அத்தியாயம் 28
நாட்கள் தெளிந்த நீரோடை என்று சொல்வார்களே, அதுபோலத்தான் மிகவும் தெள்ளத் தெளிவாக இவர்களைப் போல ஒரு ஜோடி வருமா என்பது போல் தெரிந்து கொண்டிருந்தார்கள் விஜய் – அஞ்சலி இருவரும். அவன் முழுக்க முழுக்கத் தன்னைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தான். கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை முழுமையாக மாற்றி, இப்போது என் வாழ்க்கை அஞ்சலிதான், அஞ்சலிதான் தனக்கு எல்லாம், அவள் மட்டும்தான் என்று ஒரு நிலைக்கு வரும்போதுதான், ஏதாவது ஒரு பழைய விஷயம் அவனைக் கிண்டிக் கிளறிவிட்டு அவனுக்குள் இருக்கும் மிருகத்தை எழுப்பிவிட்டுச் செல்வது வழக்கம்.
இது போன்ற சமயத்துக்காகக் காத்துக் கொண்டிருந்தவர்தான் விஜய்யின் எதிர் கம்பெனி ஓனர் இளமாறன் என்பவர். மேலும் அவர் விஜய்யின் கடந்த காலம், தற்போதுள்ள குடும்பச் சூழ்நிலை அனைத்தையும் தெரிந்து கொண்டவர். ஏதாவது ஒரு கலகம் வைத்தால் என்ன என்று ஆந்திராவில் இருக்கும் அஞ்சலியின் அப்பா ஸ்ரீனிவாசனோடு ஒரு பிசினஸ் டை-அப் (Business Tie-up) போடப் போவதாகவும், நீங்கள் குடும்பத்தோடு வந்து இந்த விருந்தை இந்த ரெஸ்டாரண்டில் ஏற்றுக் கொள்ளும்படியும் சொல்ல, சரி அவரும் பல நாட்கள் கழித்துச் சென்னைக்குச் செல்லலாம், அப்படியே மகளை ஒரு எட்டு பார்க்கலாம் என்று ஒரு நினைப்புதான். அதுவும் தவிர, விஜய் நடத்திக் கொண்டிருக்கும் ரெஸ்டாரண்டிற்கே அழைத்திருந்ததால், நிச்சயம் தன் மகளை ஒருமுறை சந்தித்துப் பேச வேண்டும் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார்.
மேலும் மாறன் இவரை மட்டுமல்லாமல், சுற்றி இருக்கும் அனைத்து இன்வெஸ்டார், தொழில் நண்பர்கள், எதிரிகள் என்று அனைவருக்கும் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்து வைத்திருந்தார். காரணம், சப்பைக் காரணமாக இதுவரை மனைவிக்கு மரியாதை கொடுக்காதவர், தன் மனைவிக்குப் பிறந்தநாள் என்று ஒரு உருட்டை உருட்டி ஏற்பாடு செய்திருக்க, அவரின் மனைவிக்கு இது ஆச்சரியம்தான். “சரி வாயை மூடிக்கொள்வோம், தன் கணவன் எதையும் லாபம் இல்லாமல் செய்ய மாட்டார்” என்று அவர் அமைதியாகவே இருந்தார். அதே சமயம் விஜய் கம்பெனியில் உளவுத்துறை போல் இருக்கும் மாறன் உதவியால், அவர் மனைவியும் (மாறன் மனைவி) மீண்டும் அதே வேலையைச் செய்யும்படி கட்டளை போடப்பட்டிருந்தால், அவர்களும் தக்க சமயத்திற்கு காத்துக் கொண்டிருந்தனர்.
