திருமணத் தேதியும் அதற்கு முந்தைய நாள் நிச்சயதார்த்தத் தேதியும் குறித்துவிட்டுக் கோவிலில் தரிசனத்தை முடித்து, குடும்பத்தார்கள் அனைவரும் அவரவர் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். வீட்டிற்கு வந்தபோது ஜமுனாவின் முகம் ஒரு மாதிரியாகத்தான் இருந்தது.
மாலையில் பள்ளி முடித்து வந்த இசை, தன் தாயாரின் முக வாட்டம் பார்த்து, “என்னம்மா ஆச்சு? ஒரு மாதிரி டல்லா இருக்க? அக்காவுக்கு கல்யாணம் பேச்சுப் பேசப் போனீங்களா? என்ன ஆச்சு? எல்லாம் ஓகே தானே?” என்று அன்புடன் விசாரிக்க, மெதுவாகத் தன் மகளைப் பார்த்த ஜமுனா, மகளின் கன்னத்தை மிகவும் மென்மையாக வருடி, அவள் எதிர்பாராத வண்ணம் ஓங்கி ஒரு அறைவிடச் சுருண்டு கீழே விழுந்தாள் இசை.
அவள் சத்தத்தைக் கேட்டு அறைக்குள் இருந்து அம்பை, மறுபக்கம் மார்த்தாண்டம் மற்றும் விஸ்வநாதன் அனைவரும் கன்னத்தில் கை வைத்து, கலங்கிய முகத்தோடு இருக்கும் இசையைப் பார்த்து அவளிடம் செல்ல, “யாரும் இந்த நாய் கிட்ட நெருங்காதீங்க! சின்னப் பொண்ணு, செல்லப் பொண்ணு அப்படின்னு ரொம்பச் செல்லம் கொடுத்து வளர்த்தீங்களே! எவ்வளவு பெரிய காரியத்தைப் பண்ணி வந்திருக்கா! இவ என் வயித்துல பிறந்தாளான்னு நினைக்கவே அசிங்கமா இருக்கு! உனக்கு எப்படி இவ்வளவு பெரிய விஷயம் பண்ணத் தோணுச்சு? அந்தப் பையன் உனக்கு என்ன பாவம் பண்ணான்?” என்று மொத்தமாகத் திட்டிக்கொண்டிருக்க, யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.
இசக்கிக்குத்தான் சற்றுப் பயமாக இருந்தது. ‘ஏன் அம்மா இவ்வாறு பேசுகிறார்?’ என்று மகளைப் பார்க்கப் பரிதாபமாக இருக்க, விஸ்வநாதன் ஓடி வந்து அவளைத் தன் கை வளைவில் வைத்துக் கொண்டு, “ஜமுனாமா! எதுக்கு இவ்வளவு கோபம்? நம்ம பாப்பா என்ன பண்ணினா? எதுக்காக என்னென்னமோ பேசுற? கோவிலிருந்து வீட்டுக்கு வரும்போது நல்லாத்தானே இருந்த?” என்று மகளுக்காகப் பரிந்துரை செய்ய, ஜமுனா பொறுமையாக மூச்சை இழுத்து விட்டு, “கோவிலுக்குப் போகும்போது நல்லாத்தான் இருந்தது.
நிச்சயம் பேசி வரும்போது நல்லாத்தான் இருந்தது. மாப்பிள்ளை பையனோட தம்பி இருக்கானே, அவன் சோகமா ஒரு கதை சொன்னான் ஞாபகம் இருக்கா? எனக்கு மனசு துடிச்சு, ‘காரணம் இந்த பையன் ஸ்கூல்லதான் நம்ம பொண்ணு வேலை பார்க்கிறதாம்’ அப்படின்னு.
நான் அவனுக்காக அனுதாபப்பட்டு, ‘தம்பி, தம்பி, அந்தப் பொண்ணு யாருன்னு சொல்லுங்க! என் பொண்ணு உங்க ஸ்கூல்லதான் டீச்சர் வேலை பார்க்கிறாள். ஒரு வழியா அந்தப் பொண்ணுகிட்ட பேசிப் பார்க்கலாம்’ அப்படின்னு சொல்ல, அவனும் அந்தப் பொண்ணு பெயரைச் சொன்ன உடனே எனக்குத் தலையில் இடி விழுந்தது! அவனை ஏமாத்துனது வேற யாரும் இல்லை!
உங்க ஆசைப் பொண்ணுதான்! பழகுற வரைக்கும் நல்லா பழகிட்டு, மனுஷன் ஆசையைத் தூண்டி, அதுக்கப்புறம் ‘எங்க வீட்ல சொல்றவரைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்’ அப்படின்னு எல்லாம் பொண்ணுங்க மாதிரியும் பேசிட்டுப் போயிருக்கா! அந்த தம்பிக்கு நம்ம சின்னப் பொண்ணுதான் இசை அப்படின்னு தெரியாது. தெரிஞ்சா எவ்வளவு அவமானம்! நம்ம சம்மந்தி என்ன நினைப்பாங்க?”
