Home ANTIHERO9) அதிரூபன் 🔥

9) அதிரூபன் 🔥

by sreejanovels
8 views

அத்தியாயம் 9

சென்னையின் அந்தப் புறநகர்ப் பகுதியில் மாலை நேரத்துச் சூரியன், ரத்தச் சிவப்பாய் அடிவானத்தில் மறைந்து கொண்டிருந்தது. அந்தி சாயும் வேளையில், வழக்கமாக நிலவும் அமைதிக்கு மாறாக, அன்று ஒருவிதமான கனத்த மௌனம் அந்தப் பகுதியைச் சூழ்ந்திருந்தது. எம்.பி. கட்டிக் கொண்டிருக்கும் அந்தப் பிரம்மாண்டமான ஹோட்டல் கட்டிடம், ஒரு ராட்சத உருவம் போல அந்தப் பகுதியையே ஆக்கிரமித்து நின்றது. கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், அந்தக் கட்டிடத்தின் இருண்ட மூலைகளில் சில நடமாட்டங்கள் ரகசியமாகத் தொடர்ந்தன.

டெல்லியின் மிகக் கொடூரமான குற்றப் பின்னணியைக் கொண்ட அந்தப் பத்து மனிதர்களும், அந்தக் கட்டிடத்தின் நிலத்தடி அறையில் தஞ்சம் புகுந்திருந்தனர். அவர்களின் வரவு யாருக்கும் தெரியாமல் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு விதமான போர்ப் பயிற்சியைப் பெற்றவர்கள் போலத் தெரிந்தனர். அவர்களின் தலைவன் ‘காசி’, ஒரு பழைய மர நாற்காலியில் அமர்ந்து தனது நீண்ட கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தான். அவனது கண்கள் எப்போதும் ஒருவிதமான வேட்டை வெறியுடன் இருந்தன.

அங்கே எம்.பி. தனது அதிகாரத் தோரணையுடன் நுழைந்தார். அவர் வந்ததும் அந்த அறையில் இருந்த மற்ற ஆட்கள் எழுந்து நின்றனர். காசி மட்டும் அசையாமல் தனது வேலையிலேயே குறியாக இருந்தான்.

“காசி, நீங்க இங்க வந்ததுக்கு ஒரு பெரிய காரணம் இருக்கு. இந்த ஹோட்டல் பிசினஸ் எல்லாம் வெளியுலகத்துக்கு நான் காட்டுற ஒரு வேஷம். எனக்குத் தேவை இந்த ஹோட்டலுக்கு அடியில ஒரு சுரங்கப் பாதை. அது வழியா தான் நம்மளோட அந்தப் பழைய ‘சிலை கடத்தல்’ மற்றும் போதைப்பொருள் பரிமாற்றங்கள் நடக்கணும். ஆனா, இந்த ஹோட்டல் பிளானை முழுமைப்படுத்த அந்த அமிர்தா பொண்ணோட நிலம் எனக்கு வேணும். அந்தச் சின்ன நிலம் கிடைச்சா தான், நம்ம ரகசிய வழி நேரா மெயின் ரோட்டுக்குக் கனெக்ட் ஆகும்,” என்று எம்.பி. தனது வரைபடத்தை விரித்துக் காட்டினார்.

காசி தனது கத்தியை நிறுத்திவிட்டு நிமிர்ந்தான். “ஒரு பொண்ணோட நிலத்தை வாங்குறதுக்கு எதுக்கு சார் இவ்வளவு தயக்கம்? தூக்கிட்டு வந்து ஒரு கையெழுத்து வாங்க வேண்டியதுதானே?” என்று கரகரப்பான குரலில் கேட்டான்.

