அத்தியாயம் 19
மெக்சிகோ துறைமுகம் அதிகாலைப் பனிமூட்டத்தில் மர்மமாகத் தெரிந்தது. ராட்சதக் கண்டெய்னர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அந்தப் பகுதியில், துருப்பிடித்த இரும்புச் சத்தமும் அலைகளின் ஓசையும் ஒருவித நடுக்கத்தை உண்டாக்கின.
டேவிட் முன்னால் நடந்து வர, அவனுக்குப் பின்னால் மரியா போல வேடமிட்ட காயத்ரி முகத்தை மறைத்தபடி மெல்ல நடந்து வந்தாள். சாரு ஒரு கண்டெய்னருக்குப் பின்னால் மறைந்தபடி தனது துப்பாக்கியுடன் தயாராக இருந்தான்.
தூரத்திலிருந்து ஆண்டனி தனது ஆட்களுடன் வெளிப்பட்டான். அவனது ஒரு கையில் துப்பாக்கி இருந்தது, மறு கையால் சீதாவின் கழுத்தைப் பிடித்திருந்தான். சீதாவின் முகம் பயத்தில் வெளிறிப் போய், கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தன.
“டேவிட்! சொன்ன நேரத்துக்கு வந்துட்ட. மரியாவையும் லாக்கெட்டையும் இங்கே கொண்டு வா,” ஆண்டனி கத்தினான்.
“முதலில் அம்மாவை விடு ஆண்டனி. அவங்களுக்கு இந்த விளையாட்டுல எந்த சம்பந்தமும் இல்லை,” டேவிட் தனது கையில் இருந்த லாக்கெட்டை உயர்த்திக் காட்டினான்.
ஆண்டனி ஒரு அடியானைச் சைகை செய்தான். அவன் வந்து டேவிட்டிடம் இருந்த லாக்கெட்டை வாங்கிக்கொண்டு, அதன் உண்மைத்தன்மையை ஒரு கருவி மூலம் பரிசோதித்தான். “பாஸ், இது ஒரிஜினல் தான்!” என்றான் அந்த அடியான்.
உடனே சீதா அம்மா அவர்கள் கண்முன்னாக நிற்கவைக்கப்பட்டார்
“சரி, இப்போ மரியாவை அனுப்பு,” என்றான் ஆண்டனி.
காயத்ரி மெல்ல ஆண்டனியை நோக்கி நடந்தாள். அவள் சீதா அம்மாவை கடந்தபோது, ஒரு நொடி அவரது கையைப் பிடித்து அழுத்தினாள். அது ஒரு சமிக்ஞை. சீதாவுக்கு ஏதோ புரிந்தது போலத் தலையசைத்தார்.
காயத்ரி ஆண்டனியின் அருகில் சென்றதும், ஆண்டனி சீதாவைத் தள்ளிவிட்டான். சீதா ஓடிப் போய் டேவிட்டைத் தழுவிக்கொண்டார். “டேவிட்… காயு எங்கே?” என்று சீதா பதற்றத்துடன் கேட்டார்.
அதே சமயம், ஆண்டனி காயத்ரியின் முகத்திரையை விலக்க முயன்றான். “மரியா… உன் அப்பா செஞ்ச பாவத்துக்கு நீ தான் பலியாகப் போற!” என்று சொல்லிக்கொண்டே அவளது முகமூடியைத் தூக்கினான்.
உள்ளே காயத்ரியின் கண்கள் அனலாகத் தெரிந்தன. அவள் மின்னல் வேகத்தில் ஆண்டனியின் மணிக்கட்டைப் பிடித்துத் திருகினாள். அவளது கையில் மறைத்து வைத்திருந்த ஒரு சிறிய ஊசியை ஆண்டனியின் கழுத்தில் குத்தினாள்.
“ஆ! என்ன இது?” என்று ஆண்டனி அலறினான்.
“இது உன் நரம்புகளை ஒரு மணி நேரத்துக்குச் செயலிழக்க வைக்குற மருந்து ஆண்டனி!” என்று கத்தினாள் காயத்ரி.
அடுத்த நொடி, துறைமுகமே போர்க்களமானது. சாருவும் டேவிட்டும் மறைவிடங்களில் இருந்து சுடத் தொடங்கினர். ஆண்டனியின் ஆட்கள் சிதறி ஓடினர். காயத்ரி ஒரு கண்டெய்னருக்குப் பின்னால் பாய்ந்து மறைந்தாள்.
“அம்மாவை அழைச்சிட்டுப் போ சாரு! நான் காயத்ரியைப் பார்த்துக்கிறேன்!” என்று டேவிட் கத்திக்கொண்டே ஆண்டனியின் ஆட்களை நோக்கி முன்னேறினான்.