என்று தலையில் கை வைத்து கீழே அமர, ‘இசை தான் மாட்டிக்கொண்டோம்’ என்பதை முழுதாகப் புரிந்து கொண்டவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். அவள் மௌனமே உண்மை என்று அறிந்து, குடும்பத்தார்கள் என்னவென்று விசாரிக்க, இசை பொறுமையாக, “நல்ல நண்பரா இருந்தாரு. ரொம்பப் பிடிச்சுப் போச்சு. பழகினோம். ஆனா அடுத்த கட்ட விஷயத்தைப் பேசவே இல்லை.
அவரு முழுசா என்னைக் காதலிக்க ஆரம்பிச்சாரு. ஆனா எனக்கு ஒரே குழப்பம். சொன்ன வாக்கை மீறி விடுவேனோ அப்படின்னு மனசுல ஆசையைப் போட்டுப் புதைத்துக் கொண்டேன். ‘உங்க விருப்பம்தான்’ அப்படின்னு. ஆனா அவரு இப்படி வந்து எல்லார்கிட்டயும் சொல்லுவாருனு நினைச்சுக்கூடப் பார்க்கல. அவருக்கு நீங்கதான் என்னோட அம்மானு தெரியும். வேணும்னே சொல்லி இருக்காரு” என்று கவலையாகச் சொல்ல, பாதித் தவறு இனியன் மீது இருக்கிறது என்றால், மீதித் தவறு இவள் மீது இருக்கிறது. இருவரும் சரிக்குச் சமமாகச் செய்துவிட்டார்கள்.
இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று தர்மசங்கட நிலையில் இருக்க,”சம்மந்தி! நாங்க உள்ள வரலாமா?” என்று குரல் கேட்க, குரல் வந்த திசையைப் பார்க்க, அங்கே மதன், தென்றல், செழியன், இனியன் நால்வரும் நின்று கொண்டிருந்தனர்.வந்தவர்களை ‘வர வேண்டாம்’ என்று எப்படிச் சொல்வது? மூத்த பெண்ணுக்குத் திருமணம் செய்ய நிச்சயம் செய்திருக்கிறோம், ஆனால் இளைய மகள் இசை இப்படி ஒரு காரியத்தால் அவர்கள் முகத்தில் முழிப்பதற்குச் சற்று சங்கடமாகத்தான் இருந்தது இவர்களுக்கு.
மார்த்தாண்டம் பொறுமையாகக் கையாள வேண்டும் என்பதற்காக, “வாங்க சம்மந்தி அம்மா! வாங்க சார்! எல்லாரும் உட்காருங்க!” என்று அவர்களை வரவேற்று உபசரிப்புச் செய்ய, தென்றல் மெதுவாகச் சிரித்துக் கொண்டே, “இசைப் பாப்பாவப் பார்க்கிறதுக்குக் கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி என்னைப் பார்த்த மாதிரி இருந்துச்சு.
நானும் இதே மாதிரிதான் இவர் ஆபீஸ்ல வேலை பார்த்துட்டு இருந்தேன். பணத்துக்காக நான் இவரை விரும்பல. ஆனா எனக்கு இவரைப் பிடிக்கும். இவர் என்னைப் பார்த்தவுடன் காதலிக்க ஆரம்பிச்சுட்டாரு. ஆனால் நான்தான் விஷயத்தை ரொம்பவே இழுத்தடித்தேன். கடைசியில எனக்குப் பயமா இருந்ததால, ‘நமக்குள்ள செட்டாகாது’ அப்படின்னு சொல்லிட்டுப் போயிட்டேன். ஆனால் அவர் விடாமல் என்னைத் துரத்தி, எங்க வீட்டுக்குள்ள வந்து கிரஹணம் பண்ணிட்டாரு. இப்போ என்னோட மகனும் அதே டெக்னிக்தான் ஃபாலோ பண்ணி இருக்கான்.
ஆனா சற்று நூதன முறையில்” என்று சொல்ல, அனைவருக்கும் என்னவென்று சொல்ல முடியாத நிலைதான். அதற்காக அப்படியே விட்டுவிட முடியுமா? மறைமுகமாக ‘எனக்கு இவள்தான் வேண்டும்’ என்று நினைக்கிறான். ஆனால் இவளோ எதையும் வெளிப்படையாகச் சொல்லாமல் அவசரப்பட்டு வேறு ஒரு முடிவெடுத்துவிட, எத்தனை பேருக்குத் தர்மசங்கடம். பிறகு ஒரு வழியாக முடிவுக்கு வந்த குடும்பத்தினர், ஒரே மேடையில் இருவருக்கும் திருமணம் செய்யலாம் என்று முடிவெடுத்துவிட்டனர்.
