Home ANTIHERO7) பார்வை 😍

7) பார்வை 😍

by sreejanovels
7 views

அத்தியாயம் 7

குழந்தையைச் சுவாதியிடம் ஒப்படைத்துவிட்டு அஞ்சலி பெரிய வீட்டிற்கு வந்து சேர ஒரு அரை மணி நேரம் ஆகிவிட்டது. இசை அன்று யாரையும் வெளியே செல்ல ஒப்புக்கொள்ளவில்லை. அனைவரையும் வாசலில் நிற்க வைத்திருந்தான் இனியன். இசை கையில் ஆரத்தி தட்டோடு நிற்க, “யார் வருகிறார்கள்? யார் வருகிறார்கள்?” என்று கேட்டுக்கேட்டு அனைவருக்கும் வாய் வலித்ததுதான் மிச்சம். திடீரென்று வீட்டுக்குள் ஒரு ஸ்கூட்டி வர, அதில் வந்த பெண் ஹெல்மெட்டைக் கழற்றிய பிறகு அனைவரின் கண்களும் ஆச்சரியத்தில் விரிந்தன. அஞ்சலி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டிற்கு வருகை தந்திருக்கிறாள். ஆளே மாறிவிட்டாள்!

“அஞ்சலி! அஞ்சலி!” என்று அனைவரும் மாறி மாறி அழைத்துக்கொண்டு அவளிடம் ஓடினர். இசை ஆரத்தி தட்டைத் தன் சித்தி ராதாவின் கையில் கொடுத்துவிட, ராதா மகிழ்ச்சியாக வாங்கிக்கொண்டு தன் மருமகளுக்காக அங்கே நின்று கொண்டிருந்தார்.

“என்ன அஞ்சலி, சொல்லாம கொள்ளாம போன? இப்ப திடீர்னு வந்திருக்க? எங்கடா இருந்த இத்தனை வருஷம்? ஆளே மாறிட்ட! இப்ப நீ எங்க இருக்க? என்ன பண்ற? இனிமே இங்கதானே இருப்ப?” என்று ஆளாளுக்குக் கேள்வி மேல் கேள்வி கேட்க, அவள் ஒரு மெல்லிய புன்னகையோடு தன் அத்தையின் முன்பாக வந்து நின்றாள். ராதா ஆரத்தி எடுத்து முடித்து நெற்றியில் பொட்டு வைத்தவுடன், அஞ்சலியின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விழுந்தது. அறைந்தது வேறு யாரும் அல்ல, அவளது மாமியார் ராதாதான்!

அனைவரும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். வந்த பெண்ணிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று அவர்கள் நினைக்க, அஞ்சலி மட்டும் சிரித்துக்கொண்டே கண்களில் கண்ணீரோடு நின்றாள்.

“உன் புருஷன் இப்படிப் பண்ணா எங்களை எதுக்குடி தண்டிச்ச? அந்த உரிமை உனக்கு யார் கொடுத்தது? பெத்த மகள் மாதிரி பார்த்துக்கிட்ட என்கிட்டயும் ஒரு வார்த்தை கூடச் சொல்லாம நீ பாட்டுக்கு போயிட்ட இல்ல? இப்போ திடீர்னு வந்தவனை ஏற்றுக்கொள்ளணுமா?” என்று உரிமையோடு மருமகளிடம் சண்டை போட்டார் ராதா.

“சொல்லாம கொள்ளாம போக வேண்டிய சூழ்நிலை வந்தது அத்தை. இல்லைன்னா இங்கேயே இருந்து செத்துப் போனால்தான் எனக்கு விடுதலை கிடைக்கும்னு தோணுச்சு. உங்க பிள்ளை பண்றதை எல்லாரும் ‘பொறுத்துப் போ’ன்னு சொன்னீங்க. நீங்களும் சாதாரண மாமியார் மாதிரி ‘பொறுத்துக்கிட்டுதான் போகணும்’னு தானே இருந்தீங்க? நான் எதுக்கு அப்படி இருக்கணும்? எனக்குன்னு வாழ்க்கை இல்லையா? அந்த நிமிடம் தற்கொலைக்குத் தூண்டிய மனசைக் கட்டுப்படுத்தி, இங்கிருந்து கொஞ்ச நாள் விலகி இருக்கலாம்னு முடிவு பண்ணேன். அதான் விலகி இருந்தேன். இப்ப கூட உங்களோடு ஒட்டி உறவாடி, நம்ம உறவை நிரந்தரமாக்க வரல. ஒரு சில காரணத்துக்காகத்தான் வந்திருக்கேன். சும்மா உங்க எல்லாரையும் கடைசியா பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன். அப்புறம்… எனக்குக் கூடிய சீக்கிரம் விவாகரத்து கிடைக்கும் என்று நினைக்கிறேன். உங்க பையன்கிட்ட இதைக் கொடுத்துடுங்க,” என்று வரும்போதே கையோடு எடுத்து வந்திருந்த விவாகரத்து பத்திரத்தைத் தன் மாமியாரிடம் கொடுத்தாள்.

