அத்தியாயம் 4
“சோட்டு தம்பிக்குத் தேவையானது எல்லாமே ரெடி பண்ணிட்டேன். நீ உன்னோட டிரஸ் எல்லாத்தையும் பேக் பண்ணி வச்சுக்கோ. நாம இன்னைக்கே போய் ரீச் ஆனாதான் என்னோட ஹோமுக்கு (Home) போய் சேர முடியும். அதுக்கப்புறம் மறுநாள் நாம கம்பெனிக்கு போய் நமக்கான அப்பார்ட்மெண்ட் சாவி வாங்கிட்டு வந்துடலாம்.”
என்று சோட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் சுவாதி பத்திரப்படுத்தி அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள். அங்கு ஏதோ சித்தம் பிரம்மை பிடித்த நிலையில், கீதாஞ்சலி தன்னுடைய ஒரே புடவையை மீண்டும் மீண்டும் மடித்து வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த சுவாதிக்குக் கடுப்புதான் வந்தது. இருந்தாலும் அவள் நிலைமை அப்படி என்று அமைதியானாள்.
அனைவருக்கும் சேர்த்து பேக்கிங் வேலைகளை முடித்துவிட்டு, ஒரு டிராவல் ஏஜென்சி மூலம் அனைத்துப் பொருட்களையும் தான் சொன்ன முகவரிக்கு பத்திரமாக அனுப்புமாறு கட்டளையிட்டாள் சுவாதி. வீட்டுப் பொருட்களோடு இவர்களின் துணிமணிகளும் சென்னைக்குப் பயணமானது. சிறிது நேரத்தில் அவர்கள் விமானப் பயணம் மேற்கொள்ளப் போகிறார்கள்.
சுவாதி வளர்ந்தது எல்லாமே சென்னையில் இருக்கும் அவ்வை இல்லத்தில்தான். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன், ஊட்டிக்கு வேலை நிமித்தமாகப் புறப்பட்டு வரும்போதுதான், ரயிலில் அழுத முகத்தோடு இருந்த கீதாஞ்சலியைச் சந்தித்தாள். கீதாஞ்சலி தனக்கு யாருமில்லை என்று தன் வாழ்வைப் பற்றிச் சொல்ல, சுவாதியும் தனக்கு யாரும் இல்லை என்று கூறி, இருவரும் ஒன்றாக இருக்கலாம் என அவளை அழைத்துச் சென்றாள். சுவாதியின் பெற்றோர் பூர்வீகம் ஊட்டி என்று கேள்விப்பட்டிருக்கிறாள். அவர்கள் இறந்துவிட்டதால், சொந்த பந்தங்கள் சொத்தைப் பறிக்க முயன்றபோது, அவ்வை இல்லத்தின் தலைவிதான் சுவாதியின் தாயாரின் 200 சவரன் நகை மற்றும் அழகான ஃபார்ம் ஹவுஸ் பத்திரங்களைப் பாதுகாத்து வைத்து, சுவாதியிடம் ஒப்படைத்தார். அந்த இல்லத்தின் தலைவி மீது சுவாதிக்கு அலாதி பிரியம். மாதந்தோறும் அவருக்கு போன் செய்து நலம் விசாரித்துவிடுவாள். இப்போது அவர்களைப் பார்க்கத்தான் புறப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். விமானம் ஏறுவது சோட்டுக்கு முதல் பயணம் என்பதால், அவன் குதூகலமாகச் சுவாதியிடம் தன் மழலை மொழியில் கேள்விகள் கேட்க, அவளும் சலிக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.
இங்கே கீதாஞ்சலி கடந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நினைத்துப் பார்த்தாள்.
“விஜய் ப்ளீஸ் விஜய்… எனக்குப் பயமா இருக்கு, தயவுசெஞ்சு இதை பண்ணாதீங்க!” என்று விமானத்தில் சீட் பெல்ட் அணிய விடாமல், அவளைச் சீட்டில் கூட அமர விடாமல் கீழே தள்ளிவிட்டு, விமானத்தைச் சற்று வேகமாகச் செலுத்தச் சொன்னான் விஜய். பைலட்டும் அவன் கட்டளைக்கு ஏற்ப விமானத்தைச் செலுத்த, உயிர் போய் உயிர் வந்தது கீதாஞ்சலிக்கு. அந்தச் சம்பவத்தை அவளால் மறக்க முடியுமா?
