அத்தியாயம் 2
இரவு ஒன்பது மணி. சென்னையின் அந்த ஏழு நட்சத்திர ஹோட்டலின் பிரம்மாண்டமான பால்ரூம் அரங்கம், நீல நிற நியான் விளக்குகளால் ஒரு மாயாலோகம் போலக் காட்சியளித்தது. ‘வர்மன் – சக்ரவர்த்தி’ நிறுவனங்களின் மெகா ப்ராஜெக்ட் வெற்றிக்கான பார்ட்டி அது. அது அவர்களுக்கு தென்றல் கொடுத்த வெளிநாட்டு நிறுவனம் தான் ஏற்பாடு செய்திருந்தது. அந்தப் பெரிய அரங்கின் நடுவே அமைக்கப்பட்டிருந்த மேடையில், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுவகைகளும், விதவிதமான உணவுகளும் மலைபோலக் குவிக்கப்பட்டிருந்தன.
ஆதித்ய வர்மன் ஒரு கரும்பச்சை நிற டக்சிடோ சூட்டில், ஒரு கிரேக்கக் கடவுளைப் போலக் காட்சியளித்தான். அவனது கட்டுக்கோப்பான உடலமைப்பும், கையில் இருந்த ஒயின் கிளாஸை அவன் சுழற்றிய விதமும் அங்கிருந்த இளம் பெண்களின் பார்வையை காந்தம் போல இழுத்தன. அவனுக்குப் பக்கத்திலேயே ஸ்வேதாவும் ஸ்ருதியும் ஒட்டிக்கொண்டு நின்றனர். ஸ்வேதா அணிந்திருந்த கிளாமரான கருப்பு நிற உடை அவளது மேனியை அப்பட்டமாகக் காட்டியது. அவள் ஆதித்யாவின் தோளில் கை போட்டு, “ஆதி… இன்னைக்கு நீங்க ரொம்ப ஹாட்டா இருக்கீங்க,” என்று வழிந்தாள். ஆதித்யா அவளை ஒரு அலட்சியமான பார்வையால் தள்ளிவிட்டு, வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கண்கள் மைவிழியைத் தேடிக்கொண்டிருந்தன.
சரியாக ஒன்பது முப்பது மணிக்கு, ஆரியன் சக்ரவர்த்தி தன் குடும்பத்தோடு உள்ளே நுழைந்தான். ஆரியன் அணிந்திருந்த நேவி ப்ளூ சூட் அவனது மாநிற மேனிக்கு ஒரு மிரட்டலான அழகைத் தந்தது. அவனது கண்கள், நிலாவைத் தான் தேடியது. நிலா அங்கே வந்ததும் ஆரியனின் கண்கள் அவளைக் கவ்விக்கொண்டன. நிலா அணிந்திருந்த இளஞ்சிவப்பு நிற பட்டுப்புடவை அவளது மென்மைக்கு இன்னும் மெருகேற்றியது.
அவர்களுக்குப் பின்னால் மைவிழி வந்தாள். அவள் அணிந்திருந்த கருநீல நிற சில்க் புடவை, அவளது மாநிற மேனியில் வைரங்களாக மின்னியது. கழுத்தில் ஒரு மெல்லிய தங்கச் சங்கிலி, காதுகளில் பெரிய ஜிமிக்கி. அவளது நடை ஒரு ராணிக்குரிய மிடுக்கோடு இருந்தது. அவளைப் பார்த்ததும் ஆதித்யாவின் இதயம் ஒரு கணம் துடிப்பை நிறுத்தியது. அவனது ஈகோ அவளைக் வெறுக்கச் சொன்னாலும், அவனது கண்கள் அவளது அழகில் லயித்திருந்தன.
கடைசியாக, முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தன் பிறந்த வீட்டார் இருக்கும் அதே இடத்திற்குள் நுழைந்தார் வெண்ணிலா. அவர் அணிந்திருந்த ஒரு சாதாரண பருத்திப் புடவை கூட அவரது பிறவிக் குணமான அந்த வர்மன் குடும்பத்தின் கம்பீரத்தை மறைக்கவில்லை. (ஆம் வெண்ணிலா வரும்மன் குடும்பத்தை சேர்ந்தவர் ராஜசேகர் சக்கரவர்த்திக்கு இரண்டாவதாக பிறந்தவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் குடும்பத்தார்களால் புறக்கணிக்கப்பட்டவர்) அஜித் சக்ரவர்த்தி அவரது கரங்களை இறுகப் பிடித்துக் கொண்டு அவருக்குத் தைரியம் கொடுத்தார்.
