மீனாட்சி தன் ஊருக்குச் செல்லும் ரயிலில் புறப்பட்டுக்கொண்டிருந்தாள். ஒருமுறை வைஷ்ணவியைப் பார்த்திருக்கலாம், காத்திருந்து சென்றிருக்கலாம் என்று தோன்றினாலும், அங்கேயே இருந்தால் ஒரு நொடி கூட அதிரவன் பக்கம் தன் மனம் சாய்ந்துவிடும் என்பதால், உடனே ஊருக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருந்தாள்.
மறுபக்கம் வைஷ்ணவி, மதிய இடைவேளையில் திடீரென்று மீனாட்சி ஊருக்குப் புறப்படுகிறாளே, ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ என நினைத்துக்கொண்டே அன்றைய பொழுதைக் கழித்தாள். அன்று மாலை எப்பொழுதும் போலத் தென்னரசு அவளுக்குத் தென்பட்டான்.
அவன் ஜீப்பில் ஏறிக்கொண்டவள், “இன்னைக்கு எனக்கு என்ன வாங்கி வந்திருக்கீங்க பிரண்ட்?” என்று கேட்டவுடன், அவளுக்கு மிகவும் பிடித்த காஜு கட்லி வாங்கி வந்து கொடுத்தான்.”என்ன இன்னைக்கு எனக்கு ரொம்ப பிடிச்ச ஸ்வீட் வாங்கி வந்திருக்கீங்க? என்ன விசேஷம்?” என்று கேட்க, “எனக்கு யாரும் இல்லைன்னு சொன்னேன், ஆனா எங்க அம்மா அப்பா எப்பவோ சேர்த்து வச்ச ஒரு பரம்பரைச் சொத்து எங்க கிராமத்துல இருக்கு. அதை ஒருத்தர் வாங்கலாம்னு இருக்காராம்.
லீகல் வாரிசு நான் என்பதால் என்னோட தூரத்து உறவினர்கள் எப்படியோ என்னைத் தொடர்புகொண்டு ஊருக்கு வரச் சொல்லியிருக்காங்க. எப்படியோ எனக்குன்னு ஒரு சொத்து இருக்கு. ஆனா அதை விற்றால்தான் என் நிலைமையை மாற்ற முடியும் இல்லையா? அதனால என்னோட சொத்தை விற்கலாம் அப்படின்னு இருக்கேன்,” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்ட வைஷ்ணவி மிகவும் சந்தோஷமாக, “பரவாயில்லையே, வாழ்த்துக்கள்! எப்படியோ உங்க அம்மா அப்பா சேர்த்து வைத்தது உங்களுக்குக் கிடைக்கப்போகுது. அதை வைத்து நீங்கள் வேற பிசினஸ் கூட பார்க்கலாம், அல்லது ஏதாவது இடம், வீடு பார்த்துக்கொள்ளலாம்,” என்று கூறினாள்.”
அதைத்தான் டீச்சர் நானும் முடிவு பண்ணியிருக்கேன். ஆனா அதுக்கு முன்னாடி என் சார்பா நீங்களும் அந்த ஊருக்கு வந்து, என் நிலத்தை விற்கும் பணத்தை உங்க கையால வாங்கி என் கையில கொடுக்கணும். எனக்கு இருக்கிற ஒரே சினேகிதி நீங்கதான். ஆரம்பத்துல உங்ககிட்ட முரட்டுத்தனமா நடந்துக்கிட்டாலும், உங்களோட கனிவான பேச்சு என்னைப் மொத்தமா மாற்றிவிட்டது. எனக்குன்னு யாரும் இல்லைன்னு நினைக்கும்போது நீங்க ஒருத்தர் எனக்காக இருக்கிறதைப் புரிஞ்சுக்கிறேன்.
எனக்காக வருவீங்களா டீச்சர்? நாளைக்குப் போயிட்டு மறுநாள் வந்துவிடலாம்,” என்று மிகவும் பணிவாகக் கெஞ்சித் கேட்டான்.ஒருவரை இப்படி நம்பி அவர் அழைத்துச் செல்லும் இடத்திற்குச் செல்ல வேண்டுமா என யோசித்தாலும், தென்னரசு அப்படிப்பட்டவன் இல்லை என்ற அவன் மீதான ஒரு சிறு ஈர்ப்பு, அவளது புத்தியை மங்கச் செய்து அவன் சொல்படித் தலையசைக்க வைத்தது.
