அத்தியாயம் 10
அதிரூபனின் அலுவலகம் வழக்கத்திற்கு மாறாக மிகவும் பரபரப்பாக இருந்தது. அமிர்தா, அதிரூபன் இருக்கும் அந்த பிரத்தியேகத் தளத்திற்கு (Private Floor) வந்தபோது அவளுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. எப்போதும் மயான அமைதியுடன் இருக்கும் அந்தத் தளத்தில் இன்று சலசலப்பு அதிகமாக இருந்தது.
அவள் கவனித்தபோது, அதிரூபனின் தனிப்பட்ட ஓவிய அறை ஒரு பக்கம் வெளிப்படையான கண்ணாடிக் கதவுகளால் (Transparent Glass Doors) மாற்றப்பட்டிருந்தது. ஏற்கனவே திரைகளால் (Screens) மூடப்பட்டு ‘டார்க் ரூமாக’ வைக்கப்பட்டிருந்த அந்த அறையின் திரைகள் விலக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமல்லாமல், அமிர்தா நட்பு பாராட்டிய அவளது நண்பர்கள் அனைவரும் தன்னைத் தடையின்றிப் பார்த்துக் கொண்டே வேலை செய்யும்படி, அங்கேயே அவர்களுக்கான கேபின்கள் அமைக்கப்பட்டிருந்தன. அமிர்தாவைக் கண்டதும் அனைவரும் மகிழ்ச்சியுடன் சிரித்தனர்.
“என்ன கௌதம், எல்லாமே ஒரே நாள்ல மாறி இருக்கு? என்ன ஆச்சு?” என்று அமிர்தா ஆச்சரியத்துடன் கேட்க,
“அதான் எனக்கும் தெரியல. நேத்து பாஸ் போன் பண்ணி உடனே ஸ்கிரீன் எல்லாம் ஓபன் பண்ணி, கேபின் எல்லாம் இங்கே ஷிப்ட் பண்ணிடலாம்னு சொன்னாரு. நேத்து நைட்டே ஆட்கள் வந்து எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு போயிருக்காங்க. எல்லாம் பெர்ஃபெக்ட்டா இருக்கு” என்றான் கௌதம்.
தொடர்ந்து அவன், “இந்த கிளாஸ் டோர் சவுண்ட் புரூஃப் (Soundproof) தான். நாங்க பேசுறது உள்ளே கேட்காது, உள்ளே வந்து பேசினா தான் உண்டு. அதுமட்டுமில்லாம, எம்பி-யோட (MP) பொண்ணு லாவண்யாவைக் கேள்விப்பட்டிருக்கியா? லாஸ்ட் காம்பெடிஷன்ல அவங்கதான் ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கினாங்க. அவங்களும் ஏதோ வேலைக்கு வந்திருக்காங்களாம். அவங்களுக்கு என்ன டிபார்ட்மெண்ட்னு பாஸ் இன்னும் அலோகேட் பண்ணல. அவங்க வந்ததுக்கப்புறம் தான் பார்க்கணும்” என்று கூடுதல் தகவலைக் கூறினான்.
கௌதம் மற்ற விவரங்களைக் கூறிவிட்டுத் தன் இடத்திற்குச் சென்றுவிட, அமிர்தா தனக்குள் பேசிக்கொண்டாள். “அந்த லாவண்யாவும் இங்கதான் வேலை பார்க்கணுமா? என் பக்கம் வந்தா அவளுக்கு இருக்கு. ஆனா, என் திறமையை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன். என் வேலையை மட்டும் தான் பார்ப்பேன்.”
“நான் ஏதாவது சொதப்பல் பண்ணினா அப்புறம் அதிரூபன் சார் வருத்தப்படுவாரு. அவரோட ட்ரீம் பெயிண்டிங் ப்ராஜெக்ட்டை என்கிட்ட கொடுத்திருக்காரு. அவரோட பர்சனல் பெயிண்டிங்கிற்காகவே என்னை அழைத்து வந்திருக்காரு. இவ்வளவு முக்கியமான வேலையை என்னிடம் கொடுத்திருக்கிறார் என்றால், அவர் மனதில் நான் ஏதோ ஒரு பெரிய இடத்தைப் பிடிச்சிருக்கேன்” என்று நினைத்துக் கொண்டாள்.
