
மகேஷ் பேசும் அனைத்தையும் அதிர்ச்சியோடு கேட்டுக் கொண்டிருந்தான் .
பெண் பார்க்க சென்ற போது ஒரு முறை அவளது வதனத்தை கண்டதோடு சரி .
அதன் பிறகு அவளிடம் பேசுவதற்கு பார்ப்பதற்கும் பெரிதும் முயற்சி செய்யவில்லை என்று தான் கூற வேண்டும் . ஜெயா எவ்வளவு கூறியும் அவளிடம் பேசவே இல்லை .
பேசி இருந்தால் கூட ஒரு வேளை இந்த திருமணத்தை நிறுத்தி இருப்பானோ என்னவோ…..
இவர்கள் இருவரும் சேர வேண்டும் என்பதற்காகவே திருமணத்திற்கு முன்பு பேசாத சூழலை கடவுள் ஏற்படுத்திக் கொடுத்தார் போலும் .
அவளும் அவனிடம் பார்ப்பதற்கு பேசுவதற்கும் முயற்சி செய்யவில்லை .
அவனுக்கு ஒருவேளை இந்த திருமணத்தில் அவளுக்கும் விருப்பம் இல்லையோ ..
ஆதலால் தான் தன்னிடம் பேசவில்லையோ என்ற எண்ணம் கூட இல்லாமல் , தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தான் .
“ஆமா மச்சான் நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு பெரிய டிடெக்டிவ் . நீ மட்டும் எங்கேயாச்சும் ஓடனும் னு வச்சுக்க நீ எங்க இருந்தாலும் உன்ன கண்டுபிடிச்சு உனக்கு அந்த பொண்ணு தாலி கட்டிடும் பார்த்துக்கோ….
இதுவரைக்கும் எத்தனையோ கேஸ் எல்லாத்தையும் அசால்டா முடிச்ச பொண்ணு . ஒரு டுபாக்கூர் உன்னை கண்டுபிடிக்க முடியாதா……..”என்றான் மகேஷ் .
மகேஷ் கூறியதைக் கேட்டு அதிர்ந்த சிவா தனது கை முஷ்டியை இறுக்கிக் கொண்டு அவனது மூக்கில் ஒன்று விட்டான் .
“அவ என்ன அவ்ளோ பெரிய ஆளா பாக்குறேன்…..
அப்புறம் என்ன சொன்ன நான் டுபாகூர் ல…
இந்த டுபாக்கூர் என்ன பண்னும் னு அவளுக்கும் உனக்கும் சேர்த்து புரிய வைக்கிறேன்…..
இன்னும் ஆறே மாசத்துல அவளை என்கிட்ட வந்து எனக்கு டிவோஸ் கொடுத்துடுங்கன்னு என் காலுல விழுந்து கெஞ்ச வைக்கிற …. ” என்று திமிரோடு பேசினான் .
முகூர்த்தத்திற்கு நேரம் நெருங்கியதால் மாப்பிள்ளையை ஐயர் அழைத்து வருமாறு கத்திக் கொண்டிருந்தார் .
ஜெயா தான் மாப்பிள்ளையை அழைத்து வருவதற்காக மகேஷ் அவனது அறைக்கு அனுப்பி வைத்தார் …
ஆனால் இங்கு இருவரும் சூழ்நிலை மறந்து பேசிக் கொண்டிருந்தனர் . பொறுத்து பார்த்து அவரே அங்கு வந்தார் .
“டேய் இங்க என்னடா பேசிக்கிட்டு இருக்கீங்க . அங்க மாப்பிள்ளை அழைச்சிட்டு வாங்க மாப்பிள்ளை அழைச்சிட்டு வாங்க னு அந்த ஐயர் கூவிக்கிட்டு இருக்காரு .
டேய் எரும மாடு உன்னை எதுக்காக இங்க கூட்டிட்டு வந்தேன் . இப்ப தான் நீ என்னன்னா அவன் கிட்ட பேசிகிட்டு இருக்கியா….
பேசுற நேரமாடா இது . இன்னும் அரை மணி நேரத்துக்கு அப்புறம் எமகண்டம் ஆரம்பிச்சுரும் …
எமகண்டம் வரதுக்குள்ள உன் கல்யாணம் முடிக்கணும் .
கல்யாணத்தை முடிச்சிட்டு அப்புறமா எவ்வளவு நேரம் வேணாலும் பேசுங்க .
சீக்கிரம் வந்து சேருங்க …. ” என்று கூறிவிட்டு தனது வேலைகளை பார்க்க சென்று விட்டார் .
“டேய் மச்சான் அம்மா சொல்லிட்டு போறத கேட்டியா டா .