தன் அம்மாவுக்குத் தொலைபேசி வழியாகத் தகவல் சொன்னாள்: “தோழியின் சகோதரிக்குத் திருமணம் என்பதால் நான் நாளை அவள் ஊருக்குச் சென்று நாளை மறுநாள் வந்துவிடுவேன்.” ரத்தினவள்ளியும் சரி என்று ஒப்புக்கொண்டார். அதே சமயம் மீனாட்சியின் எண்ணிற்குத் தொடர்புகொண்டாள்.”ஹலோ வைஷ்ணவி, என்ன பண்றீங்க? மத்தியானம்தான் உங்ககிட்டப் பேசினேன், நீங்களே போன் பண்ணிட்டீங்க.
நான் இப்பதான் எங்க ஊருக்கு வந்து சேர்ந்தேன். அப்பா கூட வீட்டுக்குப் போயிட்டு இருக்கேன். கவலைப்படாதீங்க, எங்க ஊர்ல டவர் நல்லாவே வரும். நான் வீட்டுக்குப் போன பிறகு உங்களுக்குப் போன் பண்றேன்,” என்று மீனாட்சி சொன்னாள்.”அப்பா உன்னைப் பிக்கப் பண்ணிக்கிட்டாரா? ஓகே, நல்லது. அது இல்ல… நான் என் பிரண்டோட சிஸ்டர் கல்யாணத்துக்குப் போகப்போறேன். உன்கிட்டச் சொல்லணும்னு தோணுச்சு. என்னன்னு தெரியல, ஏதோ உன்கிட்ட வர்ற மாதிரியே எனக்கு ஒரு ஃபீல்.
உன் ஞாபகம் வந்துடுச்சு, அதான் போன் பண்ணேன். ஓகே மீனாட்சி, நான் வைக்கிறேன், பாய்,” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தாள் வைஷ்ணவி.மீனாட்சி போனை வைத்த பிறகு, மலை மீது வண்டி சென்று கொண்டிருக்கத் தன் மலைக் கிராமத்தின் அழகைப் பார்த்துக்கொண்டிருந்தாள். “நீ வந்து கொஞ்ச நாள்ல திரும்பி வந்துரு, இல்லேன்னா நம்ம ஊர்க்காரங்க கேலி பண்ணுவாங்க.
படிப்பதற்குப் பயந்து பொண்ணு ஓடி வந்துருச்சு அப்படின்னு பேசுவாங்க, அதையெல்லாம் காதுல கேட்டுக்காத. கல்யாணத்துக்கு ரெடியாகிக்கோ. எப்படியும் நீ டவுன்லதான் வாழப்போற, அதனால உனக்கு எல்லாச் சௌகரியமும் இருக்கும். உன்னைக் கேட்காமல் இந்த ஏற்பாட்டைப் பண்ணிட்டாங்கன்னு கோவிச்சுக்க வேண்டாம்,” என்று அவள் அப்பா சொல்லிக்கொண்டே வர, அவள் அனைத்திற்கும் சரி என்று தலையசைத்துக்கொண்டு அமைதியாக இருந்தாள்.
ஊருக்குள் வந்தவுடன் அவரவர் வீட்டு வாசலில் இருந்து மீனாட்சி வருவதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். “அதானே, படிக்கப் போறதா சொல்லிச் சுந்தரம் பெண்பிள்ளையை அனுப்பினாரேன்னு நினைச்சேன். இவரும் பொண்ணுக்குக் கல்யாண ஏற்பாடுதான் பண்ணியிருக்காரு. நம்ம ஊர்ல இப்போ ரெண்டு கல்யாண ஏற்பாடு நடக்குது பாருங்களேன்,” என்று ஊர்ப் பெண்மணிகள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
மீனாட்சி அதைக் கேட்டுக்கொண்டு தன் வீடு வந்து சேர, அவளது அம்மா ஆரத்தித் தட்டோடு தயாராக இருந்தார்.”வாடி வா, ரெண்டு வருஷம் நீ இல்லாம எப்படி இருக்கப்போறேன்னு நினைச்சேன். நீ இப்படி ரெண்டு மாசத்துல திரும்பி வருவேன்னு நினைச்சுக்கூடப் பாக்கல. எல்லாம் நல்லதுக்குத்தான். உனக்கும் கல்யாண ஏற்பாடு நடக்குது. அதே சமயம் ராக்காயி மகன் தென்னரசு இருக்கான்ல, அவனுக்கும் திடீர்னு கல்யாண ஏற்பாடு நடக்குது.
