அத்தியாயம் 11
அதிகாலை ஐந்து மணி. பனிமூட்டம் இன்னும் அந்த மாளிகையைச் சுற்றியிருந்தது. அறையின் ஜன்னல் வழியாக வெளியே தெரிந்த அதிகாரிகளின் வாகனங்கள் வந்து கொண்டிருந்தன.
அக்னி இரவு முழுதும் உறங்கவில்லை. அவனது கண்கள் சிவந்திருந்தாலும், அதில் ஒரு தீர்க்கமான தெளிவு இருந்தது. அவன் தனது ரகசிய டேப்லெட்டில் இறுதி கட்டக் கட்டளைகளைப் பிறப்பித்துவிட்டு அதை மீண்டும் மறைத்து வைத்தான்.
மித்ரா கட்டிலில் அமர்ந்தபடியே உறங்கிப் போயிருந்தாள். அவளது முகம் பயத்திலும் தவிப்பிலும் வாடியிருந்தது. அக்னி அவளருகே சென்று அவளது தலையை மெல்ல வருடினான். அவன் தொட்டதும் திடுக்கிட்டு விழித்தாள் மித்ரா.
“சார்… விடிஞ்சிடுச்சா? என்ன பண்ணப் போறீங்க?” என்று படபடப்புடன் கேட்டாள்.
“நேரம் வந்தாச்சு மித்ரா. ரகுநாத் இப்போ ஒரு பெரிய அதிர்ச்சிக்குத் தயாராகிருப்பான். நீ இங்கேயே இரு, நான் கீழே போய் என்ன நடக்குதுன்னு பார்க்கிறேன்,” என்று சொல்லிவிட்டு, அக்னி தனது சட்டையை மாட்டிக்கொண்டு கம்பீரமாக அறையை விட்டு வெளியேறினான்.
அவன் கீழே இறங்கி வந்தபோது, ஹாலில் இன்கம் டேக்ஸ் அதிகாரிகள் குழுமி இருந்தனர். ரேகா ஒரு கப்பில் காபியுடன் சோபாவில் அமர்ந்து நக்கலாக அக்னியைப் பார்த்தாள். “என்ன அக்னி? இன்னைக்கு ஜெயிலுக்குப் போக ரெடியா?” என்று ஏளனமாகச் சிரித்தாள்.
சரியாக அந்த நேரம், அதிகாரிகளின் தலைமை அதிகாரிக்கு ஒரு போன் வந்தது. அவர் போனை எடுத்துப் பேசிய சில வினாடிகளிலேயே அவரது முகம் வெளுத்துப் போனது. “என்ன சொல்றீங்க? ரகுநாத் கம்பெனி மேலையா கம்ப்ளைன்ட் வந்திருக்கு? ஆதாரம் எல்லாம் அங்கே இருக்கா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டார்.
அக்னி ஒரு சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து, மேஜையில் இருந்த ஒரு ஆப்பிளை எடுத்து கத்தியால் நிதானமாகச் செதுக்கத் தொடங்கினான். அவனது முகத்தில் ஒரு குரூரமான அமைதி நிலவியது.
“ஆமாம் .. நீங்க நேத்து சீஸ் பண்ணின என் லேப்டாப்ல இருக்குற ஃபைல்ஸை இப்போ ஓபன் பண்ணிப் பாருங்க. அதுல ரகுநாத் எப்படி என்னோட டேட்டாக்களைத் திருடுனான், அவன் எப்படியெல்லாம் நடராஜன் மூலமா பினாமி அக்கவுண்ட்ஸ் வச்சிருக்கான்னு தெளிவான ரெக்கார்ட்ஸ் இருக்கும். நேத்து வரைக்கும் அது ‘என்க்ரிப்ட்’ (Encrypt) ஆகி இருந்தது. இப்போ அது ஓபன் ஆகியிருக்கும்,” என்றான் அக்னி அதிகாரமாக.
இன்னொரு விஷயம் இதெல்லாம் நீங்க இங்க வந்த அப்புறம் என்னோட ஆஃபீஸ் டீம் தான் கஷ்டப்பட்டு இந்த மோசடியை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
தலைமை அதிகாரி உடனே லேப்டாப்பைச் சோதித்தார். அவர் பார்த்தது அதிர்ச்சிகரமாக இருந்தது. அக்னியின் கம்பெனியில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்களை விட, ரகுநாத் மற்றும் நடராஜன் இணைந்து பல கோடி ரூபாய் ஊழல் செய்ததற்கான ஆதாரங்கள் அடுக்கடுக்காக இருந்தன.