இன்னும் அரை மணி நேரத்துல எமகண்டம் ஆரம்பிக்குதாம் . ஆனா உனக்கு எப்பவோ ஆரம்பிச்சிருச்சுடா . சரி சரி முறைக்காம சீக்கிரம் வா அதுக்கப்புறம் எமகண்டம் வந்துறபோது……”என்று கூறிக்கொண்டு மணவறைக்கு அழைத்து சென்றான் மகேஷ் .
மணமகள் அறை
ஷர்வாணி கிட்டத்தட்ட திருமணத்திற்கு தயாராகி தனது இருக்கையில் அமர்ந்திருந்தாள் .
தனக்கு தற்பொழுது இந்த திருமணம் தேவையா என்று கூட அவளது மனம் எண்ணியது .
பெண் பார்த்து சென்று விட்ட பிறகு அவனிடம் எதுவும் பேசவில்லை .
அவனைப் பற்றி எதுவும் தெரியாத பட்சத்தில் தன்னை எப்படி அவனிடத்தில் ஒப்படைப்பது என்ற எண்ண ஓட்டத்தில் உழன்று கொண்டிருந்தாள் அவள்.
இனி தன் உலகம் மட்டுமே அவன் மட்டும் தான் .
எனது இன்பம் துன்பம் அனைத்திலும் பங்கெடுக்கும் ஒரு அந்நிய ஆண்மகன் .
பல வருடங்கள் தனது தாய் தந்தையுடன் தனது வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு யாரோ ஒருவர் இடத்தில் தன்னை முழுவதுமாக ஒப்புவிப்பது என்பது உண்மையிலேயே வருத்தமான ஒரு விடயம் தான் .
ஆரம்பத்தில் அவனிடம் ஏதாவது பேசி இருந்தால் கூட இருவருக்கும் இடையில் ஒரு புரிதல் இருந்திருக்கும் . ஒருவேளை சிவா இவளிடம் பேசி இருந்தாலும் இந்த திருமணம் இந்த அளவிற்கு வந்திருக்காது தான் .
தன் வாழ்வில் எதன் மீதும் ஆசை கொள்ளாதவள் தனது பணியில் சிறப்பாக இருந்தாள் .
அவளது சக ஊழியர்கள் கூட ஷர்வாணியை எண்ணி ஒரு கணம் பொறாமையும் ஆச்சரியமும் அடைந்தனர் தான் .
இவ்வளவு சிறு வயதில் புத்திசாலித்தனமும் எதையும் எதிர்க்கும் தைரியமும் கண்டு….
தனது வேலை தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு ஆபத்து என்று தெரிந்தும் தான் இருக்கும் இடத்தில் தன்னை சுற்றி உள்ளவர்களையும் பாதுகாப்போடு கவனித்து வந்தாள் ஷர்வாணி . சிவாவை அவள் திருமணம் செய்வதற்கான ஒரே காரணம் அவள் தந்தை கோபாலன் தான் .
தந்தை மீது ஷர்வாணிக்கு அளவு கடந்த அன்பும் மரியாதையும் கொட்டி கிடப்பதால் அவர் சொன்ன ஒரு வார்த்தைக்காகவே தனது திருமணத்தையும் செய்து கொள்கிறாள் .
கோபாலன் விசாகம் தம்பதிக்கு ஒரே மகள் தான் ஷர்வாணி . சிறு வயதிலிருந்து மிகுந்த செல்லத்தோடு தனது பெற்றோரால் இளவரசி போல் வளர்க்கப்பட்டவள் .
ஒரு நாள் கூட தனது பெற்றோரை பிரிந்து உற்றார் உறவினர் வீட்டிற்கு கூட சென்றதில்லை .
அப்படி இருக்கையில் இன்று தனது தாய் தந்தையை பிரிந்து வேறொருவனுடன் வாழ வேண்டும் என்பது அவளுக்கு மிகுந்த வேதனையை கொடுத்தது .
அவனைப் பற்றி எதுவும் தெரியாத பட்சத்தில் எவ்வாறு அவனோடு வாழ போகிறோம் என்ற கவலை அவளுள் ஆழமாக இருந்தது .
பெண்ணையும் அழைத்து வருமாறு ஐயர் கூறினார் . கோபாலன் விசாகம் இருவரும் தனது பெண்ணை பார்த்து அகமும் முகமும் மலர்ந்தனர் .
தேவதையாய் தனது தோளில் தூங்கியவள் இன்று இன்னொரு வீட்டிற்கு செல்ல போகிறாள் என்பது அவருக்கு மிகுந்த கவலையை அளித்தது .
