கெஸ்ட் ஹவுஸ் அறை நிசப்தமாக இருந்தது. ஆனால் அதிரவனின் மனதிற்குள் பெரும் புயலே அடித்துக் கொண்டிருந்தது.படுக்கையில் சாய்ந்திருந்த அதிரவனின் கண்கள் மூடியிருந்தன. அவன் அருகில் அந்தப் பெண் அமர்ந்திருந்தாள்.
அவனது கரம் அவளைத் தீண்டிக்கொண்டிருந்தாலும், அவனது ஆழ்மனம் வேறொரு இடத்தில் இருந்தது.மூடிய இமைகளுக்குள் இருட்டு இல்லை; மாறாக, மீனாட்சியின் முகம் தெளிவாகத் தெரிந்தது.அன்று காலை சமையலறையில், பயந்த சுபாவத்துடன் ஆனால் கண்களில் ஒருவித வைராக்கியத்துடன் தன்னை நிமிர்ந்து பார்த்த அதே மீனாட்சி.
அழுக்கு படிந்த ஸ்டோர் ரூமில், வியர்வை வழிய அவள் நின்ற கோலம்.இதுவரை அவன் சந்தித்த எந்தப் பெண்ணிடமும் இல்லாத ஒரு பிடிவாதம் அவளிடம் இருந்தது. அந்தப் பிடிவாதம் அவனை ஈர்த்ததா அல்லது எரிச்சலூட்டியதா என்று அவனுக்கே தெரியவில்லை. ஆனால், அவன் அந்தப் பெண்ணை அணைத்தபோது, அவன் மனம்
“மீனாட்சி…” என்று அவளையே நினைத்துக் கொண்டிருந்தது.”அதிரவா…” என்று அருகில் இருந்த பெண் மென்மையாக அழைத்தாள்.அந்தக் குரலைக் கேட்டதும், அதிரவனின் கற்பனை கண்ணாடி போலச் சிதறியது. சடாரெனக் கண்களைத் திறந்தான்.எதிரே தெரிந்தது மீனாட்சி அல்ல.அந்த நொடி, அவன் மீது அவனுக்கே ஒரு கடுமையான வெறுப்பு உண்டானது.
தன் கட்டுப்பாட்டையும் மீறி, ஒரு சாதாரணப் பெண் தன் சிந்தனையை ஆக்கிரமித்திருப்பதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அது அவனது ஆணவத்திற்கு விடப்பட்ட சவாலாகத் தோன்றியது.அவன் முகம் கோபத்தில் சிவந்தது. அந்தப் பெண்ணை வேகத்துடன் விலக்கித் தள்ளினான்.”வேண்டாம்… Go away!” என்று கத்தினான்.
அந்தப் பெண் அதிர்ச்சியில் உறைந்துபோய், “என்ன ஆச்சு அதிரவன்? நான் எதுவும் தப்பா…” என்று இழுத்தாள்.”பேசாத! வெளியே போ… இப்போவே இந்த இடத்தை விட்டு வெளியே போ!”அவன் குரலில் இருந்த ஆக்ரோஷம் அந்தப் பெண்ணை நடுங்கச் செய்தது. அவள் அவசர அவசரமாகத் தன் உடைகளைச் சரிசெய்துகொண்டு, அவன் வீசிய பணத்தை எடுத்துக்கொண்டு அறையை விட்டு ஓடினாள்.
கதவு சாத்தப்பட்டதும், அதிரவன் எழுந்து அங்கிருந்த கண்ணாடி மேஜையை ஓங்கி ஒரு குத்து விட்டான்.”அதிரவா… என்ன நடக்குது உனக்கு? அவ யாரு? வெறும் சமையல்காரி. அவளைப் போய் ஏன் நினைச்ச? அவ முகம் ஏன் உன் கண்ணுக்குள்ள வருது?”அவன் தனக்குத்தானே கேள்விகளைக் கேட்டுக்கொண்டு உறுமினான்.
மீனாட்சியின் நினைவு அவனுக்கு ஒரு போதை போலவும், அதே சமயம் ஒரு விஷம் போலவும் ஏறியிருந்தது. அந்த உணர்வு அவனுக்குப் பிடிக்கவில்லை. அது அவனது பலவீனமாக அவனுக்குத் தோன்றியது.”இல்ல… இது காதல் இல்ல. இது என் ஈகோ. என்னை நிமிர்ந்து பார்த்த அவளோட திமிர் எனக்குப் பிடிக்கல.