அரங்கின் ஒரு பக்கத்தில் விஸ்வநாத வர்மனும், ராஜசேகர் வர்மனும் தங்கள் கௌரவப் பேச்சுக்களில் மூழ்கியிருந்தனர். அப்போது அஜித்தும் வெண்ணிலாவும் அவர்கள் முன்னால் வந்து நின்றனர்.
“வர்மன் சார்… எங்க கம்பெனி பார்ட்னர்ஸை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புறேன்,” என்று ஆரியன் தன் பெற்றோரை அழைத்து வந்தான்.
விஸ்வநாத வர்மா நிமிர்ந்து பார்த்தார். அவர் கையில் இருந்த கிளாஸ் தரையில் விழுந்து சிதறியது. ராஜசேகர் வர்மன் அதிர்ச்சியில் உறைந்து போனார். “வெண்ணிலா…” என்று அவர் குரல் தழுதழுத்தது. முப்பது ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு ஓடிப்போன தன் தங்கை, இன்று தன் எதிரில் ஒரு கோடீஸ்வர நிறுவனத்தின் உரிமையாளராக நிற்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
“என்ன அண்ணா… அடையாளம் தெரியலையா? நான் தான் உங்கள் தங்கை வெண்ணிலா. இதோ என் கணவர் அஜித், இவங்க தான் என் பசங்க ஆரியன், மைவிழி, யாழ்மொழி,” என்று வெண்ணிலா அமைதியாகவும் அதே சமயம் உறுதியாகவும் சொன்னார்.
ராஜேஸ்வரியும் கௌசல்யாவும் அங்கே ஓடி வந்தனர். “என்னது! அந்தத் துரோகி இப்போ இவ்வளவு பெரிய ஆளா வந்து நிக்கிறாளா?” என்று கௌசல்யா கத்த, பார்ட்டியில் இருந்தவர்களின் கவனம் முழுவதும் அவர்கள் பக்கம் திரும்பியது.
“துரோகினு யாரைச் சொல்றீங்க ? காதலிச்சது துரோகமா? இல்ல, முப்பது வருஷம் உழைச்சு இன்னைக்கு உங்க கம்பெனிக்கே சரிசமமா நிக்கிற எங்களைச் சொல்றீங்களா?” என்று மைவிழி குறுக்கிட்டாள்.
ஆதித்யா மெதுவாக மைவிழிக்கு அருகில் வந்தான். அவனது உயரம் அவளைச் சற்றே அண்ணாந்து பார்க்க வைத்தது. “உன் அம்மா செய்த காரியத்துக்காக இந்தக் குடும்பம் அவமானப்பட்டு நிக்குது மைவிழி. நீங்க எவ்வளவு பெரிய ஆளா வந்தாலும், இந்த வர்மன் குடும்பத்தோட கௌரவத்துக்கு முன்னாடி நீங்க வெறும் தூசி தான்,” என்று அவன் மைவிழியின் காதோரம் குனிந்து ரகசியமாகவும் ஆக்ரோஷமாகவும் சொன்னான். அவனது மூச்சுக்காற்று மைவிழியின் கழுத்தில் பட்டபோது அவளுக்குள் ஒரு மின்னல் பாய்ந்தது.
“அந்தத் தூசி தான் இன்னைக்கு உங்க கம்பெனியோட 50 சதவீத லாபத்தைத் தீர்மானிக்கப் போகுது ஆதித்யா. ஜாக்கிரதை!” என்று மைவிழி பதிலடி கொடுத்தாள்.
அங்கே வாக்குவாதம் முற்றியது. விஸ்வநாத வர்மா ஆவேசமாக வெண்ணிலாவை நோக்கிச் சென்றார். “இங்கிருந்து கிளம்பு! உன்னைத் தலைமுழுகியாச்சு,” என்று அவர் கையை உயர்த்த, ஆரியன் சட்டென அவர் கையைப் பிடித்தான்.
