Home SRIJA NOVELS14) இச்சை ❣️

14) இச்சை ❣️

by sreejanovels
10 views

அத்தியாயம் 14

   
அதிகாலைப் பொழுது அந்த மாளிகையில் ஒரு தெய்வீகமான அமைதியுடன் விடிந்தது. கடந்த சில நாட்களாக நிலவிய மரண பயமும், ரத்த வாடையும் மறைந்து, இன்று அந்த வீடெங்கும் மல்லிகைப் பூக்களின் நறுமணம் கமழ்ந்தது. அக்னியின் ஆணைப்படி, குடும்ப ஜோதிடர் அதிகாலையிலேயே வந்து அமர்ந்திருந்தார்.

“என்ன ஜோதிடரே… நல்ல முகூர்த்தம் எப்ப வருது?” என்று சுந்தரமூர்த்தி ஆவலுடன் கேட்டார். அக்னி தன் காயங்கள் ஆறிய நிலையில், ஒரு பட்டு வேட்டியில் கம்பீரமாக அமர்ந்திருந்தான். அவனது பார்வையில் இன்று குரூரம் இல்லை, மாறாக ஒரு பேரரசன் தனது அரசியைக் கரம்பிடிக்கக் காத்திருக்கும் எதிர்பார்ப்பு இருந்தது.

“ஐயா… அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை காலைல 9 மணியிலிருந்து 10:30 மணிக்குள் ஒரு அற்புதமான முகூர்த்தம் இருக்கு. இந்தத் தாலி கட்டுற நேரத்துல எந்தத் தடையும் வராது,” என்று ஜோதிடர் சொன்னதும், சாவித்திரி அம்மாள் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

“மித்ரா… இங்க வாம்மா!” என்று சாவித்திரி அம்மாள் அழைக்க, சமையலறையிலிருந்து மஞ்சள் நிறப் பட்டுச் சேலையில் தேவதையாய் நடந்து வந்தாள் மித்ரா. அவளது முகத்தில் ஒரு புதிய தேஜஸ் குடிபுகுந்திருந்தது. ஆரியனும் மித்ரனும் அவளது கைகளைப் பிடித்துக்கொண்டு, “அம்மா… இனிமே நீங்க எங்க கூடவே தான் இருப்பீங்கல்ல?” என்று கேட்டபடி கூடவே வந்தனர்.

காலையில் பிள்ளைகளிடம் மித்ரா உங்களோடவே இருக்கலாம் என்றால் உங்க அப்பாவே கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் அவளை நீ உரிமையாக அம்மா என்று அழைக்க வேண்டும் அப்பொழுதுதான் உங்களோடுவே மித்ரா இருப்பாள் என்று சொன்ன பிறகு குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து விட்டனர்.

அக்னி எழுந்து நின்று மித்ராவையே இமைக்காமல் பார்த்தான். “மித்ரா… இந்தத் தாலி உன் கழுத்துல ஏறும்போது, நீ வெறும் அக்னியோட மனைவி மட்டும் இல்ல… இந்தச் சாம்ராஜ்யத்தோட சரிபாதி அதிகாரமும் உனக்கு வந்துடும். இனி உன்னைத் தொடுறதுக்கு முன்னாடி எவனும் நூறு தடவை யோசிக்கணும்,” என்று அக்னி அவளது கையைப் பற்றிக்கொண்டான்.

சுந்தரமூர்த்தி புன்னகையுடன், “நல்லதுப்பா… கல்யாண வேலைகளை உடனே ஆரம்பிங்க. ஆனா அக்னி, ஜெயில்ல இருக்குற ரகுநாத்தும் நடராஜனும் சும்மா இருக்க மாட்டாங்க. அவங்க கண்ணு இப்போ இந்த வீட்டு மேல தான் இருக்கும்,” என்று எச்சரித்தார்.

அக்னி ஒரு குரூரமான புன்னகையை உதிர்த்தான். “அவங்க கண்ணு வேணா இங்க இருக்கலாம் அப்பா… ஆனா அவங்க கை விலங்குல இருக்கு. அவங்களால இனி ஒன்னும் பண்ண முடியாது. விக்ரம் போன அதே இடத்துக்குத் தான் அவங்களும் போயிட்டு இருக்காங்க,” என்றான்.

அந்த வாரம் முழுவதும் மாளிகை விழாக்கோலம் பூண்டிருந்தது. கல்யாண வேலைகள் மும்முரமாக நடந்தன. அக்னி மித்ராவிற்குத் தேவையான அனைத்தையும் அவனது நேரடிப் பார்வையில் வாங்கினான். பட்டுப் புடவைகள் முதல் வைர நகைகள் வரை அனைத்தும் ராஜ மரியாதையுடன் அவளுக்கு வந்து சேர்ந்தன.

