மறுநாள் காலை விடிந்தது. நேற்று இரவின் தாக்கத்தால் அடித்துப் போட்டது போல் அதிரவன், மீனாட்சி இருவரும் ஒருவரை ஒருவர் தழுவி இருந்தனர். முதலில் கண்விழித்த அதிரவன், தான் மீனாட்சியின் மடியின் மீது படுத்திருப்பதை உணர்ந்து எழுந்து அவள் முகத்தைப் பார்க்க, அவள் முகத்தில் இருந்த வசீகரம் அவனைக் கவர்ந்தது.
அவளை நெருங்கி மீண்டும் ஒரு முத்தம் கொடுக்கலாம் என்று நினைக்கும் போது மீனாட்சி கண் விழித்துவிட, அவளை விட்டுத் தூரம் வந்தவன்,”இந்த அழகை வச்சு நல்லாத்தான் என்ன மயக்கி வச்சிருக்க. இங்க பாரு நான் விளையாட்டுக்கு சொல்லல, உனக்கு நல்ல ஆஃபர் கொடுத்திருக்கேன். எதுவா இருந்தாலும் யோசிச்சு சொல்லு.”
மீனாட்சி தன் மனதில் அவன் மீது இருப்பதும் கௌரவம் கலந்த காதல், காதலுக்கு ஒரு பெயர் இருக்கிறது அதைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்ல வருவதற்குள் அதிரவனின் ஆட்கள் அனைவரும் அங்கே வந்து விட்டனர். எப்படியோ அவர்களைக் கண்டுபிடித்து விட்டது போல, அவர்களுக்காகக் கொண்டு வந்த காரில் இருவரையும் ஏற்றிக்கொண்டு நகரத்திற்குச் சென்று கொண்டிருந்தனர்.
மீனாட்சி ஏதும் பேசவில்லை, அமைதியாகவே இருந்தால். முதலில் அவளை அவள் விடுதி வாசலில் நிறுத்திவிட்டு, “உன்னுடைய உடமைகள் பத்திரமாக வந்து சேரும்” என்று சொல்லி அதிரவன் அங்கிருந்து சென்று விட்டான். மீனாட்சி மிகவும் சோர்வாகத் தன் அறைக்குள் நுழையும் பொழுது, அங்கு ஏற்கனவே வைஷ்ணவி தன் அம்மாவுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து, வந்திருக்கும் புதிய பெண்மணியைக் கேள்வியாகப் பார்த்தாள்.
“வா மீனு, இவங்க தான் எங்க அம்மா. இட்லி பொடி, ஊறுகாய் எல்லாம் செஞ்சு வச்சு இருக்காங்க. அதுக்காக ரெண்டு மணி நேரம் பயணம் பண்ணி இங்க வந்து எனக்குக் கொடுத்துட்டுப் போயிருக்காங்க. அதுவும் நேத்து ராத்திரி எனக்குச் சர்ப்ரைஸா போன் பண்ணி வராங்க. இந்த மாதிரி அம்மா நிறைய தடவை வந்ததால நம்ம வார்டன் யாரும் கண்டுக்கல. சரி உட்காரு, அம்மா நிறைய திங்ஸ் எடுத்துட்டு வந்திருக்காங்க. ஆமாம் நீ கொண்டு போன பேக் எங்க?”
என்று வைஷ்ணவி கேள்வி மேல் கேள்வி கேட்க, மீனாட்சி நடந்தவை அனைத்தையும் சொல்லி முடித்தாள்.”அடக்கடவுளே! இவ்வளவு மோசமா இந்தப் பிள்ளைக்கு நடந்து இருக்கே. நல்ல வேலை உன்னோட சார் உனக்குத் துணையா இருந்து இருக்காரு, அதனால நீ உயிர் பிழைச்சு வந்திருக்க. சரி விடு, உன்னோட பொருள் எல்லாம் திரும்ப வரும்னு சொல்லிட்டாங்க இல்ல. வைஷு, இந்தப் பொண்ணு கொஞ்சம் களைப்பா இருக்கா, நீ அவளுக்கு ஆறுதலா இரு. எனக்கு நேரம் ஆகுது.