அதை நினைத்துப் பார்க்கவே அவளுக்கு நெஞ்சக்கூடு ஏறி இறங்கியது. இந்த ஒரு கொடுமை மட்டுமே அவன் செய்யவில்லை, இன்னும் என்னென்ன கொடுமைகள் செய்தான் என்பதை நினைக்கும்போது வேதனை நெஞ்சை அடைத்தது. அவனை மீண்டும் பார்த்துவிடவே கூடாது என்ற உறுதியில் இருந்தாள்.
சிறிது நேரத்தில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தனர். விமானப் பயண நேரத்தை விட, இந்தச் செக்கிங் (Checking) வேலைகளே அதிக நேரத்தை எடுத்துக் கொண்டது. ஒரு டாக்ஸி பிடித்து அவ்வை இல்லத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு முன்பாகவே அவர்கள் அனுப்பி வைத்த பொருட்கள் வந்து சேர்ந்திருந்தன. அனைத்தையும் சரிபார்த்துவிட்டு, இல்லத்தின் தலைவியான கஸ்தூரி அம்மாவைப் பார்க்கச் சென்றனர்.
“சுவாதி கண்ணா! வர்றதைச் சொல்லவே இல்ல?” என்று அவள் வந்த மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார் கஸ்தூரி அம்மா.
“உங்களுக்குச் சர்ப்ரைஸ் (Surprise) பண்ணத்தான் யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்னு சொன்னேன். உங்களைத் தவிர ஹோம்ல இருக்குற எல்லாருக்கும் தெரியும். எல்லாரும் எப்படி இருக்கீங்க?” என்று நலம் விசாரித்தாள். கஸ்தூரி அம்மா, சுவாதி அருகில் இருக்கும் பெண்ணையும் அவள் கையில் இருக்கும் குழந்தையையும் பார்த்து யார் என்று விசாரித்தார்.
“இது என்கூட வேலை பார்க்குற பொண்ணு கீதாஞ்சலி. நாங்க ரெண்டு பேரும் சென்னைக்கு டிரான்ஸ்பர் வாங்கி வந்துட்டோம். ஆபீஸ் மேனேஜ்மென்ட் அப்பார்ட்மெண்ட் தராங்க, அங்கதான் இருக்கப் போறோம். இவன் குட்டி பையன் வினோவர்மன். ஆனா நாங்க எல்லாரும் ‘சோட்டு’ அப்படின்னுதான் கூப்பிடுவோம். இவளோட பையன்தான், ஒன்றரை வயசாகுது.”
“அப்படியா ரொம்ப சந்தோஷம். சரி, உன்னோட புருஷன் என்னம்மா பண்றாரு?” என்று அஞ்சலியைப் பார்த்துக் கேட்க, என்ன சொல்வதென்று தெரியாமல் அஞ்சலி தவித்தாள். சுவாதி சட்டென்று முந்திக்கொண்டாள்.
“அவர் புருஷன் போன மாசம்தான் ஊட்டியில் இருந்து சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆகி வந்திருக்காரு. ஆனா சென்னை தாண்டி இருக்கிறதுனால அங்க ஒரு தனி ரூம் எடுத்துத் தங்கியிருக்காரு. இவ புருஷன் இல்லாம இருக்க முடியாது இல்லையா? அதனால இவளும் சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆகி வந்துட்டா. இப்ப நாங்க ரெண்டு பேரும் ஒரு அப்பார்ட்மெண்ட்ல தங்குவோம். வார இறுதியில் அவ கணவனோடு இருப்பா, நான் நம்ம ஹோமுக்கு வந்துடுவேன்,” என்று அஞ்சலியைப் பற்றிப் பொய்யாகப் பூசி மெழுகினாள்.