குடும்ப ஜோசியரை அழைத்து விஷயத்தைச் சொல்ல, தேய் லக்னம் சரியில்லாததால் இரண்டு மாதம் தள்ளிப் போடப்பட்டது திருமணம். அந்த இரண்டு மாத இடைவெளியில் முழுமையாகக் குடும்பத்தார்கள் அனைவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் நன்றாகத் தெரிந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர்.
ஜமுனா அன்றைக்கு அனைவருக்கும் விருந்து சமைக்கத் தயாராகிவிட, அதனால் உதவிக்கு ராதாவை அழைக்க, ராதா மற்றும் விமல் வீட்டிற்கு வர, அதே சமயம் அருண்குமார் சிவகாமி அம்மாவை அழைத்துக்கொண்டு வந்தார்.விமல் அருண்குமாரைப் பார்த்துச் சண்டையை ஆரம்பித்துவிட, வீட்டு வெளியில் தகராறு ஏற்பட்டு, பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்தது. பிறகு சமாதானம் செய்து வீட்டிற்குள் அழைத்து, ராதாவிடம் என்னவென்று கேட்க, “என் வாழ்க்கையை இவ்வளவு நாட்கள் கேள்விக்குறியாக்கின உத்தமசீலன் இந்த அருண்குமார்தான்” என்று விஷயத்தைப் போட்டு உடைக்க, அனைவருக்கும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.
இப்படியா வந்து விழ வேண்டும் தங்கள் தலையில் என்று அனைவருக்கும் ஆகிப்போய்விட்டது.”இந்தாளுக்குத் திமிர் ஜாஸ்திதான்! எங்கம்மாவை ஏமாத்தினான். இப்போ அவங்க அக்கா பசங்க வழியா எங்க அக்கா, தங்கச்சிய ஏமாத்த பார்க்கிறார். இவங்க வீட்டு ஆளுங்களோட காதலை நம்பவே கூடாது. கடைசியில அனாதையாகத் தவிக்க விட்டுப் போயிடுவாங்க.
என்னோட அக்கா, தங்கச்சி இரண்டு பேரையும் இந்த வீட்டுப் பசங்களுக்குக் கட்டிக்கொடுக்க எனக்கு விருப்பமில்லை” என்று சொல்லிவிட்டு விமல் அவன் பாட்டுக்குச் சென்றுவிட,”அவன் சின்னப் பையன், தெரியாம ஏதோ பேசி இருந்தால் மன்னிச்சிடுங்க. நம்ம கல்யாணப் பேச்சு ஆரம்பிக்கலாம். எனக்குத் தெரிந்து மதன் மற்றும் தென்றல் இருவரும் அவங்க பசங்களைச் சுயநலமா இல்லாம நல்ல முறையில் பிள்ளைகளை வளர்த்து வச்சிருப்பாங்க.
ஒருத்தர் வாழ்க்கையை நல்லா இருக்குன்னு இன்னொருத்தர் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்க மாட்டாங்க. சில பெத்தவங்கதான் இந்த மாதிரி வேலை எல்லாம் பண்ணுவாங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு. என்னோட ரெண்டு பொண்ணுங்களையும் இந்தப் பசங்க நல்லா பாத்துக்குவாங்க” என்று ராதா தன்மையாகப் பதில் அளிக்க, ஆனால் அவர் பேச்சில் உள்ள அர்த்தத்தை அருண் மற்றும் அருணின் தாயார் சிவகாமி பாட்டி நன்றாகப் புரிந்து கொண்டனர். மாப்பிள்ளை கேட்டதால் உடனடியாக மகனின் விருப்பத்தைக் கேட்காமல் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதால், மகனின் திருமண வாழ்க்கை எவ்வளவு பெரிய தோல்வியைச் சந்தித்தது என்று இப்பொழுது உணர்வு வந்து வருத்தப்படுகிறார்.
பிறகு ஒரு வகையாக இரண்டு மாதம் கழித்து வரப்போகும் நல்ல முகூர்த்தத்தில் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடிவு எடுத்தனர்.இனியன் இவ்வாறு செய்வான் என்று இசை நினைத்துப் பார்க்கவில்லை. ‘அமைதியாகப் போ’ என்று அவன் சொன்ன அர்த்தத்தின் பிரதிபலன் இவ்வாறு இருக்கும் என்று அவள் நினைத்திருந்தால் சற்று ஜாக்கிரதையாக இருந்திருக்கலாம் என்று நினைக்க, இனி நினைத்து என்ன பயன்?