,,,,,,
மிகப்பெரிய பார்ட்டி ஹாலில் மாறன், அவர் மனைவிக்குப் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடி இருக்க, அவரும் போலியாகச் சிரிப்போடு தன் பிள்ளைகளோடும் பேரப்பிள்ளைகளோடும் போட்டோவுக்குப் போஸ் கொடுத்திருந்தார். அனைவரும் தொழில் நண்பர்கள் அங்கு இங்கு என்று சென்று கொண்டிருக்க, விஜய் – அஞ்சலி இருவரும் கண்களால் காதல் செய்துகொண்டு மிகவும் நெருக்கமாக அங்கும் இங்கும் வலம் வந்தனர். இவர்களை எப்படியாவது கவிழ்க்க வேண்டுமே என்று இதோ சீனிவாசன் தன் மனைவி மகனோடு வந்து சேர்ந்தார். தன் அப்பாவைப் பார்த்தவுடன் அஞ்சலிக்குக் கோபம் கோபமாக வந்தது. தன் அம்மாவுடன் வாழாமல் இப்போது புது வாழ்க்கையைத் தேடிப்போன தந்தை மீது கோபம் வந்தது. இனி என் வாழ்க்கையில் எதுவும் வேண்டாம் என்று சந்நியாசம் சென்ற அம்மா, தன்னைக் கூட மறந்துவிட்டது இன்னும் அஞ்சலிக்கு வேதனையைக் கொடுத்தது. தன் தந்தையைப் பார்த்தவுடன் அஞ்சலி முகத்தைத் திருப்பிவிட, இவ்வளவு நேரம் நன்றாக இருந்த விஜய்க்கு அந்த சீனிவாசனைப் பார்த்தவுடன் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. இவனால் தானே எல்லாமே என்று…
மீண்டும் வினுஷாவை இழந்தது, தன் முதல் குழந்தை இறந்தது, மேலும் இவனால் பிரச்சனை வந்து அஞ்சலியிடம் கடுமையாக நடந்து கொண்டது, மீண்டும் தன் குழந்தையை இழந்தது என்று ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி வைத்தது போல் அவனுக்கு ஞாபகம் வந்து கொண்டே இருக்க, பொது இடத்தில் எந்த ஒரு ஆணும் கோபத்தைக் காட்ட மாட்டான், தான் ஒரு நல்லவனாகவே காட்டிக் கொள்வான். ஆனால், அப்பாவி மனைவியைத் தானே போட்டு உலுக்குவார்கள்?
விஜய் தன் கோப முகத்தை மறைத்து வைத்திருந்ததால், கீதாஞ்சலி பாவம், இப்போது அவன் நார்மல் மூட் (Normal Mood)-இல் இருக்கிறான் என்று நம்பி, “பார்க்காதீங்க… அந்த ஆளைப் பார்த்தாலே கோபமா வருது. நம்ம கொஞ்ச நாள் நிம்மதியா இருந்தோம் இல்ல, அதான் சனியன் வந்திருக்கு. இது சரிப்பட்டு வராது, நம்ம போலாம்” என்று உரிமையாக அவள் கை பிடித்துக் கொண்டு அழைத்துச் செல்ல, எங்கிருந்துதான் அந்த கோபம் வந்ததோ, தன் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் இந்தத் தருணத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாதவன், அவள் கைகளை உதறிவிட்டு அவளைக் கீழே தள்ளிவிட்டான்.
அத்தனை பேர் முன்பாக அவள் கீழே விழுந்துவிட, அப்போது அந்த மாறனின் ஸ்பை, மாறனின் மனைவிக்குக் கண்ணைக் காட்டினாள். உடனே அவள் அஞ்சலியைத் தூக்கி நிறுத்தி, “என்ன விஜய், எப்ப பார்த்தாலும் அஞ்சலிகிட்ட முரட்டுத்தனமாவே நடந்துட்டு இருக்க? நானும் பார்த்துட்டுதான் இருக்கேன். இந்த ஆள் வந்ததால் தானே இப்படி அஞ்சலிகிட்ட இவ்வளவு கோபத்தைக் காட்டுற? உனக்குத் தைரியம் இருந்தா அந்த ஆள்கிட்ட போய் காட்டு. அவன் புதுப் பொண்டாட்டியோட ஜம்முன்னு இருக்கான். உன் பொண்டாட்டி என்ன பண்ணா? இன்னும் உன்னோட முன்னாள் காதலிய மறக்காம இருக்க, அதனால்தான் இப்ப இருக்கிற உன் பொண்டாட்டி மேல உனக்குக் கொஞ்சம் கூட அன்பு இல்லாம இப்படி நடந்துக்கிற. ஏதோ கடந்த காலத்துல நடந்ததுக்கு இப்ப இருக்குற இவ மேல கோபத்தைக் காட்டுற” என்று அக்கறை என்கிற பெயரில் அதிகமாக வன்மத்தைக் கக்கிவிட்டாள்.
