சியோடு.

மண்டபமே அமைதியானது. அனைவரும் அந்தப் பிரம்மாண்ட தருணத்தை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். சினேகா தன் கழுத்தை நீட்டி, கர்வத்தோடு கண்களை மூடினாள்.

கந்தர்வன் தாலியை வாங்கினான். ஆனால், அதைச் சினேகாவின் கழுத்தில் கட்டுவதற்குப் பதிலாக, சட்டென்று அந்தத் தட்டிலேயே தூக்கி எறிந்தான்! ‘டங்’ என்ற சத்தத்துடன் தாலித் தட்டு தரையில் விழுந்து சிதறியது.

மண்டபமே ஸ்தம்பித்தது. நாதஸ்வர இசை சட்டென்று நின்றது. தனஞ்செயன் ஐயா அதிர்ச்சியில் уறைந்தார். “கந்தர்வா! என்னப்பா பண்ற? முகூர்த்த நேரத்துல என்ன விளையாட்டு இது?” என்று பதற்றமாகக் கத்தினார்.

சினேகா திடுக்கிட்டுத் தன் கண்களைத் திறந்து, “என்ன சார் இது? ஏன் இப்படி பண்றீங்க?” என்று அதிர்ச்சியோடு கேட்டாள். மரகதம் மேடைக்கு ஓடிவந்து, “என்ன தம்பி இது? கல்யாணப் பொண்ணை அசிங்கப்படுத்துறீங்க?” என்று கூச்சலிட்டாள்.

கந்தர்வன் தன் இருக்கையில் இருந்து மெல்ல எழுந்து நின்றான். அவனது நேர்த்தியான தோற்றமும், கறாரான பார்வையும் ஒட்டுமொத்த மேடையையும் கட்டுக்குள் கொண்டு வந்தன. அவன் தன் பட்டுச் சட்டைப் பாக்கெட்டிலிருந்து ஒரு பென்டிரைவை எடுத்து, அங்கிருந்த பெரிய எல்இடி திரைக்கான ஆபரேட்டரிடம் வீசினான்.

“இதை முதல்ல ஸக்கீரீன்ல போடுடா!” என்று தன் கனத்த குரலில் கட்டளையிட்டான் கந்தர்வன்.

அடுத்த சில நொடிகளில், அந்தப் பிரம்மாண்ட எல்இடி திரையில் சினேகாவும் சஞ்சய்யும் ரகசிய ஹோட்டல் அறையில் அமர்ந்து, சக்கரவர்த்தி கம்பெனியின் லண்டன் ப்ராஜெக்ட் கோப்புகளைத் திருடுவதும், டூப்ளிகேட் எண்ட்ரிஸ் போட்டுப் பணத்தைக் கையாடல் செய்யத் திட்டம் தீட்டுவதும் அப்பட்டமான ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் ஓடத் தொடங்கியது. சினேகா கந்தர்வனையும் அவனது அப்பாவையும் ஏமாற்றி எப்படிப் பணத்தைப் பறிக்கலாம் என்று சஞ்சய்யிடம் பேசும் அத்தனை வார்த்தைகளும் மண்டபம் முழுக்க ஸ்பீக்கர்களில் எதிரொலித்தன.

ஆதாரங்கள் ஓட ஓட… சினேகாவின் முகம் பேயறைந்தது போல வெளுத்துப் போனது. அவளது உடம்பு பயத்தால் நடுங்கத் தொடங்கியது. மரகதத்தின் கர்வமெல்லாம் நொடியில் சரிந்து, வாயடைத்துப் போனாள்.

மண்டபத்தில் இருந்த பிசினஸ் விஐபிக்கள் ஒவ்வொருவரும், “சீ… என்ன பொண்ணு இவ? இவ்வளவு பெரிய துரோகியா?” என்று காரித் துப்பத் தொடங்கினர். தனஞ்செயன் ஐயா தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு நாற்காலியில் சரிந்தார். கௌதம் ஓடிவந்து அவரைத் தாங்கிக் கொண்டான்.

கந்தர்வன் சினேகாவின் மிக அருகில் வந்து, அவளது முகத்தைப் பார்க்காமல், அவளது கர்வத்தை மிதிப்பது போலப் பேசினான். “என் கம்பெனிப் பணத்தையும், என் அப்பாவோட கௌரவத்தையும் வச்சு ஆட்டம் போடலாம்னு நினைச்சியா சினேகா? உன் சதித் திட்டங்களை விட என் புத்திசாலித்தனம் பல மடங்கு துல்லியமானது. நீ ஆசைப்பட்ட அந்த ஆடம்பர வாழ்க்கைக்குப் பதிலா, உனக்காக வெளியில போலீஸ் ஜீப் காத்துட்டு இருக்கு!” என்று கறாராகக் கூறினான்.