அவரும் இதற்கு மேல் கேள்வி கேட்டால் சரியாக இருக்காது என்பதால், இருவருக்கும் நல்ல விருந்து சமைக்கச் சொன்னார். ஆசிரமக் குழந்தைகளோடு அன்றைய பொழுது கழிந்தது.
“சார், நீங்க சென்ட் பண்ண போட்டோல இருக்குற பொண்ணு சென்னையில லேண்ட் ஆகி நாலு மணி நேரம் ஆகுது. அவங்க அண்ணாநகர் பக்கத்துல இருக்குற அவ்வை இல்லத்துக்குதான் போயிருக்காங்க,” என்று சென்னையில் கீதாஞ்சலி வந்தவுடன் அவளைப் பின்தொடர்ந்து தகவல்களைத் தெரிவிக்குமாறு விஜய் கட்டளையிட்ட நபர் தகவல் கொடுத்தார்.
“இந்த வாட்டி நான் மிஸ் பண்ண மாட்டேன் அஞ்சலி. நீயே வந்துட்டல்ல, இனி உனக்குக் கவுண்ட்டவுன் (Countdown) ஸ்டார்ட்,” என்று எள்ளல் சிரிப்போடு அவள் புகைப்படத்தை வருடிக் கொண்டிருந்தான் விஜய்.
இங்கு இசை பத்திரகாளியாக முறைத்துக் கொண்டிருக்க, இனியன் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
“இசை என்னைப் புரிஞ்சுக்கோ. உன்னோட கோபம் எனக்குப் புரியுது. இந்த விஷயம் சொன்னா எங்கப் பிரச்சனை வருமோன்னு நான் யார்கிட்டயும் சொல்லவே இல்லை.”
“எப்படி… எப்படி? என்னோட அண்ணன் மேல இருக்குற பாசத்தை விட உங்களுக்குப் பயம் அதிகமா? அந்தப் பொண்ணைக் காப்பாத்தி விட்டிருக்கீங்கன்ற பேர்ல இன்னும் பெரியப் பிரச்சனையில மாட்டி விட்டிருக்கீங்க. அப்பவே அவ நிலைமை புரிஞ்சு எங்க அண்ணன்கிட்ட சொல்லியிருந்தா அவன் மனசு மாறியிருக்கும். இப்ப நீங்க என்ன பண்ணியிருக்கீங்க தெரியுமா? அதுவும் பச்சை குழந்தையை வச்சுக்கிட்டு அவ ஊட்டி மாதிரி குளிர் பிரதேசத்துல இருந்துருக்கா. ஏதோ யாரும் இல்லாத மாதிரி… ஒன்னுக்கு மூன்று நாத்தனார்கள் இருந்து என்ன பிரயோஜனம்? அவளைப் பார்த்துக்க யாரும் இல்லாம போயிடுச்சுல்ல! ரொம்பக் குற்ற உணர்வா இருக்குங்க. எங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் மொத்தக் குடும்பமும் வருது, ஆனா அவ யார்கிட்டயும் எந்த உதவியும் கேட்காம தனியா வாழ்ந்திருக்கா. அவ லேசப்பட்டவள் இல்லையே, சரியான நெஞ்சழுத்தக்காரி ஆச்சே! ஆனா எப்படியோ அவள் நிலை எங்க அண்ணனுக்குத் தெரிஞ்சா சாமியாடி விடும்,” என்று இசை பயத்தில் நடுங்கினாள். அவள் கைப்பிடித்துச் சமாதானம் செய்தான் இனியன்.
“டென்ஷனாகாதம்மா. போய் பசங்களைப் பாரு, அவங்க ஸ்கூல்ல இருந்து வர்ற டைம். நான் ஒரு தடவை அந்த ஹோமுக்கு போய் அஞ்சலி, அவ பிரண்டு, குழந்தை மூணு பேரையும் பார்த்துட்டு வர்றேன்.”
“அஞ்சலியைப் பார்க்கப் போறீங்களா? ஒரு நிமிஷம்!” என்று சமையலறைக்குச் சென்று குழந்தைகளுக்காகச் செய்து வைத்திருந்த சிக்கன் சாண்ட்விச் ஒன்றை எடுத்து சூடுபடுத்தி, அதை பேக் செய்து அவனிடம் கொடுத்தாள்.