ஆனால் ஆண்டனி அவ்வளவு சீக்கிரம் விழுந்துவிடவில்லை. அவன் ஒரு அடியானின் உதவியுடன் ஒரு காரில் ஏறித் தப்பித்தான். “டேவிட்! லாக்கெட் இப்போ என்கிட்ட இருக்கு. உன் காதலியோட அம்மாவை நீ காப்பாத்திட்ட, ஆனா இந்த மெக்சிகோவை நான் சாம்பலாக்குவேன்!” என்று கத்தியபடி கார் மறைந்தது.
டேவிட் காயத்ரியிடம் ஓடி வந்தான். “காயு, உனக்கு எதுவும் ஆகலையே?”
“நான் நல்லா இருக்கேன் டேவிட். ஆனா ஆண்டனி லாக்கெட்டோட தப்பிச்சுட்டான். அதுல இருக்குற பணத்தை வச்சு அவன் ஒரு பெரிய ராணுவத்தையே உருவாக்குவான்,” என்றாள் காயத்ரி கவலையுடன்.
டேவிட் ஒரு வஞ்சகப் புன்னகையை உதிர்த்தான். “அவன் எடுத்துட்டுப் போன லாக்கெட்ல ஒரு ஜிபிஎஸ் டிராக்கர் (GPS Tracker) வச்சிருக்கேன் காயு. அவன் எங்க போறான்னு இப்போ நமக்குத் தெரியும். அவனோட அந்த ரகசிய இடத்துக்கே நாம போகப்போறோம்!”
அதே நேரம், சிறையில் இருந்த ரிகார்டோவுக்குத் தகவல் சென்றது. ஆண்டனி லாக்கெட்டை எடுத்துக்கொண்டு தனது தலைமை இடத்திற்குச் சென்ற செய்தி அவனைச் சிரிக்க வைத்தது. “ஆண்டனி… அந்த லாக்கெட் குள்ள நான் வச்சிருக்கிறது பணம் மட்டும் இல்ல… ஒரு மரணப் பொறி!”
ஆண்டனியின் ரகசியக் கோட்டைக்குள் நுழையும் டேவிட் மற்றும் காயத்ரிக்குக் காத்திருக்கும் அந்த அதிர்ச்சியான பொறி என்ன?
டேவிட்டின் லேப்டாப்பில் அந்தச் சிறிய சிவப்பு புள்ளி மின்னிக்கொண்டிருந்தது. ஆண்டனி சென்றுகொண்டிருக்கும் திசை, மெக்சிகோ நகரின் எல்லையில் இருந்த ஒரு பழைய கோட்டையைக் காட்டியது. அது ஒரு காலத்தில் ராணுவக் கிடங்காகப் பயன்படுத்தப்பட்டது.
“அவன் அங்கேதான் போறான்,” என்றான் டேவிட். அவனது கண்கள் வேட்டையாடும் மிருகத்தைப் போலக் கூர்மையடைந்தன.
சீதாவை ஒரு பாதுகாப்பான இடத்தில் சாருவின் பொறுப்பில் விட்டுவிட்டு, டேவிட்டும் காயத்ரியும் அந்தக் கோட்டையை நோக்கிப் புறப்பட்டனர். இருண்ட மேகங்கள் சூழ்ந்த அந்த இரவு, ஏதோ ஒரு பெரிய ஆபத்தை முன்னறிவிப்பது போல இருந்தது.
கோட்டையின் மதில் சுவரை அடைந்தபோது, காயத்ரி தனது நவீனக் கருவியைப் பயன்படுத்தி அங்கிருந்த லேசர் சென்சார்களைச் செயலிழக்கச் செய்தாள். “டேவிட், உள்ளே குறைந்தது ஐம்பது பேராவது இருப்பாங்க. நாம சத்தமில்லாம போகணும்.”
இருவரும் நிழல் போல உள்ளே நுழைந்தனர். கோட்டையின் மைய மண்டபத்தில் ஆண்டனி தனது முக்கிய ஆட்களுடன் அமர்ந்திருந்தான். அவனது கையில் அந்த லாக்கெட் இருந்தது.
“ரிகார்டோவோட எல்லா ரகசியமும் இப்போ என் கைக்குள்ள!” என்று கத்திய ஆண்டனி, அந்த லாக்கெட்டை ஒரு கம்ப்யூட்டரில் இணைத்தான்.
கம்ப்யூட்டர் திரையில் பல எண்கள் ஓடத் தொடங்கின. ஆனால், திடீரென்று திரையில் ரிகார்டோவின் முகம் தோன்றியது. பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோவில் ரிகார்டோ வஞ்சகமாகச் சிரித்தான்.
“ஆண்டனி… நீ இந்த லாக்கெட்டைத் திறப்பன்னு எனக்குத் தெரியும். நீ ஒரு பேராசை புடிச்சவன். ஆனா இந்த லாக்கெட்ல இருக்கிறது என் சொத்து விவரம் இல்லை… இந்தக் கோட்டை முழுவதையும் வெடிக்க வைக்குறதுக்கான ரிமோட்! என்ன புரியலையா இந்த ஷிப்பில நான் ஒரு சீக்ரெட் வச்சிருக்கேன் ஒரு மாசத்துக்குள்ள மூன்று முறைக்கு மேல ஓபன் பண்ணா நான்காவது முறை ஒரு மிகப்பெரிய ஆபத்து தான் உங்களுக்கு கிடைக்கும்.”