அவங்க அம்மா, என் புள்ள கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்கன்னு சொல்லிட்டா. நானும் கையும் ஓடல காலும் ஓடல, என்ன பண்றதுன்னு தெரியல. அந்தப் பொண்ணு எந்த ஊருன்னு கூட எனக்குத் தெரியலன்னு சொல்லிப் புலம்பிக்கிட்டு இருக்கா. இந்த காலத்துப் பசங்க வெளியூருக்குப் போய் பொண்ணு கூட்டிட்டு வர்றாங்க. ஆனா நம்ம கிராமத்துப் பொண்ணுங்கதான் இந்த ஊர்ப் பசங்களைக் கட்டிக்க பயப்படுறாங்க,” என்று அவளது அம்மா சொல்லிக்கொண்டு வீட்டிற்குள் சென்றார்.
இதையெல்லாம் மீனாட்சி கேட்டுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. தன் அறைக்குள் சென்று முடங்கிக்கொண்டவள், தனது மொபைலில் இருக்கும் தனிப்பட்ட புகைப்படங்கள் உள்ள கோப்புக்குச் (Folder) சென்று அதிரவன் புகைப்படத்தைப் பார்த்து அழுது கொண்டிருந்தாள்.
“எல்லாரும் நான் படிக்கப் பயந்து ஊரை விட்டு வந்துட்டேன்னு சொல்லிட்டு இருக்காங்க சார். ஆனா, உங்க பார்வைக்குக் கட்டுப்பட்டு, நீங்க சொல்ற மாதிரி கல்யாணம் இல்லாத ஒரு உறவுக்கு என்னை அழைச்சிட்டுப் போயிடுவீங்களோங்கிற பயத்துலதான் நான் இங்கிருந்து ஓடி வந்தேன்னு யார்கிட்ட சொல்றது? மனசுல உங்களை மட்டும் நினைச்சுட்டு இருக்கேன். உங்களைப் பார்த்ததுல இருந்து என் மனசுல இருக்கிற அதிர்வு இன்னும் என்னை விட்டுப் போகல.
உங்களை விட்டு என்னால விலகி இருக்க முடியல. உங்களை விட்டுத் தூர விலகி வர வர, என் மனசுக்குள்ள நீங்க மட்டும்தான் இருக்கீங்கன்னு இன்னும் அதிகமா உறைக்குது. ஆனால் நீங்க கொடுத்த கால அவகாசத்திற்கு முன்னாடியே, உங்களோட கட்டளையை நிராகரித்து வேற ஒருத்தருக்கு மனைவியாகப் போறேன்,”
என்று கண்களை மூடி அழுது கொண்டிருந்தாள்.அதே சமயம் அதிரவன் ஒரு முக்கியத் தொழில் கூட்டத்திற்காக (Client Meeting) பெங்களூருக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தான். மறுநாள் காலைதான் மீனாட்சியைப் பார்க்க முடியும். அவளுக்குக் கொடுத்த அவகாசம் இன்னும் சில நாட்கள் இருந்தாலும், மனதில் ஏதோ அவள் தன்னை விட்டுத் தூரமாகச் சென்றுவிடுவாளோ என்ற பயம் அவனைச் சுற்றிச் சுற்றி வந்தது.
“ஏன், இன்று காலைதானே தன் முன்னால் கதறிக்கொண்டிருந்தாள்? கோபித்துக்கொண்டு சென்றுவிட்டாளா? அதன் பிறகு அவளைத் தொடர்புகொள்ள முடியவில்லை.”
இது வரை அலுவலகத்தில் அவளைக் கண்காணிக்கும்படி யாரையும் நியமிக்காததால், இனி மீனாட்சி தன் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டு ஆவலாக மறுநாளுக்காகக் காத்திருந்தான். ஆனால் அவனுக்குத் தெரியாது, மீனாட்சி எப்பொழுதோ தன் ஊரை நோக்கிச் சென்று, இனி இந்த பக்கமே வரக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டாள் என்று.