சரியாக முகூர்த்த நாள் வந்தது. மாளிகையின் பெரிய ஹால் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. உறவினர்கள் யாரும் அழைக்கப்படவில்லை; அக்னியின் குடும்பம் மற்றும் ஒரு சில முக்கியமான பிசினஸ் பார்ட்னர்கள் மட்டுமே இருந்தனர். கெட்டிமேளம் முழங்க, மந்திரங்கள் ஓத, அக்னி அந்த மங்கல நாணை எடுத்து மித்ராவின் கழுத்தில் கட்டினான்.

மூன்று முடிச்சுகள் போடப்பட்ட அந்த நொடி, மித்ராவின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. ஆரியனும் மித்ரனும், “அம்மா… அப்பா…” என்று கத்தியபடி வந்து அவர்கள் இருவரையும் அணைத்துக்கொண்டனர்.

குழந்தைகளோடு ஒரு போட்டோ சூட் என்று மித்ரா ஒரு போஸ் சொல்ல அனைவரும் அதில் கேட்டது போல் நின்றனர்.

விடியற்காலையின் மென்மையான சூரிய ஒளி மாளிகையின் ஜன்னல் வழியாக உள்ளே புகுந்து, அந்தத் தம்பதிகளின் மீது பட்டது. பட்டு வேட்டி சட்டையில் அக்னி, தனது பலமான தோள்களால் மித்ராவை அணைத்துக்கொண்டு ஜன்னல் ஓரம் நின்றிருந்தான். சிவப்பு நிறக் கூறைப் புடவையில், நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டுடன், கழுத்தில் ஜொலிக்கும் மாங்கல்யத்துடன் மித்ரா அவனது மார்பில் சாய்ந்து கைகளை அவனது இடுப்பில் வளைத்திருந்தாள்.

அந்தச் சூரிய ஒளி அவர்களின் முகத்தில் ஒரு பொன்னிற ஒளியைத் தந்திருந்தது. அக்னி அவளது நெற்றியில் ஒரு ஆழமான முத்தத்தைப் பதிக்க, மித்ரா கண்கள் மூடி அந்தப் பாதுகாப்பை உணர்ந்தாள். கீழே ஆரியனும் மித்ரனும் அவர்கள் இருவரின் கால்களையும் கட்டிக்கொண்டு கேமராவுக்குப் போஸ் கொடுப்பது போலச் சிரித்துக் கொண்டிருந்தனர். அந்த விடியற்காலைக் காட்சி ஒரு ஓவியத்தைப் போலத் தெரிந்தது.

“என்னங்க இவங்க ரெண்டு பேரையும் பார்த்தா பல வருஷம் காதலிச்சு கல்யாணம் பண்ண மாதிரி இருக்கு .ஆனா, இவங்களுக்குள்ள அந்த காதல் எப்படிங்க பழகின கொஞ்ச நாட்களில் கல்யாண வரைக்கும் கொண்டு வந்திருக்கு”.

சுந்தரமூர்த்தி சிரித்துக் கொண்டே,

“சில சமயம் அவசரமா செய்ற விஷயம் நல்லது கூட கொடுக்கும் இதுக்கு முன்னாடி நான் அவசரப்பட்டேன். அக்னியோட வாழ்க்கை நாசம் ஆச்சு. ஆனா இப்ப அப்படி கிடையாது. அதான் அவனுக்கு புடிச்ச மாதிரி ஒரு பொண்ணு வந்து இருக்கா அதனால அவளை விட்டுட கூடாதுன்னு அக்னி முடிவெடுத்து இருக்கான் இனி இது அவன் வாழ்க்கை”.

என்று சொன்னவுடன் சாவித்திரி அம்மாவும் அமைதியாக விட பெரியவர்கள் இருவரும் இளையவர்களை மனதார வாழ்த்தினர்.


அதே நேரம், சிறைச் சாலையின் இருண்ட அறையில் ரகுநாத் தனது மொபைலில் (ரகசியமாக வைத்திருந்தது) அக்னியின் திருமணச் செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கண்கள் ரத்தச் சிவப்பாக மாறின.

“அக்னி… நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா இருப்பேன்னு நினைக்கிறியா? உன் சந்தோஷம் வெறும் ஒரு வாரம்தான். நான் ஜெயில்ல இருந்தாலும், உன்னைச் சிதைக்க வேண்டிய ஆளை நான் அனுப்பிட்டேன். அவன் உன் வீட்டுக்குள்ளேயே தான் இருக்கான்!” என்று ரகுநாத் வன்மத்துடன் சிரித்தான்.