அவன் சொல்லி முடிப்பதற்குள், மண்டபத்தின் கதவுகளை உடைத்துக் கொண்டு பெண் போலீஸார் உள்ளே நுழைந்தனர். சினேகாவின் கைகளில் விலங்கு பூட்டப்பட்டது.

“கந்தர்வன் சார்… என்னை மன்னிச்சிடுங்க சார்… தெரியாம பண்ணிட்டேன்…” என்று சினேகா அழுதுகொண்டே கத்தினாள். மரகதம் போலீஸாரின் கால்களில் விழுந்து கதறினாள். ஆனால், கந்தர்வனின் கண்கள் துளியும் இரக்கத்தைக் காட்டவில்லை. ஒட்டுமொத்த விஐபிக்களின் முன்னிலையிலும் சினேகாவும், மரகதமும் துரோகத்தின் அடையாளமாக இழுத்துச் செல்லப்பட்டனர்.

துரோகம் அறுத்தெறியப்பட்டு, அந்தப் பிரம்மாண்ட திருமண மேடையே ஒரு போர்க்களமாக மாறியிருக்க… கந்தர்வனின் அடுத்த அதிரடி ஆட்டம் யாருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது என்பதை அங்கிருந்த எவருமே அறிந்திருக்கவில்லை!

‌.‌‌…….

திருமண மண்டபத்தின் பிரம்மாண்டமான வாசலின் வழியே துரோகம் அம்பலப்பட்டுப் போன சினேகாவைப் பெண் போலீஸார் பலவந்தமாக இழுத்துச் சென்றனர். அவளது கைகளில் விலங்கு பூட்டப்பட்டிருந்த அந்த நொடியில், அவளது ஒட்டுமொத்தக் கர்வமும் பேராசையும் சுக்குநூறாக உடைந்து போயின. லட்ச ரூபாய் மதிப்புள்ள காஞ்சிபுரம் பட்டுப்புடவையின் தலைப்பு தரையில் இழுபட, கலைந்துபோன மேக்கப்போடு அவள் தன் நெஞ்சில் கைகளால் பலமாக அடித்துக் கொண்டு அலறி அழுதாள்.

“கந்தர்வன் சார்… என்னை மன்னிச்சிடுங்க சார்! நான் பேராசையில தப்பு பண்ணிட்டேன் சார்… இந்தச் சஞ்சய் தான் சார் என் புத்தியைக் கெடுத்தான்! என்னை ஜெயிலுக்கு அனுப்பிச்சிடாதீங்க சார்… ப்ளீஸ் சார்!” என்று மண்டபமே அதிரும் அளவுக்குத் தன் நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறினாள் சினேகா. அவளது கண்ணீரும் குமுறலும் அங்கிருந்த விஐபிக்கள் மத்தியில் எந்தவொரு இரக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

அவளது அம்மா மரகதம், தன் மகள் கைது செய்யப்படுவதைக் கண்டு பதறிப்போய், போலீஸாரின் கால்களில் விழுந்து அழுதாள். “என் பொண்ணை விட்ருங்க மாடி… அவ தெரியாம பண்ணிட்டா…” என்று கத்தினாள். மரகதம் இந்தச் சதியில் நேரடியாகப் பணத்தைக் கையாடல் செய்யாவிட்டாலும், மகளின் பேராசைக்குத் துணையாக இருந்து உண்மைகளை மறைத்ததற்காகவும், சாட்சிகளை அழிக்க முயன்றதற்காகவும் அவளையும் விசாரணைக்காகப் போலீஸார் ஜீப்பில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

மண்டபத்தின் வாசலில் போலீஸ் வாகனத்தின் சைரன் சத்தம் தூரமாகத் தேய்ந்து மறையும் வரை, அங்கே நிலவிய பரபரப்பும் நிசப்தமும் குறையவில்லை. முகூர்த்த நாதஸ்வரம் நின்ற அந்தப் பெரிய மேடையில், சிதறிக் கிடந்த அட்சதை மலர்களும், கீழே விழுந்து கிடந்த தாலித் தட்டும் அந்தத் துரோகத்தின் அசல் சாட்சியாக அப்படியே இருந்தன.