இங்கே மீனாட்சிக்கும் இரவு உறக்கம் வராமல் தனது வீட்டுப் பால்கனி வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். அங்குள்ளவர்கள் அனைவரும் நவீனமாகத் தெரிந்தாலும், மனதிற்குள் அந்தப் பழைய பஞ்சாங்கம் அங்கே ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. திருமணம் செய்துகொண்டால் இதெல்லாம் செய்துதான் ஆகவேண்டும் என்ற கணவனின் கட்டளைகளை நினைத்துப் பார்க்கும்போது மீனாட்சிக்கு ஒருவித பயம் வந்தது.
“ஒருவேளை அதிரவன் சார் சொல்ற மாதிரி கல்யாணம் பண்ணி கஷ்டப்படுறதுக்கு பதிலா, அவர் கூட அந்த மாதிரி வாழ்க்கை வாழ்ந்திருக்கலாமோ?” என்று யோசிக்கும்போது அவள் தன் தலையிலேயே அடித்துக்கொண்டாள். “எக்காரணம் கொண்டும் தாலி இல்லாம ஒரு உறவை நாம ஏத்துக்கவே கூடாது,” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்.மறுநாள் பொழுது ஆர்ப்பாட்டமாக விடிந்தது.
விடியற்காலை 2:00 மணிக்கு வைஷ்ணவியை அழைத்துக்கொண்டு தென்னரசு தன் கிராமத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.”அரசு, எதுக்கு இவ்வளவு சீக்கிரமா என்னை அழைச்சிட்டுப் போறீங்க? பொறுமையா காலையில கிளம்பினா நல்லாத்தானே இருக்கும்?”
“அதெல்லாம் இல்ல டீச்சர், எனக்கு என்னமோ அங்க இருக்கிறதைக் பிடிக்கல. சீக்கிரமாப் போய் வேலையை முடிச்சிட்டு வரலாம்னு முடிவு பண்ணிட்டேன். சீக்கிரம் அந்த ஊருக்குப் போயிட்டு நிலவரம் என்னன்னு கேட்டு வேலையை முடிச்சிட்டு வந்தா நல்லா இருக்கும். அங்க ஆல்ரெடி தெரிஞ்ச ஒருத்தர் எனக்காக ஏற்பாடு எல்லாம் பண்ணி வச்சிருக்காரு. அதனால நீங்க எதைப் பத்தியும் கவலைப்படாதீங்க,”
என்று பேசிக்கொண்டே சென்றான்.காலை நேரப் பனிக்காற்று உடலில் மோத, இருவரும் வேலூர் வந்து அங்கிருந்து ஒரு மணி நேரப் பயணமாக மலைக் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். அந்த கிராமத்தின் பெயர் பலகையைப் பார்த்தவுடன் வைஷ்ணவி மனதில் ஒரு புத்துணர்ச்சி. ஏனென்றால் மீனாட்சியின் ஊர் இதுதானே!”அரசு உங்களுக்கு ஒன்னு தெரியுமா?””என்ன டீச்சர்?””இந்த கிராமத்தைப் பத்தி எனக்கு ஏற்கனவே தெரியும். நீங்க எங்க ஹாஸ்டல்ல அப்பப்ப பால்கனியில எட்டிப் பார்ப்பீங்களே, அப்போ ஒரு பொண்ணு கூட என் கூட இருப்பாளே…”
“ஆமா, அவளுக்கு என்ன?”
“ஐயோ, அந்தப் பொண்ணு இந்த ஊருதாங்க. இந்த ஊரைப் பத்தி அவ சொல்லியிருக்கா, கேட்கவே பயமா இருக்கும். இந்த கிராமத்துல போய் யாராவது வாழ்வார்களா? அதுவும் வெளியூர்ல இருக்கிற பொண்ணுங்க சத்தியமா இந்த ஊர்ல கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழவே முடியாது. நல்ல வேலை, நீங்க எப்படியும் உங்க சொத்துக்கள் எல்லாத்தையும் வித்துட்டு டவுன்லதான் வாழப் போறீங்க.
அதனால உங்க ஃபியூச்சர் வைஃப் தப்பிச்சா!” என்று சொல்லி வைஷ்ணவி கிண்டலடித்துச் சிரிக்க, தென்னரசுவின் மனதில், “அந்த வருங்கால மனைவியே நீதான் கண்ணு, இனி உனக்கு இருக்கிறது” என்பது போன்ற ஒரு மர்மப் புன்னகை நிலவியது.—