அத்தியாயம் 15
அலுவலக வேலையை முடித்துவிட்டு மாலை நேரம் கணேஷ் மற்றும் ஆதி இருவரும் வீட்டிற்குள் வர, வீட்டில் யாருமே இல்லை…
“என்னடா நேத்து மாதிரி இன்னிக்கு இல்ல? பசங்க விளையாடிக்கொண்டே ஒரே ஜெகஜோதியா இருந்த நம்ம வீடு இவ்வளவு அமைதியா இருக்கே??” என்று இருவரும் வீட்டைச் சுற்றிப் பார்த்தனர். மயான அமைதி…
அப்பொழுது திடீரென்று சத்தம் கேட்டது. ஏதோ பட்டாசு வெடிப்பது போல்! குழந்தைகள் இருவரும் ஆரவாரமாக ஓடி வந்து அவர்கள் காலைக் கட்டிக்கொள்ள…
“டேய் அனிருத், ஆது! நீங்க மட்டுமா இருக்கீங்க? மத்தவங்க எல்லாம் எங்க? என்ன இதெல்லாம்? இது யார் பர்த்டேவும் கிடையாது” என்று இருவரும் கேட்டுக் கொண்டே இருக்கும் போது…
“பர்த்டே கிடையாது, உங்க ரெண்டு பேரோட கடின உழைப்புக்கான வெற்றி! டேய் லண்டன்ல இருந்து சுஜி போன் பண்ணா. லண்டன் ப்ராஜெக்ட்டுக்கு நீங்க ஒரு சப்மிஷன் பண்ணி இருந்தீங்க இல்லையா? அதை ப்ராசஸ் போயிட்டு இருக்குல்ல?” என்று அன்னலட்சுமி முழுதாகச் சொல்ல வருவதற்குள் கணேஷ் குறுக்கிட்டு…
“ஆமா போயிட்டு இருக்கு. சுஜி தான் அங்க மெயின்டைன் பண்ணிக்கிட்டு இருக்கா. இன்னும் ரிசல்ட் வரவே இல்ல, அதான் டென்ஷனா இருக்கு. இன்னும் ரெண்டு மூணு நாள் ஆகும் இல்ல?” என்றான்.
“அதான் இல்ல, நீங்க செலக்ட் ஆயிட்டீங்க! இப்போ ஆயிரம் கோடி ரூபாய் ப்ராஜெக்ட் உங்களுக்கு கிடைச்சிருக்கு. லண்டன்ல இருக்க எல்லாருமே ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. பேசாம என்ன பண்ற… நம்ம கம்பெனி ஆளுங்களுக்கும் லண்டன்ல இருக்கறவங்களுக்கும் ஒரு பார்ட்டி ஏற்பாடு பண்ணிடு. சுஜி அங்க இருக்குறவங்களுக்கு ஏற்பாடு பண்ணிடுவா. நம்ம இங்க இருக்குறவங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும் இல்லையா? அவங்க மட்டும் இல்லன்னா இந்த ப்ராஜெக்ட் நமக்கு கிடைச்சிருக்குமா? மேலும் இந்த ப்ராஜெக்ட்டுக்கான வேலையை அவங்க தான் செய்யப் போறாங்க. ஒரு உற்சாகம் ஏற்படுத்துற விதமா இதை ஏற்பாடு செய்யலாம்” என்று அன்னலட்சுமி சொன்னவுடன் அது சரி என்று பட்டது.
“சரி, இன்னைக்கு வியாழக்கிழமை. நாளைக்கு வெள்ளிக்கிழமை ஈவினிங் ஏற்பாடு பண்ணலாம். பார்ட்டி முடிஞ்சவுடன் இரண்டு நாள் லீவ் சொன்னா கேக்கவே மஜாவா இருக்கும். சரி நான் அதற்கான ஏற்பாடு எல்லாம் பண்றேன். ஆதி, நீ வந்த விஷயம் என்னவென்று பாரு” என்று கணேஷ் தன் அறைக்குள் சென்றுவிட, ஆதித்யாவும் மேலே இருக்கும் தன் அறைக்குச் சென்று கொண்டிருந்தான். அன்னலட்சுமி கண்காட்ட, ‘இதை வேற செய்யணுமா?’ என்பது போல் அவன் பின்னால் சென்றாள் அகல்யா.