பின்பு உள்ளே சென்று குழந்தைகளைப் பார்க்க, அவர்களும் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு ஆளுக்கு ஒரு பக்கம் இருந்தனர். யாரைச் சமாதானம் செய்வது என்று தெரியாமல் அவள் பாவமாக நிற்க, மனம் தாங்க முடியாமல் அனைத்துக் குழந்தைகளும் அஞ்சலியை ஓடிச் சென்று கட்டிக்கொண்டனர்.

“பசங்களா, என் மேல ரொம்பக் கோபமா இருக்கீங்களா?” என்று அவள் கேட்க, எல்லாரும் ஒன்றுசேர்ந்து “இல்லை” என்று சொல்ல, குழந்தைகள் அனைவருக்கும் முத்தமிட்டு அவர்களோடு கதை பேசிக் கொண்டிருந்தாள். ஆனால் அஞ்சலியின் திடீர் நடவடிக்கை அனைவரையும் சற்று பயப்பட வைத்தது. எதற்கெடுத்தாலும் அழுதுகொண்டும் சோகமே உருவாயும் இருந்த அஞ்சலி, இப்பொழுது எதற்கெடுத்தாலும் வெடுக்கென்று பேசுவதைப் பார்த்த பிறகு அனைவருக்கும் ஆச்சரியம்தான். இனியன் மட்டும் அனைத்தையும் வேடிக்கை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அஞ்சலி ஒரு முடிவோடுதான் வந்திருக்கிறாள். விவாகரத்து பெற்று அவனுக்கும் தனக்கும் இருக்கும் உறவை முறித்துவிட வேண்டும்; இல்லையென்றால் எப்பொழுதும் அவனுக்குப் பயந்து பயந்து வாழும் வாழ்க்கை வெறுத்துவிடும் என்று அவள் எடுத்த முடிவு அவளுக்குச் சரியாகத் தோன்றியது. அவளின் கோப முகத்தைப் பார்த்துப் பயந்த அனைவரும், அதைக் கடந்து மற்ற விவரங்களைப் பேச, அவள் தன்னைத் தற்காத்துக்கொள்ளப் பேச ஆரம்பித்தாள். தப்பித்தவறி கூடப் பிள்ளை பெற்ற விஷயத்தை மட்டும் சொல்லவில்லை.

“நல்லவேளை, அந்த ஊட்டியில் அந்தப் பொண்ணு கூட இருந்த. இருந்தாலும் எங்களுக்கு ஒரு தகவல் சொல்லியிருக்கலாம்…” என்று ராதா சொல்ல, “சொல்லியிருக்கலாம்… சும்மா இல்லாம உங்க புள்ளைகிட்ட சொல்லியிருப்பீங்க. அவர் மறுபடி என்னை இந்த வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் ‘டொமெஸ்டிக் வயலன்ஸ்’ பண்ணுவாரு. நீங்க எல்லாரும் அமைதியா வேடிக்கை பார்ப்பீங்க. இதுதான் நடக்கும்,” என்று முகத்தில் அடித்தாற்போல் பேசினாள் அஞ்சலி.

“மாமியார் மேல கொஞ்சம் கூடப் பயமில்லை?” என்று ராதா கவலை கொள்ள, “உங்க மகனுக்கு நீங்க சரியான அம்மாவே இல்லை, இதுல எங்கிருந்து எனக்கு மாமியாரா வந்தீங்க? இவ்வளவு பேசுற வாய், உங்க பையன் என்னை அடிக்கும்போதும், திட்டும்போது, கேவலமா அவமானப்படுத்தும்போதும் எங்க போச்சு? கண்டும் காணாத மாதிரி இருந்தீங்க. அவனுக்கு ஒரு பொண்டாட்டி கிடைச்சா அவன் கஷ்டமெல்லாம் போய்விடும் அப்படின்னு எல்லாரும் விட்டுட்டுத் தானே போனீங்க? அவர் என்னென்ன பண்ணாருன்னு எனக்குத்தான் தெரியும். உங்க பெத்த பொண்ணா இருந்தா தெரிஞ்சிருக்கும். நல்லவேளை வினோ அக்கா இந்த உலகத்துல இல்லை, இவர் கூட வாழ்ந்திருந்தா அவங்களே அல்பாயுசுல போயிருப்பாங்க,” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது, அவள் கன்னத்தில் முரட்டுத்தனமாக ஐந்து விரல்கள் பதிந்தன.