எம்.பி. கசப்பாகச் சிரித்தார். “விஷயம் அவ்வளவு லேசு இல்ல காசி. அந்தப் பொண்ணு வேலை செய்யுற இடத்தோட ஓனர் அதிரூபன். அவன் யாருன்னு உனக்குத் தெரியும்னு நினைக்கிறேன். அவனோட நிழல் உலகத் தொடர்பு ரொம்பப் பெருசு. அவன் அந்தப் பொண்ணுக்கு ஒரு கவசம் மாதிரி இருக்கான். இவ்வளவு நாள் அனாதையா இருக்கும் பொழுது நாம இந்த விஷயம் பண்ணி இருந்தா யாரும் எதுவும் சொல்லி இருக்க மாட்டாங்க. இப்போ அவ வேலைக்கு சேர்ந்து இருக்கிறது அதிரூபன் ஆபீஸ்ல. அதுவும் அதிரூபன் அவனாகவே வந்து அந்தப் பொண்ணுக்கு ஆஃபர் லெட்டர் கொடுத்திருக்கான் அப்படின்னா கொஞ்சம் விஷயம் வேற மாதிரி போகுது காசி.

அவனை மீறி நாம அந்தப் பொண்ணைத் தொட்டா, அது என் அரசியல் வாழ்க்கையையே காலி பண்ணிடும். அதான் ஒரு பிளான் பண்ணியிருக்கேன். அவனைப் பகைச்சுக்காமலே, அவனோட பலவீனத்தைப் பயன்படுத்தி நாம காய நகர்த்தணும்,” என்றார் எம்.பி.

அதே சமயம், அதிரூபனின் அலுவலகத்தில் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன. அதிரூபன் தனது மேஜையில் இருந்த கதிரேசன் (சித்தப்பா) கொடுத்த ரகசியக் கோப்புகளை ஒரு சிறிய டேபிள் லேம்ப் வெளிச்சத்தில் ஆராய்ந்து கொண்டிருந்தான். அவனது கண்கள் அந்தத் தரவுகளில் இருந்த மர்மங்களை உடைக்க முயன்றன.

இவன் சட்ட விரோதமாகச் சிலைகளைக் கடத்துவது தான் அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் உண்மை என்னவென்றால் ஏற்கனவே கடத்தப்பட்ட சிலைகளை இன்னொரு கும்பல் கடத்த வேண்டும் என்று இவனுக்கு ஆர்டர் கொடுக்கும். ஆனால் இவன் அந்தச் சிலையின் பூர்வீகத்தை அறிந்து கொண்டு உண்மையான இடத்தில் அந்த உண்மையான சிலையைச் சேர்த்துவிட்டு, டூப்ளிகேட்டாகத் தயார் செய்த சிலைகளை இவர்களுக்கு விற்று விடுவான். மேலும் தன் பெயர் பயன்படுத்தக் கூடாது என்று பல அக்ரீமெண்ட் பெற்றுக் கொண்டுதான் இந்த விஷயத்தைச் செய்வான். பிறகு உண்மை தெரிந்த பிறகு யாராலும் போட்டுக் கொடுக்க முடியாது. திருடனுக்குத் தேள் கொட்டியது போல் அனைவரும் அமைதியாகத் தான் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவன் ரகசியக் கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, அவன் போன் அதிர்ந்தது. எம்.பி. தான் அழைத்தார்.

“ஹலோ” என்றான். ஆனால் அவன் சொன்ன “ஹலோ”வில் எரிச்சலும் கடுகடுப்பும் கலந்திருந்தது. எதற்காக இந்த நேரத்தில் போன் செய்தாய் என்பது போல அது ஒலித்தது.

எம்பி மிகவும் பணிவாகவும் அன்பாகவும், “அதிரூபா, எப்படி இருக்க? ரொம்ப நாளாச்சு நம்ம சந்திச்சு. இன்னைக்கு நைட் என் வீட்ல ஒரு சின்ன டின்னர் இருக்கு. முக்கியமான சில வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வர்றாங்க. நீ வந்தா நல்லா இருக்கும். உன்னோட பிசினஸ் ஐடியாக்கள் அவங்களுக்கு ரொம்பத் தேவைப்படுது,” என்று எம்.பி. மிகவும் பண்பாகப் பேசினார்.

