அத்தியாயம் 5
குடும்பத்தார்கள் அனைவரும் கூடி மகிழ்ந்து பேசிக் கொண்டிருக்கையில், உணவருந்தும் வேலை வந்துவிட்டது. தான் தயாரித்த உணவுகளை ஒவ்வொன்றாக டைனிங் டேபிளில் அடுக்கி வைத்தார் ராதா.
உடன் ஜமுனா உதவி புரிய, மற்ற அனைவரும் உணவு உண்ணத் தயாராக டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தனர். அனைவரும் ஒன்றாக மகிழ்ந்து பேசி, சிரித்து இரவு உணவை முடித்துவிட்டு, இரண்டு நாட்கள் இங்கே தங்க இருப்பதால், முன்கூட்டியே உடைகளை எடுத்து வந்து அவரவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் சென்று ஓய்வெடுத்தனர்.
இது எல்லாம் விமல் செய்த சேட்டைதான். வெறும் டின்னருக்காக மட்டும் வரக்கூடாது, இரண்டு நாட்கள் இங்கே இருந்துதான் செல்ல வேண்டும் என்று கட்டளை போட்டுவிட்டான். அதனால் கிளம்பும் அவசரத்தில் அவர்களுக்கான உடைகளை எடுத்துக் கொண்டு வந்திருந்தனர் குடும்பத்தார்கள்.
மார்த்தாண்டம், விஸ்வநாதன் இருவரும் தங்களுக்கான மாத்திரையைச் சாப்பிட்டுவிட்டு, ஒரு அறையில் உறங்கிவிட,
ஜமுனா, ராதா இருவரும் ராதாவின் அறையில் இருக்கும் பால்கனியில் அமர்ந்து கொண்டு சிறு வயதுக் கதைகளை, மலரும் நினைவுகளாகப் பகிர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.
இங்கே விமல், இசை, அம்பை மூவரும் ஒரு அறையில் ரகளை செய்து கொண்டிருந்தனர். இரண்டு மூன்று நாட்கள் அக்கா, தங்கை இருவரும் தன்னோடு இங்கே தங்க இருப்பதால் மகிழ்ச்சியாக இருந்தான் விமல். இது வார இறுதி என்பதால் இன்னும் சுலபமாகிப் போய்விட்டது. யாரும் வெளியே எங்கும் செல்ல வேண்டாம், வீட்டிலேயே இரண்டு நாட்கள் விடுமுறையைச் சிறப்பாகக் கழிக்க வேண்டும் என்று திட்டமிட்டனர்.
“டேய் அண்ணா! உனக்கு அப்புறம் பொறந்தவன் நானு. நானே வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டேன். நீ என்னடான்னா இன்னும் படிச்சுகிட்டு இருக்க?”
என்று இசை நக்கலாகச் சொல்ல,
“ஆமா! நீ ஸ்கூல் படிக்கும்போது டபுள் புரொமோஷன் வாங்கி, டிகிரி எல்லாம் முடிச்சு இப்ப வேலைக்குப் போற. நான் அப்படியா? கரெக்டா ஒவ்வொரு வருஷமும் அந்தந்த கிளாஸ் படிச்சு முடிச்சு, இப்போ MBA முடிக்கப் போறேன். எல்லாம் அப்பப்ப நடக்கும். நீ கவலைப்படாதே, அடுத்த வருஷத்தில இருந்து நான் ஃபுல் பிஸி, தெரியும்ல!”
சட்டைக் காலரைத் தூக்கி கெத்தாகச் சொல்ல,
“இல்லையா பின்ன! விஜயரத்தினம் ரெஸ்டாரன்ட், அப்புறம் விஜயரத்தினம் ஸ்நாக்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ் ரெண்டு நிறுவனத்தையும் தலையில் சுமக்கப் போற தியாகச்சுடர் எங்க அண்ணன்!”
என்று இசை புகழ் பாட, அவ்வளவுதான்! மூவரும் இப்படியே கதை அடித்துக்கொண்டு அன்றைய நாளைக் கழித்தனர்.
ஆனால் இங்கே மதன் வீட்டில் அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க,
“என்னங்க, நம்ம பசங்க தான் கல்யாணத்தைப் பத்தி வெளிப்படையா சொல்லிட்டாங்க; இன்னும் கொஞ்ச நாள் ஆகும்னு தெரிஞ்சு போச்சு. நம்ம வீட்ல கல்யாண வயசுல ஒரு பொண்ணு இருக்கா. அவளுக்கு ஒரு நல்ல சம்பந்தம் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும். மாப்பிள்ளை வீட்டுல என்ன கேக்குறாங்களோ, எல்லாம் நல்லபடியா செஞ்சு, குழந்தையைச் சந்தோஷமா மாமியார் வீட்டுக்கு வழி அனுப்பணும்.”
