அத்தியாயம் 10
நாட்கள் அதன் போக்கில் சென்றது.புதிய கம்பெனி டீலிங் இருப்பதால், அதிகபட்சம் செழியன் ஹெட் ஆஃபீஸ் பணியை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதால், இங்கே அவனது ஆருயிர் காதலியைச் சந்திக்க முடியவில்லை.
இதையே தவறான கண்ணோட்டத்தில்,’அவருக்கு என்கிட்ட இருந்து தேவையானது கிடைச்சிடுச்சு. அதான் இப்ப என்னைக் கண்டுக்கறது இல்லை. நல்ல வேலை, மாத்திரை போட்டுட்டேன். இல்லைனா வயித்துல குழந்தையை வாங்கிட்டு நான் அனாதையா நிக்கணுமா? என்ன நம்பிதானே என்னோட அப்பா அம்மா, என்னுடைய குடும்பம் இருக்கு? முட்டாள்தனமான காரியம் பண்ணப் பார்த்தேன்.
நல்ல வேலை, பிரச்சனை அதிகமாகவில்லை. இதோட அவன் தொல்லை விட்டா போதும்,’ என்று நடந்தது ஒரு விபத்தாகக் கருதி, தன் வேலைகளை கவனிக்கப் பார்த்தாள்.இங்கு இனியன் அடிக்கடி பெண்பிள்ளையைத் தொல்லை செய்யக்கூடாது; தாமாகவே சந்திப்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால், இசைப் பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்குப் போட்டி என்று அறிவிக்க, அதற்குத் தலைமைப் பொறுப்பு இன்னிசை மற்றும் வேறொரு ஆசிரியருக்கு இருக்க, அடிக்கடி இனியன் அவர்களைச் சந்திக்க நேரமிருந்தது.
இப்படியே பேசிப் பேசி இருவரும் மொபைலில் நண்பர்களாகப் பேசும் அளவிற்கு வந்துவிட்டார்கள். ஆனால் ஒரு அளவிற்குத்தான். காலை குட் மார்னிங், இரவு குட் நைட். அதற்கு நடுவில் ‘சாப்பிட்டீங்களா?’ என்று. அதற்கு மேற்பட்டு உரையாடல் பெரிதுபடுத்தவில்லை இருவரும்.இங்கே ராம் தன் மன்மத லீலையைத் தொடர்ந்திருந்தான். ரகசியமாக, யாருக்கும் தெரியாத வண்ணம்.
அதே சமயம், யோகிதாவோ அவன் குணம் பற்றித் தெரியாமல், இயல்பாக அவனோடு ஒன்றிப் பழக ஆரம்பித்தாள். இதுவரை வெளி ஆட்களிடம் பழகாத பேதை, அவனின் மாயப் பேச்சுகளில் கொஞ்சம் கொஞ்சமாகக் கிழுந்து, இரவு 12 மணிக்குப் ‘கடலை போடும்’ அளவிற்கு வளர்ந்திருக்கிறது இவர்களது நட்பைத் தாண்டிய உறவு.
மூன்று ஜோடிகள் ஒவ்வொரு நிலைகளில் இருக்க,இங்கே செழியன் அலுவலகத்தில் வந்த கருப்பாடு என்கிற காயத்ரி, அவனை ஏதாவது விதத்தில் அவமானப்படுத்தலாம் என்று முயற்சி செய்து பார்க்க, சுத்தமாக வழி வகுக்கவில்லை. வாங்கிய பணத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று, இருக்கும் நிலைமை மட்டும் தகவல்களாக சீனிவாசனுக்குத் தெரிவித்துவிடுவாள்.
அதே சமயம், இனியன் பள்ளியில் இருக்கும் சந்தியா என்கிற ஆசிரியர்,”சார், என்னால அவன் கிட்ட நெருங்க கூட முடியல. ஏதாவது ஒரு வேலை பண்ணலாம்னு பார்த்தா சுத்தமா தனியா மாட்ட மாட்டேங்குறாரு.
இது போதாதுன்னு என்கூட வந்து புது டீச்சர், அப்புறம் இன்னொரு டீச்சர் கூட சேர்ந்து மியூசிக் காம்பெட்டிஷனுக்காக பிரிபரேஷன் பண்ணிட்டு இருக்காங்க. அவங்க இருக்கிற பக்கம் போக கூட முடியல,” என்று சந்தியா குறைபாடு சொல்ல,”நீ சொன்னியே, அவன் கூட ஒரு பொண்ணு டீச்சர் இருக்கா அப்படின்னு? பேசாம ரெண்டு பேரையும் கோர்த்து விட்டுடு.
