அத்தியாயம் 17
அறையின் ஜன்னல் திரைகள் காற்றில் படபடக்க, லாவண்யாவின் கையில் இருந்த துப்பாக்கி அமிர்தாவின் நெற்றியில் அழுந்தியது. லாவண்யாவின் கண்கள் வெறியில் சிவந்திருக்க, அவளது விரல் துப்பாக்கியின் விசையை (Trigger) நெருங்கியது.
“எல்லாரும் அப்படியே நில்லுங்க! ஒரு அடி முன்னாடி வந்தாலும் இவ தலை சிதறிடும்,” என்று லாவண்யா கத்தினாள். அந்த நவீனப் பெண்ணின் முகத்தில் இப்போது ஒரு கொடூரமான பழிவாங்கும் உணர்ச்சி மட்டுமே எஞ்சியிருந்தது.
அதிரூபன் சிலையாக நின்றான். அவனது வாழ்நாளில் எத்தனையோ போர்க்களங்களைச் சந்தித்தவன், இன்று தன் கண்முன்னே தன் உயிர் ஊசலாடுவதைக் கண்டு நிலைகுலைந்து போனான். “லாவண்யா… விளையாட்டு வேணாம். உனக்கு என் மேல தானே கோபம்? அவளை விட்டுடு. இப்போவே துப்பாக்கியைக் கீழே போட்டா நீ உயிரோட இங்கிருந்து போகலாம்,” என்று எச்சரித்தான்.
சரியாக அந்த நொடி, அதிரூபனின் சிக்னலுக்காகக் காத்திருந்த கௌதம், ஜன்னல் மறைவிலிருந்து சிறுத்தை போலப் பாய்ந்து லாவண்யாவின் மணிக்கட்டைப் பிடித்துத் திருகினான். துப்பாக்கி தரைவிரிப்பில் விழுந்து தெறித்தது. கௌதமின் ஆட்கள் லாவண்யாவை அலாக்காகத் தூக்கிக்கொண்டு வெளியேறினர். “அதிரூபா! உன்னை விடமாட்டேன்!. உன்னை விரும்பின ஒரே காரணத்துக்காக, இந்த உலகத்தையே பாக்காம போனா அந்த லயா அவளை மாதிரி இவ்வளவுமாக போறா.” என்று லாவண்யாவின் அலறல் அந்தப் பங்களாவெங்கும் எதிரொலித்தது.
அறையில் ஒரு கனத்த மௌனம் நிலவியது. அமிர்தா அப்படியே தரையில் அமர்ந்துவிட்டாள். அதிரூபன் பதற்றத்துடன் அவளை நெருங்கி, “அமிர்தா… உனக்கு ஒன்னும் இல்லையே?” என்று அவளது தோளைத் தொட வந்தான்.
அமிர்தா சட்டென்று அவனது கையைத் தட்டிவிட்டாள். அவளது கண்களில் பயத்தை விட ஒரு பெரிய குழப்பமும் ஆத்திரமும் தெரிந்தது. “யாரும் என்னை நெருங்காதீங்க! யார் அந்த லயா? அவளைப் பத்தி இவ ஏன் இவ்வளவு வன்மமா பேசுறா? எனக்கு இப்போ யாரோட விளக்கமும் வேணாம். தயவுசெஞ்சு என்னை விட்டுடுங்க!”
ஆக்ரோஷமாகச் சொன்ன அமிர்தா, தரையில் கிடந்த அந்தப் பழைய டைரியைச் சட்டென்று கையில் எடுத்துக்கொண்டாள். அதிரூபன் அதைத் தடுக்க முயலும் முன்பே, வேகமாகக் கதவைத் திறந்து தன் அறைக்குள் ஓடினாள். கதவை உட்புறமாகத் தாழிடும் சத்தம் அந்தப் பங்களாவெங்கும் எதிரொலித்தது.
அறைக்குள் நுழைந்த அமிர்தா, கட்டிலில் அமர்ந்து மூச்சிறைக்க அந்த டைரியைப் பார்த்தாள். கைகள் நடுங்க, மெல்ல முதல் பக்கத்தைப் புரட்டினாள். அதில் ஒரு அழகான இளம்பெண்ணின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது. அந்தப் பெண்ணின் பெயர் ‘லயா’. அவளது ஒவ்வொரு பக்கமும் அதிரூபனின் மீதான தீராத காதலால் நிறைந்திருந்தது. அந்த டைரியில் அதிரூபன் எதையும் எழுதவில்லை; அது முழுக்க முழுக்க லயா தனது இதயத்தை ஒரு கவிதையாகச் செதுக்கி வைத்திருந்த பெட்டகம்.