பிசினஸ் உலகத்தின் விஐபிக்கள் பலரும் தங்களுக்குள் ரகசியமாகப் பேசிக்கொண்டிருக்க, மண்டபத்தின் விஐபி அறையில் தனஞ்செயன் ஐயா சோபாவில் அமர்ந்து தன் நெஞ்சைப் பலமாகப் பற்றிக் கொண்டிருந்தார். அதிர்ச்சியிலும் அவமானத்திலும் அவரது முகம் ஒடுங்கிப் போயிருந்தது.

அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து கௌதம் தண்ணீர் கொடுத்து அவரைத் தேற்றிக் கொண்டிருந்தான். கந்தர்வன் எந்தவித சலனமும் இல்லாமல், தன் தூய வெண்பட்டு ஜரிகை அங்கவஸ்திரத்தைச் சரிசெய்தபடி ஜன்னல் ஓரமாக நின்று வெளியையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது நிதானமான, நேர்த்தியான தோற்றத்தில் சினேகாவை வீழ்த்திய கர்வமோ அல்லது கல்யாணம் நின்றதற்கான வருத்தமோ துளியும் இல்லை.

தனஞ்செயன் ஐயா மெல்ல நிமிர்ந்து தன் மகனைப் பார்த்தார். “கந்தர்வா… இவ்வளவு பெரிய விஷயத்தை மனசுல வச்சுக்கிட்டு முகூர்த்த நேரம் வரைக்கும் ஏன்டா அமைதியா இருந்தே? சினேகா துரோகிதான், அதை இல்லைன்னு சொல்லல. ஆனா இப்போ ஒட்டுமொத்த மீடியாவும், பிசினஸ் உலகமும் நம்ம குடும்பத்தைத்தான் வேடிக்கை பார்த்துட்டு இருக்கு. சக்கரவர்த்தி குடும்பத்தோட கல்யாண மேடையில தாலித் தட்டு சிதறிக்கிடக்குன்னு நாளைக்கு நியூஸ் வந்தா என் கௌரவம் என்ன ஆகுறது?” என்று வேதனையோடு கேட்டார்.

கந்தர்வன் மெதுவாகத்த் திரும்பித் தன் தந்தையின் அருகில் வந்தான். அவனது கம்பீரமான குரல் அந்த அறை முழுக்கத் தீர்க்கமாக எதிரொலித்தது. “அப்பா… சக்கரவர்த்தி குடும்பத்தோட கௌரவம் அந்தத் துரோகி சினேகாவோட கழுத்துல தாலி கட்டுறதுல இல்லை. அவ கம்பெனிப் பணத்தைத் திருடிட்டு லண்டனுக்குப் பறக்கத் திட்டம் போட்டா. அவளை இந்த மேடையில வச்சு அசிங்கப்படுத்தினாத்தான் இனி நம்ம கம்பெனி ஃபைல்ஸ் மேல கை வைக்க எந்தப் பார்ட்னருக்கும் துணிச்சல் வராது. கௌரவத்தைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்கப்பா… இந்த மேடையில சக்கரவர்த்தி குடும்பத்தோட கல்யாணம் கண்டிப்பா நடக்கும். ஆனா மணமகள் சினேகா இல்லை,” என்று கறாராகக் கூறினான்.

தனஞ்செயன் ஐயா குழப்பத்துடன், “என்ன சொல்றே கந்தர்வா? மணமகள் இல்லைன்னா அப்புறம் யாருக்குக் கல்யாணம்?” என்று கேட்டார்.

கந்தர்வன் கௌதமைத் திரும்பிப் பார்த்தான். “கௌதம்… நான் கேட்ட டாக்குமெண்ட்ஸும் அந்த ஃபைலும் ரெடியா?” என்று கேட்டான்.

கௌதம் தன் கையில் இருந்த ஃபைலை நீட்டி, “எல்லாமே நீ சொன்ன மாதிரி கச்சிதமா ரெடியா இருக்கு கந்தர்வன். சினேகா கம்பெனியில இருந்து திருடுன பணத்தோட விபரங்கள், சஞ்சய்யோட பேங்க் ஸ்டேட்மெண்ட்ஸ், அதுமட்டும் இல்லாம இளவஞ்சியோட ஒரிஜினல் சர்டிபிகேட்ஸ் அத்தனையும் இந்த ஃபைல்ல இருக்கு,” என்றான் ஒரு சிறந்த நண்பனாகவும் பிசினஸ் பார்ட்னராகவும்.