என்று தென்றல் கணவனுக்குப் பரிமாறிக் கொண்டு சொல்ல,
நல்ல விஷயத்தைச் சொன்னாலும், விஷம் பரவிய கௌதமியின் உள்ளம் தவறாகப் புரிந்து கொண்டு,
“அண்ணி! என்னோட பொண்ணுக்கு 20 வயசு தான் ஆகுது. அதுக்குள்ள எதுக்குக் கல்யாணம்? இப்ப புரியுது. நான்தான் கல்யாணம் பண்ணிகிட்டு இதே வீட்ல இருந்துட்டேன். என் பெண்ணும் உங்க பையனைக் கல்யாணம் பண்ணிகிட்டு நம்ம வீட்டோட இருந்து விடுவாளோ அப்படின்னு நினைச்சிருப்பீங்க. எப்படியோ அது நடக்கல. சரி, வீட்டோட மாப்பிள்ளையா பார்த்து இங்கேயே டேரா போட்டு விடுவாளோ அப்படின்னு மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைக்கணும்னு அழுத்திச் சொல்றீங்க. நாங்க உங்களுக்குச் சுமையா??”
என்று வழக்கம்போல் ராமாயணத்தை ஆரம்பிக்க,
“கௌதமி! இதுல என்ன இருக்கு? அக்கா நம்ம பொண்ணோட நல்லது தான் சொல்றாங்க. ஏன், கல்யாணம் பண்ணிகிட்டு நீ மாமியார் வீட்டுக்கு வராம அடமாக இங்கதான இருந்த? அங்க இருந்தா எல்லா வேலையும் உன்னோட பொறுப்புல இருக்கும். இங்க எந்த ஒரு வேலை வெட்டியும் இல்லாமல், பார்ட்டி, லேடிஸ் கிளப், ஃபங்ஷன், டிராமா அப்படின்னு சுற்றிக்கிட்டு இருக்க. உன்ன மாதிரியே உன்னோட பொண்ணு இருக்கணும்னு நினைக்கிறியா? அவளையாவது உருப்பட விடு.”
என்று அருண் கண்டித்தவுடன் கடுப்பாக இருந்தவர், தன் அண்ணனைப் பார்க்க, மதன் அமைதியாக இருப்பதைப் பார்த்து,
“அண்ணா! என்ன இது? அண்ணி என்னமோ சொல்றாங்க. அவங்களுக்கு சப்போர்ட்டா என்னோட புருஷன் இப்படி இருக்காரு. நீயாவது சொல்ல வேண்டாமா? உன்னோட பசங்க யாரையோ லவ் பண்றாங்க. நீதானே கண்டிச்சுச் சொல்லணும்? நம்ம வீட்ல பொண்ணு இருக்கும்போது வெளியே எதுக்குப் பொண்ணு அப்படின்னு? சரி விடுங்க. ஒருத்தனாவது ஏதோ அவன் கம்பெனில வேலை பாக்குற பொண்ணை விரும்பிட்டான். ஆனா, இவன் கற்பனையில வந்த பொண்ணுக்காக இன்னும் வெயிட் பண்ணிட்டு இருக்கான். இவனுக்காவது என் பொண்ணைக் கட்டி வைக்கலாம்னு நினைச்சேன். என்னைச் சம்மந்தி ஆக்கிக்க உனக்கு விருப்பம் இல்லையா?”
என்று தன் நாடகத்தைத் தொடங்க, சலிப்புத் தட்டியது மதனுக்கு.
இதை எதையும் கண்டுகொள்ளாத இரு நாயகர்களும் (மகன்கள்) சாப்பிட்டு முடித்துத் தங்கள் அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டனர்.
மகன்கள் சென்ற பிறகு பெருமூச்சு விட்ட மதன்,
“இங்கே பாரு. 20 வருஷமா நான் பெரிய குற்ற உணர்ச்சியை மனசுல சுமந்துகிட்டு இருக்கேன். என்னால அதுக்கு இப்ப வர ஈடுகட்ட எதுவும் முடியல. உன்னோட பிடிவாதத்தால சில பல பேர் பாதிக்கப்பட்டு இருக்காங்க. இருந்தாலும் நீ தான் ஜெயிச்ச. ஆனா நீ அதைத் தக்க வச்சுக்கல. சின்ன வயசுல இருந்து அம்மா, அப்பா யாரும் இல்ல நமக்கு. அம்மா அப்பா இல்லாததால் தான் நீ இப்படித் தரம் கெட்டு இருக்க. அவங்க மட்டும் இருந்திருந்தால் நீ ஒழுங்கா இருந்து இருப்பியோ என்னவோ? இதுக்கு மேல என்ன எதுவும் பேச வைக்காத. அப்புறம் பழசெல்லாம் கிளற வேண்டி இருக்கும்.”
