திருமணத்திற்காக முந்தைய நாள் மாலை, நிச்சயதார்த்த வேலைகள் நடக்க, குடும்பத்தார்கள் அனைவரும் மண்டபத்தை சூழ்ந்திருந்தனர்.மாப்பிள்ளை வீட்டார் சார்பாக, அம்பைக்கு அவள் விரும்பிய சந்தன நிறத்தில் சிகப்பு பார்டர் வைத்த புடவையும், இசைக்கு பச்சை நிறத்தில் சிகப்பு பார்டர் வைத்த புடவையும் வைக்கப்பட, கூடவே தென்றல் தங்கள் மருமகளுக்காக ஆசையாக வாங்கிய நகைகளையும் வைத்தார்.
பத்திரிகை வாசிக்க…திருமணம் மறுநாள் என்று இனிதே நிச்சயிக்கப்பட்டது. இசை முகத்தில் மருந்துக்குக் கூட சிரிப்பு இல்லை. ஆனால் இனியன் அவளைச் சீண்டிக் கொண்டே இருந்தான்; வார்த்தையால் குத்திக் கிழித்துக் கொண்டிருந்தான்.”பார்த்தியா இந்தப் பொண்ணு பண்ண வேலையை? நல்ல வசதியானவன் கிடைச்சா என்ஜாய் பண்ற அளவுக்கு என்ஜாய் பண்ணிட்டு நைசா எஸ்கேப் ஆகப் பார்த்திருக்கு.
ஆனா, இந்தப் பையன் உண்மையா லவ் பண்ணியிருக்கான் போல. அதான் விடாப்பிடியா அந்தப் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறான். இந்த மாதிரி அதிர்ஷ்டம் யாருக்குக் கிடைக்கும்?” என்று விஷயத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல், சில டாக்ஸிக் பிடித்த உறவினர் கூட்டம் இசையை இன்னும் கீழ்த்தரமாக விலை மாதுக்கு இணையாகப் பேசி அவர்கள் வாயை நிரப்பிக் கொள்ள, இசைதான் நிமிடத்துக்கு நிமிடம் செத்துப் போனாள்.
அவள் கண்ணீரைப் பார்த்து மன்னவன் எந்த ஒரு உணர்வும் வெளிப்படுத்தவில்லை. “இதைவிடக் கொடுமையை அனுபவிக்கப் போகிறாய்,” என்று அவளை இன்னும் இன்னும் அழ வைத்துக் கொண்டிருந்தான்.நிச்சயம் முடிந்தவுடன் அனைவரும் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர்.தன் 5 மாத வயிற்றைத் தள்ளிக்கொண்டு அங்கேயும் இங்கும் வேலை செய்து கொண்டிருந்தாள் யோகிதா.
அனைவரும் அவளையும் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. “கணவன் அருகில் இருக்கும்போது, பத்துக் கணவனைத் தேடிப் போகும் உங்களை விட, ஒருவரை மனதால் நேசித்து, அவர் பிள்ளையை வயிற்றில் சுமப்பது எனக்குக் கவுரவம் தான்,”
என்று நாக்கைப் பிடுங்குவது போல் பேசிவிட, அவ்வளவுதான், வாயை மூடிக் கொண்டனர்.சற்று வெளியூர் வேலைகள் எல்லாம் இருந்ததால், சில நாட்கள் இந்தியாவில் இல்லாமல் நேரடியாக நிச்சயதார்த்தத்திற்கு வந்து சேர்ந்தான் ராம்.இங்கே வேலை செய்து கொண்டிருக்கும் யோகிதாவைச் சந்தோஷத்துடன் பார்த்து, அவளை நெருங்கி வரும் பொழுது, இனியன், செழியன் இருவரும் அவனைப் பிடித்துக் கொண்டனர்.