என்னதான் திருமணத்தில் பல சடங்குகள் செய்தாலும் ஒரு பெண்ணை இன்னொருவனிடம் தாரை வார்க்கும் ஒரு சடங்கும் செய்யப்படுகிறது தான் .
“பாப்பா இந்த மணப்பெண் அலங்காரத்தில் நீ ரொம்ப அழகா இருக்கடா .
தேவதை மாதிரி இருக்க . இல்ல இல்ல தேவதைக்கே டஃப் கொடுக்கிற மாதிரி இருக்கா…..
நம்ம வீட்ல இருந்தா மாதிரி அங்கேயும் விளையாட்டுத்தனமா எதுவும் பண்ணிட்டு இருக்க கூடாது …
பொறுப்பா நடந்துக்கணும் சரியா .
அப்புறம் நான் நிறைய அட்வைஸ் எல்லாம் பண்ண தேவையில்லை .
உனக்கே எல்லாம் தெரியும் நினைக்கிறேன் …. ” என்று கூறி தனது கண்களை ஒரு கணம் துடைத்துக் கொண்டார் .
“அப்பா எதுக்குப்பா சின்ன புள்ள மாதிரி அழுதுட்டு இருக்கீங்க . நான் எங்கேயும் போகப் போறது இல்ல .
நீங்க என்ன பாக்கணும் னு நெனச்சா அரை மணி நேரத்திலயோ இல்ல ஒரு மணி நேரத்திலயோ உங்க கண்ணு முன்னாடி வந்து நிக்க போறேன்….
இல்ல பாப்பா இது என்னோட ஆனந்த கண்ணீர் என் தேவதைய இந்த கோலத்துல பாத்துட்டன் ல . அதான் ஒரு சந்தோஷத்துல சரி சரி . நம்ம பேசிட்டே இருந்தா பேசிக்கிட்டே இருப்பன் . சீக்கிரம் வா ஐயர் கூட்டிட்டு வர சொல்றாங்க….. ” என்று மணவறைக்கு அழைத்து சென்றார் .
ஐயர் கூறும் ஒவ்வொரு மந்திரங்களையும் சிரத்தையோடு சொல்லிக் கொண்டிருந்தான் சிவா .
அவனுக்கு திருமணம் என்பதிலேயே பெரும் விருப்பமில்லை .
இதில் இந்த ஐயர் வேறு அதை கூறு இதை கூறு என்று அவனை பாடாய் படுத்திவிட்டார் .
அவர் கூறும் அனைத்தையும் மிகுந்த பொறுமையோடு செய்து கொண்டிருந்தான் . அவனது தாய் மற்றும் மகேசையும் பார்த்துக்கொண்டு ஒவ்வொரு விடயத்தையும் மிகுந்த கோபத்தோடு செய்து கொண்டிருந்தான் .
“மச்சான் நீ எங்கள சைட் அடிக்கிறத அப்புறமா வச்சுக்கோ .
இப்போ ஒழுங்கா மந்திரத்தை சொல்லு…” என்று கலாய்த்தான் மகேஷ் .
“டேய் எங்கடா இந்த ஆளு சொல்ற ஒரு ஒரு வார்த்தையும் எனக்கு புதுசு புதுசா இருக்குது .
எனக்கு சொல்றதுக்கே கடுப்பா இருக்கு…” என்று மகேஷ் காதுகளில் படுமாறு பொறுமையாக கூறினான் சிவா .
இவர்களது உரையாடலை தவறாக புரிந்து கொண்ட ஐயர் “மாப்ள சாரே பொண்ணு எங்கேயும் போகமாட்டா .
இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்துருவா .
அதுக்கப்புறம் உங்க பக்கத்திலேயே வச்சு பார்த்துக்கலாம் .
இப்ப பொண்ணு எங்க…
எப்ப வருவாங்க னு கேட்கிறதா விட்டுட்டு ஒழுங்கா மந்திரத்தை சொல்லுங்கோ … “என்று எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் விதமாக கூறினார் .
அடே சட்டி தலையா கல்யாணம் முடியட்டும் உன்னை வச்சிக்கிறேன் என்று தனக்குள் கருவிக்கொண்டு தனது வேலையை செய்தான் .
மகேஷ் மற்றும் ஜெயா இருவரும் ஐயர் பேசியதை கேட்டு சிரிப்பை கொடுத்தாலும் சூழ்நிலை கருதி தங்களுக்குள்ளேயே மௌனமாக சிரித்துக் கொண்டனர் .
ப்ளூ கலர் சாரி அதற்கு தகுந்த ஆபரணங்களின் அலங்காரத்தோடு சிவாவின் அருகில் வந்து சபையை வணங்கி விட்டு அமர்ந்தாள் ஷர்வாணி .