இன்னொரு டீச்சர் இல்லாத சமயம், இவங்க ரெண்டு பேரையும் எல்லார் முன்னாடி நிக்க வச்சு அவமானப்படுத்தற மாதிரி திட்டம் இருந்தா, உடனே செயல்படுத்தப் பாரு,” என்று தகவலை மட்டும் சொல்லிவிட்டு மொபைலைக் கட் செய்துவிட, சந்தியாவுக்குச் சலிப்புத் தட்டியது.”எப்படி? எப்படி இவங்க ரெண்டு பேரையும் கோர்த்துவிட்டு, கெட்ட பேர் வாங்கினால் மானம் போயிடக் கூடாதுன்னு அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா? இவ்வளவு பெரிய பணக்காரன் என் வலையில விழ வைக்காமல் விடமாட்டேன்.
எப்படியாவது முயற்சி பண்ணி இந்த ஒரு மாசத்துக்குள்ள இந்த இனியன் எனக்குப் புருஷனா, இந்த ஸ்கூலுக்கு முதலாளி நானா இருக்கணும்,” என்று மிகப்பெரிய மனக்கோட்டையைக் கட்டி முடித்து வலம் வந்து கொண்டிருந்தாள்._________
ப்ரீ கேஜி பிள்ளைகளுக்கான பாட வகுப்பு முடிந்ததால், சற்று ஓய்வு நேரத்தில் இளைப்பாறலாம் என்று யோகிதா தனது மேசையில் சற்றுத் தலை சாய்ந்து உறங்கிக் கொண்டிருக்க, ராம் தனக்கான வகுப்பு நேரம் முடிந்து ஓய்வு அறைக்குள் வர, யோகிதா உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவளிடம் சென்று,”என்ன யோகி, ரொம்ப டயர்டா இருக்க போல?” என்று இயல்பாகக் கேட்டு அவள் அருகில் வந்து அமர,”ஆமாம் ராம், ரொம்பத் தலைவலி.
சுத்தமா முடியல. இன்னைக்கு ரெண்டு பசங்க சண்டை போட்டு, ரெண்டும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி ஒரு வழி பண்ணிட்டாங்க. அவங்களைச் சமாதானப்படுத்தி வருவதற்குள் போதும் போதும் ஆகிவிட்டது,”
என்று பெருமூச்சு விட்டுச் சொல்ல,”ஹா ஹா, சின்ன பசங்க என்றால் அப்படித்தான் இருப்பாங்க. நாளைக்கு உனக்கே ஒரு குழந்தை பிறந்தால் இதைவிட டபுள் வேலைகள் இருக்கும். சரி விடு. உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லலாம் என்று வந்தேன்,” என்று சற்று அடிக் குரலில் சொல்ல, யோகிதா மனதில் பட்டாம்பூச்சி பறந்தது.
ஒருவேளை மனதில் இருக்கும் காதலைச் சொல்லப் போகிறானா என்று. ஏற்கனவே அவன் பக்கம் சாய்ந்த மனதை எப்படி நிலைப்படுத்திக் கொள்ளலாம் என்று, அவனிடம் தன் விருப்பத்தை எப்படிச் சொல்லலாம் என்று காத்துக் கொண்டிருந்த அவளுக்கு, இதோ அவன் அடித்தளம் போட, எப்படி வேண்டாம் என்று சொல்லுவாள்? ஆனால் அவன் எதற்கு அடி போடுகிறான் என்று தெரியாமல் பேதைப் பெண்ணோ,
“சொல்லுங்க ராம். என்கிட்ட என்ன சொல்லத் தயக்கம்?” என்று கேட்க, அவன் மன்மதச் சிரிப்போடு,”சண்டே ஃப்ரீயா இருந்தா, என்கூட ஒரு டிரைவ் வா. அப்படியே ரெஸ்டாரன்ட் போயிட்டு, ஈவினிங் குள்ள வீட்டுக்கு வந்துடலாம். கொஞ்சம் பர்சனலா உன்கிட்ட பேச வேண்டியது இருக்கு,” என்று ஒரு விதக் குரலில் கேட்க, அவளோ அதை காதல் என்று நினைத்துக் கொண்டு வெட்கத்தோடு,”
சரி. நானும் சில விஷயங்கள் உங்ககிட்ட கேட்கணும்னு நினைச்சேன். ஓகே, சண்டே மார்னிங் நான் சொல்ற லொகேஷனுக்கு வாங்க. நம்ம ரெண்டு பேரும் கிளம்பலாம்,” என்று அவள் உடனடி சம்மதத்தை எதிர்பாராதவன், அதிர்ச்சியாக விழி பிரித்து அவளைப் பார்க்க,”என்ன ராம், அப்படிப் பார்க்குறீங்க? இது கூடப் புரிஞ்சுக்கலனா எப்படி?? சரி, சண்டே உங்களுக்காக வெயிட் பண்றேன்.