“பெரியவரே… மரியாதையாப் பேசுங்க. இது பிசினஸ் பார்ட்டி. இவங்க என் அம்மா. இவங்களை யாராவது அவமரியாதை செஞ்சா, இந்த டெண்டரை இப்போவே கேன்சல் பண்றதுக்கு எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது,” என்று ஆரியன் கர்ஜித்தான்.
நிலா நடுங்கியபடி அண்ணன்களுக்கும் ஆரியனுக்கும் இடையே வந்து நின்றாள். “அண்ணா… ப்ளீஸ் வேண்டாம். எல்லாரும் பார்க்குறாங்க,” என்று அவள் கெஞ்சினாள். ஆரியன் நிலாவைப் பார்த்ததும் அவனது கோபம் சற்றே தணிந்தது. அவளது கண்களில் இருந்த கண்ணீர் அவனது இதயத்தை உருக்கியது.
செழியன் யாழ்மொழியைப் பார்த்தான். அவள் ஒரு மூலையில் நின்று ஒரு பெரிய ஐஸ்கிரீம் கப்பைச் சாப்பிட்டுக் கொண்டே, தன் போனில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தாள். “ஏய்… அங்க உன் குடும்பமே சண்டை போட்டுட்டு இருக்கு, நீ இங்க தின்னுட்டு இருக்கியா?” என்று செழியன் கிண்டலாகக் கேட்டான்.
யாழ்மொழி ஐஸ்கிரீமை ருசித்துக் கொண்டே, “சண்டை போடுறது அவங்க வேலை, சாப்பிடுறது என் வேலை. அதுவும் இல்லாம, இந்தச் சண்டையை விட டேஸ்டான ஒரு மீம் இப்போ என் மைண்ட்ல ஓடிட்டு இருக்கு. வேணும்னா நாளைக்கு என் பேஜ்ல வந்து பாரு செழியா!” என்று நக்கலாகச் சொன்னாள்.
செழியன் அவளது அந்தப் புதுமையான பேச்சில் ஒரு நிமிடம் தடுமாறினான். இந்தப் பெண் மற்றப் பெண்களைப் போல இல்லை என்பது அவனுக்குப் புரியத் தொடங்கியது.
பார்ட்டி ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. ஆனால், இரண்டு குடும்பங்களுக்கு இடையிலான அந்தப் போர் இப்போது தான் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. ஆதித்யாவின் பார்வையில் பழிவாங்கும் எண்ணம் இருந்தது. ஆரியனின் பார்வையில் நிலா மீதான காதல் இருந்தது. மைவிழியின் இதயத்தில் காதலும் கர்வமும் மோதிக் கொண்டிருந்தன.
யாழ்மொழி தன் போனில் ‘மொழிவரி’ என்ற பெயரில் ஒரு பதிவைப் போட்டாள்: “யார் சொன்னது சிங்கமும் புலியும் தான் மோதிக்கொள்ளும் என்று? இதோ கர்வமும் காதலும் மோதத் தொடங்கிவிட்டன!”
என்று ஏதோ ஒரு திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்களை இணைத்து ஒரு கவிதை எழுதிக் கொண்டிருந்தாள்.
மறுநாள் காலை ஒன்பது மணி. ‘வர்மன் – சக்ரவர்த்தி’ நிறுவனங்கள் இணைந்த அந்தப் புதிய கார்ப்பரேட் அலுவலகம் கண்ணாடியால் இழைக்கப்பட்டு, காலைச் சூரிய ஒளியில் வைரமாக மின்னிக் கொண்டிருந்தது. (அதை இவர்களுக்கு டெண்டர் வழங்க வெளிநாட்டு நிறுவனத்தின் ப்ராஜெக்ட் தளம்) வர்மன் குடும்பத்தின் பல தசாப்த கால ஆதிக்கக் கோட்டை இது என்றாலும், இன்று அதன் சரிபாதி அதிகாரம் ஆரியன் சக்ரவர்த்தியின் கைகளுக்கு மாறியிருந்தது.