அதான் அவளைப் பத்தியே யோசிக்கிறேன்.”அவன் கண்கள் ஜன்னல் வழியே தெரிந்த இருளை வெறித்தன.”மீனாட்சி… நிம்மதியாய் நான் உண்டு இருந்தேன் உன் அருவருக்கு தக்க திமிர் பார்வையில என்ன உன் பக்கம் சாய வச்சுட்டா இதுக்கான தண்டனை உனக்கு கிடைக்கும்.”ஒரு வேட்டைக்காரன் தன் இரையைத் தீர்மானிப்பது போல, அதிரவன் அந்த முடிவை எடுத்தான். அவளைத் துரத்துவது மட்டுமே இனி அவன் லட்சியம் என்று முடிவு செய்தான்.-
–இங்கே தனது ஜீப் மூலம் மெட்ராஸில் தான் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான் தென்னரசு.மிகப்பெரிய சுகர் பேக்டரி அது. தென்னரசுவைப் பார்க்கத்தான் காட்டான் போல, படிக்காத முட்டாள் என்று சொல்வது போல் இருப்பான். ஆனால் அவன் படித்தது எம்பிஏ. பெரிய அளவில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும், எப்படியோ அரியர் இல்லாமல் தனக்குப்பின்னால் இரண்டு பட்டத்தைப் பெற்றிருக்கிறான்.
அதனால் தான் இந்த ஃபேக்டரியில் கணக்காளராக வேலை கிடைத்தது. பழைய ஃபேக்டரியில் இருந்து மாறுதலும், மேலும் கூடுதல் சம்பளமும் கிடைத்தது. தவிர, தன் குடும்பம் இழந்த தலைவர் பதவியைப் பெற, மீனாட்சி இருக்கும் ஏரியாவுக்குப் பக்கத்திலேயே தானும் ஒரு அறை எடுத்து வந்திருக்கிறான்.”ஒரு வழியா இங்க வந்தாச்சு. ஆத்தா கிட்ட பொய் சொன்னது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு.
இருந்தாலும் இந்தப் புள்ளைய எப்படியாவது மனசு மாத்தி, எனக்குச் சொந்தமாக்கி, ஊருக்குள்ள என் கௌரவத்தை விட்டுக்கொடுக்காம இருக்கணும். அதன் பிறகு என்ன? எல்லாமே என் கட்டுப்பாடு தான். என் அழகு கிராமத்தில் ராஜா மாதிரி வாழப் போறேன்.”என்று தனக்குள்ளே பேசிக்கொண்டு, தன்னுடைய உடமைகள் எல்லாத்தையும் அறையில் சீர் செய்து வைத்துவிட்டு, தனது பால்கனி வழியாக மீனாட்சி தங்கியிருக்கும் பெண்கள் ஹாஸ்டலைப் பார்த்துக் கொண்டிருந்தான்.”இதுல எங்க அந்தப் புள்ள இருக்கும்? ரொம்ப பெரிய ஹாஸ்டல் மாதிரி இருக்கு.
இதுல அந்தப் பொண்ண எப்படித் தேடுவது?”என்று நினைத்துக்கொண்டே, ‘சரி ஏதாவது சாப்பிடலாம்’ என்று வெளியே வந்தான். அங்கு இருக்கும் ஒரு டிபன் சென்டரில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, கையில் ஒரு புத்தகப் பையோடு மீனாட்சி சென்று கொண்டிருப்பதைப் பார்த்தான்.”இது என்ன ஞாயிற்றுக்கிழமை கூட இந்த புள்ள காலேஜுக்கு போயிட்டு வர மாதிரி வருது?” என்று சந்தேகத்தோடவே மீனாட்சியைப் பின்தொடர்ந்தான்.
அவள் ஹாஸ்டல் கேட்டிற்குள் நுழையும்போது, சரியாக அருகே வந்த வைஷ்ணவி, “என்னப்பா நீயும் இப்பதான் வரியா?” என்று இயல்பாகக் கேட்டாள்.”ஆமா வைஷு… கொஞ்சம் டிராபிக், பஸ் கிடைக்க லேட்டாயிடுச்சு. அதான்… ஆமாம் நீங்க உங்க அம்மாவை பாத்துட்டு வந்துட்டீங்களா?””வந்துட்டேன்… எப்ப பார்த்தாலும் வீட்டிலேயே இருனு சொல்லுவாங்க. நமக்கு அதெல்லாம் செட் ஆகாது. அதுவும் நம்ம அண்ணி சுத்தம், அவங்க கூட டாம் அண்ட் ஜெர்ரி சண்டை போடுறதுக்கு எனக்கு நேரமில்லை. அது சரி, எனக்கு என்ன? காலைல ஸ்கூலுக்கு போனா 5:00 மணிக்கு ரூமுக்கு வருவேன்.