அதிரூபனுக்கு அந்தப் பேச்சில் இருந்த நரித்தனம் நன்றாகப் புரிந்தது. ‘என்னைத் தேடித் தூது வர்றாருன்னா, ஏதோ ஒரு பெரிய வலை விரிக்கிறாருன்னு அர்த்தம்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான். “கண்டிப்பா வர்றேன் சார். இரவு 8 மணிக்கு அங்க இருப்பேன்,” என்று மட்டும் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தான்.

இரவு 8 மணி. எம்.பி-யின் இல்லம் ஒரு அரண்மனையைப் போல ஜொலித்துக் கொண்டிருந்தது. வாசலில் பல சொகுசு கார்கள் அணிவகுத்து நின்றன. அதிரூபன் தனது கருப்பு நிற பிஎம்டபிள்யூ காரில் இருந்து இறங்கியபோது, அவனது மிடுக்கான தோற்றமும், ஆளுமையும் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளையே ஒரு நிமிடம் மிரள வைத்தது.

உள்ளே நுழைந்ததும், ஒரு பிரம்மாண்டமான வரவேற்பு அறை தெரிந்தது. அங்கே எம்.பி-யின் மனைவி சோபாவில் அமர்ந்து ஒரு தமிழ் சீரியலில் மூழ்கியிருந்தார். அவர் தனது கணவன் செய்யும் எந்த அநியாயத்தையும் கண்டு கொள்வதில்லை. அவருக்குத் தனது தொலைக்காட்சித் தொடர்களும், தனது தனிப்பட்ட உலகமுமே பிரதானம். அதிரூபன் உள்ளே வந்ததைக் கூட அவர் கவனிக்கவில்லை.

ஆனால், மாடிப்படியில் இருந்து லாவண்யா இறங்கி வந்தாள். ஒரு சிவப்பு நிறச் சிஃப்பான் புடவையில், அளவுக்கு அதிகமான ஒப்பனையோடு அவள் அதிரூபனைப் பார்த்தாள். அவனது அந்த முரட்டுத்தனமான அழகு அவளை ஏற்கனவே ஈர்த்திருந்தது. அதிரூபனை எப்படிக் கவர்வது என்பதில் அவள் தீராத வெறியுடன் இருந்தாள்.

“ஹாய் அதிரூபன் சார்! நீங்க வருவீங்கன்னு நான் எதிர்பார்த்தே இருக்கல. வாங்க…” என்று மிக நெருக்கமாக வந்து நின்றாள் லாவண்யா.

அதிரூபன் அவளை ஒரு சாதாரணப் பார்வை பார்த்தான். “ஹலோ லாவண்யா,” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டான். அவனது கண்கள் அங்கே இருந்த மற்ற விருந்தினர்களை ஆராய்ந்தன.

சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தபோது, எம்.பி. தனது நிஜமான நோக்கத்தை மெல்ல வெளிப்படுத்தினார். “அதிரூபா, லாவண்யாவுக்கு ஓவியம் வரையறதுல ரொம்ப ஆர்வம். சும்மா வீட்லயே இருக்காளேன்னு பார்க்கிறேன். அவளுக்கு உன் கம்பெனியில ஒரு வேலை கொடு. அவளும் கத்துக்கட்டும். வருங்காலத்துல நம்ம ரெண்டு பேரோட பிசினஸும் ஒண்ணா சேரணும்னா, இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒர்க் பண்றதுதான் நல்லது,” என்றார்.