ஆதித்ய வர்மன் தன் கறுப்பு நிற ரேஞ்ச் ரோவர் காரிலிருந்து ஒரு சிங்கத்தின் கம்பீரத்தோடு இறங்கினான். கச்சிதமாகப் பொருந்திக் கிடந்த வெள்ளை நிறச் சட்டையும், கறுப்பு நிறக் கோட்டும் அவனது ஆளுமையை மெருகேற்றின. அவனது ஒவ்வொரு அடியிலும் ஒருவித அதிகாரத் தோரணை இருந்தது. அலுவலகத்தின் பிரம்மாண்டமான வரவேற்பறையைக் கடந்தவன், லிஃப்ட்டிற்காகக் காத்திருந்த மைவிழியைப் பார்த்தான்.
மைவிழி இன்று ஒரு வெளிர் மஞ்சள் நிற சந்தேரி புடவையில் தேவதையாய் நின்றிருந்தாள். அவளது மாநிறத்திற்கு அந்த மஞ்சள் நிறம் ஒரு தனிப் பொலிவையும், வசீகரத்தையும் தந்தது. காதுகளில் மின்னிய சிறிய கம்மல்கள் அவளது கூர்மையான நாசிக்கு இன்னும் அழகு சேர்த்தன. ஆதித்யாவைக் கண்டதும் அவளது இதயம் ஒரு நொடி தடம் புரண்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக வந்த ஆதித்யாவைப் பார்த்த அதே கணத்தில், அவனைத் தன் மனதுக்குள் சிறை வைத்திருந்தாள். அவனுக்காகவே பிசினஸ் துறையில் அவனுக்கு நிகராக வளர வேண்டும் என்று வெறியோடு உழைத்தவள் அவள். ஆனால், இப்போது அவனைப் பார்த்ததும் முகத்தில் ஒரு மெல்லிய இறுக்கத்தை வரவழைத்துக் கொண்டாள்.
இருவரும் லிஃப்ட்டிற்குள் நுழைந்தனர். கதவு மூடியது. அந்தச் சிறிய மூடிய இடத்திற்குள் ஆதித்யாவின் விலையுயர்ந்த வாசனைத் திரவியத்தின் மணம் மைவிழியைச் சுற்றியது. ஆதித்யா மெதுவாக அவளுக்கு மிக அருகில் வந்து நின்றான். அவனது உயரம் அவளைச் சற்றே அண்ணாந்து பார்க்க வைத்தது.
“என் கோட்டைக்குள்ளயே வந்து எனக்குப் போட்டியா நிக்கிற தைரியம் உனக்கு எங்கிருந்து வந்தது மைவிழி?” என்று அவன் அவளது காதோரம் குனிந்து கரகரப்பான குரலில் கேட்டான். அவனது வெப்பமான மூச்சுக்காற்று அவள் கழுத்தில் பட்டபோது மைவிழிக்கு உடல் சிலிர்த்தது.
அவள் அவனைத் தைரியமாக ஏறிட்டாள். “இது உங்க கோட்டை மட்டும் இல்ல ஆதித்யா. இதுல சரிபாதி உழைப்பு எங்களுடையது. உங்க கர்வத்தை அந்த லிஃப்ட்டுக்கு வெளியவே விட்டுட்டு வந்தா நல்லது,” என்று அவள் பதில் சொல்ல, ஆதித்யா சட்டென அவளது கையைப் பற்றித் தன்பக்கம் இழுத்தான். அவளது வளையல்கள் அவனது கோட் பொத்தானில் சிக்கிக் கொண்டன.
“வர்மன் கிட்ட எப்போவும் கர்வம்தான் இருக்கும். அதை அடக்குற சக்தி உனக்குக் கிடையாது,” என்று அவன் சொல்ல, மைவிழி அவன் கண்களை உற்றுப் பார்த்தாள். அந்தப் பார்வையில் இருந்த காதலை அவன் உணரவில்லை, ஆனால் அவளது அடங்காத துணிச்சல் அவனை ஆச்சரியப்படுத்தியது.
இன்னொரு பக்கம், செழியன் தன் கேபினில் அமர்ந்து யாழ்மொழியின் ‘மொழிவரி’ சமூக வலைதளப் பக்கத்தை நோண்டிக் கொண்டிருந்தான். நேற்று பார்ட்டியில் நடந்த சம்பவத்தை வைத்து அவள் ஒரு நகைச்சுவை மீம் போட்டிருந்தாள். “சிங்கம் கர்ஜிக்கும் போது சிறுத்தை சிரித்தால் அதுதான் கெத்து!” என்று போட்டிருந்த அந்த வாசகத்தைப் பார்த்துச் செழியன் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.