அன்னைக்குச் சந்திக்கலாம்,” என்று சொல்லி மீண்டும் ஓய்வெடுக்கச் செல்ல, அவனும் ஒரு நக்கல் சிரிப்போடு,”இந்தியால கூடப் பொண்ணுங்க இதுக்கு ரெடியாதான் இருக்காங்க. ஆரம்பத்துல நம்பல. இதோ ஈசியா வழிக்கு வந்துட்டா. இவளை ஒரு நாள் அனுபவிச்சா பத்தாது. என்ன பண்றது,”
என்று ஏக்கப் பெருமூச்சுவிட்டு, தன் வேலைகளைக் கவனிக்கச் சென்றான். அவன் புரிதல் வேறு, இவள் புரிதல் வேறு. இருவரும் அன்று நடக்கும் சம்பவத்திற்கு எப்படிப் பொறுப்பேற்கப் போகிறார்களோ!அருண்குமார் தனது அலுவலகத்தில் தன் முக்கியமான கிளைன்ட்டிடம் பேசிக்கொண்டு, அதை வெற்றிகரமாக முடித்துவிட்டு, மற்ற அலுவல் விஷயங்களை பேசிக் கொண்டிருக்கும் போது,
“மிஸ்டர் அருண், இன்னிக்கு நைட் டின்னர் கண்டிப்பா நீங்க என் கூட ஒரு ரெஸ்டாரண்டுக்கு வரணும். ரொம்ப சூப்பரா இருக்கும் அந்த ரெஸ்டாரன்ட். மெயின்டைன் பண்றது ஒரு சிங்கிள் லேடி தான். ரொம்ப சூப்பரா பண்ணிட்டு இருக்காங்க.
இப்ப பக்கத்துல ஸ்வீட் அண்ட் ஸ்நாக்ஸ்க்குத் தனி இடம் ஓபன் பண்ணப் போறாங்க,” என்று சிலாகித்துக் கூற,”என்ன சார், ஒரு சாதா ரெஸ்டாரண்டுக்கு இவ்வளவு புகழ்ச்சி?” என்று அருண் சிரிப்பால் கேட்க,”அட, நம்ம இவ்ளோ கஷ்டப்பட்டு உழைக்கிறது சாப்பாடுதான். வெளி இடத்துல சாப்பிட்டால் உடம்பு கெட்டுப்போகும்னு சொல்றாங்க. சில பல ஹோட்டல்ல மட்டும்தான் வீட்டுச் சாப்பாடு மாதிரி கிடைக்கும்.
அதுவும் எவ்வளவு பெரிய ஹோட்டல்ல நல்ல சாப்பாடு, ரேட் கூட ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இருக்கிறது அதிசயம் இல்லையா? அதான் உங்களை அழைச்சிட்டுப் போகலாம்னு இருக்கேன். எப்பப் பார்த்தாலும் பெரிய பெரிய ரெஸ்டாரண்டுக்கு போய் காசு வேஸ்ட் பண்றதுக்கு பதிலா, திருப்தியா சாப்பிட்டுச் சந்தோஷமா இருக்கலாம்,” என்று பொறுமையாக அவர் ரெஸ்டாரன்ட் புகழ் பாடிக்கொண்டே இருக்க,
“சரி, சரி. நீங்க இவ்வளவு சொல்றீங்க. அதுக்காகவே கிளம்பலாம். இன்னும் கொஞ்சம் டீலிங் ஃபைல் கரெக்ஷன் இருக்கு. அத முடிஞ்சதுக்கு அப்புறம் நம்ம ரெண்டு பேரும் கிளம்பலாம். என்ன, ஓகேவா?” என்று அனுமதி கேட்டவுடன், கடகடவென்று அலுவல் வேலைகளை முடித்துவிட்டு இருவரும் அந்த ரெஸ்டாரன்ட் நோக்கிச் சென்றனர்.