உள்ளே அவன் வந்தவுடன் அவனுக்கான டவல், மாற்று உடை அனைத்தும் எடுத்து கையில் கொடுக்க, சிரித்துக் கொண்டே அதை வாங்கிக் கொண்டவன், “ரைட்டு மேடம்! எனக்கான மனைவி ஸ்தானத்தை எடுத்துக்கிட்டீங்கன்னு இது மூலமா சொல்ல வர்றீங்க. ஐ அம் ரைட்??” என்று குறும்பாகக் கேட்டான். அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டு…
“ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. அத்தை உங்களுக்கான வேலையை நான் தான் செய்யணும்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க, அதான். அப்புறம் இன்னொரு விஷயம், இந்த ப்ராஜெக்ட் கிடைக்க நீங்க ரெண்டு பேரும் கடுமையா உழைச்சீங்கன்னு சொன்னாங்க. என்னுடைய வாழ்த்துக்கள். உங்க கம்பெனில வேலை பாக்குற எல்லாருக்கும் வாழ்த்துக்கள் சொன்னதா சொல்லுங்க” என்றாள்.
அவளைத் தலை அசைத்துக் கொண்டே ஒரு மார்க்கமாகப் பார்த்துக்கொண்டு குளியல் அறைக்குள் சென்றான். குளித்து முடித்து வேறு உடை மாற்றிக் கொண்டு வெளியே வர, அவனுக்கான பவுடர், பர்பியூம் மற்றும் லோஷன் கிரீம் அனைத்தையும் டேபிள் முன் சரியாக அடுக்கி வைத்திருந்தாள். அதை அனைத்தையும் போட்டுக்கொண்டு அவளைப் பார்த்து நெருங்கிக் கொண்டே வந்தவன், “ஒரு பொண்டாட்டி கணவன் வெற்றி பெற்றதற்கு இப்படி வாழ்த்துக்கள் சொல்லக்கூடாது தெரியாதா உனக்கு?” என்று குதர்க்கமாக கேட்டான்.
எந்தப் பதில் சொல்வது தெரியாமல் அவள் முழிக்க, “புருஷனுக்கு இப்படி வாழ்த்து சொல்லக் கூடாது, இப்படி சொல்லணும்” என்று அவள் இடையை வளைத்துத் தன் புறமாக இழுத்துக் கொண்டவன், அவள் கன்னத்தில் முத்தமிட்டுச் சொன்னான். அவளோ அவனைத் தள்ளிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொள்ள…
“ஆக்சுவலி நான் ட்ரை பண்ணது லிப் கிஸ்க்கு, ஆடியன்ஸ் கூட அதுக்காகத் தான் ஆசைப்பட்டு இருப்பாங்க. ஆனா நீ கோவிச்சுக்குவ, அதனாலதான் கன்னத்துல கொடுத்தேன். கூடிய சீக்கிரம் நீயே எனக்குத் தர நாள் வரும். நான் எல்லாத்தையும் கடந்து வந்து உனக்கு புருஷனா மாறி போயிட்டேன். நானே நினைச்சா கூட என்னால உன்னை விட்டு விலகி இருக்க முடியல. யாராவது லவ் பண்ண பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டு விலகி இருப்பாங்களா? உனக்குன்னு ஒரு கடந்த காலம் இருக்கு, மூணு வருஷம் நீ வாழ்ந்த வாழ்க்கை… அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது தான். ஆனா கொஞ்சம் கொஞ்சமா இந்த வாழ்க்கையை ஏத்துக்க பாரு, தானா எல்லாம் மாறி போயிடும்” என்று சொல்லி கீழே சென்று விட…
