மறுநாள் காலை முகூர்த்த வேளையில், பிரம்மாண்டமான கல்யாண மண்டபத்தில் இரு மணமேடைகள் அமைக்கப்பட்டு இருக்க…ஒரு மணமேடையில் இருந்த அம்பையின் மனம் பட்டாம்பூச்சியாய் பறந்தது. காதலித்தவன் இப்பொழுது கணவனாக வரப்போகும் மகிழ்ச்சியை அவள் கொண்டாடித் தீர்த்தாள்.
மனதிற்குள் இப்படித்தான் காதலித்துத் திருமணம் செய்யப்போகும் பெண்கள் இருப்பார்கள். ஆனால் அவள் அப்படியல்ல; மனதில் மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், அதிகப்பட்ச ஏமாற்றமும் நம்பிக்கை துரோகமும் இருந்தது. எப்படி அவனால் இவ்வளவு சர்வசாதாரணமாக நடந்து கொள்ள முடிகிறது என்று புரியவில்லை. தன்னை காதலித்துத் திருமணம் வரை கொண்டு வந்தவன், திருமணத்திற்கு முந்தைய இரவு, “நீ என்னை மட்டுமல்ல, என்னோடு சேர்ந்து என் குழந்தையையும் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று இரண்டு வயது குழந்தையைத் தூக்கி அவள் கையில் கொடுத்தான்.
“ஏன்?” என்று கேட்டால், “வெளியூருக்குச் சென்றபொழுது என்னை மீறித் தெரியாமல் போதையில் நடந்த நிகழ்வால் உதித்தது” என்று அவன் சொன்னபோது அவள் இன்னும் உடைந்து போனாள்.”எப்படியோ பிளாக்மெயில் பண்ணி என் குடும்பத்தைக் காட்டி கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்துட்டீங்க இல்ல? கல்யாணம் மட்டும்தான் நடக்கப்போகுது.
உனக்கான மனைவி என்கிற உரிமையை நான் எப்பவும் எடுக்க மாட்டேன். கணவன் என்கிற உரிமையை நீ என்கிட்ட எடுக்கவும் கூடாது. ஐ ஹேட் யூ!” என்று கோபமாக வார்த்தைகளை அம்பை கொட்டினாள்.அவள் பேசுவதை ரசித்துக் கொண்டிருந்த அவளது கண்ணாளன் செழியன், அவள் காதோரத்தில், “இது பிரம்ம முகூர்த்தம். ஏற்கனவே குளிர், என்னால முடியல.
நீ வேற முறைச்சு என் மூடை ஏத்த வேண்டாம். இல்லன்னா நம்ம அம்மு குட்டிக்குத் தங்கச்சி பாப்பா வந்துடும், ஜாக்கிரதை!” என்று கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் சில்மிஷம் செய்தான். பக்கத்தில் இருந்த ஐயரோ, “தம்பி, எதுவா இருந்தாலும் கல்யாணம் முடிஞ்ச பிறகு பேசுங்கோ. முகூர்த்தத்துக்கு நாழியாகுது. சொல்ற மந்திரத்தை ஒழுங்கா சொன்னாதான் வருங்காலம் நல்லா இருக்கும்” என்று சொன்னவுடன் அவன் அமைதியாகிவிட்டான்.
அம்பை அவனை முறைத்துக் கொண்டிருந்தாலும், அவள் மடியில் நேற்று இரவிலிருந்து தன்னை விடாமல் “அம்மா அம்மா” என்று சுற்றி வரும் தேஜஸ்வினி என்கிற அம்மு குட்டியை அவளால் ஒதுக்க முடியவில்லை.—அருகில் இருக்கும் மணமேடையில், அக்னி ஜுவாலையை விட மனம் நிறைந்த நெருப்போடு தகதகவென்று எரிந்து கொண்டிருந்தாள் இன்னிசை.”நான் எங்க வீட்ல சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கேன், அவங்க சொல்ற மாப்பிள்ளையைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு.