கணவன் செய்த செயலுக்கு அழுது கொண்டிருந்த அஞ்சலிக்கு, அவள் சமாதானம் செய்வது போலப் பேசி இன்னும் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தாள்.
சீனிவாசன் இந்தச் சலசலப்பைக் கேட்டு அங்கு வந்து, அழுது கொண்டிருக்கும் தன் மகளையும் கோபமாக இருக்கும் தன் மாப்பிள்ளையையும் பார்த்து, “அஞ்சலியோட அம்மா நம்ம ரெண்டு பேருக்கும் எந்த உறவும் வேண்டாம் என்று விவாகரத்து வாங்கிட்டு சந்நியாசம் போயிட்டா. அஞ்சலி என்கூட இருக்க மாட்டேன்னு சொல்லி உங்க வீட்டிலேயே இருந்துட்டா. உங்க அடைக்கலத்துல பத்திரமா இருந்தா. அப்புறம் நான் பிசினஸ் விஷயமா வரும்போதுதான் இவங்க எனக்குத் தோழியா மாறினாங்க. இப்ப இவங்களைக் கல்யாணம் பண்ணி குழந்தை இருக்கு. நான் இப்ப எந்த ஒரு தப்பும் பண்றது கிடையாது. நான் உண்டு என் வாழ்க்கை உண்டு என்று இருக்கேன். ஆனா நம்ம பழைய காலத்துல செஞ்ச பாவங்கள், இப்ப நம்ம மாறும்போது வந்து துரத்தும்னு சொல்லுவாங்க, அதுதான் போல. அதுவும் நான் செஞ்ச பாவம் என் பொண்ணு மேல காட்டிடுச்சு. இன்னும் என்னால என் பொண்ணு எவ்வளவு கஷ்டப்படப் போறான்னு தெரியல. இதுக்கெல்லாம் என்னால ஒன்னும் பண்ண முடியாது, மன்னிப்பு மட்டும்தான் கேட்க முடியும். அந்த அருகதை கூட எனக்குக் கிடையாது. இருந்தாலும் ஒன்னு சொல்லிக்கிறேன் தம்பி, கடந்து வந்த பாதைனு சொல்லுவாங்க, தயவுசெஞ்சு நீங்க அங்கேயே மாட்டிக்காம அதைக் கடந்து வந்து இப்போ என் பொண்ணோட வாழ்க்கையைப் பாருங்க” என்று கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
அழுது கொண்டிருந்த அஞ்சலியின் கைகளைப் பிடித்து உலுக்கி, “அப்பன்காரன் சீன் போட்டுப் போயிட்டான், இப்ப நீ என்ன பண்றதா இருக்க? உன்னோட குடும்பத்துக்குச் சிம்பதி கிரியேட் பண்றதுக்கு ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாம். எப்படியோ 10 பேரு உனக்குத் துணையா வந்துட்டாங்க. இது எனக்கும் என் பொண்டாட்டிக்கும் நடக்குற விஷயம், என் பொண்டாட்டிய நான் என்ன வேணாலும் பண்ணுவேன். யாரும் சப்போர்ட் பண்றேங்கிற பெயரில் நெருப்பள்ளி கொட்ட வேண்டாம். வா வீட்டுக்கு போலாம்” என்று அவளைப் பிடித்து இழுத்துச் சென்றான்.
இளமாறனுக்குச் சந்தோஷம். மனைவியோடு உல்லாசமாகத் திரிந்தவன் இப்பொழுது மனைவியைப் பிடித்து நாயை அடிக்காத குறையாக அடிக்காமல் இழுத்துச் செல்வது அவருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதைப் பார்த்து அவர் மனைவியும், இதற்காகத்தான் தன் கணவன் திட்டம் போட்டார் போல என்று அவர் முகத்தைப் பார்த்துத் தெரிந்து கொண்டார். “இந்தக் கொடுமைக்கெல்லாம் ஒரு முடிவு வரமாட்டேங்குதே” என்று அந்தப் பெண்மணி இறைவனை வேண்டிக் கொண்டார்.