என்று சாப்பிட்டு முடித்து மதன் அங்கிருந்து சென்றுவிட, அருண் மற்றும் சிவகாமி இருவரும் அவரவர் அறைக்குச் சென்றுவிட, தனக்கான உணவை எடுத்துக் கொண்டு தென்றல் தன் அறைக்குள் சென்றுவிட்டார். யோகிதா தன் அன்னையைப் பார்த்து,
“என்னோட ஃப்ரெண்ட்ஸ் வீட்டுல நிறைய பேர் பாட்டி வீட்ல தான் இருக்காங்க. அவங்களோட அம்மா ராஜ்ஜியம் தான் அங்க இருக்காம். அவங்களும் உன்னை மாதிரி தான் கல்யாணத்துக்கு அப்புறம் அம்மா வீட்ல டேரா போட்டவங்க.
ஆனா உன்னை மாதிரி யாரும் மொக்க பீஸ் கிடையாது. எல்லாரும் நாத்தனார், அண்ணி கூட ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு கூட்டுக்குடும்பமா சந்தோஷமா இருக்காங்க. இதுவரைக்கும் எந்த ஒரு பிரச்சனையும் வந்தது இல்லை. நானும் சின்ன வயசுல இருந்து பார்க்கிறேன். நீ பேசுறது முட்டாள்தனமா இருக்கு.
நான் மாமா பசங்களைக் கல்யாணம் பண்ண ஆசைப்பட்ட காரணம், எனக்கு வெளி உலகத்தைக் காட்டாமல் எப்படி வாழப் போறேன்னு வந்த பயத்தில்தான். நான் உன் பேச்சைக் கேட்டு இருந்தேன். ஆனா சமீபகாலமாகக் கேள்விப்பட்டேன், நீ அப்பாவோட சந்தோஷத்தைக் கெடுத்து தான் அவர் வாழ்க்கைக்குள்ள வந்து இருக்கன்னு. உன்னால ஒரு பொண்ணு பாதிக்கப்பட்டு இருக்காங்கன்னு. அதனால்தான் இப்போ உன்னோட மகள் கல்யாண வாழ்க்கை கேள்விக்குறியா இருக்கு. இதுக்கு மேல என்னையும் பேச விடாதே. இனி உன்னோட நரி தந்திரத்திற்கு என்னைப் பலியாடு ஆக்க வேண்டாம்.”
என்று அவளும் சென்றுவிட, ஒத்தையாகத் தனித்து விடப்பட்ட கௌதமி,
“நீங்க எல்லாரும் எனக்கு சப்போர்ட் இல்லைன்னா என்னோட வேலை ஏதும் நடக்காதுன்னு நினைச்சிட்டு இருக்கீங்களா? ஆல்ரெடி நான் என்னோட தந்திரத்தை ஆரம்பிச்சிட்டேன். இத்தனை கோடி சொத்துக்களுக்கும் நான் மட்டும்தான் அதிபதியா இருக்கணும்னு எத்தனை வருஷம் கனவு கண்டு இருக்கேன். சின்ன வயசுல இருந்து ‘உனக்கு ஒண்ணும் தெரியாது’ன்னு சொல்லிச் சொல்லியே எங்க அண்ணன் என்னைப் பாவியாக நினைச்சுகிட்டு இருக்கான். சரி, காதல் வாழ்க்கையில ஜெயிச்சி, இந்த அருண்குமாரை என் அடிமையா ஆக்கி, எங்க அண்ணியை ஒரு வழி பண்ணலாம்னு பார்த்தா, அதுக்கும் வழியில்ல. சரி, என்னோட பொண்ணை வச்சியாவது இந்த பசங்களை என் கைக்குள்ள போடலாம்னு பார்த்தா, இப்ப அதுவும் போயிடுச்சு. எத்தனை தோல்வி வந்தாலும் இந்தக் கௌதமி அசர மாட்டா!”
என்று விஷமச் சிரிப்போடு அங்கு இருக்கும் உணவை முடித்துவிட்டு, தன் அறையை நோக்கிச் சென்றார்.