“டேய், என்னடா இப்ப வந்து சேர்ந்துக்கிற? பிரண்ட்ஸ் கல்யாணம். ஒரு நண்பனா முன் இருந்து நடத்த வேண்டாமா? நீ எல்லாம் என்ன வாத்தியாரு? வெளியே போய் முட்டி போடு!” என்று வம்பு இழுத்துக் கொண்டிருக்க, ஆனால் அவன் கவனம் முழுக்க அங்கே இருக்கும் யோகி மீது இருந்தது. அவன் சந்தோஷப் பார்வையை சந்தேகப் பார்வை என்று புரிந்து கொண்ட இனியன் யூகித்து பெருமூச்சு விட்டவன்,
“என்னடா? நம்ம ஸ்கூல்ல இருக்கிற கிட்ஸ் டீச்சர் இங்க என்ன பண்றான்னு தானே யோசிக்கிற? அவ என் சொந்த மாமா பொண்ணு. அவங்க அப்பாவும் பார்ட்னர் ஆஃப் அவர் ஸ்கூல். ஆனா இதை வெளிக்காட்டாமல், ‘நான் ஒரு சாதாரண டீச்சராதான் வருவேன்னு வந்தா. யாரையோ லவ் பண்ணியிருக்கா போல. ரெண்டு பேரும் இன்ட்ரஸ்ட்டோடு இருந்து அடுத்த கட்டத்துக்கு போயிருக்காங்க. இப்போ சின்ன மன வருத்தம் பிரிஞ்சு இருக்காங்க.
இப்போ அவள் பிரக்னன்ட்டா இருக்கா. அபார்ஷன் பண்ணிக்கல. ‘இந்தக் குழந்தை எனக்கு வேணும்னு இருக்கா’. ‘சரி, அந்தக் பையன் யாருன்னு சொல்லு’ன்னு சொல்றோம். அதையும் சொல்லாமல் அமைதியா இருக்கா. என்ன பண்றதுன்னே தெரியல. நீ கூட ஸ்கூல்ல அவ கிட்ட நல்லாத்தானே பேசுவ? உனக்குத் தெரியுமா?” என்று இனியன் கேட்க, ராம் என்ன சொல்வதென்று புரியாமல் தொண்டையை விழுங்க, தன்னைச் சரிபடுத்திக் கொண்டு,
“எல்லாத்துக்கும் ஒரு முடிவு வரும். நீங்க கவலைப்படாதீங்க. இப்ப நீங்க மாப்பிள்ளை பசங்க. அப்புறம் செழியன், நீ சொன்ன மாதிரி எல்லாம் தயாரா இருக்கு. இப்போ நீ அம்பை கிட்ட எப்படி இந்த விஷயத்தைச் சொல்லப் போற? இது ரொம்ப சென்சிட்டிவான விஷயம். நேரடியாக உண்மையைச் சொல்ல முடியாது.
எதையும் மறைத்தும் சொல்ல முடியாது. நீ எப்படி கையாளப் போகிறாயோ எனக்குத் தெரியவில்லை,” என்று ராம் கவலையாகச் சொல்ல, செழியன் ஒரு புன்னகையோடு,”என் காதல் மேல நம்பிக்கை இருக்கு. அவள் என்னிடம் சண்டை போடுவா. பிடிவாதமா இருப்பா. ஆனா, ஒரு நிமிடம் கூட அவள் என்னை விட்டுக்கொடுக்க மாட்டா. என்னோட அம்பையோட லவ் அவ்வளவு ஸ்ட்ராங்.
கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னை கொடுமைப்படுத்துவாளே தவிர, என்னை விட்டு மட்டும் போக மாட்டா,” என்று பெருமையாகச் சொல்ல, இருவருக்கும் அவன் காதல் மீது பொறாமை வந்தது. இனியன் மனதில், ‘இப்படி என்னை விட்டுக்கொடுக்காமல் துரத்தி துரத்தி காதலிக்க வேண்டும் என்று தான் நினைத்தான். ஆனால், சரியான சுயநலவாதியாக இருக்கிறாளே’ என்று இசை மீது கோபம் கொள்ள,மறுப்பக்கம் ராம்,
‘ஒருவேளை நானும் காதலுக்கு சம்மதம் சொல்லி இருந்தால், இப்படித்தான் மகிழ்ச்சியாக இருந்திருப்பேனோ என்னவோ’ என்று அவன் ஒரு பக்கம் வருத்தப்பட்டான்.அம்பைக்கு மொட்டை மாடிக்கு வரவும் என்று மெசேஜ் அனுப்பிவிட்டு, செழியன், ‘எப்படி இவளிடம் இந்த விஷயத்தைச் சொல்லப் போகிறோம்’ என்று தயங்கிக் கொண்டிருந்தான். ஆனால், சொல்லியே ஆக வேண்டும் என்று தன்னைத் திடப்படுத்திக் கொண்டான்.