ஆனா நீங்க பண்ண காரியத்தால என் முகத்தைப் பார்க்கக்கூட அவங்க இல்லாம, கடமைக்குக் கல்யாண வேலை செஞ்சுட்டு இருக்காங்க. எல்லாம் உன் மேல இருக்கிற வெறியாலதானே?” என்று அவனை கரித்துக் கொட்டினாள்.”அடி செருப்பால! ஏதோ எதுவுமே தெரியாத அப்பாவிப் பொண்ணு மாதிரி பேசுறியே? நான் தானா உன்னை ஏமாத்தினேன்? நீயும் தானடி என்கூட சிரிச்சுச் சிரிச்சுப் பேசி என் கையைப் பிடிச்சுக்கிட்ட? ஆசையா ஹக் பண்ண…
உன் கண்ணில் அந்த காதலைப் பார்த்துத்தானே நான் ஏமாந்து போனேன்? ஆனா கடைசியா சொன்ன பார்த்தியா, ‘எதுவும் செட் ஆகாது, பிரேக்கப் பண்ணலாம்’னு… அப்போ முடிவு பண்ணேன். வேற மாதிரி இருந்தா போனாப் போகட்டும்னு விட்டுருப்பேன். ஆனா நீ சும்மா இருந்த என்னைத் தூண்டிவிட்டு நடுவுல விட்டுப் போனா விடுவேனா? என் காதலை மட்டும் பார்த்து ரசிச்ச உன்னோட கண்கள், இனி என்னோட கோபத்தைப் பார்த்து கண்ணீர் விட்டு அழப் போகுது.
ஆல் த பெஸ்ட் மை பேபி!” என்று அவளை இடித்து உட்கார வைத்தான்.
தூரத்தில் இருக்கும் அனைவரும், “காதல் திருமணம் செய்தாலே ஒரே கலகலப்புதான்” என்று பேசிக் கொண்டனர்.—திருமணம் நடந்து முடியப் பெரும் போராக இருக்கும் சமயத்தில், திடீரென்று அங்கே நின்று கொண்டிருந்த யோகிதா கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டான் ராம்.”அய்யய்யோ! என்ன இந்த பையனுக்குத் தலையெழுத்தா? இந்தப் பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடி யார்கிட்டயோ ஏமாந்து போய் வயித்துல பிள்ளையை வாங்கிட்டு உட்காந்துகிட்டு இருக்கு.
இதுக்குப் போய் தாலி கட்டியிருக்கானே! அதுவும் இந்தப் பையன் பணக்காரப் பையன் வேற. அதான் அப்பாவி வேஷம் போட்டு கைக்குள் வளைத்துப் போட்டுக்கிட்டா போல” என்று அவன் தாலி கட்டிய மறுநொடியே ஒரு வசனம் வந்தது.அக்னிப் பார்வையில் அந்தப் பெண்மணியை முறைத்த ராம், யோகிதாவைத் தோளோடு அணைத்துக் கொண்டு,
“கண்ட நாயெல்லாம் என் பொண்டாட்டியப் பத்திப் பேசத் தேவையில்லை. அவளுக்கு என்ன ஆச்சு, ஏதாச்சுன்னு எல்லாம் எனக்குத் தெரியும். எங்க பர்சனல் விஷயத்துல நீங்க தலையிட வேண்டாம். இதெல்லாம் நான் வெளியே சொல்லப்போறது இல்ல. எல்லாரும் சூழ்நிலையைப் புரிஞ்சுக்கோங்க” என்று சொல்லி அவளைக் காதலோடு பார்க்க, அவன் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டாள் யோகிதா.
“ஐந்து மாதம் வரை அப்பன் பெயர் தெரியாத பிள்ளையைச் சுமந்து கொண்டிருக்கிறாள், இவளெல்லாம் என்ன பெண்ணோ? உடல் சுகத்திற்கு இந்தப் பணக்கார வீட்டுப் பெண்களுக்கு இதுதான் வேலை போல” என்று வரும் வார்த்தைகளால் அவள் மனம் உடைந்து போயிருந்தாள். திடீரென்று இவன் தாலி கட்டியவுடன் அதிகப்பட்ச கோபம் ஆத்திரம் தாங்காமல் அவனை அடித்துக் கண்டபடி திட்டினாள்.
அவனோ அவள் சொல்வதையெல்லாம் தலையாட்டிக் கேட்டு அவளை அணைத்துக் கொண்டான்.