RV RESTAURANT என்று பெயர் பலகை தாங்கி கம்பீரமாக இருந்தது. சாதாரண ரெஸ்டாரன்ட் தான். ஆனால் வெளியில் இருந்து பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருந்தது. உள்ளே சென்று இருவருக்கும் தேவையான உணவை ஆர்டர் செய்ய, இருவரும் மகிழ்ச்சியாக உண்டு முடித்தனர்.
சாதாரணமாகத்தான் இருக்கும் என்று நினைத்த அருண், உணவைச் சாப்பிட்ட பிறகு அதன் ருசியின் மெய்மறந்து போய்விட்டார். மேலும் மேலும் ஆர்டர் செய்து இருவரும் திருப்தியாக உண்டு முடித்தனர்.அங்கே வலம் வந்து கொண்டிருக்கும் சூப்பர்வைசரை அழைத்து,”உங்க ரெஸ்டாரன்ட் ஓனர் இப்போ இருக்காங்களா? நாங்க அவங்களைப் பாக்கணும்,” என்று தங்களை அறிமுகம் செய்து கேட்க,”தாராளமா சார்.
இதோ ஆஃபீஸ் ரூம்லதான் இருக்காங்க. என் கூட வாங்க,” என்று அழைத்துச் சென்று, முதலில் அலுவலக அறைக்குள் நுழைந்து, முதலாளியிடம் அனுமதி கேட்டு, இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றான். அவர்களைப் பார்த்து மரியாதை நிமித்தமாக எழுந்து நிற்க, அதில் அருணைப் பார்த்து அதிர்ந்து நின்றார் இந்த ரெஸ்டாரன்ட் முதலாளி ராதா.”சார், இவங்க ராதா மேடம், எங்க ரெஸ்டாரன்ட் ஓனர்,”
என்று சூப்பர்வைசர் அறிமுகம் செய்து முடித்து, அனுமதி கேட்டு வெளியே சென்றுவிட,இயல்பு நிலைக்குத் திரும்பி வந்த ராதா, அருணை ஒரு நக்கல் பார்வையோடு அருகில் இருக்கும் நபருக்காக மரியாதை நிமித்தமாக இருவரையும் பார்த்து,”வாங்க சார், உட்காருங்க,” என்று இருவரையும் அமர வைத்து, என்னவென்று கேட்க,”நான் சுனில் சௌத்ரி, பாம்பே சுனில் ஸ்வீட் அண்ட் ஸ்நாக்ஸ் ஓனர்.
சென்னைக்கு வந்தால் நான் மிஸ் பண்ணாத இருக்கிற ஒரே விஷயம் உங்க ரெஸ்டாரன்ட்ல ஒரு வேளை சாப்பிடுவதுதான். ரொம்ப வருஷமா நடத்திட்டு இருக்கீங்க. உங்க கடின உழைப்பு இதோ தலை தூக்கி கம்பீரமா நிக்குது. நான் உங்களை ஒருநாள் சந்திச்சுப் பேசணும்னு நினைத்தேன். கூட என்னோட நண்பரையும் அழைத்து வரலாம்னு நினைத்தேன்.
இதோ அதற்கான சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது. இவர் என்னுடைய நண்பர் அருண்குமார், யோகி கார்மெண்ட்ஸ் ஓனர். அவர் மகளோட பெயர்ல ஆரம்பிச்சிருக்காரு,” என்று சொல்லி முடிக்க, இறுதி வாக்கியம் அருண் மற்றும் ராதா இருவரையும் தாக்கியது.”ரொம்ப சந்தோஷம் சார்,” என்று ராதா மெல்லிய புன்னகையோடு சுனிலுக்கு நன்றி தெரிவிக்க,”நம்ம பேச்சு வாக்கு, நன்றியில மட்டும் முடிக்கக் கூடாது. நல்ல நட்புக் கரமும் இருக்கணும்.