மாளிகையில் அக்னிக்கும் மித்ராவிற்கும் முதலிரவு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ஆனால் அந்த வீட்டின் ஒரு மூலையில் நின்றிருந்த ஒரு வேலைக்காரன், தனது காதுகளில் இருந்த புளூடூத் வழியாக ரகுநாத்திடம் பேசிக்கொண்டிருந்தான்.

“சார்… எல்லாம் ரெடி. அந்தப் பால்ல விஷத்தைக் கலந்துட்டேன். அக்னி குடிச்சாலும் சரி, மித்ரா குடிச்சாலும் சரி… இன்னைக்கு அவங்க மாளிகையில சாவுச் சத்தம் தான் கேட்கும்!”

அக்னியின் சாம்ராஜ்யத்திற்கு மீண்டும் ஒரு பெரும் ஆபத்து அவன் அறியாமலேயே வந்து சேர்ந்தது.


மாளிகை முழுவதும் மல்லிகைப் பூக்களின் வாசம் ஆக்கிரமித்திருந்தது. கல்யாண விருந்து முடிந்து உறவினர்கள் (முக்கியமானவர்கள் மட்டும்) விடைபெற்றனர். சாவித்திரி அம்மாள் முகத்தில் வழிந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. தன் மகன் ஒரு வழியாகத் தன் வாழ்க்கையின் பிடியைக் கண்டுகொண்டான் என்கிற நிம்மதி அவரிடம் இருந்தது.

அக்னியின் அறை வாசலில் மித்ரா கையில் பால் செம்புடனும், தலையில் கனகாம்பரப் பூக்களுடனும் நின்றிருந்தாள். அவளது இதயம் ஒரு சின்னப் பறவையைப் போலத் துடித்துக் கொண்டிருந்தது. மஞ்சள் பட்டுச் சேலையில் அவள் ஒரு தேவதையைப் போல ஜொலித்தாள்.

அறைக்குள் நுழைந்தவளை அக்னி ஆழமாகப் பார்த்தான். அவன் கையில் ஒரு சிறிய கத்தி இருந்தது, அதைக் கொண்டு ஒரு ஆப்பிளைச் செதுக்கிக் கொண்டிருந்தான். மித்ரா உள்ளே வந்து கதவைத் தாளிட்டாள்.

“சார்… பால்,” என்று மெல்லிய குரலில் சொன்னாள்.

அக்னி அவளருகே வந்தான். அவனது கண்கள் அவளது முகத்தில் படர்ந்திருந்த வெட்கத்தை ரசித்தன. “சார் இல்ல மித்ரா… இனி நான் உன் புருஷன். அந்த அதிகாரத்தோட கூப்பிடு,” என்று அவளது இடையைச் சுற்றித் தன் கைகளை வளைத்தான்.

அவன் அவளது கையிலிருந்த அந்தப் பால் செம்பை வாங்கினான். அதை வாய்க்குக் கொண்டு செல்லும் போது, அக்னியின் கழுகு மூக்கு ஏதோ ஒரு வித்தியாசமான மணத்தை உணர்ந்தது. சாதாரணப் பாலில் இருக்கும் ஏலக்காய் வாசனைக்கும் மேலாக, ஒரு மெல்லிய கசப்பு மணம் அவனது நுகர்வுத் திறனை எட்டியது.

அக்னி அந்தச் செம்பைத் தள்ளி வைத்தான். அவனது முகம் சட்டென்று ஒரு வேட்டைக்காரனின் பாவனைக்கு மாறியது.

“மித்ரா… இந்தப் பாலை யார் கொடுத்தது?” என்று கரகரப்பான குரலில் கேட்டான்.

“ஏன் சார்? நம்ம வீட்டுப்  வேலைக்கார மாணிக்கம் அண்ணா தான் கொண்டு வந்து கொடுத்தாரு. ஏன்… என்னாச்சு?” என்று மித்ரா பதற்றத்துடன் கேட்டாள்.

அக்னி பதில் சொல்லாமல், அந்தப் பாலில் ஒரு துளியை எடுத்து அறையில் இருந்த ஒரு சிறிய செடியின் மீது ஊற்றினான். சில நொடிகளிலேயே அந்தச் செடியின் இலைகள் கருகத் தொடங்கின. மித்ரா அதிர்ச்சியில் வாயைப் பொத்திக்கொண்டு பின்வாங்கினாள்.

“விஷம்! சார்… யாரோ நம்மைக் கொல்லப் பார்க்கிறாங்க!” என்று அலறினாள்.

“சத்தம் போடாதே மித்ரா,” என்று அக்னி அவளது வாயைப் பொத்தினான். அவனது கண்கள் ஜன்னல் ஓரம் இருந்த நிழலைத் தேடின. “ரகுநாத் இன்னும் அடங்கலன்னு புரியுது. ஜெயில்ல இருந்துகிட்டே என் வீட்டுச் சோறு சாப்பிடுறவனை வச்சு எனக்குக் குழி பறிக்கிறான்.”