அதிரூபன் நிதானமாக ஒரு வாய் உணவைச் சாப்பிட்டுவிட்டு, எம்.பி-யைப் பார்த்தான். அவனது கண்கள் இப்போது கூர்மையாக இருந்தன. ‘யாரோ வரைஞ்ச பெயிண்டிங் எடுத்து என்னோட பெயிண்டிங்னு சொல்லி ஓவியப்போட்டியில கலந்துக்கிறது, கேவலமா கிறுக்கி வச்சுட்டு இது ஒரு ஆர்ட் அப்படின்னு இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுற இந்த மாதிரி முட்டாள்களை என் ஆபீஸ்ல வேலைக்குச் சேர்க்கணுமா? எல்லாம் இந்த பெரியவங்களோட காண்ட்ராக்ட் எனக்குக் கிடைக்கிறதுக்காக. இந்த எம்பி சொல்றதெல்லாம் கேட்க வேண்டிய நிலைமை’ என்று மனதிற்குள் அவ்வளவு தூரம் அவர்களைத் திட்டி முடித்த பிறகு, முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் பேசினான்.

“சார், என் ஆபீஸ்ல வேலை செய்யணும்னா வெறும் ஆர்வம் மட்டும் போதாது, திறமை வேணும். லாவண்யாவுக்கு ஓவியத்துல ஆர்வம் இருக்குன்னா வரச் சொல்லுங்க. ஆனா, அவ அங்க ஒரு சாதாரண ஊழியர் தான். அவளுக்காக நான் எந்த விதிகளையும் மாத்திக்க மாட்டேன். அதுவும் ஒரு ஆறு மாச ‘கான்ட்ராக்ட்’ பேசிஸ்ல தான் சேர்ப்பேன். அந்த ஆறு மாசத்துல அவளோட ஒர்க்கைப் பார்த்துட்டு தான் பர்மனன்ட் பண்றதா இல்லையான்னு முடிவு பண்ணுவேன். இதுக்குச் சம்மதமா?” என்று ஒரு பெரிய நிபந்தனையைப் போட்டான்.

எம்.பி. ஒரு கணம் திணறினார். தனது மகளையே ஒரு ஊழியராகப் பார்க்கச் சொல்லும் அதிரூபனின் துணிச்சல் அவருக்கு எரிச்சலைத் தந்தது. ஆனால், லாவண்யா உடனே குறுக்கிட்டாள். “எனக்குச் சம்மதம் சார்! நாளைக்கே நான் ஜாயின் பண்றேன்,” என்றாள் உற்சாகமாக. அதிரூபனின் அருகில் இருக்க இதுவே சரியான வாய்ப்பு என்று அவள் எண்ணினாள்.

அதிரூபன் அங்கிருந்து கிளம்பும்போது அவனது மனதில் ஒரு எச்சரிக்கை மணி அடித்தது. ‘எம்.பி. ஏதோ பெரிய சதித் திட்டம் தீட்டுறாரு. லாவண்யாவை கம்பெனிக்குள்ள விடுறது ஒரு ஆபத்தான விளையாட்டு தான். ஆனா, அவ மூலமா எம்.பி-யோட அடுத்த மூவ் என்ன, அந்த ஹோட்டலுக்குள்ள என்ன நடக்குதுன்னு ஈஸியாத் தெரிஞ்சுக்கலாம்,’ என்று அவன் தீர்மானித்தான்.

அன்றைய இரவு அமிர்தாவுக்குத் தூக்கமே வரவில்லை. தனது நிலத்தைச் சுற்றி நடக்கும் அந்த ஹோட்டல் கட்டுமானப் பணிகளும், அங்கே புதிதாக வந்து தங்கியிருக்கும் டெல்லி ஆட்களின் மர்மமான நடமாட்டமும் அவளுக்கு ஒருவிதமான அச்சத்தைத் தந்தது. ஜன்னல் வழியாக அந்தப் பாழடைந்த ஹோட்டலைப் பார்த்தாள். இருட்டில் சில நிழல் உருவங்கள் ஆயுதங்களுடன் நடமாடுவது போல அவளுக்குத் தோன்றியது.