“மிஸ்டர் அக்னி… இது… இது ரொம்பப் பெரிய விஷயம்! நடராஜனும் ரகுநாத்தும் சேர்ந்து உங்களை மாட்டிவிடப் பார்த்திருக்காங்க, ஆனா அவங்களே இப்போ மாட்டிக்கிட்டாங்க, அப்புறம் இன்னொரு விஷயம் நாங்க அப்படி கடுமையா நடந்து இருக்க கூடாது நீங்க அதுக்கு எங்கள மன்னிக்கணும் என அது எங்க கடமை. எப்படியோ லேப்டாப்ல நேத்து நாங்க லேப்ல எடுத்துட்டு போய் டெஸ்ட் பண்ணும் போது எதுவுமே இல்ல அதனால தான் உங்களை கைது பண்ண வந்தோம்.. ஆனால், இப்ப சர்வர் எல்லாம் கரெக்டா ஒர்க் ஆகுது லேப்டாப்ல ஆல்ரெடி எல்லாம் பைல்ஸ் இருக்குது அதாவது உங்களோட லீக்கலான பிஸ்னஸ் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாம கிளியரா காட்டுது சர்வர் லாக் பண்ணதுக்கு கண்டிப்பா அவங்களுக்கு தண்டனை கிடைக்கும்” என்றார் அதிகாரி.
“அக்னி கிட்ட விளையாடுறதுன்னா அக்னிக்குள்ளேயே போகணும்னு நினைச்சான் ரகுநாத். ஆனா அக்னி ஒரு எரிமலைன்னு அவனுக்குத் தெரியல. இப்போவே கிளம்பிப் போய் அவங்களை அரெஸ்ட் பண்ணுங்க. இல்லன்னா அவங்க நாட்டை விட்டு ஓடிடுவாங்க,” என்று அக்னி எச்சரித்தான்.
ரேகா பதறிப்போய் எழுந்தாள். “அக்னி! என்ன சொல்றீங்க? என் அப்பாவை நீங்க மாட்டிவிட்டீங்களா?”
அக்னி அவளருகே சென்று அவளது கழுத்தைப் பிடிக்காத குறையாக நெருங்கினான். “உன் அப்பன் பண்ணினது துரோகம் ரேகா. அந்தத் துரோகத்துக்கு அவன் ஜெயிலுக்குப் போயே ஆகணும். அப்புறம் நீ… இப்போவே உன் பெட்டியைப் பேக் பண்ணிட்டு இந்த வீட்டை விட்டு வெளியேறு. இல்லன்னா உன்னையும் உன் அப்பாவோட சேர்த்து ஜெயில்ல போடுவேன்,” என்று கத்தினான்.
ரேகா அழுதுகொண்டே தனது அறைக்கு ஓடினாள். சுந்தரமூர்த்தி ஒரு மூலையில் நின்று மலைத்துப் போய் தன் மகனைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதிகாரிகள் அவசரமாக அக்னியின் வீட்டின் சீல்களை அகற்றிவிட்டு, ரகுநாத்தின் இருப்பிடத்தை நோக்கிப் புறப்பட்டனர்.
அக்னி மெதுவாக மாடிக்குச் சென்றான். மித்ரா வாசலிலேயே நின்று கொண்டிருந்தாள். அக்னி அவளருகே வந்து அவளை அப்படியே அள்ளித் தூக்கினான். “பார்த்தியா மித்ரா? அக்னி ஒருபோதும் தோற்கமாட்டான். இப்போ இந்த வீடும் என் பிசினஸும் எனக்குத் திரும்பக் கிடைச்சிடுச்சு. ஆனா இதுக்கும் மேல எனக்கு ஒன்னு கிடைக்கணும்,” என்றான் அவளது கண்களை ஊடுருவிப் பார்த்து.
“என்ன சார்?” என்று மித்ரா மூச்சிரைக்கக் கேட்டாள்.
“நீ… நீ முழுசா எனக்கு மட்டும்தான் சொந்தம்னு இந்த உலகத்துக்கே தெரியணும். கூடிய சீக்கிரம் நம்ம கல்யாணம் நடக்கும். அதுவும் உன் கழுத்துல நான் தாலி கட்டும்போது அந்த ரகுநாத்தும் நடராஜனும் கம்பி எண்ணிட்டு இருப்பாங்க,” என்று அவளது இதழ்களை ஆழமாகச் சிறைபிடித்தான்.