இன்னைக்கு வயல்வெளியில முக்கியமான வேலை இருக்கு. நான் இப்போ கிளம்புனா தான் மத்தியானமா ஊருக்குப் போய் சேர முடியும். இதெல்லாம் இவளுக்குப் பிடிக்கும், தீர்ந்து போச்சுன்னு சொன்னா, அதான் அவசர அவசரமா கொடுக்கறதுக்காக வந்தேன். கொடுத்தாச்சு, ஒரு நாள் பொறுமையா நீங்க ரெண்டு பேரும் ஊருக்கு வாங்க, அங்க பேசலாம். இப்போ வயல்வெளியில வேலை நிறைய இருக்குடா, அதனாலதான் சீக்கிரம் கிளம்புறேன், அம்மா கிட்ட கோவிச்சுக்காத, நான் அப்புறம் வரேன்”
என்று ரத்தினவள்ளி மிகவும் அன்பாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.ஆனால் மீனாட்சி எதையும் கேட்கும் கவனத்தில் இல்லை. மிகவும் அமைதியாக இருக்க, வைஷ்ணவி அவளை அமர வைத்து “முதலில் உடை மாற்று” என்று சொல்ல, மீனாட்சி பொறுமையாகக் குளியலறைக்குச் சென்று உடைகளை மாற்றிவிட்டு மிகவும் களைப்பாக அமர்ந்தாள். அவளுக்குச் சாப்பிடுவதற்கு உணவு கொடுக்க, மீனாட்சி அது வேண்டாம் என்று சொல்லும் போது,”அப்படின்னா ஏதோ பெருசா நடந்து இருக்கு, என்ன ஆச்சு? உண்மைய சொல்லு”
என்று வைஷ்ணவி உலுக்கிய பிறகு, தனக்கும் அதிரவனுக்கும் நடந்த விஷயங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னாள்.”அவர் உன்கிட்ட இப்படி நடந்துக்கறாரு, அவரைப் பத்தி முழுசா தெரிஞ்சும் நீ அவரை ஏத்துக்க ரெடியா இருக்க அப்படின்னு ஆரம்பத்திலே நீ அவரை லவ் பண்ணி இருக்க.
ஆனா அவர் இதைத் தப்பா நினைக்கிறாரு, காலமெல்லாம் உன்கூட கல்யாணம் பண்ணாம வாழ ஆசைப்படுறாரு. ரொம்ப கஷ்டம், இங்க பாரு எதுக்கு ரிஸ்க் எடுத்துக்கிட்டு இருக்க? அவருக்குக் காதல்ங்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் இருக்கும் பொழுது, நீ எதுக்கு காதல் காதல் அப்படின்னு அவர் பின்னாடி சுத்தணும்? கம்முனு வேலையை மட்டும் கவனிச்சிட்டு உன்னோட வருங்காலத்தப் பாரு. ரெண்டு வருஷம் உனக்கு டைம், நீ படிக்கிறேன்னு சொல்லி இங்க வந்திருக்க, ஆனா நீ வேலை பார்த்துட்டு இருக்க. உன்னோட படிப்பு இருக்கு, அதையும் முதல்ல ஞாபகம் வச்சுக்கோ” என்று பல அறிவுரைகளைச் சொன்னாள். பிறகு மீனாட்சி அமைதியாகிவிட, வைஷ்ணவியும்
“நம்மால் முடிந்தது இவ்வளவுதான்” என்பது போல் அமைதியாகிவிட்டாள். இரண்டு நாட்கள் விடுமுறை முடிந்தது.ஆனால் மீனாட்சியின் மனம் சாந்தம் அடையவில்லை.ரிசார்ட்டில் இருந்து திரும்பிய பின், மீனாட்சியின் மனதுக்குள் ஒரு பெரிய போர்க்களமே நடந்து கொண்டிருந்தது. காட்டில் அதிரவன் காட்டிய அந்த ஒரு துளி அன்பில், அவன் திருந்திவிடுவான் என்று அவள் நம்பினாள்.