‘என்னால உன்னை மன்னிக்கவே முடியல. என்னால டேவிட்டின் நினைவுகளை மறக்கவும் முடியல. ரெண்டு பேரும் என் வாழ்க்கையில் வந்து மறக்க முடியாத சம்பவத்தைப் பண்ணிட்டு போயிட்டீங்க. நீ என்னை காதலிச்சு ஏமாத்தி விட்டுட்டு போன. அவன் ஏமாந்து போன என் வாழ்க்கைக்கு வெளிச்சம் கொண்டு வந்து, என்னை காதலிக்க வைத்து ஒரு அழகான வாழ்க்கையை காட்டுற மாதிரி கூட்டிட்டு போய் பாதி வழியில் விட்டு போயிட்டான். இப்போ அந்த வழியில் நீ என் கைய புடிச்சு வந்து நிக்கிற. என்ன நினைச்சு எனக்கே விசித்திரமா இருக்கு’ என்று குழம்பிப் போய் நின்றவள், கீழே தன் மகன், மகள் மற்றும் கணவன் மூவரின் கூச்சல் சத்தம் கேட்டு நிகழ்காலத்திற்கு வந்தாள். கீழே சென்று பார்க்க குழந்தைகள் ரகளை செய்து கொண்டிருந்தனர்.
“இந்த விஜயதசமி வந்தா அனிருத் குட்டியை ஸ்கூல் சேர்க்கப் போறேன்னு சொன்ன இல்ல, உடனே ஸ்கூல் சேர்க்க வேண்டாம். ப்ளே ஸ்கூல் அந்த மாதிரி ட்ரை பண்ணு. அதுக்கப்புறம் எல்கேஜில இருந்து ஸ்டார்ட் பண்ணலாம். மூணு வயசுல ஸ்கூல் சேர்க்கிறதெல்லாம் ரொம்ப கஷ்டம்” என்றார் அன்னலட்சுமி.
“ஆமா அண்ணி, நானும் அதை பார்த்துட்டு யோசிச்சிட்டு இருந்தேன். அதான் நம்ம வீட்டுக்கு பக்கத்துல ஒரு சின்ன ப்ளே ஸ்கூல் நடத்திட்டு இருக்காங்க இல்லையா? நம்ம அங்க போய் தம்பியை ஜாயின் பண்ணி விடலாம். அப்பதான் சீக்கிரம் போய் கூட்டிட்டு வர்றதுக்கும் சவுகரியமா இருக்கும்” என அகல்யாவும் அஸ்வினியும் ஸ்கூல் விவரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டனர். ஆனால் சம்பந்தப்பட்டவனோ ஸ்கூல் வேண்டாம் என்று ஒரு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தான்.
“பாரு, நேத்து தான் நம்ம ஸ்கூலுக்குப் போய், காலேஜ் போய் வேலைக்கு போன மாதிரி இருந்தது. இப்போ நாம பசங்களை வளர்த்து ஸ்கூலுக்குப் போற அளவுக்கு வந்தாச்சு. காலங்கள் மாறி போயிட்டே இருக்கலாம்” என்று கணேஷ் சிலாகித்துக் கூற…
“ஆமா ரொம்பவே எல்லாம் மாறி போச்சு. எல்லாம் நினைச்ச மாதிரி நடக்கும்னு சொல்ல முடியாது இல்லையா? சரி கணேஷ், நம்ம ரெண்டு பேரும் மெயில் செக் பண்ணலாம். பார்ட்டி வேலையை லேடிஸ் கிட்ட ஒப்படைக்கலாம், அவங்க கரெக்டா பார்ப்பாங்க. என்ன லேடீஸ், நான் சொல்றது சரிதானே??” என்று ஆதித்யா கேட்டான். “ஓகே ஓகே பார்ட்டி வேலைகளை நாங்க பார்த்துக்கிறோம். நீங்க ரெண்டு பேரும் ப்ராஜெக்ட் வேலைக்கான அடித்தளத்தை ஆரம்பிங்க” என மனைவிமார்கள் சொல்ல, கணேஷ் மற்றும் ஆதித்யா இருவரும் வேலையில் மூழ்கினர்.