என்னதான் எனக்கு பாம்பே, கல்கட்டா, டெல்லி, நார்த் சைடு ஃபுல்லா ஃபுட் ப்ரோடுக்ட்ஸ் இருந்தாலும், இன்னொரு பக்கம் நான் கார்மெண்ட் வேலைல பிஸியா இருக்கேன். அதனால என்னோட ஃபுட் டிபார்ட்மெண்ட்டைச் சென்னைக்கு ஷிப் பண்றதுக்கு ஒரு நல்ல ரெஸ்பான்சிபிலான பர்சன் எனக்கு தேவைப்படுறாங்க. யாரையும் தேடறதுக்கு, இதோ ஒரே ஒரு ரெஸ்டாரன்ட் இந்த அளவுக்கு டெவலப்மெண்ட் கொண்டு வந்த உங்களை அந்த ரெஸ்பான்சிபில் பர்சனாப் போடுறதுக்கு எனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை. நீங்க சம்மதித்தால், சென்னையில் இருக்கிற சுனில் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ்க்கு நீங்க ஹெட் ரெஸ்பான்சிபில் பர்சனா இருக்கலாம் என்று முடிவு பண்ணலாம்,”
என்று சொல்லி முடிக்க, இது ராதாவுக்குப் பெருத்த மகிழ்ச்சி.”என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க? உங்க ரெஸ்டாரன்ட் பத்தி எனக்குத் தெரியாதா? நார்த் சைடு ஃபுல்லா ரொம்ப ஃபேமஸான உங்களோட பிசினஸ்.
சவுத்துல, அதுவும் சென்னையில எனக்கு அதுக்கான தலைமைப் பொறுப்பு கொடுக்கும் போது, நான் எப்படித் தட்டிக் கழிக்க முடியும்? நான் நல்லபடியா நடத்திக் காட்டுவேன்,” என்று ராதா கம்பீரமாகச் சொல்லி முடிக்க, மகிழ்ச்சி அடைந்த சுனில், பொதுப்படையான விஷயங்களும் தன் குடும்பத்தைப் பற்றியும் சொல்லி முடிக்க,”ரொம்ப நல்ல விஷயம் சுனில் சார். ஒரு நாள் உங்க குடும்பத்தோட நம்ம ரெஸ்டாரண்டுக்கு வரணும்,”
என்று சொல்லிச் சிரிக்க,”அப்புறம் ராதா, உங்க ஃபேமிலி மெம்பர்ஸ் பத்தி எதுவும் சொல்லவே இல்லையே?” என்று சுனில் கேட்டதற்கு, ராதா பதில் சொல்லத் தயாராக இருக்க, அருண், ராதாவையே வெறுமனே பார்த்துக்கொண்டு, அவர் சொல்லப்போகும் விஷயத்திற்காக காத்துக் கொண்டிருந்தார்.”என்னைப் பற்றி சொல்றதுக்கு என்ன இருக்கு சார்? பாதிப் பேருக்குத் தெரியும்.
சின்ன வயசுல சில பல விஷயங்களைப் பார்த்து நாம தடுமாறுவோம். அந்த மாதிரிதான் வாழ்க்கையில் நான் பெரிய விஷயத்துக்குத் தடுமாறி, ரொம்ப மோசமான நிலையிலிருந்து என்னோட அப்பா, பெரியப்பா, அக்கா, மாமா அவங்கதான் எனக்கு இருக்கிற சொந்தமே. அவங்கதான் என்னைப் பழைய நிலைமைக்குக் கொண்டு வந்தாங்க. அப்படி இல்லைன்னா நானும் என்னோட மகனும் இந்நேரம் உயிரோடவே இருந்திருக்க மாட்டோம். அப்புறம் எங்க அப்பா, எங்க சாதாரண டிபன் சென்டர் தான் வைத்திருந்தார்.
நான் எங்க அப்பா கூட முழுசா பிசினஸ்ல இறங்கிட்டேன். லோன் வாங்கி கொஞ்சம் சின்ன ஹோட்டல் ஆரம்பிக்க, அது நல்லா பிக்கப் ஆச்சு. கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஏமாற்றப்பட்ட பெண்கள், வேலைக்கு ரொம்பக் கஷ்டப்படுறவங்களை நான் என்னோட ஹோட்டல்ல வேலைக்கு வச்சிருக்கேன்.
கடவுள் எனக்கு ஒரு விஷயத்துல துரோகம் பண்ணாலும், இந்த விஷயத்துல கைவிடல. எனக்குக் கிடைத்த நபர்கள் ரொம்ப நம்பிக்கையான, விசுவாசமான நபர்கள். அதனால்தான் என்னுடைய சின்ன ஹோட்டல் இப்போ இந்த அளவுக்கு நல்ல ரெஸ்டாரன்ட்டா வந்திருக்கு. இப்ப நான் அடுத்த கட்ட முயற்சியா வெட்டிங் கேட்டரிங், தனியா ஸ்நாக்ஸ் சென்டர், ஸ்வீட் சென்டர் எல்லாம் ஓபன் பண்ணலாம்னு இருக்கேன்.