‘அரசியல்வாதிகள் தப்பு பண்றாங்க, ஆனா எவ்ளோ ஈஸியா பண்றாங்க. நம்ம கம்ப்ளைன்ட் பண்ணா நம்மளோட உயிருக்கு தான் ஆபத்து. ஏற்கனவே மிரட்டல் வேற விட்டிருக்காங்க. இப்ப அமைதியா இருக்காங்க, எதுவா இருந்தாலும் பாத்துக்கணும். இதை அதிரூபன் சார் கிட்ட சொன்னா அவருக்கு மட்டும் என்ன தெரியும்? அவருடைய வேலையே பிசினஸ் நிறுவனம், அதுவும் அட்வர்டைஸ்மென்ட் கம்பெனி வைத்து நடத்தி கிட்டு இருக்கார். அவர்கிட்ட போய் இந்த மோசமான ஆட்களை பத்தி சொன்னா அவர் என்ன சண்டையா போடப் போறாரு’ என்று அமிர்தா, அதிரூபன் ஒரு சாதாரண பிசினஸ்மேன் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவன் மிகப்பெரிய மாஃபியா என்று இவளுக்கு தெரியாமல் போனது தான் பரிதாபம்.

அமிர்தாவிற்கு தெரியாது, தான் ஒரு மாபெரும் நிழல் உலகப் போரின் நடு புள்ளியில் சிக்கி இக்கிறோம் என்பது. அதிரூபன் தன்னை ஒரு கவசம் போலக் காப்பான் என்று அவள் முழுமையாக நம்பினாள். ஆனால், அந்தச் சிங்கமே ஒரு பெரிய வேட்டைக்காகக் காத்திருக்கிறது என்பது அவளுக்குப் புரியவில்லை.

மறுநாள் காலை, அதிரூபனின் அலுவலகத்தில் லாவண்யாவின் வருகையினால் ஒரு பெரிய புயல் கிளம்பப் போகிறது என்பதை அந்த அலுவலக ஊழியர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை. அமிர்தா தனது ஓவிய அறையில் அமர்ந்து, தனது கனவு ஓவியத்திற்கு உயிர் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

அதிரூபன் தனது அறையில் அமர்ந்து ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தான். அவனது கண்கள் சிசிடிவி திரையில் பதிந்திருந்தன. “ஆட்டம் இப்போதான் ஆரம்பமாகுது எம்.பி… உன்னோட இளவரசியை என்னோட குகைக்குள்ள அனுப்பி வச்சிருக்க… அவளை வச்சே உன்னோட ராஜ்யத்தைச் சரிப்பேன்,” என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான்.

அந்த அறையில் இருந்த கதிரேசனின் போட்டோவைப் பார்த்தான். ‘சித்தப்பா, நீங்க சொல்லிக் கொடுத்த அந்தப் பழைய முறையிலயே இவங்களை வீழ்த்துவேன்’ என்று உறுதியெடுத்தான். அமிர்தாவின் முகத்தை ஒருமுறை நினைத்துப் பார்த்தான். அவளது மீதான ஆசை, இந்த அழுக்கான மாஃபியா உலகில் ஒரு துளித் தேனாக அவனுக்குத் தெரிந்தது. அவளைக் காப்பதற்காக அவன் எதையும் செய்யத் துணிந்திருந்தான்.

எம்.பி. சொல்வதற்கெல்லாம் அவன் கேட்பதற்கு ஒரே காரணம், அமிர்தா இருக்கும் அதே ஏரியாவில் தான் அவன் ஹோட்டல் கட்டிக் கொண்டிருக்கிறான். சட்ட விரோத செயல்களைச் செய்யப்போகிறான், வருங்காலத்தில் அமிர்தாவின் இடத்திற்குப் பிரச்சினை தருவான் என்பதுதான். அமிர்தா என்ற ஒருத்தி இல்லை என்றால் அதிரூபன் இவர்களை எல்லாம் எப்பொழுதோ தூசி போல் தட்டித் தூக்கி இருப்பான்.

அமிர்தாவுக்குத் தெரியாமல் அவளைப் பூவைப் போல் தன் பக்கம் இழுத்து, இவர்களைப் புயலைப் போல் சுழற்றி அடிக்க வேண்டும் என்பதே அதிரூபனின் திட்டம். பார்க்கலாம் இதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று.


You may also like

Leave a Comment

About Me

Featured