‘என்னவானாலும் பார்த்துக் கொள்ளலாம்’ என்று.மன்னவன் அழைத்தவுடன், தயங்கித் தயங்கி மொட்டை மாடி வந்த அம்பை, அங்கே தனக்கு முதுகைக் காட்டி நின்று கொண்டிருக்கும் செழியன் இடம் மெதுவாக நெருங்கி, அவனைப் பின்னோடு கட்டிக்கொள்ள, அவள் காதலின் அழுத்தத்தை உணர்ந்தவனுக்கு, ‘எப்படி இந்த விஷயத்தைச் சொன்னால், மென் மனம் கொண்டவள் தாங்குவாளா?’ என்று ஆண் மனம் துடித்தது.மெதுவாக அவள் கைகளை விடுவித்து, தனக்கு நேராக நிற்க வைத்தவன், அவள் கண்களைப் பார்த்து,
“இப்ப நான் ஒரு விஷயம் சொல்லப் போறேன். நீ எப்படி எடுத்துக்கிட்டாலும் பரவாயில்லை. ஆனால், நீ என்ன இந்த ஜென்மத்துல விட்டுப் போகக் கூடாது. எப்பவுமே என் கூட இருக்கணும் அப்படின்னு எனக்கு சத்தியம் பண்ணு,” என்று அவளிடம் சத்தியம் கேட்க, வழக்கம் போல், ‘என்ன சொல்லுவான்? நான் உன்னைக் கொடுமைப்படுத்தப் போகிறேன். காதலால் கொல்லப் போகிறேன்’ என்று சொல்லப் போகிறான்.
‘இதற்கு இவ்வளவு பந்தா?’ என்று விளையாட்டுத்தனமாக நினைத்துக் கொண்டவள்,”என்ன ஆனாலும், எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும், இந்த நொடியில் இருந்து நான் சாகுற வரைக்கும் உங்களை விட்டு நான் விலகிப் போக மாட்டேன் செழியன். எனக்கு என்னோட சிவாவைப் பற்றி நல்லா தெரியும். அவர் எடுக்கிற எந்த ஒரு முடிவா இருந்தாலும் அது சரியாத்தான் இருக்கும்.
நீங்க மறந்துட்டீங்க போல? நம்ம ஏற்கனவே கணவன் மனைவி வாழ ஆரம்பிச்சிட்டோம். நாளைக்கு சாஸ்திர சம்பிரதாயம் தான் நமக்கு நடக்கப் போகுது. ஆனா, நமக்குத்தான் கந்தர்வ திருமணம் நடந்து போச்சே! அப்பதிலிருந்து நான் உங்க மனைவி. அதனால, நீங்க எதைப் பற்றியும் கவலைப்படாதீங்க. என்ன பிரச்சனை வந்தாலும் கூட இருந்து உங்களுக்குத் துணையாக இருப்பேன்,”
என்று காதல் வசனங்கள் பேசி முடிக்க, செழியன் அவள் கரங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, மனதை திடப்படுத்திக் கொண்டவன்,”குட்டிமா, இங்க வாங்க,” என்று சொன்னவுடன், சிகப்பு நிற ஃப்ராக் அணிந்து, தலையில் இருக்கும் முடியைத் தூக்கி, கொண்டை வைத்து, பால்வடியும் முகத்தோடு தத்தித் தத்தி நடந்து வந்தது ஒரு குட்டி தேவதை. அதைப் பார்த்து அம்பைக்கு,”வாவ்! லுகிங் வெரி பியூட்டிபுல்! யார் இந்த ஏஞ்சல்? உங்க பிரண்டோட குழந்தையா? ஏதாவது பிராப்ளமா அவங்களுக்கு? சோ, அதனால குழந்தை நம்மகிட்ட இருக்கிற மாதிரி இருக்குது. அதானே சொல்ல வரீங்க?” என்று அறியாமல் கேட்க,
செழியன் சிரித்துக் கொண்டே,”அவ என்னோட பொண்ணு.””என்ன சொல்றீங்க செழியன்? எனக்குப் புரியல?” என்று அவன் சொன்னது பொய்யாக இருக்க வேண்டும் என்று நினைத்து மறுபடியும் கேட்க,”உனக்குப் புரிந்திருக்கும். அவள் என்னோட மகள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பாரிஸில் ஒரு பிசினஸ் மீட்டிங் அன்று நடந்த பார்ட்டியில், அதிக அளவு மதுபானத்தை அருந்தி, என்னையறியாமல் அங்கே வேலை செய்திருந்த ஒரு பெண்ணை நான் பலவந்தப்படுத்தி, நாசம் செய்துவிட்டேன்.