தான் இருக்கும் மனநிலையில் வண்டி ஓட்ட முடியாது என்பதால், விஜய் தன் மனைவியை வண்டி ஓட்டும்படி சொல்ல, அவளும் அவனது கவனிப்பில் ஏற்கனவே கார் ஓட்டுவதைக் கற்றுக் கொண்டதால் அவளே காரை ஓட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். சற்று நேரத்திற்கு முன்பாகச் சென்றவர்கள், அதுவும் மிகவும் மகிழ்ச்சியாக ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு சென்றவர்கள், இப்போது ஏதோ ஆளுக்கு ஒரு திசையாகப் போவதைப் பார்த்து குடும்பத்தார்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இவனுக்கு மட்டும் ஏழரை சனி முதுகிலேயே ஒட்டிக்கொண்டிருக்கும் போல என நினைத்தார்கள். அஞ்சலிக்கு ஏதோ நடந்திருக்கிறது என்பதை அவள் சிவந்த கண்கள் சொன்னது. அவன் அறைக்குச் சென்ற பிறகு அப்படியே அவளை அணைத்துக் கொண்ட குடும்பத்தார்கள் “என்ன?” என்று கேட்க, அங்கு நடந்த கூத்தைப் பற்றிப் பேச, அனைவரும் தலையில் அடித்துக் கொண்டார்கள்.
“உங்க அப்பாவுக்கு நிறைய தடவை சொல்லிட்டேன் இங்க வர வேண்டாம், முக்கியமா விஜய் ரெஸ்டாரண்ட் பக்கம் வரவே வேண்டாம் அப்படின்னு. ஆனா சொல்லச் சொல்லக் கேட்காம உன்னைப் பார்க்கிறதுக்காக வந்திருக்கிறார் போல. ஒன்னும் புரியல. சரி, அதுக்கு நீ பயந்து ஒதுங்க வேண்டாம். உன்னோட புருஷன் அடிச்சா திருப்பி அடி போ” என்று ஐடியா கொடுத்து அனுப்பிவிட்டார்கள்.
இவளும் கடவுள் விட்ட வழி என்று அமைதியாக உள்ளே சென்றாள். விஜய் உடை மாற்றிக்கொண்டு பால்கனியில் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான். சில நாட்களாக இந்த வழக்கம் இல்லாமல் இருந்தது, மீண்டும் இந்தப் பழக்கத்திற்குச் சென்றுவிட்டான் என்று கவலையோடு அஞ்சலி அறைக்குச் சென்று தன் உடைகளை மாற்றிக் கொண்டு இலகுவான உடை அணிந்து கொண்டாள். அவன் களைத்துப் போட்டிருந்த கபோர்டு (Cupboard) அனைத்தையும் சரி செய்து கொண்டிருக்க, சிகரெட் பிடித்து முடித்துத் தெளிவான மனநிலையில் அறைக்கு வந்து பார்த்தான். அங்கே பாவமாகத் துணிகளை மடித்துக் கொண்டிருக்கும் தன் மனைவியைப் பார்த்தவன், எதுவும் பேசாமல் அவள் முதுகோடு ஒட்டி உட்கார்ந்து அவளைக் கட்டிக்கொண்டு கழுத்தில் முகம் புதைத்தான்.
“நல்லவேளை மனுஷன் நார்மல் மோட் (Normal Mode)-ல இருக்காரு” என்று அவள் மனம் நிம்மதி அடைந்தது. அதன் பிறகு சொல்லவா வேண்டும், மீண்டும் அஞ்சலியுடன் சரசம் செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள, அவளும் கணவன் தேவையைப் பூர்த்தி செய்யும் சிறந்த மனைவியாக அவனுக்குச் சளைத்தவள் இல்லை என்பது போல் அவனோடு கூடி கழிய, இருவரும் கவலையை மறந்து வாழ்ந்த நாட்களில் நிம்மதியாகக் கழித்தனர்.
ஆனால் அவர்கள் நிரந்தரமாகப் பிரிவதற்கு இதோ அடுத்த ஒரு விஷயம் நடக்கப்போகிறது என்பதை இவர்கள் அறியவில்லை…