இப்படி மூன்று ஜோடிகளைச் சுற்றி அனைவரின் கவனமும் இருக்க, அங்கே நான்காவதாக ஒரு ஜோடி உருவாகிக் கொண்டிருந்தது. ஆம், 22 ஆண்டுகாலமாகக் கணவன் பெயர் தெரியாமல் ஒரு குழந்தையைச் சுமக்கிறாள் என்ற அவப்பெயர் கொண்ட ராதாவின் கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டார் அருண். பல ஆண்டுகள் காதல் தவம் கொண்ட இருவரின் கனவு இன்று நிறைவேறியது.
வேறொரு மனநிலையில் இருந்த ராதா, அருண்குமார் தாலி கட்டுவதைத் தடுத்து நிறுத்த முடியாமல் உறைந்து போய்ப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு நிதானத்திற்கு வந்து இயல்பு நிலைக்குத் திரும்பியவர், கோபம் எல்லையைக் கடக்க ஓங்கி ஓர் அறை விட, இப்பொழுது அனைவரின் கவனமும் அவர்களிடம் வந்தது. கன்னத்தில் கை வைத்துக்கொண்டு பாவமாக அவர் ராதாவைப் பார்க்க, ராதா பத்ரகாளியாக அவரை முறைத்துக் கொண்டிருந்தார்.
“இது என்னடா புது ட்விஸ்ட்!” என்று அனைவரும் வாயைப் பிளக்க, அனைவரையும் சமாதானப்படுத்திய இனியன் மற்றும் செழியன் இருவரும் அவர்களின் காதல் கதையைச் சொல்லி முடித்தனர். கௌதமியைப் பற்றி இப்பொழுது குடும்பத்தார்கள் அனைவருக்கும் தெரிந்ததால், அனைவரும் சிவகாமியைத்தான் திட்டித் தீர்த்தனர்.
“மகனின் காதலை விட மகளின் வாழ்க்கை முக்கியம் என்று சுயநலமாக அனைத்துத் தாய்மார்களைப் போலவும் நீயும் இருந்துவிட்டாயே” என்று சாடினர்.இதில் மதன் மற்றும் தென்றல் கூடச் சிக்கிக் கொண்டார்கள். “ஏன் தம்பி, உங்க வீட்ல சொன்னாங்கன்னு அக்காவின் வாழ்விற்காக உங்கள் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்வீர்களா? ஏன் தான் இப்படிச் சில ஆண்கள் இருக்கிறீர்களோ! இதோ, நீ செய்த பாவம்தான் நீ பெற்ற மகளுக்கும் இதே நிலைமை.
நல்லவேளை, யாரோ இந்தப் பிள்ளை… அப்பன் பெயர் தெரியாத பிள்ளைக்குத் தந்தையாகப் போகிறான்” என்று ஒரு பெண்மணி சந்தில் சிந்து பாட…”போதும் நிறுத்துங்க! இஷ்டத்துக்கு என் குழந்தையை அப்பன் பெயர் தெரியாத குழந்தைன்னு சொல்லிக்கிட்டே இருக்கீங்க. இதோ இப்ப எனக்குத் தாலி கட்டினானே இந்த மகான், இவன்தான் அஞ்சு மாசத்துக்கு முன்னாடி இந்தக் குழந்தையை உருவாக்குவதற்குக் காரணம்.
அப்போ கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு போனவன், இப்போ திடீர்னு தாலி கட்டி உங்ககிட்ட நற்பெயரைச் சம்பாதிக்கிறான்” என்று யோகிதா உண்மையை உடைக்க, அனைவரும் வாயை மூடிக்கொண்டனர்.
இனியன், செழியன் இருவரும் அவனை ஒரு வழி செய்துவிட்டனர்.எப்படியோ செலவோடு இரண்டு கல்யாணம், செலவில்லாமல் இரண்டு கல்யாணம் முடிந்துவிட்டது. இப்பொழுது அடுத்த சடங்குகளைச் செய்ய வேண்டும். இது அனைவருக்கும் முதல் திருமணம் என்பதால் யாருக்கும் பாரபட்சம் இன்றி அனைத்துச் சடங்குகளும் நடக்க வேண்டும், அதுவும் தன் வீட்டிலேயே நடக்க வேண்டும் என்று மதன் சொல்லிவிட, அனைவரும் அவர் வீட்டுக்குப் படையெடுத்துக் கிளம்பினர்.