அந்தப் பெண் எதுவும் சொல்லாமல் அமைதியாகச் சென்றுவிட்டாள். மறுநாள் எனக்கு எதுவும் புரியவில்லை. சில மாதங்கள் கழித்து, மீண்டும் அந்தப் பெண் நிறைமாத வயிற்றோடு வேலைக்கு வருவதைப் பார்த்தேன். ஏற்கனவே பழக்கப்பட்டவள் என்பதால் வாழ்த்து சொல்லலாம் என்று செல்லும்போது, அவள் என்னைப் பார்த்துக் கதறி அழுதுவிட்டாள்.
அப்பொழுதுதான், அவளுடன் பணிபுரியும் இன்னொரு பெண் சொன்னாள், ‘இது உங்கள் குழந்தை’ என்று. அன்று போதையில் நான் நடந்து கொண்டது, சிசிடிவி கேமரா மூலம் எனக்குக் காண்பித்தார்கள். அவள் ‘வேண்டாம், வேண்டாம்’ என்று மறுத்தாலும், நான் அவளை வலுக்கட்டாயமாகத் தூக்கி ஒரு அறைக்குள் செல்வதை. இவள் என் மீது எந்த ஒரு வழக்கும் போடவில்லை. அமைதியாக இருந்துவிட்டதால், பிரச்சனை முடிந்தது என்று நினைக்க, இவள் கர்ப்பம் ஆகிவிட்டாள்.
அப்போதும் இவர்கள் என்னை தொடர்பு கொள்ளவில்லை. நானாக வந்து விஷயத்தைப் புரிந்து கொண்டேன். நான் இந்த ஊருக்கு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் நீ நம் அலுவலகத்திற்கு வேலைக்கு வந்தாய். உன்னைப் பார்த்தவுடன் என் மனதை பறிகொடுத்தேன்.
மீட்டிங் முடிந்து வந்த பிறகு என் காதலை உன்னிடம் சொல்லலாம் என்று நினைக்கும் பொழுது, இங்கே ஒருத்தி என்னை நினைத்து என் வாரிசைச் சுமந்து கொண்டிருப்பதை நான் எப்படிப் புறக்கணிக்க முடியும்? அதுதான், குழந்தை நன்றாகப் பிறந்து முடிந்த பிறகு, இவளைச் சட்டப்படி திருமணம் செய்து கொண்டு நம் நாட்டிற்கு வரலாம் என்று நினைக்கும் பொழுது, பிரசவத்தில் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டு அவள் விண்ணுலகம் சென்று விட, என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.
அதனால், பெரிய நபர்கள் மூலம் குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்ளும்படி சொல்லி, மீண்டும் நான் இந்தியாவுக்கு வந்தேன். இங்க வந்த பிறகு எனக்கு இருந்த ஒரே ஆறுதல் நீதான். தினமும் உன்னைப் பார்ப்பேன். உன் வசம் தான் அனுதினமும் இழுக்கப்பட்டேன். போதையில் நடந்த விஷயம் எனக்கே நினைவில்லை.
ஆனால், நான் தெளிவான மனிதனாக இருக்கும்போது நேசித்த பெண் நீதான். அதனால், ஒரு முடிவு செய்தேன். குழந்தை கொஞ்சம் வளர்ந்த பிறகு, சட்டப்படி அவளை என் மகளாகிக் கொண்டு, உன்னைத் திருமணம் செய்து, அனைவரும் ஒன்றாகச் சந்தோஷமாக வாழலாம் என்று. இதோ, நிறைவேறப் போகிறது. இவள் இப்பொழுது என் மகளாகச் சட்டப்படி ஐடென்டிஃபிகேஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவளுக்கு அம்மாவாக நீதான் இந்தச் சமுதாயத்தில் இருக்கப் போகிறாய்.