என்ன மாதிரி வீகெண்ட்ல எனக்கா தோணும்போது எங்க அம்மாவை பாத்துட்டு வருவேன். ஆனா உன்னோட நிலைமையை பாரு… வாரத்துல ஆறு நாளும் நீ அந்த ரெஸ்டாரண்ட்ல வேலை செய்யணும். ஒரு நாள் கிடைக்கிற லீவுல கூட நீ இப்படி கரஸ்ல (Correspondence) காலேஜ் போயிட்டு வர. உனக்குத் தான் நேரம் என்பதே இல்லாம போயிடுச்சு.
கேட்கவே பாவமா இருக்கு.”என்று வைஷ்ணவி சொல்லிக் கொண்டிருப்பதை, அவர்களுக்குத் தெரியாமல் மறைவான இடத்தில் நின்றுகொண்டு கேட்டான் தென்னரசு.”அட, இந்தப் புள்ள காலேஜுக்கு தானே போறேன்னு சொல்லுச்சு… ஆனா வேலைக்கு போயிட்டு வாரத்தில் ஒரு நாள் கரஸ்ல காலேஜுக்கு போகுது. அவங்க அப்பாகிட்டயே பொய் சொல்லி வந்திருக்குது. நல்லா பொய்க்காரியா இருப்பா போல!”
என்று நினைத்துக் கொண்டான்.இப்படியே பேசிக்கொண்டு பெண்கள் இருவரும் ஹாஸ்டலுக்குள் நுழைவதைப் பார்த்தான். மேலும் முதல் தளத்தில் இருக்கும் இரண்டாவது அறைக்குள் அவர்கள் நுழைவதைப் பார்த்தவன், தன்னுடைய ரூமுக்கு எதிராக வலப்பக்கத்தில் அவர்களின் அறை இருப்பதை நோட்டம் விட்டுக் கொண்டான் தென்னரசு.”நாம இயல்பா சந்திக்கிற மாதிரி இந்தப் பொண்ணுகிட்ட பேசணும். நாமெல்லாம் வலுக்கட்டாயமாக எதுவும் பண்ணக் கூடாது.”என்று தனக்குத் தானே பல திட்டங்களைப் போட்டுக் கொண்டிருந்தான்.
ஆனால் அவன் திட்டத்தில் மாட்டப்போவது மீனாட்சி அல்ல, வைஷ்ணவி! அதுவும் அவளுக்கே தெரியாமல்._________
மறுநாள் காலை பரபரப்பாக வைஷ்ணவி ஸ்கூலுக்குக் கிளம்பிக் கொண்டிருக்க, மீனாட்சி ரெஸ்டாரண்டிற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள்.”மீனாட்சி, நீ முதல் நாளே உங்க பாஸ் என்ன பண்ணாருன்னு சொல்லும்போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. எனக்குத் தெரிஞ்சு அந்த ஆள் ஒரு மாதிரியா இருப்பான் போல இருக்கு. ஏன்னா அவர் ஒரு பொண்ணோட இருப்பதை நீ பார்த்து ஒரு மாதிரி பேசினத மனசுல வச்சுக்கிட்டு அவரு இப்படி பண்றாரு.
நிச்சயம் இந்த ஏழு நாளைக்கு மேல உன்னை வேலையில் வெப்பாரான்னு தெரியாது. எதுக்கும் நீ ஜாக்கிரதையா இருந்துக்கோ,” என்று வைஷ்ணவி சொன்னாள்.”நீங்க சொல்றதும் உண்மைதான் வைஷு. இந்த மாதிரி ஆம்பளைங்க கிட்ட ஜாக்கிரதையா தான் இருக்கணும். ஆனா ஒன்னு, எங்க ஊர்ல பொண்ணுங்களுக்கு விருப்பம் இருக்கோ இல்லையோ கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க. அதுவும் இரண்டாவது கல்யாணம், மூணாவது கல்யாணம் அப்படின்னு பண்ணிக்கிட்டே போவாங்க.
பொண்ணுங்களுக்குனு விருப்பமே இல்லையான்னு நினைக்கும் போதுதான், எங்க தாத்தா ஊர் தலைவரா மாறி ‘பொண்ணுங்களுக்கு மரியாதை தரணும், அவங்களுக்குக் கல்வியைக் கொடுக்கணும், அவங்களுக்குனு அறிவுத்திறனை வளர்க்கணும்’ அப்படின்னு சட்டம் போட்டாரு. அதுக்குப் பிறகுதான் எங்க ஊர்ல நிறைய ஆம்பளைங்க ஒரு பொண்டாட்டி மேல கல்யாணமே பண்ணிக்க மாட்டாங்க.