இருவரும் புது மாப்பிள்ளைக்குரிய வெட்கத்தோடு இனியன் மற்றும் செழியன் அவ்வப்போது காட்டிக் கொண்டாலும், அதில் ஒரு நியாயம் இருந்தது. ஆனால் ஏற்கனவே முதலிரவு கொண்டாடிப் பிள்ளைகளுக்குத் தகப்பனான பிறகு, ஒரு பக்கம் ராமும் ஒரு பக்கம் அருண்குமாரும் தங்கள் மனைவியின் கரங்களை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தனர்.
மேலும் அருண்குமாரை விமல் நிமிடத்திற்கு ஒருமுறை முறைத்துக் கொண்டிருந்தான், வேண்டுமென்றே இருவருக்கும் நடுவில் அமர்ந்து கொண்டு.”இது என்னோட அம்மா, நான் யாருக்கும் விட்டுத் தர மாட்டேன்” என்று சண்டை போட்ட மகனின் தலையை வருடிய அருண்,
“யாருக்கும் விட்டுத் தராத நீ, உங்க அம்மாவை விட்டுத் தரமாட்டாய் என்றால், நான் என் மனைவியை விட்டுக் கொடுக்க முடியாது. நம் இருவருக்கும் இவரின் உதவி இருக்கிறது. பெண் சக்தி இல்லாமல் ஆண் சக்திக்குப் பயனில்லை இவ்வுலகில்” என்று சொல்லி, விமலை அந்தப் பக்கம் தள்ளிவிட்டு நடுவில் அமர்ந்து கொண்டு, மகன் மற்றும் மனைவி இருவரையும் தன் தோள் வளைவுக்குள் கொண்டு வந்து பெருமூச்சு விட்டார்.உடனே குறுக்கே வந்த யோகிதா,
“அப்போ நான்?” என்று அப்பாவியாகக் கேட்க, பெண் பிள்ளை என்றால் கொள்ளைப் பிரியம் கொண்ட ராதா, யோகிதாவைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியாகக் கரங்களை நீட்டினார். தாயின் பாசத்தைக் கண்டிராத யோகிதா, ஓடிச் சென்று ராதாவைக் கட்டிக் கொண்டாள். அம்மா – மகள் ஒற்றுமையைப் பார்த்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். சிவகாமிக்குத் தன் மகனை மனைவி, பிள்ளைகளோடு பார்த்ததும் மனம் நிறைந்து போனது.
“இதன் பிறகு இவ்வுலகில் எனக்கான நேரம் இல்லை” என்று அவர் நினைத்துக் கொண்டார்.வீட்டுக்கு வந்த நான்கு ஜோடிகளுக்கும் ஒரு பக்கம் ஜமுனா, ஒரு பக்கம் தென்றல் இருவரும் ஆலாத்தி எடுத்து உள்ளே வரவழைத்தனர். வீட்டு ஜோசியரை அழைத்து வந்து நேரத்தைப் பார்த்து, அவரிடம் சந்தேகங்களைக் கேட்டு அதற்கான பலனையும் பெற்று வந்து குடும்பத்தாரிடம் ஒரு விஷயத்தைச் சொன்னார்.
“மத்தியானம் ரெண்டு மணியோட நல்ல நேரம் எல்லாம் முடிஞ்சு போச்சு. இன்னும் ஒரு வாரத்துக்கு எந்த ஒரு சடங்கும் பண்ண வேண்டாம். ஒரு வாரம் கழித்துக் குலதெய்வம் கோவிலுக்குப் போய்ப் பொங்கல் முடிந்த பிறகுதான் சாந்தி முகூர்த்தத்தை வைக்கணும்னு சொன்னாங்க.
அதுவரைக்கும் பொண்ணுங்க, மாப்பிள்ளைங்க தனித்தனியாகத்தான் இருக்கணும்” என்று சொல்லி முடித்தார்.அவர் சொல்லி முடித்தவுடன், “என்னது? ஒரு வாரம் கழிச்சு ஃபர்ஸ்ட் நைட்டா? என்னால ஒத்துக்க முடியாது!” என்று அலறும் சத்தம் கேட்டு குடும்பத்தார்கள் அனைவரும் பார்த்தனர். செழியன், இனியன் உட்பட அனைவரும் அதிர்ந்தனர். ஆம், முதலிரவுக்காக உரிமைக் குரல் கொடுத்தது ராம் மற்றும் அருண்குமார்!—