இது உன்னுடைய மகள். நாளை நம் திருமணம். நம் குழந்தையோடு இனி நீ, நான், நம் மகள் என்று வாழப் போகிறோம் ஒரு அழகான வாழ்க்கை,” என்று அனைத்து உண்மையும் சொல்லி முடித்த அடுத்த நொடி, அவன் கன்னத்தில் அம்பையின் ஐந்து விரல்களும் பதிந்தது. அவள் அடித்தது கூட அதிர்ச்சியில் தான். அதன் பிறகுதான் அவள் இயல்பு நிலைக்கு வந்தாள்.
தன் மன்னவனை எந்தக் கரங்கள் கொண்டு ஆராதிக்க வேண்டும் என்று கனவு கண்டாளோ, அதே கரங்கள் அவனை அடித்துவிட்டது நினைத்து, தலையில் அடித்துக் கொண்டு அங்கே அமர்ந்து அழ ஆரம்பித்தாள். அவளிடம் மண்டியிட்டு அமர்ந்தவன்,”ஏய், நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளுடி,” என்று அவளிடம் சென்ற கரங்களைத் தடுத்து நிறுத்தியவள்,”பண்றதெல்லாம் பண்ணிட்டு, ‘விட்டுப் போகக் கூடாது’ன்னு சத்தியம் வாங்கிட்டல்ல? சரி, இந்த கல்யாணம் எந்தக் காரணத்தைக் கொண்டும் தடைபடாது. நாளைக்கு நமக்குக் கல்யாணம் நடக்கும். ஆனால், உயிரோடு இருந்தும் பிணமாகத்தான் உன் கூட வாழப் போறேன்.
இந்த விஷயத்தை வீட்ல யார்கிட்டயும் சொல்லித் தொலைய வேண்டாம். அசிங்கம் உனக்குத்தான். ‘உன் நண்பனின் பிள்ளை’ என்று சொல்லி அனைவரையும் சமாளிக்கும் வழியைப் பார். வருகிறேன்,” என்று அங்கிருந்து செல்லும் பொழுது, அவள் புடவை முந்தானையைப் பிடித்து, ஒரு கைவிரலை வாயில் வைத்துக் கொண்டு, அவளையே கள்ளம் கபடம் இல்லாமல் பார்த்த குழந்தையின் முகம், பார்க்கப் பார்க்க வலி இன்னும் அதிகமானது.’இவன் செய்த தவறுக்கு இந்தச் சின்னக் குழந்தைக்கு எதற்கு தண்டனை?’ என்று நினைத்து, அந்தக் குழந்தையைத் தன் கையோடு தூக்கி அழைத்துச் சென்று விட்டாள்.
செழியனுக்கு நிம்மதி தான் வந்தது. நிச்சயம் அம்பை இப்படித்தான் முடிவெடுப்பாள் என்று அவன் அறிந்தே இதை அனைத்தையும் ஓரமாக நின்று ஒளிந்து பார்த்துக் கொண்டிருந்த ராம் மற்றும் இனியன் இருவரும் அவனிடம் வந்து,”எப்படியோ பிரச்சனை சால்வ்! ஒரு மாசத்துக்கு நீ வயித்துல ஈரத் துணியைக் கட்டிக்கிட்டுதான் தூங்கணும். ஆல் தி பெஸ்ட்,” என்று சொல்லி, அவனைக் கிண்டல் அடிக்க, அவனும்,
“போங்கடா, வேலையைப் பார்த்துக் கொண்டு,” என்று சென்றுவிட்டான். இங்கே புதிதாக வந்த குழந்தையை ‘யார்?’ என்று கேட்டு சொந்தங்கள் துளைத்தெடுக்க, “என் நண்பனின் பிள்ளை. அவன் இறந்துவிட்டதால் நான் அழைத்து வந்தேன்,” என்று சமாளித்துவிட்டான் ராம்.மறுநாள் முகூர்த்த நேரத்தில்…யோகிதா கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு, ஊரார் பேச்சு ஏச்சுகளுக்கு அவளை ஆளாக்கி, எந்த ஒரு கவலையும் இல்லாமல் வயிற்றில் இருக்கும் தன் பிள்ளையை வருடிக் கொண்டிருந்தான் ராம்.