*”ஜூன் 12, 2014. இன்று அதி மும்பையிலிருந்து சென்னை வந்துவிட்டான். பழைய அதே கம்பீரம். அப்பாவுக்கு அவன் மேல் எவ்வளவு மரியாதை! அவனுக்குத் தெரியாது, அவன் வரும் வழியில் விரிக்கும் ஒவ்வொரு பாதையும் என் காதலால் ஆனது என்று. அவன் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கத் துடிக்கிறான், நானோ அவனது இதயத்தில் ஒரு சிறு இடத்தைத் தேடுகிறேன்.”
ஒவ்வொரு பக்கமும் அதிரூபன் ஏதாவது ஒன்று செய்து கொண்டிருந்தால், அதை மறைமுகமாக புகைப்படம் எடுத்திருப்பாள் போல. ஒவ்வொரு புகைப்படத்தை ஒட்டி அதற்கு கீழே அழகான கவிதைகளை எழுதி வைத்திருந்தால்.
அமிர்தா டைரியை மார்போடு அணைத்துக்கொண்டாள். அதிரூபன் ஒரு கொலையாளி அல்ல, ஒரு பெண்ணின் ஒரு தலை புனிதமான காதலைச் சுமந்து நிற்கும் ஒரு பாராக்காரன் என்பது அவளுக்குப் புரிந்தது. அதே சமயம், அறையின் கதவு மெல்லத் தட்டப்பட்டது.
“அமிர்தா… கதவைத் திற. லயா யாருன்னு உனக்குத் தெரியணும்ல? நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு,” என்றான் அதிரூபனின் உடைந்த குரல் வெளியே கேட்டது.
அமிர்தா கண்ணீரோடு கதவின் அருகே சென்றாள்.
….
அமிர்தா நடுங்கும் கரங்களுடன் கதவின் தாழ்ப்பாளைத் திறந்தாள். வெளியே அதிரூபன் கைகளை இறுகக் கட்டிக்கொண்டு, சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தான். அவனது கண்கள் சிவந்து, முகம் வேதனையில் இறுகிப் போயிருந்தது. அமிர்தாவின் கையில் இருந்த லயாவின் டைரியைப் பார்த்ததும் அவனது பார்வையில் ஒரு கணம் நடுக்கம் மின்னியது.
அமிர்தா அவனை விலக்கிவிட்டு ஹாலுக்குச் சென்றாள். அங்கே லாரா சித்தியும் தேவராஜ் சித்தப்பாவும் வெளியே சென்று வந்தவர்கள் வீட்டில் நடக்கும் கூத்தை பார்த்து புரியாமல் திகைத்து நின்றனர்.
“அதிரூபா… என்ன நடக்குது இங்கே? அந்த லாவண்யா ஏன் அப்படி ஒரு வெறியோட பேசுறா? யாரு அந்தப் பொண்ணு லயா?” என்று லாரா கவலையோடு கேட்டார்.
அதிரூபன் மௌனமாக ஒரு சோபாவில் அமர்ந்தான். அமிர்தா அவனுக்கு எதிரே அந்த டைரியை மேஜை மேல் வைத்தாள். “இதுல லயா உங்களைப் பத்தி எவ்வளவு அழகா எழுதியிருக்காங்க தெரியுமா அதிரூபா? அவங்களோட ஒவ்வொரு மூச்சும் நீங்களா தான் இருந்திருக்கீங்க. ஆனா அவங்களுக்கு என்ன ஆச்சு? எம்பி-க்கும், அந்த லாவண்யாவுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?” என்று நேரடியாகக் கேட்டாள்.
அதிரூபன் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுவிட்டுப் பேசத் தொடங்கினான்.
“மும்பையில நானும் சித்தப்பாவும் கொஞ்சம் கொஞ்சமா சிலை கடத்தல் பண்றவங்க கூட டீலிங் பேசுற மாதிரி நடிச்சு, சட்ட விரோதமா சிலை கடத்தறவங்களை மறைமுகமா போலீஸ்கிட்ட மாட்டி விட்டோம். எங்க மேல பழி வரக்கூடாதுன்னு நாங்களும் கடத்தல்ல ஈடுபடுறது மாதிரி காமிச்சுக்கிட்டு, எங்களுக்குத் தெரிஞ்ச சில உதவியாளர்கள் மூலமா அந்தச் சில மாதிரியே டூப்ளிகேட் சிலைகளைச் செஞ்சு, அதை அந்தப் பயலுக கையில கொடுத்துட்டு உண்மையான சிலைகளை பத்திரமா இருக்க வேண்டிய இடத்துலயே வச்சோம்.