மீண்டும் தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டு, “நான் எதுக்குத் தேவையில்லாமப் பேசிக்கிட்டு இருக்கேன்? என் வேலை என்னவோ அதைத்தான் பார்க்கணும். ஆள் கொஞ்சம் அழகா இருந்தா போதும், உடனே இந்த அமிர்தா சைட் அடிச்சிடுவா!” என்று சிரித்துக்கொண்டே ஓவியத்தில் கவனம் செலுத்தினாள். ஒரு அழகிய பெண் கையில் விளக்கு ஏந்தி இருப்பது போன்ற உருவத்தை வரையத் தொடங்கினாள். அந்தப் பெண்ணின் விரல்கள் மிகவும் மிருதுவாக இருக்கும்படி, அந்த ஓவியத்திற்கு உயிர் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது அலுவலகத்திற்குள் லாவண்யா அதிரடியாக நுழைந்தாள். தான் அங்கு வேலை செய்ய வந்திருக்கிறோம் என்பதை மறந்துவிட்டு, அங்கே தானே எஜமானி என்பது போலத் திமிராக நடந்துகொண்டாள். “அதிரூபன் தளம் எங்கே இருக்கிறது?” என்று மட்டும் கேட்டுக்கொண்டு, நேரடி உரிமையோடு உள்ளே வந்தாள். அங்கிருப்பவர்கள் அனைவரும், “இவள் தானா அதிரூபனின் மனைவியாகப் போகிறவள்?” என்பது போல் அவளைக் கேவலமாகப் பார்த்தனர்.
அப்போது தன் நண்பர்களுடன் ஏதோ சந்தேகம் தொடர்பாகப் பேசிக் கொண்டிருந்த அமிர்தாவைப் பார்த்த லாவண்யா, “ஹே லோ கிளாஸ் பீப்பிள்! உங்களுக்கு ஜாப் கிடைச்சதே பெரிய விஷயம், ஆனா நீங்க கதை அடிச்சுக்கிட்டு இருக்கீங்க. அப்புறம் அமிர்தா, நீ எல்லாம் பெயிண்டிங்ல என்ன சாதித்துவிட்டாய் என்று அதிரூபன் உனக்கு வேலை கொடுத்திருக்கிறார் எனத் தெரியவில்லை. நல்லவேளை, நான் எப்படியோ இந்த கம்பெனிக்கு வந்துட்டேன். நீங்க நிறையப் பேர் பொறுப்பற்ற ஜீவன்களா இருக்கீங்க. உங்க எல்லாரையும் நசுக்கிப் போட்டுட்டு, என் அதிரூபனோட கம்பெனியை நீட்டா, நிறைவா மாத்தணும்” என்றாள்.
ஏதோ தன் வீட்டுச் சீதனத்தில் இந்தக் கம்பெனியைக் கட்டியது போல அவள் செய்த அளப்பறையைக்கண்டு அனைவரும் எரிச்சலடைந்தனர். கௌதம் நாசுக்காக, “அமிர்தா, இன்னும் கொஞ்ச நேரத்துல சார் வந்துருவாரு. நமக்கு எதற்கு வம்பு? கொடுக்கிற காசுக்கு வேலை பார்க்கணும், ஓவர் ஆக்டிங் பண்ணக்கூடாது. நீ போய் உன் வேலையைப் பாருமா” என்று கூறிவிட்டுத் தன் கேபினுக்குச் சென்றான். அமிர்தாவும் அவளை மதிக்காமல் தன் ஓவிய அறைக்குச் சென்று வரையத் தொடங்கினாள்.
அவள் பின்னாடியே வந்த லாவண்யா, “ஆமா, இந்த ரூம் டார்க் ரூம்னு கேள்விப்பட்டேன். ஆனா இப்போ ரொம்ப வெளிச்சமா, பிரசாந்தமா இருக்கே?” என்று கிண்டலாகக் கேட்டாள்.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அமிர்தா, இதற்கு மேல் முடியாது என்பது போல், “ஆமா மேடம், அப்போ பிரைவசியா (Privacy) இருந்துச்சு, நிம்மதியா இருந்தோம். ஆனா இப்போ நிறைய டிஸ்டர்பன்ஸ் வருதுன்னு சார் சொன்னதால, நேத்து நைட்டே சார் எனக்காக நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகள் பண்ணியிருக்காரு” என்று பதிலடி கொடுத்தாள்.
“ஹேய்! நீ என்ன சொல்றன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆமா, ஒரு டிஸ்டர்பன்ஸா தான் வந்திருக்கேன். ஏன், அதிரூபன் கூட நீ நெருங்கிப் பழகுறது எனக்குப் பிடிக்கல. அவருகிட்ட நீ வேலை பார்க்கிறதே எனக்கு அருவருப்பா இருக்கு. நீ எல்லாம் கேட்பாரற்ற ஒரு அனாதை. உன்னோட வீடு கூட யார் வேணாலும் எடுத்துட்டு போற அளவுக்கு மெயின் ஏரியால இருக்கு. அடக்கி வாசி, என்கிட்ட வச்சுக்காத!” என்று லாவண்யா திமிராகப் பேசினாள்.