அனைவரும் திரும்பிப் பார்க்க, அங்கே விமல் நின்று கொண்டிருந்தான். அனைவருக்கும் அவன் விமல், ஆனால் அவளுக்கு அவளுடைய விஜய்!

“என்னோட வினுவைப் பத்தி நீ பேசக்கூடாது. அதுக்கு உனக்குத் தகுதியே கிடையாது. பாதியில விட்டு ஓடிப்போனவளுக்கு எதுக்கு இவ்வளவு மரியாதை? அதுவும் எங்க அம்மாவை எதிர்த்துப் பேசுற?” என்று அவன் கர்ஜித்துக்கொண்டு வர, இவ்வளவு நேரம் அனைவரிடமும் எகிறிக் குதித்தவள், அவனைப் பார்த்தவுடன் அப்படியே ஆமை ஓட்டுக்குள் ஒளிவது போல் முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு பயந்து நடுங்கினாள்.

“எதுக்கு இப்ப வந்திருக்க? உனக்கு என்ன வேணும்?” அவன் நேரடியாக விஷயத்திற்கு வந்தான். ‘முதலில் இவன் எப்படி இங்கே வந்தான்? இதுவரை எட்டிப் பார்க்காதவன் இன்று எதற்கு வர வேண்டும்? அப்படி என்றால் இவளைப் பற்றி இவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இவள் வந்ததை மோப்பம் பிடித்து வந்திருப்பான்’ என்று மற்றவர்கள் நினைத்துக் கொண்டனர்.

“வேற என்னங்க கேட்கப் போறேன்? எனக்கு டிவோர்ஸ் வேணும். எனக்கு டிவோர்ஸ் கொடுங்க. அதான் கல்யாணம் ஆகி ரெண்டு வருஷத்துக்கு மேல ஆகுதுல்ல, கண்டிப்பா சீக்கிரம் கிடைத்துவிடும்,” என்று ராதாவின் கையில் இருந்த விவாகரத்து பத்திரத்தை எடுத்து விஜய் கையில் கொடுத்தாள்.

அதை வாங்கி கேலியாக அவளைப் பார்த்துக் கொண்டே, “நம்ம கல்யாணம் பண்ணும்போது ஒரு அக்ரிமெண்ட் போட்டோம், ஞாபகம் இருக்கா?” என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்தி விஜய் கேட்டான்.

“அதெல்லாம் ஞாபகம் இருக்கு மிஸ்டர் விஜய். பிடிக்கலைன்னா எப்ப வேணாலும் பிரிஞ்சு போகலாம், அதுதானே? அது தெரிஞ்சுதான் வந்திருக்கேன்,” என்று நெஞ்சை நிமிர்த்தித் தைரியமாகச் சொல்ல, அந்த வீடே அதிரும் அளவிற்குச் சிரித்தான் விஜய்.

“முக்கியமான நம்ம டீலிங் பற்றிப் பேசவே இல்லையே? விருப்பமில்லாவிட்டால் நம்ம ரெண்டு பேரும் பிரிந்து போகலாம், சரி. ஆனால் அதற்கு இடைப்பட்ட காலத்தில் குழந்தை ஏதாவது பிறந்தால், அதை என்கிட்ட ஒப்படைக்கணும். அதற்குள் உனக்குப் பிரிய வேண்டும் என்ற ஆசை வந்தால், எனக்குச் சட்டப்படி என்னுடைய குழந்தையை நீ பெற்றுத் தர வேண்டும். அந்த குழந்தையைப் பெற்று, ஆறு மாதம் அதைப் பராமரித்து, அதன் பிறகு என்னிடம் ஒப்படைத்துவிட்டுத்தான் விவாகரத்து பெற முடியும். அதற்குள் விதி மீறினால் 5 கோடி ரூபாய் அபராதம். அதை மறந்து போயிட்டியே மேடம்?” என்று கிண்டலாகப் பேசி, அவள் முகத்திலேயே அந்தப் பத்திரத்தை விசிறி அடித்தான்.

