அத்தியாயம் 3
“டேய் விமல், நீ சொன்ன மாதிரி வேற பிரான்ச்ல இருந்து வர்ற ஒர்க்கர்ஸ் எல்லாருக்கும் அப்பார்ட்மெண்ட் ரெடி பண்ணியாச்சு. அவங்க இங்க வந்தவுடன் வீட்டு சாவியை வாங்கிட்டு போயிடுவாங்க. நம்ம மேனேஜர் எல்லாத்தையும் பார்த்துப்பார். நாளைக்கு எல்லாரும் வந்துடுவாங்க.
அதுமட்டுமில்லாம, அதுல ஒரு பீஸ் எனக்கு ஏத்த மாதிரி இருக்கு!” என்று ரித்திக் குதூகலப்பட்டு சொல்லிக் கொண்டிருக்க, விமல் அவனை ‘யார் அது?’ என்பது போல் உணர்வற்ற பார்வையில் பார்த்தான்.”அது வந்து… பேரு சுவாதி. பாவம், அம்மா அப்பா இல்லை போல. ஹாஸ்டல்ல இருந்து தனியா வீடு எடுத்து அவ பிரண்டு கூட தங்கி வேலைக்கு வர்றா. எனக்கும் யாரும் இல்லை, ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருப்போம்னு ஒரு ரூட் போடலாம்னு சொன்னேன். மற்றபடி தப்பான எண்ணம் இல்லடா!” என்று அவன் அங்கிருந்து நழுவிவிட்டான்.
இல்லையென்றால் விமலிடம் மிதி வாங்க வேண்டியிருக்கும் என்று அவனுக்குத் தெரியும்.அன்றைய நாள் முழுவதும் விமலுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. ஏதோ நெஞ்சைப் பிடித்து அழுத்துவது போன்ற உணர்வு. அவன் செய்யக்கூடாததை அனைத்தையும் செய்து முடித்துவிட்டான், ஆனால் தான் செய்வது சரியா தவறா என்று அவனுக்கே புரியவில்லை. சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று தன் இருக்கையில் சாய்ந்தான்.
மூன்றாம் தளத்தில் அவனுக்கான அனைத்து வசதிகளும் கொண்ட தனித்தளம் என்பதால், அவன் அனுமதி இன்றி யாரும் வர முடியாது.கண்கள் மூடி உறக்கத்தில் ஆழ்ந்தவன் முன்பாக, அவனுக்கு மிகவும் பிடித்த பட்டுப்புடவையில் லட்சணமாக வந்து நின்றாள் அவனின் **வினுஷா**.அவளிடம் ஒரு குழந்தையாய் ஆதரவு தேடி அவன் கைகளை நீட்ட, அவளும் அவன் கரங்களைப் பற்றி அமர்ந்தாள். காதல் ரசனை பொங்கும் பார்வையோடு அவனைப் பார்த்தாள்.
“வினு…””சொல்லுங்க விமல்.””வினு, நீ ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்க.””உங்களைப் பார்க்கணும் போலவும், உங்ககிட்ட சில விஷயங்கள் பேசணும் போலவும் இருந்தது, அதான் வந்தேன்.””இத்தனை வருஷம் நீ இல்லாம நான் எப்படி ஏங்கிப் போயிருந்தேன் தெரியுமா? நடுவுல ஒருத்தி எனக்குப் பெரிய துரோகத்தைப் பண்ணிட்டுப் போயிட்டா. அவளை உன் இடத்துல வச்சு அழகு பார்க்க நினைச்சேன். அவளுக்குப் பிடிக்காமப் போயிட்டா. என் கையில மட்டும் சிக்கட்டும் அவள்!”
“எனக்கான இடம் என்னோடது, அந்தப் பொண்ணுக்கான இடம் அவளோடது. நீங்க ஒரு விஷயத்தை மறந்துட்டீங்க விமல். அந்தப் பொண்ணோட மனசுல துடிக்கிறது என்னுடைய இதயம். என்னுடைய இதயத்துடிப்பு தான் அவகிட்ட இருக்கு. ஆனா அவளோட குணம், புத்தி எல்லாம் வேற. அவளோட தனித்தன்மையை நீங்க பறிக்கப் பார்க்கிறது தப்பு. என்னுடைய இடத்தை என்னால் மட்டும்தான் நிரப்ப முடியும், அதேபோல் தான் அவளும்,” என்று சொன்ன வினுஷாவை அவன் முறைத்தான்.
“எனக்கு எப்பவுமே நீதான் ஸ்பெஷல். உன்னோட இதயம் அவளுக்குள்ள துடிக்கிற ஒரே காரணத்துக்காகத்தான் அவளை என்கிட்ட வச்சிருந்தேன். ஆனா அவதான் சொல்லாமக் கொள்ளாமப் போயிட்டா,” என்று ஒரு சிறுவன் போல அவளிடம் புகார் செய்தான்.”விமல், நீங்க ஒன்னு புரிஞ்சுக்கணும். நானாவது உங்ககிட்ட சண்டை போடுவேன், பேசாம இருப்பேன். ஆனா அவள் எப்படி?”