இவர்கள் அடுத்த ஆறு மாதம் அந்த ப்ராஜெக்ட் முழுமையடைய கடுமையாக உழைத்து ஆக வேண்டும். இவர்கள் பொறுமையாக அனைத்தையும் செய்து திருப்திகரமான வெற்றியைப் பார்க்கும் பேர்வழிகள் என்பதால், ஊழியர்களிடம் எப்படி ப்ராஜெக்ட் பற்றி விவரிக்க வேண்டும் என்று தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது கணேஷுக்கு ஒரு புதிய மெயில் வந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவன், “இரண்டு லட்ச ரூபாய் பெனாலிட்டி பணம் கொடுத்துட்டு இந்த ரோகித் வேலையை ரிசைன் பண்ணிட்டான்” என்று ஆதித்யாவிடம் சொன்னான்.
“அவனுக்கு கல்யாணம் ஆகப்போகுது, அதுவும் கோடீஸ்வரர் வீட்டுப் பொண்ண கல்யாணம் பண்றான். அவனுக்கு இந்த ரெண்டு லட்சம் எல்லாம் ஒரு விஷயமா? சரி விடு நம்ம வேலையைப் பார்க்கலாம்” என்றான் ஆதித்யா.
“லாவண்யா அவன் கூட வாழ்ந்து ஆறு மாசம் தான் ஆகுது. அதுக்குள்ள எப்படி? இந்த லாவண்யா எங்க ஓடிப் போனான்னு தெரியல” என்று கணேஷ் கவலைப்பட…
“நீ எதுக்கு கவலைப்படுற? அவ நல்லா ஹைதராபாத்ல ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறா. இன்னைக்குத் தான் ஜாயின் பண்ணி இருக்கா. ஏற்கனவே எல்லா ஏற்பாடும் பண்ணிட்டுத் தான் செய்திருக்கா. அது மட்டும் இல்லாம உன்னோட தங்கச்சியை நீயே சந்தேகப்பட வேண்டாம். அவளுக்கும் அந்த ரோகித்துக்கும் கல்யாணமே நடக்கல. ஆறு மாசம் நட்பு ரீதியாக அவங்க இருந்தாங்க. அவனுக்குக் குடைச்சல் கொடுக்கக் கூடாதுன்னு லாவண்யா ஹைதராபாத் போயிட்டா. இவன் அந்த மித்ரா பொண்ண கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்லிட்டான். இதுதான் உண்மை” என்று ஆதித்யா சொல்ல, கணேஷ் தன் நண்பனை மெச்சிக் கொண்டார். “உன்னால மட்டும் எப்படித்தான் எல்லாத்தையும் எளிதாகக் கடக்க முடியுதுன்னு தெரியல.”
மறுநாள்…
பிரசித்தி பெற்ற ஒரு பெருமாள் கோவிலில் சில முக்கிய சொந்தங்கள் மட்டும் இருக்க, ஒரு தாய் ஆனந்த கண்ணீரோடு மகனுக்கு ஆசீர்வாதம் செய்யக் காத்திருக்க… அய்யர் பூஜை அனைத்தையும் முடித்து மாங்கல்யத்தை மணமகனிடம் கொடுத்து “பெண் கழுத்தில் கட்டுங்கள்” என்று சொன்னவுடன், தாலிக்கயிறு எடுத்து மெதுவாகத் திரும்பி அவளைப் பார்த்தான் மணமகன்.
“தயவு செய்து தப்பு பண்ணாத, உன்னை கெஞ்சி கேட்கிறேன்” என்று அவள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், அவள் கழுத்தில் தாலி கட்டி முடித்து, லாவண்யாவைத் தன்னோடு சரிபாதி ஆக்கிக் கொண்டான் மணமகன் விகாஸ் கண்ணன்.