அப்போது யாழ்மொழி உள்ளே வந்தாள். கையில் ஒரு கோப்போடு வந்தவள், செழியனைப் பார்த்ததும் சற்றே தயங்கி நின்றாள். “மிஸ்டர் செழியன்… இந்த ஃபைல்ல உங்க கையெழுத்து வேணும்,” என்று மெதுவான குரலில் சொன்னாள்.
செழியன் இருக்கையிலிருந்து எழுந்து அவளுக்கு மிக அருகில் வந்தான். “என்ன மொழிவரி… நேத்து பார்ட்டில ரொம்பப் பேசின? இப்போ ஏன் பூனை மாதிரி அமைதியா இருக்க?” என்று அவன் அவளது கன்னத்தைத் தட்ட முயல, யாழ்மொழி லாவகமாக விலகி அவன் கையைத் தட்டிவிட்டாள்.
“வெளியில தான் நான் யாழ்மொழி. ஆனா என் பேனா எடுத்தா நான் மொழிவரி. உங்க கையெழுத்தைப் போடுங்க, எனக்கு நிறைய வேலை இருக்கு,” என்று அவள் நறுக்கென்று சொன்னாள். செழியன் அவளது அந்தப் பிடிவாதத்தையும், நக்கலான பேச்சையும் ரசிக்கத் தொடங்கினான்.
அதே சமயம், அலுவலகத்தின் லவுஞ்ச் ஏரியாவில் நிலா அமர்ந்திருந்தாள். ஆரியன் அங்கே வரும்போது அவளைப் பார்த்தான். நிலா பிறவியிலேயே பயந்த சுபாவம் கொண்டவள் என்பதால், அந்தப் பெரிய நவீன அலுவலகம் அவளுக்கு ஒருவிதப் பதற்றத்தைத் தந்தது. ஆரியன் அவளுக்கு அருகில் சென்று, “நிலா… ஏன் தனியா உட்கார்ந்து இருக்கீங்க? பயமா இருக்கா?” என்று மிக மென்மையாகக் கேட்டான்.
நிலா அவனைப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகையைச் சிந்தினாள். “இல்ல ஆரியன்… அண்ணன் மீட்டிங்ல இருக்காங்க. அதான்…”
“பயப்படாதீங்க. இனி நான் இங்க தான் இருப்பேன். உங்களுக்கு ஏதாவது உதவி வேணும்னா தயங்காம கேளுங்க,” என்று ஆரியன் அவளது கையை லேசாகத் தொட, நிலாவுக்குள் ஒரு புதுவிதமான உணர்வு பாய்ந்தது. அவளது அண்ணன்கள் இதைப் பார்த்தால் என்ன ஆகும் என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும், ஆரியனின் அருகாமை அவளுக்கு ஒரு பெரிய பாதுகாப்பைத் தந்தது.
மதியம் உணவகத்தில் (Cafeteria), ஆதித்யா மைவிழியின் மேசைக்கு அனுமதியின்றி வந்தான். அவள் அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். “என்ன… சாப்பாட்டுல கூடவா இவ்வளவு டிசிப்ளின்?” என்று அவன் கிண்டல் செய்ய, மைவிழி அவனைப் பொருட்படுத்தாமல் சாப்பிட்டாள்.
சட்டென அவளது கையைப் பற்றிய ஆதித்யா, “என்னை இக்னோர் பண்றது உனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கா? ஆனா ஒன்னு தெரிஞ்சுக்கோ… நீ எவ்வளவு தூரம் விலகிப் போனாலும், நான் உன்னைத் துரத்திக்கிட்டே இருப்பேன். ஏன்னா, நீ எனக்கு ஒரு சுவாரஸ்யமான சவால்!” என்று அவன் அழுத்தமாகச் சொன்னான். மைவிழிக்குத் தெரியாது, இந்தச் சவால் தான் அவர்களின் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு, அதாவது ஒரு திருமணத் திருப்பத்திற்குத் தள்ளப் போகிறது என்று.
—_