அவன் சொல்லும்போதுதான் அன்று போட்ட அக்ரிமெண்டின் வீரியம் அவளுக்குப் புரிந்தது. அதில் ஏதேதோ எழுதி இருந்தது, ஆனால் இவள் சரியாகப் படிக்கவில்லை. இவனைத் திருமணம் செய்துகொண்டு அவனோடு ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற காதல் மயக்கத்தில் எதையும் சரியாகப் பார்க்கவில்லை. ‘பிடிக்கவில்லை என்றால் பிரிந்துவிடலாம்’ என்று முதல் பக்கத்தைப் படித்துவிட்டு, ‘படித்தவுடன் கிழித்துவிடவும்’ என்ற கதை போல் ஆகிவிட்டது இவள் நிலை. இப்பொழுது என்ன பதில் சொல்வது? இவனிடம் தப்பிக்க வேண்டுமே! குழந்தை பற்றித் தெரிந்தால் தன்னைக் கொன்றுவிடுவானே! ‘ஐயோ என்ன சோதனை’ என்று பயந்து கொண்டே…

“அதற்கு வாய்ப்பே இல்லை மிஸ்டர் விஜய். சரி, பிரிஞ்சு இருக்கிறோம், அப்படியே இருந்துவிடலாம். எனக்கே எதைப் பத்தியும் கவலை கிடையாது. ஏன்னா எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கக்கூட இன்ட்ரஸ்ட் கிடையாது. ஆனா சார்… நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணனும்னா சட்டப்படி முதல் மனைவி கிட்ட… சாரி சாரி, உங்களுக்குத்தான் எனக்கு முன்னாடி கல்யாணம் ஆயிடுச்சு, நான் உங்கள் இரண்டாம் மனைவிதானே? உங்க இரண்டாம் மனைவிகிட்ட விவாகரத்து வாங்கின பிறகுதான் மூன்றாவது கல்யாணம் பண்ணனும். ஏதாவது ஒரு பொண்ணு கிடைச்சா அவசரமா கல்யாணம் பண்ணனும்னா என்கிட்டதானே வந்தாகணும்? அப்ப பார்த்துக்கலாம். இப்ப நான் வர்றேன். குடும்ப உறுப்பினர்களைப் பார்த்து அவங்க கூட நிம்மதியா ஹாலிடேவை என்ஜாய் பண்ணலாம்னு பார்த்தேன். என்ன பண்றது? பேசாமச் சுவாதி, சோட்டு ரெண்டு பேரையும் அழைச்சுக்கிட்டு எங்கேயாவது வெளியே போயிருக்கலாம். சரி நான் கிளம்புறேன்,” என்று முகத்தைத் தைரியமாக வைத்துக்கொண்டு, மனதில் மலையளவு பயத்தை வைத்துக்கொண்டு, எப்படியாவது இங்கிருந்து தப்பினால் போதும் என்று வாசலை நோக்கி அடி எடுத்து வைத்தாள்.

“அந்தச் சோட்டு யாரு???” என்று கேட்டான் விஜய்.

‘வாய் தவறி உளறிவிட்டோமே!’ என்று அப்போதுதான் அஞ்சலிக்குப் புரிந்தது. பயந்துகொண்டே, “அது சுவாதி… ஆசிரமத்தில் இருக்கிற ஒரு குழந்தை. ரொம்ப க்ளோஸ், அதான். வேற ஒன்னும் இல்ல,” என்று அவன் முகம் பார்க்காமல் படபடப்பாக ஆசிரமத்தை நோக்கிச் சென்றாள். அங்கே சுவாதி கண்ணீரோடு மதரின் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதுகொண்டிருக்க, தன் மகனைத் தேடினாள் அஞ்சலி. அங்கே அவன் இல்லை! ஓடிச் சென்று சுவாதியின் அருகே நின்றாள்.

“என்னடி அழுதுகிட்டு இருக்க? அது சரி, குழந்தை எங்க???” என்று சுவாதியைப் பார்த்துக் கேட்க, அதற்குச் சுவாதி சொன்ன பதிலில் அப்படியே இடிந்து போய் அமர்ந்தாள் அஞ்சலி.

பார்வை தொடரும்… 😍😍😍


You may also like

Leave a Comment

About Me

Featured