இப்படி இருக்குறப்பதான் தமிழ்நாட்டுல இருந்து சிலைகள் செய்ய எங்களுக்கு உதவியா இருந்த சேதுராமன் அய்யாவோட பொண்ணு லயாவைப் பார்த்தேன். ரொம்ப அழகானவ, அன்பானவ. நான் அமைதியா இருந்தாலும் அவளா வந்து என்கிட்ட பேசுவா. போகப் போக நானும் அவ கூட நட்பா பழக ஆரம்பிச்சேன். அவ மனசுல என் மேல காதல் இருந்தது, ஆனா எனக்கு அந்த டைம்ல பணம் தான் முக்கியம்னு அது பின்னாடியே ஓடிக்கிட்டு இருந்தேன்.
‘அடிக்கடி உங்களைப் பார்க்க நான் மும்பை வரைக்கும் வரவேண்டியிருக்கு, நீங்க சென்னையிலேயே செட்டில் ஆகலாமே’னு அவ சொல்லுவா. ஆனா நான் அப்போ அதைக் கண்டுக்கல. கொஞ்ச வருஷம் கழிச்சு சென்னையில செட்டில் ஆகலாம்னு முடிவு பண்ணி, சேதுராமன் வீட்டுப் பக்கத்துலயே தங்கினேன். லயா எனக்குத் தேவையான எல்லாத்தையும் செய்வா. அவகிட்ட மறைமுகமா என்னோட விருப்பமின்மையைத் தெரிவிச்சாலும், ‘உன்னை விரும்புறது என் உரிமை, என்னை விரும்புறதும் விரும்பாம போறதும் உன் உரிமை… என்னையாவது காதலிக்க விடு’னு சொல்லி அவ எப்பவும் போல இருந்தா.
அந்தச் சமயம் ஒரு எம்பி, நான் வளர்ந்து வர்றதைப் பார்த்துப் பிடிக்காம என் மேல வன்மமா இருந்தாரு. சிலை கடத்தல் மாஃபியாவுல அவர்தான் முதல் இடத்துல இருக்கணும்னு நினைச்சாரு.
ஆனா காலேஜ் படிச்சுட்டு இருந்த அவர் பொண்ணு லாவண்யாவுக்கு என்னைப் பிடிச்சுப் போய், ‘எனக்கு இவர்தான் வேணும்’னு கேட்டதால அவர் அமைதியா இருந்தாரு. ஆனா நான் லயா கூடப் பழகுறது லாவண்யாவுக்குச் சுத்தமா பிடிக்கல. லயாதான் என்னை விரும்புறா, எனக்கு அவ மேல இஷ்டம் இல்லன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும், ‘என்னைத் தவிர வேற யாரும் இவனை விரும்புறதுக்குக் கூட உரிமை இல்லை’னு லாவண்யா பண்ண பிடிவாதத்துலதான் லயாவோட உயிர் போச்சு!
காலேஜ் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்துட்டு இருந்தவளை நாலு பேர் கடத்தி, கொடூரமா…”
என்று சொல்லும் போது அதிரூபன் இதுவரை உடையாதவன் மனம் உடைந்து சொல்ல, அமிர்தாவுக்குப் புரிந்தது. ஒரு பெண்ணை அழிக்க வேண்டும் என்றால் இறுதியில் அவள் கற்பைத்தானே இந்த உலகம் சூறையாடப் பார்க்கும்? அதுதான் இவளுக்கும் நடந்திருக்கிறது என்று அவள் வேதனைப்பட்டாள்.
பிறகு அதிரூபன் தொடர்ந்தான்…
“அவளைக் காணோம்னு ரெண்டு நாள் தேடினோம். அப்புறம் அவ டெட் பாடிதான் கிடைச்சது. ஒரு சாலை விபத்து மாதிரி அதைச் சித்தரிச்சிருந்தாங்க. ஆனா எங்க மனசுக்கு ஏதோ உறுத்தலாவே இருந்தது. தனிப்பட்ட முறையில அட்டாப்சி பண்ணப்போதான் தெரிஞ்சது, அவ கற்பழிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கான்னு! இதுக்குக் காரணமான அந்த நாலு ரவுடிகளையும் நான் ரகசியமா கொன்னு குவிச்சுட்டேன்.