யோகிதா பிறந்து ஐந்து வருடங்கள் ஒரே அறையில் தான் இருந்தார்கள் அருண் மற்றும் கௌதமி. பிறகு கௌதமியின் செயல்கள், அவரின் பேச்சு அருணுக்குப் பிடிக்காததால் தனி அறைக்குத் தன்னை மாற்றிக் கொண்டார். மகள் சிறுவயதில் இருந்து அப்பா செல்லம் என்பதால் அவரோடு இருந்தவள், ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் அவளுக்கென்று ஒரு தனி ரூம் ஒதுக்கப்பட்டது.
“வாழ்க்கைத் துணை தனக்குச் சரியாக அமையவில்லை என்றால், வாழும் முழுதும் நரகம் என்பது இதுதான் போல.”
இங்கே மதன், தென்றல் இருவரும் கட்டில் மீது சாய்ந்து கொண்டு,
“ஏங்க, உங்க தங்கச்சி எப்பவுமே புரிஞ்சுக்காம பேசிகிட்டு இருக்கா. ஏற்கனவே என் தம்பியோட வாழ்க்கையில நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் அப்படின்னு ஒரு குற்ற உணர்ச்சியில் தவிச்சுகிட்டு இருக்கேன். இப்போ இது வேற புதுப் பிரச்சனையா வந்து நிக்குது.”
என்று தென்றல் கவலையாக மதன் தோள் மீது சாய்ந்து கொள்ள, மனைவியை வாகாக அணைத்துக் கொண்டவர்,
“அருண் மட்டும் நான் ஒரு பொண்ணை விரும்புறேன், அவளைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன் அப்படின்னு அவன் உறுதியாகச் சொல்லி இருந்தால் இந்தப் பிரச்சனையே வந்திருக்காது. அவனும் பழைய பஞ்சாங்கம் மாதிரி அக்கா வாழ்க்கை அப்படி இப்படின்னு நினைச்சு தன்னோட வாழ்க்கையைத் தொலைச்சு நிக்கிறான். எல்லாம் விதி. ஒரு நாள் ரெண்டு பேருக்கும் நடந்த உச்சகட்ட சண்டையில் தானே அவன் காதல் விவகாரம் தெரிஞ்சது. சரி விடு. அதைப்பத்தி எதுவும் கவலைப்படாதே. நம்ம பசங்க ஏதோ பண்றானுங்க. ஆனா என்ன பண்றானுங்க தான் தெரியல. சீக்கிரம் அதைக் கண்டுபிடித்து அவனுகளுக்கு ஒரு கால் கட்டு போட்டுடனும். அடிக்கடி அம்மா, அம்மான்னு டிஸ்டர்ப் பண்றானுங்க.”
என்று சலித்துக் கொள்ள,
“அட, இது என்ன புதுக் கதையா இருக்கு? பசங்க எல்லாம் அப்படித்தான் இருப்பாங்க. ஆனா நீங்க பசங்களுக்குப் போட்டியா இருக்கீங்க. ரெண்டு பிள்ளைகளையும் என்கிட்ட ஒதுக்கி வைத்து, நீங்கதான் என்கிட்ட சேட்டை பண்ணிட்டு இருக்கீங்க. பசங்களை விட உங்களைச் சமாளிக்க தான் ரொம்பக் கஷ்டம்.”
என்று கணவனின் கன்னத்தைப் பிடித்துக் கொள்ள,
“நான் என்னடி பண்றது? 32 வயசு வரைக்கும் வேலை அப்படி இப்படின்னு வாழ்க்கையைத் தொலைச்சு, சொந்தமா ஒரு நிறுவனத்தைத் தொடங்கி முடிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு. வாழ்க்கையில வரமா கிடைச்சது நீதான். உன்னை எப்படி விட முடியும்? அதுக்கப்புறம் என் வாழ்க்கையே சூப்பரா மாறிப் போச்சு. தினமும் உன்னோட வாசம் இல்லாமல் என்னால் தூங்கவே முடியாது. நீ தான் என்னை இப்படி மாத்தி வச்சிட்டு, இப்ப என்னையே குறை சொல்ற பாத்தியா?”
என்று மனைவியின் கழுத்தோரத்தில் முத்தமிட்டுக் கொண்டே, ஒரு கை மனைவியின் இடையை வருடிக் கொண்டு சொல்ல,
“மதன், நமக்குக் கல்யாண வயசுல…”
என்று பஞ்சாங்கம் டயலாக் பேசுவதற்குள், மனைவியின் இதழைத் தன் இதழ் கொண்டு மூடி, மொத்தமாகத் தனக்குள் புதைத்துக் கொண்டார் மதன்குமார்.
“வாலிபங்கள் ஓடும்
வயதாகக் கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம்
முடிபோட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது”
“அழகான மனைவி
அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில, சரசங்கள்
பயில, மோகங்கள் ஆரம்பமே”