விடுமுறை முடிந்து அலுவலகத்திற்கு வந்ததும், ஒரு பெரிய துணிச்சலோடு அவனது அறைக்குள் நுழைந்தாள்.அவளை ஒரு தீர்க்கமான பார்வையோடு அதிரவன் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் என்ன சொல்கிறாள் என்று பார்ப்போம் என்று மிகவும் அமைதியாக இருந்தான்.
“சார்… அந்த ஒரு இரவுல நான் உங்களை வேறொரு மனுஷனா பார்த்தேன். எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு. நான் உங்களை நேசிக்கிறேன்…” என்று மீனாட்சி தன் இதயத்தைத் திறந்து பேசினாள்.அதிரவன் தன் கையில் இருந்த கோப்புகளை மேஜை மீது ஓங்கி எறிந்தான். அவனது கண்கள் சிவந்திருந்தன.
“நேசம்… காதல்… இதெல்லாம் ரொம்ப விலை குறைவான வார்த்தைகள் மீனாட்சி. நேத்து நடந்தது ஒரு தேவை. அதுக்காக என் சுதந்திரத்தை நான் உன் காலடியில வைக்க மாட்டேன். எனக்குக் கல்யாணம், தாலி இதுல எல்லாம் நம்பிக்கையே இல்லை. உனக்கு என் கூட இருக்கணும்னா ஒரு ‘லிவிங்’ (Living) உறவுல இருக்கலாம். மனைவிங்கிற அந்தஸ்தைக் கேட்டு என் அதிகாரம் முன்னாடி நிக்காதே. உன் திமிர் எப்பவும் எனக்குக் கீழேதான் இருக்கணும்,”
என்று அவளைக் காயப்படுத்தினான். மீனாட்சி கண்ணீருடன் அங்கிருந்து வெளியேறினாள்.இவ்வளவு சொல்லியும் இவன் மனம் கொஞ்சம் கூட இரக்கம் காட்டவில்லையே என்று, காதலுக்கும் காமத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறான் என்று அவனைத் திட்டத்தான் முடிந்தது அவளால்.–
-அன்று மாலை…வானம் கறுத்து மேகங்கள் ஒன்று திரண்டு நின்றன. வைஷ்ணவி பணிபுரியும் அந்தப் பள்ளி முடிந்து அவள் வெளியே வந்தபோது, நேரம் மாலை ஐந்துதான் என்றாலும் எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. அடுத்த சில நிமிடங்களில் இடி முழக்கத்துடன் கனமழை கொட்டத் தொடங்கியது. பேருந்து நிறுத்தத்திற்குச் செல்லக் கூட முடியாத அளவிற்குச் சாலை முழுவதும் வெள்ளம்.குடை இருந்தும் மழையின் வேகம் அவளை நடுங்க வைத்தது. இருட்டும் மழையும் சேர்ந்துகொள்ள, வைஷ்ணவிக்கு ஒருவித பயம் தொற்றிக்கொண்டது.
அப்போது தூரத்தில் ஒரு ஜீப்பின் வெளிச்சம் தெரிந்தது. அந்த ஜீப் மெதுவாக அவள் அருகே வந்து நின்றது.ஜீப்பின் கதவு திறக்க, உள்ளே தொழிற்சாலைச் சீருடையில் தென்னரசு அமர்ந்திருந்தான்.வைஷ்ணவி அவனைப் பார்த்ததும் பழைய மோதல்கள் நினைவுக்கு வர, தயங்கி நின்றாள். ஆனால் தென்னரசு முகத்தில் ஒரு மென்மையானப் புன்னகையை வரவழைத்துக்கொண்டான்.
“டீச்சர்… மழை ரொம்ப அதிகமா இருக்கு. நேரம் வேற ஆகிடுச்சு. இந்த நேரத்துல பஸ் வர்றது கஷ்டம். வாங்க… நான் உங்களை ஹாஸ்டல்ல டிரா பண்றேன்,” என்றான் மிகவும் பணிவாக.வைஷ்ணவி தயங்கினாள். “இல்ல பரவாயில்லை தென்னரசு… நான் போய்க்கிறேன்.” (வைஷ்ணவிக்கு அவன் பெயர் தெரிய காரணம், பள்ளி மாணவர்களோடு ஃபேக்டரி விசிட் செய்யும் பொழுது தென்னரசு தன் பெயரை அறிமுகப்படுத்தித் தான் மாணவர்களுக்கு மெஷின் ஆப்பரேட்டிங் பற்றி விளக்கிக் கொண்டிருந்தான்.