அதே சமயம் பொண்டாட்டி இறந்து போனாலும், அல்லது புருஷன் இறந்து விட்டாலும் அவங்களுக்கு ஆண் பெண் பேதமின்றி மறுமணம் கூட நடக்குது. எல்லாம் எங்க தாத்தா வந்த பிறகு! எங்க அப்பாவும் இதே சட்டத்தை தான் கொண்டு வந்து இருக்காரு. எங்க தாத்தா காலத்துல இருந்துதான் பொண்ணுங்களுக்கு அவங்க மனசுல விருப்பம் ஒன்று இருக்கிறதுனு எங்க ஊர் ஜனங்கள் தெரிஞ்சுக்கிட்டாங்க. இன்னும் சில பெரியவங்க இருக்காங்க பூமர் பேச்சுகளைப் பேச…
ஆனா அதை யாரும் கண்டுக்க மாட்டாங்க. ஆனா இங்க நகரத்தில் அப்படி இல்லப்பா… ஆணும் பெண்ணும் தன் இஷ்டப்படி எப்படி வேணாலும் வாழலாம்னு இருக்கு. அதுக்குன்னு நமக்குன்னு ஒரு ஒழுக்கம், கட்டுப்பாடு இருக்குல்ல? கல்யாணம் ஒன்னு பண்ணிக்கிட்டு சட்டபூர்வமா கணவன் மனைவியா சமுதாயத்தில் வாழ்ந்து தன்னுடைய வாழ்க்கையை வாழலாம். ஆனால் கல்யாணம் பண்ணாம புடிச்சவங்க கூட எல்லாம் உறவு வைத்துக்கொள்வது எல்லாம் எனக்குச் சுத்தமா பிடிக்கலப்பா.
அதுவும் இந்த மாதிரி ஆட்கள் கிட்ட பழக்கவழக்கத்தை வச்சுக்கக் கூடாது,” என்று முகத்தை அருவருப்பாக வைத்துக்கொண்டு, அதிரவன் இருக்கும் நிலையை நினைத்து ஒருவித வெறுப்புத் தன்மையோடு மீனாட்சி பேசினாள்.”ஹா ஹா ஹா… நீ இந்த ஊருக்குப் புதுசு. இந்த மாதிரி நிறைய பேர் கிளம்பிட்டாங்க. நீ இப்பதானே இந்த சிட்டிக்கு வந்திருக்க? இன்னும் போகப் போகப் பாரு. ஸ்கூல் பசங்க கூட இப்ப கிளம்பிட்டாங்க. இந்த மாதிரி இருக்க மாசத்துல ஒரு டீன் ஏஜ் பசங்க சம்பவம் எங்க ஸ்கூல்ல நடந்துரும்,” என்று வைஷ்ணவி இப்போது பள்ளிக்கூடப் பிள்ளைகள் செய்யும் அநாகரிகச் செயல்களைப் பற்றிப் பேசினாள்.
“ஐயோ வேணாம் வேணாம்… இதெல்லாம் பேசும்போது, நினைக்கும்போதே உடம்பு நடுங்குது. ஏதோ ஒன்னு, யாரு எக்கேடு கெட்டுப் போனா என்ன? நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கணும். ஆனா நீங்க ஒரு டீச்சர், உங்ககிட்ட எப்படி இருக்கப் பசங்களுக்கு நீங்கதான் எல்லாமே சொல்லித் தரணும். அது உங்க தொழில் தர்மம்.
இப்ப நான் லேட்டா போனா அந்தச் சிடுமூஞ்சி முதலாளி எனக்கு ஏதாவது தண்டனை கொடுக்கலாமான்னு பிளான் பண்ணிடுவான். நான் இப்பவே அரை மணி நேரத்துக்கு முன்னாடி போய் அட்டனன்ஸ் போட்டு விடுகிறேன்,” என்று சொல்லி காலைச் சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு மீனாட்சி அங்கிருந்து புறப்பட, வைஷ்ணவியும் ஸ்கூலுக்குப் புறப்பட்டுச் சென்றாள்.
மீனாட்சி வருவதைக் கவனித்த தென்னரசு, தனது ஜீப்பை வேகமாகச் செலுத்தி அவளிடம் அறிமுகமாகி அப்படியே அவளை டிராப் செய்யலாம் என்று நினைத்தான். ஆனால், மீனாட்சி அங்கிருந்த ஆட்டோவில் ஏறிச் சென்றுவிட, பாவம் அவன் வேகமாக வந்து ஒரு பெண்ணின் மீது இடிப்பது போல் வந்து பிரேக்கைப் போட்டுவிட்டான்.அந்தப் பெண் நெஞ்சில் கை வைத்துக்கொண்டு அதிர்ச்சி அடைந்து விட்டாள்.அது வேறு யாருமல்ல, வைஷ்ணவி தான்.