அக்னியின் அந்த அசுரத்தனமான வெற்றி மித்ராவிற்கு ஒரு நிம்மதியைக் கொடுத்தது. ஆனாலும், ரகுநாத் சும்மா இருப்பானா? ரேகா இந்த வீட்டை விட்டுப் போகும்போது ஏதாவது புதிய விபரீதத்தைத் தொடங்கிவிட்டுப் போவாளா?
பகை இன்னும் தீரவில்லை, அக்னியின் வேட்டை அடுத்த கட்டத்திற்கு நகரத் தொடங்கியது.
மாளிகையின் சூழல் இப்போது ஒரு போர்க்களத்தின் அமைதியைப் போல இருந்தது. வருமான வரித்துறை அதிகாரிகள் அக்னியிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு, ரகுநாத் மற்றும் நடராஜனைக் கைது செய்ய வாரண்ட்டுடன் கிளம்பிச் சென்றனர். அக்னியின் அறையைச் சுற்றியிருந்த சீல்கள் அகற்றப்பட்டன. அக்னி மீண்டும் அதிகாரத்தின் உச்சத்துக்கே வந்திருந்தான்.
ரேகா தனது அறையில் உடைகளை வன்மத்துடன் பெட்டியில் திணித்துக் கொண்டிருந்தாள். அவளது கண்கள் சிவந்து வீங்கியிருந்தன. “எப்படி? எப்படி இவனால் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்ற முடிந்தது?” என்று தனக்குள்ளேயே கத்தினாள். அக்னியின் புத்திசாலித்தனம் அவளை அச்சுறுத்தியது, ஆனால் அவளது வஞ்சம் இன்னும் குறையவில்லை.
அவள் கீழே வந்தபோது, அக்னி ஹாலின் நடுவே கம்பீரமாக நின்று கொண்டிருந்தான். அவனருகே மித்ரா அமைதியாக, ஆனால் ஒரு புதிய தைரியத்துடன் நின்றிருந்தாள். சுந்தரமூர்த்தி ஒரு சோபாவில் அமர்ந்து தலையைத் தாங்கியபடி இருந்தார். தனது நண்பன் நடராஜன் செய்த துரோகம் அவரை நிலைகுலைக்கச் செய்திருந்தது.
ரேகா மித்ராவின் முன்னால் வந்து நின்றாள். “ஜெயிச்சுட்டதா நினைக்காதே மித்ரா. அக்னி ஒரு மிருகம். அவனுக்கு ஒரு பொருள் மேல ஆசை வந்தா அதை அடையுற வரைக்கும் தான் அதுக்கு மதிப்பு. நீ அவனுக்கு இப்போ ஒரு புதுமையான பொம்மை… அவ்வளவுதான். என்னோட அக்கா ஸ்வேதாவையே ஒரு கட்டத்துல வெறுத்து ஒதுக்குனவன் இவன். உன்னை என்ன பண்ணுவான்னு கொஞ்ச நாள்ல தெரியும்,” என்று விஷத்தைக் கக்கினாள்.
மித்ரா பதில் பேச முற்படும் முன், அக்னி ரேகாவின் கையைப் பலமாகப் பிடித்து அவளை வாசலை நோக்கி இழுத்துச் சென்றான். “என் வீட்டுல நின்னுக்கிட்டு என் மித்ராவைப் பத்தி பேச உனக்கு எந்தத் தகுதியும் இல்லை ரேகா. உன் அக்கா செஞ்சதுக்கு இப்போ வரைக்கும் நான் தண்டனை அனுபவிச்சுட்டு இருக்கேன். ஆனா மித்ரா அப்படி இல்லை… அவ என் வாழ்க்கையோட ஆதாரம். இப்போவே இங்கிருந்து கிளம்பு. இனிமே உன் நிழல் கூட இந்த வாசப்படியில விழக்கூடாது!” என்று அவளை வெளியே தள்ளி கதவை ஓங்கி சாத்தினான்.