அதனால் அவனது பெயர் அவள் மனதில் பதிந்து இருந்தது).”என்ன டீச்சர்… இன்னும் பழைய கோபமா? அன்னைக்கு நான் முரட்டுத்தனமா பேசினது தப்புதான். நான் ஒரு அனாதைங்கிறதால எனக்குப் பேசத் தெரியல. என்னை மன்னிச்சிடுங்கன்னு தான் அன்னைக்கே சொன்னேனே. ஒரு மனுஷனா உதவுறேன்… ஏறுங்க,” என்றான். அவனது பேச்சில் இருந்த அந்தப் போலி உருக்கம் வைஷ்ணவியை நம்ப வைத்தது. வேறு வழியின்றி அவள் பின்னால் ஏறி அமர்ந்தாள்.
ஜீப் மழையில் நகரத் தொடங்கியது. தென்னரசுவின் கைகள் ஸ்டியரிங்கைப் பிடித்திருந்தாலும், அவனது மனதுக்குள் வஞ்சகத் தீ எரிந்து கொண்டிருந்தது. கண்ணாடியின் வழியே மழையைப் பார்த்துக்கொண்டிருந்த வைஷ்ணவியை அவன் ரகசியமாகப் பார்த்தான்.’ரத்தினவள்ளி… உன்னால என் குடும்பம் அனுபவிச்ச அவமானம் சாதாரணமானது இல்லை.
எங்க அப்பாவோட சாவுக்கும், எங்க கௌரவம் போனதுக்கும் நீதான் காரணம். உன் மகளை வைத்து அன்னைக்கு நாங்க பட்ட அவமானம் மாதிரி நீயும் அவமானத்துல துடிச்சுப் போகணும். இவளைக் காதலிக்கிற மாதிரி நடிச்சு, உன் காலடியில இருந்த இவளை என் கால் அடியில கொண்டு வருவேன். அப்போ தெரியும் உனக்கு இந்தத் தென்னரசு யாருன்னு!’ என்று பற்களைக் கடித்தபடி எண்ணிக் கொண்டான்.
வெளியே மழை பெய்து கொண்டிருந்தாலும், தென்னரசுவின் உள்ளே பழிவாங்கும் எரிமலை கொதித்துக் கொண்டிருந்தது. ஆனால், வைஷ்ணவியைப் பார்த்துத் திரும்பும்போது மட்டும், “பயப்படாதீங்க டீச்சர்… இன்னும் பத்து நிமிஷத்துல உங்க வீடு வந்துடும்,” என்று ஒரு நண்பனைப் போல மென்மையாகச் சொன்னான்.’பரவாயில்லை, இடி மன்னர் கொஞ்சம் நல்லவரா தான் தெரிகிறார். நம்ம பத்திரமா ஆட்டோ காசு இல்லாம நிம்மதியா ஹாஸ்டல் போய் சேர்ந்தா போதும்’ என்று அன்றைய பொழுது இனியதாக முடிகிறது என்று வைஷ்ணவி நினைத்துக்கொண்டிருக்க, இவள் சிரிப்பு, சந்தோஷம் அனைத்தையும் மொத்தமாக நிலைகுலையச் செய்ய இங்கே ஒருவன் திட்டம் போட்டுக் கொண்டிருந்தான்.
விதி இவர்கள் இருவரையும் இணைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.ஆனால் இந்த முறை தென்னரசு பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் வைஷ்ணவி மனதில் ஆழமாகப் பதிந்தது. ஏன் எதற்கு என்று தெரியாமல் தென்னரசுவின் முகம் அவளுக்குப் பதிந்து போனது. “இடி மன்னர் ஏனோ ரொம்பவே இடிச்சுட்டு இருக்காரு” என்று தலையில் அடித்துக் கொண்டு, தனது விடுதி வந்தவுடன் இறங்கிச் சென்றுவிட்டாள்.-”””””