“நான் கோவிச்சுக்கிட்டா கூட, நான் பேசுற வரைக்கும் என் முன்னாடி பத்து தடவை நடப்பா. அடிக்கடி வாட்ஸ்அப்ல சாரி மெசேஜ் போடுவா. நான் சாப்பிடாம இருந்தா எனக்காகக் காத்திருப்பா. ஆனா அவங்க அப்பா மேல இருந்த கோபத்தை நான் அவள் மேல காட்டினேன். அவளை ஒரு அடிமை மாதிரி நடத்தினேன். ஒருநாள் எல்லை மீறி நடந்தேன், அப்பவும் அவ கூட இருப்பான்னு நம்பினேன். ஆனா என்னை விட்டுப் போயிட்டா,” என்று தான் செய்த செயல்களைப் பெருமையாகச் சொல்லிவிட்டு, இறுதியில் சோகமாக முடித்தான்.
வினுஷா கோபமாக, “தப்பு பண்ணிட்டீங்க விமல். அந்தத் தப்பைத் திருத்திக்கோங்க. இனி நான் வரமாட்டேன். அவள் உங்களுக்கானவள், அவளை விடாமப் பிடிச்சுக்கோங்க. ஒரு முக்கியமான விஷயம் விமல், உங்களுக்கே தெரியாம ஒரு விஷயம் உங்களுக்காகக் காத்துட்டு இருக்கு. கூடிய விரைவில் அது உங்களைத் தேடி வரும்,” என்று சொல்லி மெல்ல மறையத் தொடங்கினாள்.”வினு! தயவுசெய்து என்கிட்ட வந்துடு வினு! வினு!” என்று அலறிக்கொண்டு விழித்துப் பார்த்தான் விமல்.
அந்த அலுவலக அறை நிசப்தமாக இருந்தது.’என் வினு உயிரோடு இருந்திருந்தா நான் இப்படி அனாதையா ஃபீல் பண்ணிருக்க மாட்டேன். அவளோட இதயத்தைத் தாங்கியிருக்கான்னு அவளை நம்பினேன், ஆனா அவளும் போயிட்டா. வீட்ல யாரும் என்னைப் புரிஞ்சுக்கல,’ என்று வருந்தினான். ஆனால் அவனது நல்வாழ்வுக்காக ஆத்மாவாகச் சுற்றிக் கொண்டிருந்த வினுஷா, மெதுவாக அவன் தலையை வருடினாள்.’கூடிய சீக்கிரம் உன் வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைக்கப்போகுது விமல். எனக்கான நேரம் முடிந்துவிட்டது.
உனக்கானவள் உன்னைத் தேடி வரப்போறாள்,’ என்று கூறிவிட்டு வினுஷா காற்றோடு காற்றாக மறைந்தாள்.
அதே சமயம், ஊட்டியில் டிரான்ஸ்பர் லெட்டரை வாங்கிக் கொண்டு வெளியே வந்த கீதாஞ்சலிக்கு இதயம் ஏதோ ஒரு வலியில் துடித்தது. உடலில் ஒரு விவரிக்க முடியாத மாற்றம். அவள் நிலையைப் பார்த்து சுவாதி பதறினாள்.
“என்னடி ஆச்சு? எதுக்கு இவ்வளவு டென்ஷனா இருக்க? சரி சீக்கிரம் கிளம்பலாம்.”வீட்டிற்கு வந்த பிறகும் அஞ்சலியின் மனம் அமைதியாகவில்லை. “சுவாதி, எனக்கு என்னமோ சரியா படல. நான் இங்கேயே இருக்கேன், நீ மட்டும் சென்னைக்குப் போ. எனக்கு ஒரு அன்கம்பர்டபிள் ஃபீலிங் இருக்கு. ஒருவேளை நான் விஜய்யைப் பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்தா என்னால தாங்க முடியாது. சோட்டு இருக்கிற விஷயம் அவருக்குத் தெரிஞ்சா என்ன ஆகும்னு நினைச்சாலே பயமா இருக்கு,” என்று உளறினாள்.
சுவாதி அவளைத் தலையில் கொட்டி, “நாம போகப்போறது வேலைக்கு. ஆபீஸ்ல ‘டே கேர்’ இருக்கு, அங்க குழந்தையை விட்டுட்டு நாம தேர்ட் ஃப்ளோர்ல வேலை செய்யப்போறோம். அந்த முதலாளியை இதுவரைக்கும் யாரும் பார்த்ததே இல்லையாம். அப்புறம் என்ன? நீ ஒரு குழந்தை பெத்தவுடனே ஆளே மாறிட்ட, உன்னை அடையாளம் கண்டுபிடிக்கவே பத்து நாள் ஆகும். உன் பயத்தை முதல்ல தூக்கிப் போடு. நாம ஃபிளைட்ல போகப்போறோம், எல்லாம் என் குட்டி பையனுக்காகத் தான்!” என்று சமாதானப்படுத்தினாள்.
கீதாஞ்சலியும் ஒரு முடிவுக்கு வந்தாள். ‘இது என்ன சினிமாவா? திடீரென்று சந்திக்கவா போகிறோம்? அப்படியே சந்தித்தாலும் நான் எழுதிய கடிதத்தில் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன்.
இனி சந்தித்தால் கூட சாதாரணமாக விலகிவிடலாம். ஆனால் சோட்டுவைப் பற்றி மட்டும் அவருக்குத் தெரியக்கூடாது,’ என்று நினைத்தாள்.
தான் எதை மறைக்க நினைக்கிறாளோ, அந்த மகனே தன்னை விஜய்யிடம் காட்டிக் கொடுக்கப் போகிறான் என்பதை அறியாமல், சென்னையை நோக்கிப் புறப்பட்டாள் கீதாஞ்சலி.