“இது அஞ்சலிக்கு ரொம்பப் பிடிச்சது. அவளைப் பத்தி எனக்குத் தெரிஞ்சு நான் கொடுத்ததா நினைக்க வேண்டாம். சும்மா நீங்களே எடுத்துட்டு வந்ததா சொல்லுங்க. இப்போதைக்கு எனக்கும் இந்த விஷயம் எதுவும் தெரியாத மாதிரி ரகசியமாக இருக்கட்டும். கூடிய சீக்கிரம் எங்க அண்ணனுக்கும் அஞ்சலிக்கும் கடவுள் ஒரு வழி காட்டாம இருக்க மாட்டாரு. அப்படியே குழந்தையை ஒரு போட்டோ எடுத்துட்டு வந்துருங்க, எங்க அண்ணன் மகனைப் பார்க்கணும்னு ஆசையா இருக்கு,” என்று ஆவலாகச் சொன்னாள். அவள் தலையை வருடிவிட்டவன்,
“அத்தைப் பாசம் சொல்வாங்களே, அது இதுதான் போல! சரி நான் எடுத்துட்டு வர்றேன். இதுவரைக்கும் அவ வாட்ஸ்அப்ல கூட குழந்தை போட்டோ எனக்கு அனுப்புனது கிடையாது. நான் யாருக்கும் தெரியாம அவனை போட்டோ எடுத்துட்டு வர்றேன். உன்னோட ஓட்டை வாய் நினைச்சாதான் பயமா இருக்கு,” என்றான். அதற்கு அவள் முறைத்துக் கொண்டு, “சத்தியம், சத்தியம்! என்னோட காதல் மேல சத்தியம், இந்த விஷயம் நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்,” என்று கூறி கணவனை அனுப்பி வைத்தாள்.
ஆசிரமக் குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருந்த சுவாதிக்கு ஒரு தனியார் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.
“ஹலோ, யாரு?”
“ஹலோ சுவாதிதானே?”
“ஆமாம், சுவாதிதான். நீங்க?”
“ஹலோ சுவாதி மேம், நான் வி.ஏ (VA) ரெஸ்டாரன்ட் மேனேஜர் ரித்திக் பேசுறேன்.”
“ஓ மை காட்! ஹலோ சார் சொல்லுங்க, எதுக்காகக் கால் பண்ணியிருந்தீங்க? எனி இம்பார்டன்ட் (Any important)?”
“நோ, நோ… அனதர் பிரான்ச்ல இருந்து வர்றவங்களுக்குப் பயணம் சௌகரியமா இருந்ததா? நாளைக்கு எத்தனை மணிக்கு வரணும்னு தகவல் சொல்றதுக்காகத்தான் போன் செய்தேன். மத்தபடி வேற எதுவும் இல்லை.”
“ஓகே சார், டிராவல் நல்லபடியா முடிஞ்சது. நான் இப்போ எனக்குத் தெரிஞ்ச இடத்துல இருக்கேன். நாளைக்கு மார்னிங் வந்து அப்பாயின்மென்ட் லெட்டர் (Appointment letter) மத்த ஃபார்மாலிட்டீஸ் (Formalities) எல்லாமே முடிச்சுக்குறோம்.”
“ஓகே சுவாதி, தேங்க்யூ.” என்று போன் கட் செய்தான்.
சுவாதி அதை மறந்துவிட்டுப் பிள்ளைகளோடு விளையாடச் சென்றாள். ஆனால் ரித்திக், சுவாதியின் தேன் குரலைக் கேட்பதற்காகவே மற்றவர்களுக்கு வேறு ஆட்கள் மூலம் பேசச் சொல்லிவிட்டு, சுவாதிக்கு மட்டும் தன் எண்ணில் இருந்து அழைத்துப் பேசினான். அவள் குரலைக் கேட்டதிலேயே அவனுக்குத் துள்ளாத குறைதான்!