என்று வந்து, கோபத்தில் இன்னும் கான்ட்ராக்ட் போடாததால், பள்ளிக்கூடத்தில் இருந்து தன்னுடைய வேலையை நிறுத்தி ராஜினாமா செய்துவிட, இதை நினைத்ததுதான் என்று இனியனும் எதுவும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டான். இங்கே அம்பையும் செழியனும் காதல் புறாக்களாக மேலும் மேலும் வானில் உயரப் பறந்து கொண்டிருந்தனர். திருமண நாளுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.
__________________________________________
“இடியட்! எப்படி நம்ம விஷயம் உங்க வீட்டு ஆளுங்களுக்குத் தெரிந்தது? எத்தனை வருஷம் தெரியாம ரகசியமாப் பார்த்து வச்சிக்கிட்ட விஷயங்கள் எல்லாம் தெரிஞ்சு போச்சு! அது உன் புருஷனுக்கு, அந்தப் பசங்களுக்குக் கெட்டப் பெயர் வர வைக்கத்தான் நான் ஆட்களை அனுப்பினேன். கொலை பண்ணக்கூடப் பார்த்தேன்.
ஆனா அதுவும் சொதப்பல் ஆயிடுச்சு…இது போதாது என்று, உன்னோட மகள் என்னடான்னா பெயர் தெரியாத ஒருவனால் பிள்ளையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறாள்! அவளை வைத்து எவ்வளவு பெரிய திட்டத்தைப் போட்டு வைத்தோம்! வெளிநாட்டில் மிகப்பெரிய பணக்காரரான டேவிட், அவர் மகனுக்கு உன் மகளைப் பிடித்து, பல கோடிகளை நமக்கு அள்ளித் தருவதாகச் சொன்னார்.
நீ அதற்காகத்தானே அவளைப் பார்த்துப் பார்த்து வளர்த்தாய்? அவளை விற்கப்போகும் சமயத்தில் இப்படிச் செய்து சொதப்பி விட்டோமே!” என்று சீனிவாசனின் மனம் அதை நினைத்துக் குமுற, பெற்ற மகளையே விற்கத் துணிந்த தாயாக இருந்தாலும், பணம் கண்ணை மறைத்தது. உடல் சுகம் மூளையில் தாண்டவமாட, கௌதமி மொத்தமாக மதி இழந்து தவறான பாதைக்குள் பயணித்துக் கொண்டிருந்தார்.”டார்லிங்! இன்னொரு விஷயம் தெரியுமா? என்ன வீட்டை விட்டுத் துரத்திட்டாங்க.
இனி நான் இங்கதான் இருக்கப் போறேன்” என்று கவலையாகச் சொல்வதுபோல் சொல்லி, சீனிவாசன் நெஞ்சை நீவிவிட, ஆண்டுகள் போனாலும் இவள் மீதும் இருக்கும் மோகம் மட்டும் தீரவில்லையே என்று நினைத்து இருவரும் தங்கள் வேலையைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டனர்.
“டார்லிங்! பல கோடி ரூபாய் டீலிங் என் பொண்ணு மட்டும் இல்லை! இந்தப் பசங்க விரும்புகிறார்களே அந்தப் பொண்ணுங்க கூடப் பார்க்க ரொம்ப அழகா இருப்பாங்க. அவங்களையும் நல்ல ரேட்டுக்கு விட்டுட்டா என்ன? கொள்ளை லாபம் பார்க்கலாம் தானே?” என்று மோக உச்சியில் கூடப் பணத்தை விடாமல், மற்றப் பெண்களை விற்று லாபமாக்கும் சிந்தனை வர,
“சூப்பர் ஐடியா! இதைத்தான் மறந்து போயிட்டேனே! சரி! நல்ல கரெக்டான சமயம் பார்த்து அந்தப் பொண்ணுங்களை வியாபாரம் பண்ண வேண்டியதுதான். இதைப்பத்தி டேவிட்டுக்கிட்ட நானே டீலிங் பேசுறேன்” என்று இருவரும் கட்டில் யுத்தத்தோடு பெண்களை விற்கும் திட்டத்தையும் போட்டு வைத்தனர்.
_____________________________________________
நாட்கள் அதன் போக்கில் சென்றது. ஐந்து மாதக் குழந்தையை வயிற்றில் சுமந்து, ஊரார் ஏச்சுப் பேச்சுக்களுக்கு ஆளாகிக் கொண்டிருந்தாள் யோகிதா. ராம் எவ்வளவு கெஞ்சியும் பார்த்தும், அவள் ஏற்பதாக இல்லை. இவனைப் பற்றி வீட்டாருக்குச் சொல்லும் மனநிலையில் கூட அவள் இல்லை. இதற்கிடையில் திருமண நாளும் வந்து சேர்ந்தது.அதே சமயம் இனியன், செழியன், ராம் மூவரும் ஒன்றுகூடி ஒரு திட்டத்தைத் தீட்டி வைத்தனர்.