அவள் பேசி முடித்துத் திரும்பியபோது, அங்கே அதிரூபன் கைகளைக் கட்டிக்கொண்டு அவளை முறைத்துப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். அமிர்தா அமைதியாகத் தன் வேலையைப் பார்க்க, லாவண்யா திருதிருவென்று முழித்தாள்.
“இங்க என்ன நடக்குது லாவண்யா?” என்று அதிரூபன் கேட்டான். ‘அப்பாடா, இவனுக்கு எதுவும் தெரியவில்லை’ என்று நினைத்துக்கொண்ட லாவண்யா, ஒரு போலியான புன்னகையுடன், “ஹாய் அதிரூபன்! ஆக்சுவலி இவ வெளியே இருக்காங்களே அந்த எம்ப்ளாயீஸ் கூட கதை பேசிட்டு இருந்தா. அதான் கொடுக்கிற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை பாருன்னு சொல்லிட்டு இருக்கேன். மத்தபடி ஒன்னும் இல்ல. உங்க கம்பெனில சில பொறுப்பற்ற நபர்கள் இருக்காங்க, அவங்களையெல்லாம் திருத்தி கம்பெனியை இன்னும் மேல வழிநடத்த நான் வந்துட்டேன்ல! அப்புறம் உங்க கேபின் பக்கத்துல எனக்கு ஸ்பெஷல் கேபின் போட்டுட்டீங்களா?” என்று ஆவலாக அவனது கேபின் கதவைத் திறக்க முயன்றாள்.
அவள் கரங்களைப் பிடித்து நிறுத்திய அதிரூபன், “எங்க போறீங்க லாவண்யா?” என்று கேட்டான்.
“என்ன சார், தெரியாத மாதிரி கேக்குறீங்க? எனக்கு உங்க கம்பெனில பிளேஸ் பண்ணிக் கொடுத்திருக்கீங்க. கண்டிப்பா அது பர்சனல் அசிஸ்டன்ட் (Personal Assistant) வேலையா தான் இருக்கும். எங்க அப்பா ரெக்கமண்டேஷன் இருக்கு, கண்டிப்பா எனக்கு அந்த மாதிரி போஸ்டிங் தான் கிடைக்கும். அதனால தான் உங்க கேபினுக்குள்ள போறேன்” என்றாள் பெருமிதமாக.
அதிரூபன் அவளை ஒரு கேலிப் பார்வையோடு பார்த்தான். “யார் சொன்னா நீ என்னோட பர்சனல் அசிஸ்டன்ட்னு? என் பர்சனல் அசிஸ்டன்ட் எனக்குன்னு தனியா இருக்காங்க. அமிர்தா என்னோட பர்சனல் ஆர்டிஸ்ட் (Personal Artist). இதைத் தவிர்த்து வேற எந்த ஒரு பர்சனல் விஷயத்துக்கும் எனக்கு யாரும் தேவையில்லையே! ஆமா, உனக்கு நான் பர்சனல் செக்ரட்டரி வேலை கொடுப்பேன்னு நினைச்சுக்கிட்டு இருக்கியா? அதுவும் டிகிரி ஒழுங்கா பாஸ் பண்ணாம, காசு கொடுத்துப் பாஸ் பண்ண உனக்கு நான் ஜாப் கொடுக்கணுமா? எந்த ஒரு எக்ஸ்பீரியன்ஸும் இல்லாம? ஆர் யூ கரெக்ட்?” என்று முகத்திற்கு நேராகக் கேட்டுவிட்டான்.
அங்கு அமிர்தா மட்டும் தான் இருந்தாள். கண்ணாடிச் சுவருக்கு அப்பால் இருந்தவர்களுக்கு இவர்கள் பேசுவது கேட்கவில்லை என்றாலும், அதிரூபன் லாவண்யாவை நன்றாக ‘வைத்துச் செய்கிறான்’ என்பது மட்டும் அவர்களுக்குப் புரிந்தது.
லாவண்யா சமாளிக்க முயன்று சிரித்துக்கொண்டே, “என்ன அதிரூபன், கூப்பிட்டு வந்து இன்சல்ட் பண்ற மாதிரி இருக்கு? நீங்கதானே ஜாப் இருக்குன்னு சொன்னீங்க? சரி ஓகே, வேற என்ன ஜாப் எனக்குக் கொடுத்திருக்கீங்க?” என்று கேட்டாள்.
அதிரூபன் சற்று யோசித்துவிட்டு, “ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல (First Floor) ஃபைல் செக்சன் இருக்கு. ஃபைல்ஸ் எல்லாமே கரெக்ஷன் பண்ற ஜாப். கம்ப்யூட்டர்ல ஸ்கேன் பண்ணி எரர் இருந்தா அதைச் சரி பண்ணி, மறுபடியும் டவுன்லோட் பண்ணி புது காப்பி எடுக்கணும். இதுதான் உன் ஜாப். உனக்கு இந்த ஃப்ளோர்ல வேலையே இல்லை, எல்லாமே ஃபர்ஸ்ட் ஃப்ளோர்லயே முடிஞ்சிடும். சோ, உங்க திங்ஸ் எடுத்துட்டு கீழே போங்க” என்றான்.