ஆண்டனியின் முகம் வெளுத்தது. கம்ப்யூட்டர் திரையில் பத்து நிமிட கவுண்ட்டவுன் (Countdown) ஓடத் தொடங்கியது.
“என்னது? பொறி வச்சிருக்கானா?” ஆண்டனி அலறினான்.
அதே சமயம், மறைந்திருந்த டேவிட் மற்றும் காயத்ரியை ஆண்டனியின் ஆட்கள் கண்டுபிடித்தனர். “அங்கே பாருங்க! டேவிட் மில்லர்!”
துப்பாக்கிச் சூடு தொடங்கியது. ஒரு பக்கம் வெடிகுண்டு பயம், மறுபக்கம் டேவிட்டின் அதிரடித் தாக்குதல். கோட்டையே ரணகளமானது.
“காயு! நாம இங்கிருந்து கிளம்பணும். இன்னும் ஏழு நிமிஷம் தான் இருக்கு!” டேவிட் கத்தினான்.
ஆனால் காயத்ரி அங்கிருந்த மெயின் சர்வரைப் பார்த்தாள். “டேவிட், இந்த சர்வர்ல தான் ஆண்டனியோட மொத்த சட்டவிரோதப் பணப் பரிமாற்ற விவரங்களும் இருக்கு. இதை அழிச்சா தான் அவனோட பலம் குறையும். எனக்கு ரெண்டு நிமிஷம் கொடுங்க!”
டேவிட் அவளுக்குப் பாதுகாப்பாக நின்று கொண்டு, தன்னை நோக்கி வந்தவர்களைச் சுட்டு வீழ்த்தினான். ஆண்டனி பயத்தில் தனது முக்கிய ஆட்களுடன் ரகசியப் பாதை வழியாகத் தப்பிக்க முயன்றான்.
“டேவிட், முடிஞ்சது! டேட்டாவைப் காப்பி பண்ணிட்டேன். ஓடுங்க!” காயத்ரி கத்தினாள்.
இருவரும் படிக்கட்டுகள் வழியாகக் கீழே குதித்து ஓடினர். பின்னால் கோட்டையின் சுவர்கள் ஒவ்வொன்றாக வெடிக்கத் தொடங்கின. நெருப்புப் பிழம்புகள் வானை முட்டின.
டேவிட் காயத்ரியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு ஒரு பெரிய பள்ளத்தில் குதித்தான். அடுத்த நொடி, கோட்டை ஒரு பிரம்மாண்டமான வெடிப்புடன் தரைமட்டமானது.
புகை மண்டலத்திற்கு இடையே டேவிட் மெல்லத் தலை தூக்கிப் பார்த்தான். காயத்ரி அவனது அணைப்பில் மயக்கமடைந்திருந்தாள். அவளது தலையில் லேசான காயம்.
“காயு… கண் முழி காயு!” டேவிட் பதறினான்.
அவள் மெல்லக் கண் விழித்தாள். “டேவிட்… நாம ஜெயிச்சிட்டோமா?”
“நாம ஜெயிச்சிட்டோம் காயு. ஆனா அந்த ஆண்டனி… அவன் தப்பிச்சிருப்பானோன்னு தோணுது,” டேவிட்டின் பார்வையில் சந்தேகம் இருந்தது.
அப்போது தூரத்தில் ஒரு ஹெலிகாப்டர் பறந்து செல்வது தெரிந்தது. அதில் ஆண்டனி தப்பிச் சென்றிருக்கலாம்.
காயத்ரி தனது கையில் இருந்த மெமரி கார்டைக் காட்டினாள். “அவன் தப்பிச்சிருக்கலாம் டேவிட். ஆனா அவன் இப்போ ஒரு ஏழை. அவனோட எல்லா ரகசியமும் என்கிட்ட இருக்கு. இனி அவன் அதிகாரமில்லாத ஒரு சாதாரணக் குற்றவாளி!”
டேவிட் அவளை இறுக்க அணைத்துக்கொண்டான். அந்த எரிந்து கொண்டிருக்கும் கோட்டையின் வெளிச்சத்தில் அவர்களது காதல் இன்னும் ஆழமானது.
ஆனால், சிறையில் ரிகார்டோவின் அறைக் கதவு திறக்கப்பட்டது. ஒரு உயர்மட்ட அதிகாரி உள்ளே நுழைந்து, “ரிகார்டோ, உங்களை விடுவிக்க உத்தரவு வந்திருக்கு,” என்றார்.
ரிகார்டோ வெளியே வருவதால் ஏற்படப்போகும் புதிய புயல் என்ன? டேவிட்-காயத்ரி இந்தியா திரும்ப முடியுமா?