எல்லாம் சக்ஸஸ்புல்லா நடந்து முடிஞ்சி, திறப்பு விழாவுக்கு நீங்க தான் சீஃப் கெஸ்ட்,” என்று சொல்லி முடிக்க, சுனில் குமார் அவர் விவரங்களைக் கேட்டு முடித்து,”இவ்வளவு பேர் சொன்னிங்க, உங்க கணவரைப் பற்றி எதுவும் சொல்லலையே. நீங்க சிங்கிளா?” வெளிப்படையாகவே கேட்டுவிட, ராதா மெல்லிய சிரிப்போடு,”நான் ஆரம்பத்தில் இருந்தே சிங்கிள்தான். புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.
என் வாழ்க்கையில் மிகப்பெரிய அடியே என்னோட காதல் தான். காதலை நம்பி ஏமாந்து, வயிற்றில் குழந்தை வாங்கிய பெண்களில் நானும் ஒருத்தி. வாழ்க்கை வெறுத்துப் போற நிலைமையில் இருந்தேன். ஆனா என்னோட குடும்ப நபர்கள் என்னைப் புரிஞ்சுகிட்டாங்க. தப்பு பாதி என் பெயரில் இருந்தாலும், முழுப் பொறுப்பு அதுக்கு நான் காரணம் இல்லையே. எல்லாரும் எனக்கு சப்போர்ட்டா இருந்தாங்க. அதனால எனக்கு அந்த விஷயம் காற்றில் கரைந்த தூசியாகப் போய்விட்டது.
இப்ப என்னோட அப்பா இல்லை. எனக்குத் துணை என்னோட மகன். எம்.பி.ஏ படிக்கிறான். படிப்பு முடிஞ்ச உடனே அவனும் இதே ரெஸ்டாரன்ட் பொறுப்பை ஏற்றுக்கொள்ளப் போறான். அப்புறம் என்னோட பெரியப்பா குடும்பம் இருக்காங்க.
என்னோட சின்ன குடும்பம், என்னோட ரெஸ்டாரன்ட், என்னோட மகன், இதுதான் என்னோட உலகம். இதைத் தவிர்த்து வேறு எதுவும் கிடையாது,” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி முடிக்க, அருண்குமார் மொத்தமாக இடிந்து போயிருந்தார்.இவரின் சோக கதையைக் கேட்டு சுனில் சௌத்ரி சற்று வருத்தப்பட்டு, பிறகு நிதானப்படுத்திக் கொண்டவர், பொதுப்படையாகப் பேசிவிட்டு அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்.
காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது,”அருண், இன்னும் பெண்கள் ஆண்களால் பாதிக்கப்பட்டதான் இருக்காங்கல்ல? உடல் ரீதியா, மனரீதியா, காதல் ரீதியா. அப்ப என்னதான் தேவை இந்த ஆண்களுக்கு? ஏன், நம்ம கூடத்தான் ஆண்கள். நம்ம எல்லாம் எவ்வளவு டீசன்ட்டா நடந்துக்கிறோம். எல்லா ஆம்பளைங்களும் ஒழுங்கா இருந்தா, நாடு நல்லா இருக்கும் போல,” என்று புலம்பிக் கொண்டிருக்க, அவரிடம் வந்தவுடன் அவரிடம் விட்டு விடைபெற்றுச் சென்றார். வீட்டிற்கு வந்த அருணுக்கு பைத்தியம் பிடிக்காத குறை.
கட்டிலில் போட்டுக் கொண்டவர்,”ராதுமா… என்னை இந்த அளவுக்கு வெறுத்து ஒதுக்கீட்டியா நீ? நான் பண்ண பாவம். அதான் நான் இப்படி இருக்கேன். நீ பண்ண புண்ணியம். என்கிட்ட காதலால் தோற்றுப் போனாலும் வாழ்க்கையில் ஜெயிச்சுட்ட. ஆனா உன் காதலைத் தட்டிக் கழிச்சு, இந்த வாழ்க்கையில தோத்து போயிட்டேன் நானு. நமக்கு ஒரு மகன் இருக்கான். ஆனா இதை வெளியே என்னால சொல்ல முடியாத நிலைமைக்கு ஆளாக்கிடுச்சு இந்த விதி,” என்று கதறித் துடித்துக் கொண்டிருந்தார்.—