உடனே தனது அலுவலகத் தொலைபேசியில் ஒரு எண்ணிற்கு அழைக்க, அடுத்த ஐந்து நிமிடத்தில் பீட்டர் என்பவர் வந்தார். “பீட்டர், இவங்கதான் உங்களோட டிபார்ட்மெண்ட்ல புதுசா ஜாயின் பண்ணியிருக்கிற நியூ ஜாயினிங் கிளார்க் (New Joining Clerk). இனி இவங்க உங்க சொல்படிதான் கேட்கணும். கரெக்டா வேலை பார்த்தா ஒரு வாரத்துல பர்மனென்ட் பண்ணலாம், இல்லன்னா நம்ம கையில ஒன்னும் இல்ல” என்று அதிரூபன் கறாராகச் சொல்லிவிட்டுத் தன் கேபினுக்குள் சென்றான்.
லாவண்யாவுக்கு ஆத்திரம் தாங்கவில்லை. பீட்டர் பணிவாக அவளை அழைக்க, வேறு வழியின்றி அவள் கீழே சென்றாள். அமிர்தா மீண்டும் தனது ஓவியத்தில் மூழ்கினாள்.
மதிய இடைவேளையின் போது அமிர்தா நண்பர்களுடன் உணவு அருந்தச் சென்றாள். அதிரூபன் வழக்கம் போல அலுவலகத்தைச் சுற்றிப் பார்த்தபடி வந்தான். ‘எம்பி மகளுக்கு எம்பி (MP) வேலை கொடுத்தோம், அவள் என்ன செய்கிறாள் பார்ப்போம்’ என்று கோப்புகள் பாதுகாக்கும் டிபார்ட்மெண்டிற்குச் சென்றான். அங்கே லாவண்யா வாங்காத திட்டுகளே இல்லை. அங்கிருந்த ஒரு சீனியர் ஆபீசர் அவளை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார்.
“ஏம்மா, பொண்ணுங்க இந்த காலத்துல எவ்வளவு முன்னேறி இருக்காங்க? ஆனா நீ என்னன்னா கேட்கிற கேள்விக்கெல்லாம் இப்படிப் பதில் சொல்லிட்டு இருக்க? நீ நிஜமாவே வேலை செய்ய ஆசைப்பட்டுதான் இந்த கம்பெனிக்குள்ள வந்தியா? மூச்சுக்கு முந்நூறு தடவை அதிரூபன் சார்தான் அனுப்புனாருன்னு சொல்ற. அவரு கம்பெனிக்கு முதலாளி, ஆனா இந்த டிபார்ட்மெண்ட்க்கு நான் தான் லீடர். நான் சொல்றதைக் கேட்டால்தான் இந்த வேலை உனக்கு இருக்கும், ஓகேவா?” என்று அவர் கடிந்துகொண்டார்.
அவர் திட்டியதில் வேறு வழியின்றி லாவண்யா தான் தவறு செய்த கோப்புகளை மீண்டும் திருத்திக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்த அதிரூபன், “எந்த ஒரு கஷ்டமும் இல்லாம மத்தவங்களைக் கீழே தள்ளிட்டு முன்னேறப் பார்த்தா இதான் நடக்கும்” என்று நினைத்துக்கொண்டான்.
அன்று அந்த ஓவியப் போட்டியின் போது, தனக்குப் பரிசு கிடைக்காவிட்டால் அமிர்தாவின் ஓவியங்களைச் சிதைத்து விட வேண்டும் என்று லாவண்யா தன் தந்தையிடம் போனில் பேசிக்கொண்டதை அதிரூபன் கேட்டிருந்தான். அதனால் தான் வேறு வழியின்றி அவளது கிறுக்கலுக்கு முதல் பரிசு கொடுத்துவிட்டு, தகுதியுள்ள அமிர்தாவுக்குத் தன் கம்பெனியில் நல்ல வேலையைக் கொடுத்தான்.
‘இவள் நன்றாக வாங்கி கட்டிக்கொள்ளட்டும்’ என்று நினைத்தபடி அவன் மேலே சென்றான். உணவு அருந்திவிட்டு வந்த அமிர்தா மீண்டும் தனது ஓவிய அறைக்குள் நுழைந்தாள். மற்றவர்கள் இன்னும் வராததால், டிரான்ஸ்பரண்டாக இருந்த கண்ணாடியறை மீண்டும் திரைகளால் மூடப்பட்டது.
ரொம்ப கேப் விட்டு போச்சுல்ல தொடர்ந்து கதையை அப்டேட் பண்ண பார்க்கிறேன்..