கந்தர்வன் அந்த ஃபைலை வாங்கித் தன் தந்தையிடம் கொடுத்தான். “அப்பா… இந்தச் சக்கரவர்த்தி எம்பையர்ஸோட நிஜமான மருமகளா, இந்த கம்பெனியைத் தன் திறமையால வழிநடத்தப் போற தகுதியான பொண்ணு இப்போ சைட் ஆபீஸ்ல இருக்கா. அவ கழுத்துலதான் இப்போ இந்த மேடையில நான் தாலி கட்டப் போறேன்,” என்று அதிரடியாக அறிவித்தான்.

பெற்றவருக்கு ஒன்னும் புரியவில்லை .  யாராவது ஒரு பெண்ணை உண்மையாக நேசித்திருக்கிறானோ?? யாராக இருக்கும்?? என்று யோசனை.  ஒரு பக்கம் ஆனால், தந்தை யோசனை ஒரு பக்கம் இருக்கட்டும் என்று கந்தர்வன் தன் வேலையை பார்க்க கௌதமோடு சென்றுவிட்டான்.


அதே நேரத்தில், ஓஎம்ஆர் கன்ஸ்ட்ரக்ஷன் சைட் அலுவலகம்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் சைட்டில் தொழிலாளர்கள் யாரும் இல்லை. அமைதியாக இருந்த அந்தச் சிறிய அறையில் இளவஞ்சி தன் நீல நிறச் சுடிதாரில் அமர்ந்து, கம்ப்யூட்டரில் அடுத்த வாரத்திற்கான சிமெண்ட் கொள்முதல் விபரங்களைச் சரிபார்த்துக் கொண்டிருந்தாள். அவளது முகம் வாடியிருந்தது. கைகள் கீபோர்டில் வேலை செய்தாலும், அவளது நெஞ்சு முழுக்கத் திருமண மண்டபத்தில் இப்போது கந்தர்வனுக்கும் சினேகாவுக்கும் திருமணம் நடந்து கொண்டிருக்கும் என்ற எண்ணமே குடைந்து கொண்டிருந்தது.

அவளது கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கம்ப்யூட்டர் மேஜை மீது விழுந்தது. “இன்னேரம் சினேகா கழுத்துல அவர் தாலி கட்டியிருப்பார். இனி அவ‌அந்தச் சக்கரவர்த்தி குடும்பத்தோட மருமகள். நான் ஒரு முழுமையற்ற பிறவி என்ற ரகசியம் ஒருபுறம் என்னை வதைத்தாலும், அவரோட அந்த முரட்டுத்தனமான ஆதிக்கமும் வம்படியான பார்வையும் என் மனசுல இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்னு நான் நினைக்கவே இல்லை. இனி அவரை நான் சைட்ல கூட நிமிர்ந்து பார்க்கக் கூடாது,” என்று தனக்குள்ளே வைராக்கியத்தை வரவழைக்கப் போராடினாள்.

சட்டென்று, சைட் அலுவலகத்தின் வாசலில் ஒரு பிரம்மாண்டமான கார் வந்து பிரேக் அடித்து நின்ற சத்தம் கேட்டது.

இளவஞ்சி திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள். காரிலிருந்து கம்பீரமாக இறங்கியது வேறு யாரும் இல்லை; அதே பட்டு வேட்டி, பட்டுச் சட்டை, ஜரிகை அங்கவஸ்திரத்துடன் மணமகன் கோலத்தில் ஜொலித்துக் கொண்டிருந்த கந்தர்வன் தான்! அவனுக்குப் பின்னால் கௌதமும் காரிலிருந்து இறங்கி வந்தான்.

மணமகன் கோலத்தில் கந்தர்வனைக் கண்ட இளவஞ்சிக்கு ஒட்டுமொத்த உடம்பும் நடுங்கியது. அவளது அசுர மூளை குழப்பத்தின் உச்சத்திற்குச் சென்றது. கல்யாண மண்டபத்தில் இருக்க வேண்டியவர் ஏன் இந்த நேரத்தில் மணமகன் கோலத்தில் இங்கே வந்து நிற்கிறார் என்று புரியாமல், அவள் திகைத்துப்போய் எழுந்து நின்றாள்!

……

You may also like

Leave a Comment

About Me

Featured