சிவாவும் வந்ததிலிருந்து அவளை பார்க்கவில்லை . ஷர்வாணியும் அதே போல் தான் அவன் பக்கம் திரும்பவே இல்லை .
இருவரும் மாலை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறினார் ஐயர் . சிவா அந்த மாலையை எடுத்து அவள் கழுத்தில் இட்டான் .
ஷர்வாணியும் அவன் கழுத்தில் இட்டவாறு தனது வேலையை தொடர்ந்தாள் .
அங்குள்ள அனைவருக்கும் அகத்தின் பூர்வமாக ஆசீர்வதிக்கப்பட்ட மாங்கல்யத்தை எடுத்து அவளது கழுத்தில் இட்டு தன்னவளாக்கி கொண்டான் .
தனது தோளோடு அணைத்து அவன் நெற்றியில் குங்குமம் வைக்கும் போது அவனுள் ஏதோ மின்சாரம் பாய்வது போன்ற ஒரு உணர்வு .
முதன்முறை ஒரு பெண்ணின் ஸ்பரிசம் அவன் ஆழ்மனதை அலைபாய செய்தது .
இவ்வளவு நேரம் தன் அருகில் அமர்ந்திருந்த பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காத அவன் தற்பொழுது அவளது ஸ்பரிசத்தால் வெகுவாக ஈர்க்கப்பட்டான்
அளவுக்கு அதிகமாக மேக்கப் ஐ விரும்பாதவள் ஷர்வாணி என்பதால் தற்பொழுதும் ஓரளவு மேக்கப் மட்டுமே போதும் என செய்ய சொல்லி இருந்தாள் .
கண்களுக்கு மஸ்காரா . அதன் மேல் வில்லென வளைந்த புருவங்கள் இயற்கையாகவே பார்ப்பதற்கு அடர்த்தியாகவும் கருமையாகவும் இருந்தன . பிறை நுதலில் (நெற்றி) விண்மீன் என அந்த பொட்டு ஜொலித்துக் கொண்டிருந்தது .
கன்னங்களை உரசி கொண்டு அவள் காதோடு கதை பேசிக் கொண்டிருந்தது அந்த கம்மல் . அணு அணுவாய் அவளை ரசித்துக் கொண்டிருந்தன அவனது கண்கள் .
யாரோ அவனை அழைப்பதை உணர்ந்து சுய நினைவுக்கு வந்தான் .
“மாப்ள சாரே வாழ்க்கை முழுக்க உங்க மனைவி உங்க பக்கத்துல தான் இருக்க போறாங்க…..
அதுக்குள்ள ஏன் இப்படி பார்த்துகிட்டே இருக்கீங்க .
போய் ஓம குண்டத்தை சுத்துங்கோ …. ” என்றார் ஐயர் .
அசடு வழிந்தவன் அவளது சுண்டு விரலை பிடித்து அக்னி மூன்று முறை வலம் வந்து தன்னில் பாதியாக்கி கொண்டான் .
ஒரு கணம் தன்னை தானே கடிந்து கொண்டான் . சிறிது நேரத்திற்குள் அவள் அனுமதி இன்றி பார்த்தோமே என்று…..
பாவம் அவன் அறியவில்லை போலும் . அவளது காந்த கண்களில் அவன் மனம் ஏற்கனவே இரும்பென ஈர்க்கப்பட்டு விட்டது என்று .
இங்கு நடக்கும் அனைத்து சடங்குகளிலும் முழு மனதுடன் பங்கெடுக்காமல் பெயருக்கென்று அனைத்தையும் செய்து கொண்டிருந்தாள் ஷர்வாணி .
அவன் ஷர்வாணியை பார்க்கும் பொழுது ஷர்வாணி எதர்ச்சியாக அவன் கண்களை கவனித்து விட்டாள் .
இருவரும் பார்வையும் ஒரே நேர்கோட்டில் பயணித்தன சில நொடிகள் .
அவன் பார்வை பாந்தமாய் அவளின் மனதிற்குள் ஒட்டிக்கொண்டது . சடங்குகள் அனைத்தும் முடிந்து ஒருவாராக மணமக்கள் உணவருந்த அழைத்துச் செல்லப்பட்டனர் .
மணமக்கள் இருவரும் காலையிலிருந்து உணவு எதுவும் அருந்தாததால் இலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த உணவுகளை கண்டு அவர்களது வயிறு கூப்பாடு போட்டது சீக்கிரம் உண்ணுமாறு….
சிவா வேகமாக தனது இலையில் இருந்து ஸ்வீட்டை எடுத்து சாப்பிட சென்றான் .
அவனது கையை திடீரென்று வலிய கரம் ஒன்று பற்றிக்கொண்டது .
– தொடரும்🖤