அக்னி மெதுவாகச் சென்று கதவைத் திறந்தான். ஹாலில் மாணிக்கம் யாரோடும் போனில் பேசிக்கொண்டு நழுவ முயன்றான். அக்னி ஒரே பாய்ச்சலில் அவன் மீது விழுந்தான். அவனது சட்டையைப் பிடித்து அப்படியே சுவரோடு சேர்த்துத் தூக்கினான்.

“யாருடா சொன்னது? ரகுநாத்தா? இல்ல விக்ரமா?” என்று அக்னி அவனது கழுத்தை நெரித்தான்.

“ஐயா… மன்னிச்சுடுங்க… என் பொண்ணை அவங்க கடத்தி வச்சிருக்காங்க. நான் செய்யலன்னா அவளைக் கொன்னுடுவேன்னு மிரட்டுனாங்க,” என்று மாணிக்கம் கதறினான்.

அக்னி அவனை உதைத்துத் தள்ளிவிட்டு, தனது பாதுகாப்புக் குழுவை  அழைத்தான். “இவனைத் தூக்கிட்டுப் போங்க. இவன் பொண்ணு எங்க இருக்கான்னு அரை மணி நேரத்துல எனக்குத் தெரியணும். அந்த இடத்துல ரகுநாத்தோட ஆளுங்க எவனாவது இருந்தா… அவனை அங்கேயே முடிச்சுடுங்க!” என்று கட்டளையிட்டான்.

அவன் மீண்டும் அறைக்குள் வந்தான். மித்ரா அழுது கொண்டிருந்தாள். “நமக்கு ஒரு நிம்மதியான விடியலே கிடையாதா சார்? ஏன் எல்லாரும் நம்ம மேல இவ்வளவு வன்மமா இருக்காங்க?”

அக்னி அவளருகே வந்து அவளைத் தூக்கித் தன் மார்போடு அணைத்துக் கொண்டான். “இது அக்னியோட வாழ்க்கை மித்ரா. இங்க நிம்மதிங்கிறது நாம் போராடி வாங்குறது. என் கூட இருக்குற வரைக்கும் உனக்கும், அந்தப் பசங்களுக்கும் ஒரு முடி கூடச் சேதமடையாது,” என்று அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

அவன் அவளது விரலில் இருந்த அந்த வைர மோதிரத்தை வருடினான். “இன்னைக்கு இரவு நமக்குத் தூக்கம் இல்ல மித்ரா. ரகுநாத்துக்கு ஒரு பதிலடி கொடுக்கணும். அவன் ஜெயில்ல இருக்குறது அவனுக்குப் பாதுகாப்புன்னு நினைச்சுட்டு இருக்கான். ஆனா அந்த ஜெயிலே அவனுக்குக் கல்லறையா மாறும்!”

அக்னி தனது போனை எடுத்து யாருக்கோ மெசேஜ் அனுப்பினான். “Project Final Destruction – Start Now.”

அடுத்த நாள் விடியற்காலை…

செய்தித் தாள்களில் ஒரு பெரிய செய்தி வந்தது. “சிறைச் சாலையில் கைதிகளுக்கு இடையே நடந்த மோதலில் ரகுநாத் மற்றும் நடராஜன் படுகாயம். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.”

அக்னி டைனிங் டேபிளில் அமர்ந்து நிதானமாகப் பேப்பர் படித்துக் கொண்டிருந்தான். மித்ரா காபியுடன் வந்து அவனருகே நின்றாள். “இது நீங்க பண்ணதுதானே சார்?” என்று மெதுவாகக் கேட்டாள்.

அக்னி அவளைப் பார்த்து ஒரு குரூரமான, அதே சமயம் காதலான புன்னகையைச் சிந்தினான். “அக்னிக்குத் தீ வைக்க நினைச்சவங்களை, அக்னி தன் பார்வையாலேயே எரிச்சுடுவான். இனி அவங்க எழுந்து வர மாட்டாங்க. இது நம்ம குடும்பத்துக்காக நான் செஞ்ச ஒரு சின்ன சுத்திகரிப்பு.”

ஆரியனும் மித்ரனும் “அம்மா… அப்பா…” என்று ஓடி வந்து அவர்களைக் கட்டிக் கொண்டனர். அந்த மாளிகையில் மீண்டும் சந்தோஷம் துளிர்விட்டது. ஆனால் அக்னிக்குத் தெரியும், பகை என்பது ஒரு தலைமுறைச் சங்கிலி. அதை வேரோடு அறுக்க அவன் இன்னும் பல வேட்டைகளைச் செய்ய வேண்டியிருக்கும்.


You may also like

Leave a Comment

About Me

Featured