ரேகா வெளியே நின்றபடி, “இன்னும் ஆட்டம் முடியல அக்னி! என் அப்பாவையும் ரகுநாத்தையும் நீ ஜெயிலுக்கு அனுப்பி இருக்கலாம். ஆனா ரகுநாத்தோட தம்பி ‘விக்ரம்’ அமெரிக்காவிலிருந்து கிளம்பிட்டான். அவன் உன்னை விடப் பெரிய கில்லாடி. அவன் வரும்போது உன்னோட இந்த மாளிகையும், உன் மித்ராவும் உன் கூட இருக்க மாட்டாங்க!” என்று கத்தியபடி காரில் ஏறிச் சென்றாள்.
வீட்டுக்குள் நிலவிய நிசப்தத்தை உடைத்து, சுந்தரமூர்த்தி மெதுவாக எழுந்தார். அவர் மித்ராவருகே வந்து நின்றார். அவரது கண்களில் ஒரு குற்ற உணர்ச்சி இருந்தது. “என்னை மன்னிச்சுடு மித்ரா. உன் குணத்தைத் தெரிஞ்சுக்காம, நடராஜன் பேச்சைக் கேட்டு உன்னைத் தப்பா எடை போட்டுட்டேன். அக்னி எடுத்த முடிவுதான் சரின்னு இன்னைக்கு அவன் நிரூபிச்சுட்டான்,” என்றார் தழுதழுத்த குரலில்.
மித்ரா அவரது கைகளைப் பற்றிக்கொண்டாள். “இல்லீங்க ஐயா… நீங்க அக்னி சாரோட நல்லதுக்காகத் தான் யோசிச்சீங்க. அதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை,” என்றாள் பணிவுடன்.
அக்னி அங்கே வந்து மித்ராவின் தோளில் கை வைத்தான். “அப்பா… மித்ரா இனி இந்த வீட்டு வேலைக்காரி இல்லை. இவ தான் இந்த வீட்டு மகாராணி. ரகுநாத்தோட தம்பி இல்ல, எவன் வந்தாலும் எனக்குக் கவலை இல்லை. ஆனா ஒன்னு… மித்ராவுக்கு ஒரு சின்ன காயம் பட்டா கூட, இந்த அக்னி எரிமலையா மாறுவான்,” என்று ஒரு எச்சரிக்கை கலந்த உறுதியைக் கொடுத்தான்.
அன்றைய இரவு…
மாளிகை முழுவதும் மின்விளக்குகள் பிரகாசமாக எரிந்தன. அக்னி தனது அறைக்குச் சென்றபோது, அங்கே மித்ரா ஜன்னல் வழியாக நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அக்னி பின்னால் இருந்து அவளை அணைத்துக் கொண்டான். அவனது கைகள் அவளது வயிற்றைச் சுற்றி வளைத்தன.
“மித்ரா… இப்போ உன் மனசுல ஏதாவது பயம் இருக்கா?”
மித்ரா திரும்பி அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள். “பயம் இல்லை சார்… ஆனா ரேகா சொன்ன அந்த விக்ரம் யாரு? அவன் வந்தா மறுபடியும் ஏதாவது பிரச்சனை வருமா?”
அக்னி அவளது கன்னத்தை வருடினான். “விக்ரம் இருந்தாலும் சரி, வேற எவன் இருந்தாலும் சரி… அக்னியோட கோட்டைக்குள்ள நுழைய யாருக்கும் அனுமதி இல்லை. நீ மட்டும் தான் என் கோட்டை, என் ரகசியம், என் உயிர்,” என்று அவளது இதழ்களை ஆக்கிரமித்தான்.
அந்த இரவு அவர்களுக்கு இடையில் இருந்த அத்தனை தடைகளையும் தகர்த்தது. அக்னியின் அன்பும் ஆதிக்கமும் ஒரு சேர மித்ராவை நனைத்தன. ஆனால், அதே நள்ளிரவில் அமெரிக்காவிலிருந்து ஒரு விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது. அதிலிருந்து இறங்கிய விக்ரம், தனது மொபைலில் ரேகாவின் எண்ணை அழைத்தான்.
“ரேகா… கவலைப்படாதே. அக்னியோட அழிவு இன்னைக்கிலிருந்து ஆரம்பம். அவன் எதை உயிரா நினைக்கிறானோ, அதை முதல்ல அவன்கிட்ட இருந்து பறிப்போம்!”
அக்னிக்குத் தெரியாது, அவன் சந்திக்கப் போகும் அடுத்த எதிரி அவனது பலவீனங்களை நன்கு அறிந்தவன் என்பது. ஆட்டம் இன்னும் சூடு பிடிக்கத் தொடங்கியது.