ஆனா இதுக்கெல்லாம் மூளையா இருந்தது அந்த எம்பி. அவன் அசைக்க முடியாத இடத்துல இருக்கான். அவனுக்கு ஒரு பாடம் கத்துக்கொடுக்கணும்னு நினைச்சேன். ‘நானும் ஒரு ராவணன் தான், என்னையும் யாராலும் அசைக்க முடியாது’னு அவனுக்கு முன்னாடி மாஃபியாவா நின்னேன். கடைசியில அவன் என் காலடியில வந்து நின்னான். ஆனா லயாவுக்கு நடந்த அநீதிக்கு அவன் பதில் சொல்லியே ஆகணும். அந்த ரவுடிகள்கிட்ட எந்த எவிடென்ஸும் இல்லை, ஆத்திரத்துல நான் அவங்களை அவசரப்பட்டு கொன்னுட்டேன். லயாவோட சாவுக்கு அந்த எம்பிக்குக் கடுமையான தண்டனை கிடைக்கணும், அதுக்காகத்தான் நான் இப்போ போராடிட்டு இருக்கேன்!”
அமிர்தாவுக்கு இப்போதுதான் அதிரூபனின் முரட்டுத்தனத்திற்குப் பின்னால் இருக்கும் ஒரு பெரிய வலி புரிந்தது. “மன்னிச்சிடுங்க அதிரூபா… உங்களைத் தப்பா நினைச்சுட்டேன். லயா டைரியில உங்களைப் பத்தி படிச்சப்போ, நீங்க ஏதோ துரோகம் பண்ணிட்டீங்களோன்னு பயந்துட்டேன். ஆனா அவ உங்க மேல வச்சிருந்தது ஒரு புனிதமான காதல்,” என்றாள்.
அதிரூபன் அவளைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டான். “இனி எந்த ரகசியமும் நமக்கிடையில இருக்காது அமிர்தா. அந்த எம்பி-யையும் லாவண்யாவையும் இப்போவே ஒரு முடிவு கட்டணும்.”
சரியாக அந்த நேரம், வெளியே கௌதம் ஒரு மர்மமான பெட்டியுடன் ஓடி வந்தான். “சார் எம்பிக்கு எதிரா அந்த ஆதாரம் கிடைச்சுருச்சு .
லயாவை கொன்ற 4 ரவுடிகளோட மொபைல் போன் இதுல தான் இருக்கு. அதுல எம்பி லயாவை கடத்தி கொலை செய்வதற்காக பேசிய டீலிங் எல்லாம் இத ரெக்கார்டு ஆகி இருக்கு.!”
அதிரூபனின் கண்கள் சிவந்தன. “கௌதம்! இப்போவே எல்லாருக்கும் போன் பண்ணு. நாளைக்கு விடியறப்போ எம்பி-யோட முகத்திரை கிழியணும். லாவண்யாவுக்கும் அவ அப்பாவுக்கும் இப்போ தான் உண்மையான நரகம் ஆரம்பமாகுது!” என்று கர்ஜித்தான் அந்த ராவணன்.
மறைமுகமாக செயல்பட்டது அவனுக்கு இப்போது வெற்றி கிடைத்தது. தன்னுடைய ஆட்களை வைத்து எப்படியோ போராடி இவை எல்லாம் திரட்டி விட்டான்..
அமிர்தா அவனது கையைத் திருகிப் பிடித்தாள். “அதிரூபா… நிதானமா இருங்க. எம்பி ஆட்கள் நாம இங்கே இருக்கறதைக் கண்டுபிடிச்சிருப்பாங்க.”
அவள் சொல்லி முடிப்பதற்குள், பங்களாவிற்கு வெளியே டயர்கள் உராய்ந்து நிற்கும் சத்தமும், பல கார்கள் வந்து குவியும் சத்தமும் கேட்டன. எம்பியின் ஆட்கள் அந்த ரகசிய இடத்தைச் சூழ்ந்து கொண்டனர். அதிரூபன் ஒரு குரூரமான புன்னகையுடன் தன் இடுப்பிலிருந்த துப்பாக்கியை வெளியே எடுத்தான்.
“அமிர்தா, லாரா சித்தி… நீங்க எல்லாரும் மேல போங்க. இன்னைக்கு ராவணனோட முழு ரூபத்தை இந்தச் சென்னை பார்க்கப்போகுது!”
…